MM 7

மாயவனின் மயிலிறகே

அத்தியாயம் 7

அபிஜித் அன்று வந்தவன் மீண்டும் மருத்துவமனை செல்லவில்லை. ஆனால் பாப்புவை பற்றிய தகவல் மட்டும் அறிந்து கொண்டான் உபயம் சஞ்சு. பி.ஏ. ரகு கூட என்னவாயிற்று இவருக்கு சில நாட்களாக மலர்ந்த பூவை போல சிரித்துக் கொண்டிருந்த முகம் மீண்டும் காய்ந்த சருகாய் வாடி வதங்கி தெரிகிறதே என எண்ணினான். அபிஜித்தின் மேல் தாக்குதல் நடந்ததோ அதில் ஒரு பெண் பாதிக்கப்பட்டதோ மருத்துவமனையில் உள்ள சிலரை தவிர எவருக்கும் தெரியாது.

அவன் எப்போதும் அமைதிதான் அழுத்தம்தான். ஆனால் இப்பொழுது இன்னும் ஆழ்ந்த அமைதி. விருப்ப பட்டதெல்லாம் விலகி போனால் இனி வாழ்க்கை எதற்காக. ஆனால் இம்முறை விலகி வந்தது இவன்தான் என்பதை மறந்தானோ?

அவனுடைய தாத்தாவும் பாட்டியுமான பார்த்தசாரதி புவனாம்பிகை தம்பதியினர் மறுநாள் காலை அரசு குடியிருப்புக்கு வந்து விட்டிருந்தனர். உடன் பொன்னம்மாவும்.

பாலின் தூய நிறத்தில் பேண்ட் சட்டை அணிந்தும், பட்டு சேலை சரசரக்க முடியை இழுத்து கொண்டையிட்டு பூ வைத்து கையில், காதில், கழுத்தில் வைரங்கள் விண்மீன்களாய் மின்ன உயர்ரக காரில் வந்திறங்கியவர்களை பார்த்த காவலாளி யாரென விசாரிக்க “என்னாயா இவங்கள பாத்து யாருண்ணு கேக்கற? இது மட்டும் என் குட்டிப்பாவுக்கு தெரிஞ்சது உன் வேலை அரோகரோதான்” என்றபடி முன்னால் வந்து நின்றார் பொன்னம்மா.

அவரை ஏற இறங்க பார்த்தவன் “என்னாமா கலாட்டா பன்றயா? இது கலெக்டர் வீடு உன் குட்டிப்பாவுக்கு இங்க என்ன வேலை. போங்க போங்க இடத்த காலி பண்ணுங்க” என கராராக கூறினார்.

“அடி ஆத்தாடி பார்றா இந்த போலீசுக்கு எவ்ளோ பெரிய வாய்” பொன்னம்மா ஆச்சர்யம் காட்ட

“ஷ்..பொண்ணு வந்ததும் ஆரம்பிச்சிட்டயா கொஞ்சம் அமைதியா இரு. அவருக்கு நாம யாருண்ணு தெரியல அதான் அப்படி பேசறார்.” என பார்த்தசாரதி அமைதியாக்க.

“ம்க்கும் இது கூட தெரியாம என்ன போலீஸோ”

பொன்னம்மாவின் கூற்றில் தலையை சொறிந்து கொண்ட அந்த காவலாளி தன்னை ஒரு முறை கீழே குனிந்து ஆராய்ந்து கொண்டார்.

பொன்னம்மாவின் அலட்டல்களை பார்த்துக் கொண்டிருந்த புவனாம்பிகை அலைஸ் புவனா “பொண்ணு அமைதியாயிரு .. ஏங்க தம்பிக்கு நாம வரது தெரியாதா ”

“சொல்லல புவனா இன்ப அதிர்சி கொடுக்கலான்னு பார்த்தேன்.. சொதப்பிடுச்சோ”

“நீங்க சொதப்புலனாதான் ஆச்சர்யம் தம்பிக்கு போன் போட்டு சொல்லுங்க”

“அதெல்லாம் இன்னேரம் போன் போயிருக்கும்” என்றவர் சற்று தள்ளி நகர்ந்திருந்த பொன்னம்மாவை சுட்டிக்காட்ட,

அவர் முகம் கொள்ளா சிரிப்புடன் போனில் பேசிக்கொண்டிருந்தார். பார்த்ததும் தெரிந்தது அவர் அபியுடன்தான் பேசுகிறார் என்று. அவர்கள் இருவருக்கும் இடையில் முதலாளி வேலைக்காரர் என்ற உறவு எப்போதும் இருந்ததில்லை.

சிறுவயதில் அவனுக்கு விளையாட்டு பொம்மை, பருவ வயதில் தோழி, மனம் சோர்ந்தால் தலைசாய்க்க மடிதரும் தாய், தவறு செய்து திருதிருவென முழித்து நிற்கும்போது குழந்தை என பல பரிமாணங்கள் எடுத்தவர் பொன்னம்மா. அபிஜித்திற்கு மட்டும் கோல்ட் மம்மி.

அவனிடம் பேசி வைத்த மறுநொடி காவலாளியின் போன் அடித்தது. கலெக்டர் என்றறிந்து “சார்” விரைப்பாக கூற, மறுமுனை என்ன கூறியதோ “எஸ் சார்.. நான் பாத்துக்கறேன் சார்” என பவ்யமாக கூறியவர்

பார்த்தசாரதியிடம் “சாரி சார் நீங்க யாருண்ணு தெரியாது.” என மன்னிப்பை வேண்டியவர் சிறிது நேரத்தில் அவர்களுடைய பெட்டிகளை உள்ளே எடுத்து செல்ல மூவரும் பின்தொடர்ந்தனர். வீட்டின் உள்ளே வந்து பெட்டிகளை அடுக்கியவர் “சார் இதெல்லாம் எங்க வைக்கனும்”

“இப்படியே வைப்பா ” என கூறிய பொன்னம்மா பெரியவர்கள் இருவருக்கும் தோதாக கீழே இருந்த அறையில் அவர்களது பெட்டியை கொண்டு சென்றார்.

இவர்கள் கலெக்டரின் தாத்தா பாட்டி, இவர் ஏதோ நெருங்கிய சொந்தம் போல என பொன்னம்மாவை எண்ணிக் கொண்டார் காவலாளி.

பெரியவர்கள் இருவரும் அங்கிருந்த மூவர் அமரக்கூடிய இருக்கையில் அமர்ந்து விட பொன்னம்மா “ஏம்பா இங்க மார்க்கெட், மளிகை கடை எங்க இருக்கு, பால் வாங்கறதெல்லாம் எப்படி” என விசாரித்துக்கொண்டார்.

அடுத்த அரை மணியில் சமையல் தயாராகியிருக்க சரியாக கலெக்டர் வாகனம் குடியிருப்பின் உள்ளே வந்தது. காவலாளி கதவை திறக்கும்,முன் திறந்து இறங்கியவன் நீங்க சாப்பிட்டு வாங்க என டிரைவரிடம் உரைத்து வேகமாக உள்ளே சென்றான்.

தாத்தா பாட்டி இருவரும் அவர்கள் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். வரவேற்பறையில் இருந்த பொன்னம்மா கார் சத்தம் கேட்டதும் அவசரமாக ஓடி சமையலறையில் ஒளிந்து கொண்டார்.

இது எப்போதும் நடப்பதுதான். காலடி சத்தம் அவரை நெருங்க கண்களை இருக்மாக மூடிக்கொண்டார். ஒரு விரல் அவர் தோளை சுரண்ட “இல்ல இல்ல நான் ஒத்துக்க மாட்டேன் நீ எப்படி கண்டுபுடிக்கற, காமரா எதாவது வச்சிருக்கியா என்ன” என கண்களை மூடிக்கொண்டே கேட்க,

“ஆமா ஜி பி எஸ் வச்சிருக்காங்க இவங்களுக்கு, ஒளிஞ்சுக்க வேற இடமே சிக்காது. வீடுதான் மாறுது இடம் மாறல. வாசம் வராத பூவா வச்சிருக்கனும், அதுவும் இல்லயா கண்ணாடி வளையல் கொஞ்சமா போட்டிருக்கனும் முக்கியமா கையை அசைக்காம வச்சிருக்கனும். இதுல இவங்கள கண்டுபுடிக்க கேமரா செட் பண்றாங்க” என பேசிக்கொண்டே தோளனைத்து சமையலறையில் இருந்து ஹால் வரை கூட்டி வந்திருந்தான்.

அவனை பாவமாக பார்த்தவர் இதுவரை இருந்த குறும்புத்தனம் செல்ல, “எப்படி இருக்க குட்டிப்பா சாப்பிடறயா இல்லயா! எப்படி இளைச்சுட்ட நானாவது உங்கூட வந்திருப்பேன் வேண்டான்னு சொல்லிட்ட” என அவனை தோளிலிருந்து தடவியவாறு குறை பட்டு கொண்டார். அவரை சமாதானபடுத்தியவன் தாத்தா பாட்டியின் அறைக்கு சென்றான்.

பாட்டி படுத்திருக்க தாத்தா கண்ணாடி அனிந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தார். கதவு திறக்கும் ஒலியில் திரும்பியவர் “வாடா கண்ணா”

.”எப்படி இருக்கீங்க யங் மேன்” பின்னிருந்து அவர் தோளில் தலை சாய்த்து கட்டிக் கொண்டான். “ஐ எம் ஃபைன் கண்ணா”

இவர்களின் சத்தத்தில் விழித்த பாட்டி எழுந்து அமர்ந்தார் “என்ன ஓல்ட் லேடி எப்படி இருக்கீங்க” என அவர் மடியில் தலைசாய்த்து அவரை கட்டிக் கொண்டான்.

“ஆமா அவரு யங் மேன், நாங்க ஓல்ட் லேடி” என கூறினாலும் முதியவரின் சுருக்கம் விழுந்த கை ஆதரவாக அவனை வருடியது. “எனக்கென்ன சாமி எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்கேன். ஒண்ணும் செய்ய முடியலங்கற ஆதங்கம்தான்.”

இதுபோல் ஒவ்வொரு முறை மகளை பார்க்க போய்வரும் போதும் புலம்புவதுதான். அதை கிடப்பில் போட்டவன் “வாங்க சாப்பிடலாம்” என அழைத்து சென்றான்.

பொன்னம்மா உணவு மேஜையில் அனைத்தையும் எடுத்து வைத்திருந்தார். இருவருக்கும் பரிமாறியவர் அபிக்கு அவரே ஊட்டி விட்டார். அதில் உடனே பாப்புவின் ஞாபகம் வந்தது.

என்ன செய்து கொண்டிருப்பாள், என்னை தேடியிருப்பாளா! இல்லை மறந்திருப்பாளா? ச்சே..ச்சே என் பாப்பு மறக்க மாட்டா என்னை. மறக்காம இருந்தா மட்டும் நீ பாக்க போய்டுவயா? அது என்ன என் பாப்பு. யாருமில்லாத பூந்தோட்டத்துக்கு நீ உரிமை கொண்டாடுவயா அபிஜித். இல்ல இல்ல நான் காவல் காக்கறவன் மட்டும்தான். காவல் காக்கறவன்தான் நாளைக்கு உரிமை கொண்டாடவும் நினைப்பான். அவளுக்கு நினைவு திரும்பினா உன்னை அடையாளம் தெரியாம கூட போகலாம். அதானால் தள்ளியே இரு. மறுபடியும் இன்னொரு வலி உன்னால தாங்க முடியுமா. நோ….” என மனதுக்கும் மூளைக்கும் சடுதியில் ஏற்பட்ட சண்டையில் தலை தானாக இடவலமாக ஆட

” பாக்கறது கலெக்டர் உத்தியோகம் ஆனா வீட்ல பாரு சின்ன குழந்தையாட்டம் அடம் தலையாட்டாம சாப்பிடு குட்டிப்பா”

அதில் கலைந்தவன் “ச்சே அதுக்குள்ள எங்கயோ போய்ட்டோம். இது கூடாது அபி. அவளை மற இல்லைனா உன்னை மறக்கடிச்சிடுவா”

“ஆமா நீ இன்னும் மடியில வச்சு தாலாட்டு. அவன் ஒரு கலெக்டர்ங்கறது உனக்கு ஞாபகம் இருக்கா” பாட்டி கேட்க,

“அட போங்கம்மா எனக்கு எப்பவும் ஏழு வயசுல எனக்கு பசிக்குதுன்னு கூட சொல்ல தெரியாம வயிறு வலிக்குதுன்னு வந்த என் குட்டிப்பாவாதான் தெரியறான்”

அபிஜித்தின் முகம் மாறியது. பொன்னம்மா நாக்கை கடித்துக் கொண்டு புவனாவிடம் மன்னிப்பு வேண்டும் பாவனையை வெளிப்படுத்த அவர் பொன்னம்மாவை முறைத்தார்.

சற்று நேரத்தில் மீண்டவன் “சரி தாத்தா, பாட்டி நான் கெளம்பறேன். எதாவது வேணும்னா போன் பண்ணுங்க. வரேன் கோல்ட் மம்மி. ரொம்ப நாளைக்கு அப்பறம் நல்ல சாப்பாடு சாப்டேன். அதுக்கு இன்னைக்கு ட்ரீட் உங்களுக்கு பிடிச்ச “கசாட்டா” ஐஸ்க்ரீம் ஓகேவா” என கூறிக்கொண்டே சென்று விட்டான்.

போகும் பேரனையே பார்த்தவர் “என்னங்க இவன் இப்ப வரைக்கும் புரிஞ்சிக்கவே இல்லையே? இவன் அம்மா தவிக்கறாளே என்னால பாக்க முடியலயே. நான் பெத்ததால வந்தது என்னால இன்னும் தொடருது ஏன்டா உயிரோட இருக்கோம்னு தோணுது” என விசும்ப

“புவனா என்ன பேச்சு இது எல்லாம் சரியாகும் சாப்பிடு” என அதட்டி சாப்பிட வைத்து அவருக்கு மாத்திரைகள் கொடுத்து உறங்க வைத்தார்.

புவனாவிற்கு இருபத்தியிரண்டு வருடத்திற்கு முன்பு மாரடைப்பு வந்து ஒரு முறை செத்து பிழைத்தார். மீண்டும் வராமல் இது வரை கவனமாக பார்த்துக் கொண்டுள்ளார் பார்த்தசாரதி.

இப்படியே நாட்கள் சென்றது அபிஜித்திற்கு. ஒரு வாரம் கடந்த நிலையில் அலுவலகத்தில் கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தவனின் அலைபேசி அழைத்தது. சஞ்சு அழைத்திருந்தான்.

ஒவ்வொரு நாளும் பாப்பு பற்றி தகவல் கூற அழைப்பான். இன்று வரை அபிதான் அவளின் கார்டியன்.

“சொல்லுடா சஞ்சு, மேடம் இன்னைக்கு என்ன பண்ணாங்க” சிரிப்புடன் வினவ

………..

“சஞ்சு .. ஹலோ..ஹலோ”

“அபி பாப்புவ காணோம்டா” தயக்கமாய் வந்தது சஞ்சுவின் குரல்.

“என்ன” சேய்ர் பின்னோக்கி செல்லும் சத்தம் சஞ்சுவுக்கு தெளிவாக கேட்டது.

“நாங்க ஹாஸ்பிட்டல் முழுசா தேடி பார்த்துட்டோம்.. எங்கயும் காணோம். ஆனா!!!”

“ஆனா என்னடா ஆனா, ஒரு குழ….பொண்ண கவனமா பாத்துக்க முடியாது. எதுக்கு ஸ்டாஃப் நர்ஸ்ன்னு அத்தன பேர் இருக்காங்க. அவ கிடைக்கல அவ்ளோதான் ஆமா. நான் இப்பவே வரேன்.” அழைப்பை துண்டிக்கும் முன்

“அபி” அவசரமாக சஞ்சுவின் குரல் இடையிட்டது.

“ம்ச் என்னடா” எரிச்சல் தொனி விரவியிருந்தது

“பாப்பு உன்னை தேடிதான் கெளம்பியிருக்கா”

இது இன்னும் அதிர்சியை கொடுத்தது. ” வாட்..என்னையா! என்னை தேடியா” அப்படியே சேய்ரில் அமர்ந்து விட்டான். தேடினாள் என மகிழ்வதா! அதனாலேயே காணவில்லை என அழுவதா!

“பாப்பு ஏன்டா இப்படி பண்ண.. தப்பு பண்ணிட்டேன் உன்னை வந்து பார்த்திருக்கனும்” என பிதற்றியவன் “இனி உன்னை விடமாட்டேன்டா பாப்பு ஜித்து வரேன்” என கூறியவன் புயலாய் பறந்திருந்திருந்தான் மருத்துவமனைக்கு.

வழிநெடுகிலும் ஒண்ணுமே தெரியாதே எங்க போயிருப்பா? அன்னைக்கு மாதிரி யாரகிட்டயாவது மாட்டிகிட்டா நினைத்த மாத்திரத்தில் உடல் நடுங்கியது. இல்லை ஒண்ணும் ஆகாது என தன்னைதானே சமாதானம் செய்து கொண்டு வந்திருந்தான்.

அனைவரும் பரபரப்பாய் இருக்க சஞ்சு இவனை பாப்புவின் அறைக்கு அழைத்து சென்றான். ஜானகியும் அங்குதான் இருந்தார்.

குற்றவுணர்ச்சியுடன் தலையை குனிந்து கண்களை மூடியவாறு அமர்ந்திருந்தார். அவருக்கும் மகளை போல அல்லவா அவள். சிறிது காலமே ஆனாலும் அனைவரிடத்திலும் வேரூன்றியிருந்தாள்.

படாரென கதவு திறக்கப்பட அபியை கண்டதும் மௌனமாய் தலை குனிந்தார். அவர் அருகில் வந்து அமர்ந்தான்.

“ரெண்டு நாளா சரியா சாப்பிடல மருந்து எடுத்துக்கல உன்னை பத்தி கேட்டுட்டே இருந்தா.. இன்னைக்கு காலைல ரூம் சுத்தம் பண்ற லேடிகிட்ட உன்னை பத்தி கேட்றுக்கா அவங்க கலெக்டர் ஆபீஸ் போனா உன்னை பாக்கலாம்னு சொல்லியிருக்காங்க. எப்படி போனான்னு தெரில. பயமா இருக்கு எங்க போனா என்ன பண்றானு” குரல் அடைக்க மெல்லிய குரலில் கூறி முடித்தார்.

“கடைசியா யார் பார்த்தது” கரகரத்த குரலில் அபி வினவ,

“நர்ஸ் மருந்து கொடுக்கும் போது பார்த்ததுதான்” சஞ்சு பதிலளித்தான்.

” அந்த லேடியையும் நர்ஸயும் வர சொல்லு சஞ்சு” என கூறும் போது அபியின் அலைபேசி சத்தம் எழுப்பியது. யாரென தெரியவில்லை அழைப்பை துண்டிக்க நினைத்தவன் எதாவது அவசர செய்தியாக இருந்தால் என எண்ணி ஆன் செய்தான்.

“ஹலோ அபிஜித் ஹியர்” நொடியில் குரல் மாறி கம்பீரம் வந்திருந்தது.

“ஹலோ கலெக்டர் சாரா”

“நீங்க”

“சார் குமாரு சார் ஆட்டோ டிரைவர்..அன்னைக்கு ஒரு பொண்ண ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனமே”

” தெரியுது.. சொல்லுங்க குமார் என்ன விசயம்” தொய்வாக வந்தது குரல்.

“சார் அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோமே அந்த பொண்ணு இங்க இருக்கு சார்”

அபிஜித் பரபரப்பானான் “என்ன அந்த பொண்ணுதானா நல்லா தெரியுமா?”

“தெரியும் சார் .. இருட்டுல பாத்தாலும் நல்லா ஞாபகம் இருக்கு அந்த பொண்ணுதான் சார் ஆட்டோ ஸ்டேன்ட் வந்து கலெக்டர் ஆபீஸ் போகுனும்னு சொல்லுது நான்தான் கூட்டிட்டு போறேன்னு சொல்லி ஆட்டோல உட்கார வச்சிருக்கேன். என்னா சார் பண்ண”

கடவுளே கிடைச்சிட்டாளா! கண்களில் நீர் நிறைந்தது. “ம்மா பாப்பு ” என்று போனை காட்டினான். ஜானகியும் சஞ்சுவும் அவன் அருகில் வந்தனர் எதிர்பார்ப்போடு அவனையே பார்க்க

ஸ்பீக்கரில் போட்டு “அந்த பொண்ணு என்ன ட்ரெஸ் போட்றுக்கு குமார்”

ஜானகியும் பதிலுக்கு மூச்சை பிடித்துக் கொண்டு காத்திருந்தார். “மஞ்சள் கலர்ல பெரிய கவுன் மாதிரி போட்றுக்காங்க சார்”

ஜானகி வேகமாக ஆமெனத் தலையாட்டினார். கண்ணீர் கரையுடைத்தது இருவருக்கும். உடல் லேசாகி பறப்பது போல இருந்தது அபிக்கு.

“ஹலோ..ஹலோ சார் இருக்கீங்களா?”

“ஹான் …குமார் நீங்க இப்ப எங்க இருக்கீங்க கமலா ஹாஸ்பிட்டல் வர எவ்வளவு நேரம் ஆகும்.”

“பக்கம்தான் சார் பத்து நிமிசத்துல வந்துடறேன்” அலைபேசி வைக்கப்பட்டது.

அபிஜித் ஒரு முடிவெடுத்தவனாக “ம்மா நான் பாப்புவ என்கூட கூட்டிட்டு போறேன்” அதில் அவ்வளவு உறுதி இருந்தது. இனி யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்பதை போல.

“நீ தனியா எப்படி பாத்துப்ப அபி”

“தாத்தா பாட்டி, பொன்னம்மா அம்மாலாம் வந்துட்டாங்க அவங்களும் பாத்துப்பாங்கமா பாப்புவ என்கூட அனுப்புங்க” திடமாய் வந்தது குரல்

பெருமூச்சுடன் “சரி” என்றவர் சஞ்சுவை அழைத்து அதற்கான ஏற்பாடுகளை கவனிக்க சொல்லி சென்று விட்டார்.

அபி அவளின் படுக்கையில் அமர்ந்து “ௌ சாரிடா பாப்பு இனி உன்னை கண்ணுக்குள்ள வச்சு பாத்துப்பேன்” என உறுதி பூண்டவன் கண்களை துடைத்துக் கொண்டு வாயிலுக்கு சென்றான்.

அவன் நினைத்தது போல இறங்கி வர மாட்டேன் என அடம்பிடித்துக் கொண்டிருந்தாள்.

“என்னை ஏன் மறுபடியும் இங்க கூட்டிட்டு வந்தீங்க. கலெக்டர் ஆபீஸ்க்கு கூட்டிட்டு போங்க அங்கிள். ஜித்து அங்கதான் இருக்கான் நான் ஜித்துவ பாக்கனும்” என அழ,

அபிஜித் கண்டுகொண்டான்… வெகுநாளைக்கு பிறகு அவளை பார்த்தவன் அவள் பத்திரத்தை உறுதி செய்து பின் அவளை முழுவதுமாக கண்களில் நிரப்பிக் கொண்டான்.

“ஜித்துனா உனக்கு அவ்வளவு பிடிக்குமாடா பாப்பு” என மனதில் கொஞ்சிக் கொண்டவன் மெதுவாக அவளை நெருங்கினான்.

“பாப்பு”

அவ்வளவுதான் ஆட்டோகாரரிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தவள் இவனை கண்டதும் “ஜித்து” என ஓடி வந்து கட்டிக் கொண்டாள். அவனும் இறுக அணைத்துக் கொண்டான். அதில் பிரிந்து சேர்ந்த தாய் சேயின் நிலைப்பாடே இருந்தது.

இக்காட்சியை பார்த்த ஜானகியின் மனதிலும் மகிழ்ச்சியே. இதுதான் கடவுளின் விருப்பம் என்றால் அப்படியே நடக்கட்டும் என எண்ணிக் கொண்டு அவர்களிடம் வந்தார்.

“என்ன கொஞ்சி முடிச்சாச்சா..உன்னை பாத்ததுமே நாலு போடனும்னு இருந்தேன் ஆனா உடம்பு சரியில்லாத பொண்ணுங்கறதால தப்பிச்ச” என கடிய

அவருக்கு மேல் உர்ரென்று முகத்தை வைத்து “நானும் உங்க மேல கோவமா இருக்கேன் நீங்க ஏன் ஜித்துவ பாக்க கூட்டிட்டு போகல”

“ஆமா உனக்கு யார் சொன்னது கலெக்டர் ஆபீஸ்க்கு போனா ஜித்துவ பாக்கலான்னு” என ஜானகி கொக்கி போட

“அதுவா…… காலைல அந்த ஆயம்மா வந்தாங்களா என்னை பார்த்து ஏன் பாப்பா சோகமா இருக்க கேட்டாங்களா! நான் ஜித்துவ பாக்கனும் சொன்னனா”

“ம் அப்பறம்” என ஜானகி கேட்க

“அவங்கதான் உங்கூட இருப்பாரே அந்த தம்பிதான கேட்டாங்க நானும் ஆமா சொன்னேன். அவரு கலெக்டர், கலெக்டர் ஆபிஸுக்கு போனா அவர பாக்கலாம் சொன்னாங்க”

“உடனே அம்மணி கெளம்பிட்டீங்க” கிண்டலாக வினவ

“ஆமா நீங்கதான் கூட்டிட்டு போகலயே அதான் நானே கெளம்பி போனேன். அப்படியே நடந்து போனேனா கொஞ்சதூரம் போனதும் கால்வலிச்சுது. அப்பதான் இவர போல இருந்த ஒருத்தர் “என்னா பாப்பா எங்க போகனும்” கேட்டாங்க நானும் கலெக்டர் ஆபீஸ் சொன்னனா அதுக்குள்ள இவர் வந்து என்னை கூட்டிட்டு வந்துட்டார்” என சாதாரனம் போல கூறினாள்.

அனைவருக்கும் என்ன கூறுவது என்றே தெரியவில்லை. அபிஜித்தும் ஜானகியும் குமாரை பார்க்க

“அவன் தப்பான ஆளு இல்ல சார். இந்த பொண்ணு தூர வரும்போதே எங்கயோ பாத்த மாதிரி இருக்கேன்னு நினைச்சுட்டே இருந்தேனா தலைல கட்டு பாத்ததும் ஞாபகம் வந்திடுச்சு இந்த பொண்ணு எங்க இங்க வந்ததுன்னு நினைச்சுட்டே கிட்டக்க போனப்பதான் கலெக்டர் ஆபீஸ் போகனும் சொல்லிட்டிருந்தாங்க எனக்கு ஏதோ சரியில்ல தோணிச்சு அதான் எனக்கு தெரிஞ்ச பொண்ணுன்னு கூட்டிட்டு வந்துட்டேன் சார்” என கூறி முடித்தான்.

அபிஜித் உரைந்து போய் நின்றிருந்தான் . இதுவே வேறு யாரிடமாவது மாட்டியிருந்தால் என்னும் எண்ணமே. “தேங்க்ஸ் குமார்” நெகிழ்ந்த குரலில் கூறினான்.

“தேங்க்ஸ்லாம் வேணாம் சார். என்னாச்சு இவங்களுக்கு”

“கொஞ்சம் பழச மறந்துட்டாங்க”

“அடக்கடவுளே பாத்துக்கோங்க சார்” எனக்கூறி கிளம்பியவரிடம் மறுக்க மறுக்க ஆட்டோக்கான பணத்தை கொடுத்து அனுப்பினான் அபிஜித்.

ஜானகி அவருக்கு நன்றி உரைத்து அவருடைய மனைவிக்கு பிரசவம் பார்க்க இங்கேயே அழைத்து வருமாறு கூறியவர் அவருடைய எண்ணை வழங்கினார்.

ஆட்டோகாரர் சென்றதும் அவள் கைகளை பிடித்தவன் “பாப்பு இனி இப்படி தனியாலாம் போககூடாது சரியா”

“அப்ப நீ எங்கூடவே இருக்கனும் சரியா” என பதிலுக்கு அக்ரிமெண்ட் போட்டாள்.

“என்கூட என்னோட வீட்டுக்கு வரியா ” எதிர்பார்ப்புடன் வினவ,

“ம்..நிஜமாவா உங்கூடவே வச்சிக்குவயா மறுபடியும் இங்க விட்டு போக கூடாது”

“ம்ஹீம்” என தலையாட்டினான்.

“அப்பசரி நான் வரேன் … ஜானும்மா நான் ஜித்துகூட போறேன்” என அவருக்கு ஒரு அறிவிப்பை விட்டவள் அவர் கூறிய அறிவுரைகளை அறைகுறையாக கேட்டு அவனை இழுக்காத குறையாக இழுத்து சென்றுவிட்டாள்.

புதிய பயணம் ஆரம்பம்……..