KS 14

KS 14

காதல் சன்யாசி 14

இரண்டு நாட்கள் இரண்டு யுகங்களாய் கழிந்து கொண்டிருந்தன.

அந்த வீட்டில் புதுமண தம்பதிகளுக்கான எந்த கலகலப்பும் இல்லை. ஏன்? ஒருவரை ஒருவர் பார்த்து பேசி கொள்வது கூட கிடையாது.

வீட்டு வேலை முடிந்ததும் தோட்டமே கதியென்று தமிழ் அங்கே சென்று விட,
ராகுல் தன் அறைக்குள்ளே அடைந்து கிடந்தான்.

ஒரு கேள்விக்கு பத்து பதில் சொல்பவன், இப்போது இரண்டு வார்த்தைகள் சேர்த்து பேசவே தடுமாறிக் கொண்டிருந்தான்.

இவர்களை கவனித்த பார்வதியின் இரத்த அழுத்தம் தான் எகிறி கொண்டிருந்தது.

மடிக்கணினியில் ஏதோ தட்டி கொண்டிருந்த, மகனை முறைத்தவர், “டேய், எழுந்து போய் ரெடியாகு டா” என்று உத்தரவிட்டார்.

“எங்க ம்மா போகணும்?” சுரத்தையே இல்லாமல் கேள்வி வந்தது.

“ம்ம் கோயிலுக்கு போகணும் கிளம்பு.”

சற்று யோசித்தவனுக்கு அது சரியென பட்டது, மறுப்பு சொல்லாமல் ‘சரி’ என்றான்.

தமிழிடமும் அதையே சொல்ல, “அவனும் நீங்களும் போயிட்டு வாங்க ம்மா. நான் நாளைக்கு போறேன்” என்க,

“பல்லை தட்டிடுவேன், இனிமே என் மகனை அவன், இவன்னு பேசிட்டு இருந்தேன்னா, இந்த காலத்து பொண்ணுங்களுக்கு கொஞ்சம் கூட மரியாதை தெரியறது இல்ல” என்று கடிந்து கொண்டவர்,

“ராகுல் கல்யாணம் முடிஞ்சதும் குடும்பத்தோட கோயிலுக்கு போகணும்னு நினச்சிருந்தேன். அதனால சீக்கிரம் கிளம்பு” என்று உத்தரவிட்டு சென்றார்.

அடுத்த பத்து நிமிடங்களில் தயாராகி வந்த தமிழை பார்த்து, பார்வதியின் முகம் சுருங்கி போனது.

எப்போதும் போல சாதாரண சேலையும் இழுத்து முடியிட்ட கொண்டையுமாக வந்து நின்றாள்.

தலையில் அடித்து கொண்டவர், அவளை அறைக்குள் இழுத்து சென்று, கம்போர்ட்டில் இருந்து வண்ண பட்டு சேலைகளை எடுத்து அவளிடம் தந்தார்.

“இதெல்லாம்?”

“வர போற பொண்டாட்டிகாக கிருஷ்ணா வாங்கி வச்சது”

“அப்ப, இதெல்லாம் நிவேதா மேடம்காக வாங்கினது, நான் எப்படி?”

“என்கிட்ட கேள்வி கேக்க கூடாதுன்னு முதல்லையே சொல்லி இருக்கேன்”
என்றவர் அதில் ஒரு சேலையை தேர்ந்து எடுத்து அவள் கையில் திணித்து விட்டு சென்றார்.

தமிழ் தயங்கி தயங்கி அதை உடுத்தி வர, கிட்டத்தட்ட அரைமணி நேரம் எடுத்தது அவளுக்கு.

தலை கவிழ்ந்து வெளியே வந்த தமிழ்ச்செல்வியை பார்த்து, ராகுல், பார்வதி இருவர் முகமும் மலர்ந்தது.

“ம்மா, நம்ம தமிழா இது?” அவளை பார்த்ததும் இந்த கேள்வி தான் அவனுக்கு தோன்றியது.

பார்வதி முகம் மலர்ந்த புன்னகையுடன் தன் அறைக்குள் சென்றவர், குடும்ப நகையென்று எடுத்து வந்து தன் மருமகளுக்கு தன் கையால் பூட்டி அழகு பார்த்தார்.

முழு பூவேலைப்பாடுகள் நிறைந்த ஆங்காங்கே கல் பதித்த மெருன் நிற சேலை அவள் மஞ்சள் மேனியில் மேலும் ஒளி கூட்டியது.

அவளை அணி செய்த அணிமணிகளும், அதற்குள் மறைந்து சற்றே முகங்காட்டிய மஞ்சள் கயிறும், அவள் முகத்தில் தெரிந்த களையும் அவள் புது பெண் என்று பறை சாற்றியது.

“ஏய், ரொம்ப அழகா தெரியிற தமிழ் நீ! இனிமே எப்பவும் இப்படியே டிரஸ் பண்ணு” ராகுல் அவளை வியந்து பாராட்டினான்.

“இது… இந்த சேரி, நீ நிவேதா மேடம்காக வாங்கினதா?” தமிழின் கேள்வி சங்கடமாக வர,

நெற்றி சுருக்கியவன், “இல்ல தமிழ், நான் ஜாப்ல சேர்ந்ததுக்கு அப்புறம் அம்மாக்கு எப்பல்லாம் சேரி எடுக்கறேனோ அப்ப எக்ஸ்ட்ரா ஒரு சேரி எடுத்து வைப்பேன். என் வருங்கால மனைவிக்காக எடுத்து வைக்க சொல்லி அம்மா சொன்னதுக்காக.”

“நிவிய நான் மாடர்ன் ட்ரஸ்லயே பார்த்ததால, அவளுக்கு சேரி எடுக்கணும்னு எனக்கு தோணல. நீ சங்கடபடாத தமிழ்” அவள் சங்கடம் புரிந்து விளக்கமாகவே சொன்னான்.

“எனக்கு என்னவோ பயமா இருக்கு ராகுல்! இதெல்லாம்… எங்க போய் முடியுமோ தெரியல” அவளால் வேறு யாரிடமும் தன் மன கலக்கத்தை சொல்ல முடியாது. எனவே அவனிடமே சொல்லி விட்டாள்.

“எல்லா சரியா போயிடும் தமிழ். நீ ரிலாக்ஸா இரு” அவனுக்கு வேறு ஆறுதல் வார்த்தைகள் கிடைக்கவில்லை.

மனத்தாங்கலுடனே அவர்களுடன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றாள்.

நல்ல பச்சைநிற சேலை பாங்காய் கட்டி, வகைவகையான ஆபரணங்கள் அணி செய்ய, வண்ண பூமாலைகள் மார்பில் படர்ந்து மனம் பரப்ப, சுடர்விட்ட தூங்கா விளக்கு வெளிச்சத்தில் முகம் காட்டி, எந்த சலனமும் இன்றி கர்பகிரகத்தில் அமர்ந்திருந்தாள் அகில உலக தாயான பராசக்தி.

இறைவியை தரிசித்து நின்ற தமிழ்ச்செல்வியின் கண்கள் குளமாக,
‘பாரு ம்மா, உன்னோட ஆயிரமாயிரம் கண்களை திறந்து என் கோலத்தை நல்லா பாரு. நான் கேட்டேனா உன்ன? எனக்கு பூவும் பொட்டும் வேணும், புது வாழ்க்கை வேணும்னு. இல்லயே’ அவள் உள்ளம் குமுறியது.

‘பிறந்த உடனேயே அம்மாவ எடுத்துகிட்ட, அப்புறம் என் வாழ்க்கையையும் பரிச்சிகிட்ட, ஏன்னு கேட்க தெரியல. இதுதான் என் விதின்னு நான் இருந்தேனே, ஏம்மா என் விதிய மாத்தி எழுதின?’

கைகள் கூப்பி இருக்க அவள் மனம் தன் பாட்டில் புலம்பி கொண்டிருந்தது.

‘மனசளவில கூட களங்க படாத என்னை, அத்தனை பேர் கேவளமா பேசும் போது நீ ஏம்மா ஊமையாவே இருந்த?’

அவள் தொண்டை தாண்டி வந்த கதறலை தன் கையால் வாய்மூடி அடக்கினாள்.

‘எங்க மேல எந்த தப்பும் இல்லன்னு நிவேதா மேடமுக்கு புரிய வை. என்னால பிரிஞ்சு போன அவங்க காதலை மறுபடியும் சேர்த்து வை’

‘எந்த பிறவியில என்ன பாவம் செஞ்சேனோ, இப்ப வரைக்கும் தண்டனை அனுபவிக்கிறேன். இன்னொரு பொண்ணோட வாழ்க்கைய பறிச்ச பாவத்தையும் என்னால சுமக்க முடியாது. எப்படியாவது என்னை இந்த இக்கட்டிலிருந்து விடுதலை செய்ய ம்மா’ அவள் கண்ணீரோடு மன்றாடினாள்.

அர்ச்சனை கூடையோடு தமிழ் பிரகாரம் சுற்றி வர, ராகுல் அவளுடனே நடந்தான். முதல் சுற்றோடு பார்வதி கோயில் படியில் அமர்ந்து விட்டிருந்தார்.

அவள் கலங்கிய முகத்தை கவனித்தவனின் உள்ளம் நெருடலானது.

“ரொம்ப நேரம் கடவுள் கிட்ட ஏதோ ஆப்ளிகேஷன் போட்டுட்டு இருந்த போல?” ராகுல் முயன்று அவளிடம் பேச எத்தனித்தான்.

தமிழ், “ம்ம் மனசு சரியில்ல, அதான்” அவள் வார்த்தைகள் அவன் முன்னால் ஏனோ தடைப்பட்டன.

ஆனாலும், அவள் மனம் இப்போது தெளிந்தே இருந்தது. ஏதோ பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போன்று உணர்ந்தாள்.

“நடக்கறது எல்லாமே தப்பா இருக்கு அதான், நிவேதா மேம், நம்ம மேல எந்த தப்பும் இல்லன்னு சீக்கிரம் புரிஞ்சிகணும்னு வேண்டிகிட்டேன்.”

நிவேதா பெயரை கேட்டதும் ராகுல் முகம் சட்டென இருண்டு போனதை கவனித்தவள், “மேடம் மேல நீ கோப படாத டா, அவங்க இடத்தில யார் இருந்தாலும் அப்படி தான் பேசி இருப்பாங்க. ஏன்? அதைவிட மோசமா கூட நடந்திருப்பாங்க” தமிழ் அவனை சமாதானம் செய்ய முயற்சிக்க, அவன் அமைதியாகவே வந்தான்.

மேலும் தமிழ், “எல்லாத்துக்கும் காரணம் அந்த… வீடியோ தான்!”

அதை நினைக்கும் போது இருவர் நெஞ்சமும் இப்போதும் நடுக்கம் கொண்டது.

“அந்த வீடியோ… யார் எடுத்திருப்பாங்க? ஏன்? அப்படியொரு கேவலமான வேலைய செய்யணும்? ஒருவேளை யாராவது விளையாட்டா செஞ்சிருப்பாங்களோ? சரியா, முகூர்த்த நேரத்தில அதை ப்ளே பண்ணி இருக்காங்கன்னா, எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு ராகுல்.”

தமிழ்ச்செல்வி அன்றைய நிலையை ஆராய்பவளாய் பேசிக்கொண்டு போக, இத்தனைக்கும் ராகுல் அமைதியாகவே வந்தான்.

“நாம விசாரிச்சா கண்டிப்பா இந்த வேலைய செஞ்சவங்க யாருன்னு கண்டு பிடிச்சிடலாம்” அவள் நம்பிக்கையாக சொல்ல,

“சரி, விசாரிக்கலாம். அப்புறம்?” அவன் ஏதோ போல கேட்டான்.

“நம்ம மேல எந்த தப்பும் இல்லன்னு எல்லாரும் புரிஞ்சிப்பாங்க இல்ல.”

“சரி, அதனால என்ன ஆகும்னு நினக்கிற?” அவன் கேள்வி விட்டத்தியாக வந்தது.

“உண்மை தெரிஞ்சா நிவேதா மேம் உன்ன புரிஞ்சு ஏத்துப்பாங்…?” அதற்கு மேல் வார்த்தைகள் வெற்றுபட தமிழ் அமைதியானாள்.

ராகுலின் இதழில் விரக்தி புன்னகை வந்து மறைந்தது.

“எதுவுமே மாற போறதில்ல, வீணா கண்டதை நினச்சு குழம்பிக்காத” என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு வேக எட்டுக்களோடு முன்னால் நடந்தான்.

உண்மை நிலை அவளுக்கும் புரிய, ‘இதெல்லாம் மாற வேற வழியே கிடையாதா?’ என்று தமிழ் வெதும்பி நின்றாள்.

# # #

எரிந்து போன வானத்தில் இந்த வெண்ணிலவு மட்டும் புகைந்து கொண்டிருந்தது!

இருண்டு போன அவள் இதயத்தை போல, அந்த அறையும் இருளில் மூழ்கி இருந்தது.

‘மறக்கத்தான்
முயல்கிறேன்
அவனை!
ஆனால்,
அவனை தவிர்த்து
அனைத்தையும்
மறந்து போகிறேன்!’

அவள் காதல் வலி உயிர்வரை தெறிக்க, தாங்க இயலாமல் மெத்தையில் சோர்ந்து கிடந்தாள் நிவேதா.

அவனோடிருந்த ஒவ்வொரு காதல் தருணமும் நினைவில் உழன்று வலி கூட்டுவதாய்.

அவன் காதல் கசந்து போன இந்த மூன்று நாட்களில் அவளை வெறுமை சூழ நரக வேதனையில் தவித்து கொண்டிருந்தாள் இவள்.

இதுவரை வெற்றி ஒன்றே அவள் வாழ்க்கை பக்கங்களை நிறைத்துக் கொண்டு வந்திருக்க, தன் உயிர் காதலின் பெருந்தோல்வி எழுதிய பக்கங்களை தன் கண்ணீரில் அழிக்க முயன்று அதிலும் தோற்று கொண்டிருந்தாள்.

திருமண மண்டபத்தில் இருந்து வந்து அறைக்குள் நுழைந்து கதறியவள், இதோ இப்போதும் மனம் ஆறாமல் ரணத்தோடே சுருண்டு கிடந்தாள்.

சட்டென அந்த அறையில் வெளிச்சம் பெருகியது. சாருமதி தான் விளக்குகளை உயிர்ப்பித்து இருந்தாள்.

மகளின் நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் தெளிவான சிந்தனையும் சீறான செயலாற்றும் திறன் உட்பட அனைத்தையும் தொலைத்து விட்டு சாதாரண பேதை பெண்ணின் மனநிலையில் கிடந்தவளை காண நெஞ்சம் கொதித்தது அவருக்கு.

செல்ல மகளின் நிலை கண்டு அவள் மனம் கலங்க தான் செய்தது. அதனால் ஏற்பட்ட ஆதங்கம் அவள் வார்த்தைகளிலும் தெறித்தது.

“இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படியே அழுதுட்டு கிடக்க போற?”

நிவேதாவிடம் பதில் இல்லை, எழுந்து நேராக அமர்ந்து கொண்டாள்.

“தப்பு செஞ்ச அவனே புது பொண்டாட்டியோட ஊர் சுத்திட்டு இருக்கான், நீ மட்டும் ஏன் இந்த ரூம் உள்ளேயே அடைஞ்சு கிடக்கிற?

“அவன நம்பாத, வேணாம்னு, நான் எத்தனை முறை சொல்லி இருப்பேன். முதல்லயே என் பேச்சை கேட்டிருந்தா, உனக்கு இந்த நிலைம வந்திருக்குமா?”

சாருமதி குத்திகாட்டி பேச, அவள் மேலும் உடைந்து போனாள்.

“எப்பவும் நீ நீயா இரு நிவி. விட்டது தோஷம்னு கம்பெனி போய் உன் வேலைய பாரு” என்று அறிவுரித்தினாள்.

“நிவிய சமாதானம் செய்யறத விட்டுட்டு, அவ மனசை புண்படுத்தற மாதிரி பேசற சாரு நீ”

சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு உள்ளே வந்த ராமசந்திரன் மனைவியை கடிந்தார்.

“நான் நடந்த உண்மைய தான சொன்னேன். நீங்களும் தான அந்த வீணாபோனவனை தலையில வச்சு கொண்டாடினீங்க, இவளுக்கு நீங்களே நல்ல புத்தி சொல்லுங்க” என்று சாருமதி அங்கிருந்து கோபமாகவே வெளியேறினாள்.

ராமு அருகில் வந்து மகளின் தலையை ஆறுதலாய் வருட, நிவேதா உடைத்தழுது விட்டாள்.

“நான் ஏமாந்துட்டேன் டாட், ராகுல் இவ்வளவு மோசமா இருப்பான்னு நான் நினைக்கவே இல்ல” என்று முகம் பொத்தி கதறினாள் அவள்.

எதற்கும் கலங்காத தன் மகளின் இந்த கோலம் அவருக்கும் புதிது தான். இதிலிருந்து நிவி விரைவில் மீண்டு வர வேண்டும் என வேண்டிக் கொண்டார்.

சற்று நேரம் அமைதி காத்தவர், “எனக்கென்னவோ, ராகுல் தப்பானவர்னு தோணல நிவி” யோசனையோடு சொல்ல நிவேதா திகைத்து நிமிர்ந்தாள்.

“அந்த வீடியோவ நீங்களும் தான ப்பா பார்த்தீங்க?” நிவேதா நீர் கோர்த்த விழிகளோடு கேட்க, அவர் ஆழ்ந்த பெருமூச்செறிந்தார்.

“வீடியோவ பார்த்ததும் நானும் ராகுலை பத்தி தப்பா தான் நினைச்சேன். ஆனா, அவர் கடைசிவரைக்கும் அது உண்மை இல்லன்னு தான வாதாடினார்.”

“தப்பு செஞ்ச யாரும் தன்னோட தப்பை ஒத்துகிட்டது இல்லயே டாட்” ராகுலின் கொச்சை துரோகம் அவள் உடலை இப்போதும் நடுங்க செய்தது.

“ம்ம் ஆனா, எதிர்த்து நிக்கற ஆயிரம் பேருக்கு முன்னால, ஒரு பொண்ணு கழுத்தில தாலி கட்டுற தைரியம், எந்த தப்பு செய்தவனுக்கும் வராது மா”

ராமச்சந்திரன் அழுத்தமாக சொல்லியும், நிவேதா உண்மை நிலையை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தாள்.

“அவங்க மேல தப்பு இல்லன்னா, ஏன் ராகுல், தமிழ்செல்விய கல்யாணம் செஞ்சிக்கணும்?” அவள் ஆதங்கத்தோடு குறுக்கு கேள்வி கேட்க,

அவர் நேராய் பதில் சொல்லவில்லை. “எல்லாத்துக்கும் காரணமான அந்த வீடியோவ யாரு எடுத்ததுன்னு தெரிஞ்சா, உன் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். அது யாருன்னு சீக்கிரமே கண்டு பிடிக்கிறேன்” என்று உறுதி கூறினார்.

தன் மகளின் சந்தோஷ வாழ்வை அழிக்க நினைப்பது யாரென்று, அவருக்கு அறிய வேண்டி இருந்தது.

ஏதேதோ நினைவுகள் அவள் மனதில் மோத, நிவேதா மேலும் குழம்பி போனாள்.

மகளின் நிலை உணர்ந்தவராய், “சாரு சொன்ன மாதிரி நீ கம்பெனி வேலையில கவனத்தை செலுத்து நிவி. அது உனக்கும் கொஞ்சம் மாற்றமா இருக்கும்” என்று எடுத்து சொல்ல, நிவேதாவும் யோசனையுடன் சரியென்று தலையசைத்தாள்.

# # #

காலையில் வழக்கம் போல வங்கிக்குள் வந்த ராகுல் கிருஷ்ணாவை அங்கிருந்தவர்கள் வித்தியாசமாக பார்த்தனர்.

எப்போதும் துறுதுறுவென முகத்தில் மாறாத குறுஞ்சிரிப்போடு வலம் வருபவன் இப்போது, சேமித்த புன்னகை முழுவதும் செலவழிந்தவனாய் உள்ளே வந்தான்.

மரியாதையோடு முன்னால் அவனுக்கு காலை வணக்கம் வைத்தாலும், பின்னால் எழுந்த கிசுகிசுப்புக்களையும் கவனித்தவனாய் தன் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டான்.

விரிந்த சிரிப்போடு உள்ளே வந்த வீரமணி, “என்ன சார்? கல்யாணத்துக்குனு பதினஞ்சு நாள் லீவ் போட்டுட்டு இப்ப, நாலே நாள்ல வேலைக்கு வந்துட்டீங்க?” என்று கிண்டலாக கேட்க,

ராகுல் இதற்கு பதில் சொல்ல தெரியாமல் அமைதியாகவே இருந்தான்.

“நானும் பார்த்தேன் சார், உங்களுக்கு என்ன குறைச்சல்? யார் என்ன சொல்லி இருந்தாலும், நீங்க அந்த விதவை பொண்ண போய் கட்டி இருக்க கூடாது சா…ர்…”

அவன் பரிதாபம் காட்டுபவனை போல பேசிக்கொண்டு போக ராகுல் கோபமாக அவன் சட்டையை பிடித்து இருந்தான்.

“உங்களுக்கு எல்லாம் அறிவின்றதே கிடையாதா? பாக்கறது, கேக்கறது எல்லாத்தையும் அப்படியே நம்பிடுவிங்களா? அது உண்மையா? பொய்யா? சரியா? தப்பா?ன்னு யோசிக்க கூட மாட்டிங்களா?” ராகுல் ஆக்ரோசமாக கேட்க, தேவராஜ் மிரண்டு போனான்.

“சா…சாரி சார்”

அவன் சட்டையில் இருந்து கை எடுத்தவன், “தமிழ் என்னோட மனைவி. அவளை பத்தி மறுபடியும் தப்பா ஏதாவது பேச்சு வந்தது. நான் சும்மா பேசிட்டு இருக்க மாட்டேன். போய் வேலைய கவனிங்க போங்க” ராகுல் உத்தரவிட, விரமணி கலவரமாய் அங்கிருந்து வெளியேறினான்.

தன்னை சுற்றி இருக்கும் மூட சமூகத்தை நினைத்து அவன் மனம் மேலும் கொதிப்புற்றது.

அதே நேரத்தில்,

பார்வதி தவிப்புடன் அமர்ந்திருந்தார்.

அவர் முன்னால், விரல்களை எண்ணியபடி ஜோதிடம் கணித்து கொண்டிருந்தவர் நிமிர,

“நாங்க யாருமே எதிர்பார்க்கல. அவசர கோலமா கல்யாணம் நடந்து போச்சு. என் மகனுக்கும், மருமகளுக்கும் பொருத்தமெல்லாம் சரியா இருக்குல்ல. அவங்க நல்லபடியா சந்தோசமா வாழ்ந்து, எங்க குலம் தழைக்கணும், நல்ல வார்த்தை சொல்லுங்க ஐயா” என்று வேண்டினார்.

“நீங்க பயப்படற மாதிரி எதுவும் இல்ல மா. உங்க மகன், மருமகளோட கல்யாண பொருத்தம் அமோகமா பொருந்தி வருது. தேடி அலைஞ்சாலும் இப்படி பொருத்தம் அமையறது அபூர்வம். அவங்க கல்யாணமும் நல்ல சுப முகூர்த்தத்தில தான் நடந்தேறி இருக்கு. இனிமே அவங்க வாழ்க்கையில எந்த குறையும் இருக்காது” என்று பெரியவர் சொல்ல, பார்வதியின் மனம் நிறைந்து போனது.

# # #

காதல்காரன் வருவான்…

error: Content is protected !!