அத்தியாயம் 14
சிவபெருமானை அடைவதற்காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரணமாக ‘கன்னியாகுமரி’ என்று அவ்வூர் அழைக்கப்படுவதாக வரலாறு சொல்லுகிறது.
தூங்காநகரமான மதுரையை அவர்கள் சென்றடைந்த போது காலை மணி எட்டு ஆகியிருந்தது. நேராக ஹோட்டலுக்கு சென்று லக்கேஜ்களை போட்டு விட்டு குளித்து மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போனார்கள்.
“என்னண்ணா ரெண்டு பேர் முகமும் பல்ப் போட்டுவிட்ட மாதிரி ஜொலிக்குது! வோர்க் அவுட் ஆச்சா?” என கேட்டான் மங்கி.
“ஆனா என்ன செய்யப் போற ஆகாட்டி என்ன செய்யப் போற?” என கேட்டான் ஜம்பு.
“கைக்கூடுனா ட்ரீட் கேப்பேன். இல்லைனா சோக பாட்டு கலேக்ஷன்ஸ் டவுன்லோட் பண்ணி குடுப்பேன். அதுவும் ஜேசுதாஸ் காதல் தோல்வி பாட்டுலாம் சும்மா அப்படித்தான் இருக்கும்ண்ணே. சாம்பிள் கேக்கறீங்களா? தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு, அங்கே சென்று அன்பை சொல்லு..அப்படி இருக்குண்ணா? நீங்க இங்க இருந்து தென்றல் காத்த சிங்கப்பூருக்கு தூது விடறீங்களாம். செம்மையா இருக்குல்ல!”
“டேய் ஏன்டா உனக்கு வாயில நல்ல வார்த்தையே வராதா?”
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவர்கள் அருகில் வந்த மெய் லிங் தன் கையை ஜம்புவின் கையுடன் கோர்த்துக் கொண்டாள்.
“வோ ஐ நி ஜம்ப்” என சிரித்தாள்.
“நானும்தான்” என பதிலுக்குப் புன்னகைத்தான் ஜம்பு.
வேக வேகமாக போனை குடைந்தான் மங்கி.
“ண்ணா! சமூ உங்களப் பார்த்து ஐ லவ் யூன்னு சொல்லுது” வாயைப் பிளந்தான். தன் விரலை வைத்து அவன் வாயை மூடிய ஜம்பு.
“அதான் எனக்கு தெரியுமே” என சொல்லியபடியே அவள் கைப் பிடித்து கோயிலை வலம் வந்தான். மற்ற பெண்கள் இவர்களின் திடீர் ஒட்டுதலைப் பார்த்து வாய் பிளக்க, இவர்கள் யாரையும் கண்டுக் கொள்ளவில்லை.
ஆயிரம் கால் மண்டபத்தில் ஒளிந்து விளையாடி, சேர்ந்து அர்ச்சனை செய்து, சித்திரங்களையும் சிலைகளையும் சேர்ந்து ரசித்து என அவர்கள் தனி உலகில் சஞ்சரித்தார்கள். ஐயர் கொடுத்த குங்குமத்தை கொஞ்சம் கூட அச்சப்படாமல் அவள் நெற்றியில் உரிமையாய் வைத்தான் ஜம்பு.
“நவ் சமூ யூ மை பொண்டாட்டி” என அவள் முகம் பார்த்து சிரித்தான். அவளும் குங்குமத்தை அவனுக்கு வைத்து விட்டு,
“நவ் ஜம்ப் யூ மை லவ்கோங்(கணவன்)” என சிரித்தாள்.
அவர்கள் பின்னாலேயே வந்த மங்கி,
“நடத்துங்க, நடத்துங்க. “ என பூக்களை கொஞ்சமாக அவர்கள் மேல் தூவி வாழ்த்திவிட்டுப் போனான்.
பிறகு அழகர் கோயில், பழமுதிர்ச்சோலை என இன்னும் சில கோயில்களுக்கும் அழைத்து சென்றான் ஜம்பு. சீக்கிரமாக இவர்கள் சுற்றி வரவும், மீத நேரத்தில் திருமலை நாயக்கர் அரண்மனைக்கும் அழைத்து சென்றான். அங்கேயும் இருந்த பல தூண்களில் யாருக்கும் தெரியாமல் மறைந்து கண்ணாமூச்சி விளையாடினார்கள் ஜம்புவும் அவன் சமூவும். அவள் அருகில் இருக்கவும், தன் வயதையும் மறந்து சின்னப்பையன் போல சிரித்து மகிழ்ந்தான் ஜம்பு. ஆழ்மனதில் சுருக் சுருக்கென நெருஞ்சியாய் பிரிவு வரப் போகிறது எனும் முள் குத்தினாலும், இந்த கணம் மட்டுமே தனக்கு என அதை ஒதுக்கித் தள்ளினான்.
மாலை மங்கவும் எல்லோரையும் தங்குமிடத்தில் இறக்கி விட்டான் ஜம்பு. கடைசியாக இறங்கியவளிடம்,
“டையர்டா இருக்காடி?” என கேட்டான்.
“நோ”
“தென் குளிச்சிட்டு கம். வீ கோ ஈட் டின்னர்”
முகம் மலர,
“வரேன் போடா” என சொல்லிவிட்டு கிளம்புவதற்குப் பறந்தாள்.
எப்பொழுது மெருன் கலர் பாவாடை தாவணி அணிந்தாலும் கண் இமைக்காமல் பார்க்கும் ஜம்புவை நினைத்துக் கொண்டவள் அதையே அயர்ன் செய்து அணிந்துக் கொண்டாள். தாவணியை மட்டும் போட தெரியாமல் திணறினாள். யூ டியூப் பார்க்கலாம் என்றால் ஹோட்டலின் வைபை சதி செய்தது. அவளுக்குத் தெரிந்த அளவில் இழுத்து சொருகி கொண்டு வந்தாள்.
அவளைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது ஜம்புவுக்கு.
“வாட் திஸ்?” என கேட்டான்.
“யூ லைக் இட் ரைட்? சோ ஐ வாண்டட் டூ வேர்” என புன்னகைத்தாள்.
வேனின் உள்ளே அவளை அமர்த்தியவன், தனக்கு தெரிந்த அளவில் தாவணியை சொருகி பின் குத்தி விட்டான். ஹோட்டல் கிச்சனில் காபி வாங்கி வந்த மங்கி அவளை மேலும் கீழும் பார்த்து விட்டு,
“என்னண்ணா சமூ தாவணிய சோத்தாங்கை பக்கம் போட்டுருக்கு. இப்படி ஒரு எட்டு போயிட்டு வரதுக்குள்ள சமூவ தெலுங்கு தேசத்துல சேர்த்துட்டீங்களே” சிரித்தான் மங்கி.
“எந்த தேசமா இருந்தாலும் என்னோட காதல் தேசம்டா அவ” என ஜொள்ளினான் ஜம்பு.
“ஐயோ அண்ணா! இது சத்தியமாலுக்கும் நீங்கதானாண்ணா? எப்படிண்ணா இப்படி மாறிப் போயிட்டீங்க?” என ஜம்புவைக் கலாய்த்தவாறே வேனில் ஏறினான் மங்கி.
மங்கியையும் அவர்களுடன் சுற்றிப் பார்க்க அழைத்துக் கொண்டான் ஜம்பு. மதுரையில் ஒரு புகழ்பெற்ற கடையில் இட்லியை ஒரு கட்டு கட்டியவர்கள், பின் ஜிகிர்தண்டாவையும் சுவைத்துக் குடித்தனர்.
“அண்ணா, கிளம்பற முன்னுக்கு போன் பண்ணுங்க. எனக்கு ஒரு வேலை இருக்கு. முடிச்சுட்டு வந்துடறேன்” என இருவருக்கும் தனிமை கொடுத்து விலகிக் கொண்டான் மங்கி.
அவன் அகன்றதும் அவசரமாக இருவரும் கைக்கோர்த்துக் கொண்டனர். பின் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டனர். நாளை உலகம் இல்லை என்றால், எப்படி நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை ஒரு நாளில் வாழ்வார்களோ அதே போல் காதலர்கள் இருவரும் மதுரை வீதியை சுற்றி வந்தார்கள்.
அடிக்கடி அவள் கீச்சு கீச் என்டது என பாட இவன் கிட்ட வா என்றது என சொல்லி கையை அவள் தோள் மேல் போட்டு இறுக்கிக் கொள்வான். அவன் எதாவது வாங்க விலகினாலோ, கூட்டத்தை சமாளிக்க கொஞ்சம் நகர்ந்தாலோ அந்தப் பாடலைப் பாடி விடுவாள் மெய் லிங். என்னை விட்டுப் பிரியாதே என சொல்லும் கோட் வோர்டாக அந்தப் பாடலை பயன்படுத்தினார்கள் இருவரும்.
கடை வீதியில் இருந்த மெஹந்தி ஸ்டாலை ஆசையாகப் பார்த்தாள் மெய் லிங்.
“போட்டுக்கறியா?”
“யெஸ். ஐ வாண்ட்” என குதூகலித்தாள் அவள்.
நாற்காலியில் அமர்த்தி வைத்து, அவளுக்குப் பிடித்த டிசைனை புத்தகம் பார்த்து தேர்ந்தெடுக்க சொன்னான் ஜம்பு. ஒரு கையில் மட்டும் போட்டுக் கொள்வதாக சொன்னவள், ஜம்புவை பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொண்டாள்.
இவனும் சிரிப்புடன் அவளுக்கு தனிமைக் கொடுத்து தள்ளி நின்றான். பத்து நிமிடத்தில் போட்டுக் கொண்டவள் போகலாம் என கை அசைத்தாள். மெஹந்தி இட்ட கை எங்கேயவது இடித்துக் கொண்டு பாழாகி விடுமோ என அஞ்சியவள், ஒரு கையை மேலே தூக்கிப் பிடித்தப் படியே வந்தாள். சாதாரணமாகவே அவளது நிறத்தால் மற்றவர்களைத் திரும்பி பார்க்க வைத்தவள், இப்பொழுது ஒற்றை கையைத் தூக்கியபடி நடக்கவும் இன்னும் மற்ரவர்கள் கண்ணுக்கு விருந்தானாள்.
அவளை சுவாரசியமாகப் பார்த்த வயசு பையன்களை,
“என்ன, என்ன இங்க லுக்குங்கறேன்? பல்ல பேத்துருவேன்” என ஜம்பு மிரட்டியது இவளுக்கு ஒரே சந்தோஷமாக இருந்தது.
“சோ ஸ்வீட் மை ஜம்ப்” என அடிக்கடி சொல்லியபடியே வந்தாள். இவர்கள் வேனுக்கு திரும்பி வருவதற்குள் மெஹந்தி காய்ந்திருந்தது.
“க்ளோஸ் யுவர் ஐஸ் ஜம்பு” என்றவள் அதை உரித்தெடுத்தாள்.
“டண்டடடாம்! கண்ணை திற” என தன் கையை அவன் பார்க்க ஏதுவாக வேனின் உள் விளக்கைப் போட்டுக் காட்டினாள் மெய் லிங். இரு ரோஜாக்கள் இணைந்திருந்க்க அதன் நடுவே லிங் லவ் லிங் என எழுதி இருந்தது. அவள் கையைப் பிடித்து முத்தமாக கொடுத்து தள்ளிவிட்டான் ஜம்பு. அதை தங்கள் போனில் போட்டோ பிடித்து வைத்துக் கொண்டனர் இருவரும்.
பேசியபடியே இருந்தவள் களைப்பில் கண் சொக்கவும், மங்கிக்கு போன் செய்து அழைத்தான் ஜம்பு. அவன் வந்ததும் ஹோட்டலுக்கு வேனை விட்டான் ஜம்பு. பின் சீட்டில் அவள் அமர்ந்ததும் தூங்கிவிட, ஹோட்டலை அடைந்ததும் இவன் தான் கஸ்டப்பட்டு எழுப்பினான். தூக்கத்தில் தள்ளாடினாள் மெய் லிங்.
“ண்ணா , உங்க மாரியாத்தா கரகம் வைக்காத குறையா ஆடுது. கூட்டிப்போய் ரூம்ல விட்டுட்டு வாங்க.” என்றான் மங்கி.
தன் மேல் சரிந்து விழுந்தவளை, அணைத்துப் பிடித்தவாறு நடக்க வைத்தவன், பேக்கில் இருந்த கீ கொண்டு ரூமை திறந்துப் படுக்க வைத்தான். போர்வையை போர்த்திவிட்டவன், மெல்ல குனிந்து நெற்றியில் இதழ் ஒற்றி விலகினான்.
“வோ ஐ நி ஜம்ப்” முனகினாள் மெய் லிங்.
“நானுந்தான்டி” புன்னகைத்து கொண்டவன், கதவை உள்ளிருந்து பூட்டிவிட்டு வெளியேறினான்.