அத்தியாயம் 19

‘உனது குரல் என்னை வேட்டையாடிவிட்டது’ என்று கூறியவனை குழப்பமாக பார்த்தாள்.

‘இவன் என்ன சொல்கிறான்?’

அவனது முகத்தைக் கொண்டு எதையும் கண்டுக்கொள்ள முடியவில்லை. கங்குகளின் வெளிச்சம் பட்டு அந்த இடமே சிவந்து கிடந்தது. அதே சிவப்பு அவனது இறுக்கமான முகத்திலும் பிரதிபலித்து, அவளது மனதுக்குள் ஒருவிதமான நடுக்கத்தை பரவ செய்தது.

ஈர மேகங்கள் கீழிறங்கி வரும் போல, சில்லிப்பு உடலை துளைத்தது.

சற்று நேரம் மெளனமாக நெருப்பு கங்குகளை பார்த்துக் கொண்டிருந்தவன், “ஆனா…” என்று ஆரம்பிக்க, அவனது முகம் இன்னமுமே சிவந்து போனது. கோபத்தினாலா?

“என்கிட்ட வாலாட்டின யாரையுமே எனக்கு விட்டு வெச்சு பழக்கமில்ல மிர்ச்சி…”

ஒவ்வொரு வார்த்தையாக கூறியவனை வெறித்துப் பார்த்தாள், கூடவே வெகுவான குழப்பமும்!

விளக்கம் கோராமல் அவனையே பார்த்து கொண்டிருக்க, அதே இறுக்கத்தோடு அவன் தொடர்ந்தான்.

“பொறுக்கின்னு நீ சொன்ன வார்த்தை என்னை எவ்வளவு பாதிச்சுதுன்னு தெரியுமா?” என்று நிறுத்தியவனின் முகம் கோபத்தில் ஜ்வலித்தது.

முன்பே அவன் வாயால் கேட்டதுதான். ஆனாலும் அவளது முகம் அருவருப்பில் சுருங்கியது. ஆனால் அவன் நினைப்பது எப்படி சரியாகும்? எத்தனையோ பெண்கள், தாங்களை இடிக்கும் ஆண்களை சொல்லும் பதம் தானே அது? அதற்காக இப்படி ஒரு பழி வாங்குதலா? கண்களை இருட்டிக் கொண்டு வந்துவிடும் போல தோன்றியது.

“ஆனா ஷ்யாம்… இது ரொம்ப நார்மல்… எந்த பொண்ணும் என்னை வந்து இடிச்சுக்கோன்னு நிற்க மாட்டா… கண்டிப்பா இந்த வார்த்தைய தான் சொல்வா…” என்று ஆரம்பித்தவளை, கைகாட்டி நிறுத்தினான்.

“ஆனா என்கிட்டே எந்த பொண்ணும் இது மாதிரி சொன்னதில்ல…” பற்களை கடித்துக் கொண்டு அவன் கூறியது அவளுக்குள் இன்னமுமே நடுக்கத்தை விதைத்தது.

இவனை என்ன சொல்வது? தான் பிடித்த முயலுக்கு மூன்று காலென்று வாதிடுபவனை காணும் போது அவளது இரத்த அழுத்தம் கூடிக்கொண்டிருந்தது.

“அதோட அன்னைக்கு என் மேல செருப்பை எறியற…” என்றவனின் குரலில் அவ்வளவு அழுத்தம். கண்கள் கோபாக்னியால் கொதித்தது.

இன்னும் எத்தனை முறை இதை சொல்லி காட்டுவானென்று திடுக்கென்றது அவளது மனம். ஆனாலும் அது அவளது தவறல்லவா! அவளது அவசர புத்தியை அப்போது நொந்து கொண்டாள். ஆனாலும் அதை குறிந்து முன்பே பேசி வருத்தமும் தெரிவித்தாயிற்று. அது வேண்டுமென்றே செய்த ஒன்றல்ல என்றும் அவள் தெளிவுப்படுத்தியதுதான் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் இவன் மறக்கவே மாட்டானோ?

“முன்னாடியே உன்கிட்ட சொல்லிட்டேன்… நான் வேணும்ன்னே பண்ணதில்லை. அப்ப கைல என்ன இருக்குன்னு கூட நான் பார்க்கலை ஷ்யாம்… கண்டிப்பா நான் இன்டென்ஷனலா பண்ணவே இல்ல… இதை நான் இங்க வந்த முதல் நாளே சொல்லிட்டேன்…”

அவன் அலட்சியமாக உதட்டை வளைத்தான்.

“சொன்னா? நீ பண்ணது இல்லைன்னு ஆகிடுமா?” கேலியாக கேட்டாலும் அவனது குரலிலிருந்த சீற்றம் அவளை அதிர வைத்தது.

அதுவும் அந்த தனிமையான சூழ்நிலையும், இரவும், அவனது கோபமும் அவளுக்கு தன்னுடைய இந்த ட்ரெக்கிங் முடிவு தவறோ என்று எண்ண வைத்தது. தானாக வந்து இவனிடம் இன்னமும் சிக்கிக் கொண்டேனா என்று தன்னை நொந்து கொண்டாள்.

அதுவரையிருந்த இதமான மனநிலை தொலைந்து மனம் இறுக்கத்தை தத்தெடுத்தது.

அவனருகில் அமர பிடிக்கவில்லை. எழுந்து கொண்டாள். அதுவரை இருவருமே சரிக்கு சரி வாதிட்டபடி இருந்தாலும் ஏதோ ஒரு இடத்தில் நட்பு இழையோடிக் கொண்டிருந்தது. இப்போது அந்த நட்பிழைக்கு அர்த்தமே இல்லாதது போல தோன்றியிருந்தது மஹாவுக்கு. அவளிடம் சரிக்கு சரியாக வாதிட்ட ஷ்யாம் எங்கே?

அந்த ஷ்யாமை அவளுக்கு பிடித்திருந்தது, ஒரு நண்பனாக அவனிடம் வெளிப்படையாக பேச முடிந்தது. அந்த நம்பிக்கையை அவன் தந்திருந்தான். ஆனால் இப்போது அதற்கு முற்றிலும் மாறாக பேசிக் கொண்டிருந்தவனை காணும் போது மனதுக்குள் தடதடத்தது.

இதில் யார் தான் உண்மை?

இவன் முன் உடைய முடியாது. உடையவும் கூடாது. மனதுக்குள் உறுதியெடுத்துக் கொண்டவள், நிமிர்ந்து நின்று அமர்ந்திருந்த அவனை பார்த்து,

“சரி… அதுக்காக என்ன பண்ணனும்ன்னு நினைக்கற?” என்று சற்றும் அச்சமில்லாமல் கேட்க, அவனது புருவம் ஏறி இறங்கியது.

இதுவரை பேசிக்கொண்டிருந்த மஹா அவனது நட்பை விரும்பியவள். வாதிட்டாலும் கோபப்படுத்தினாலும் அவள் நண்பி. ஆனால் இவள் வேறு என்பதை அவளது ஒற்றைப் பார்வையில் புரிந்து கொண்டான்.

அத்தனை அழுத்தமாக அவன் மேல் பதிந்தது அவளது பார்வை, கிஞ்சிற்றும் தயக்கமில்லாமல்.

“நீ எதுவுமே பண்ண வேண்டாம் மிர்ச்சி… எல்லாம் தானா நடக்கும்…” சிறு சிரிப்போடு அவன் கூறினாலும், அதை அவளால் ரசிக்க முடியவில்லை.

“அப்படி என்ன நடக்கும்?” கத்திமுனை கேள்வி தான், அவளிடமிருந்து, கூர்மையாக!

“என்ன வேண்ணா நடக்கும் டார்லிங்…”

“சும்மா பயமுறுத்தாத ஷ்யாம்…” முறைத்தபடி அவள் கூற, அவனது உதடுகள் கேலியாக வளைந்தது.

“இதுவரைக்கும் உன்கிட்ட ஏதாவது தப்பா நடந்துருக்கேனா?” எழுந்து நின்று கையை தட்டிக் கொண்டவன், அவளை நேராக பார்த்தபடி கேட்க, அவளது தலை அவளையும் அறியாமல் ‘இல்லை’ என்று ஆடியது.

“ஆனா வெளிய எனக்கென்ன பேர் தெரியுமா?” அவளை போலவே அதே கூர்மையோடு அவன் கேட்க,

அவளுக்கென்ன தெரியும்? அவனாக சொல்வதை தவிர, அவனை பற்றி பெரிதாக அவள் கேள்விப்பட்டதில்லை. கார்த்திக் அறிந்தளவு அவனை இவள் அறிந்ததில்லையே.

“என்ன?”

“இவன் கிட்ட வேலையாகனும்னா அழகான பொண்ணை அனுப்பினா போதும்னு சொல்வாங்க…” சற்றும் எந்த உணர்வையும் காட்டிக் கொள்ளாமல் கூறியவனின் தொனியில் பக்கென்று இருந்தது.

உடல் தூக்கி வாரிப் போட நிமிர்ந்து பார்த்தவளை, குறுகுறுப்பான பார்வையோடு பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கண்களிலிருந்து அவளது சிறு அதிர்வும் கூட தப்பவில்லை.

“உன்னோட வீர பிரதாபத்தை எதுக்கு இப்ப சொல்லிட்டு இருக்க?” பயத்தை வெளிகாட்டிக் கொள்ளாமல் எரிச்சலாக இவள் கேட்க,

“காரணமிருக்கு…” என்றவன், கையைக் கட்டிக் கொண்டு, “அப்படி சொல்றதுல பாதி பொய் இருந்தாலும், பாதி உண்மையுமிருக்கு மிர்ச்சி…” என்று கண்ணை சிமிட்டியவன், விஷமமாக புன்னகைத்தான்.

“அதாவது என்னதான் என்னை வளைக்க யாரை அனுப்பினாலும், எதையும் நான் வேண்டாம்னு சொன்னதில்லை… ஆனா என் இஷ்டப்படிதான் நடப்பேன்… அதை யாராலும் மாத்தவே முடியாது…” வெகு இயல்பாக சிறு புன்னகையோடு கூறியவனை கசப்பாக பார்த்தாள்.

“அதனால என்ன? நீ எப்படி நாசமா போனா எனக்கென்ன? இந்த விஷயமெல்லாம் எனக்கு அனாவசியம்…” என்று முக சுளிப்போடு கூறிவிட்டு டெண்ட்டுக்கு திரும்ப எத்தனித்தவளை அவளது கையை பிடித்து நிறுத்தினான் ஷ்யாம்.

அவன் தொட்டது கை தான் என்றாலும், அவளது முழு உடலும் எரிந்தது.

“கையை விடு ஷ்யாம்…” நிதானமாக அழுத்தமாக வெளிவந்தன வார்த்தைகள்.

“பேசி முடிச்சுட்டு போ…” அவனது வார்த்தைகளிலும் உஷ்ணம்.

“தேவையில்லை… இந்த பேச்சை கேக்க எனக்கு பிடிக்கல…” அவளது முகம் அருவருப்பில் கூம்பியிருந்த்து.

“கேட்டுத்தானாகனும்… வேற வழியில்லை…” என்று அவளது கையை இன்னமும் அவன் அழுத்தமாக பிடிக்க, அவள் வலியில் முகம் சுருங்கினாள்.

“சரி… கையை விடு…” எரிச்சலாக கூறியவளை ஆழ்ந்து நோக்கியவன், மெல்ல அவளது கையை விட்டான்.

“மெயின் மேட்டரை நீ இன்னும் கேக்கவே இல்ல… நான் எப்படிப்பட்டவன்னு தெரிஞ்சுக்க மிர்ச்சி…” கிண்டல் தொனியில் கூறியவனை, ஏறிட்டு பார்த்தாள்.

சற்று நேரம் மெளனமாக அடங்கிக் கொண்டிருந்த நெருப்புக் கங்குகளை பார்த்தான். நெருப்படங்கியதால் குளிர் அதிகமாக உறைக்கத் துவங்கியிருந்தது. அதோடு குளிர்காற்று வேகமாக தாக்கவும், உடல் வெடவெடத்தது. எதிரிலிருந்தவளை கூர்மையாக பார்த்தான். கைகளை கட்டிக் கொண்டு குளிரை தாக்குப்பிடித்து நின்று கொண்டிருந்தாள்.

அவளது அசாத்திய தைரியம், அவனை நிச்சயமாக ஆச்சரியப்படுத்தியது. இதே இடத்தில் வேறு பெண்களாக இருந்தால் அழுது அரற்றி ஆர்பாட்டம் செய்து இருப்பார்கள் என்பதுதான் உண்மை.

ஆனால் அவன் எப்படி பயமுறுத்தி பார்த்தாலும் கொஞ்சமும் அசையாமல், முக்கியமாக ஒரு சொட்டு கண்ணீரை சிந்தாமல், துணிச்சலாக நின்று கொண்டிருந்தவள், அவனைப் பொறுத்தமட்டில் நிச்சயம் ஆச்சரியக்குறிதான்!

அந்த ஆச்சரியக்குறியை கேள்விக்குறியாக்கி பார்க்க நினைத்தான் அவன்!

“என்னோட இப்ப வரைக்கும் த்ரீ டேஸ் ஸ்பென்ட் பண்ணிருக்க… இது உண்மையா?” என்று அவன் கேட்க, அவள் குழப்பமாக தலையசைத்தாள்.

“ம்ம்ம்…”

“இதே தான் வெளிய இருக்கவங்களும் சொல்வாங்க… என்னோட த்ரீ டேஸ் இருந்தன்னு…” அலுங்காமல் குலுங்காமல் கத்தியை பாய்ச்சினான் ஷ்யாம்.

ஒரே வாக்கியம் தான். ஆனால் எத்தனை மாறுபாடு… அர்த்தங்கள் அனைத்தும் அனர்த்தங்கள்! அவளது வாழ்க்கையே கேலிக்குரியதாகிவிடுமே!

அவனை அதிர்ந்து பார்த்தவளது குரல் வளையை ஏதோவொன்று அடைத்தது. பேச்சு வெளியே வராமல் திணறியது. கண்கள் கலங்கும் போல தோன்றினாலும், மூச்சை இழுத்துப் பிடித்து, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“சரி… அதனால?”

“ம்ம்ம்… அதனால… எனக்கொண்ணும் புதுசா லாஸ் இல்ல… ஆனா உனக்கு?” என்று புருவத்தை ஏற்றி இறக்கி கேட்டவனுக்கு இரக்கம் என்பதே இல்லையா என்று தான் கேட்க தோன்றியது!

மெளனமாக அவனைப் பார்த்தாள். அந்த பார்வையில் ஆயிரம் கேள்வி தொக்கி நின்றது. அவனை அணுவணுவாக வெட்டி போடும் கோபமிருந்தது. நீயெல்லாம் ஒரு மனிதனா என்ற எள்ளலிருந்தது!

“நீயென்ன சீதாதேவியா? ராவணனோட இருந்துட்டு வந்தாலும் அதே பியுரிட்டியோடத்தான் இருக்கேன்னு காட்ட அவ தீக்குளிச்ச மாதிரி, நீயும் தீக்குளிச்சு உன்னோட பியுரிட்டியை ப்ரூவ் பண்ணிக் காட்டுவியா?” கேலியாக அவன் கேட்ட கேள்வி அவளை வெகுண்டெழ செய்தது.

ஆனால் தன்னை வெகுவாக கட்டுப்படுத்திக் கொண்டாள். உணர்ச்சிவசப்பட்டால் தன்னால் பதில் கொடுக்க முடியாமல் போய்விடக் கூடும் என்பதில் தெளிவாக இருந்தாள்.

“பியுரிட்டின்னா என்ன ஷ்யாம்?” அவன் எதிர்பார்த்ததிற்கு மாறாக அவள் நிதானமாக கேட்ட கேள்வி அவனை வியப்பிலாழ்த்தியது.

என்ன பதில் சொல்வது என்று யோசித்தான். அவனது இயல்புக்கு அது அபத்தமான வார்த்தையாக தோன்றியது.

“நான் சொல்லட்டா?” என்று கேட்டவள், நிதானமாக, “அது உடம்பு சம்பந்தப்பட்டதோ, மனசு சம்பந்தப்பட்டதோ கிடையாது… அது ஆன்ம சுத்தி…” என்று சற்று இடைவெளி விட்டவள்,

“நம்பிக்கை, நேர்மை, உறுதி, துணிவு… இதெல்லாம் தான் நீ சொன்ன பியுரிட்டிக்கு டெபனிஷன். நம்ம அம்மா எந்தளவு சுத்தமானவங்கன்னு நம்பறமோ, அதே அளவு நம்மை நம்பி வந்தவங்களும் சுத்தமானவங்கன்னு நம்பிக்கை இருக்கணும்… அவங்களுக்காக உயிர்ல பாதியை எழுதி தர்ற அளவு உறுதி இருக்கணும்… அவங்களும் நமக்கு நேர்மையாத்தான் இருப்பாங்க… அதே அளவு நாமளும் நேர்மையா இருக்கனும்ன்னு நினைக்கணும்… எந்த பிரச்சனை வந்தாலும் சேர்ந்தே பார்க்கற துணிவிருக்கணும்…

இதெல்லாம் தான் ஒரு ரிலேசன்ஷிப்க்கு அடிப்படையான பியுரிட்டியோட டெபனிஷன்… இது இல்லாம நீ சொல்ற அந்த வார்த்தைய பிடிச்சுட்டு தொங்கற, நீ உருவாக்கற பொய் பிம்பத்தை நம்பற எவனும் எனக்கு வேண்டாம்… சமூகம் எனக்கு கொடுக்கற பேரைப் பத்தி எனக்கு கவலை இல்ல… என்னோட ஆன்மா சுத்தமா இருக்கு… அவ்வளவுதான்…” என்றவள்,

“உன்னோட ஆன்மாவை சுத்தப்படுத்து ஷ்யாம்… இப்பவும் சொல்றேன்… கற்புங்கறதும் பியுரிட்டிங்கறதும் நேர்மைங்கறதும் உடம்பு சம்பந்தப்பட்டது இல்ல… அது உனக்கும் பொருந்தும்…”

ஆழமான அவளது வார்த்தைகள் அவனை வியப்பிலாழ்த்தினாலும், அதை காட்டிக்கொள்ளாமல்,

“ஐ அம் நாட் எ சென்டிமென்டல் ஃபூல் டார்லிங்…” என்று அவளது தோளை தட்டிக் கொடுத்தவன், “சரி போய் படு… தூக்கம் வருதுன்னு சொன்னல்ல…” எதுவுமே நடக்காதது போல கூற, கேள்வியாக பார்த்தாள்.

‘இவன் என்ன ரகம் ஆண்டவா…’

“என்ன பார்க்கற டார்லிங்? நானும் வரணுமா?” என்று கண்ணடித்து கேலியாக கேட்டவனை முறைத்தாள்.

“நீதானே சொன்ன… கற்புங்கறது உடம்பு சம்பத்தப்பட்டது இல்லன்னு… நீ எனக்கு தான் சிக்னல் தர்றியோன்னு நினைச்சுட்டேன்…” என்று அடக்கப்பட்ட சிரிப்போடு அவன் கூற, அவளது பார்வையில் இப்போது நெருப்புப் பொறி பறந்தது.

“ரொம்ப பேசின கத்தியெடுத்து ஏதாவது ஒரு நரம்பை கட் பண்ணி விட்டுடுவேன்… என்ன?! பண்ண மாட்டேன்னு நினைக்கிறியா? நான் டாக்டர்… அதை ஞாபகம் வெச்சுக்க…” உக்கிரமாக கூறியவளை பார்த்து வாய்விட்டு சிரித்தான்.

“நீ செய்ய மாட்டேன்னு சொன்னனா? செருப்பெடுத்து எறிய தெரிஞ்ச உனக்கு கத்தியெடுக்க தைரியம் வராதா என்ன?” கேலியாக அவன் கேட்க, சட்டென்று மௌனமாகினாள். இவன் எப்போதுதான் இந்த விஷயத்தை விடுவான்?

“ப்ச்… அதை விட்டுடேன் ஷ்யாம்… ப்ளீஸ்…” கண்ணையும் மூக்கையும் சுருக்கிக் கொண்டு அவள் கேட்ட தோரனையை ரசித்தான். அத்தனை நேரம் வரை அவனோடு வாதாடிக் கொண்டிருந்தவள் அவள் என்பதும், அவளிடம் கொதித்துக் கொண்டிருந்தவன் அவன் என்பதும் தற்காலிகமாக மறந்து போனது.

“அதுக்கு தான் உன்னை பாட சொன்னேன்… பாடினா விட்டுடறேன்… என்ன டீல் ஓகே வா?” சிரித்தபடி ஆரம்பித்த இடத்துக்கே அவன் வந்தபோதுதான் அவனது நோக்கமே புரிந்தது.

‘பாவி இதற்கா இத்தனையும்’

“அட ச்சீ பே…” என்றபடி படுக்க சென்றவள், சூரியனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஷ்யாமை ஆழ்ந்து நோக்கினாள்.

‘இவனை பாம்பென கொள்வதா? பழுதென்று நினைப்பதா?

மணி என்னவென்று வாட்சை திருப்பிப் பார்த்தாள். விடியற்காலை ஆறாகப் போவதாக காட்டியது. இந்த நேரத்தில் எல்லாம் இவள் எழுந்ததே இல்லை. திருப்பள்ளியெழுச்சியை பைரவி பாடாமல் எழுவது என்பது இவளால் ஆகாத ஒன்று.

கீழ்த்திசை வானில் ஆதவன் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நேரம். அவனது பொன்னிற கதிர்கள் ஷ்யாம் மேல் தெறித்து அவனையும் பொன்னிறமாக்கிக் கொண்டிருந்தது.

அவன் கைகளை கட்டிக் கொண்டு நின்ற தோரணை மனதுக்குள் பச்சக் என்று ஒட்டிக்கொண்டது.

எழும் போதே வயிற்றுக்குள் கலகம். கண்டிப்பாக ரெஸ்ட் ரூம் போயே ஆக வேண்டும் என்பது போல அவசரம். ஆனால் இங்கு எங்கு ரெஸ்ட் ரூமை தேட? அவளது மனது பகீரென்றது. இடத்துக்கு பஞ்சமில்லை ஆனால் மறைவாக இருக்குமா? முந்தைய தினம் மறைவான இடங்களாக பார்த்துக் கொடுத்து காவலாக நின்றதும் அவன் தான்.

அவனது அந்த செய்கைகளில் எல்லாம் நெகிழ்ந்து தான் போனது மனது. அவளது முகத்தை பார்த்தே அவளது அவஸ்தைகளை அவன் கண்டுபிடித்து விடுகிறானே. அது தான் எப்படி என்று யோசித்தாள். தன்னால் அவனது முகத்தைக் கொண்டு எதையுமே கணிக்க முடியவில்லையே!

அவன் மேட்டில் இருப்பான் என நினைத்தால் பள்ளத்தில் இருக்கிறான். அவன் பள்ளத்தில் தான் இருப்பான் என அசட்டையாக இருந்தால் அவன் மேட்டில் தலை கீழாக தொங்குகிறான். இவனை எப்படித்தான் கணிப்பது? அதிலும் முந்தைய இரவு அவன் காட்டிய முகம், அடிவயிற்றில் சிலீரென்ற உணர்வை தந்தது!

சரி… இந்த யோசனைகளை விடு… என்னை கவனி என்றது வயிறு!

அவள் எழுந்த சப்தத்தை உணர்ந்தவன், திரும்பி அவளை பார்க்க, அவளோ அவஸ்தையாக நெளிந்து கொண்டிருந்தது புரிந்தது.

சிறு சிரிப்போடு, “இங்கருந்து இருபதடி தூரம் போனா சின்ன ஓடை ஒன்னு இருக்கும் மஹா… பக்கத்திலேயே பெரிய பாறையும் இருக்கும்… மறைவா இருக்கும்… யாரும் வர மாட்டாங்க… போய் ரிஃப்ரெஷ் பண்ணிட்டு வந்துடு… நான் இங்கயே இருந்து பார்த்துக்கறேன்…” என்றவனை நன்றியாக பார்த்தாள்.

இரவு என்னதான் கோபத்தில் பொங்கினாலும், அவளுக்கு தேவையென்று வந்தபோது அவன் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. அவனது அந்த செய்கையெல்லாம் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

என்னதான் வாய்க்கொழுப்பு அதிகமென்றாலும் இது போன்ற கவனிப்பில் எல்லாம் இவனை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது!

‘ச்சே… நம்மளை மாதிரியே சொரணை கொஞ்சம் கம்மி போல…’ என்று நினைக்கும் போதே சிரிப்பு பொங்கியது. அடக்கிக் கொண்டாள். மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டால்?

அதிலும் திருட்டுத்தனமாகவெல்லாம் வீடியோ எடுத்து ரசிப்பவர்களுக்கிடையில் கொஞ்சம் கூட சங்கடத்தை கொடுக்காமல் கண்ணியம் காப்பவனா அத்தனை மோசமானவன்? அதிலும் அவன் வாயாலேயே வாக்குமூலமும் கொடுத்திருக்கிறானே!

அந்த வாக்குமூலத்தைக் கூட யாரும் அவ்வளவு எளிதாக வெளிப்படையாக சொல்லி விட மாட்டார்கள். மனிதனின் இயல்பே அப்படித்தான். தான் நல்லவன்! சுற்றியுள்ளவர்கள் அனைவருமே மோசமானவர்கள் என்று சொல்பவர்களுக்கு மத்தியில், இதுதான் தான் என்று தைரியமாக கூறும் நேர்மை யாருக்கு வரும்?

நினைக்கும் போது அவளுக்கு பெரும் வியப்பாக இருந்தது. அவன் மேலிருந்த கசப்புகளை எல்லாம் தாண்டி அவனை சற்று ஆச்சரியமாக பார்க்க தோன்றியது!

ரிஃப்ரெஷ் செய்து கொண்டு வந்தவள், “குளிக்கனுமே…” என்று இழுக்க,

“ம்ம்ம்… இங்க உனக்காக தனியா ஷவரெல்லாம் போட்டு வெச்சுருப்பாங்க… போய் குளிச்சுட்டு வா…” வேடிக்கையாக சொன்னவனை முறைத்தாள்.

“கசகசன்னு இருக்கு…”

“இரு தெய்வமே… எல்லாத்தையும் பேக் பண்ணனும்… இன்னும் கொஞ்ச தூரம் நடக்கணும்… அதுவரைக்கும் அனத்தாம வா… ஏதாவது புலம்பின… இங்க கரடி நடமாட்டம் அதிகம்… அதுகிட்ட உன்னை விட்டுட்டு போய்டுவேன்…” என்று மிரட்டியவனை ஒன்றும் சொல்லாமல் வாய்க்குள் முணுமுணுத்தபடி பார்த்தாள்.

டெண்ட்டை பிரிக்கத் துவங்கியிருந்தான் ஷ்யாம். அவனுக்கு உதவிக் கொண்டே,

“நைட் எப்ப தூங்கின? நான் தூங்கற வரைக்கும் நீ தூங்கவே இல்ல… நான் எழும் போதும் முழுச்சுட்டு இருக்க?” வேலை செய்தபடியே கேட்டவளை திரும்பிப் பார்த்தவன்,

“எனக்கு அவ்வளவா தூக்கம் வராது…” என்று கூற, அவள் அவனை யோசனையாக பார்த்தாள்.

“ஹெல்தி பாடி அன்ட் மைன்ட்டுக்கு கண்டிப்பா எட்டு மணி நேர தூக்கம் அவசியம் ஷ்யாம்…”

“நான் உன்கிட்ட முதல்லையே சொல்லிருக்கேன்… எல்லா அட்வைஸ் ஆணியும் எனக்கு புடுங்க தெரியும்… நீ ஒன்னும் புடுங்காத…” சுள்ளென்று அவன் கூற, எரிச்சலாக அவனைப் பார்த்தாள்.

“உன்னையெல்லாம் ஒரு மனுஷன்னு நினைச்சு பேசறேன் பாரு… என் புத்தியை…” என்று அவள் ஆரம்பிக்க,

“ம்ம்ம்… சொல்லு… அதுதான் உனக்கு பழக்கமாச்சே… செருப்பை தூக்கறது…” பல்லைக் கடித்துக் கொண்டு கூறியவனை பார்த்து இரு கை கூப்பி வணங்கினாள்.

“சாமி… இனிமே நான் செருப்பே போட மாட்டேன்… என்னை விட்டுடேன்…” பாவமாக கூறியவளை பார்த்து பக்கென்று சிரித்து விட்டான்.

“இந்த சிரிப்புக்கொன்னும் குறைச்சலில்லை…” தனக்குள்ளாக இவள் முனக, அவன் கவனித்துக் கொண்டுதானிருந்தான். ஆனாலும் சற்று நேரம் மெளனமாக கழிந்தது.

“தூங்கறதுக்கு டேப்லெட் போடுவேன்… நேத்து மிஸ் பண்ணிட்டேன்… அதான் தூக்கம் வரல…” சிறிய குரலில் கூறியவனை என்ன சொல்வதென்று தெரியாமல் புரியாத பார்வை பார்த்தாள்.

“நேத்து அவ்வளவு நடந்தோம்… அதுவுமில்லாம லிக்கர் வேற எடுத்த… இது இல்லாம இன்னும் மாத்திரையா? ரொம்ப டேஞ்சரஸ் காம்பினேஷன் ஷ்யாம்…” உண்மையிலேயே அவன் மேல் அக்கறையாகத்தான் கூறினாள்.

“ம்ம்ம்…” என்று ஒப்புக்கொண்டவன், “தினமெல்லாம் லிக்கர் எடுக்க மாட்டேன்… என்னைக்காவது டென்ஷன் ரொம்ப அதிகமா இருந்தா மட்டும் தான்…”

டெண்ட்டையும் மற்ற மற்றவற்றையும் பேக் செய்தவர்கள், பேசிக்கொண்டே நடந்தனர். ஆங்காங்கே குடியிருப்புகள் தென்பட்டன. விவசாய நிலங்களும்.

“உன்னோட வயசுக்கு இந்த டென்ஷன் தேவையான்னு தான் கேப்பேன்… ஆனா அந்த ஆணிய நீ புடிங்கிக்கறேன்னு சொல்லிட்ட…”

“எஸ்… யூ வார் ரைட்…” என்று சிரித்தவன், “பணம் நம்ம கிட்ட இருந்து முதல்ல பிடுங்கறது என்ன தெரியுமா?” என்று கேட்க, என்னவென்ற பார்வையோடு அவனைப் பார்த்தாள்.

“தூக்கத்தையும் நிம்மதியையும் தான்… அதனால தான் நமக்கு காடாறு மாசம், நாடாறு மாசம்…” என்று சிரித்தான். அவளுக்கு புரியவில்லை.

“ஒரு மாசம் முழுக்க ஹைதராபாத், சென்னை பக்கமே தலை வெச்சு படுக்க மாட்டேன்… ஒன்னு இங்க… இல்லைன்னா எங்கயாவது அப்ராட்… லிமிட்டே வெச்சுக்காம நல்லா செலவு பண்ணுவேன்… ஊர் சுத்துவேன்… ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு தான் ஹைதராபாத் போவேன்… அந்த ஒரு மாசம் தான் எனக்கு பெட்ரோல்…” என்றவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

“அனுபவிக்கறடா…” என்று சிரித்தவள், “நூறு ரூபாய்க்கு மேல ஒரு ருபாய் கேட்டாலும் பைரவி என்னை ஆய்ஞ்சு போடும்…” என்று சிரித்தபடியே முடிக்க,

“பைரவின்னா உன் அம்மாதான?”

“ம்ம்ம்… ஆமா”

“அவங்களையும் பேர் வெச்சுத்தான் கூப்பிடுவியா?”

“என் செல்லத்தை நான் எப்படி வேண்ணா கூப்பிடுவேன்…” என்றவள், “மூணு நாளா என்ன பண்ணிட்டு இருப்பாங்களோ? அப்பா, அம்மா, பாட்டி, அண்ணா, பிருந்தா… ப்ச்… எல்லாருமே டென்ஷனா இருப்பாங்க… அண்ணா என்ன பண்ணிட்டு இருக்கானோ?” சின்ன குரலில் கூறிக்கொண்டு வந்தவள், தேய்ந்து மெளனமாகினாள்.

அவளது அந்த மௌனம், அவனுக்கு அவஸ்தையாக இருந்தது.

அவளது தோளை தட்டிக் கொடுத்தான்.

மஹாவுக்கு தொண்டையை அடைத்தது. அழ வேண்டும் போல தோன்றினாலும், அவன் முன் கண்ணீரை சிந்த அவள் விருப்பப்படவில்லை. முதுகில் சுமந்து கொண்டிருந்த சுமை, இப்போது கனம் கூடித் தெரிந்தது.

அவளது மனம் அவனுக்கு புரிந்து இருந்தது. ஆனால் மறுமொழி கூறவில்லை.

தன் தோளோடு அவளது கழுத்தில் கை போட்டு அணைத்துக் கொண்டு நடந்தான்.

அந்த தொடுகை அவளுக்கு தவறாக தோன்றவில்லை. அதில் இருந்தது நட்பு மாத்திரமே. அதை உணர்ந்தவளுக்கு அவனிடமிருந்து விலகத் தோன்றவில்லை.

அந்த மௌனத்தை கிழித்துக் கொண்டு அந்த சப்தம் கேட்டது.

‘வீல்’லென்று எந்த பெண்ணோ ஈனக் குரலில் கத்தும் சப்தம்.

இருவரது நடையும் நின்றது. சப்தம் வந்த திசையை நோக்கி அவன் பார்க்க, அவனது கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு அவனோடு ஒண்டினாள் மஹா.

கருத்துக்களை கூற 

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!