KKE–EPILOGUE

KKE–EPILOGUE

எபிலாக்

 

“அந்த ஜிப்பாவப் போட்டிருக்கியா இன்னிக்கு? அப்போ கச்சேரி களை கட்டும்னு சொல்லு” தன் ஆசை மனைவியை அணைத்து உச்சி முகர்ந்தான் ஜம்பு.

“இன்னிக்கு நாம முதன் முதலா சந்திச்ச நாள் ஜம்ப். செலிபரேட் பண்ணலாம்னு தான் உனக்குப் பிடிச்ச மாதிரி இந்த ஜிப்பாவுல நிக்கறேன்” என சிரித்தாள் மெய் லிங்.

“நீ இத முதன் முதலா மெரினா பீச்ல போட்டீயே, அப்போவே உன்னைக் குழந்தை மாதிரி தூக்கி சுத்தி இறக்கி விடனும்னு தோணுச்சு. அவ்ளோ க்யூட்டா இருந்த”

அது அவனுக்கு அவள் வாங்கி கொடுத்த ஜிப்பாதான். அவர்களின் முதல் இரவுக்கே அதைதான் போட்டு காத்திருந்தாள் அவள். கணவனோ அல்லது மனைவியோ யாராவது அந்த ஜிப்பாவை அணிந்திருந்தால் அன்றைக்கு கச்சேரி டே என்பது அவர்களின் கோட் வோர்ட்.

அவளை அணைத்து மெதுவாக காதைக் கடித்து வைத்தான் ஜம்பு. மஞ்சள் நிற காது அவன் கண் முன்னே சிவக்கவும் தான் இது கனவல்ல நிஜம் என நிம்மதி அடைந்தான்.

“இன்னும் ஹவ் லாங் இப்படி என் காதைக் கடிச்சு இது கனவா நனவான்னு செக் பண்ணுவ. என் காது ரெண்டு பிஞ்சி போக போது பாரு ஜம்ப்” செல்லமாக மிரட்டினாள் மெய் லிங்.

“என்னால இன்னும் நம்ப முடியலடி சமூ, நீ இப்போ என் பொண்டாட்டின்னு.” அவளை இறுக்க அணைத்துக் கொண்டான்.

“மொரடு, மொரடு. எலும்பெல்லாம் வலிக்குது விடுடா”

அவர்கள் திருமணம் முடிந்த இந்த மூன்று வருடங்களில் மெய் லிங் நன்றாக தமிழ் பேசக் கற்றிருந்தாள். அவளின் டியூசன் டீச்சர் அவளின் மாமியார்த்தான்.

ஜம்புவைப் பிரிந்து சிங்கப்பூர் சென்றவளுக்கு வாழ்க்கை ஒரு ப்ளேக் அண்ட் வயிட் படம் போல சந்தோஷ வண்ணம் இல்லாது ஓடியது. இந்தியா வரும் முன் வேலைக்கு இரண்டு மாத அன்பேய்ட் லீவ் போட்டு தான் வந்திருந்தாள். ஒரு பெரிய நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவின் அதிகாரியாக இருந்தாள் மெய் லிங். மீதமிருந்த லீவை கான்சல் செய்து விட்டு வேலைக்குப் போனாள்.

வெளிப் பார்வைக்கு காட்டிக் கொள்ளாவிட்டாலும் ஜம்புவின் நினைவிலேயே காலத்தை ஓட்டினாள். சாப்பாடு, வேலை, தூக்கம் என நார்மலாக இருந்தாலும் முகத்தில் சிரிப்பைத் தொலைத்திருந்தாள். பேச்சும் குறைந்துப் போனது. வேலை முடிந்து வந்து ரூமிலேயே அடைந்துக் கிடந்தாள். தகப்பன் தன்னை கண் கொத்திப் பாம்பாய் கவனிக்கத் தொடங்கவும் வேறு வழி இல்லாமல், நண்பர்களைப் போய் பார்த்தாள். அவர்களுடன் படம் பார்க்க போனாள், பப்புக்குப் போனாள், நண்றாக சுற்றித் திரிந்தாள். ஆனால் இரவின் மடியில் தன் கட்டிலில் கண்ணீரிலேயே கரைந்தாள். அந்த பச்சை சேலையை போர்த்திக் கொண்டு தூங்கப் பழகினாள்.

எப்பொழுதும் போல தகப்பனிடம் பேசி, சிரித்தாலும் அதில் உயிர்ப்பு இல்லை. அவளை அப்படியே விடக்கூடாது என முடிவெடுத்த அவளின் அப்பா தனது இனத்திலேயே அழகாக, படித்த ஒருத்தனை அவளுக்குத் துணையாக தேர்ந்தெடுத்தார். வேண்டாம் என்றவளை, மிரட்டி, வற்புறுத்தி அவனுடன் வெளியே அனுப்பினார்.

அவனுடன் சாப்பிடும் நேரம் முழுக்க ஜம்புவுக்கு முள்கரண்டியால் சாப்பிட சொல்லிக் கொடுத்ததே ஞாபகம் வந்து இம்சித்தது. கஸ்டப்பட்டு முன்னால் அமர்ந்திருந்தவன் பேசுவதைக் காது கொடுத்து கேட்டாள். டேட்டிங் முடிந்து வீட்டில் விடும் முன், வாசலில் நிறுத்தி கன்னத்தில் முத்தமிட வந்தவனை அவளையும் அறியாமல் ரத்தம் வர பிராண்டி வைத்திருந்தாள். ஹராஸ்மெண்ட் என போலிஸ் கேஸ் ஆகி, எப்படியோ செட்டில் செய்தார் அவள் அப்பா. நாளுக்கு நாள் அவள் இன்னும் ஒடுங்கவும், உள்ளுக்கு பாசத்தைக் கொட்டி வைத்திருந்தவர் வேறு வழி இல்லாமல் இறங்கி வந்தார்.

மகளின் நல்வாழ்வுக்கு முன் நாடு, இனம், மதம் எல்லாம் பின்னுக்குப் போனது. தனக்காக தன் மனம் கவர்ந்தவனை மறுத்து, தனக்காகவே இங்கு வந்து கவலையில் உழண்டாலும் தனது பாப்பாவை விட்டுக் கொடுக்காத தன் மகளை நினைத்து பெருமையாக இருந்தது அவருக்கு.

அங்கே ஜம்புவும் அவள் போலத்தான் இருந்தான். டூருக்குப் போனான், சாப்பிட்டான், தூங்கினான். தூக்கத்தில் சமூ, சமூ என புலம்பி அலறி எல்லோரையும் பயம் காட்டினான். மங்கியின் மூலம் விஷயத்தைக் கேள்வி பட்ட அவனின் பெற்றோர் அவனுக்கு சீக்கிரமாக பெண் பார்த்து நிச்சயிக்க முற்பட்டனர்.

அன்று வீட்டுக்கு வந்தவன் வாசலில் கிடந்த பல வகையான செருப்புக்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். உள்ளே நுழைந்தவனை ஓடி வந்து வரவேற்றார் பொன்னு.

“ஜம்பு டேய்”

“என்னம்மா?”

“உன்னை மாப்பிள்ளைப் பார்க்க வந்துருக்காங்கடா”

“என்னது? இது என்ன இது எங்கும் இல்லாத பழக்கமா இருக்கு?” குரலை உயர்த்தினான்.

அதற்குள் அங்கே வந்த ஆதி,

“இங்க இருக்கறவங்கலாம் புதுமைய விரும்பறப்போ நாங்களும் இப்படித்தான் புது பழக்கமெல்லாம் அனுசரிக்க வேண்டி இருக்கு” என நக்கலாக சொன்னார்.

“ஏங்க, கொஞ்சம் கம்முன்னு கிடங்களேன். நான் தான் புள்ளைகிட்ட பேசறேன்ல” அடக்கினார் பொன்னு.

“ஏழு கழுதை வயசாச்சு, இன்னும் கல்யாணத்துக்கு சம்மதிக்கலன்னா என்னன்றது? இப்ப பாத்துருக்கற பொண்ணும் நல்லா வெள்ளையா அழகாத்தான் இருக்குது. துரைக்கு அப்படி கலரா இருந்தாத்தானே பிடிக்குதாம். வந்து சம்பிரதாயத்துக்கு மூஞ்ச காட்டிட்டு, மாப்பிள்ளையா அடங்கி இருக்க சொல்லு”

“ம்மோ! இந்த மாதிரி நக்கலு விக்கலுலாம் என் கிட்ட வச்சிக்க வேணாம்னு சொல்லும்மா உன் புருஷன! வெள்ளையா உள்ளவள பிடிக்குதுன்னு, எல்லா வெள்ளையா உள்ளவளையும் பிடிச்சிரும்மா? எனக்குன்னு பொறந்தவ அவ தான். அவளே என்னை விட்டுட்டுப் போய் அங்க என்ன பாடு படறாளோன்னு தினம் தினம் செத்துட்டு இருக்கேன். இதுல கல்யாண ஏற்பாடு வேற!” எகிறினான்.

“நீ இருக்கற கலர பாத்துத்தான் அந்த பொண்ணு விட்டா போதும்னு ஓடிருக்கும். போனவள நினைச்சு என்ன பண்ண, இந்த பொண்ணு கல்யாணத்துக்கி ஒத்துக்கிச்சு. தாலி கட்டறதுக்கு வழிய பாரு” அவரும் எகிறினார்.

“ஓஹோ! கருப்பு, கருப்புனா என்ன அர்த்தம்? உங்கள மாதிரி அட்டைகரியா பெத்து போட்டது நீங்கதானே! என்னமோ நான் ஆசைப் பட்டு இப்படி பொறந்த மாதிரி நக்கலு. அந்தப் பொண்ணு கொஞ்சம் வெள்ளையா இருக்குன்னா நீங்களே கட்டிக்கிங்க. கருப்பான எங்கம்மாவ கூட்டிட்டு நான் வெளிய போறேன்”

“டேய் பரதேசி பயலே! உனக்கு நான் கல்யாண பண்ணி வைக்க நினைச்சா நீ எனக்கு டைவோர்ஸ் வாங்கி குடுக்க ட்ரை பண்ணுறியா?” என அடிக்கவே வந்துவிட்டார் ஆதி.

“எட்டப் போங்க! தோளுக்கு வளந்த பையனை இன்னும் கை நீட்டிக்கிட்டு. ஜம்பு, என்னைப் பெத்த ராசா! நீ கல்யாணம் பண்ணி பார்க்கனும்னு எனக்கு ஆசை இருக்காதா ராசா? அந்த சீன பொண்ணையே கட்டிக்கிட்டாலும் சரிடா, எனக்கு நீ குடும்பம் குட்டின்னு இருந்தா போதும்டா” கண் கலங்கினார் பொன்னு.

“நானாம்மா மாட்டேன்னு சொல்லூறேன். விதி என் வாழ்க்கையில கபடி விளையாடுதேம்மா. நான் என்ன செய்ய” தாயைக் கட்டிக் கொண்டு தானும் கண்ணீர் உகுத்தான் ஜம்பு.

அப்பொழுது அங்கே வந்த பொண்ணின் அப்பா,

“மாப்பிள்ளை, என்ன கண்ணீர் விடறீங்க? என் பொண்ணு உங்கள கண்ணு கலங்காம வச்சிக்கும்” என சொல்லிவிட்டு இடி இடியென சிரித்தார். ஜம்புவுக்கு வந்ததே ஆத்திரம்.

“யாருய்யா உனக்கு மாப்பிள்ளை! தோ வரேன்” என அவரை நெருங்கியவனை இழுத்துப் பிடித்துக் கொண்டார் ஆதி.

“யோ, அவன் கோபத்துல வரான்யா. வேட்டிய கழட்டி ஓட ஓட அடிக்கறதுக்குள்ள ஓடிருய்யா. போய்யா!” என விரட்டினார். பொண்ணு வீட்டுக்காரர்கள் பதறி ஓட, தட்டு, தாம்பளம் எல்லாம் பறந்தது.

அவனின் வெறித்தனத்தைப் பார்த்து ஐயோ பைத்தியம் என பெண் வீட்டுக்காரர்கள் அலறி புடைத்து ஓடினார்கள். சீனாக்காரியோ, கொரியாக்காரியோ எவளோ ஒருத்தி மருமகள் என வந்தால் போதும் என முடிவுக்கு வந்தனர் இவன் பெற்றோர்.

இப்படி அவனின் அலப்பறையில் அவர்கள் நொந்திருந்த சமயம் மெய் லிங்கின் தகப்பன் வரவும், இரு கரம் நீட்டி அரவணைத்துக் கொண்டனர் ஆதியும் பொன்னும். அவசர அவசரமாக நல்ல நேரம் பார்த்து, கோயிலிலேயே இருவருக்கும் திருமணத்தை முடித்து விட்டுத்தான் ஓய்ந்தனர் அம்மூவரும். கல்யாணத்துக்கு அந்த கிளிப்பச்சை சேலையையே அணிந்துக் கொண்டாள் மெய் லிங்.

கோயிலிலேயே மகன் ஜொள்ளு ஊற்றி தரையை வழுக்க வைக்க, தலையில் அடித்துக் கொண்டார் ஆதி. மெய் லிங்கின் அப்பாவுக்கோ மருமகனின் பாசம் மனதில் சந்தோஷத்தை விதைத்தது. சண்டையெல்லாம் மறந்துவிட்டு, பாப்பா பாப்பா என அவர் பின்னாலேயே சுற்றினான் ஜம்பு. மகள் விழுந்தது போலவே அவரும் மருமகனின் அன்பில் விழுந்து விட்டார். காடாறு மாசம் வீடாறு மாசம் என்பது போல சிங்கப்பூருக்கும், இந்தியாவுக்கும் பறந்து பறந்து வாழ்ந்தார் அவர்.

மெல் லிங் இவர்கள் வீட்டுக்கு வாழ வந்த ஆரம்ப நாட்களில் பொன்னுவும், ஆதியும் பரதநாட்டியத்தை நன்றாக கற்றுத் தேர்ந்தனர். அறவே ஆங்கிலம் தெரியாத அவர்கள் பின்பு என்னதான் செய்ய முடியும்! அபிநயம் பிடித்து தான் அவளுடன் உரையாடினர்.

“மருமக வந்தா வாய்க்கு ருசியா ஆக்கிப் போடுவான்னு பார்த்தா என் கிரகம் இன்னும் நானே தான் சமைக்க வேண்டி இருக்கு” என சில சமயங்களில் புலம்புவார் பொன்னு.

கோபம் பொத்துக் கொண்டு வந்துவிடும் ஜம்புவுக்கு. மறுநாள் பொன்னு எழும் முன் மணக்க மணக்க உணவு ரெடி ஆகியிருக்கும்.

“என் பொண்டாட்டிக்கு தெரியலைன்னா என்ன, நான் செஞ்சிட்டுப் போறேன். அதுக்குன்னு நான் இல்லாதப்போ அவள ஏதாவது திட்டினீங்கன்னு தெரிஞ்சது அம்புட்டுத்தான். தனிக்குடித்தனம் போயிருவேன்.” மிரட்டுவான் ஜம்பு.

“ஆமாடா, திட்டுனா மட்டும் உன் சீனா லட்டுக்குப் புரிஞ்சிற போகுதாக்கும். என்ன சொன்னாலும் ஆமா அத்தே, இல்ல அத்தே, போதும் அத்தே, சோறு அத்தேன்னு அதே நாலு வார்த்தைய கலந்து கலந்து அடிப்பா. சிரிக்கற மூஞ்ச பார்த்து ஏசவும் மனசு வரமாட்டுது” புலம்பிக் கொண்டே போவார்.

உள்ளுக்குள் நகைத்துக் கொள்வான் ஜம்பு. என்னதான் புலம்பினாலும் மருமகள் மீது கொள்ளை ஆசை அவருக்கு. முடியை நீளமாக வளர்த்து நாளைக்கு ஒரு பூச்சூடி மகிழ்வார். அறவே காரம் சேர்க்காமல் அவளுக்கு தனியாக சமைத்துக் கொடுப்பார் பொன்னு.

ஆதி அதற்கும் ஒரு படி மேல்.

“மெய்யம்மா, மெய்யம்மா” என உருகிவிடுவார்.

“என் மருமக மகாலெட்சுமிடி. அவ கம்பேனிக்கு வந்ததுல இருந்துதான் லாபம் கொட்டுது.” என பாராட்டித் தள்ளுவார். வெளியே தெருவே போனால், மருமகளுக்குத் தின்பண்டம் இல்லாமல் வரமாட்டார். மெய் லிங் ஜம்பு செய்யமாட்டேன் என்ற ட்ராவல்ஸ் நிர்வாகத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டாள். வெளிநாட்டில் இருந்து இங்கு வருபவர்களை மட்டுமே கஸ்டமர்களாக வைத்திருந்தவர்கள், இப்பொழுது இங்கிருந்து மக்களை வெளிநாட்டுக்கு சுற்றிப் பார்க்க அனுப்பும் அளவுக்கு முன்னேறி இருந்தார்கள்.

“என் செல்ல சீனா மொட்டு, முன்னொரு தரம் ஹோட்டல்ல வச்சி என் மடியில உட்கார்ந்து தோளுல சாஞ்சிகிட்டயே அதே மாதிரி சாஞ்சிக்கடி ப்ளிஸ்.”

“செய்டினா செய்யப் போறேன். எதுக்கு எங்கிட்ட இன்னும் ப்ளிஸ் போடற?” அவன் மடியில் அமர்ந்து கட்டிக் கொண்டு தோளில் சாய்ந்துக் கொண்டாள் மெய் லிங்.

“நான் ப்ளிஸ்னு சொல்ல நீ என்ன ப்ளிஸ் பண்ண அதுல கிடைக்கற சுகமே தனிடி என் செல்ல சமூ” என அவள் சப்பை மூக்கை பிடித்து ஆட்டினான் ஜம்பு.

“மூக்கு வலிக்குதுடா ஜம்ப்.”

“வலிக்கட்டும். பாப்பா வேணும்னு என்னை விட்டுட்டுப் போனவதானே நீ”

“இன்னும் எத்தனை நாளைக்குத்தான்  நான் போனதுனால கோபத்துல இருக்கேன்ற சாக்குல என்னை வித விதமா கொஞ்சுவ? போடா டேய் கருவாப்பையா!”

“இந்த கருவாப்பையாலாம் யாருடி உனக்கு சொல்லி தரா? மை மம்மியா?”

“இல்ல என் மாமானார்”

“அவரா?”

“மெய்யம்மா, உன் புருஷன் அந்தக் கருவாப்பையன் வந்துட்டானா?” என மாமனாரைப் போலவே பேசிக் காட்டினாள்.

“அந்தாளுக்கு தான் மட்டும் அஜித்குமார் கலருல இருக்கற மாதிரி நினைப்புதான்.” கருவினான் ஜம்பு. அப்பாவுக்கும் மகனுக்கும் இன்னும் எதுவும் சரியாகவில்லை.

“அவரு பேச்சை விடுடி. இது நமக்கான நேரம். என்னை மட்டும் கவனி. என்னை மட்டும் லவ் பண்ணு” மனைவியின் உதட்டை வன்மையாக சிறைப்பிடித்தான் ஜம்பு. சிவந்துப்போன அவள் வாயை ஆசையாக ரசித்தான்.

“சிவப்பிடி நீ. தொட்டாலே சிவந்து போயிருற” கொஞ்சிக் கொண்டவன் தாவாங்கட்டையில் இருந்த மச்சத்துக்கு ஸ்பெஷல் முத்தம் வைத்தான். மன்மத லீலையை ஆரம்பிக்கும் போது, கதவு படபடவென தட்டப்பட்டது.

“ஜம்பு டேய்!”

“என்னம்மா இந்த அர்த்த ராத்திரியில கதவ தட்டறீங்க?”

“ராத்திரி பத்து உனக்கு அர்த்த ராத்திரியாக்கும்”

“இந்த சந்தேகத்தை கேட்கத்தான் கதவ தட்டுனீங்களாம்மா?”

“அட நீ ஏன் டா நக்கலு பண்ணிகிட்டு திரியற. கருப்பனுக்கு அவன் அம்மாத்தான் வேணுமாம். உங்கப்பாவ போட்டு எத்தி ஒதைக்கறான். உன் பொண்டாட்டிய வந்து தூக்கிட்டுப் போவ சொல்லுடா. சிவப்பி தூங்கிட்டா”

“சரியான இம்சைம்மா அவன்”

“பெத்த புள்ளைய போயி இம்சைன்னுகிட்டு படவா!”

கல்யாணம் ஆகி மூன்று வருடங்களில் இரண்டு பிள்ளைகளை வரமாகப் பெற்றிருந்தனர். கருப்பன் என அழைக்கப்படும் கவிலிங்கம், அப்படியே ஜம்புவின் மறுபதிப்பு, அம்மாவின் செல்லம். சிவப்பி என அழைக்கப்படும் சிந்தியா லீ, அப்படியே மெய் லிங்கின் மறுபதிப்பு, ஜம்புவின் செல்ல சிட்டு.

சிரித்தப்படியே போய் தன் மகனை மாமியாரின் அறையில் இருந்து தூக்கி வந்தாள் மெய் லிங். ஜம்பு போய் அவன் அப்பாவை முறைத்தவாறே தன் மகளைத் தூக்கினான்.

“வயசு மட்டும் ஏழு கழுதைக்கு மேல ஆகுது. குட்டி பேரப்பையன இன்னும் சமாளிக்கத் தெரியல” தகப்பனுக்கு கேட்கும் படி முனகினான்.

“அப்பன மாதிரியே அறந்தவாலா இருந்த என்னத்த சமாளிக்க! பேரனை பெத்துக்குடுக்க சொன்னா, அவன மாதிரியே பேப்பயல பெத்துப் போட்டுருக்கான்” அவரும் சத்தமாக முனகினார்.

மகளை நெஞ்சில் போட்டுக் கொண்டவன் மனைவியை தன் கையில் படுக்க வைத்துக் கொண்டான். மகனோ மெய் லிங்கின் நெஞ்சுக்குள் புதைந்து கொண்டான்.

“ம்மா பாத்து பாது” என்ற மகனுக்கு, அவர்களைத் தூங்க வைக்கும் போது எப்பொழுதும் பாடும் பாடலை தன் அழகிய கீச்சுக் குரலில் பாடினாள் மெய் லிங்.

சிட்டு குருவி ஒன்று
ஸ்நேக பார்வை கொண்டு
வட்ட பாறையின் மேல்
என்னை வா வா என்றது

கீச்சு கீச் என்றது
கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி
பிரியமா என்றது

ஒற்றை சிறு குருவி நடத்தும்
ஒரங்க நாடகத்தில்
சற்றே திளைத்திருந்தேன்

கீச்சு கீச் என்றது
கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி
பிரியமா என்றது !!!!!

 

(முற்றும்)

 

error: Content is protected !!