KNK 15

KNK 15

அத்தியாயம் 15

விடிய விடிய தூங்காமல் அப்படியே அமர்ந்து இருந்தாள் பொழிலரசி.அவள் மனதில் ஓடிக் கொண்டு இருந்த எண்ணம் ஒன்றே ஒன்று தான்.அது அவளது கணவனை எப்படி பழி வாங்குவது என்பது தான்.கண்கள் இரண்டும் தீயென பற்றி எரிந்தாலும் ஒரு கணம் கூட கண்ணை அசரவில்லை அவள்.

 

இவளைப் பற்றிய கவலையோ பயமோ எதுவுமே இல்லாமல் கண்களை மூடி நிச்சிந்தையாக உறங்கிக் கொண்டு இருக்க,அவளின் ஆத்திரம் மேலும் பன்மடங்காக பெருகியது.

 

‘தந்தையை கொன்றவன் இவன் தான் என்று தெரிந்த பிறகும் இவனை என்னால் கொல்ல முடியவில்லையே!கொலை செய்த இவன் எந்த கவலையும் இல்லாமல் தூங்கிக் கொண்டு இருக்க, என்னால் தூங்கமுடியவில்லையே ஏன்?’

 

விடிய விடிய யோசித்ததின் பலனாக அவளின் தலையில் வலி படையெடுக்க கைகளால் தலையை தாங்கியவாறே அமர்ந்து இருந்தாள்.

 

“நைட் கொஞ்ச நேரம் கூட தூங்கலை போல…”விக்ரமாதித்யனின் கேலிக் குரல் காதை தீண்ட வெறுப்போடு அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள்.படுக்கையில் படுத்தவாறே ஒற்றை கையால் தலையை தாங்கிய படி அவள் புறம் திரும்பிப் பேசிக் கொண்டு இருந்தான்.

 

அவனுக்கு பதில் சொல்லப் பிடிக்காமல் கழுத்தை ஒரு வெட்டு வெட்டி எதிர்ப்பக்கம் திருப்பிக் கொண்டாள்.அவளின் அலட்சியத்தை கண்கள் இடுங்கப் பார்த்தவன் மெல்ல எழுந்து இரு கைகளையும் நீட்டி,உடம்பை நெளித்தவாறே அவளிடம் பேசினான்.

 

“இவ்வளவு அலட்சியம் வேண்டாம் பொழில்” என்று எச்சரித்தவன் இண்டர்காமை எடுத்து காபி கொண்டு வர சொல்லி விட்டு குளிக்கப் போய் விட்டான்.

 

விக்ரமாதித்யன் குளிக்க சென்ற சில நிமிடங்களுக்குள் காபி வர அதை வாங்கி வைத்து விட்டு மீண்டும் அதே நிலையில் அமர்ந்து கொண்டாள்.குளித்து முடித்து விட்டு வந்தவன் அதே நிலையில் இருந்த பொழிலரசியை கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

இலக்கின்றி எதிரில் இருந்த சுவற்றை வெறித்துக் கொண்டு இருந்தவளின் கண் முன்னே விரலால் சொடுக்கி அழைத்தான் விக்ரமாதித்யன்.

ஏற்கனவே அவன் மீது ஆத்திரத்தில் இருந்தவள் சொடக்கு போட்டு அழைக்கவும் மேலும் ஆத்திரம் மிக வேகமாக எழுந்து நின்று அவனுக்கு எதிரில் கை நீட்டிப் பேசினாள். “ஏய் என்ன சொடக்கு போட்டு கூப்பிடற…நான் என்ன உன் வீட்டு வேலைக்காரியா?”

 

“நீ என் வீட்டுக்காரி அப்படிங்கிற நினைப்பு என் மனசில ரொம்ப ஆழமாவே பதிஞ்சு இருக்கு.அதில எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.அந்த எண்ணம் இல்லாமல் போனது உனக்குத் தான்”என்று அமர்த்தலாகவே கூறினான்.

 

“அந்த நினைப்பு என் மனதில் இருக்கிற மாதிரியான காரியத்தை நீ செய்யலை…”

 

“ஹ…அதெல்லாம் முடிஞ்சு போன விஷயம்…இப்போ வா வந்து காபி குடி…”

 

“எனக்கு வேணாம்.உன் வீட்டில் பச்சை தண்ணி கூட குடிக்க மாட்டேன்”

“பட்டினி கிடந்து சாகப் போறியா? எனக்கு அதுவும் வசதி தான்.உன்னை கொன்ற பழி என் மீது வராது.அதே நேரம் என்னுடைய ரகசியம் தெரிந்த நீயும் உயிரோடு இருக்க மாட்டாய்”தான் ஒரு தேர்ந்த வியாபாரி என்பதை நிரூபிக்கும் விதமாக பேசினான் விக்ரமாதித்யன்.

‘இவன் சொல்வது உண்மை தானே…நான் பட்டினி கிடந்தது செத்து விட்டால் அது இவனுக்குத் தான் லாபம்.இவனை பழி வாங்க வேண்டும் என்னுடைய எண்ணம் எப்படி ஈடேறும்?வேறு யாரையும் நம்பி ஒப்படைக்கும் காரியம் அல்ல இது…’ என்பதை உணர்ந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

 

“உன்னை கொல்லாம நான் சாக மாட்டேன்டா…”என்று கோபமாக உரைத்தவள் அங்கே டேபிளில் வைத்து இருந்த காபியை எடுத்து மடமடவென குடித்தாள்.

 

அவள் குடித்து முடிக்கும் வரை பொறுமையாக இருந்தவன் குடித்து முடித்த பிறகு புரியாத பார்வையில், “தேங்க்ஸ்” என்றான்.

 

“எதுக்கு” என்றாள் வெட்டும் பார்வையுடன்.

 

“நேத்து சொன்ன மாதிரியே இதுல எதுவும் விஷம் கலந்து வச்சு இருக்கியோன்னு ஒரு சந்தேகம் இருந்துச்சு.அதான் நான் குடிக்காமல் உன்னை வச்சு டெஸ்ட் பண்ணினேன்.நீயும் குடிச்சுட்ட..இப்போ நான் நிம்மதியா காபி குடிக்கலாம் பார்.”அசால்ட்டாக சொன்னவனின் தலையை கையில் இருக்கும் காபி கப்பால் உடைத்தால் என்ன என்று அவளுக்கு தோன்றியது.

“இது வரைக்கும் அப்படி ஒரு எண்ணம் இல்லை…நீ சொன்னதுக்கு அப்புறம் தான் அந்த எண்ணமே வருது…எதையாவது கலந்து வச்சு இருக்கணும்”

 

“அப்படியெல்லாம் அவசரப்பட்டு எதையாவது செய்து விடாதே”

 

“ஏன் உன் உயிர் அவ்வளவு முக்கியமா என்ன?”

 

“நிச்சயம் என் உயிரின் விலை அதிகம் தான்.ஆனால் நான் சொன்னது அந்த காரணத்திற்காக இல்லை.இனி நான் சாப்பிடும் ஒவ்வொரு வேளை உணவையும் நீ சாப்பிட்டு பார்த்த பிறகு தான் நான் சாப்பிடப் போகிறேன்.அப்படி இருக்கையில் போகப் போவது உன் உயிர் தான்.”

 

“என் அப்பாவிற்காக உயிரையும் கொடுப்பேன்.நீ போடும் பிச்சையில் வாழ்வதை விட அவருக்காக அவரை கொன்ற உன்னை கொல்வதற்காக மரணத்தை கூட ஆசையாக ஏற்றுக் கொள்வேன்.”

 

“அதாவது நீ செத்தாலும் பரவாயில்லை…என்னை கொல்லாம விட மாட்ட…அப்படித்தானே பொழில்?” கட்டிலில் வாகாக சாய்ந்து அமர்ந்து கொண்டு காபியை ரசித்து குடித்தவாறே சந்தேகம் வேறு கேட்டு வைத்தான்.

 

“ஆமாம்”அழுத்தம் திருத்தமாக சொன்னாள் பொழிலரசி.

“சரி பொழில்.ஒரு பேச்சுக்கு சொல்றேன்.நல்லா கவனிச்சுக்கோ பேச்சுக்கு தான் சொல்றேன்.ஒருவேளை என்னை கொல்லும் முயற்சியில் நீ ஜெயிச்சுட்டா அடுத்து என்ன நடக்கும்னு நீ நினைக்கிற?”அவள் முகத்தையே உற்றுப் பார்த்தவாறு கேட்டான்.

 

“…”

 

“உன் அப்பாவோட சாவுக்கு நியாயம் கிடைச்சுடும்னு நினைக்கறியா? நிச்சயம் இல்லை…நீ உன் அப்பாவுக்காக தான் என்னை கொன்னு இருக்கன்னு யார் நம்புவா?எல்லாரும் என்ன சொல்வாங்கன்னு தெரியுமா? ஒரு கொலைகாரனின் பைத்தியக்கார மகள் கட்டிய கணவனை கொன்று விட்டாள்.இப்படித்தான் சொல்லுவாங்க.அதனால அந்த முடிவை எல்லாம் கை விட்டுட்டு உன் மனதை மாற்றிக் கொண்டு என்னுடன் வாழும் வழியைப் பார்.”என்று சொல்லிவிட்டு அதிர்ந்து நின்ற பொழிலரசியை கவனிக்காதவன் போல கீழே சென்று விட்டான்.

 

சற்று நேரம் அறையிலேயே திக்பிரமை பிடித்தவள் போல அமர்ந்து இருந்த பொழிலரசி,ஒரு முடிவுக்கு வந்தவளாக அறையை விட்டு வெளியேறி நேராக டைனிங் ஹாலுக்கு சென்றாள்.அங்கே அவளுக்கு முன்பாக அமர்ந்து இருந்த பத்மாவதியை அவள் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை.

பத்மாவதியின் முகத்தில் இப்பொழுது பொழிலரசி காணும் போது கோபம் ஏற்படவில்லை.மாறாக முள்ளின் மீது அமர்ந்து இருப்பவரை போல தவித்துக் கொண்டு இருந்தார்.முக பாவனைகளால் அவளிடம் மன்னிப்பை வேண்டுவது போல காட்சி கொடுத்தார்.ஆனால் அவரையோ அவரது முக பாவங்களையோ பொழிலரசி ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

 

வள்ளியை பரிமாற சொல்லி உணவு வகைகளை உள்ளே திணித்துக் கொண்டு இருந்தாள்.சாப்பிட்ட உணவின் ருசியை பற்றியோ,அது என்ன உணவு என்று எதையும் உணராமல் அவள் பாட்டிற்கு உணவை வேண்டா வெறுப்பாக தள்ளிக் கொண்டு இருந்தாள்.

 

அந்த நேரம் அவளுடைய கணவன் சாப்பாடு உண்ண அவளுக்கு அருகில் அமர,அவனுக்கு அருகில் அமர்ந்து உண்ணப் பிடிக்காமல் சட்டென எழுந்து கொண்டாள் பொழிலரசி.

 

நகர முற்பட்டவளின் கைகள் அடுத்த நொடி கரும்பாறைக்குள் சிக்கியதை போல உணர்ந்தாள் பொழிலரசி.திரும்பிப் கோபத்தோடு முறைத்தவளை,கண்டும் காணாதவன் போல கண்ணசைவில் வேலையாட்களையும்,பத்மாவதியையும் வெளியேற்றினான் விக்ரமாதித்யன்.

“எனக்கு சாப்பாடு பரிமாறுவதில் இவ்வளவு அவசரம் வேண்டாம் பொழில்.நீ சாப்பிட்ட பிறகு பரிமாறலாம்.இல்லைனா இங்கே என்ன ஆட்களுக்கா பஞ்சம்.அவங்க யாராவது பரிமாறுவாங்க.அதனால உன்னை சிரமப் படுத்திக்காதே…”அறிவுரை சொல்வது போல விக்ரமாதித்யன் சொல்லவும் அவளின் ஆத்திரம் இன்னும் மிகுந்தது.

 

“இந்த வீட்டில் எப்போ விஷம் சமைக்கறாங்கன்னு சொல்லு…அப்போ வந்து ஆசை தீர உனக்கு பரிமாறுகிறேன்.”

 

“ஓகே டார்லிங்” என்றவன் ஒற்றை விரலால் அவள் கன்னத்தை தட்ட எழுந்து போக முயன்றவளின் கையை இறுகப் பற்றி இருந்தான் விக்ரமாதித்யன்.

 

“இந்த இடத்தில் இருந்து நீ தப்பவே முடியாது பொழில்.இங்கே தான் நீ இருந்து ஆகணும்.புரியுதா?” இயல்பாக மனைவியின் கையை பற்றியபடி அவன் பேசிக் கொண்டு இருக்க கரங்களை உருவிக் கொள்ள முயன்ற பொழிலரசி ஒரு கட்டத்தில் முயற்சியை கை விட்டு விட்டாள்.

 

அப்படியே குனிந்து அமர்ந்து இருந்த அவள் முகத்தில் இருந்து கண்ணீர் தெளித்து விழுவதை கண்டாலும் அவளை தடுக்கவோ , அணைத்து ஆறுதல் சொல்லவோ அவன் முயற்சிக்கவில்லை.ஒவ்வொரு பிடி சாப்பாட்டையும் ரசித்து உண்டு கொண்டு இருந்தான்.

 

சாப்பாட்டை திருப்தியாக உண்டு எழுந்தவன் கையை தட்டிலேயே கழுவி விட்டு பொழிலரசியின் முந்தானையில் கையை துடைத்துக் கொண்டான்.

 

“அய்யா உங்களை பார்க்க சின்னம்மா ஊரில் இருந்து ஒருத்தர் வந்து இருக்கார்.உள்ளே வர சொல்லட்டுமா?”என்று பணிவாக கேட்டபடி வேலைக்காரன் வந்து நிற்க விக்ரமாதித்யனின் கண்கள் ஒரு நிமிடம் இடுங்கியது.பொழிலரசியின் கண்களோ பிரகாசமானது.

 

“வரச்சொல்” என்று உத்தரவிட்ட படி எழுந்து நின்றவன் மனைவியின் கைகளை விடாது அவளையும் எழுப்பி இருவருமாக ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தனர்.

 

வரப் போவது யார் என்று ஆவலாக வாயிலையே பார்த்துக் கொண்டு இருந்தவள் அங்கே வந்து கொண்டு இருந்தவரை பார்த்ததும் முகத்தில் மகிழ்ச்சி பொங்க கணவனின் கையை நொடியில் உதறி விட்டு மின்னலென பாய்ந்து அவர் தோளில் தஞ்சமடைந்தாள்.

 

“மாமா” அவர் தோளில் சாய்ந்து குழந்தையென அழுது கொண்டு இருந்தாள் பொழிலரசி.அது வெகுநாட்கள் கழித்து அவரை பார்த்ததினால் வந்த அழுகையா? அல்லது தன்னை அவர் காப்பாற்றி விடுவார் என்று நினைத்து வந்த ஆனந்த கண்ணீரா என்பது அவளுக்கே புரியவில்லை.

 

“பொழிலரசி…என்ன இது சின்னப் பிள்ளையாட்டம் வந்தவரை வரவேற்காமல் இப்படி அழுது கொண்டு இருக்கிறாய்?”என்று கணவனின் அதட்டலில் சுய உணர்வுக்கு வந்தவள் அப்பொழுது தான் கவனித்தாள் அவரை வாசலிலேயே நிறுத்தி இருப்பதை.சட்டென தவறு செய்த குழந்தை போல மலங்க மலங்க விழித்தவள் நேராக நின்று தன்னுடைய முகத்தை சரி செய்து கொண்டாள்.

 

“சாரி மாமா உள்ளே வாங்க…உங்களை பார்த்த சந்தோஷத்தில் …”

 

“பரவாயில்லை அரசி… இதுக்கெல்லாம் போய் வருத்தப்படலாமா…இன்னும் என்ன சின்ன பிள்ளையாட்டம் அழுகை…”என்று பாசத்தோடு கடிந்து கொண்டார்.

 

“பொழில் அழுதது போதும்.அவருக்கு குடிக்க ஏதாவது கொண்டு வர சொல்” வீட்டின் தலைவனாக உத்தரவிட்டான் விக்ரமாதித்யன்.

 

வெகுநாட்கள் கழித்து மாமனை பார்த்ததாலோ என்னவோ பொழிலரசியின் கோபம் பின்னுக்கு போய் இருந்தது.மகிழ்ச்சியுடன் தலை அசைத்து வள்ளியிடம் குடிக்க ஜூஸ் எடுத்து வரும் படி பணித்தவள் மாமனின் கைகளை பிடித்துக் கொண்டு ஊர்க் கதைகளை பேசத் தயாரானாள்.

 

அவரோ விக்ரமாதித்யனின் பார்வையை உணர்ந்தோ என்னவோ அவளின் கைகளை மெல்ல விலக்கிக்கொண்டு கொண்டு தண்ணி அறிமுகம் செய்து கொண்டார்.

 

“வந்து…தம்பி…மா…மாப்பிள்ளை என் பேரு பரசுராமன்.பொழிலரசிக்கு மாமா முறை வேணும்.கூடப் பிறக்காட்டியும் இவங்க அம்மா எனக்கு தங்கச்சி தான்.உங்க கல்யாணத்தின் போது என்னால அதுல கலந்துக்க முடியலை.ஊரில் இவங்க அப்பாவோட காரியங்களை எல்லாம் எடுத்து செய்ய வேண்டி இருந்தது.நேத்து கூட இங்கே வர எவ்வளவோ முயற்சி செய்தேன்.ஆனா நேத்து தான் இவங்கப்பாவுக்கு காரியம் வச்சு இருந்தாங்க.அதான் வர முடியலை.தப்பா எடுத்துக்காதீங்க”

 

“பரவாயில்லை.இப்போ என்ன விஷயமா வந்து இருக்கீங்க?”

 

“ஒண்ணும் இல்லை தம்….மாப்பிள்ளை அரசியையும் உங்களையும் மறுவீட்டு விருந்துக்கு கூட்டிட்டு போகலாம்னு வந்தேன்”

 

எனக்கு இந்த பார்மாலிட்டில எல்லாம் நம்பிக்கை இல்லை…இதெல்லாம் வேணாமே.அதுவும் இல்லாம எனக்கு இப்போ உடனே அங்கே கிளம்பி வர முடியாது.நேத்து தான் ரிஷப்ஷன் வேற நடந்து இருக்கு.எனக்கு இங்கே நிறைய வேலை பாக்கி இருக்கு.ஸோ…”

 

விக்ரமாதித்யன் பேசுவதை உள்ளுர வெறுப்போடு கேட்டுக் கொண்டு இருந்தாள் பொழிலரசி. ‘கொஞ்சாமாவது மனசில் குற்ற உணர்ச்சி இருக்கா பார்.எவ்வளவு இயல்பா பேசுறான்.இந்த வாய்ப்பை விட்டு விடக்கூடாது கூடாது.மறுபடியும் இதே மாதிரி வாய்ப்பு கிடைப்பது அரிது.

 

ஊருக்கு போனால் எனக்கு சுயநினைவு இல்லாத அந்த மூன்று வருடத்தில் என்ன நடந்தது என்று அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.அதே மாதிரி அப்பா சம்பந்தமா ஏதாவது உண்மை தெரிய வந்தாலும் வரலாம் என்று நினைத்தவள் விக்ரமாதித்யனை முந்திக் கொண்டு பேசினாள்

 

“நீங்க வராட்டி என்ன…நான் மட்டுமாவது போறேன்.”

 

“அரசி அப்படி எல்லாம் ஊருக்கு தனியே வரக்கூடாதுமா.கல்யாணம் முடிச்சு மறு வீட்டுக்கு புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் சேர்ந்து தான் வரணும்.”

 

“அவருக்குத் தான் நேரமில்லைன்னு சொல்றாரே…அவரை எதுக்கு தொந்தரவு செய்துகிட்டு நாம போகலாமே”விடாமல் தன் பிடியிலேயே நின்றாள் பொழிலரசி.

 

பொழிலரசியின் முக உணர்வுகளை துளைக்கும் பார்வையுடன் பார்த்துக் கொண்டு இருந்த விக்ரமாதித்யனின் முகத்தில் நொடியில் ஒரு குறுஞ்சிரிப்பு மின்னலிட்டு மறைந்ததை அவள் கவனிக்கவில்லை.

 

“சரி பொழில் ஊருக்கு போய்ட்டு வரலாம்.ஆனா இன்னைக்கு வேண்டாம்.நாளைக்கு போகலாம்.”

 

“ஏன் ? ஏன்? நான் இன்னைக்கு போறேனே?” தன்னுடைய பதட்டமே தன்னை காட்டிக் கொடுத்து விடும் என்பதை அறியாமல் பேசினாள் பொழிலரசி.

 

“திலகவதி அக்காவோட வீட்டுக்காரர் இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வரார்.அவர் வரும் போது நீ இங்கே இருக்க வேணாமா? அதனால தான் சொல்றேன்.நாளைக்கு போய்க்கலாம்.இப்போ இவருக்கு மாடியில் ஒரு அறையில் ஒதுக்கி இவரை தங்க வை என்று சொன்னவன் ஒற்றை தலை அசைப்பில் அவரிடம் இருந்து விடை பெற்று சென்று விட்டான்.

 

அங்கிருந்து வேகமாக அவரை அழைத்துக் கொண்டு நகர்ந்தவள் வள்ளியிடம் கேட்டு விருந்தாளியின் அறைக்கு அழைத்து செல்லுமாறு பணித்தாள்.மூவரும் ஏறியது லிப்ட் மூன்றாவது மாடியை நோக்கி பயணித்து பொழிலரசி இதற்கு முன் தங்கி இருந்த அறைக்கு நேர் எதிரில் இருந்த அறைக்குள் வந்து சேர்ந்தனர்.

 

“நீ கிளம்பு வள்ளி…கொஞ்ச நேரம் பொறுத்து இவருக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வா…” என்று சொல்லிவிட்டு வள்ளி அங்கிருந்து நகர்ந்ததை உறுதிபடுத்திக் கொண்டு அவளுடைய மாமாவிடம் பேச ஆரம்பிக்கும் தருணம் சரியாக இன்டர்காம் ஒலித்தது.

 

“ஒரு நிமிஷம் மாமா” என்றவள் போனை எடுத்து காதில் வைக்க எதிர்புறம் வழக்கம் போல அவளது கணவனே தான்.

 

“என்ன பொழில் உங்க மாமாவை பார்த்ததும் ரொம்ப சந்தோசமா இருக்க போல”

 

“ஏன் உனக்கு பொறுக்கலையா?”

 

“உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் அதான்…”

 

“என்ன விஷயம்.சீக்கிரம் சொல்லித் தொலை”

 

“இல்லை அந்த ரூம்ல மினி வாய்ஸ் ரெக்கார்டர் இருக்கு.நீ அங்கே என்ன பேசினாலும் இங்கே இருந்தபடியே அதை என்னால் கேட்க முடியும்.அதனால கொஞ்சம் பார்த்து பேசு…இல்லைனா எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல…உன் மாமா தான் உருப்படியா வீடு போய் சேருவாரான்னு தெரியாது”என்று சொல்லி விட்டு போனை வைத்து விட சிலையென மாறிப் போனாள் பொழிலரசி.

காதலாகும்…

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!