Kumizhi-3
Kumizhi-3
குமிழி-3
மீன் ஆட்சியாம் எங்கள் மீனாட்சி
தன் கண்களால் மக்களை
அன்றும் இன்றும் என்றும் காக்கும்
எங்க மதுரை தங்க மதுரை!!
வருண பாண்டியனின் தந்தை ஈஸ்வர் பாண்டியனின் தூரத்து தங்கை முறை தான் செங்கமலம். சிறிய வயதில் இரு தரப்பு வீட்டினரையும் எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டவர். தேனியில் விவசாயம் செய்து வளமான வாழ்வு வாழ்ந்தவர் தான். இடையினில் விஷ காய்ச்சல் வந்து கணவரின் உயிரை வாங்கிட, மருத்துவ செலவுக்கென்று சேமிப்புகளும் கரைந்திட, அந்த நேரத்திலும் தன் உறவுமுறைகளிடம் இருந்து ஆதரவு கிடைக்காமல் போக, பதின்மூன்று வயது பெண்பிள்ளையை கையில் பிடித்து கொண்டு ராஜகம்பீரத்தில் கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தவரை வருணபாண்டியன் தான் தன்னிடம் அழைத்துக் கொண்டான்.
தந்தையின் இறப்பிற்கு பிறகு தக்கதொரு துணை இல்லாமல் உள்ளுக்குள்ளே மருகிகொண்டு, தன் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்து கொள்ளாமல் பித்து பிடித்தவர் போல் இருந்த தன் தாய் கோதை நாயகியை கவனிக்கவென அவரை பேசி அழைத்து வந்தவன், காலப்போக்கில் தன் உணவக வேலைகளை செய்ய வைத்து தக்கதொரு வருமானமும் கிடைக்க வழி செய்தான்.
இப்பொழுது தன் தாயாருக்கு துணையாக அந்த வீட்டில் இருப்பவர் தான் செங்கமலம். ராமலிங்கத்தை தந்தையாய் பாவித்து அவரையும் பார்த்து கொள்ளும் நல்ல பெண்மணி. ஒல்லியான உடல்வாகு, மாநிறம். எப்பொழுதும் எளிமையான, கண்ணுக்கு உறுத்தாத நிறங்களில் தான் உடைகளையும் அணிந்து, தன் தோற்றத்தில் அதிக கவனம் செலுத்திகொள்ளாதவர். பழகும் சுபாவத்தில் என்றும் அமைதியை கடைபிடிப்பவர்.
இவரின் ஒரே ஒரு செல்ல மகள் தான் சிவனியா. பதினைந்து வயதில் தன் தாயுடன் வருண பாண்டியன் வீட்டிற்கு வந்து அடைக்கலமாகிட, கோதைநாயகிக்கும், ராமலிங்கத்திற்கும் செல்லப்பெண்ணாய் மாறிப்போனாள். இயல்பிலேயே சுட்டித்தனமும், துடுக்குத்தனமும் நிரம்ப பெற்ற சிவனியா தன் அலையடிக்கும் பேச்சால் கோதை நாயகியின் சோகத்தை மறக்கடிக்க செய்து, அவரை நிகழ்கால வாழ்க்கைக்கு திருப்பி விட்டதில் அனைவருக்கும் அவள் மேல் கொள்ளை பாசம்.
அந்த வீட்டின் சுட்டிப் பெண்ணாய் வலம் வந்து, பாண்டியன் நண்பர்கள் அனைவருக்கும் செல்லத் தங்கையாய் உரிமையுடன் உறவாட, ராமலிங்கத்திடம் பேத்தியாய் தன் அன்பை அங்கே அள்ளி தெளித்துக் கொண்டிருந்தாள்.
கல்விச் செல்வம் மழையாய்ப் பொழிந்திட, ஒத்தக்கடை அரசினர் பள்ளியில் தன் பள்ளி இறுதி ஆண்டினை முடித்தவள், நல்ல மதிப்பெண்கள் அடிப்படையில் மதுரை பாத்திமா பெண்கள் கல்லூரியில் BCA படிக்கும் வாய்ப்பு கிடைக்க, அங்கே விடுதியில் தங்கி படித்து வருகிறாள்.
விடுமுறை நாட்களில் எல்லாம் இங்கே வந்து கொட்டமடித்துச் செல்லும் அவளிடம், வருண பாண்டியனும் தன் சீண்டலை அரங்கேற்றிக் கொண்டிருப்பான். “எங்கள் வீட்டு பெண், இவளை பாதுகாக்கும் கடமை எனக்கே” என்ற உரிமையுடன், உறவும் சேர்ந்து, வளர்த்த பாசம் அவன் மனதில் அவளை உரிமையுடன் பாதுகாத்து கொள்ளச் செய்தது.
தற்பொழுது மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து தன் படிப்பினை வெற்றிகரமாய் முடித்தவளை, விடுதியை காலி செய்து அழைத்து வருவது பற்றித்தான் பாண்டியனிடம் கேட்டுக் கொண்டிருந்தார் செங்கமலம்.
ஐந்தரை அடி உயரம், கொஞ்சமே கொஞ்சம் புஷ்டியான உடல் வாகு, திருத்தமான முகம், முதுகை தாண்டிய கூந்தல், காதில் சிறிய ஜிமிக்கி ஆட, கழுத்தில் மெல்லிய சங்கிலி, சிவந்த நிறம், எளிமையான காட்டன் கருப்பு நிற குர்தியும், சிவப்பு நிற பேண்டும் அணிந்த அவளது நிமிர்ந்த பார்வையே, அவளின் அழகை மெருகேற்றிக் காட்டியது.
கண்களிலும், முகத்திலும் குறும்பு கூத்தாட, தன் உடைமைகளை சுமக்க முடியாமல், சுமந்து கொண்டு வருவபளை நோக்கி சென்றான் பாண்டியன்.
“என்ன லக்கேஜ் கொஞ்சம் குறைஞ்ச மாதிரி இருக்கு சியாபாப்பா? ரொம்ப பசிக்குதுன்னு சாப்பிட்டியா?”
“ஆமா வருமாமா நீ குடுத்த விட்ட ஸ்நாக்ஸ் எல்லாம் எந்த மூலைக்கு பத்தும் எனக்கு? அதான் இருக்குற சாமான் செட்ட சாப்பிட்டா தூக்கிட்டு போற வேலையாவது மிச்சமாகும்ன்னு சாப்பிட்டேன் வருமாமா”
“ஓய் என்ன ரொம்ப தான் என்னை சீண்டற? “வருமாமா” ன்னு கூப்பிடாதே எத்தன தடவ சொல்றது உன்கிட்ட?”
“என்னையும் “சியாபாப்பா”ன்னு கூப்பிடாதேன்னு எத்தன தடவ சொல்றது? ஹாங்”
“அதுக்கு பேச்சுக்கு பேச்சு சொல்வியா நீ?”
“ஆமாம் வருமாமா என் மாமாவ நான் சொல்லாமா வேற யார் சொல்லுவா?”
பேசிக்கொண்டே அவர்களின் சரக்கு ஆட்டோவில் அவளது உடைமைகளை வைத்து விட்டு இருவரும் வாகனத்தில் ஏறி அமர
“ஒரு நாளாவது வண்டியில வந்து கூட்டிட்டு போறியா வருமாமா? எப்போ பாரு இந்த ஆட்டோ தான் எனக்கு கடுப்பாகுது.”
“எனக்கும் ஆசைதான் சியாபாப்பா, ஆனா பாரு ஒரு குட்டியானைய கூட்டிட்டு வர இன்னொரு குட்டியானையால தானே முடியும்? அதான் என் ஆசைக்கு முற்றுப்புள்ளி வச்சுட்டேன்.”
“இன்னைக்கு என் கையால வறுபட்டுட்டு தான் அடங்கப் போற பாரு” என சிவனியா பல்லைக் கடிக்க
“சும்மா முறைக்காதே சியாபாப்பா? எல்லோரும் ஹாஸ்டல்ல இருந்தா மெலிஞ்சு போய், வருவாங்கன்னு கேள்விப் பட்ருக்கேன். நீ என்னடான்னா, பிக்னிக் போயிட்டு வந்தவ மாதிரி அவ்ளோ பிரெஷ்ஷா, ஒரு ரவுண்ட் குண்டாகி வந்திருக்கே, எல்லாரோட சாப்பாட்டையும் நீ ஒருத்தியே ரவுண்டு கட்டி உள்ளே தள்ளிட்டியா!”
“அய்யோ!! இதுக்கு தான் அம்மாவ வரச் சொன்னேன், உன்னோட கேள்விக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது. மனசுல வஞ்சனை இருக்குறவங்களுக்கு தான் சாப்பாடு உடம்புல ஒட்டாம, ஒல்லியா இருப்பாங்களாம் உங்கள மாதிரி” என்று கண்களையும், உதட்டையும் ஒரு பக்கம் இழுத்து, பழிப்பு காட்டியவள்
“நமக்கு அதெல்லாம் சுட்டு போட்டாலும் வராது, மனசும், உடம்பும் எப்பவும் காலி தான். நான் நிறையவே வஞ்சனை இல்லாம சாப்பிடுவேன் வருமாமா. போனதும் அத்தம்மா கிட்ட சொல்லி சுத்தி போட்டுக்கணும். ஊர் கண்ணெல்லாம் சேர்ந்து உங்க ஒருத்தர் பார்வையிலேயே நான் மெலிஞ்சு போயிருவேன் போல” என கடுகடுத்தபடியே பேசிட
“போதும் சியாபாப்பா ரொம்ப மூச்சு விடாதே, இங்கே வண்டி நகர மாட்டேங்குது, எவ்ளோ நேரந்தான் நான் வண்டி உருட்ட முடியும்? கொஞ்சம் அமைதியா வா! சீக்கிரம் வீட்டுக்கு போய் உன்னோட பஜனைய ஆரம்பிக்கலாம். உன்னோட பக்த கோடிகள் எல்லாம் அங்கே சுண்டல் வாங்க வெய்டிங்” என்று சீண்டலை தொடர்ந்திட
“வீட்டுக்கு போனதும் அத்தம்மா கிட்ட சொல்லிட்டு தான் வேற வேலை எனக்கு, அப்போ பேசு பாக்குறேன்” என மூஞ்சியை தூக்கி வைத்து கொண்டாலும், ஒருவரையொருவர் சீண்டிய வண்ணமே வீட்டினை வந்தடைந்தனர்.
வண்டியில் இருந்து இறங்கியதும் அவள் கையை வீசியபடியே உள்ள செல்ல
“உன்னோட லக்கேஜ் எல்லாம் யாரு கொண்டு வருவா? தூக்கிட்டு போ”
“ஆட்டோகாரன் தூக்கிட்டு வருவான், அவன்கிட்ட மேல கொண்டு போய் என்னோட ரூம்ல வைக்க சொல்லிடு மாமா. நான் எங்க அத்தம்மாவ பார்த்துட்டு தான் போவேன்” சொல்லியபடியே ஒரு பாடலை முணுமுணுத்தவாறே கோதையின் அறைக்கு சென்றவளின் பின்னோடு வந்தவன்
“நான் உனக்கு ஆட்டோகாரானடி, எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி சொல்வே?” அவளிடம் எகிற
“பாருங்க அத்தம்மா என்னை “டீ” போட்டு பேசுறாங்க இந்த மாமா, எனக்கு தூக்க முடியலன்னு தானே மேல கொண்டு போய் வைக்க சொன்னேன் அதுக்குப் போய் சத்தம் போடறாங்க” முகத்தை பாவம் போல் வைத்து கோதை நாயகியிடம் புகார் படிக்க,
“ஏண்டா வருணா!! புள்ள இப்போதான் வந்திருக்கு, அதுக்குள்ள அவளை அழ வைக்கிற? உனக்கு செய்ய முடியலன்னா வேற யாரையாவது செய்ய சொல்லு, அவள சத்தம் போடாதே” என்று சிவனியாக்கு தன் ஆதரவை அளித்தவர் கோதை நாயகியே தான்.
எளிமையான மதுரை சுங்குடி புடவையில், சற்றே பருமனாய், மாநிறத்துடன், கழுத்தில் இரட்டை வடம் முத்துக்கள் கோர்க்கப்பட்ட தங்கமணிமாலையும், காதில் வெள்ளை கல் வைத்த தோடும், மூக்கில் ஐந்து கல் வைத்த சிறிய பேசரியும் அணிந்து கண்களில் கனிவும், கருணையும் தவழ, சாந்த சொருபியாய் தன் அன்புக் குழந்தையை பாசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
“வேண்டாம்மா! இவள நம்பாதீங்க வரும்போது என்ன பேச்சு பேசினா தெரியுமா? இப்போ உங்க கிட்ட நல்ல புள்ளையா உக்காந்து என்னை மாட்டி விட்டுட்டு இருக்கா”
“இல்ல அத்தம்மா, மாமா தான் சியபாப்பான்னு என்னை சீண்டிகிட்டே இருக்காங்க”
“நீ பாப்பா தானேடா ராசாத்தி, இதுல என்ன தப்பிருக்கு?” என அவளை கோதையம்மாள் வாரிவிட
“அத்தம்மா இது நல்லா இல்ல சொல்லிட்டேன், இவர் இப்படி கூப்பிட்டு என்னோட ப்ரண்ட்ஸ் எல்லாம் எவ்ளோ கேலி பண்ணினாங்க தெரியுமா? அவங்கள மிரட்டி, என் பேர் சொல்லி கூப்பிட வைக்கிரதுக்குள்ள நான் ஒரு வழியாகிட்டேன். விடுங்க! இனிமே நான் யார் கூடவும் பேசல, என் வேலை என்னவோ அத மட்டும் நான் பார்த்துட்டு போறேன்” ரோசத்துடன் பொங்கியவளை பார்த்து
“அப்படி என்ன பெரிய வேலை பாக்க போற சொல்லு? நானும் தெரிஞ்சுக்குறேன்” பாண்டியன் விடாமல் சீண்டிமுடிக்க
“அதையெல்லாம் நான் செய்யுறப்போ பாத்துக்குங்க, இப்போ எனக்கு பசிக்குது, இருக்குற அயிட்டம் எல்லாத்தையும் ஒரு சாம்பிள் பார்த்துட்டு வந்து உங்ககிட்ட பேசுறேன்”
“உன்னோட வேலை என்னான்னு எவ்ளோ நாசுக்கா சொல்லிட்டு போற! போ… போ… வேலைய ஆரம்பி, மிச்சம் மீதி இருந்தா சொல்லு நைட் வந்து நான் கொட்டிக்குறேன்”
“அப்படி யாரும் சலிச்சு போய் சாப்பிட வேணாம், உங்க பங்கையும் சேர்த்து நானே காலி பண்ணிடறேன்” இருவரும் பதிலுக்கு பதில் பேசிய படியே முன்னறைக்கு வந்திட
“அம்மாடி சிவா!! நீ வந்தது அந்த முக்கு சந்து வரைக்கும் தெரிஞ்சு போச்சு, உன் கூட பேசும் போது மட்டும் தான் நம்ம பாண்டியருக்கு இந்த சீண்டல் பேச்சும், சிரிப்பு சத்தமும் வருது, அத வச்சே எல்லோரும் நீ வீட்டுக்கு வந்திருக்கேன்னு முடிவு கட்டிறாங்க, நல்லா இருக்கியாடா தங்கம்?” என கேட்டபடியே ராமலிங்கம் அவளை வாஞ்சையாய் தலையை தடவி தன் பாசத்தை வெளிக்காட்ட
“உங்க ஆசிர்வாதம் தாத்தா நான் சூப்பரா இருக்கேன், ஆனா இந்த மாமாவை பர்த்துட்டேன்ல்ல, இனிமே கொஞ்சம் சந்தேகம் தான், நான் நல்லா இருக்குறது” என்று கேலியாய் கூறியவளின் வாயில் அடி ஒன்று விழ, அனைவரும் திகைத்து போய் பார்க்க, செங்கமலத்தின் கைகள் மற்றொரு அடியை அவள் கன்னத்தில் அறைய மேலே உயர்த்தி இருந்தார். அவர் கையை தடுத்தவாறே
“என்ன அத்தை இது விளையாட்டுக்கு தானே பேசுறோம், அதுக்கு போய் கை ஓங்குறியே?” பாண்டி
“சின்ன புள்ள நம்மகிட்ட பேசமா வேற யார் கிட்ட பேசுவா கமலம்? இப்படியெல்லாம் சட்டு சட்டுன்னு கைய நீட்டாதே!!” கோதை
“அம்மாடி இப்போ வந்த பிள்ளைக்கிட்ட இவ்ளோ கண்டிப்பு ஏன்மா?” ராமலிங்கம்
அனைவரும் ஒன்று சேர்ந்து செங்கமலத்தை கண்டிக்க,
“இவ என்ன பேச்சு பேசினான்னு நீங்க கேட்டீங்க தானே அண்ணி? எல்லோரும் சேர்ந்து ஒட்டு மொத்தமா செல்லம் குடுக்குறதால தான் இவளுக்கு யார் கிட்ட எங்கே எப்படி பேசணும்னு தெரியாமயே போயிருது. இப்படியே வெளியேயும் போய் பேசி வச்சா எங்களை பத்தி என்ன நினைப்பாங்க? கொஞ்சம் கூட நன்றியுணர்ச்சி இல்லாம வாய்க்கு வந்தத பேசிட்டு திரியுதுன்னு தானே பேச்சு வரும்.” பொங்கிய நன்றியுணர்ச்சியில் செங்கமலம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திட
“அதெல்லாம் போக போக தெரிஞ்சுப்பா!! இப்போ கொஞ்ச நேரம் அமைதியா இரும்மா, வந்த புள்ளைய ஒரு வாய் சாப்பிட வை”- ராமலிங்கம்
“அந்த வேலை நான் சொல்லாமலேயே நடக்கும்ப்பா, இவ கல்யாணம் முடிச்சு எப்படி குப்பை கொட்ட போறாளோன்னு நினைச்சா தான் எனக்கு பயமா இருக்கு. கொஞ்சமாவது வாய் அடக்கம் இருக்கா இவளுக்கு?” செங்கமலம் புலம்ப
“நான் நல்லாத் தான்ம்மா குப்பை கொட்டுவேன், நீ நல்லா குப்பை அள்ளுறவனை தேடி பிடி அது போதும். என்னை பத்தி யாரும் கவலப் படவேணாம்” அடங்காமால் சிவனியா பேச
“ஆமா அத்த! இந்த பெரிய மனுஷி சொல்லிட்டாங்க. அதனாலே இவளை பத்தி கவலப்படாம, இருக்குற எல்லா சாப்பாடையும் நீ கட்டி வை, நான் ஹோட்டலுக்கு கொண்டு போறேன்”
“போங்க போங்க… நானும் உங்க சாப்பாட்ட கையால கூட தொட மாட்டேன், யாரு நான் சிவனியாவாக்கும்!!” என்று சிலிர்த்துக்கொண்டே “அத்தம்மா எனக்கு பசிக்குது” கோதையை பார்த்து பாவமாய் கேட்டு வைக்க, அடுத்த நிமிடம் தட்டில் உணவுடன் வந்தவர் அவளுக்கு ஊட்டி விட ஆரம்பித்தார்.
“வீர சபதம் போட்டு நிமிஷம் முடியல, அங்கே உள்ள தள்ளுறத பாரு அத்த”
“வருமாமா!! கையால தொட மாட்டேன்னு தான் சொன்னேன், வாயால சாப்பிட மாட்டேன், என் வயித்துகுள்ள தள்ள மாட்டேன்னு சொல்லலே? கண்ணு வைக்காதே சீக்கிரம் ஹோட்டலுக்கு கிளம்பு, அப்படியே எனக்கு ஒரு சில்லி புரோட்டா பார்சல் குடுத்து விடு”
“இப்போ இருக்குறத உள்ளே தள்ளு சியாபாப்பா, அடுத்து இடம் இருந்தா சொல்லு அனுப்பி வைக்கிறேன்”
“அதெல்லாம் கொஞ்ச நேரத்துல இடம் காலியாயிரும், கதிர் கிட்ட குடுத்து விடு மாமா”
“கைக்கும், வாய்க்கும் கொஞ்சம் ரெஸ்ட் குடு, பாவம் ஒரே வேலை செஞ்சு போர் அடிச்சு போயிருக்கும்” – பாண்டி
“மாமா சாப்பிடுற வேலையோட, எல்லோர் கூட பேசுற வேலையும் என்னோட வாய் செய்யுது, அதுக்கு சார்ஜ் ஏத்திக்கத் தான் இப்படி கொஞ்சமா சாப்பிட்டு வைக்கிறேன், எனக்கு பார்சல் குடுத்தனுப்புங்க”
“தலைகீழா நின்னாவது சாப்பிட்டே ஆகணுமா? நடத்து நடத்து! நான் கிளம்புறேன்” பாண்டியன் தன் வேலையை பார்க்க சென்றான்.
“ஹாஸ்டல்ல காய்ஞ்சு போனத சாப்பிட்டு, நாக்கு செத்து போய் வந்திருப்பாளேன்னு கொஞ்சமாச்சும் பாவம் பாக்குறாங்களா? நீங்க குடுங்க அத்தம்மா நானே சாப்பிட்டுக்குறேன் அப்போ தான் நிறைய சாப்பிட முடியும்” விடாமல் தன் காரியத்திலேயே குறியாய் இருக்க
அவளது காதை திருகிக் கொண்டே “சொல் பேச்சு கேக்காம முடி வெட்டியாச்சா திரும்பவும்?” செங்கமலம் கோபமாய் கேட்க
“விடும்மா காது வலிக்குது, கொஞ்சம் தான் கட் பண்ணிகிட்டேன், பிரண்ட்ஸ் கம்பெல் பண்ணினாங்க, இனிமே செய்ய மாட்டேன்”
“இப்டி தாண்டி சொல்றே! அப்பறம் எல்லாத்தையும் மறந்து போற, எப்போ தான் பொறுப்பு வர போகுதோ?”
“ரொம்ப திட்டாதேம்மா!! அடுத்த மாசம் வேலை கிடைச்சதும், திரும்பவும் ஹாஸ்டல் போயிருவேன் அது வரைக்கும் ஜாலியா இருக்க விடு”
“எங்கே வேலை கிடைச்சிருக்கு சிவா? எப்போ சேரனும்?”
“இன்னும் ரெண்டு வாரத்துல தெரிஞ்சுரும்மா,” என்றவள் தன் அத்தையை பார்த்து “அத்தம்மா மாமாக்கு பொண்ணு பார்த்து முடிவு பண்ணியாச்சா? சீக்கிரம் நாள் பாருங்க, கல்யாண விருந்து சாப்பிட்டு வேலைக்கு கிளம்புறேன்”
“எங்கேம்மா? இவன் பிடி குடுத்து பேச மாட்டிக்கான். இன்னைக்கு கூட பொண்ணோட அப்பா வந்து நிச்சயம் பண்ணிருவோமானு கேக்க வந்தாரு. இவன் பொண்ணு பாக்க வரல, நீங்களே பேசி முடிங்கன்னு சொல்றான், எங்கே போய் முட்டிக்கன்னு தெரியல? நீயாவது கேட்டு பாரேன் தங்கம்”
“கவலைய விடுங்க அத்தம்மா!! உங்க பையனுக்கு கால்கட்டு போட்ற வரைக்கும் எல்லா வேலையும் தீயா செஞ்சு, இந்த வீட்டுக்கு ஒரு மருமகளை கொண்டு வந்து நிப்பாட்ட வேண்டியது என் பொறுப்பு. ஆனாலும் வரப்போற பொண்ணு ரொம்ப பாவம் அத்தம்மா, இந்த முசுடு மாமன் கிட்ட மாட்டி, என்னவெல்லாம் கஷ்டப்படப் போகுதோ?”
“அடிக்கழுத! என் பிள்ளைய பத்தி என்கிட்டயே குறை சொல்றியா நீ?”
“ஐயோ பயந்துட்டேன் அத்தம்மா! உங்க பையன் புன்னகை மன்னர் தான் அமைதி அத்தம்மா அமைதி” கேலி பேசியபடியே இருக்க சில்லி புரோட்டாவுடன் கதிர் வந்து சேர்ந்தான்.
“சிவாக்கா!! உனக்கே உனக்காய் இந்த பார்சல்”
“வாடா கதிர் எப்டி இருக்கே? படிப்பெல்லாம் எப்டி போகுது?”
“நீயுமாக்கா இந்த கேள்வி எல்லாம் கேக்குற? கொஞ்சம் மாத்தி கேளேன்?”
“பெரியவங்க இருக்குற இடத்துல உன் கேர்ள் பிரண்ட பத்தியாடா கேக்க முடியும்?”
“ஐயோ அக்கா இனிமே நான் வாய தொறக்கல!! வந்த வேலை முடிஞ்சது கிளம்புறேன். இல்லனா அங்கே அண்ணே டைம் பார்த்து சம்பளத்துல கை வைப்பேன்னு மிரட்டுவாரு!!” என சொல்லும் போதே அவன் சட்டையில் இருந்து அழைப்பு மணியாய் கைபேசி இசைத்திட,
“இதோ கூப்பிட்டாருல்ல எங்க பாண்டியரு! யார் வந்தாலும் இவர அசைக்க முடியாது” என சிவாவிடம் கூறியபடியே
“தோ வந்துகிட்டே இருக்கேண்ணே”
“இன்னுமாடா நீ வந்துட்டு இருக்க? இந்நேரம் வந்து சேர்ந்துருக்கனுமேடா! அந்த அறுந்த வாலு கிட்ட அப்புறமா அரட்டை அடிக்கலாம், வேலை இருக்கு சீக்கிரம் வந்து சேரு” பதிலை கூட எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்து விட்டான்.
“என்னடா மொபைல் புதுசா இருக்கு எப்போ வாங்கினது?” கண்ணையும், கருத்தையும் கவரும் வகையில் இப்போது வந்துள்ள புதிய ரக கைப்பேசியை சிவா ஆர்வத்துடன் கையில் வாங்கி பார்க்க
“அண்ணே தான்க்கா வாங்கி குடுத்தாரு, சம்பளத்துல கொஞ்சம் கொஞ்சமா கழிச்சுகுறேன்னு சொல்லித்தான் வாங்கி குடுத்திருக்காரு, இத வாங்க என்னை தலையால தண்ணி குடிக்க வச்சுட்டாருக்கா நம்ம பாண்டியரு”
“அத செய்யாம இருந்தா தாண்டா நமக்கு சந்தேகம் வரணும், யாரு அவரு? ஒரு கிண்ணம் சாதத்தை கூட ஒரு சாப்பாடாக்கி சம்பாதிக்கிறவரு. அவர்கிட்ட நல்ல பேர் வாங்கினா அத விட பெரிய ஆஸ்கார் எதுவும் இல்லடா. நானும் வேலைக்கு போனதும் வாங்கணும், இப்போதைக்கு சின்ன போன் தான் இருக்கு” என்று சொல்லிக்கொண்டே கதிருடன் சேர்ந்து நின்று ஒரு சுயமி(செல்பி)யை சொடுக்கி விட்டு, அவள் பெயரை போட்டு, தன் கைபேசி எண்ணை பதிவு செய்து, அதற்கு தற்பொழுது எடுத்த புகைப்படத்தை காட்சிப் படமாக(dp) வைத்து விட்டாள். (இக்காலத்தில் ஒருவரை பார்த்து விட்டு இந்த செயலை செய்யாமல் இருந்தால் தான் அதிசயம்). தனது எண்ணை அறிந்து கொள்வதற்கான எளிய வழிமுறை என்று மட்டுமே அவள் இதை செய்து வைத்தாள்.
********************************************************
அனைத்து மாதங்களிலும் விழா நடக்கும் ஒரே ஊர் மதுரை. தமிழ் மாதங்களின் பெயராலேயே தெருப்பெயர்கள் அமைந்திருக்கும் ஒரே மதுரை. (சித்திரை வீதி, ஆடி வீதி, ஆவணி வீதி, ஆனிவீதி, மாசி வீதிகள்)
நீர் நிலைகளின் பெயராலேயே தங்களது ஊர் பெயரை வைத்து நீருக்கு பெருமை சேர்த்தவர்கள் மதுரை மக்கள். (தாமரைகுளம், கரிசல்குளம், ஆத்திகுளம், மாடக்குளம், ஆலங்குளம் மற்றும் பிற)
ஜல்லிகட்டுக்கு தமிழகத்தில் பிரபலமான இடமென்றால் அது சந்தேகமே இல்லாமல் மதுரை தான். இங்கே உள்ள அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தம் ஆகும்.