KKE-EPI 9

KKE-EPI 9

அத்தியாயம் 9

திருவண்ணாமலையிலுள்ள மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். சைவர்களின் நம்பிக்கைப் படி இம்மலையானது கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், தற்போது நடைபெறும் கலி யுகத்தில் கல் மலையாகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

 

 

காலையில் சொன்ன நேரத்துக்கெல்லாம் செக் அவுட் செய்து விட்டு எல்லோரும் வேனுக்கு வந்து சேர்ந்தார்கள். ஜம்புவின் கண்கள் மெய் லிங்கை அந்த அரையிருட்டில் தேட, அவளோ ராணியின் பின்னால் ஒளிந்தவாறு நின்றிருந்தாள். எல்லோரும் ஏறி அமர்ந்ததும், எப்பொழுதும் போல அவளின் தரிசனத்துக்காக ரியர் வியூ கண்ணாடியைப் பார்த்தவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

வேனில் ஏறியதும் அவனுக்கு எப்பொழுதும் காலை வணக்கம் சொல்லி அவனுக்குப் பின்னால் அமர்பவள், இன்று வேனின் கடைசி இருக்கையில் இருந்தாள்.

‘என்னமோ நான் கையைப் பிடிச்சு இழுத்துட்ட மாதிரி என்ன கோபம் இவளுக்கு? என்னைப் பார்க்க பிடிக்காம பின்னால போய் உட்கார்ந்துருக்கா ராட்சசி’

“என்னண்ணா உங்க சமூ பின்னாடி போயிருச்சு? குட் மார்னிங்னு காலையில குயில் கூவும். இன்னிக்கு ஒன்னையும் காணோம்! லடாயா?” என கேட்டான் மங்கி.

“லடாயும் இல்ல கடாயும் இல்ல! உன் தூங்கற வேலையப் பாருடா!” எரிந்து விழுந்தான் ஜம்பு.

“விடுகதையா இந்த வாழ்க்கை, விடை தருவார் யாரோ” என பாடியபடியே கண்ணை மூடிக் கொண்டான் மங்கி.

கோபம் வந்தாலும் நிதானம் தவறாமல் பார்த்து பதமாகவே வேனை செலுத்தினான் ஜம்பு. சுற்றி பார்க்க வந்தவர்கள் உயிர் எல்லாம் அவன் கையில் அல்லவா!’

அவர்களின் நிகழ்ச்சி நிரலின் படி, திருவண்ணாமலையை குறித்த நேரத்தில் சென்றடைந்தார்கள். சக்தியும் சிவனும் ஒன்றே என உலகுக்கு உணர்த்திய அண்ணாமலையார் அவர்களை அன்புடன் வரவேற்றார். அப்பெரிய கோயிலையும் அதன் பிண்ணனியில் தெரிந்த மலையையும் வாய் பிளக்க நிமிர்ந்துப் பார்த்தாள் மெய் லிங். ஏழு பரிகாரங்களையும், ஒன்பது கோபுரங்களையும், நாற்பதுக்கும் மேற்பட்ட சன்னதிகளையும் சுற்றி வந்தவள், கேள்விகளால் மங்கியைத் துளைத்தெடுத்தாள். உச்சிகால பூஜையில் கலந்துக் கொண்டவர்கள் திருப்தியாக அண்ணாமலையானை தரிசித்தார்கள். கிடைத்த சந்தர்ப்பங்களில் அவளை நெருங்கிப் பேச முயன்ற ஜம்புவுக்கு தோல்வி தான் கிட்டியது. அவனின் புறம் பார்வையைத் திருப்பாதது மட்டுமின்றி யாராவது ஒருவருடன் ஒட்டியபடியே சுற்றினாள் மெய் லிங்.

பூஜை முடித்து மதிய உணவுக்கு சென்றார்கள். அவர்களை உள்ளுக்கு அனுப்பியவன், வேனுக்குள்ளே அமர்ந்துக் கொண்டான். சாப்பிடாமல் அவன் அமர்ந்திருப்பதை ஓரக்கண்ணால் பார்த்தபடியே ராணியுடன் சாப்பிட நுழைந்தாள் மெய் லிங்.

மங்கியின் அருகில் அமர்ந்தவள்,

“வை ஜம்ப் இஸ் நாட் ஈட்டிங்?” என கேட்டாள்.

ஜம்புவுக்கு வயிறு சரியில்லை என அவன் சொல்லியிருந்த காரணத்தை அப்படியே இவளிடம் சொன்னான் மங்கி. இவர்கள் இருவருக்கும் நடந்த உள்நாட்டுப் பூசல் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

அவளுக்கு வயிறு சரியில்லாத சமயங்களில் இலகு உணவுகளாய் ஆர்டர் செய்ய கற்றுத் தந்திருந்தான் ஜம்பு. அதுவும் மங்கியின் வழியாக தான். மற்றவர்கள் முன்னால் முடிந்த அளவுக்கு நேராக பேச மாட்டான் ஜம்பு. ராணி இவளிடம் எச்சரித்தது தெரிந்துதான் தள்ளி நின்று பழகுகிறான் என அவன் சொல்லியிருந்ததால் அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

தயிர் சாதம் பாக்கேட் வாங்கியவள் மங்கியிடம் நீட்டினாள்.

“கோ கிவ் ஹிம்! டோண்ட் டெல் ஐ கிவ்” என சொல்லித்தான் அனுப்பினாள்.

மங்கியோ சாதத்தை அவனிடம் நீட்டி,

“ண்ணா! நடத்துங்க, நடத்துங்க! உங்க சமூ நீங்க பட்டினியா இருக்கறத பார்க்க முடியாம தவிச்சுப் போய் சாதம் வாங்கிக் குடுத்துருக்கு. எஞ்சோய்” என சிரித்தவன்,

“சிவப்பான ஆண்கள் இங்கே சில கோடி உண்டு

கறுப்பான எங்கண்ணனைக் கண்டு கண் வைத்ததென்ன” என பாடி விசிலடித்துக் கொண்டே ஜம்புவின் பக்கத்தில் அமர்ந்தான்.

இவ்வளவு நேரம் சோக கீதம் வாசித்த ஜம்புவின் இதயம், பட்டென குத்து பாடல் மோடுக்கு மாறியது. பிளாஸ்டிக் ஸ்பூன் கொண்டு ஆசையாக அள்ளி விழுங்கினான் தயிர் சாதத்தை. தன் அம்மா சமைத்த சாப்பாட்டிற்கு பிறகு இந்த சாதமே அமுதென சுவைப்பதாக தோன்றியது அவனுக்கு.

சாப்பிடுபவனை கண்டும் காணாமல் வந்து வேனில் ஏறி பின்னால் சீட்டுக்குப் போனாள் மெய் லிங். காதில் இயர் போனை மாட்டிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள். அவன் சாப்பிட்டு முடித்ததும் வேன் கிளம்பியது.

“அண்ணே, இப்போ போற இடத்துல எல்லாரும் சுத்து பாத்துட்டு நைட் ஹோட்டலுக்குப் போனதும் எனக்கு லீவ் வேணும்”

“கிடையவே கிடையாது!”

“ப்ளீஸ் ண்ணா! சின்னப்பையன் ஆசையை நிறைவேத்தி வைங்க. சொர்க்கப்புரிக்குப் போயிட்டு சோமபானம் அருந்தாட்டி எப்படிண்ணா?”

“டேய் அடங்குடா! லேடிசா வந்துருக்காங்க இந்த தடவை. கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமா இருக்கனும்”

“அதுக்குத்தான் அவங்களாம் செட்டில் ஆனதும் போகறதுக்கு கேக்கறேன். மனசு வைங்கண்ணா”

“குடி குடிய கெடுக்கும். குடிக்கறவன் குமரிய கெடுப்பான். அதனால இந்த வேலைலாம் வேணாண்டா மங்கி.”

“ஹ்கும். இந்த தடவை வந்துருக்கிற பேட்ச்சுக்கு நீங்க சொன்ன புது மொழிலாம் செட் ஆகாது. எல்லோரும் பாதி கிழவிஸ். ஒன்னே ஒன்னு குளுகுளுன்னு இருக்கு. அதையும் நீங்க ஆட்டைய போட்டு எனக்கு அண்ணியாக்கிட்டீங்க”

“என்னடா ஆட்டைய போட்டுட்டேன் அப்படி இப்படின்னு பேசற! கொஞ்சம் கூட மரியாதை இல்ல. எங்களுக்குள்ள ஒன்னும் இல்லடா டேய். அவ என்னை ப்ரேண்டா தான் பார்க்கறா” மெதுவான குரலில் இருவரும் பேசிக் கொண்டே வந்தார்கள்.

“ஆனா நீங்க அதுக்கும் மேல போயிட்டீங்க போலண்ணா! ஹ்ம்ம். மனச கல்லு மாதிரி வச்சிக்கிங்க. எப்படியும் இந்த காதல் பூட்ட கேசுதான். சமூ கிளம்பனதும் தாடி வளர்த்துகிட்டு ‘என் ஜீவன் பாடுது, உன்னைத்தான் தேடுதுனு’ பாடிட்டு திரியாம அம்மா காட்டற பொண்ண கட்டிக்கிட்டு செட்டில் ஆகுங்க.”

“முடியாதுடா!”

“பைத்தியம் முத்திருச்சு! அண்ணா, இதுக்கு எதிர்காலம் இல்லைன்னு தெரிஞ்சும் ஏண்ணா? அவங்க சிங்கப்பூர்காரங்கண்ணா. நல்லா படிச்சிருக்காங்க, அழகா இருக்காங்க, கிறிஸ்டியன் வேற. அதோட மிக முக்கியமானது அவங்க சீனா வம்சாவளி. மாடு சாப்பிடுவாங்க, பன்னி சாப்பிடுவாங்க, தண்ணீ அடிப்பாங்க, ஏன் சிகரேட் கூட ஊதுவாங்க. அப்படியே உங்கள பிடிச்சிருக்குன்னு சொன்னாலும், கல்யாணம் பண்ணிக்குவாங்களா? அவங்க ஊருல அதுவும் இவங்க கலாச்சாரத்துல கல்யாணம் ஆகாம சேர்ந்து வாழறது எல்லாம் சர்வ சாதாரணம்ண்ணா! நம்ம கல்ச்சருக்கு ஒத்து வருமா இதெல்லாம்? உங்க அம்மா உங்கள வெளக்காமாரு தேய தேய அடிப்பாங்கண்ணா! அப்பா அதுக்கும் ஒரு படி மேல போய், மறுபடியும் வீட்ட விட்டுத் துரத்திடுவாரு. பார்த்தமா, சைட் அடிச்சமா பை சொன்னம்மான்னு இருக்கனும்ண்ணா! என்னோட பெரியவரு நீங்க, நான் என்னத்த அட்வைஸ் செய்யறது!”

என்ன அட்வைஸ் செய்வது என சொல்லிக்கொண்டே நிதர்சன உண்மையைப் புரிய வைத்தான் மங்கி. பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்ட ஜம்பு,

“எனக்கு மட்டும் இதெல்லாம் புரியலன்னு நினைக்கறியாடா? மனசோட போராடி பார்த்துட்டேண்டா! இது வேணாம், சரிப்படாதுன்னு. ஆனா மண்டைக்குப் புரிஞ்சது பாழா போன மனசுக்குப் புரியலடா. அவதான் வேணும்னு அடம் புடிக்குது. பார்த்த சில நாட்களுக்குள்ள மனசுல ஆணி அடிச்சு உக்காந்துட்டாடா மங்கி.”

“கலர பாத்து கவுந்துட்டீங்கண்ணா நீங்க”

“இல்லடா இல்ல! நம்ம ஊருல வெள்ளையா பொண்ணுங்க இல்லையாடா? இல்ல இவளோட வெள்ளைக்காரிங்கள எல்லாம் நாம பார்த்தது இல்லையா? என்னமோ ஒன்னு, இல்லடா பல விஷயம் இவ கிட்ட காந்தம் போல என்னை இழுக்குதுடா”

“பொழுது போகட்டும், சொல்லுங்க கேக்கலாம்! என்ன இழுக்குது உங்கள? அழகு இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க!”

மெல்ல புன்னகைத்தவன்,

“முதல்ல பார்க்க வச்சது அவ அழகுதான்டா. பொம்மை மாதிரி இருக்காளேன்னு ஒரு பிரமிப்பு. அதுதான் அவள உண்ணிச்சுப் பார்க்க வைச்சது. ஆனா புறத்தோற்றம் மட்டுமே அழகா இருந்திருந்தா, இன்னேரம் அவ எனக்கு ப்ரெண்டா மட்டும்தான் இருந்துருப்பா. என் மனசுக்குள்ள மகாராணியா வந்துருக்க மாட்டாடா மங்கி.”

“எனக்கு அழக தவிர வேற ஒன்னும் தெரியலையே!”

ரியர் வியூ கண்ணாடியை நன்றாக அட்ஜஸ்ட் செய்து ஆக பின்னால் உட்கார்ந்திருக்கும் அவளை நோக்கினான் ஜம்பு. தூக்கக் கலக்கத்தில் சீட்டில் சரிந்து விழுந்துக் கொண்டிருந்தாள் அவன் சமூ. முகத்தில் புன்னகை தவழ மங்கியிடம் தன் காதலைப் பகிர்ந்துக் கொண்டான் ஜம்பு.

“என் சமூக்கு முகம் மட்டும் இல்லடா மனசும் அழகுதான். நம்ம கூட பயணம் செய்யற எல்லார் கூடயும் சிரிச்ச முகமாத்தான் பேசுவா. அவளால முடிஞ்ச அளவுக்கு, சின்ன சின்ன உதவிங்கள செய்வாடா! எதுக்கும் முகத்த சுளிச்சுக்கவே மாட்டா. இதுல பல பேரு, உன்னையும் என்னையும் மனுஷனா நினைச்சுக் கூட பேசறது இல்ல. நம்ம பணத்துக்கு கைடா வந்தவங்கத்தானேன்னு ஒரு அலட்சியம். ஆனா எப்பவாவது உன்னையோ, என்னையோ அவ மரியாதை இல்லாம பேசி இருக்காளாடா?”

“இல்லைண்ணா! ரொம்ப ப்ரெண்டிலியாத்தான் பேசுவாங்க. எனக்கு சாப்பிட கூட எதாச்சும் வாங்கி தந்துட்டு தான் இருப்பாங்க”

“ஆமாடா! அவளுக்குன்னு சில கொள்கைகள் இருக்கு. அதுல அவ உறுதியாத்தான் இருக்கா. ராணி மேடம் என் கிட்ட ரொம்ப வச்சுக்க வேணாம்னு சொல்லியும், என் ப்ரேண்ட் நான் பேசுவேன்னு அடிச்சு சொன்னா. அதோட சுயமரியாதை ரொம்படா அவளுக்கு. ஒருத்தங்க கிட்ட இருந்து எதையும் ஃப்ரீயா வாங்கிக்க மாட்டா. ஜிப்பா வாங்கி குடுத்தது மட்டும் இல்லாம, ஹாஸ்பிட்டல் பணத்தையும் பிடிவாதமா திருப்பிக் குடுத்தா. மகாபலிபுரம் போனப்போ ஜோசியம் பார்க்கிறேன்னு பலரும் சூழ்ந்துகிட்டாலும், ரொம்ப மரியாதையா வேணாம்னு சொன்னாலே தவிர, யாரையும் புழு மாதிரி பார்க்கல. பிச்சைக்காரப் பொண்ணு ஒருத்திக்கு காசு போட போனப்போ, மத்த பிச்சைக்காரங்களும் அவள சூழ்ந்துகிட்டாங்களே, அப்ப கூட பயந்தாளே தவிர முகம் சுளிக்கலடா. பர்ஸ எடுத்து எல்லோருக்கும் காசு போட்டுகிட்டே இருந்தா. நான் மட்டும் புடிச்சு இழுத்துட்டு வரலனா, மேடம் எல்லா காசையும் அங்கயே முடிச்சிருப்பாங்க” சொல்லிவிட்டு சிரித்தான்.

“அண்ணா, உங்க முகத்துல ஜொள்ளு ஊத்துதுணா”

“அது ஜொள்ளு இல்லைடா, கள்ளு”

“கள்ளா?”

“காதலும் ஜொள்ளும் கலத்து ஊத்தறதுக்குப் பேரு கள்ளுடா” மந்தகாசமாகப் புன்னகைத்தான் ஜம்பு.

“அட்ரா, அட்ரா” வாய்விட்டு சிரித்தான் மங்கி.

“மெல்ல சிரிடா. எல்லாம் தூங்குறாங்க!”

“அவளுக்கும் என்னைப் பிடிக்கும்டா மங்கி. பிடித்தம் இருக்கு, ஆனா காதல் இருக்கா தெரியலடா. காதல்னு மட்டும் தெரியட்டும், நீ மேல சொன்ன எந்த காரணமும் என்னைத் தடுக்கப் போறதில்லைடா! மதம், இனம், நாடு, சாப்பாடு, எங்கம்மா வெளக்கமாரு எல்லாம் இரண்டாம் பட்சம் தான் எனக்கு. அப்படியே அவளை என் பொண்டாட்டியா தூக்கிட்டு வந்துருவேன். சமூடா என் சமூ அவ. என் சீனா லட்டு” உணர்ச்சிகரமாக பேசினான் ஜம்பு.

“உங்க காதல் சக்சஸ் ஆகி வெள்ளையும் கருப்புமா புள்ளைங்க பொறக்க வாழ்த்துகள்ண்ணா” மனமார வாழ்த்தினான் மங்கி.

“நடக்கும்ன்ற?” நிராசையாக கேட்டான் ஜம்பு.

“உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லையென்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லைன்னு சுவாமி விவேகானந்தர் சொல்லி இருக்காருண்ணா. ஓய்வு கிடைக்கறப்பலாம் சமூக்கு நான் அடிமை, நான் அடிமை, நான் அடிமைன்னு சொல்லிட்டே இருங்க. கண்டிப்பா கல்யாணம் பண்ணிகிட்டு நீங்க அவங்களுக்கு அடிமை ஆகிருவீங்க”

“இது எந்த சுவாமி சொன்னதுடா?”

“ஹஹ, இது சுவாமி மங்கி சொன்னது”

வாய் விட்டு சிரித்தான் ஜம்பு. அவன் சிரிப்பு சத்தத்தில் கண் திறந்த மெய் லிங்குக்கு தன்னை மீறி உதட்டில் புன் முறுவல் பூத்தது.

error: Content is protected !!