Katre-Final
Katre-Final
என் சுவாசம் 22 இறுதி பதிவு.
ஹாலில் இருந்த சோபாவில் இருபுறமும் குழந்தைகள் அமர்ந்திருக்க, நடுவில் அமர்ந்திருந்தாள் சிவரஞ்சனி. வீட்டுக்குள் வந்ததும் ஆரம்பித்தவன், இன்னும் நிறுத்தாமல் திட்டிக் கொண்டிருக்கிறான். இடையிடையே வாசுகியும் அழகரும் வேறு…
காலில் போடப்பட்ட கட்டுடன் களைத்து வந்த சிவரஞ்சனியைப் பார்த்து, பதட்டமான வாசுகி என்னவென்று விசாரிக்க… அப்பொழுது ஆரம்பித்தவன் விடாமல் அர்ச்சனை செய்து கொண்டிருக்கிறான்.
“கதிரைத்தான் நான் எப்பவும் பார்த்து ஜாக்கிரதையா இருன்னு சொல்லிகிட்டு இருப்பேன்… நீ அவனுக்கு மேல வம்பை விலை குடுத்து வாங்கிட்டு வருவ போல…
அவனுங்க கொலை செய்யக் கூட அஞ்சாதவனுங்க. அவனுங்க கையில நீ சிக்கியிருந்தா…? என்னால நினைச்சே பார்க்க முடியல…
அவன்தான் சொல் பேச்சு கேட்காம தேவையில்லாத பிரச்சனையில போய் தலையக் குடுப்பான். அடங்கவே மாட்டான். நீ அமைதியான சாதுவான பெண்ணுன்னு நினைச்சா… இப்படி காலைக் கிழிச்சிக்கிட்டு வந்திருக்க… எவ்வளவு இரத்தம் போச்சோ…?”
இடையிடையே கதிரையும் சேர்த்துத் திட்டிக் கொண்டே, களைத்துப் போயிருந்தவளுக்கு பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தாள் வாசுகி.
“இரத்தமெல்லாம் ரொம்பப் போகலை அண்ணி…” மெதுவாக பதில் தந்தவளை முறைத்தவன்,
“அந்த மதில்ல வழிஞ்சிருந்த இரத்தத்தை வச்சுதான், இவ இருக்கற இடத்தையே பார்த்தேன். இன்னும் கீழ எவ்வளவு இரத்தம் போச்சோ…?”
“அவன் போகச் சொன்னதும் நீ அந்த இடத்தை விட்டுப் போயிருக்கனும் மா… கல்யாண நெருக்கத்துல இவ்வளவு காயம் ஆகியிருக்கு பாரு.”
வருத்தத்துடன் கூறிய அழகர்,
“அம்மாடி வாசுகி… திருஷ்டி சுற்றிப் போடும்மா இரண்டு பேருக்கும். ஏதோ வேண்டாத கண்ணுதான் பட்டிருக்கு.
தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுன்னு நினைச்சிக்குவோம். பாவம் அந்த புள்ள முகமே சோர்ந்து போச்சு. போம்மா… எதாவது சாப்பிட்டு, உள்ள போய் ரெஸ்ட் எடு.”
வாசுகியிடம் ஆரம்பித்து சிவரஞ்சனியிடம் முடித்தவர், மேலும் சிவரஞ்சனியை முறைத்துக் கொண்டிருந்தவனை,
“போதும் மாப்ள… அந்தப் புள்ளயே பயந்து போய் பரிதாபமா உட்கார்ந்து இருக்கு… இன்னும் முறைச்சிட்டு இருக்க.”
“ஆமாமாம்… பூனை செய்யறதெல்லாம் கொட்டம். ஆனா, அடிச்சா பாவம்ங்கற மாதிரி முகத்தை வச்சுப்பா. அவளுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க மாமா.”
“சரி… விடுடா… அதான் அவ்வளவு திட்டிட்டியே. நாளைக்கு காலையில முகூர்த்தக்கால் நடனும். அதுக்கு என்னென்ன வாங்கனுமோ ஐயர்கிட்ட கேட்டு சுந்தர வாங்கி வரச் சொல்லு.”
“அதெல்லாம் நேத்தே வாங்கி வச்சாச்சு மாமா… எல்லா ஏற்பாடும் பக்காவா முடிச்சாச்சு.”
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, இருவரும் வெளியே கிளம்பி விட, சாப்பிட்டு விட்டு அறைக்குள் அமர்ந்திருந்தாள் சிவரஞ்சனி. கைக்கு மருதாணி போட வந்த பெண், முழங்கை வரை இரு கைகளிலும் அழகிய டிசைன் வரைந்திருந்தாள்.
அதே அறையில் அனுவுக்கும் வரைந்து கொண்டிருந்தாள். அமைதியாக அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிவரஞ்சனிக்கு, மனம் நிறைந்து நிம்மதியாக இருந்தது.
வசவுகள் சிவரஞ்சனிக்குப் புதிதல்ல. சாரதாவிடம் அவள் வாங்காத வசவுகளா? ஆனால், இங்கு அனைவரது கோபத்திலும் ஒளிந்திருந்த அன்பு அவளை வசப்படுத்தியது. கதிரின் ஒவ்வொரு வார்த்தையிலும் அவன் பட்ட பதட்டம் தெரிந்தது. தனக்கு ஒன்றென்றால் துடிக்கும் துடிப்பு தெரிந்தது.
வாசுகி திட்டினாலும், இதோ இப்பொழுது வரை அவளுக்கு மாற்றி மாற்றி சத்தான உணவுகளைக் கொண்டு வந்து உண்ண வைப்பதில், தாயின் பாசம்தான் தெரிகிறது.
அவ்வளவு பிசியான கட்சி வேலைகளுக்கு இடையேவும், அலைபேசியின் மூலம் பேசி அவளுடைய நலனைத் தெரிந்து கொண்டதில், ராகவனின் அன்பு தெரிகிறது.
அழகர், குழந்தைகள் என அனைவருமே இந்தக் குறுகிய காலத்தில் அவள் மீது வைத்திருக்கும் அளவற்ற பாசத்தை நன்கு உணர்ந்து கொண்டாள். உண்மையில் இப்படிச் சொந்தங்கள் அமைய நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.
அனுவுக்கும் வரைந்து விட்டு அந்தப் பெண் கிளம்பிவிட, தன்னருகில் வந்து படுத்துத் தூங்கி விட்ட அனுவைப் பார்த்துக் கொண்டே படுத்திருந்தாள்.
அறையின் கதவு மெதுவாகத் திறக்கப்பட, யாரென்று நிமிர்ந்து பார்த்தாள். கதிரைக் கண்டதும் இயல்பாக மலர்ந்தது முகம். ‘ஐயோ… திரும்பத் திட்டுவானோ?’ என்று எண்ணியவள் சோகமாக வைத்துக் கொண்டாள்.
உள்ளே நுழைந்தவன் மெதுவாக அவளது அருகில் அமர்ந்து, “மாத்திரை போட்டியா? இன்னும் வலியிருக்கா? எம்மேல கோபமா?”
அவனது ஒவ்வொரு கேள்விக்கும் ‘ஆமாம்’ ‘இல்லை’ என தலையை மட்டும் பதிலாக அசைத்தாள்.
“வாயத் திறந்து பேசுடி. திட்டினேன்னு எம்மேல கோபமா இருக்கியா?”
பதில் ஒன்றும் கூறாமல் புன்னகையுடன் அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்.
“கோபமெல்லாம் இல்லைங்க. நான் பண்ணது தப்புதானே. அதுக்குதான திட்டுனீங்க. எனக்கு மனசு நிறைவா இருக்கு. என் மேல இவ்வளவு பாசம் வச்சிருக்கற சொந்தங்கள் கிடைக்க, நான் நிறைய புண்ணியம் பண்ணியிருக்கனும்.”
அவளது தலையைத் தடவிக் கொடுத்தவன் அமைதியாயிருக்க, அவனது இதயத் துடிப்பு தாள லயத்தோடு அவளது செவிகளில் மோதியது.
“ரொம்ப பயந்துட்டீங்களா?” அவளது உச்சந்தலையில் இதழைப் பதித்துக் கொண்டான்,
“உயிரே போயிடுச்சிடி. உன்னை மறுபடியும் பார்க்குற வரை என் உயிரே என்கிட்ட இல்லை. அதுவும், அந்த குமார் வீட்டுக்குள்ளதான் நீ இருக்கன்னு தெரிஞ்சதும், ரொம்பப் பதறிப் போயிட்டேன்.”
அவளது முகத்தை நிமிர்த்தி, “ஏன்டி… தப்பிச்சி ஓடினவ மறுபடியும் அவன் வீட்டுக்குள்ளயே ஏறி குதிச்சிருக்க? அவனுங்க உன்னைப் பார்த்திருந்தா… ?”
“அவனுங்க துரத்தவும் பயந்து போய், என்ன செய்யன்னு புரியாமதான் ஓடினேன். அப்ப அவனுங்க ‘அவ ஃபோட்டோ எடுத்துட்டாடான்னு’ கத்திகிட்டே துரத்தினாங்களா? உடனே ஃபோனை தூக்கிப் போட்டுட்டு ஓடினேன்.
அவனுங்க அந்த ஃபோனை எடுத்துப் பார்த்துட்டு வர்றதுக்குள்ள, ஏதாவது வீட்டுக்குள்ள போய் உதவி கேட்கலாம்னு பார்த்தா… எல்லா வீடும் பூட்டியிருந்தது. அப்புறம்தான் அங்க இருந்த குப்பை தொட்டி மேல ஏறி, அந்த வீட்டுக்குள்ள குதிச்சேன். குதிச்சதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது, அதே வீட்டுக்குள்ள மறுபடியும் வந்திருக்கேன்னு.
ரொம்ப பயமாப் போச்சு. ஆனா அவனுங்க சரியான லூசுப் பசங்க. சுத்தி சுத்தி தேடுனானுங்களே தவிர, அந்த வீட்டுக்குப் பின்னாடி நான் இருந்தது தெரியல. கொஞ்ச நேரத்துல போலீஸ் வந்துட்டாங்க.
நீங்க சொல்லிதான் வந்திருப்பாங்கன்னு தெரியும். இருந்தாலும் வெளிய வர பயமா இருந்துச்சி. எப்படியும் நீங்க என்னைத் தேடி வருவீங்கன்னுதான் அங்கயே மறைஞ்சு உட்கார்ந்து இருந்தேன். இனிமே இப்படித் தனியா எங்கயும் போக மாட்டேன்.”
அவளது நெற்றியோடு நெற்றி வைத்து லேசாக முட்டியவன்,
“இனிமே உன்னை அங்க தனியா ஹாஸ்டல்ல விடறதா இல்லை. ஒன்னு இங்க பக்கத்துல இருக்கிற காலேஜுக்கு உன்னை மாத்த முடியுமான்னு பார்க்கனும்.
இல்லையா உன் படிப்பு முடியற வரை, நாம கடலூர்ல வீடெடுத்து தங்கிக்கலாம். தலைவர் வந்ததும் என்ன செய்யலாம்னு பேசி முடிவு பண்ணுவோம்.”
“…”
“இது முன்னாடியே யோசிச்சதுதான். இன்னைக்கு நடந்ததுல முடிவே பண்ணிட்டேன். கல்யாணம் முடிஞ்சு வாராவாரம் அஞ்சு நாள், உன்னைப் பிரிஞ்சு இருக்கறதெல்லாம் ரொம்பக் கஷ்டம். இங்க பக்கத்துல காலேஜ் மாத்தினா உனக்கேதும் பிரச்சினை இல்லையே?”
“ம்கூம்… இல்லை.”
“சரி… தூங்கு. நாளைக்கு சீக்கிரம் எழுந்திரிக்கனும். நான் நாளைக்கு வரேன்.”
அவன் புறப்பட்டுச் சென்றதும் மாத்திரையின் உதவியால் நல்ல நித்திரையில் ஆழ்ந்தாள்.
மறுநாள் காலையில் முகூர்த்தக்கால் ஊன்றுவதில் ஆரம்பித்து, கோவிலுக்குச் சென்று அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபட்டு, பிறகு வீட்டிலும் திருமணத்திற்கு வாங்கிய உடைகள் நகைகளை வைத்து பூஜை செய்து, என்று நாள் முழுவதும் பரபரப்பாகக் கழிந்தது.
திருமணநாள் அன்று அதிகாலை முகூர்த்தம் ஆகையால், விடியலுக்கு முன் எழுந்து குளித்து, அழகு நிலையப் பெண்ணின் உதவியுடன் ஒப்பனையை முடித்து, முகூர்த்தச் சேலை நகைகளை அணிந்து அழகாக மண்டபத்திற்கு கிளம்பினாள் சிவரஞ்சனி.
சிவரஞ்சனிக்கு எடுத்தது போலவே, அனுவுக்கும் வாசுகிக்கும் பட்டுப் பாவாடையும் பட்டுப் புடவையும் எடுத்திருந்தான் கதிர். அவர்களும் அழகாக ஜொலிக்க, ஆதவனும் ராகவனும் பட்டு வேட்டி சட்டை அணிந்து மிடுக்காக கிளம்பினர்.
அழகரும் கதிரும் கிளம்பி வந்ததும், அனைவரும் மண்டபத்திற்குச் சென்றனர். வெண்பட்டு வேட்டி பட்டு சட்டையில் கம்பீரமாக இருந்தவனைப் பார்த்து ரசித்துக் கொண்டாள் சிவரஞ்சனி.
அவன் வாங்கித் தந்த புடவையும் நகைகளும் அணிந்து, சர்வ அலங்கார பூஷிதையாக மிளிர்ந்தவளை விட்டு பார்வையை அகற்ற முடியவில்லை அவனால்.
மணமேடையில் அமர்ந்து ஐயர் சொன்ன மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்த இருவருக்கும், மனம் நிறைந்து சந்தோஷமாக இருந்தது.
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து
கைத்தலம் பற்றுவது கனவாக இல்லாமல் நிஜத்தில் அரங்கேறியது.
மங்கல வாத்தியங்கள் முழங்க, முப்பத்து முக்கோடி தேவர்களும் வாழ்த்த, ராகவனும் வாசுகியும் தாய் தந்தை ஸ்தானத்தில் நின்று மங்கல நாணை எடுத்துக் கொடுக்க, அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னில் சரிபாதியாக்கிக் கொண்டான்.
அனுவும் ஆதவனும் சிவரஞ்சனி அருகில் நின்றிருக்க, கல்யாணியும் அவர்களுடன் இணைந்து நின்றிருந்தது, பெரும் மன நிறைவைக் கொடுத்தது சிவரஞ்சனிக்கு. அவன் சொன்னதைச் செய்து விட்டான்.
ஸ்டீபனையும் ஜெகாவையும் அனுப்பி, சாரதாவையும் கல்யாணியையும் அழைத்து வரச் செய்திருந்தான். முதலில் வர மறுத்த சாரதா, பின் என்ன நினைத்தாளோ… கதிரை பகைத்துக் கொள்வது தனக்கு நல்லதில்லை என்பது புரிந்ததில் கிளம்பி வந்திருந்தாள்.
அரை மனதாக வந்திருந்தாலும், ராகவன் வாசுகி அழகர் அனைவரும் மரியாதையாக வரவேற்று அவளை உபசரித்து அமரச் செய்ததில், அவள் மனம் குற்றவுணர்ச்சியில் வெகுவாக மாறி இருந்தது.
‘எனக்கு எந்தத் தொந்தரவும் தராமல், எங்கே என்றாலும் நன்றாக இருந்தால் சரிதான்’ என்று சிவரஞ்சனியைப் பார்த்து எண்ணிக் கொண்டாள்.
கோதையும் கலாவும் அவர்களது குடும்பத்துடன் வந்திருந்தனர். சிவரஞ்சனியின் அருகில் நின்று கேலி செய்து, அவளை முகம் சிவக்கச் செய்து கொண்டிருந்தனர்.
அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, மெட்டி அணிவித்து, மணவறையை வலம் வந்து அனைத்துச் சடங்குகளையும் குறைவின்றி முடித்தவர்கள், வாசுகி ராகவன் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்.
அழகரிடமும் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர். காலை உணவை முடித்ததும், புது வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு அனைவரும் கிளம்பிச் சென்றனர்.
புதிய இல்லத்தில், தம்பதி சமேதராக கதிரும் சிவாவும் அமர்ந்து கணபதி பூஜையை செய்து, பால் காய்ச்சியதில் விழா சிறப்பாக நிறைவு பெற்றது. சர்க்கரைப் பொங்கல் செய்து சுவாமிக்குப் படைத்து அனைவரும் உண்டதும், கோவிலுக்குச் சென்றனர்.
பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பூஜைகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அனைத்தையும் நிறைவாக தரிசித்தவர்கள், அவனது இஷ்ட தெய்வமான ஆஞ்சநேயரையும் தரிசித்த பின், மீண்டும் புதிய வீட்டிற்கு வந்தனர்.
மதிய உணவு அங்கே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அனு, ஆதவன், கல்யாணி மூவரும் விளையாடிக் கொண்டிருக்க, கலாவும் கோதையும் சிவரஞ்சனியின் தலை அலங்காரங்களைக் களைந்து, சாதாரணமாகப் பின்னல் பின்னி, வேறு ஒரு இலகுரக பட்டுப் புடவையை மாற்றச் செய்திருந்தனர்.
சாரதாவும் அவர்களுடன் இருந்தாள். கிளம்புகிறேன் என்றவளை, “மாலை வரவேற்பை முடித்து விட்டுச் செல்லலாம்” என்று கூறி இருக்க வைத்திருந்தனர்.
அப்போது வீட்டுக்குத் தேவையான அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும், கட்டில் மெத்தையில் ஆரம்பித்து சமையலறைச் சாமான்கள் வரை புத்தம் புதிதாக வந்து இறங்கியது. ராகவன் தன்னுடைய திருமணப் பரிசாக அவற்றைக் கொடுக்க,
“எதுக்குத் தலைவரே இதெல்லாம்? நீங்க எனக்கு எவ்வளவோ செய்திருக்கீங்க. நீங்களும் அக்காவும் என்னைக்கும் எங்களுக்கு பக்கபலமா இருந்து, எங்களை ஆசீர்வாதம் பண்ணாலே போதும்.” என்றவனை,
“அன்னைக்குச் சொன்னதுதான் இன்னைக்கும் சொல்லுறேன். சிவரஞ்சனி இனி எங்க வீட்டுப் பொண்ணு. எங்க வீட்டுப் பொண்ணுக்கு நான் செய்யற சீர்டா இது. எங்களுடைய அன்பும் ஆசீர்வாதமும் என்னைக்கும் உங்களுக்குக் குறையாமல் இருக்கும் கதிர்.”
இனிமையான அந்தத் தருணம் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. சுந்தரும் அவனது சகாக்களும் அனைத்துப் பொருட்களையும் எங்கு வைப்பது என்று வாசுகியிடமும் சிவரஞ்சனியிடமும் ஆலோசனை கேட்டு, அதன்படி அழகாக அடுக்கி முடித்தனர்.
மதிய உணவை முடித்து விட்டு, வீட்டின் வெளியே போடப் பட்டிருந்த பந்தலில் அமர்ந்து அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். வெளிநாட்டு பயணிகள் கடத்தல் கேஸ் விஷயமாக, சென்னை சென்று விட்டு அப்போதுதான் வந்திருந்தான் ஸ்ரீதர்.
“சாரி கதிர்… கேஸ் விஷயமா அவசரமா போக வேண்டியதாப் போச்சு. சாயந்திரம் ரிசப்ஷன்க்கு கண்டிப்பா வந்திடனும்னு, வேலையை முடிச்சிட்டு வந்தேன்.”
“டேய்… சாரியெல்லாம் எதுக்குடா? நீ எவ்வளவு பிசியா இருக்கன்னு எனக்குத் தெரியாதா?”
“கேஸ் எந்த அளவுல இருக்கு ஸ்ரீதர்? அந்த வெளிநாட்டு பயணிகள் நல்லா இருக்காங்களா?” ராகவன் கேட்க,
“நல்லா இருக்காங்க சார். அவங்க மருத்துவ சிகிச்சை செய்வதற்காக இந்தியா வந்தவங்க. அவங்க ட்ரீட்மெண்ட்க்கும் ஏற்பாடு பண்ணியிருக்கோம். இன்னும் பத்து நாட்கள் கழித்து அவங்க நாட்டுக்குத் திரும்பி போறாங்க.”
“…”
“எம்எல்ஏ குமாரை அரெஸ்ட் பண்ணிட்டோம். ரிமாண்ட்ல வச்சிருக்கோம். விசாரணை போயிட்டு இருக்கு. அவனோட சேர்த்து அஞ்சு பேரு பார்ட்னர் இந்தக் கடத்தலுக்கு. எல்லாரையும் அரெஸ்ட் பண்ணியாச்சு.”
“யாரெல்லாம் இதுல சம்பந்தப் பட்டிருக்காங்க ஸ்ரீதர்?”
“எம்எல்ஏ குமார், எக்ஸ் எம்பி நாகராஜன், புரபசர் ஜெயக்கொடி, அவ புருஷன், சென்னையில ட்ராவல்ஸ் ஏஜென்சி வச்சிருக்கற ஒருத்தன், அப்புறம் சென்னையைச் சேர்ந்த தாதா ஒருத்தன். இவனுங்க சேர்ந்து பிளான் போட்டு இந்தக் கடத்தலைச் செய்திருக்கானுங்க.”
“நாகராஜனுமா… ? அவன்தான் உள்ள இருக்கானேடா?”
“நாகராஜன் சிக்கினதாலதான் இவனுங்க பிளான் குழம்பி போயிருக்கு கதிர். நாகராஜனோட குடோன் எல்லாம் சீல் வச்சதுனால, கடத்துனவங்களை எங்க வைக்கன்னு புரியாம, வேற வழியில்லாம தன்னோட கெஸ்ட்ஹவுஸ்ல வச்சிருக்கான் குமார்.
அது கொஞ்சம் அமைதியான ஏரியா. அதனால மாட்டிக்க மாட்டோம்னு தப்புக் கணக்குப் போட்டிருக்கான்.”
“…”
“ட்ராவல் ஏஜென்சி வச்சிருக்கறவன், தனிமையா வெளி நாட்டுல இருந்து வயதான தம்பதிகள் இந்தியா வர்ற தகவலை சேகரிச்சு சொன்னதும், அந்த லேடி புரபசர்தான் கம்ப்யூட்டர் ஹேக்கிங் மூலமா அந்தப் பயணிகள் பற்றிய எல்லா தகவல்களும் திரட்டித் தர்றவ.
இந்தியா வந்து இறங்குறவங்களைக் கடத்தறதுக்குத் தேவையான உதவிகளை, குமாரும் அந்த நாகராஜனும்தான் செய்திருக்கானுங்க. அந்த லேடியோட புருஷன்தான் எல்லா மொழியும் கத்து வச்சிகிட்டு, சாட்டிலைட் ஃபோன்ல கடத்துனவங்களோட உறவினர்கள்கிட்ட மிரட்டிப் பேசியிருக்கான்.
அந்த தாதா எந்த ட்ரெஸ்ட்ல பணம் போடறாங்களோ, அங்க போய் மிரட்டி அந்தப் பணத்தைக் கைப்பற்றி இங்க கொண்டு வந்து சேர்க்கறதுன்னு பக்காவா ப்ளான் போட்டு செய்யறானுங்க.”
“…”
“ஏர்போர்ட்ல சிசிடீவி கேமராவை செக் பண்ணதுல கிடைச்ச முகம் அந்த லேடியோட புருஷன்தான். அவன்தான் போய் கடத்திட்டு வந்திருக்கான். அன்னைக்கு அந்த லேடி அந்தத் தம்பதிகளோட மகனை, இரண்டாவது முறையா ஃபோன்ல மிரட்டிப் பேசதான் அங்க வந்திருக்கு. அப்பதான் சிவரஞ்சனி கண்ணுல மாட்டியிருக்கு.
சேட்டிலைட் ஃபோன், லேப்டாப், அவனுங்க வச்சிருந்த துப்பாக்கி எல்லாம் பறிமுதல் பண்ணியிருக்கோம். அந்த லேடியும் அவ புருஷனும் அப்ரூவரா மாறி, எல்லாத்தையும் விரிவா சொல்லிட்டாங்க. யாருக்குமே ஜாமீன் கிடைக்காத பிரிவுல வழக்கு பதிவு பண்ணி, உள்ள தள்ளியாச்சு. நேத்து போய் முதல்கட்ட அறிக்கை சப்மிட் பண்ணிட்டு வந்துட்டேன்.”
“கொஞ்சநஞ்ச ஆட்டமா ஆடுனானுங்க… உப்பைத் தின்னவன் தண்ணி குடிச்சே ஆகனும். அவனுங்க வெளிய வரவே கூடாது ஸ்ரீதர்.”
“அவனுங்க இனி வெளிய வரவே முடியாது கதிர். குமாருக்கு அவன் கட்சியிலயே பயங்கர எதிர்ப்பு. அது மட்டுமல்லாமல் இதுல மத்திய உள்துறை அமைச்சர் நேரடியா கவனம் செலுத்துறாரு.
இந்திய சுற்றுலாத் துறைக்கே பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விஷயம் இது. அதனால அவனுங்களுக்கு ஆயுசுக்கும் ஜெயில்தான்.”
ஸ்ரீதரது கூற்றை ராகவனும் ஆமோதிக்க, வாசுகியோ…
“போதும் போதும் ஊர் வம்பு பேசுனது. உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சி, இனியாவது எந்த வம்புக்கும் போகாம ஒழுங்கா உன் வேலையை மட்டும் பார்த்துகிட்டு இரு.”
“சரிக்கா…”
வாசுகியிடம் பவ்யமாகத் தலையை ஆட்டிக் கொண்டவனைப் பார்த்து, நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டனர் ஸ்ரீதரும் ராகவனும். கதிரின் சேவைகள் தொடரும் என்பது அவர்களுக்குத் தெரிந்த விஷயம்தானே…
சிறிது நேர ஓய்விற்குப் பின் மாலை நேர வரவேற்புக்குத் தயாராகினர். இளநீல நிறத்தில் பட்டுப் புடவை அணிந்து அழகான அலங்காரத்தில் ஜொலித்தாள் சிவரஞ்சனி. அவளது புடவையின் நிறத்திற்கு பொருத்தமான நிறத்தில் கோட் அணிந்து மிடுக்காக கிளம்பினான் கதிர்.
எப்பொழுதும் வெள்ளை வேட்டி சட்டை அணிபவனுக்கு அந்தக் கோட் தனி வசீகரத்தைத் தந்திருந்தது. இருவரையும் ஜோடியாக நிற்க வைத்து, திருஷ்டி சுற்றிய பிறகு அனைவரும் மண்டபத்திற்கு கிளம்பிச் சென்றனர்.
மாலை வரவேற்புக்கு கதிரின் தாய் தந்தை வழி உறவுகளும் அழைக்கப் பட்டிருந்தனர். மேலும் அவனது நண்பர்கள், தொழில் முறையில் பழக்கமானவர்கள் அனைவரும் விழாவிற்கு வந்திருந்தனர்.
ராகவன் வாசுகியின் உறவினர்கள், நண்பர்கள், ராகவனின் கட்சி தோழர்கள் அனைவரும் வந்து மணமக்களை வாழ்த்தினர். தீனதயாளனும் தனது குடும்பத்தோடு வந்து, விழாவில் கலந்து கொண்டார். சகாயமும் தனது குடும்பத்தோடு வந்து வாழ்த்தினான்.
அழகரும் வாசுகியும் ராகவனும் வந்திருந்த அனைவரையும் வரவேற்று உபசரித்து திருப்தியாக வழியனுப்பினர். சொந்தங்கள் மட்டும் எஞ்சியிருக்க அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
காலையிலிருந்து மாற்றி மாற்றி அலைச்சலும் நீண்ட நேரம் நின்றதுமாக, பாதங்கள் வலிக்க சிவரஞ்சனி சோர்வுறும் போதெல்லாம், அவளுக்கு பழச்சாறு வரவழைத்துக் கொடுத்து, சிறிது நேரம் அமரச் செய்து என கனிவோடு கவனித்துக் கொண்டான்.
இறுதியாக குடும்பப் புகைப் படம் எடுக்க ராகவன், வாசுகி, அனு, ஆதவன், அழகர் அனைவரும் வந்து நிற்க ஸ்ரீதரையும் அழைத்து நிற்க வைத்துக் கொண்டான்.
“கதிர், உன் கல்யாணம் சிறப்பா முடியனும்னு நிறைய கோவிலுக்கு வேண்டுதல் வச்சிருக்கேன்டா. நீ இன்னைக்கு நைட்டே ஆரம்பிச்சாதான், ஒவ்வொரு கோவிலாப் போய் வேண்டுதல் முடிக்க சரியா இருக்கும். முதல்ல திருப்பதியில இருந்து ஆரம்பிங்க.”
கண்களில் கள்ளச் சிரிப்போடு வாசுகி கூற… ஸ்ரீதரோ,
“மொத்தம் எத்தனை கோவில்க்கா போகனும்?”
“அது இருக்கு… 108 திவ்ய தேசங்கள்லயும் வேண்டுதல் இருக்கு.”
“அப்ப இன்னைக்கு நைட்டே கிளம்பனுமா வாசுகி?”
“ஆமாங்க… அப்பதான சிவரஞ்சனி போட்டிருக்கற, பத்து நாள் லீவுக்குள்ள வேண்டுதலை முடிக்க முடியும்.”
தன்னை நடுவில் வைத்துக் கலாய்த்துக் கொண்டிருக்கும் அனைவரையும் கொலைவெறியில் முறைத்தவன்,
“அக்கா… நீ என்ன பண்ற, எனக்கு அழகா அம்சமா ஆம்பிளைப் பிள்ளை ஒன்னு பொம்பளப் பிள்ளை ஒன்னு பிறக்கனும்னு வேண்டுதல் வை. அது நிறைவேறின பிறகு, மொத்தமா எல்லா வேண்டுதலுக்கும் சேர்த்து, பிள்ளைகளை உன்கிட்ட விட்டுட்டு, நானும் சிவாவும் ஜாலியா போயிட்டு வரோம்.”
என்றபடி சிவரஞ்சனியைத் தோளோடு அணைத்துக் கொண்டவன், வெட்கத்தில் சிவந்தவளை ரசிக்க,
“ஏன்டா ஆஞ்சநேயர் பக்தன்னு ஒருத்தன் எங்ககூட இருப்பானே அவன் எங்கடா?”
“ம்ம்ம்… அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சி. நீங்கல்லாம் இடத்தை காலி பண்ணுங்க.”
என்று கடுப்பில் கூறியவனைப் பார்த்து அனைவரும் சிரிக்க, அந்த அழகிய தருணம் புகைப்படமாகப் பதிந்தது.
வானும் மண்ணும் வாழ்த்துக் கூறி, அவர்களின் வாழ்வில் இனி என்றும் வசந்தமே என புன்னகைக்க… நாமும் வாழ்த்துகள் கூறி விடை பெறுவோம்.
நன்றி… சுபம்…