KS 9

காதல் சன்யாசி 9

உறவினர், நண்பர்கள், சொந்த பந்தங்கள் என அந்த குட்டி அரண்மனை போலிருந்த திருமண மண்டபம் மகிழ்ச்சி கூச்சலில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

இன்று, ராகுல் கிருஷ்ணன், நிவேதா திருமண வரவேற்பு, கோலாகலமாய் பிரம்மாண்டமாய் நடைப்பெற்று கொண்டிருந்தது.

ராகுல், கோர்ட்டும் ஷூட்டுமாக ராஜ களையோடு தன் வசீகர புன்னகை முகம் முழுவதும் பரவ, மேடையில் நின்றிருந்தான்.

இரவு வானில் உலவி கொண்டிருந்த வெண்ணிலவு மேக திரையை அவசரமாய் விலக்கி, கண்களை கசக்கி துடைத்துக் கொண்டு பார்த்தது, அந்த பேரழகு மங்கை யாரென்று!

அத்தனை புதுமை புனைந்த புது மலராய் தன் காதலனோடு புது வாழ்வு புகும் பூரிப்போடு, ராகுலின் அருகில் நின்றிருந்தாள் நிவேதா.

அந்த பேரழகு தேவதை அவனுக்கு உரியவள் என்பதை அறிந்து, வாட்டத்துடன் மறுபடி மேக கம்பளிக்குள் முகம் மறைத்துக் கொண்டான் சந்திரன்.

மற்றொரு புறம், இனிமையான இன்னிசை கச்சேரி ஒலித்திருக்க, தடபுடலாக விருந்தும் நடைபெற்று கொண்டிருந்தது. அங்கு கூடியிருந்த அனைவரது முகமும் மகிழ்ச்சியிலும் வியப்பிலும் மலர்ந்து இருந்தன.

இருவரை தவிர.

நிவேதாவின் அம்மா சாருமதி, இந்த திருமணத்தை முழு மனதோடு ஏற்று கொள்ள முடியாமல் பொருமிக் கொண்டிருந்தாள்.

ராகுல் கிருஷ்ணனின் அம்மா பார்வதி, நடந்தேறும் இந்த திருமணம் தன் மகன் வாழ்வில் இன்பம், துன்பம் என்ன விளைவை தருமோ? என்பதை உணர முடியாமல் பரிதவித்து கொண்டிருந்தார்.

ராகுல் உரிமையாய் மாலை மறைவில் தன் காதலியின் கை பற்றி, “நேத்து தான் உன்ன முதல் முதலா பார்த்த மாதிரி இருக்கு. நாளைக்கு நம்ம கல்யாணம்! என்னால நம்பவே முடியல நிவி. எல்லாமே கனவு போல இருக்கு” ராகுல் அவள் காதருகில் உணர்ச்சி பெருக்கில் கிசுகிசுத்தான்.

“இந்த அழகான கனவு நம்ம வாழ்நாள் பூரா தொடரணும் கிருஷ். எப்பவும் நீ எனக்கே எனக்காக மட்டுமே இருக்கணும்” நிவேதா தன் காதல்காரனை உரிமை பாராட்டினாள்.

மென்மையாய் புன்னகை சிந்தியவன்,
“அப்ப, நீ என்னை உன் இதய சிறைக்குள்ள பூட்டி வச்சுக்க! உன் கையோடு சேர்த்து என்னை கட்டி வச்சுக்க! உன் உதட்டோட சேர்த்து ஒட்டி வச்சுக்க!” அந்த சைவ காதலனின் வார்த்தைகளிலும் பார்வையிலும், உரிமை உணர்வில் இன்று அசைவ வாடை வீசத் தான் செய்தது.

நிவேதா மேடையில் அத்தனை பேருக்கும் மத்தியில், தன்னுள் மொட்டவிழ்ந்து கொண்டிருக்கும் வெட்கத்தினை மறைக்க படாதபாடு பட்டு போனாள்.

ராகுல் அவளின் திணரலை ஓர கண்ணால் ரசித்து, யாரும் பார்க்காத வண்ணம் அவளுக்கு மட்டும் கண்ணடித்து குறும்பு செய்ய,
அந்த கள்வனின் கள்ள பார்வையில் பாவம் அந்த பாவை கரைந்து கொண்டிருந்தாள்.

“கிருஷ்”

“ம்ம்”

“நம்ம கல்யாணத்துக்கு இன்னும் பத்த்த்து மணி நேரம் இருக்கு டா” என்று வெதும்பினாள் அவள்.

“ம்ம் அதுக்கப்புறம், வாழ்நாள் முழுக்க நீ எங்கூட” ராகுல் நெகிழ்ச்சியாக சொல்லி தன்னவளின் கையை அழுந்த பற்றி கொண்டான்.

“போதும் டா, ரொம்ப வழியுது துடைச்சிக்க” என்று அவன் கண் முன் கைக்குட்டை நீட்ட பட, ராகுல் திரும்பி பார்த்தான்.

அங்கே கேலி சிரிப்போடு மகேஷ் நின்றிருக்க, “லேட்டா வந்ததும் இல்லாம, என்னை கிண்டல் வேற செய்யறியா டா” என்று ராகுல் கடுப்பானான்.

“விடு ராகுல், நம்ம ஃபிரண்ட்ஸ் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து உன் கல்யாணத்துக்கு வரணும்னு நினைச்சோம். அதான் கொஞ்சம் தாமதமாயிடுச்சு” என்று வெற்றி சமாதானம் சொல்ல, ராகுலின் முன்பு அவன் கல்லூரி நண்பர்கள் கூடி நின்றனர்.

ராகுல் உற்சாகமாய் அனைவரிடமும் நலம் விசாரித்து, நிவேதாவை அறிமுகம் செய்து வைத்தான்.

“எங்களை பத்தி ஒரு வார்த்தையாவது இவன் உங்ககிட்ட சொல்லி இருக்கானா? இல்லையா?” வைசாலி நிவேதாவிடம் கேட்க,

“ம்ம் நிறையவே சொல்லி இருக்கார்” என்று நிவேதா புன்னகைத்தாள்.

“நீங்க வைசாலி தான, இவர் மகேஷ், வெற்றி, தேவா, ப்ரியா”
என ஒவ்வொருவராய் சுட்டி பெயருடன் சொல்ல, நண்பர்கள் அனைவரும் உற்சாகமாயினர்.

பிரியாவின் அருகில் நின்றவனை மட்டும் அடையாளம் காண முடியாமல் நிவேதா தயங்க, “இவர் வினய். என்னோட கணவர்” என்று ப்ரியா அறிமுகம் செய்து வைத்தாள்.

“பரவால்ல டா, எங்க ஃபோட்டோ எல்லாம் காட்டி, எங்கள பத்தி சொல்லியிருக்க போல. தப்பிச்சிட்ட” என தேவா, ராகுல் தோளை தட்ட, அவன் பொய்யாய் முறைத்து வைத்தான்.

இருவருக்கும் திருமண வாழ்த்து சொல்லி, நண்பர்கள் பரிசளித்து, பெரிய கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மகேஷ் நினைவு வந்தவனாய், “டேய் ராகுல், தமிழ் எங்க டா?” என்று கேட்க,

அவன் எங்கே என்று யோசிக்க
பதில் நிவேதாவிடம் இருந்து வந்தது.

“யாருக்கும் எந்த குறையும் இருக்க கூடாது”

“எஸ் மேம், நீங்க சொன்ன எல்லா ஏற்பாட்டையும் முடிச்சிட்டேன் மேம்”

“முகூர்த்த மணமேடை அலங்காரம்?”

“ரிஷப்ஷன் முடிஞ்சதும் அவங்க வந்திடுவாங்க மேம்”

சாருமதி குறையாத அதிகார தோரணையில் வினவ, தமிழ்ச்செல்வியின் பதில் அடக்கமாய் வந்தது.

“எல்லாத்தையும் பக்கத்தில இருந்து கவனமா செய்யணும். ஏதாவது சின்ன தப்பு வந்தாலும் நான் மனுசியா இருக்க மாட்டேன்.” சாருமதி எச்சரிக்கும் விதமாய் ஆணையிட்டு நகர்ந்தாள்.

தமிழ் ஆழ மூச்செடுத்து, தன் குறிப்பேட்டில் அடுத்து செய்ய வேண்டிய வேலை என்னவென்று திருப்பி பார்க்க,

“தமிழ்” தேவாவின் அழைப்பு குரல் கேட்டு, மயிர் கூச்சமடைந்தவளாய் சட்டென திரும்பினாள்.

கண் எதிரில் அவளது நண்பர்கள் கூட்டம்!

பிரியாவும் வைசாலியும் ஓடி வந்து தமிழ்ச்செல்வியை ஆரத் தழுவிக் கொள்ள, அவர்கள் மனம் நெகிழ்ந்து போனது.

“எங்க தமிழா இது?”
மகேஷ் நம்ப முடியாமல் கேட்க,

“டேய், மகேஷ், என்ன முன்ன விட சதை போட்டிருக்க போல?” என்று தமிழ்ச்செல்வியும் புருவத்தை உயர்த்தி காட்ட, அவன் ஆமோதிப்பாக அவளை பார்த்து புன்னகைக்க முயன்றான்.

“ஏன் தமிழ் இப்படி பண்ண? எங்களால உன்ன இப்படி பார்க்க முடியல தமிழ்” தேவாவின் கண்கள் கலங்கின.

“ஓவர் சென்டி உடம்புக்கு ஆகாது தேவ். இப்பவும் நான் நல்லா தான் டா இருக்கேன்” என்று தமிழ் இயல்பாய் முறுவளித்தாள்.

“ஒரேயொரு ஃபோன் பண்ணி இருந்தா, அட்லீஸ்ட் ஆறுதல் சொல்லவாவது நாங்க வந்திருப்போம் இல்ல. உனக்கு அதுகூட தோணாம போச்சில்ல தமிழ்” வெற்றி ஆற்றாமல் கேட்டு விட்டான்.

அவள் நெருடலோடு பார்வை தாழ்த்தினாள்.

“தப்பு தான், சாரி டா” என்று மன்னிப்பு கேட்கவும் செய்தாள்.

“உன் நிலைமை தெரியாம உன் ஞாபகம் வரும் போதெல்லாம் ஆத்திரத்தில உன்ன திட்டி தீர்த்திட்டோம்.நாங்க தான் உன்கிட்ட சாரி கேக்கணும் டி” என்று ப்ரியாவும் வைசாலியும் காதைப் பிடித்தபடி கேட்க, தமிழ்ச்செல்வி வாய்விட்டு சிரித்து விட்டாள்.

இத்தனை நாட்களுக்கு பிறகும் தன்னை மறவாமல் நட்பு பாராட்டும் தன் நண்பர்களை எண்ணி அவள் நெகிழ்ந்து போயிருந்தாள்.

“ஏய், ரொம்ப நாளைக்கு அப்புறம் நாம ஒண்ணா சேர்ந்து இருக்கோம். அழுகாச்சி டிராமா எல்லாம் வேணாமே ஓகே” வெற்றி சமாதானம் சொல்ல அனைவரும் ஆமோதித்து தலையசைத்தனர்.

பேசி பேசி தீராத பேச்சுக்களை அவர்கள் பேசலாயினர்.

கொஞ்சம் விசாரிப்பு, நிறைய பேச்சு, கலாட்டா, கால்வாரல் என,
நிகழ்காலத்தை மறந்து, கல்லூரி பொழுதுகளை அலச தொடங்கியது அந்த தோழமை கூட்டம்.

பார்வதியின் களையிழந்த முகத்தை கவனித்து ராகுல் சஞ்சலமானான்.

“டேய் வெற்றி, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுடா” ராகுல் கேட்க,

“அதான் உன் காதல் கல்யாணம் வரைக்கும் வந்திடுச்சே. இனிமே நாங்க உதவி செய்ய என்னடா இருக்கு?” வெற்றி அவனை கலாய்க்க,

“ப்ச் அம்மாவ பாருடா, முகம் வாடி‌ இருக்காங்க. அவங்கள கொஞ்சம் சமாதான படுத்துங்க டா. எனக்கு அதுவே போதும்” ராகுல் சங்கடமாய் சொன்னான்.

“கவலைய விடு மச்சி. அம்மாவ நாங்க பார்த்துக்கிறோம்” என்று வெற்றி தோரணையாக சொல்லிவிட்டு தன் சகாக்களோடு பார்வதியை சூழ்ந்து கொண்டான்.

சிறிது நேரத்திற்கு பிறகு, பார்வதியால் எதை பற்றியும் சிந்திக்க முடியவில்லை. அவர்களின் பேச்சிலும் செய்யும் கலாட்டாவிலும் அவரால் முந்தி வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.

அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்த பின்பு தான் ராகுலின் மனதிற்கு நிறைவாய் இருந்தது.

அந்த இளவட்டங்களின் அலப்பறையை கவனித்த சாருமதி, யோசனையுடன் நிவேதாவின் அருகில் வந்து விசாரித்தாள்.

“அவங்க ராகுலோட ஃபிரண்ட்ஸ் மாம்” என்று நிவேதா பதில் தர,

“ராகுல் ஃபிரண்ட்ஸ் கூட உன் பிஏ க்கு என்ன வேலை?” சாருமதியின் கேள்வி சந்தேகமாக வந்தது.

“தமிழ்ச்செல்வி கூட தான். இவங்க எல்லாரும் காலேஜ் மெட் மாம்” நிவேதா தெளிவாய் சொல்ல, சாருமதி புரிந்தவளாய் தலையசைத்தாள்.

அன்றைய இரவு நிகழ்ச்சிகள் ஆட்டமும் பாட்டமும் ஆக கோலாகலமாய் முடிவு பெற்றன.

ராகுல் கிருஷ்ணன் தனக்கான அறையில் உடைமாற்றிக் கொண்டு கட்டிலில் சரிந்தான். புரண்டு புரண்டு படுத்தும் அவனுக்கு உறக்கம் மட்டும் வருவதாய் இல்லை.

கைப்பேசி எடுத்து எண்களை தட்டினான். சிறிது நேரத்திற்கு பிறகே மறுமுனையில் பதில் வந்தது.

“ஹலோ”

நிவேதாவின் மென் குரல் ரகசியமாய் ஒலித்தது.

“தூங்கிட்டியா நிவி, டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?”

“இல்ல கிருஷ், மாம் கூட தான் பேசிட்டு இருந்தேன். என்ன சொல்லு”

“உன்ன பார்க்கணும் போல இருக்கு நிவி”

“இவ்வளவு நேரம் உன் பக்கத்தில தான இருந்தேன்”

“ம்ம் ஆனா, அப்ப நம்ம சுத்தி நிறைய பேர் இருந்தாங்களே”

“இப்ப உனக்கு என்ன தான் டா வேணும்?”

“ஒரேயொரு சின்ன… சைவ முத்தம்!”

“என்ன? இப்பவா? என்னால முடியாது போடா”

“ப்ளீஸ் பேபி”

“இன்னைக்கு மட்டும் பொறுத்துக்க டா. நாளைக்கு எல்லாமே உனக்கு கிடைக்கும்”

“ம்ஹூம் நாளைக்கு தான் நீ என் மனைவி ஆயிடுவியே!”

“அதுக்கு?”

“என்னோட காதலியா, கடைசியா ஒரேயொரு முத்தம். என் வாழ்நாள் முழுக்க நெஞ்சில பதிஞ்சு இருக்கிற மாதிரி வேணும்” ராகுல் உரிமையோடு கேட்க,

நிவேதா பேச்சிழந்து போனாள். அவன் தன் மீது கொண்ட காதல் களிப்பில்.

“இப்ப, நீ வெளியே வரீயா? இல்ல, நான் உள்ள வரவா?” ராகுல் முடிவாக கேட்க,

“அச்சோ கிருஷ், இங்க வர வேணாம். ம்ம் மாடியில வெய்ட் பண்ணு, நான் வரேன்” என்று நிவேதா மறுக்க முடியாமல் சொல்லிவிட்டு, மெதுவாய் எழுந்து அறையை விட்டு வெளியே வந்தாள்.

அவனும் துள்ளும் மனதோடு மாடி நோக்கி விரைந்தான்.

பருவ வயதில் காதலென்பது கண்மூடி தனமான விளையாட்டு! அதில் சரி, தவறு என்ற பேதமில்லை! அது காலம், நேரம் பார்ப்பதில்லை!

உண்மையில் காதலும் ஒருவித தவம் தான்! வார்த்தைகளில் விவரிக்க முடியாத புனிதமான உணர்வு அது!

அதில், அறிவு பேதலித்து உள்ளத்து உணர்ச்சிகள் மட்டுமே மேலோங்கி நிற்கின்றன.

# # #

காதல்காரன் வருவான்…