Un vizhigalil vizhuntha naatkalil – 9

அந்த வாரக் கடைசியில் வாணியும் ரேகாவும் கடைக்குச் சென்று சில பொருட்கள் வாங்கினர். அப்போது தான் வாணி, ஜீவா வீட்டிற்குச் செல்ல அனுமதி வாங்கலாம் என்று எண்ணியிருந்தாள்.

ஆம்! ஜீவா தன் இதயம் திறந்து பேசிவிட்டு சென்றதிலிருந்து அவளுக்கும் தனது சம்மதத்தை சொல்லிவிட வேண்டும் என்று தான் துடித்தது. ஆனாலும் ஏதோ ஒன்று அவளை வாய் திறக்க விடாமல் செய்தது. சில நாட்கள் யோசனைக்குப் பிறகு , ‘ காதல்னா பிரச்சனை வரத் தான் செய்யும், சமாளிப்போம். எவ்வளவோ இருக்கு வாழ்க்கைல, போராடு வாணி’ மனம் எப்போதோ முடிவெடுத்து இருந்தது.

அதற்கு முதற்கட்டமாக ரேகாவிடம் யமுனா வீட்டிற்கு செல்வதாகச் சொல்லி விட்டு செல்லலாம் என்று முடிவு செய்திருந்தாள். ரேகாவிடம் எப்போதும் பொய் சொல்ல மாட்டாள் வாணி. அதனால் தான் உண்மையும் இல்லாமல் பொய்யும் இல்லாமல் யமுனா வீடு என்று சொல்ல நினைத்திருந்தாள். ஏனோ இன்னும் ஜீவா வைப் பற்றிச் சொல்ல யோசித்துக் கொண்டிருந்தாள்.  

அந்த சூப்பர் மார்க்கெட்டில் இவள் பொருட்கள் வைக்கும் வண்டியை தள்ளிக் கொண்டு செல்ல, ரேகா தேவையானவற்றை அதில் எடுத்து வைத்துக் கொண்டே வந்தார்.

“  வாணி அந்தப் பக்கம் மிளகா இருக்குப் பாரு, ஒரு பாக்கெட் எடுத்து வை” சொல்லிவிட்டு இந்தப் பக்கம் உள்ள பொருட்களை எடுத்தார்.

அவள் சிந்தனை எல்லாம் அம்மாவிடம் எப்படி யமுனா வீட்டிற்கு செல்வதை கூறுவது  என்பது பற்றித் தான் இருந்தது. ரேகா மிளகாயை எடுக்கச் சொன்னது அவளுக்கு கேட்கவே இல்லை.

தன் பக்கம் உள்ள பொருட்களை எடுத்துவிட்டுத் திரும்ப, வாணி அசையாமல் நிற்பதைக் கண்டு எரிச்சலுற்றார் ரேகா.

“என்ன டி எருமை மாட்டு மேல மழை பேஞ்ச மாறி நிக்கற, நான் சொன்னது கேக்குதா இல்லையா ?” என்று அவளை உலுக்க , சுயம் பெற்றாள் வாணி.

“ ம்ம்.. என்ன மா கேட்ட, வெல்லமா?” அவசரமாக அதைத் தேட,

“ ஆமா வெள்ளம் வந்து ஊரெல்லாம் அடிச்சுட்டு போய்டுச்சு, மொதல்ல உன்ன கூட்டிகிட்டு போய் அந்த கோடாங்கி கிட்ட மந்திரிச்சுட்டு வரணும். வர வர ஒன்னும் சரியில்ல, அந்த மிளகாயை எடும்மா தாயே!” அவர் சற்று குரலை உயர்த்த வாணிக்கு தன்னையே நினைத்துச் சிரிப்புத் தான் வந்தது.

“ சரி சரி ராஜ மாதா, தங்கள் ஆணை” நக்கலடித்து அவரை சரி செய்தாள்.

பில் போடா வரிசையில் நின்ற போது , அது தான் சமயம் என்று மெல்ல ஆரம்பித்தாள் வாணி.

“ மம்மி.. “ காரியம் ஆகவேண்டும் என்றால் வாணி இப்படித் தான் அழைப்பாள்.

“ என்ன டி.. சாத்தான் வேதம் ஓதுது? என்ன வேணும்? “

“ ஒண்ணுமில்ல மம்மி, நான் என்னோட புது ஃப்ரெண்ட் யமுனா சொன்னேன்ல, அவளோட அக்கா க்கு சண்டே நிச்சயம் பண்றாங்களாம், என்னையும் வர சொன்ன, போயிட்டு வரட்டுமா?” பம்மிக் கொண்டே கேட்க,

“ அவ வேற ஊருன்னு சொன்ன? தனியா எப்படி போவ?”

“ இல்லம்மா பக்கத்து ஊரு தான் நான் போய் இறங்கினா அவளே வந்து கூட்டிட்டு போய்டுவா, ஒன்னும் பயம் இல்ல, ப்ளீஸ் மா” கொஞ்சம் கெஞ்சவும்,

“ சரி போயிட்டு வா, ஆனா உங்க அண்ணன் கிட்டயும் கேட்டுக்கோ”

‘ அண்ணன் ஒன்னும் சொல்லமாட்டான்..’ மகிழ்ச்சியோடு ஞாயிற்றுக்கிழமையை நோக்கி மனம் சென்றது.

அண்ணனிடம் போன் செய்து அவனது அனுமதியும் பெற்றாள். வெற்றியும் விஷயம் புரியாமல் சம்மதித்திருந்தான்.

அந்த வாரம் முழுதும் வாணியின் மனது ஜீவாவிடம் சொல்லாமல் சொல்லப் போகும் தன் காதலை நினைத்து குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. யமுனாவிற்கு ஜீவா அழைத்தானா இல்லையா என்பது தெரியவில்லை. அதனால் அவளும் வாணியிடம் ஒன்றும் கேட்காமல் இருந்தாள். வீட்டில் ஜீவாவும் நிச்சயதார்த்த வேலைகள் இருந்ததால் சரியாக பேசவில்லை.

ஜீவா பேசிய அடுத்த நாள் கண்மணி “ என்னவாயிற்று ?” என்று கேட்க,

அவனின் தங்கை நிச்சயத்திற்கு அழைத்திருப்பதாக மட்டும் சொல்லியிருந்தாள். அவன் காதலைச் சொன்னதை அவளிடம் சொல்லவில்லை.

 

அந்த நாளும் வந்தது. காலையிலேயே குளித்து முடித்து தலையைக் காயவைத்து நடுவில் மட்டும் கிளிப் போட்டு விரித்து விட்டிருந்தாள். அழகிய ஆகாய நீல நிறத்தில் கற்கள் பதித்த சுடித்தார் அணிந்து எழிலோவியமாய் வந்தாள்.

“என்ன டி ! நிச்சயம் உன் ப்ரென்டோட அக்காக்கா இல்ல உனக்கா? கொஞ்சம் அடக்கமா தலைய பின்னிட்டு போ!” ரேகா, அவளின் அழகு ஆபத்தை விளைவிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலையில் சொல்ல,

“என்னம்மா… கொஞ்சம் அழகா இருந்தா உனக்குப் பிடிக்காதே!” அவளும் சிணுங்க,

“ நீ அழகு தாண்டா.. அது தான் எனக்கு பயமா இருக்கு! உன்ன ஒருத்தன் கிட்ட கட்டிக் குடுக்கற வரை வயித்துல நெருப்பை கட்டிட்டு இருக்கேன்! உனக்கு அது புரியாது, நீயும் ஒரு தாயாகும் போது தான் அந்த வலி தெரியும். இப்போ நான் சொல்றத கேளு, அழகா பிண்ணி பூ வெச்சுட்டு போ!” ஆணை வந்தது.

பூ என்றதும் மனதை மாற்றிக் கொண்டாள்.

இடைக்குக் கீழ் வரை அழகாக பிண்ணி அவரே பூச்சூட்டி அனுப்பி வைத்தார் மகளை.

ஆனந்தமாக அவனைக் காணக் கிளம்பினாள்.

வீட்டை விட்டுக் கிளம்பியவள் அப்போது தான் சிந்தித்தாள். ‘நாம அவன் ஊருக்கு போய் எப்படி அவங்க வீட்டைக் கண்டுபிடிப்பது? போன் நம்பர் கூட தெரியாதே ! அட்லீஸ்ட் யமுனா கிட்டயாவது கேட்டிருக்கலாமோ! அம்மா கிட்ட வேற கெத்தா சொல்லிட்டு வந்தாச்சு, இப்போ திரும்ப போனா அசிங்கமாயிடுமே ! சரி போவோம் எப்படியாவது வழி கண்டுபிடிச்சு போகலாம் இல்லனா கொஞ்ச நேரம் சுத்திட்டு கெளம்ப வேண்டியது தான். முருகா.. ‘ மனதில் புலம்பிக் கொண்டே பஸ் ஏறி அவர்களின் ஊருக்கு வந்தாள்.

இவள் பஸ் ஏறுவதைப் பார்த்துக் கொண்டே இருந்தான் வில்லியம் என்கிற வில்லி. ‘இவ ஏன் அந்த ஊர் பஸ்சுல ஏறிப் போறா அதுவும் ஆண்ட்டி கூட வரல, நாமளும் போய் பாப்போம் ‘ என்று அவன் மனம் சொல்ல, பின்னாலேயே அவனது பைக்கில் கிளம்பினான்.

பைக்கில வந்து பல்லாங்குழி ஆடப் போறான் என்று அவளுக்குத் தெரியவில்லை.

அங்கே ஜீவா மிகுந்த பரபரப்புடன் இருந்தான். பரீட்சை எழுதிவிட்டு பாஸ் ஆகிவிடுவோம என்று தவிக்கும் மாணவனின் மனநிலை தான் அவனது நிலையும். அவளின் வரவை எதிர்ப்பார்த்துக் கொண்டே இருந்தான். விடிய விடிய அவனுக்கு உறக்கம் என்பதே வரவில்லை.

கண்கள் சிவந்து வந்தவனைப் பார்த்த சுபத்ராவும் யமுனாவும் அக்கறையாய் விசாரிக்க,

“ அவள வர சொல்லிருக்கேன் சுபி”

“ அட, இன்னிக்கு அண்ணி இன்ட்ரோ வா?” குதித்தாள் சுபி.

“ சரி பெரியப்பா கேட்டா என்ன சொல்லுவ” தீவிரமாகக் யமுனா கேட்க,

“ வேற வழி, உன் ப்ரென்ட்ன்னு தான் சொல்லியாகனும்” அது உன் பொறுப்பு என்று சொல்லாமல் சொல்ல,

“ அதெல்லாம் அவ சொல்லுவாண்ணா. முதல்ல நீ எனக்குத் தான் காட்டனும் சரியா, இவ தான் ஏற்கனவே ப்ரென்ட் ஆயிட்டாளே” அண்ணனிடம் உரிமை கொண்டாட,

“ கண்டிப்பா டா. ஆனா அவ வரணுமே, அது தான் முக்கியம்” கவலை வந்து குரலில் தொற்றிக் கொண்டது.

“ எங்க அண்ணன ஒருத்தி ரிஜெக்ட் பண்ணிடுவாளா! அவ கண்டிப்பா வருவா நூறு பெர்சென்ட்” அவன் தோளில் கை போட்டு சொன்னாள் சுபத்ரா.

“ ம்ம் அவள நம்ப முடியாது சுபி, என்னை இன்னும் கொஞ்சம் சுத்தவைக்க வேணும்னே வராம இருந்தாலும் இருப்பா. “ லேசான கடுப்பு அவன் குரலில்!

“ அதெல்லாம் கண்டிப்பா வருவா… அவள இந்த கொஞ்ச நாள்ல நல்லா புரிஞ்சுகிட்டேன் “ யமுனா நிச்சயமாகச் சொன்னாள்.

சற்று மனம் தேற, “ சரி நீங்க ரெண்டு பேரும் பொய் ரெடி ஆகுங்க. நான் வரேன்!” 

பெண்கள் இருவரும் கிளம்பி விட, அவனும் அவளை வரவேற்க சென்றான்.

அவளுக்காக பஸ் ஸ்டான்டில் நின்றிருக்க மூன்று நான்கு பஸ் சென்ற பிறகே அவள் வரும் வண்டி வந்தது. ஆர்வமாகத் தேட, அவனை ஏமாற்றாமல் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்தாள்.

வாணி அவனைக் காணவில்லை. ஆனால் ஜீவா சற்று நேரம் அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்க, ஒரு டீக்கடையின் கூரையின் கீழ் நின்று கொண்டான்.

கீழே இறங்கியவள் சற்று நேரம் சுற்றும் முற்றும் பார்க்க, யாரை வழி கேட்பது என்று புரியவில்லை. லேசான பயம் உள்ளே பரவ ஆரம்பித்தது.

அதே நேரம் மறைவாக நின்று வில்லியமும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஜீவா அப்போது தான் வில்லியமைக் கண்டான். அவனுக்கு புரிந்துவிட்டது. வாணியைப் பின்தொடர்ந்து தான் அவன் வந்திருக்க வேண்டும் என்று. இன்னும் சற்று நேரம் இருந்தால், அவன் எதாவது வந்து அவளிடம் விசாரிக்கக் கூடும் என்று , அவனே வாணியின் முன் சென்றான்.

வேறு எங்கோ  பார்த்துக் கொண்டிருந்தவள், சட்டென ஜீவா முன்னே வரவும், பயந்தே விட்டாள். அவளது படபடப்பு உணர்ந்து,

“ ஹே! ரிலாக்ஸ் , தண்ணி வேணுமா?” மெதுவாகக் கேட்க,

“ இல்ல பரவால்ல, எப்படி வர்றதுன்னு யோசிச்சுட்டு இருந்தேன், நல்ல வேளை” நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

வில்லியம் , ஜீவாவைக் கண்டதும் ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான்.

‘இவனைப் பார்க்க வாணி இவ்வளவு தூரம் வர்ற அளவு ஆயிட்டாளா? இதை சும்மா விடக் கூடாது’ மனதிற்குள் கருவிக் கொண்டான்.

அவனது சீற்றம் ஜீவாவின் கண்களின் விழாமல் இல்லை. அவனைப் பற்றி சொன்னால், வாணி இன்னும் பயந்து விடக் கூடும் என்று அவளை அவசரமாக அங்கிருந்து கூட்டிச் சென்றான்.

“ இதயா , வா வண்டில ஏறு” வண்டியை ஸ்டார்ட் செய்து அவளை அழைக்க,

அவளோ வண்டியில் அவனுடன் வருவதா என்று யோசித்து

“இல்ல பரவால்ல நடந்தே போலாம் “ தயங்கினாள்.

ஜீவாவிற்கு சொல்லவும் முடியவில்லை, என்ன செய்வது என்று புரியாமல் , சட்டென அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்று  வண்டியில் அமர வைத்தான்.

வில்லியம்மைப் பார்க்க, அவனோ ஆத்திரத்தில் நகத்தைக் கடித்துக் கொண்டு நின்றான்.

ஒரு வகையில் தங்களின் காதலை அவனுக்கு புரியவைத்ததை நினைத்து அவனுக்கு சிறு புன்முறுவல் தோன்ற, அவளோடு வண்டியில் பறந்தான்.

வீட்டிற்குச் செல்வதற்கு முன் வாணியை அழைத்துக் கொண்டு அவர்களது வாழைத் தோப்பிற்கு சென்றான்.

தோப்பிற்கு முன் இருந்த வெட்ட வெளியில் ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்தி இறங்கினான்.

அவளும் இறங்க, இது என்ன இடம் என்பது போல பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனோ மரத்தில் சாய்ந்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 அவன் வந்த தைரியத்தில் இருந்த பயம் சற்று நீங்கி இருந்தாளே தவிர , தான் ஜீவாவின் காதலை ஏற்றுக் கொண்டுவிட்டோம் என்பதை அவனுக்கு உணர்த்தியதை மறந்தே விட்டாள்.

சில்லென்ற காற்று முகத்தை மோதி சற்று இளைப்பாற்ற, சுயம் பெற்றாள். அவன் தன்னையே பார்ப்பைத கண்ட போது தான் , அவனுக்கு மனதை சொல்லாமல் சொன்னது நினைவில் வந்தது.

அப்போது தான் அவனைக் கவனிக்க, வேட்டி சட்டையில் மிகவும் அட்டகாசமாக இருந்தான். அவளது மனதை கொள்ளையடித்துக் கொண்டிருந்தான். அவனிடம் மயங்க, 

உடனே வேறு புறம் திரும்பி நிற்க,

“ உங்க வீடு எங்க? எப்போ ஃபங்ஷன்?” நிலைமையை மாற்ற ,

“ ம்ம் சொல்றேன். அதுக்கு முன்னாடி நீ சொல்லு” அவளுக்கு எதிரே வந்து நின்றான்.

“ என்ன சொல்ல?” இதழில் சிரிப்புத் தேங்கியது.

“ சோ….!!!”

“ சோ!!”

“ ப்ளீஸ் ஸ்சே(say) இட் இதயா.. கான்ட் வெய்ட்” துடித்தான்.

“ வாட் டு சே(say)”  ஒரு கையால் நெற்றியை தடவிக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அதற்கு மேல் ஜீவாவால் பொறுக்க முடியவில்லை, அவள் அருகில் சென்று ஒரு கையால் அவளது முகத்தை நிமிர்த்தி ,

“ இதயா , வில் யூ பீ மைன் “ காதலாக அவளைப் பார்த்துக் கேட்க,

மனதை திறந்து சொன்னாள். “ ஃபார்எவர் (forever) ஜீவா” அவன் கைகளை தன் கன்னத்தில் அழுத்திக் கொண்டாள்.

அவள் சொன்ன வார்த்தைகள் ஜீவாவை குளிர்விக்க, அவள் செய்கை அவனைத் தூண்ட,

இரு கைகளாலும் அவளது முகத்தைத் தாங்கி, தன்னோடு அணைத்துக் கொண்டான். அவளும் சுகமாய் அவனுள் அடைக்கலமானாள்.