Katre-prefinal

Katre-prefinal

தன் மனதில் இருந்த விடயங்கள் எல்லாவற்றையும் கவிகிருஷ்ணாவிடம் கூறிய பிறகு மனதில் இருந்த பெரும்பாலான குழப்பங்கள் எல்லாம் நீங்கியது போல உணர்ந்தாள் தேன்மதி.

இருந்தாலும் ஏதோ ஒரு தயக்கம் அவள் மனதில் இருந்து கொண்டே தான் இருந்தது.

அது என்னவென்று அவளால் தீர்மானமாக கண்டு பிடிக்க முடியவில்லை.

இது நாள் வரை தன் மனதிற்குள் தேக்கி வைத்து யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தவித்த விடயங்களை எல்லாம் மனம் திறந்து கூறி விட்டதால் என்னவோ மனதளவில் சந்தோஷமாக உணர்ந்தவள் நிம்மதியாக உறக்கத்தை தழுவி கொண்டாள்.

இரண்டு, மூன்று வாரங்கள் வழக்கம் போல கழிந்தது.

எப்போதும் போல் அவரவர்கள் அவரவர் அன்றாட வேலைகளை கவனிக்க தொடங்கி விட ஆபிஸ் வந்த தேன்மதியும் தன் முன்னால் இருந்த பைல்களை எல்லாம் பார்க்க தொடங்கினாள்.

அப்போது அறைக் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவள் அங்கே புன்னகை முகமாக நின்று கொண்டிருந்த கவிகிருஷ்ணாவை பார்த்து அதிர்ச்சியாக எழுந்து நின்றாள்.

“கிருஷ்ணா! நீங்க? இங்கே? எப்படி?” தடுமாறியபடி நின்ற தேன்மதியைப் பார்த்து புன்னகத்து கொண்டே

அவளெதிரில் வந்து நின்றவன்
“என்னை இங்கே நீ எதிர்பார்க்கல போல?” என்று கேட்கவும் இல்லை என்றும் ஆமென்றும் மாறி மாறி தலையை ஆட்டிய படி நின்றாள்.

“ஏன் இவ்வளவு ஷாக்? நான் உன் ஆபிஸ் வரக்கூடாதா?” கேள்வியாக நோக்கியவனைப் பார்த்து அவசரமாக இல்லை என்று தலை
அசைத்தவள்

“திடீர்னு வரவும் கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன் அவ்வளவு தான் ஆமா நீங்க இங்கே எங்கே?” என்று கேட்க அவள் கை பற்றி இழுத்து அவளை அவளது இருக்கையில் அமரச் செய்தவன் புன்னகையோடு அவளை பார்த்து கண் சிமிட்டினான்.

தேன்மதி குழப்பமாக அவனை பார்க்க அவளது இருக்கையின் இரு புறமாகவும் தன் கைகளை ஊன்றி கொண்டவன் அவளை பார்த்து கேள்வியாக புருவம் உயர்த்த அவளோ பதட்டத்துடன் கவிகிருஷ்ணாவை நோக்கினாள்.

“கிருஷ்ணா இது ஆபிஸ்” வார்த்தைகள் தந்தியடிக்க அவன் முகம் பார்த்து கூறியவள்

முகத்தின் அருகில் நெருங்கி சென்றவன்
“ஆமா ஆபிஸ் தான் நான் இல்லைன்னு சொல்லலயே!” எனவும் தேன்மதியோ அச்சத்தோடு தன் பார்வையை சுற்றிலும் சுழல விட்டாள்.

“உன்னை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு இல்லையா? அது தான் பார்த்துட்டு போக வந்தேன்” மேலும் அவளை நெருங்கி வந்த வண்ணம் அவன் கூறவும்

“நீங்க முதல்ல இங்க இருந்து போங்க” கவிகிருஷ்ணாவின் பார்வை தன் இதழ் மீது நிலை குத்தி நிற்பதைப் பார்த்து தன் கண்களை மூடிக் கொண்டவள் அவன் நெஞ்சில் கை வைத்து தள்ள சட்டென்று அவன் அங்கே இருந்து காணாமல் போய் இருந்தான்.

அதிர்ச்சியோடு தன் கண் திறந்து பார்த்தவள் வெறுமையாக இருந்த தன் அறையை குழப்பமாக நோக்கினாள்.

அந்த ஏசி குளுமையையும் தாண்டி அவள் முகம் வேர்த்து இருக்க கர்ச்சிப்பால் தன் முகத்தை துடைத்து கொண்டே தன் அறையை சுற்றிலும் திரும்பி பார்த்தாள்.

“கிருஷ்ணா அப்போ உண்மையாகவே இங்கே இல்லையா?” குழப்பமாக யோசித்து கொண்டு இருந்தவள் பின்னால் தன் வாயை இறுக மூடிய படி சிரித்துக் கொண்டு நின்றான் கவிகிருஷ்ணா.

யோசனையோடு தேன்மதி எழுந்து நிற்க மெல்ல அவளை நெருங்கி வந்தவன் பின்னால் இருந்து அவளை அணைத்துக் கொள்ள அவளோ பயத்தில் சத்தமிட்டு கத்தப் போகவும் அவசரமாக அவள் வாயை தன் கைகளால் மூடி கொண்டான் கவிகிருஷ்ணா.

“ஹேய்! நான் தான்! நான் தான்!” சிரித்துக் கொண்டே அவள் முன்னால் வந்து நின்றவன் மார்பிலும், தோளிலும் மாறி மாறி அடித்தவள் கோபமாக அவனை தள்ளி விட சிரித்துக் கொண்டே அங்கிருந்த கதிரையில் விழுந்தவன் புன்னகையோடு அவளை பார்த்து கண் சிமிட்டினான்.

“என்ன விளையாட்டு இது? கொஞ்ச நேரத்தில் நான் எவ்வளவு பயந்து போயிட்டேன் தெரியுமா?” கோபமாக கேட்டவள் கை பற்றி தன் அருகில் அமரச் செய்தவன்

“இவ்வளவு தைரியமாக உன் ஆபிஸ் வந்து உன்னை தொட இந்த கிருஷ்ணாவை தவிர வேறு யாரால் முடியும்?” என்று கேட்கவும்

“ஆமா ரொம்ப தான்” என கோபத்தோடு தேன்மதி தன் முகத்தை திருப்பிக் கொண்டு இருந்தாள்.

“காலையில் தூங்கி எழுந்ததுல இருந்து உன் ஞாபகம் தான் அது தான் உன்னை பார்க்க ஓடோடி வந்தேன் இனியும் உன்னை பிரிந்து என்னால இருக்க முடியாது தேனு! உன் மனதில் நான் இருக்கேன் என் மனதில் நீ இருக்க இதற்கு மேல் நமக்கு என்ன வேணும்? வீட்டில் சொல்லி நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணலாமா?” கவிகிருஷ்ணாவின் கேள்வியில் முகம் மாற அமர்ந்து இருந்தவள் யோசனையோடு தன் கைகளையே பார்த்து கொண்டு இருந்தாள்.

“என்ன ஆச்சு தேனு? என்ன யோசிக்குற?”

“அது வந்து அது”

“சொல்லு டா என்ன விஷயம்?”

“அது எனக்கு கொஞ்சம் டைம் வேணும் கிருஷ்ணா நீங்க நினைக்குற மாதிரி உங்களை விட்டு விலகி போக இந்த டைம் நான் கேட்கல என் மனதில் இருக்கும் குழப்பம் எல்லாம் முழுமையாக இல்லாமல் போகணும் அப்போ தான் எனக்கு திருப்தியாக இருக்கும் இதில் உங்க லைஃப்பும் இருக்கு கிருஷ்ணா கொஞ்சம் பொறுமையாக தான் இதை நான் கையாளணும் ப்ளீஸ் கிருஷ்ணா என்னை புரிஞ்சுப்பீங்கனு நம்புறேன்”

“கண்டிப்பாக நான் புரிஞ்சுப்பேன் தேனு உனக்கு என்ன இன்னும் கொஞ்சம் டைம் வேணும் அது தானே? ஓகே டன் இன்னும் எவ்வளவு நாளோ, மாதமோ, வருஷமோ எவ்வளவு டைம் வேணும்னா எடுத்துக்கோ உனக்காக நான் எப்போதும் காத்துட்டு இருப்பேன்”

“கிருஷ்ணா!” சந்தோஷத்தோடு தேன்மதி அவன் மார்பில் சாய்ந்து கொள்ள அவளது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தான் கவிகிருஷ்ணா.

“தேனு!”

“சொல்லுங்க கிருஷ்ணா”

“நீ இப்படியே என் மேல சாய்ந்து இருந்தேன்னு வை நல்ல பிள்ளையாக இருக்குற நான் அப்புறம் வேற மாதிரி ஆகிடுவேன்” அவள் கன்னத்தில் கைகளால் கோலமிட்ட படி கூறவும்

அவனது கைகளை தட்டி விட்டு வெட்கத்தோடு எழுந்து நின்றவள்
“முதல்ல உங்களை இங்க இருந்து அனுப்பணும் நீங்க சும்மா இருந்தாலும் உங்க வாய் சும்மா இருக்காது” என்றவாறே அவனது கை பிடித்து எழுப்பி அவனது முதுகில் கை வைத்து அவனை கதவு வரை தள்ளி கொண்டு சென்றவள்

“போங்க” என்று கதவை காட்ட

“போகணுமா?” என்று கேட்டவனை முறைத்து பார்த்தாள்.

“சரி சரி போறேன் ஆஊன்னா முறைத்து பார்த்தே காலி பண்ணிடுவா” புலம்பிக் கொண்டே கவிகிருஷ்ணா வெளியேறி செல்ல புன்னகையோடு தேன்மதி திரும்பி நடந்தாள்.

சட்டென்று அறைக் கதவை திறந்து கொண்டு அவளருகில் வந்த கவிகிருஷ்ணா
“ஸாரி தேனு!” என்று விட்டு அவளது இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டு விட்டு ஓடி விட தேன்மதியோ அதிர்ச்சியாக தன் இரு கன்னத்திலும் கை வைத்து கொண்டு நின்றாள்.

அவனது செய்கைகளை எண்ணிய படியே புன்னகையோடு அன்றைய நாள் முழுவதும் வலம் வந்தவள் ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு செல்வதற்கு முன்னர் கோவிலை நோக்கி தன் காரை செலுத்தினாள்.

தன் மனமுருக கடவுளை வேண்டிக் கொண்டவள் கூடிய விரைவில் தான் கவிகிருஷ்ணாவோடு சேர வேண்டும் என்றும் தன் மன குழப்பங்கள் மறைய வேண்டும் என்றும் மனதார வேண்டிக் கொண்டே தன் வீட்டை நோக்கி புறப்பட்டாள்.

அன்று சென்னை நகரம் முழுவதும் கருமேகங்களால் வெகுவாக சூழ்ந்து இருந்தது.

தேன்மதி கோவிலில் இருந்து புறப்படும் போதே மெல்லிய தூரலாக ஆரம்பித்து இருந்த மழை மெல்ல மெல்ல வேகம் கொள்ள ஆரம்பித்தது.

பாதை முழுவதும் மழை நீரால் சூழ்ந்து கொள்ள தட்டுத் தடுமாறி காரை ஓட்டி கொண்டு வந்தவள் ஒரு கட்டத்திற்கு மேல் காரை செலுத்த முடியாமல் அந்த இடத்திலேயே ஓரமாக தன் காரை நிறுத்தினாள்.

“அய்யோ! இப்படி தனியாக வந்து மாட்டிட்டேனே இப்போ என்ன பண்ணுறது?” பயத்தோடு சுற்றிலும் பார்க்க எல்லா இடங்களும் இருளடர்ந்து போய் இருந்தது.

“அப்பாவுக்கு போன் பண்ணலாம்” என்று எண்ணிக் கொண்டே தேன்மதி தன் போனை எடுத்து சுரேந்திரனுக்கு அழைக்க அவருக்கு அழைப்பு மேற்கொள்ள படாமலே போன் கட் ஆனது.

மீண்டும் மீண்டும் வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் அவள் அழைப்பை மேற்கொண்டும் யாரையும் அவளால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

மழையின் வேகம் நேரம் ஆக ஆக அதிகரித்துக் கொண்டே இருக்க அச்சத்தோடு சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டவள் இறுதி முயற்சியாக கவிகிருஷ்ணாவிற்கு அழைப்பை மேற்கொண்டாள்.

அவனுக்கும் அழைப்பு மேற்கொள்ள முடியாமல் போகவே கோபமாக போனை தன் அருகில் இருந்த சீட்டில் விட்டெறிந்தவள் இரு கைகளாலும் தன் தலையை தாங்கிக் கொண்டு ஸ்டியரிங்கில் தன் தலையை கவிழ்த்து கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து மழையின் வேகம் சிறிது குறையவே அவசரமாக தேன்மதி தன் காரை ஸ்டார்ட் செய்ய பெருமளவு நீர் வீதியில் நிறைந்து இருந்ததால் அவளது கார் எஞ்சின் நீரை உள் வாங்கி மொத்தமாக செயலிழந்து நின்றது.

“அய்யோ! கார் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குதே! இப்போ நான் என்ன பண்ணுவேன்?” பதட்டத்துடன் தேன்மதி தன் போனை மறுபடியும் எடுத்து பார்க்க அதே நேரம் அந்த வீதியில் வந்து கொண்டிருந்த பெரிய லாரி ஒன்று தன் கட்டுப்பாட்டை இழந்து தேன்மதியின் கார் இருந்த புறமாக வந்து கொண்டிருந்தது.

மறுபுறம் கவிகிருஷ்ணாவும், சுரேந்திரனும் ஒரு பைக்கில் தேன்மதியை தேடி சென்று கொண்டிருக்க இன்னொரு புறம் நரசிம்மனும், விருத்தாசலமும் ஒரு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

மழையின் வேகத்தை பார்த்து அச்சம் கொண்ட சுரேந்திரன் தேன்மதி இன்னும் வீடு வராமல் இருப்பதை கவிகிருஷ்ணாவிடம் தெரிவிக்க உடனடியாக அவர்கள் வீடு வந்து சேர்ந்தவன் எல்லா தகவல்களையும் கேட்டு அறிந்த பின் சுரேந்திரனோடு அவளை தேடிப் புறப்பட்டான்.

மனம் முழுவதும் தேன்மதி கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டே பைக்கில் சென்றவன் தூரத்தில் அவளது கார் வீதி ஓரமாக நிற்பதைப் பார்த்து விட்டு அந்த கார் நின்ற இடத்தை நோக்கி வேகமாக பைக்கை செலுத்தினான்.

காரின் பின்னால் ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து வருவதைப் பார்த்ததும் அவசரமாக பைக்கை நிறுத்தி விட்டு பைக்கில் இருந்து இறங்கி அவளது காரை நெருங்கியவன் கார் கதவை திறந்து அவளை வெளியே இழுக்க அதே நேரம் லாரி வந்து அந்த காரில் மோதவும் சரியாக இருந்தது.

லாரி மோதிய வேகத்தில் காரின் கண்ணாடி சில்லு சில்லாக சிதறியது.

ஒரு கணத்தில் நடந்து முடிந்த நிகழ்வுகளுக்குள் தேன்மதி கீழே தரையில் விழுந்து கிடக்க கவிகிருஷ்ணாவோ மற்றைய
புறம் மரம் ஒன்றில் தலை மோதி தலையில் இருந்து இரத்தம் வடிய மயங்கி கிடந்தான்.

ஒரு கணத்தில் எல்லாம் நடந்து முடிந்து இருக்க பதட்டத்துடன் எழுந்து கொண்ட தேன்மதி அவசரமாக கவிகிருஷ்ணா அருகில் செல்ல அவனோ கொஞ்சம் கொஞ்சமாக தன் சுய நினைவை இழந்து கொண்டு இருந்தான்.

“கிருஷ்ணா! கிருஷ்ணா!” பதட்டத்துடன் அவன் தலையை தன் மடியில் வைத்துக் கொண்டவள் தன் துப்பட்டாவால் அவன் நெற்றியில் வைத்து இரத்தத்தை துடைத்து விட்டு கொண்டு இருக்க சுரேந்திரனோ அவசரமாக அந்த வழியால் வந்த வாகனங்களை நிறுத்த முனைந்து கொண்டு இருந்தார்.

அவர்களது நல்ல நேரம் விருத்தாசலம் அந்த வழியாக வந்ததனால் இவர்களை கண்டு கொண்டு அவசரமாக ஆம்புலன்ஸை வரவழைக்க உடனடியாக கவிகிருஷ்ணாவை ஆம்புலன்சில் ஏற்றி ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர்.

அவனருகில் அமர்ந்து கொண்டு
“உனக்கு எதுவும் ஆகாது கிருஷ்ணா! உன்னை என்னை விட்டு போக விட மாட்டேன்! உன்னை விட்டு போக மாட்டேன் கிருஷ்ணா! ப்ளீஸ் என்னை விட்டு போயிடாதேடா! ப்ளீஸ் கிருஷ்ணா ப்ளீஸ்! என்னால இன்னொரு இழப்பை தாங்க முடியாது கிருஷ்ணா! ப்ளீஸ் என் கிட்ட வந்துடு” என்று தேன்மதி கண்ணீர் வடித்து கொண்டு இருக்க

மெல்ல கண் திறந்து அவளைப் பார்த்தவன்
“நான் எங்கே…யும் போக மாட்டேன் டா…நான்…எப்போ…வும் உன்…னோட கவி தான்…டா…மதி…” என்றவாறே மீண்டும் மயக்கமாக அந்த வார்த்தைகளைக் கேட்ட தேன்மதி அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தாள்…..

JF. Husna,
B.Sc in Health Promotion,
Rajarata University Of Sri Lanka.

error: Content is protected !!