KKE–EPI 13

அத்தியாயம் 13

மதுரை நகரில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல், தேரோட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகும் முழுவதிலுமிருந்து பல இலட்சம் சுற்றுலா பயணிளைக் கவர்கிறது.

 

“எங்கம்மா ஒரு சைனிஸ் வம்சாவளிதான். அவங்க சின்ன வயசுல அனாதையாகி ஹோம்ல இருந்தப்போ, ஒரு தமிழ் தம்பதியால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவங்க. இந்த மாதிரி சிங்கப்பூருல நீ நிறைய பேர பார்க்கலாம். பெருசா பொட்டு வச்சு, சேலை கட்டிப் பார்க்க லட்சணமா இருப்பாங்க. தமிழர்கள் சீன பிள்ளைகளை வளர்க்கறதும், சீனர்கள் தமிழ் பிள்ளைங்கள வளர்க்கறதும் அப்போ ரொம்ப சர்வ சாதாரணமா இருந்துச்சு. பெர்த் சர்டிபிக்கெட்டுல உள்ள சீன பெயரா மாத்தலையே தவிர எங்கம்மா முழுக்க முழுக்க இந்திய கலாச்சார முறைப்படிதான் வளந்தாங்க. அவங்களுக்கும் தமிழ் கலாசாரம் ரொம்ப பிடிச்சுப் போச்சு. தமிழ் கூட நல்லா பேசுவாங்க. நடை உடை பாவனை எல்லாமே தமிழர்கள் போலவே இருக்கும். பொட்டு வச்சு, சுடிதார் போட்டு எங்கம்மா பார்க்கவே அவ்ளோ அழகா இருப்பாங்க. பள்ளியில படிக்கறப்போ ஒரு தமிழ் பையனை காதலிச்சாங்களாம், அவனும் தான். லவ்வோ லவ்வாம். சந்தோஷமா போய் கிட்டிருந்த அவங்க லைப்ல புயல் அடிக்க ஆரம்பிச்சது.”

“வாட் ஹேப்பேன்?”

“அந்தப் பையன் குடும்பத்துல ரொம்ப பணக் கஸ்டமாம். அதனால ஆஸ்திரேலியாவுக்கு வேலைக்கு எழுதி போட்டிருந்தானாம். அது கிடைக்கற வரை சிங்கப்பூருலயே சாதாரணமா ஏதோ வேலை செஞ்சுட்டு இருந்துருக்கான். அம்மாவும் ஒரு கம்பேசியில செக்ரட்டரியா வேலைப் பார்த்தாங்க. இவங்க சம்பாரிக்கறத வளத்தவங்களுக்கும், இவனுக்கும் தான் செலவு செய்வாங்களாம். எங்கம்மாவோட நல்ல நேரமோ இல்ல கெட்ட நேரமோ தெரியல, அவனுக்கு ஆஸ்திரேலியா வேலை கன்பர்ம் ஆகிருச்சாம். இவங்க ரொம்ப அழுதாங்களாம். கண்டிப்பா திரும்பி வருவேன், உன்னைத்தான் கல்யாணம் செய்வேன்னு சத்தியம் பண்ணி இருக்கான். மனசொடிஞ்சு போய் தான் பிரியாவிடை குடுத்துருக்காங்க.”

“அப்புறம்?” அவளின் கையை வருடியபடியே ஊக்கினான் ஜம்ப்.

“இவங்களும் நாலு வருஷமா தோ இப்ப வந்துருவான், அப்போ வந்துருவான்னு வேய்ட் பண்ணிருக்காங்க. நியூஸ் ஒன்னும் வரல. அவங்க வீட்டுக்குப் போய் பார்த்தா அவங்க தாறுமாறா திட்டி இருக்காங்க. ஒருத்தன் நல்லா சம்பாரிச்சா கண்டதுங்களும் தேடி வந்துருங்கன்னு ஒரே திட்டாம். அழுதுட்டே திரும்பி வந்துருக்காங்க. இப்படி இருக்கறப்போத்தான் அவங்க வேலை செஞ்ச ஆபிஸ் சீன முதலாளி இறக்க அவர் இடத்துக்கு அவரோட மகன் வந்தாராம். ரொம்ப அழகாவும், பொறுமையாகவும் வேலை எல்லாம் பார்த்த எங்கம்மா மேல காதல் வந்துருச்சு. காதல இவங்க கிட்ட சொல்ல, இவங்க மறுத்துட்டாங்க. அவரும் மறந்தறலாம்னு நினைச்சிருக்காரு. ஆனா கூடவே வேலை செய்யவும் அவருக்கும் ஆசையா அடக்கிக்க முடியல. அப்புறம் அம்மாவோட வீட்டுல வந்து வளத்தவங்க கிட்ட கேட்டுருக்காரு. பாட்டியும், நல்ல பையன் அழகா இருக்கான், பணம் இருக்கு, கட்டிக்கடி உன் வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும்னு அம்மாவ தினம் தொல்லை பண்ணிட்டே இருந்துருக்காங்க. இவங்க மறுக்க, அவங்க கெஞ்சன்னு ஒரே தலைவலியா இருந்துருக்கு அம்மாவுக்கு. வேலைக்குப் போன இவரோட காதல் பார்வை வேற. மூச்சு முட்டிப் போச்சு. இவங்களும் கடைசியா காதலன் வீட்டுக்குப் போய் பேசியிருக்காங்க. அவங்க மகன் அங்கயே இரு தமிழ் பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டு செட்டில் ஆகிட்டான்னு ஒரு இடிய இவங்க மண்டையில இறக்கிட்டாங்க. அழுதுட்டே ஓடி வந்துருக்காங்க. ஆபிஸ்ல அதை நினைச்சு இவங்க அழ, முதலாளி நம்ம கல்யாணம் பண்ண சொல்லி டார்ச்சர் பண்ணவும் தான் அழறாளோன்னு நினைச்சு வருத்தப்பட்டிருக்காரு. பரவாயில்ல, இனிமே உன்னை வற்புறுத்த மாட்டேன்னு இவர் சொல்ல, இனி காதலன் வர மாட்டான்னு மனச தேத்திகிட்ட இவங்க அப்போவே அந்த அழு மூஞ்சியோடயே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க”

“அவருதான் உங்க அப்பாவா?”

“மீதி கதைய கேளு ஜம்ப். கல்யாணம் ஆகி சந்தோஷமாத்தான் இருந்துருக்காங்க. ரெண்டு வருஷம் கழிச்சு நான் பொறந்தேன். ஒரு நாள் பிஸ்னஸ் டூர் போன அவங்க புருஷன் சீக்கிரமா திரும்பி வந்துட, இவங்க குட்டு அம்பலமாகிருச்சு.” கண்கள் கலங்கியது மெய் லிங்குக்கு.

“அழாம சொல்லுடா. நோ க்ரை” என கன்னங்களைத் துடைத்து விட்டான் ஜம்பு.

“அம்மாவையும், அவங்க பழைய தமிழ் காதலனையும் ஒன்னா பார்த்த இவரு கொதிச்சுப் போயிட்டாரு. ஒரே அடிதடி சண்டை. அவங்க காதலன் உண்மையாலுமே வேற கல்யாணம் செஞ்சுக்கலியாம். காண்ட்ரேக்ட்ல இருந்ததனால சிங்கப்பூருக்கு வர முடியலையாம். கடித தொடர்பு மட்டும்தான் இருந்துச்சாம். இவங்க அம்மா வீட்டுக்கு எழுதிருக்காரு. மகளுக்கு நல்ல வாழ்க்கை வரப்போ இவன் எதுக்கு நடுவுலன்னு அவங்க லெட்டர் எல்லாத்தையும் எங்கம்மா கிட்ட மறச்சிட்டாங்க. திரும்பி வந்தவருக்கு எங்கம்மா கல்யாணம் செஞ்சிகிட்டது பெரிய அதிர்ச்சி பெரிய சண்டையாகி, சண்டை சமாதானமாகி, சமாதானம் கட்டில் வரைக்கும் போயிருச்சு. “

“அட கடவுளே!’

“அந்த முதலாளிக்கு அம்மா மேல கண்மூடித்தனமான காதல். அதனாலேயே அவங்க பண்ண துரோகத்தை ஏத்துக்க முடியல அவரால. உடஞ்சி போயிட்டாரு. எவ்வளவு நாளா இது நடக்குதுன்னு கேட்டதுக்கு, ஒன்னரை வருஷமான்னு சொல்லிருக்காங்க. அப்போ புள்ளை யாருக்கு பொறந்ததுன்னு அவர் கேட்க, இவங்க ஒன்னுமே சொல்லல. டைவோர்ஸ் தரேன், பணமும் தரேன் பிள்ளை வேணும்னு கோர்ட்டுல எதிர்த்து வாதாடாம ஒதுங்கி போயிருன்னு சொல்லிட்டாரு. இவங்களும் கிடைச்சது சுதந்திரம்னு என்னை அவர் கிட்டயே விட்டுட்டு காதலனோட போயிட்டாங்க. இப்ப சொல்லு யாரு என்னோட அப்பா? நான் யாருக்குப் பொறந்தேன்னு இன்னும் புதிராகவே இருக்கு. அந்த புதிர விடுவிக்க யாருமே விரும்பல ஜம்ப். நீயும் அதுக்கு முயற்சி பண்ணாதே” அவன் நெஞ்சில் சாய்ந்து கதறினாள் மெய் லிங்.

அவளைத் தேற்றாமல், முதுகை மட்டும் தடவிக் கொடுத்து அப்படியே அழ விட்டான் ஜம்பு. முகம் சிவக்க அழுது ஓய்ந்தவள் அவன் சட்டையிலேயே முகத்தை துடைத்துக் கொண்டாள். அவன் தோளில் தலையை வைத்துக் கொண்டு அப்படியே அசையாமல் இருந்தாள்.

“தூங்கிட்டியாம்மா?”

இல்லை என்பது போல தலை மட்டும் ஆடியது.

‘இவள பார்க்கறப்போ கண்ணிமை, கண் எல்லாம் நம்ம பொண்ணுங்க மாதிரி இருக்குன்னு நினைச்சோமே! அதுக்குப் பின்னால இவ்வளவு பெரிய சோக கதையா?’

அவன் மடியில் நன்றாக அமர்ந்து கொண்டு அவனைக் கட்டியபடியே தலையைத் தோளில் வைத்திருந்தவள், மீண்டும் பேச தொடங்கினாள்.

“என்னை எங்கம்மாவோட புருஷன் தான் வளர்த்தாரு. அவர பாப்பான்னுதான் கூப்பிடுவேன். ரொம்ப ஸ்ட்ரீக்ட். எனக்கு அம்மான்னு ஒரு உறவ அறிமுகப்படுத்தவே இல்ல அவரு. விவரம் தெரிஞ்சு அம்மா வேணும்னு நான் கேட்டப்போ, பார்த்தாரு பாரு ஒரு பார்வை, யப்பா! அதுல இருந்து அம்மான்ற பேச்சே நான் எடுக்கல. மேய்ட் தான் பகல்ல பாத்துக்குவாங்க. நைட்ல என்னை அவர்தான் பாத்துக்குவாரு. கோபமா இருக்கற மாதிரியே இருப்பாரு. ஆனா நான் தூங்கனதும் தலையை பாசமா வருடிக் குடுப்பாரு. சில சமயம் என்னை உத்து உத்து பார்க்கற மாதிரி இருக்கும். அவருக்கு பிறந்தவதானான்னு பார்த்திருப்பார் போல. அப்போ எனக்குப் புரியல. எனக்கு பதினாறு வயசு வந்தப்போ, கூப்டு வச்சுப் பேசினாரு. எல்லா கதையும் சொன்னாரு. அம்மா மாதிரி நீ இருக்கக் கூடாது, முழுக்க முழுக்க எனக்கு கட்டுப்பட்டுதான் இருக்கனும். காதல் கீதல் எல்லாம் எனக்குப் பிடிக்காது. ப்ரேண்ட் எத்தனை வேணும்னாலும் இருக்கட்டும் ஆனா காதல் கூடாதுன்னு அட்வைஸ். டீனேஜ் வயசுல நீ என்ன சொல்லுறது நான் என்ன கேக்கறதுன்னு என்னால நினைக்க முடியல. ஏன்னா அவர் சொன்ன வார்த்தைகள் அப்படிப்பட்டது. நீ எனக்குத்தான் பொறந்தியான்னு எனக்குத் தெரியாது. அதை நான் தெரிஞ்சிக்கவும் விரும்பல. உன்னை என் புள்ளயாத்தான் பார்த்தேன், புள்ளையாத்தான் வளர்த்தேன். அத மதிச்சாவது என் சொல் பேச்சு கேளுன்னு கண் கலங்கி கேட்டாரு. எப்போவும் கோபமா பார்த்த அவர அந்த நிலைமைல என்னால பார்க்க முடியல.”

“இங்க ஏன் வந்த மெய் லிங்? யூ நெவர் டெல் அப்பாத்தானே?”

ஆமென தலையாட்டினாள்.

“அவருக்கு தெரியாம திருட்டுத்தனமா தான் வந்தேன். அதான் துணி மணி ஒன்னும் எடுத்துட்டு வரல. அவருக்கு சந்தேகம் வந்துறக் கூடாதுல அதான். இங்க ஏன் வந்தேன்னா, ஹ்ம்ம் எங்கம்மா அஸ்திய கரைக்கத்தான்” சொல்லிவிட்டு அவன் முதுகு நனைய கண்ணீர் விட்டாள் மெய் லிங்.

“அவங்க இப்போ நோ மோர்?”

“இறந்துட்டாங்க. ரொம்ப வேதனை அனுபவிச்சுத்தான் போய் சேர்ந்தாங்க. ஸ்டமக் கான்சர். ஆரம்ப ஸ்டேஜ்லயே அவங்க காதலன் விட்டுட்டுப் போயிட்டாரு. வேற பிள்ளைங்களும் இல்ல. அவங்கள வளர்த்தவங்க தான் அம்மாவ கவனிச்சிகிட்டாங்க. என்ன இருந்தாலும் வளர்த்த பாசம் இல்லையா.  எங்க பாப்பா எட்டிப் பார்க்கலைனாலும், பிள்ளையா என்னை பெத்துக் குடுத்ததுக்காக முடிஞ்ச அளவுக்கு அவங்களுக்குப் பண உதவி செஞ்சாரு. சாவின் விளிம்புல என்னை வரவழைச்சாங்க. அப்படியே விட்டுட்டு போனதுக்கு மன்னிப்பு கேட்டாங்க. ரொம்ப அழுதாங்க. செத்ததும் அவங்க அஸ்திய இந்தியால போய் கரைக்கனும்னு என் கிட்ட கேட்டுகிட்டாங்க. அவங்களுக்கு ஒரே வாரிசு நான் தானே! பாவமாப் போச்சு ஜம்ப். கடைசி ஆசை வேற. பாப்பாகிட்ட கேட்டா விட மாட்டாரு. அதோட தனியா போக பயம். அதான் ட்ராவல்ஸ்ல புக் பண்ணேன்.”

“அப்பா ஹவ் தெரிஞ்சது?”

“என்னோட ப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் கேட்டுருக்காரு. ரொம்ப ரெஸ்ட்லெஸ்சா இருக்காரு, உடம்பு முடியாத மாதிரி இருக்காருன்னு அவங்களாம் என் மெஸ்ஸென்ஜர்ல சொல்லியிருந்தாங்க. அவரும் கூட பேஸ்புக்ல மேசேஜ் போட்டுகிட்டே இருக்காரு. எங்கிருக்க? நல்லா இருக்கியா? வீட்டுக்கு வந்துரு இல்ல நான் செத்துருவேன்னு. என்னால அதுக்கு மேல முடியல. அதான் உன் நம்பர் குடுத்தேன். ஹி இஸ் சோ பொசெசிவ் ஆப் மீ ஜம்ப். தமிழங்கள பிடிக்காது. அவங்களால தான் எங்கம்மா பிரிஞ்சு போனாங்கன்னு ஒரு கோபம்”

‘ஐயோ! என் காதலுக்கு ஆப்பு மாமனார் ரூபத்துல வருதே!’

“ஆனா பாத்தியா ஜம்ப், எங்கம்மா மாதிரியே எனக்கும் தமிழன தான் பிடிக்குது! இது வரமா சாபமான்னு தெரியலையே. பாப்பா உன்னை சத்தியமா ஏத்துக்க மாட்டாரு. அவர எதிர்த்துட்டு என்னால உன் கூட வரவும் முடியாது ஜம்ப். வீ ஆர் கோன் கேஸ்”

“சரி, நோ கரை. இவ்வளவையும் தாண்டி நீ ஸ்ட்ராங்க நிக்கறதே எனக்கு பெருமையா இருக்குடி. அப்பா யாரா இருந்தா என்ன! உனக்கு புருஷனா நான் இருப்பேன். சோ டூமோரோ கம் டூமோரோ சீ, டுடே லீவ் ஃபோர் டுடே” நாளை வருவதை நாளை பார்க்கலாம், இப்போது இந்த நிமிடத்தை வாழ்ந்து பார்க்கலாம் என சொன்னவனை ஆசையாக பார்த்தாள் மெய் லிங்.

“வாட் சீ சீ?” என சிரிப்புடன் கேட்டான் ஜம்பு.

“வோ ஐ நி ஜம்ப்” அவன் சொன்னது போலவே கிடைத்திருக்கும் இந்த சில தினங்களில் அவனை மனதார காதலிக்க முடிவெடுத்தாள். நாளை வருவதை நாளை பார்த்துக் கொள்வோம் என மனதை தேற்றிக் கொண்டாள் அவள்.

“நானும் ஐ நி தான் மெய் லிங்”

“ஸ்லீப் ஹியர் ஜம்ப்”

“இல்ல நோ! சரி வராது. யூ பொசுக் பொசுக்குன்னு கிஸ் கிவ். மை ஹார்ட் தாங்காது. இன்னும் வேணும் ஆஸ்க்கிங். நான் போறேன்!” அணைப்பில் இருந்து அவளை விலக்க முயல, முடியவில்லை. உடும்பாக இறுக்கி இருந்தாள்.

“விடுடி”

“நோ”

“சமூ விடும்மா”

“நோ”

“ஐ வில் நோட் கிஸ் யூ. ஆனா ஐ வில் ஸ்லீப் லைக் திஸ்” என அவன் தோளில் சாய்ந்து அப்படியே தூங்க முயன்றாள்.

“அதர் பீபள் தெரிஞ்சா மானம் கோயிங்டி”

“ஐ டோண்ட் கேர்”

“சரி, சரி. ஸ்லிப். காலைல ஐ கோ” என தோளிலேயே படுக்க வைத்து தட்டிக் கொடுத்தான். மன உளைச்சல், சரியான தூக்கம் இல்லாதது, சுற்றி அலைந்த களைப்பு என சீக்கிரமே உறங்கி விட்டாள். கொஞ்ச நேரம் பொறுத்து அவளை தள்ளி கட்டிலில் படுக்க வைக்க முயன்றான் ஜம்பு. உறக்கத்தில் கூட என்னுடைய பொம்மை என்பது போல இறுக கட்டி இருந்தாள். புன்னகையுடன் அவளை ஏந்தியபடியே மல்லாக்க சாய்ந்து படுத்துக் கொண்டான் ஜம்பு.

error: Content is protected !!