KKE–EPI 7

அத்தியாயம் 7

 

காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கு மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை. பரம்பரை பரம்பரையாகப் பட்டுப் புடைவைகளை நெய்யும் நெசவாளிகள் இங்கு வாழ்கிறார்கள்.

 

காலை உணவுக்குப் பிறகு ஹோட்டலை செக் அவுட் செய்து விட்டு மூட்டை முடிச்சுக்களுடன் காஞ்சிபுரத்துக்குப் பயணப்பட்டார்கள் எல்லோரும். ட்ரிப் ஆரம்பித்த சில நாட்களுக்குள்ளாகவே எல்லோர் முகத்திலேயும் களைப்புக் குடிகொண்டிருந்தது. வளவளவென பேசிக் கொண்டு வருபவர்கள், இப்பொழுது தூங்கி வழிந்துக் கொண்டு வந்தார்கள்.

ஜம்பு மெய் லிங்கைத் தான் பார்க்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். மொட்டை மண்டையில் சந்தனம் துலங்க, காதில் இயர் போனுடன், கண் மூடி சீட்டில் சாய்ந்திருந்தாள். அவள் முகம் மட்டும் ஏதோ வலியைப் பொறுப்பது போல தெளிவில்லாமல் இருந்தது. இரு கைகளையும் வயிற்றில் அழுத்திக் கொண்டிருந்தாள்.

‘என்னாச்சு சீனா பிட்டுக்கு? முகமே சரியில்லையே’ என யோசித்தவன்,

“மங்கி டேய்” என அழைத்தான்.

“ஹ்ம்ம்ம்”

“எழுந்திருடா”

“என்னண்ணா? மனுஷன தூங்க விடாம தொல்லைப் பண்ணுறீங்க?” சலித்துக் கொண்டான்.

“தூக்கம் ரொம்ப முக்கியமாடா இப்போ?”

“இந்த வயசுல தூக்கம், பிரியாணி, டாவு, கொஞ்சமா பீரு இதுதாண்ணா முக்கியம். உங்க வயசு வரப்போ வேணுன்னா வேலை, கடமை, கண்ணியம், தயிர் சாதம்னு மாறிக்கலாம். இப்போ என்னைத் தூங்க விடுங்க”

“டேய்!”

“அச்சோ! உங்களோட இம்சையா போச்சு. இப்போ என்ன வேணும் உங்களுக்கு?” கண்ணைத் தேய்த்து விட்டுக் கொண்டு கடுப்பாக கேட்டான் மங்கி.

“சமூக்கு என்னமோ பண்ணுதுடா. ஒரு மாதிரியா இருக்கா”

“என்னமோ பண்ணுதுன்னு அவங்க சொன்னாங்களா?”

“இல்லைடா, ஆனா பார்த்தாலே தெரியுது”

இவன் பின்னால் திரும்பி மெய் லிங்கை பார்த்தான். நார்மலாக இருப்பதாக தான் பட்டது.

“அவங்க நல்லாத்தான் இருக்காங்க. உங்களுக்கு தான் பைத்தியம் முத்திருச்சு.” இவன் பேசிக் கொண்டு இருக்கும் போதே அவள் படாரென கண் விழித்து பரபரவென எதையோ தேடினாள்.

“வாட்?” என பதட்டமாக ஜம்பு கேட்க,

“ஐ கோன வாமிட்” வாந்தி வரப்போவதா சொன்னவள் கண்களை சுழற்றினாள்.

“மங்கி சீக்கிரமா ப்ளாஸ்டிக் பையை எடுத்து அவ கிட்ட குடு. நான் ஓர் ஓரமா வண்டியை நிறுத்துறேன்” என்றான் ஜம்பு.

ப்ளாஸ்டிக் பை கையில் வந்ததும், வே வே என வாந்தி எடுத்தாள் மெய் லிங். எல்லோரும் அவள் சத்தத்தில் விழித்துக் கொண்டனர். ராணி அவளை கைப்பற்றி கீழே இறக்கி விட்டார். அந்த நேரத்தில் கூட பிசியாக இருந்த சாலை ஓரத்தில், குடலே வெளி வரும் அளவுக்கு வாந்தி எடுத்தாள் மெய் லிங். ராணி முதுகை தடவிக் கொடுக்க, வயிற்றில் இருந்து எல்லாம் வெளியேறிக் கூட இன்னும் உமட்டியவாறே இருந்தாள் அவள்.

தண்ணீர் பாட்டிலுடன் பக்கத்தில் நின்றிருந்த ஜம்புவுக்கு, அவள் அருகில் கூட செல்ல முடியவில்லை. மற்றவர்கள் முன் அவளிடம் எந்த உரிமையில் நெருங்குவது! ராணியிடம் பாட்டிலைக் கொடுத்தவன், கைக்கட்டி அவள் படும் பாட்டைப் பார்த்தபடியே நின்றிருந்தான்.

உமட்டி, உமட்டி களைத்துப் போய் மயங்கும் அளவுக்குப் போனவளை பட்டென அருகே சென்று தன் மேல் தாங்கிக் கொண்டான் ஜம்பு.

“ராணி மேடம், காஞ்சிபுரம் நெருங்கப் போறோம். உங்கள எல்லாம் கோயிலுல விட்டுட்டு இவங்கள நான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போறேன். நீங்களும் வரதுனா வாங்க” என அழைத்தான்.

“வந்து தம்பி, இவள பார்க்கவும் பாவமாத்தான் இருக்கு. ஆனா நான் காஞ்சி காமாட்சிக்கு வேண்டுதல் வச்சிருக்கேன். அதை நிறைவேத்துனும்.” என கைகளைப் பிசைந்தார்.

“அப்போ என் மேல நம்பிக்கை வச்சு நீங்க போய் வேண்டுதல பாருங்க. நான் பத்திரமா இவங்கள கூட்டிட்டு போய்ட்டு வரேன்” என்றவன் கைத்தாங்கலாக அவளை அழைத்து வந்து வேனில் உட்கார்த்தி வைத்தான். இன்னும் உமட்டிக் கொண்டுதான் இருந்தாள் மெய் லிங். நெஞ்சை நீவி விட நீண்ட தன் கையை கஷ்ட்டப்பட்டு அடக்கிக் கொண்டான் ஜம்பு.

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் மற்றவர்களையும், மங்கியையும் இறக்கி விட்டவன் வேனை பக்கத்தில் இருந்த ஹாஸ்பிட்டலுக்கு விட்டான். வாகனத்தை நிறுத்தியவன், மெய் லிங்கை கைத்தாங்கலாக உள்ளே அழைத்துப் போனான். இவர்களை அழைக்கும் வரை அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்துக் கொண்டவன், நடுங்கியபடி இருந்தவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். முதலில் வேண்டாமென விலகினாலும், மயக்கத்தில் தலை சுழல்வது போல இருக்க தானாகவே அவன் நெஞ்சில் ஒட்டிக் கொண்டாள் அவள்.

அவளின் முதுகை நீவிக் கொண்டே, மொட்டைத் தலையில் இருந்து வந்த சந்தன வாசத்தை முகர்ந்துக் கொண்டு ஜென் நிலையில் அமர்ந்திருந்தான் ஜம்பு. இவர்கள் முறை வரவும் மெல்ல நடத்தி மருத்துவரைப் பார்க்க அழைத்துப் போனான் அவன். இங்குள்ள உணவு வகை அவளுக்கு ஒத்துக் கொள்ளாமல் தான் இப்படி இருக்கிறது என சொன்ன டாக்டர், அவள் வீக்காக இருப்பதால் கண்டிப்பாக ட்ரிப்ஸ் ஏற்ற வேண்டும் என சொல்லிவிட்டார். இரண்டு பாட்டில் ட்ரிப்ஸ் ஏற்றிய பின் அழைத்து செல்லலாம் என்றவர் அதற்குரிய ஏற்பாட்டை பார்க்குமாறு நர்சை பணித்தார்.

சிறிய ரூம் ஒன்றில் மெய் லிங்கை படுக்க வைத்து, கையில் ஊசி ஏற்றி டிரிப்ஸ் போட்டார்கள். கட்டிலில் கண் மூடி படுத்துக் கொண்டவள், ஜம்புவின் கையை மட்டும் விடவேயில்லை. நர்ஸ் வெளியேறியவுடன், நாற்காலியை இழுத்துப் போட்டு அவள் அருகிலேயே அமர்ந்துக் கொண்டான் ஜம்பு.

அந்த ஹாஸ்பிட்டலில் இருந்த நர்ஸ், டாக்டர் மற்றும் வந்திருந்த மற்ற நோயாளிகள் வரை இவர்களை ஒரு மாதிரியாகத் தான் பார்த்தார்கள். வெள்ளை சீனா எலியை, கருப்பு தமிழ் பூனை கடத்தி வந்துவிட்டதைப் போல் இருந்தது அவர்கள் பார்வை. அவனின் ட்ராவல்ஸ் உரிமத்தையும், அவளின் பாஸ்போர்ட்டையும் காட்டித்தான் ரெஜிஸ்டர் செய்திருந்தான். அதற்கு பிறகே அந்த டாக்டர் சிகிச்சை எடுத்தார்.

இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு மெல்ல கண் விழித்தவள் முதலில் கண்டது, ஜம்புவின் கையோடு பிணைந்திருந்த தன் கையைத்தான். அவசரமாக தன் கையை இழுத்துக் கொண்டாள் மெய் லிங்.

அவளை ஆழ்ந்துப் பார்த்தவன்,

“உடம்புல கொஞ்சம் பலம் வந்துருச்சுல, அதான் டக்குன்னு கையப் பிரிச்சுட்ட! இவ்வளவு நேரம் என் நெஞ்சுல சொகுசா சாய்ஞ்சிருந்தது எல்லாம் ஞாபகம் இருக்கா இல்லையா? உனக்கு இருக்குமோ இல்லையோ, இனிமே அந்த ஞாபகம் தான் என்னை உயிர்ப்போடு வச்சிருக்கும்” கனவில் மிதப்பவன் போல மென்மையாக பேசினான்.

“வாட் ஜம்ப்?” புரியாமல் கேட்டாள் மெய் லிங்.

“நத்திங்! நவ் யூ ஓக்கே?”

ஆமாமென தலையாட்டியவள்,

“ஜம்ப் ஐ எம் ஹங்கரி” என்றாள்.

“பசிக்காதா பின்னே! வயித்துல உள்ளது எல்லாத்தையும் தான் வெளிய எடுத்துட்டியே! வெய்ட், வரேன்” என வெளியேறினான்.

வெளியெ செல்லும் அவனையே கண் இமைக்காமல் பார்த்திருந்தாள் மெய் லிங். திரும்பி வரும் போது, கஞ்சி வாங்கி வந்திருந்தான் அவன்.

“லைட்டா ஈட்” என்றவன் கரண்டியால் அவளுக்கு அள்ளி கொடுத்தான்.

“ஐ கென் ஈட் மைசெல்ப்” என வாயைத் திறக்காமல் இறுக மூடிக் கொண்டாள் மெய் லிங்.

ஜம்புவுக்கு கோபம் எட்டிப் பார்த்தது.

“கைல ட்ரிப்ஸ்! ஐ பீட், யூ ஈட்” என கோபத்தை அடக்கி பொறுமையாக சொன்னான் அவன். தானே சாப்பிடுவதாக அடம் செய்து, வாயைத் திறக்காமல் அமர்ந்திருந்தாள் அவள்.

“ங்கொய்யால! இவ்வளவு அடம் ஆகாதுடி சமூ!” என கோபமாக கத்தியவன், பின் கெஞ்சலாக

“ப்ளிஸ் மெய் லிங். ஐ பீட்” என குரலை தளைத்தான்.

கோபத்தில் இருந்து பட்டென கெஞ்சலுக்கு மாறிய அவன் முக பாவத்தைக் கவனித்திருந்த மெய் லிங், பின் அமைதியாக தன் பிங்க் அதரங்களைத் திறந்தாள்.

கண்கள் பளபளக்க, உதடுகள் சந்தோசத்தில் நெளிய தெய்வத்துக்கு நைவேத்தியம் படைப்பது போல பயபக்தியாக அவளுக்கு கஞ்சியை ஊட்டினான் ஜம்பு. பாதியில் போதும் என சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டாள் அவள்.

“ஃபுட் நோ வேஸ்ட்” என்றவன் மீதி இருந்த கஞ்சியை மெல்ல ரசித்து ருசித்து குடித்து முடித்தான். ஒன்றும் சொல்லாமல் அவன் சாப்பிடுவதையேப் பார்த்திருந்தாள் மெய் லிங்.

இரண்டு பாட்டில் ட்ரிப்ஸ் ஏறியவுடன், உமட்டல் அறவே நின்றிருந்தது. டாக்டர் கொடுத்த மருந்தும் அவளின் வயிற்று வலியை குறைத்திருந்தது. கிளம்பலாம் என அவள் சொல்ல, கொஞ்ச நேரம் அவளை அங்கேயே இருக்க சொல்லியவன் அரை மணி நேரம் கழித்துதான் வந்தான். அவன் கையில் மருந்து பை இருந்தது.

“லெட்ஸ் கோ” என சொல்லியவன், அவள் கையைப் பற்றிக் கொண்டான். மெல்ல அவன் பிடியில் இருந்து கையை விடுவித்துக் கொண்டவள்,

“ஐ கென் வால்க்” என சொல்லி மெல்ல நடக்க ஆரம்பித்தாள். ஒரு பெருமூச்சுடன் அவள் பின்னாலேயே வந்தான் ஜம்பு. ரிசப்சனை நெருங்கியவள், எவ்வளவு பில் என கேட்டாள்.

ஏற்கனவே கட்டிவிட்டதாக வந்த பதிலில், பின்னால் நடந்து வந்த ஜம்புவை முறைத்தாள் மெய் லிங். எவ்வளவு கட்டப்பட்டது என கேட்டுக் கொண்டவள், ஒன்றும் பேசாமல் வெளியே நடந்தாள். வேனில் அவன் பின்னால் கதவைத் திறக்க, அதை அடித்து மூடிவிட்டு முன்னால் மங்கியின் சீட்டில் போய் அமர்ந்தாள்.

“யப்பா, சீனா பட்டுக்கு இம்புட்டு கோபம் வருது!” மெல்லிய நகைப்புடன் ட்ரைவர் சீட்டில் அமர்ந்து வேனைக் கிளப்பினான். அவள் அமைதியாகவே வர, ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தவாறே வேனை ஓட்டினான் ஜம்பு.

கோயிலை அடைந்ததும் வேனை பார்க் செய்தவன் அவளைப் பின்னால் போய் கொஞ்ச நேரம் படுத்துக் கொள்ள சொன்னான்.

“ஐ வாண்ட் டூ கோ திஸ் டெம்பிள்”

“நெக்ஸ்ட் டைம். யூ நோ வெல்” என மென்மையாக சொன்னான்.

“ஐ வாண்ட் டூ கோ” அடமாக சொன்னாள் மெய் லிங்.

“உடம்பு முழுக்க திமிரு. சொன்ன பேச்சை கேட்கறதுனா ரொம்ப கஷ்டம். எவன் உன்னைக் கட்டிக்கிட்டு படப்போறானோ! ஹ்ம்ம், அது நானா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்!” கடுப்பில் ஆரம்பித்து ஏக்கத்தில் முடித்தான்.

“கம்” என வேனில் இருந்து இறங்கினான்.

அவனோடு இறங்கியவள்,

“பிபோர் தட் டேக் திஸ்” என அவன் ஹாஸ்பிட்டலில் கட்டி இருந்த பணத்தை அவன் கையில் திணித்தாள். அவன் பணத்தை மறுபடியும் அவளிடமே கொடுக்க முயன்றான்.

“நோ!” என்றவள் கையை பின்னால் கட்டிக் கொண்டாள். அவளை முறைத்தவன்,

“உனக்கு நான் காசு கட்ட கூடாதாடி? உனக்கு செல்வு பண்ணதுல நான் என்ன பிச்சைக்காரனாவா ஆகிருவேன்?” என கேட்டான்.

பதிலுக்கு அவளும் சீன மொழியில் படபடவென பொரிந்தாள். அவன் பேய் முழி முழிக்க, அவன் தமிழ் பேசும் போது தனக்கும் அப்படிதான் இருக்கிறது என ஆங்கிலத்தில் குத்திக் காட்டினாள் மெய் லிங். அவள் கைகள் இரண்டும் பின்னால் கட்டி இருக்க, பணத்தை தோளில் மாட்டி இருந்த அவள் பேக்கில் வைத்தான் ஜம்பு.

அவன் செயலில் அவளுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது. இப்போது பணத்தை எடுத்துக் கொள்கிறாயா இல்லை நான் ஏதாவது ஏடாகூடமாக செய்யவா என கத்தினாள். அசராமல் நின்றான் ஜம்பு. கோபம் ஏற கையில் பிடித்திருந்த ஹாஸ்பிட்டலில் கொடுத்த மருந்து பையை தூக்கி தூர எறிந்தவள், தன்னால் முடிந்த அளவு வேகமாக நடந்தாள்.

இவன் ஓடிப்போய் மருந்து பையை பொறுக்கிக் கொண்டு வந்தான்.

‘ராட்சசி! நல்ல வேளை எல்லாம் மாத்திரை தான். இல்லைனா இவ வீசுன வேகத்துக்கு பாட்டில் உடஞ்சி போயிருக்கும்.’

அவள் பின்னோடு போய் கைப்பிடித்து நிறுத்தினான் ஜம்பு.

“டேக்” என மருந்துப் பையை நீட்டினான்.

“யூ டேக் தெ மணி ஃபர்ஸ்ட்” என பேரம் பேசினாள். பணத்தை வாங்காவிட்டால் இவள் மருந்துகளை உட்கொள்ளமாட்டாள் என்று தோண, கோபத்துடன் பணத்தை வாங்கிக் கொண்டான்.

“போடி போ! இவ பெரிய இவ, பணத்த திருப்பிக் குடுக்கறாளாம் திருப்பி. இனிமே உன் மூஞ்சில முழிச்சா ஏன்னு கேளுடி சீனா பிட்டு” கத்தியவன் கோயில் முன்புறம் நின்றிருந்த மங்கியிடம் போனான்.

“அவள கூட்டிட்டுப் போய் கோயில காட்டிட்டு சீக்கிரம் வா. அடுத்த இடத்துக்குப் போக நேரமாச்சு. நான் காபி குடிச்சுட்டு வேன்ல வெய்ட் பண்ணுறேன்”

அவள் பொறுப்பை மங்கியிடம் கொடுத்து விட்டு மற்றவர்களை வேனுக்கு அழைத்துப் போனான் ஜம்பு. கோபமாகப் போகும் அவனையே திரும்பி திரும்பி பார்த்தப்படி கோயிலுக்குள் நுழைந்தாள் மெய் லிங்.

அதன் பின் காஞ்சியில் இருந்த வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சென்றார்கள். அங்கிருந்த சிலைகளையும் சிற்பங்களையும் அதிசயமாகப் பார்த்து சிலாகித்தப்படியே வந்தார்கள் மற்ற பெண்கள். மெய் லிங்கோ சிலை நிற்பது போலவே கால் தூக்கி நின்று மங்கியைப் படம் எடுக்க சொல்லிக் கொண்டிருந்தாள். எடுத்த படங்களை சுட சுட இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து கொண்டிருந்தாள்.

‘ரெண்டு பாட்டில் ட்ரீப்ஸ் ஏறி தெம்பு வந்ததும் கால தூக்கி, இறக்கி போஸ் குடுக்கறா சீனா லைட்டு. இதுக்கு முன்ன நடக்கக் கூட முடியாம என் கைய புடிச்சு தொங்கிகிட்டு வந்தது மறந்துப் போச்சு. காரியம் ஆனதும் என்னை திரும்பிக் கூட பார்க்கல’ பொருமியபடி அவளை தூரமாக நின்று முறைக்கிறேன் என பெயர் செய்து கொண்டு சைட்டடித்துக் கொண்டிருந்தான் ஜம்பு.

இன்னும் சில கோயில்களைப் பார்த்து முடித்தவர்கள், பட்டு சேலை வாங்கும் இடத்திற்கு வந்தார்கள்.

“காஞ்சிபுர பட்டு வேணும்னு கேட்டீங்களேன்னு இங்க நிறுத்துறேன். முடிஞ்ச அளவு கூட்டுறவு சங்கம் நடத்தற கடையில எடுங்க. நிறைய இமிடேஷன் பட்டு சேலைங்க இருக்கு. ஏமாந்துறாம உங்க பணத்துக்கு வேலியூ குடுக்கற மாதிரி பட்டு சேலை எடுங்க. ஒரிஜினல் காஞ்சிபுர பட்டுல ஜிஐ(GI) டேக் இருக்கும். அதையும் பாருங்க” என விளக்கி சொன்னான் ஜம்பு.

“இப்படிலாம் ஏமாத்துவாங்களா” என குசுகுசுவென பேசிக் கொண்ட பெண்கள்,

“தம்பி, எங்க கூட வந்து நல்லதா செலெக்ட் பண்ணி குடுங்க. டிப்ஸ் மாதிரி பணம் வேணுன்னா குடுக்கறோம்” என அழைத்தனர்.

“பணம்லாம் வேணாங்க. நீங்க தேர்ந்தெடுங்க, நான் ஒரிஜினலா இல்லையான்னு பார்த்து சொல்லுறேன்.” என்றவன் மங்கியுடன் அவர்களைப் பின் தொடர்ந்தான்.

“அண்ணே, ராஜ்கிரண் மாதிரி ஒரு பக்கேட்டுல தண்ணி எடுத்துக்குங்க. அப்படியே நெருப்பெட்டியும் எடுத்துக்குங்க.”

“எதுக்குடா?”

“எல்லாரும் உங்கள நம்பி வராங்க! புடவைய தண்ணில நனைச்சு சாயம் போகுதான்னு பார்த்து, ஜரி நெருப்பு புடிக்குதான்னு டெஸ்ட் பண்ணி எல்லாம் கரேக்டா செய்யனும்ல. அதுக்குத்தான்.”

“வாய மூடிட்டு வாடா”

“அண்ணே!”

“என்ன?”

“அன்னைக்கு சமூகிட்ட அள்ளி விட்டா நான் கேட்டத வாங்கி தரேன்னு சொன்னீங்களே!”

“சரிடா, என்ன வேணும்?”

“கொஞ்சம் விலை குறைவா பட்டு சேலை வாங்கிக் குடுங்க. சம்பளத்துல பிடிச்சுக்குங்க”

“உனக்கு ஏன்டா பட்டு சேலை? அதுக்குள்ள சைட்டு பிடிச்சிட்டியா?”

“சைட்டெல்லாம் நிறைய இருக்குண்ணே! எல்லாம் டைரி மில்க் வாங்கிக் குடுக்கற ரேஞ்ச்ல தான் இருக்குங்க. சேலைக்கு இன்னும் ப்ரோமோட் ஆகல”

“ஓஹோ!”

“இந்த சேலை என் தங்கச்சிக்குண்ணே. புள்ள வயசுக்கு வந்ததுல இருந்து நான் ஒரு அண்ணனா ஒன்னும் வாங்கிக் குடுத்தது இல்ல. பட்டுலாம் எடுக்க எங்கப்பாவுக்கும் முடியாது. நானாச்சும் எடுத்து தரேன். அந்த பக்கி சந்தோசத்துல ஆடிப்போயிரும்”

“சரிடா, நல்ல சேலையா எடுத்துக்க. காசு திருப்பி தர வேணாம். நம்ம தங்கச்சிக்கு நீ குடுத்ததா இருக்கட்டும்”

“தேங்க்ஸ்ண்ணா, செண்டிமெண்ட் பிட்ட போட்டா நீங்க அசைஞ்சிருவீங்கன்னு தெரியும். பாருங்க ஃப்ரியா ஒரு சேலை உஷார் பண்ணிட்டேன்.” சிரித்தான் மங்கி.

“டேய், நல்லா வருவடா நீ!”

கடையில் ஒர் ஓரமாய் நின்றுக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சு மங்கியிடம் இருந்தாலும் பார்வை மெய் லிங் மேலேயே இருந்தது ஜம்புவுக்கு.

“அண்ணே, உங்க சமூ விட்டா கடையையே வாங்கிருவாங்க போல. எல்லா சேலையையும் எடுத்து மேல போட்டு பார்க்கறாங்க. அவங்க இங்லீசு புரியாம கடை பையன் வேற முழிச்சுட்டு நிக்கறான்.”

“போய் ஹெல்ப் பண்ணுடா அவளுக்கு”

“ஏன் நீங்க போறது?”

“அவளுக்குப் பிடிக்காதுடா”

“ரெண்டு பேரும் நல்லாத்தான் கையாட்டி பேசறீங்க, அப்புறம் என்ன பிடிக்காது!”

“அதெல்லாம் அப்படித்தான். போய் ஹெல்ப் பண்ணு. தோ இப்போ போட்டு பார்க்கறாளே அந்த கிளி பச்சை கலர் சேலை, அது சூப்பரா இருக்குடா. அவ மண்டைய கழுவி அதையே எடுக்க வைடா. மேல போட்டு பார்க்கறப்பவே பாளையத்து அம்மன் மாதிரி தெய்வீகமா இருக்காடா சமூ”

“ஹ்க்கும்! பேசமாட்டாராம், ஆனா சேலை மட்டும் நல்லா இருக்காம். தெரியாமத்தான் கேக்கறேன், சைட்டடிக்கற அரிச்சுவடியாவது உங்களுக்கு தெரியுமா?”

“ஏன்டா இப்படி ஒரு சந்தேகம் திடீர்னு?”

“நீங்க பேசறத கேட்டா அப்படித்தான் இருக்கு. பொண்ண சைட்டடிக்கறதுனா எப்படி தெரியுமா? அவ கண்ண பார்த்தா வாவ், சிலுக்கு மாதிரி போதைடா அப்படின்னு நினைக்கனும். மூக்க பார்த்தா அனுஷ்கா மாதிரி ஷார்ப்புடா அப்படின்னு ரசிக்கனும். உதட்ட பார்த்தா, ஏஞ்சலினா ஜோலி மாதிரி தடிப்புடா அப்படின்னு சிலிர்க்கனும். கன்னத்த பார்த்தா…”

“போதும் போதும் நிறுத்து!”

“சிம்ப்லி வேஸ்டுண்ணா நீங்க! மகாலெட்சுமி, பாளையத்து அம்மன், ராஜ ராஜேஸ்வரின்னுகிட்டு. சைட்டடிக்க சொன்னா சாமி கும்பிட்டுகிட்டு!”

“போடா டேய்! எனக்கு மனசுல எப்படி தோணுதோ அப்படிதானேடா சைட்டு வரும். இந்த காலத்து சின்ன பசங்களாம் ரொம்ப ஓவரா போறிங்கடா! சைட்டடிக்கறேன்னு கண்ணாலயே ரேப் பண்ணறீங்கடா பாழா போனவனுங்களா! நாங்களாம் சைட்டுல கூட கற்போட இருப்போம்டா. உங்கள மாதிரி நேரா உத்து உத்துப் பார்க்காம ஓரக்கண்ணால ஆசையா பார்ப்போம்டா. எங்க சைட்டுலாம் முகத்தோட நின்னுறும். கழுத்துக்கு கீழ இறங்காது. நாங்களாச்சும் நல்லவனுங்களா இருக்கவும் தான் இன்னும் தமிழ்நாட்டுல மழை பெய்யுதுடா என் வெண்ட்ரு”

“போங்கண்ணா! இன்னும் பழைய பஞ்சாங்கமாவே இருங்க. அதான் உங்க ஜெனரேஷன்கு இன்னும் பொண்ணு செட் ஆக மாட்டுது”

“நம்ம சண்டைய அப்புறம் வச்சிக்கலாம்டா! டேய் அந்த கிளி பச்சை சேலையை சேல்ஸ் கேர்ல் வச்சு கட்டிக் காட்ட சொல்லுடா. ப்ளிஸ் போடா. எப்படியாவது பேசி சம்மதிக்க வைடா”

“அண்ணா, வர வர உங்க தொல்லை தாங்க முடியாம போய்ட்டு இருக்கு. கூடிய விரைவுல நான் ரிசைன் பண்ண வேண்டி வரும்னு நினைக்றேன்”

“போடா, இது பெரிய சுந்தர் பிச்சை செய்யற வேலை. இதுக்கு ரிசைன் ஒன்னுதான் கேடு. நானே எங்கப்பன் கிட்ட பிச்சை எடுத்து அதுல கொஞ்சம் உனக்கு போடறேன்.”

“சரி, சரி. நம்ம நிலமையை இப்படி பப்ளிக்கா சொல்லக் கூடாது. கெத்த மெய்ண்டேய்ன் பண்ணுங்க” என சொல்லியவாறே மெய் லிங்கை நெருங்கினான்.

ஜம்பு ஆசைப்பட்ட கிளிப்பச்சை சேலையை ஆஹா ஓஹோவென புகழ்ந்து கடைப்பெண்ணை வைத்து சுடி பேண்ட் மேலேயே கட்டி விட சொன்னான் மங்கி. புது வித அனுபவமாக இருக்கவும் மெய் லிங்கும் ஆசையாகக் கட்டிக் கொண்டாள். கண்ணாடியின் முன் நின்று முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்து தன்னையே ரசித்துப் பார்த்தாள். அதே கண்ணாடி வழி தெரிந்த ஜம்புவின் பிம்பத்தைப் பார்த்து மூச்சடைத்தது அவளுக்கு. தெய்வத்தை நேரில் பார்க்கும் பக்தன் போல மெய் மறந்து வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான் அவளை. இருவரின் பார்வையும் அந்த கண்ணாடி வழி மோதிக் கொண்டது. அவன் சட்டென பார்வையைத் திருப்பிக் கொள்ள, அவளோ அவசரமாக சேலையைக் கழட்டினாள்.

அவள் அந்த சேலையை வாங்காவிட்டால், தானாவது வாங்கி அவளின் ஞாபகமாக வைத்துக் கொள்ளலாம் என அவன் நினைத்திருக்க, அவளோ அதை கீழேயே வைக்காமல் அப்பொழுதே பணம் செலுத்தி வாங்கிக் கொண்டாள்.

error: Content is protected !!