Thozhimaar Kadhai – 1

Thozhimaar Kadhai – 1

 

தோழிமார் கதை

1

“தெய்வா….ஏ..தெய்வா…எந்திரி கண்ணம்மா….எவ்வளோ நேரமா எழுப்பறேன்…எழுந்திருமா..” என மிகவும் பாசமாக ஆரம்பித்த அழைப்பு,

“டீ, குட்டிக்கழுதை …இப்போ எந்திரிக்கரியா இல்லை, நாலு வக்கைட்டுமா? நைட்டு சீக்கரம் தூங்குன்னு சொன்னா கேட்டாத்தானே….ஸ்கூலுக்கு டைம் ஆகுது எந்திரிடீ…..” என பல்லவி, அனுபல்லவி முடித்து

“என்னங்க… என்னங்க….. அவளை கொஞ்சம் எழுப்புங்களேன். அரவிந்த்…ப்ளீஸ்…ஸ்கூலுக்கு டைம் ஆச்சு…இன்னைக்கும் பஸ்ஸை மிஸ் பண்ணிடப்போறா…உங்களுக்கு என்ன?எந்திரிச்சு குளிச்சு கிளம்பி போயிட்டே இருப்பீங்க…நான்ல அவ்வளோ தூரம் கொண்டு போய் விட்டுட்டு வரணும்…எந்திரீங்க அரவிந்த்” என ராகம் உச்சஸ்தாதியை எட்டியிருந்தது.

இதற்கு மேலும் கட்டிலின் நீள அகலத்தை அளந்து கொண்டிருந்தால் அர்ச்சனாவின் அர்ச்சனைகள் நாள் முழுவதும் நீண்டு விடுமே என்ற அச்சத்தில் கண்களை மெல்ல விழித்தான் அரவிந்த். நல்ல ஆறடி உயர கட்டிலின் ஐந்தே முக்கால் அடிகளை தனதாக்கிக் கொண்டு படுத்திருந்தவன், தன் முதுகின் பக்கம் ஒட்டிக் கொண்டு ஒரு காலை வாகாக தன் மீது போட்டு வாயை சற்றே சிறிய அளவு திறந்தபடிக்கு உறங்கிக் கொண்டிருந்த பூப்பந்தை மெல்ல எழுப்பினான்.

“கண்ணம்மா, தெய்வாகுட்டி…எழுந்திரீங்க…ஸ்கூலுக்கு டைமாச்சு பாருங்க….உன் டெவில் மம்மி கத்த ஆரம்பிச்சாச்சு….ப்ளீஸ் எழுந்துக்கடா…”என மெல்ல தன் செல்ல மகளின் முகவாயை வருடி எழுப்பியவனின் ஸ்பரிசம் பட்டு, மெல்ல முக்ம சினுங்க கண்களை திறவாமல் படுந்திருந்த பூப்பந்து, “பீஸ்ஸ்ஸ் ப்பா….டு மினிட்ஸ்…ப்ளீஸ்ஸ்ஸ்” என முனுமுனுத்துக் கொண்டே தந்தையுடன் இன்னமும் ஒட்டிக் கொண்டது.

மகளின் கைகளை தன்னுடன் இறுக்கிக் கொண்டு அரவிந்தும் ஆர்வமாக கண்களை மூடத்துவங்க, “அரவிந்த்..இன்னும்மா எந்திரிக்கலை…என்னப்பா…”என போர்வை சட்டென விலக்கிய அர்ச்சனாவிற்கு, கணவனும், மகளும் உறங்கும் அழகை ரசிக்கும் எண்ணம் துளியும் இருக்கவில்லை. எப்படி இருக்கமுடியும், காலை நேர பரபரப்பும், குழந்தையை பள்ளிக்கு அனுப்பவேண்டிய கடமைகளும் சூழ்ந்து கொள்ள, எந்த இல்லதரசிக்குத் தான் காலை நேரம் அமைதியாக, லகுவாக கழிகிறதாக்கும். எல்லாமே அறைகுறை வேலைகளாகவும், பதட்டத்தில் விடுபட்டுப்போன செயல்களாகவுமே மாறிவிடுகின்றன.

“எந்திரி அரவிந்த்…மணி எட்டாச்சு…ப்ளீஸ் பாப்பாவை எழுப்புங்க..”என விடாப்பிடியாக மொழிந்தவள், கையில் பிடித்திருந்த போர்வையை படபடவென மடித்தாள். அந்த பெரிய அறையில் வீற்றிருந்த குளியல் அறைக்குள் நுழைந்து வெந்நீர் குளாயினைத் திருகி, மகள் குளிக்க ஆயத்தங்கள் செய்தாள். கட்டிலின் மேல் அன்றைய தின பள்ளிச் சீருடைகளை எடுத்து வைத்தவள், இன்னமும் கணவனும் மகளும் கட்டிலை விட்டு இம்மியளவு அசையாததைக் கண்டு மீண்டும் குரலை உயர்ந்தினாள்.

“அடீ தெய்வா…எருமை…இப்போ எந்திரிக்க போறீங்களா இல்லையா ரெண்டு பேரும்” என காட்டுக் கத்தலாக எழுந்த அர்ச்சனாவின் குரல், அந்த மாடி அறையினைக் கடந்து, மாடிப்படிகளின் வழியே கீழே இறங்கி, கூடத்தின் சோஃபாவில் அமர்ந்து அன்றைய தின நாளிதழை புரட்டிக் கொண்டிருந்த மாமியார் அங்கையற்கண்ணியின் காது மடல்களில் மோதி எதிரொலித்தது.

“ராங்கி…காலங்காத்தால எப்படி கத்தறா பாரு. எப்படி இருந்த வீடு…எங்க மாமா இருக்கறப்போ அவ்வளோ அமைதியா தெய்வீகமா இருக்கும். “தம்பின்னு”ஒரு சின்ன குரல் தான் குடுப்பாக. “ஐயா”ன்னு ஓடி வந்துருவான்…இப்போ இதுக போடற கூச்சலும், அதட்டலும், கொஞ்சமும் மட்டு மரியாதையில்லாம, உச்சிமண்டையில் ஆணி அடிச்சாப்ல புருஷனை பேர் சொல்லி கூப்பிடறதும்…இதெல்லாம் நல்லாவா இருக்கு….நாலு பேர் அன்னாந்து பார்க்க இடத்தில உசரத்தில இருக்கற குடும்பம். கண்டகண்ட ரோட்டில திரியரவளையெல்லாம் நடுவீட்டில கூட்டியாந்து உட்கார வச்சா இப்படித்தான் பேசுவா… ஊர்ல இல்லாத அழகின்னு இவளைத் தான் கட்டுவேன்னு நின்னவனை சொல்லனும்…”என தன் கட்டை குரலில் தெளிவாக முனுமுனுத்தார்.

அர்ச்சனா வழக்கம் போல் செவிடாகிப் போய்விட்டது போல் நடந்து கொண்டவள், மகளையும் கணவரையும் எழுப்பும் வேலையில் ஆயத்தப்பட்டாள். அர்ச்சனாவிற்கு மேலும் தொல்லை கொடுக்காவண்ணம், அரவிந்த் படுக்கையில் இருந்து எழுந்து விட்டிருந்தான். அடுத்த இரண்டு நிமிடத்தில் தெய்வா என்றழைக்கப்படும் சஷ்டிகா எழுந்து கொண்டுவிட்டிருக்க, அர்ச்சனாவின் அடுத்த முக்கால் மணித்துளிகள் வேகவேகமாக கழிந்துவிட்டிருந்தன.

மகளை பள்ளிப் பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டு, வீட்டிற்குள் விரைந்தவள், அடுத்து அரவிந்தை கடைக்கு கிளப்ப ஆயத்தமானாள். குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டிருந்தவன், தன் தாயின் வார்த்தைகளால் கோபமாகிப் போயிருந்த அர்ச்சனாவை லகுவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தான்.

மனைவியை கொஞ்சி, தேனொழுகப் பேசி, காதல் வசனம் சொல்லி என சினிமாத்தனமாக சமாதானப்படுத்தும் பாங்கு அரவிந்திற்கு வாய்க்கப்பெறவில்லை. அவனைப் பொறுத்தவரையில் அர்ச்சனாவை சிரிக்க வைத்துவிட வேண்டும். அல்லது முடிந்த மட்டில், உம்மென இருப்பவளை பேசவைத்துவிட வேண்டும். அவன் அறிந்தவரையில் சமாதானம் என்பது இவை மட்டுமே. அன்றும் அதே ஆயுதத்தை கைகளில் ஏந்தியிருந்தான்.

“அப்பறம், அச்சு….அடுத்த வாரம் என்ன ப்ளான்?” என மெல்ல கல்வீசிவிட்டு அமைதியாக அவள் முகத்தில் கண்களைப் பதித்தவாறு இருந்தான். கண்ணாடியில் தெரிந்த தனது முகத்தை இப்புறமும் அப்புறமும் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்த அரவிந்த், கண்ணாடியின் வழியே தன் மனையாளை ஏறிட்டான்.

“அடுத்த வாரத்துக்கு என்ன? ஏதும் விஷேஷமா?”என சூடாக பதில் வந்தது அர்ச்சனாவிடமிருந்து.

“என்ன இப்படி சொல்லிட்ட….உன் பெஸ்ட் ஃப்ரெண்டுக்கு கல்யாணம்னு கால் பண்ணாளே..பத்திரிக்கை கூட வந்துச்சே…நீ போலையா?” என குறும்புச் சிரிப்புடன் அரவிந்த் கேட்க, அர்ச்சனா இன்னமும் கணவனை முறைத்தாள்.

“அதுக்கு என்னவாம் இப்போ?” என பட்டென பதிலும் கொடுத்தாள்.

“அதுக்கா? இதென்ன இப்படியொரு பொறுப்பில்லாத கேள்வி?” என கேட்டுக் கொண்டே திரும்பி அர்ச்சனாவைப் பார்க்க, அவளது கண்கள் லேசாக கலங்குவது தெரிந்தது. வேகவேகமாக மூச்சுகள் எடுத்துக் கொள்வதும், அழுதுவிடாமல் இருக்க, உதட்டை கடித்துக் கொள்வதும் தெரிந்தது.

“நீங்க வந்தா மட்டும் போதும்னு ஃபோன்ல உன் ஃப்ரெண்ட் திலீபா சொன்னாளே….”என “வந்தா மட்டுமை அழுத்தமாக மொழிய, அர்ச்சனவாவோ அரவிந்தை இன்னமும் முறைத்தாள்.

“அப்பறம் என்ன ….அதான் அழைப்பு வந்திருக்கே…போயிட்டு வாங்க…யாரு வேண்டாம்னது…”என கோபத்துடன் மொழிந்த மனைவியை குறும்புச்சிரிப்புடன் ஏறிட்டவன், அதுவரையிலும் உம்மென இருந்தவள், சண்டையிடுவதற்காகவேணும் வாயைத் திறக்கிறாளே, அதுவே நல்லது என நினைத்துக் கொண்டான். அத்துடன் நிறுத்திக் கொண்டிருந்தால் தேவலாம். ஆனால் அரவிந்தின் நாக்கு மனைவியை இன்னமும் சீண்டிப் பார்க்கச் சொல்லியது.

“ஓ, புரிஞ்சிருச்சு…புரிஞ்சிருச்சு….திலீபா என்னை தான் இண்வைட் பண்ணா…உன்னை உன் பெஸ்ஸ்ஸ்ட் ஃப்ரெண்ட்ட் கூப்பிடலை இல்லையா? ஆமா ஏன் கூப்பிடலை….இரு ..இரு…நீ பதில் சொல்ல வேணாம்…எனக்கே நியாபகம் வந்திருச்சு…அவ ஃபோன் பண்ணப்ப நீ எடுக்கலை. என் ஃபோன்ல கூப்பிட்டப்பவும் நீ பேச மாட்டேன்னு சொல்லிட்ட….சோ, என்கிட்ட மட்டும் திலீபா பேசிட்டு ஃபோனை வச்சிட்டா….”என நியூஸ் வாசிப்பாளர் போல் விஷயத்தை அக்கு அக்காக விமர்சித்தவன், இன்னமும் மனைவி சமாதானமாகததைக் கண்டு, தனது நக்கல் பேச்சை சற்றே குறைத்துக் கொண்டான்.

“இத பாரு அர்ச்சு…. கண்டதையும் நினைச்சு மனசை போட்டு குழப்பிக்காம இரு. திலிபா உங்கிட்ட பேச தான் ஃபோன் பண்ணினா… நீதான் பேசாம இருந்துட்ட….சோ, அவ சைட் மிஸ்டேக் எதுவும் இல்ல..சரியா”என அரவிந்த் பேச்சை முடிக்கும் முன்னர்,

“தெரியுமே…. இன்னமும் அவளுக்கு ஜால்ரா தட்றதும் நிக்குதான்னு பாரேன்…உனக்கு அவ கல்யாணத்துக்கு போக அவ்வளோ ஆசையா இருந்தா நீ போயிட்டு வா…என்னை ஏன் நச்சற?” என ஆக்ரோஷமாக கத்திய அர்ச்சனா, இந்த முறை தன் சொற்கள் மாமியார் காதுகளை எட்டிவிடுமோ என கொஞ்சமும் அஞ்சவில்லை.

அரவிந்திற்கும் ஆயாசமாக இருந்தது. சம்பந்தமேயில்லாமல் எதற்காக இப்படி ஒரு தர்க்கம் என சற்றே ஆத்திரமும் எழுந்த து.

“சரி, அப்போ நாம கல்யாணத்துக்குப் போகலை…கரெக்டா…இதான உன் முடிவு…”

“நான் வரலை…. அதுக்காக யாரையும் போகவேண்டாம்னு நான் சொல்லலை” என்றாள் திட்டமாக.

“சரிடீ… நீ வரலை… போதுமா…இன்னைக்கு சொல்லற பேச்சும், நாளபின்ன சொல்லற பேச்சும் ஒன்னா இருக்கணும். ரெண்டு நாள் கழிச்சு, கெளசி கூப்பிட்டா, இலக்கியா கூப்பிட்டா, என்னோட மத்த்த ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் வருவாங்க…நாம போலாமான்னு என்னை உசுப்பின, அவ்வளோ தான் பார்த்துக்கோ”என அரவிந்தும் தீர்கமாக மொழிந்தான். அர்ச்சனா பதிலேதும் சொல்லவில்லை. அரவிந்தை ஒரு வித கோபத்துடன் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றிருந்தாள்.

அரவிந்திற்கும் ஆயாசமாக இருந்தது.”இன்னமும் எவ்வளோ நேரம் சமாதானமாக பேசுறது…கோவிச்சா, கோவிக்கோ போ…”என்று எண்ணியவன், தனக்கு கடைக்குச் செல்ல நேரமாகிவிட்டதை உணர்ந்தான்.

“கடைசியா கேட்கறேன்…போலாமா வேணாமா?” என்றான் இறுதி முயற்சியாக. “எனக்கு போகணும்னு தோணினா தான் போகமுடியும். எல்லாமே உன் கிட்ட கேட்டுட்டு தான் முடிவெடுக்கணுமா?”என்றாள் அர்ச்சனா கோபத்துடன்.

“அதான…இதுக்கெல்லாம் எதுக்கு புருஷன்கிட்ட கேட்டுட்டு. அதான் தானாவே மகாராணி முடிவெடுபீங்களே…அப்பறம் ஏன் நொய்நொய்ன்னு என்னை கழுத்தறுக்கற…”

“சம்பந்தமில்லாம என்ன பதில் இது அரவிந்த்…?”

“சம்பந்தமில்லாம பதில் சொல்லற அளவு எனக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கலை. ஆனா உங்கூட இருக்கேன்ல…சீக்கிரம் மண்டைய பிச்சுகிட்டு ஓட வச்சிருவ…”

எப்படியும் தன்னை சமாதானப்படுத்தி சிரிக்க வைத்து விடுவான் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அர்ச்சனா, கணவன் காரணமில்லாமல் கோபம் கொள்வதைக் கண்டு  சற்றே தணிந்தாள்.

இம்முறை, அர்ச்சனாவின் மனமாற்றத்தை உணர்ந்த போதும் அரவிந்த் அர்ச்சனாவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. காலையில் கடை திறக்க நேரமாகிவிட்டதே என்ற அவசரம் வந்து ஒட்டிக் கொண்டது. கண்ணாடியில் தலையை கோதி முடித்துக் கொண்ட அரவிந்த், பீரோவினுள் இருந்து தனது பர்ஸையும், தனது வண்டியின் சாவியையும் எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். கதவின் ஓரம் நின்றிருந்த அர்ச்சனாவை சுற்றிக் கொண்டு அறையை விட்டு வெளியேறியவன், அர்ச்சனாவிற்காக காத்திறாமல், படிகளை இரண்டிரண்டாகக் கடந்து கூடத்திற்கு வந்திருந்தான். அர்ச்சனா நின்றிருந்த இடத்தினை விட்டு இம்மி நகரவில்லை.

“தம்பி, தட்டு வைக்கவா….”என மாமியாரின் குரலும், “கடைக்கு நேரமாச்சு…பத்து மணிக்கு மேல வந்து சாப்பிடறேன்.” என கணவனின் குரலும் மாடியில் எதிரொலித்தது.

அரவிந்தைப் பொருத்தமட்டில் அத்துடன் அந்தப் பிரச்சனை முடிவடைந்துவிட்டது. ஆனால் அர்ச்சனாவிற்குத் தெரியும், மாமியார் அவ்வளவு எளிதில் இதை முடித்துக் கொள்ள மாட்டார் என்று. அர்ச்சனா எதிர்பார்த்து போலவே, அரவிந்தின் புல்லட் சத்தம் வீதியில் தோய்ந்து மறைந்து போன மறுநொடி, அங்கையர்கண்ணி தனது புலம்பல்களை துவக்கியிருந்தார்.

“மகன் உண்ணாமல் கடைக்கு சென்றுவிட்டானே”என்ற அங்கலாய்ப்பில் துவங்கிய வருத்தம், தனது சாதியில் பெண் எடுக்காமல், மகன் ஆசைப்பட்டானே என்று வேற்று சாதியில் மணமுடித்தில் வந்து குத்திட்டு நின்றிருந்தது. “படிக்கறதுக்கு போனமா, படிச்சமான்னு இல்லாம, உலகத்தில இல்லாத அழகின்னு இவளைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்ல ஒத்தைக் கால்ல நின்னான்.”என ஒரு பக்க குமுறலாக வெடித்துக் கொண்டிருந்தவரின் நாவிற்கு தூபம் போடவோ என்னவோ, இரண்டு வீடு தள்ளியிருக்கும் உறவுப் பெண்மணி ஒருவர் வந்து திண்ணையில் அமர்ந்து கொள்ள, அங்கையர்கண்ணிக்கு அன்றைய காலைப் பொழுது வேகமாகவே கழிந்தது.

“என்னாச்சு அத்தாச்சி…எதுக்கு காலங்காத்தால புலம்புதீங்க”என வந்தவள் ஆவலாக பேச்சுக் கொடுக்க, மாமியாரின் புலம்பல்கள் ஒரு திசை நோக்கி குவியத் துவங்கியிருதன.

“காலையில தம்பி சாப்பிடாமயே கடைக்கு போயிருக்கு ராசாத்தி. இந்த சீமையில இல்லாத அழகி, என்ன ஏதுன்னு மாடிய விட்டு இறங்கிக் கூட வரலை.”

“அடடா இன்னுமா உன் மருமவ எழுந்து கீழ வரலை. காலையில பலகாரம்லாம் நீயேவா செஞ்ச அத்தாச்சி…”என வந்தவள் வினவ, இதற்கு சரியாக பதில் சொல்லிவிட்டாள் தன் கொம்பு முறிந்து விடும் என அங்கையற்கண்ணிக்குத் தெரியாதா? பின்னே காலை ஐந்து மணியில் இருந்து பம்பரமாக சுழன்று பொங்கல், சட்னி, சாம்பார் என விறுவிறுக்க சமைத்து முடித்தது மருமகள் தான் என சொல்லிவிடவா போகிறார்.

கேள்வியை லாவகமாக தடம்மாற்றி, “ருசியா செஞ்சிட்டா மட்டும் போதுமா ராசாத்தி. வீட்டுக்காரர் சாப்பிட்டாரா, இன்னும் கொஞ்சம் வக்கட்டுகளான்னு எதாச்சும் பதனமா விசாரிக்கறாளா? காலையிலையே ஏதாவது வம்பு வளர்த்தியிருப்பா. அவன் கோவிச்சுட்டு சாப்பிடாம கடைக்குப் போறான்”என சம்பந்தமில்லாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருந்த மாமியாரின் பேச்சு மாடியில் தன் கட்டிலின் மேல் அமர்ந்திருந்த அர்ச்சனாவிற்கு கேட்கத்தான் செய்தது.

அர்ச்சனாவிற்கு மட்டுமல்ல,  நெருக்கமாக வீடுகள் அமையப் பெற்ற அந்த வீதியில் குறைந்தது நான்கு வீடுகளுக்காவது கேட்டிருக்கும். இனி பால்வாங்க அர்ச்சனா வெளியே செல்லும் போதோ, மகளை பள்ளிக்கு அனுப்ப செல்லும் போதோ “என்ன காலையில ஒரே சத்தமா இருந்துச்சு…அயித்த எதுக்க சத்தம் போட்டாக”என வெறும்வாயை மென்று கொண்டு அவலுக்காக காத்திருக்கும் முகங்களுக்கு அர்ச்சனா தீனியிட வேண்டியிருக்கும். “உங்க வேலையைப் பாருங்களேன்”என உரக்க கத்தத் தோன்றினாலும், பலசமயங்களில் அர்ச்சனா வாயை அடக்கிக் கொண்டு புன்சிரிப்புடன் கடந்து செல்வாள். இந்த செய்கைக்கு பேசத் தெரியாத சாதுப் பெண் அர்ச்சனா என்பது அர்த்தமல்ல.

தேள் கொடுக்கு போல் நாக்கு படைத்திருந்தவள் தான். சாதாரணமாக சிரித்துப் பேசி செய்யும் கிண்டல் வார்த்தைகள் கூட பட சமயங்களில் “ராஜா காது கழுதை காது”எனப் பெரிதாக ஊதப்பட்டு, திரும்ப வேரொரு ரூபத்தில் அர்ச்சனாவின் முன் பிரம்மாண்டமாக தலைவிரித்தாடும். அதிலும், வீடுகள் நெருக்கமாக அடுத்தடுத்து தொட்டுக் கொண்டிருக்கும் அந்த வீதியில், தன் புகுந்த வீட்டைச் சுற்றி இருக்கும் வீடுகள் முழுக்க அங்காளி, பங்காளி வீடுகள் என ஆகிப்போயிருக்கும் அந்த ஊரில், வேற்று சாதியில் இருந்து காதல் திருமணம் முடித்து அந்த பெரிய வீட்டின் மருமகளாக ஆகிவிட்டிருந்த அர்ச்சனாவின் தேள் கொடுக்கு நாக்கு வெகுவாக தன் ஓட்டிற்குள் தன்னை சுருட்டிக் கொண்டுதான் விட்டிருந்தது.

ம்ம்ம் என்றால் கூட,”எங்க அரவிந்துக்கு எப்பேர்பட்ட இடத்துலையெல்லாம் பொண்ணு குடுக்க இருந்தாக. நம்ம ராசு நாடார் பேத்திக்கு, 200 பவுன் போட்டு, 30 ஏக்கர் தோட்டம் வீடு எழுதி வக்கறதா, தரகர் மூலமா அரவிந்தைக் கேட்டாகள்ல. இந்த சீம சிருக்கிக்காக நல்ல நல்ல சம்பந்தமெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டானே..”எனத் துவங்கும் பல்லவி, என்றுமே ஒரே திசையில் பயணித்து, இறுதியாக, அர்ச்சனாவின் தாய் தந்தையை குற்றம் சொல்லி முடிக்கப்படும்.

எத்தனை நல்லவளாக இருந்த போதும், தனது குணாதிசியங்களில் இருந்து மாறுபட்டு, எத்தனை தன்மையாக நடந்து கொண்ட போதும், இந்த ஏசல் பேச்சுகள் நின்றபாடில்லை. அதிலும் திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்ட பின்பும், தங்க விக்கிரகம் போல் பேத்தி, வீட்டில் நடமாடிக்கொண்டிருக்கும் போதும் சதா சர்வ காலமும், திருமணப்பேச்சே ஓடிக்கொண்டிருந்தால் அர்ச்சனாவிற்கு கோபம் ஏற்படாமல் போகுமா என்ன?

ஆனாலும் முடிந்த மட்டில் கணவனிடம் ஏதும் காட்டிக் கொள்ளாமல், கோள் சொல்லாமல், எதற்கு வீணாக பிரச்சனை செய்து கொண்டு, வாய் பேசி, வார்த்தை வளர்த்து என எண்ணம் கொள்வாள். ஏனென்றால் திருமாண புதிதில் ஒரு சுடு சொல் கூட தாங்காது, உம்மென்றால் கணவனுடனும் மாமியாருடனும் சண்டையிட்டவள் தான்.

முதலில் சிறிய தீப்பொறியாக ஆரம்பிக்கும் வாய்ச் சண்டை, அரவிந்துடன் பெரிய விரிசலாக உருவெடுக்கும். அவன் கோபமுற்று கத்த, பதிலுக்கு அர்ச்சனாவும் சளைக்காமல் சண்டையிட, அவன் மூர்க்கத்தனமாக தகாத வார்த்தைகளால் அர்ச்சித்து, அதைக் கேட்டு தான் அழுது, அம்மா வீட்டிற்கு சென்று விடுகிறேன் என ஆர்ப்பாட்டம் செய்து, இறுதியில் அரவிந்திடமிருந்து எந்த ஒரு ஆறுதல் வார்த்தையும் இல்லாமல் போக, அதுவும் மேலும் எரிச்சலுற ஹிஸ்டீரியா வந்தவள் போல் நடந்து கொள்வாள்.

இதற்கும் “என்ன காரணத்திற்காக சண்டையிட்டோம்”என்பதே மறைந்து போய்விட்டிருக்க, “என்னை எப்படி இந்த வார்த்தை சொல்லி திட்டலாம்.”என மனம் குமுற, “தான் அழுதால் சமாதானம் சொல்லவோ, அழுகாதே..சரியாகிவிடும்”என தைரியமூட்டவோ, “அப்படியா சொன்னார் மாப்பிள்ளை. நான் என்னன்னு கேட்கறேன்மா” என தாங்கிப்பிடிக்கும் தூணாக தந்தையோ, தமையனோ இல்லாத காரணத்தால், அர்ச்சனாவின் மனதின் கோபம் கண்ணீராக மட்டுமே வெளிப்படும்.

அதனுடனேயே, “மத்தவங்க எல்லாம் எவ்வளோ சந்தோஷமா இருக்காங்க…நான் மட்டும் என்ன பாவம் செஞ்சேன். எனக்கு மட்டுமே ஏன் இப்படி? என்னைப் பார்த்து நாதியில்லாதவன்னு கூசாம சொல்லறான்” என சண்டையின் நடுவில் அரவிந்த் உதிர்த்துச் சென்ற வார்த்தைகள் மனதை குத்திக் கிழிக்க, சண்டையின் காரணம் மறந்து போய்விட்டிருக்கும்.

அந்த இடத்தில் பச்சாதாபம் வந்து சிம்மாசனமிட்டும் அமர்ந்து கொண்டிருக்கும். அழுதழுது ஓய்ந்து போய், சாப்பிடாமல் கட்டிலில் முகம் திருப்பிக் கொண்டு முரண்டு பிடிப்பாள். அர்ச்சனா செய்யும் அனைத்து செயல்களும் சிறுபிள்ளைத் தனமாகவோ, திமிராகவோ பார்க்கப்படுமே ஒழிய, அவளது மெல்லிய மனமோ, அனிச்சம் பூவென சுருண்டு கொள்ளும் பாங்கோ எவருக்குமே புரிபட்டதில்லை. அரவிந்த் உட்பட. திருமணமாக புதிதில் ஏதோ கொஞ்சம் சமாதானப்படுத்த எத்தனிப்பவன், நாள்போக்கில் தானாகவே சரியாகிவிடும். சமாதனமெல்லாம் தேவையில்லை என்னும் ஜென் நிலையை அடைந்திருந்தான்.

கீழே திண்ணையில் இருந்து எழுந்த மாமியாரின் குமுறல்கள் அப்போதைக்கு அர்ச்சனாவை பெரியதாக பாதிக்கவில்லை.

“காலையில தம்பி கடைக்கு கிளம்பறப்போ எதுக்கு சண்டை இழுக்கறா இந்த ராங்கி. அவன் சாப்பிட்டு முடிச்சதும் பேசலாம்ங்கற நாசூக்கு கூட தெரியலை இதுக்கு. இதெல்லாம் என்ன தான் காலேஜில படிச்சதோ…”என பேசிக் கொண்டிருந்த வார்த்தைகள் அர்ச்சனாவை இன்னமும் நோகடித்தன.

“ஆமா, காலையில பேசினா கடைக்குப் போறப்போ பேசறேன்னு சொல்லறது. நைட் 9.30க்கு வீட்டு வர்றவர்கிட்ட பேசினா, இப்போ தான கடையில இருந்து வர்றான், வந்த உடனே சண்டை போடனுமான்னு கேட்கறது. பின்ன நான் எப்போ தான் பேசறதாம். நடுவுல ஃபோன்ல ஏதாவது முக்கியமா சொல்லவந்தாக் கூட “வேலை இருக்கு, நான் கூப்பிடறேன்”ந்னு அமர்ந்தலா பதில் மட்டும் தான் வரும். ஆனா திரும்ப கால் வராது. அப்போ எப்பதான் நான் பேசறதாம்.” என தனது அறையில் அர்ச்சனா முனுமுனுப்பாள்.

“இவனை கல்யாணம் பண்ணிணதுக்கு பதிலா, மாச சம்பளம் வாங்கறவனை கல்யாணம் பண்ணியிருந்தா எவ்வளோ நல்லா இருக்கும். சென்னை, பெங்களூருன்னு போய் தனியா அப்பார்ட்மெண்டில செட்டில் ஆகியிருக்கலாம். மாமியார், சொந்தக்காரங்கன்னு எந்த தொனதொனப்பும் இருக்காது. நான் உண்டு, என் வீடு உண்டு, என் குழந்தை உண்டுன்னு எப்படி ஹேப்பியா இருந்திருக்கலாம்.”என்ற எண்ணமும் அதனுடனேயே,

“சே, இன்னேரம் அப்பா மட்டும் உயிரோட இருந்திருந்தா, எனக்கு இப்படியொரு நிலமை வந்திருக்குமா. உனக்கு இந்த இடம் சரிபட்டு வராதும்மா, உன்னை வேலைக்கு அனுப்பமாட்டாங்க, வீட்டிலேயே அடஞ்சு கிடக்கணும்னு”எனக்கு புரியற மாதிரி எடுத்து சொல்லியிருப்பாரே” என தந்தையின் நினைவுகள் அலைமோத அதற்குமேல் அர்ச்சனாவால் கண்ணீரை கட்டுப்படுத்த இயலாது. மனபாரம் தீர கண்ணீர் கொட்டியபின்பு, குளித்து, முடித்து, மீண்டும் சமையலறை சென்று, பாத்திரம் விளக்க வரும் வேலைக்கார அம்மாவிற்கு வீட்டை ஒழுங்குபடுத்தி கொடுத்தாக வேண்டும்.

அர்ச்சனாவின் கைபாட்டில் வேலையில் லயித்திருக்க, மனமோ தனது தோழிகளையும், அவர்களுடன் கழித்த இனிமையான கல்லூரி வாழ்க்கையையும் மெல்ல அசைபோட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!