LH 2

LH 2

லிட்டில் ஹார்ட்ஸ்

ஹார்ட் – 2

இதுவரை:

அன்றைய தினம் மாலை, அலுவலகம் முடித்து வந்த அனைவரும், சற்றே சிரிப்புடன் அந்த பெட்டியை கடந்து செல்ல, ஒரு ஜீவன் மட்டும் வரிகளுக்கு இடையில் படித்து, “வேலை கிடைக்கவில்லை” என்பதை வருத்தத்துடன் சொல்லியிருந்த மானசியின் அடிமனதை புரிந்து கொண்டு அவளை நாடிச் சென்றது.“ஹாய் மானசி. என் பேர் காயத்ரி. நான் இங்க பக்கத்தில இந்தியன் பேங்கோட சப்ஸிடரி பேக் ஆஃபீஸ்ல வேலை செய்யறேன்…உங்கிட்ட கொஞ்சம் பேசலாமா?”என கதவை தட்டிய காயத்ரியை பார்த்த கணமே நம் குண்டுக் கண்மணிக்குப் பிடித்துப் போயிற்று.

இனி:

அறையினுள் வந்த காயத்ரி, அவளாகவே மானசியின் கட்டிலில் அமர்ந்து கொண்டு பேசத் துவங்கினாள். “நீ என்ன படிச்சிருக்க மானசி?”என ஆர்வமாக மொழிந்தாள்.

“ஒருவேளை இவங்க ஹெச்.ஆரா இருப்பாங்களோ? நம்ம திறமையை ஷீலா மேடோத்துகிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டு நமக்கு வேலை குடுக்க வந்திருப்பாங்களோ…சரி, எதுக்கும் இருக்கட்டும்…சொல்லி வைப்போம்…ஒர் தடவை பிராக்டீஸ் பண்ணிகிட்ட மாதிரியும் ஆச்சு..”என எண்ணிய மானசி, பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, தான் கல்லூரி காலத்தில் இருந்தே மனப்பாடமாக கண்ணாடி முன் பலமுறைப் பேசி மனதில் பதிய வைத்திருந்த “செல்ஃப் இண்ட்ரொடெக்ஷனை” மடமடவென ஒப்பிக்கத் துவங்கினாள்.

“ஹாய். ஐம் எம்.மானசி. மை நேட்டிவ் இஸ் மண்ணச்சநல்லூர் இன் திருச்சி..மை ஃபாதர் இஸ் ஏ ஃபார்மர்..ஐ ஸ்ட்டீட் எஞ்சினியரிங் அட் சாரனாதன் எனிஜியரிங்க காலேஜ், திருச்சி…”என துவங்கியவளை, “ஏ, நிறுத்து நிறுத்து…இதெல்லாம் இண்டர்வியூல சொன்னா பத்தாதா? எங்கிட்ட ஏன் சொல்லற? ஐஸ்ட் நீ என்ன படிச்சிருக்கேன்னு தானே கேட்டேன்…விட்டா எங்கிட்ட அப்பாயிண்மெண்ட் ஆடர் இம்மீடியட்டா குடுன்னு கேட்ப போல இருக்கே” என கேள்வியுடன் நோக்கினாள் காயத்ரி.

“நீங்க அப்போ ஹெச்.ஆர் இல்லையா?” என வினவியவளை முறைத்த காயத்ரி, “என்னைய பார்த்தா ஹெச்.ஆர் மாதிரியா தெரியுது?” என எதார்த்தமாக வினவ, “சே, சே, சத்தியமா இல்லை…. உங்க ஃபேஸ்கட்டும், சாதுவான முகமும், கொஞ்சம் போல பயந்துட்டே பேசற ஸ்டைலும், முக்கியமா உங்க இன்னொசண்ட் சிரிப்பும், லைட்டா மக்கு வாசம் வீசற உங்க கண்ணு வழியா எனக்குத் தெரியற உள்மூளையும், சே, நோ சிஸ்டர், சத்தியமா நீங்க ஹெச்,ஆரா இருக்க வாய்ப்பே இல்லை…” என சிரிக்காமல் மொழிந்த மானசியை

“இதெல்லாம் என்ன லிஸ்டில சேர்க்கப்படவேண்டிய விலங்கு?”என்பதைப் போல நோட்டம் விட்ட காயத்ரி, “அம்மா, பரதேவதை. உன் அளவுக்கு எனக்கு மூளை கிடையாது. கம்மி தான் ஒத்துக்கறேன். நீ வேலை தேடறேன்னு கேள்விபட்டேன். நாளைக்கு எங்க ஆபீஸ்ல வாக்-இன் இண்டர்வியூ இருக்கு. அதான் சொல்லலாம்னு வந்தேன்…” என இழுத்தபடிக்கு சொல்லிமுடித்து எழுந்து கொண்டாள்.

“ஸே, அவசரப்பட்டு மக்குன்னு சொல்லிட்டியே என் மாடப்புறா”என தன்னைத் தானே ஏசிக் கொண்ட மானசி, “சாரி சிஸ்டர்…சும்மா டமாஸ்….ஐம் லிட்டில் கழண்ட கேஸ்….தப்பா நினைக்காதீங்க…எனிவே, ரெம்பபப நன்றி…நாளைக்கு எங்க எப்போ எத்தனை மணிக்குக்கு மட்டும் சொல்லிட்டீங்கன்னா…நான் பர்ஃபெக்டா ரெடியாகிருவேன்…அப்பறம் என்ன ஜாப்? என்ன வேலை..எவ்வளோ சம்பளம்? என் திறமைக்கு தகுந்த வர்கா இருக்குமா ”என கடமையே கண்ணாக மீண்டும் வசனம் பேசினாள்.

“அம்மா தாயே…இதெல்லாம் உன்னை இண்டர்வியூ பண்ணறவங்களை நச்சரிச்சு. ஐ மீன் கேட்டு தெளிவுபடுத்திக்கோ. சரியா. ஆனா ஒன்னு, எஞ்சினியரிங் படிப்புக்கு இது கொஞ்சம் கம்மி வேலை தான். டேடா அனாலிஸ்ட் மாதிரி….”

“பரவாயில்லை காயு சிஸ்டர்…உங்க முயற்சியை நான் ரொம்ப பாராட்டுரேன். உங்களுக்கு நல்ல மனசு, அதனால தான் இந்த அபலைக்கு வாழ்வளிக்க வந்திருக்கீங்க…அதுவும் எந்த பார்வதியம்மன் பேரையே கொண்டு உங்களுக்கு பேர் வச்சிருக்காங்களே…உங்க பெத்தவங்களுக்கு நிறைய ஞானதிருஷ்டி….” என வாய்க்கு வந்ததை நிறுத்தாமல் பேசிக் கொண்டே போக,

“ஆபீஸ் அட்ரஸ் உங்க ஃபோன் நம்பருக்கு மெசேஜ் பண்ணிடறேன்…” என அங்கிருந்து நழுவப் பார்த்த காயத்ரியை மேலும் புண்படுத்தாது விட்ட குண்டு கண்மணி, “ஓ.கே…குட் ஜாப்….என் நம்பர் வந்து…”

“ஏற்கனவே, ஷீலாக்கா குடுத்துட்டாங்க….நான் அவங்க ரூம் மேட் தான்…”

“ஒ, அப்போ காலையில நான் ரூமுக்கு வந்தப்போ கும்பகர்ண சேவை செஞ்சிட்டு இருந்தது நீங்க தானா?”என மூடிவிடு, தேவையில்லாத நேரங்களில் திறவாதே சீசேம் என்று அதட்டிய போதும், நிற்காது, மனது நினைத்தது உளறிக் கொட்டிய வாயை எங்கே சென்று தொலைப்பது என அறியாவண்ணம் பேசிமுடித்திருந்தாள் மானசி. எங்கே காயத்ரி தவறாக நினைத்துக் கொண்டு விடுவாளோ என தான் பயந்தது போல அல்லாமல், காயத்ரி இயல்பாக கலகலவென நகைத்தாள்.

“ஷீலாக்கா சொன்னாங்க, நீ செம வாயாடின்னு…இப்படி இருப்பன்னு நினைக்கலை….காலையில நீ பார்த்தது இன்னொரு ரூம்மேட் ப்ரீத்தி. சோ, நாளைக்கு காலையில ஆபீஸ் வந்திடு…”என சிரிப்புடனேயே மொழிந்த காயத்ரி, அறையின் வாயில் நோக்கி நகர்ந்தவள், மீண்டும் மானசியைப் பார்த்து திரும்பினாள்.

“அப்பறம், எங்க ஹெச்.ஆர் நிஜமாவே கொஞ்சம் மக்கு தான். உன் ஜோக்கு எதுவும் அவருக்குப் புரியாது. உன் நக்கலும் புரியாது. நீ பேசறதை நீயே அவருக்கு திரும்ப எக்ஸ்பிளைன் பண்ண வேண்டி வந்திரும். அதனால, உன் வாயை கொஞ்சம் மட்டும் கழட்டி ரூம்லையே வச்சிட்டு வந்திடு…இல்லைன்னா வேலை கிடைக்காது..கடைசி வரை கூரியர் புறா வேலை மட்டும் தான்…”என சிரிப்புடன் மொழிந்து செல்ல, இதற்கும் அலட்டிக் கொள்ளாமல், “எஸ் யுவர் ஹானர்” என ஒரு கையையும் காலையும் மடக்கி தலையில் இருந்து இடுப்பளவுக்கு குனிந்து வணக்கம் வைத்த மானசியை, காயத்ரிக்கு பிடிக்காமல் போக வாய்ப்பில்லை.

இப்படியாகத் தான் மானசிக்கு காயத்ரி வேலை செய்த அலுவலகத்தில் வேலையும், ஷீலா, காயத்ரி மற்றும் ப்ரீத்தி தங்கியிருந்த அறையில் நான்காம் நபராக சேர்ந்து கொள்ளும் வாய்ப்பும் கிட்டியது.

இப்படியாகப்பட்ட நமது மானசி, தனக்குக் கிடைத்த வேலையை தபால் பெட்டியின் தயவாலேயே கிட்டியது என மனமாற நம்பி தனது பாசத்திற்குரிய தபால்பெட்டி சேவையை தொடர்ந்து செய்து வந்தாள். என்ன! வேலை கிடைத்த விஷயத்தையும் தவறாது தபால் பெட்டி மூலம் தம்பட்டம் அடித்திருந்தாள்.

“என்னை நம்பி எந்த வேலையும் கொடுக்காத சில சின்னப் பய மக்களே! பரந்த மனது படைந்த ஷீலா மேடோம் போன்ற நன்மக்களே!

எனக்கு வேலை கிடைத்துவிட்டது. ஆனாலும் எனக்கு வேலை தேடிக் கொடுத்த இந்த தபால்பெட்டியை கைவிடும் படியான எண்ணம் இப்போதைக்கு இல்லை. அவ்வளவு நன்றிகெட்டவள் அல்ல இந்த மானசி. சோ, காலை ஒன்பது மணிக்கு முன்பும், மாலை ஐந்து மணிக்கு மேல் ஒன்பது மணிக்குள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் என்னை அணுகவும். உதவி என்று கேட்பவர்க்கு தட்டாது என்னால் முடிந்த சேவையை கட்டணம் இன்றி செய்வாள் இந்த மானசி (பேப்பர் முடிந்துவிட்டது. இல்லையென்றால் இன்னமும் சொல்லியிருப்பேன்.)

இப்போதைக்கு விடைபெறும்,

வேலை பெற்றுவிட்ட மானசி” என காகித வாசகத்தை மாற்றியிருந்தாள். எப்போதும் போல் கஞ்சப்பிசினாரித் தனமாக A4 தாளில் பேனாவல் எழுதாமல், இந்த முறை டைப் செய்யப்பட்ட காதிதம் ஒட்டப்பட்டிருந்தது. வேலை கிடைத்துவிட்டதாம். அதை வெளிக்காட்டுகிறாளாம். அய்யோ அம்மா மிடில….இந்த குண்டு கண்மணி செய்யும் அலப்பறைகளுக்கு இவளுக்கு எப்பேர்பட்ட மணமகன் வாய்ப்பானோ என நீங்கள் புலம்புவது கேட்கிறது. அடுத்து நாம் அவனைக் காணத்தான் செல்கிறோம்.

அதற்கு முன், திருப்பதி செல்ல கோஷ்டி சேர்த்துக் கொண்டிருந்த மானசி என்னவானாள் என பார்த்தே ஆகவேண்டும். ஏனென்றால் அது காணக்கிடைக்காத கண்கொள்ளாக் காட்சி. வாருங்கள் நீங்களும் அந்த அருள் மழையில் கொஞ்சம் நனைந்து மோட்சம் பெருங்கள்.

மானசியின் அறையினுள் அந்த ஐவரும் மூச்சு விடக்கூட மறந்து அமர்ந்திருந்தனர். நால்வரும் கீழே தரையில் அமர்ந்திருந்த, கட்டிலின் மேல் ஒரு காலை மடக்கி ஒரு காலை தரையில் தொங்கவிட்டு ஒரு தபஸ்வி நிலையில் அமர்ந்திருந்தாள் மானசி. பற்றாகுறைக்கு, பலவருடமாக ஏற்றபடாமலேயே கிடந்த பழைய ஊதுபத்தி டப்பி ஒன்றை தேடிப் பிடித்து அதை வேறு பற்றவைத்திருந்தாள். ஒரு சிறிய புகை மண்டலம் வேறு உருவாகி, மானசி பேசப்போகும் விஷயத்திற்கு சீன் எஃபெக்ட் உருவாக்கிக் கொடுத்தது.

“நான் சொல்லறதை கவனமா கேட்கணும். யாரும் குறுக்க பேசக்கூடாது. என்ன சந்தேகம்னாலும் கடைசியா தெளிவுபடுத்தரேன். ஏ, ப்ரீத்தி பாப்பா நீ எந்திருச்சு கதவை சாத்தி தாள் போடு.” என உத்தரவிட, மற்றவரை ஒருகணம் சுற்றிப் பார்த்துவிட்டு ப்ரீத்தி செவ்வனே எழுந்து சென்று கதவை தாளிட்டு வந்தாள். “போட்டுடியா பாப்பா…பாப்பா போட்டுட்டா தாப்பா…நல்லது மேல பேசாம, உட்காரு”  என ஏதோ பேச வாயைத் திறந்த ப்ரீத்தியை சைகை செய்து அமரவைத்தாள்.

“என்ன விஷயம்னு சொல்லு கூரியர்புறா…எனக்கு துணி துவைக்கப் போகணும்” என சினுங்கிய ஷீலாவை கண்களாலேயே முறைத்து அமைதிபடுத்தியிருந்தாள். “இன்சல்ட்ட்ட்ட்ட்ட்….” என நெற்றியில் உள்ளங்கையால் பெரிதாக தட்டியள், “எவ்வளவு பெரிய விஷயம் சொல்லப்போறேன்.  நீங்க என்னடான்னா, சின்னபுள்ளத்தனமா வேலை இருக்குன்னு சொல்லிகிட்டு..அமைதியா உட்காருங்க மேடோம். எல்லார்த்தையும் விட உங்களுக்குத் தான் இது ரொம்ப தேவையான விஷயம்…இன்னும் எவ்வளவு வருஷம் தான் கோலம் போடுவீங்க” என சற்றே தாழ்ந்த குரலில் ஷீலாவை அடக்கிவிட்டு, அதே சன்னமான குரலில் பேசத் துவங்கினாள்.

“நாளானைக்கு என்ன நாள்?”என அனைவரையும் கண்ணோட கண் நோக்கிவிட்டு, “என்ன நாள்ன்னு தெரியுமா? வியாழக்கிழமை, 15.12.2017ன்னு சில்மிஷமா பதில் சொல்லக்கூடாது. நாளன்னைக்கு ஒரு பவித்ரமான, புண்ணியமான நாள்….” என மொழிய, அனைவருமே ஆவென அவளைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

“என்ன புண்ணியம்னு இந்த இடத்தில நீ கேட்கணும் காயூ” என காயூவை உற்சாகப்படுத்தியவள், “இந்த காயுக்கு இன்னமும் கொஞ்சம் டிரெயினிங் குடுத்து கூட்டிட்டு வந்திருக்கணுமோ…”என மனதிற்குள் நினைத்தாள்.

“நீ தான் வாய் திறக்ககூடாதுன்னு சொன்னியே…அதான்..எப்படியும் நீ என்னை பேசவிடமாட்ட, நீயே என்ன விஷேஷம்னு சொல்லிடு…”என முனுமுனுத்தாள் காயத்ரி. கண்களை உருட்டு அவளை முறைத்த கூரியர்புறாவிடமிருந்து சற்றே பயந்து, ஷீலாவின் அருகே நெருங்கி அமர்ந்து கொண்டாள்.

“இன்சல்ட்…சரி..இருந்தாலும் பரவாயில்லை. நான் பொறுமையானவ, பொறுப்பானவ. அதனால உன்னை இந்த நிமிஷமே மன்னிச்சிடறேன். “ஜீசஸ் ப்ளீஸ் ஃபர்கிவ் திஸ் கேர்ள்..” என முனுமுனுத்தவள், மீண்டும் மெல்லிய அமானுஷ்ய குரலை வலுவில் தருவித்துக் கொண்டு பேசத் துவங்கும் முன், கையை உயர்த்திய ப்ரீத்தியை”இப்போ என்ன பாப்பா? பாத்ரூம்லாம் அப்பறமா போகலாம்…என்னை கொஞ்சம் பேச விடுங்களேன்”என ஏறிட்டாள் மானசி.

“பாத்ரூம் இல்லை… நீ நல்ல பேசற…ஆனா குசுகுசுன்னு பேசாதயேன். மணிரத்னம் படம் டயலாக் மாதிரி, சீன் புரியுது, ஆனா டயலாக் கேட்க மாட்டேங்குது.. அப்பறம், ஜீசஸ் மன்னிச்சிருன்னு சொல்லகூடாது, கோவிந்தா மன்னிச்சூன்னு சொல்லனும்…ஏனா நீ திருப்பதி போக தான் ப்ளான் பண்ணற…வேளாங்கன்னிக்கு இல்லை…சரியா…” என கவுண்டர் குடுக்க,

“மறுபடியும் இன்சல்ட்…ஜீசஸ் திரும்பவும் இந்த பாவிகளை மன்னிச்சிருங்க..”என முனுமுனுத்துவிட்டு, சற்றே உரத்த குரலில் பேசினாள். “நாளைக்கு மறுநாள், அதாவது டே ஆஃப்டர் டுமாரோ….ஒரு புனிதமான நாள்…ஆஸ்பீஷியஸ் டே” என மேஜர் சுந்தராஜன் போல் அதே வாக்கியத்தை தமிழ் ஆங்கிலம் என இரண்டிலுமே மொழிந்தவள்,”இந்த நாளோட ஸ்பெஷல் நிறைய பேர்த்துக்கு தெரியாது. ஏன்னா இது வெகு சிலருக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம். திருச்சி குருஜி ஸ்ரீல ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் எங்கிட்ட சொன்னதை உங்களுக்கும் சொல்லறேன். இதை நான் ஒரு தடவை, ஒரே தடவை மட்டும் தான் வெளிய சொல்ல முடியும். அதனால கவனமா கேட்டுக்கோங்க.. அது என்னன்னா”என்று நிறுத்த,

“ஒரு தடவைக்கு மேல சொன்னா என்ன ஆகும் மானு?”என அப்பாவியான அடுத்த அறைப் பூங்கொடி வினவ, “ம்ம்ம்…. என் மண்டை சுக்கு நூறா உடையும்…போதுமா…கதைய கேளு பூ” என அனைவரும் தன்னை கவனிக்கிறார்களா ஒரு நோக்கிவிட்டு, “நாளண்ணைக்கு கல்யாண நட்சத்திரம்னு ஒரு தெய்வீகமான நட்சத்திரம் உலாவரும் நாள். இந்த நாள்ல, திருப்பதிக்கு நடந்து போய், வெங்கிய தரிசனம் பண்ணறவங்களுக்கு இந்த நட்சத்திரம் அடுத்த வருஷம் திரும்பவும் உலா வர்றதுக்குள்ள கல்யாணம் ஆகிடும்னு சொல்லப்பட்டிருக்கு.”

“அதனால சின்னப்பய மக்களே! நாளன்னைக்கு நாம ஐஞ்சு பேரும், அதாவது, நான், ஷீலா மேடோம், ப்ரீத்தி பாப்பா, காயூ குந்தாணி, அப்பறது நம்ம பக்கத்து ரூம் பூங்கொடி, நாமல்லாம் நடந்து திருப்பதி போறோம். பூங்கொடி, உன்னை எதுக்கு இந்த ரூமோட, அதாவது எங்களோட சேர்ந்து கூட்டிட்டுப் போறோம்னா, நீ நர்ஸ்ங்கறதாலையோ, நடுவுல நாங்க மயக்கம் போட்டா நீ ஃபர்ஸ் எயிட் பண்ணி குத்துமதிப்பா காப்பாத்திருவன்னோ, நாங்க கொண்டு வர்ற லக்கேஜை அலுப்பில்லாம தூக்கறதுக்கோ, சினாக்ஸ் ஸ்பான்சர் பண்ணறதுக்கோ இல்லை.”

“இதையெல்லாம் நீ செய்யக்கூடாதுன்னு இல்லை. ஆனா இதுக்காக மட்டும்தான் உன்னை செட் சேர்த்திருக்கேன்னு நீ மனசொடஞ்சு போயிடக்கூடாது… இதை நீ நல்லா புரிஞ்சுக்கனும்.”என அப்பாவியாக அமர்ந்திருந்த அடுத்த அறை பூங்கொடியைப் பார்த்து கண்சிமிட்டாமல் மொழிய, அவள் ஒரு கலவர நிலையில் பூம்பூம்மாடு போல் தலையசைத்தாள் பூங்கொடி.  

மானசிக்கு திருப்தியான பின்னர், மீண்டும் விட்ட இடத்தில் இருந்து பேசத்துவங்கினாள். “இதுல மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இந்த தெய்வ ரகசியத்தை தெரிஞ்சுகிட்டதுக்கு அப்பறமும் என்னால முடியாதுன்னு, ஆபீஸ்ல லீவ கிடைக்காதுன்னு உப்புசப்பில்லாத காரணம் சொன்னீங்கன்னா, கல்யாண நட்சத்திரத்தால கடுமையான சாபத்திற்கு ஆளாக நேரிடும்..”என ஆட்சேபனை சொல்ல வாய் திறக்கும் முன்னர் இதையும் சேர்ந்து சொல்லி முடித்தாள். யாரும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க, காயத்ரிக்கு மட்டும் சிரிப்பு அடக்கமுடியவில்லை. ஏனென்றால் காயூவிடம் அலுவலகத்திலேயே சமரசப் பேச்சு பேசி முடித்திருந்தாள் மானசி.

“நான் பேசறதுக்கு குறுக்கில பேசி குழப்பிவிடப் பார்த்த, காலத்துக்கும் உனக்கு இதே டேடா அனலிஸ்ட் வேலை மட்டும் தான்னு சபிச்சிடுவேன் ஜாக்கிரதை” என குண்டுக்கண்மணி மொழிந்திருந்த படியால் காயு வாயே திறக்கவில்லை. இன்னமும் சொல்லப் போனால், இது காயு செய்து கொண்ட வேண்டுதல் தான். என்ன தான் காயுவும் மானசியும் பொறியியல் படித்திருந்த போதும், கிடைத்த வேலை என்னவோ, டேடா அனாலீஸ்ட் வேலை தான்.

“இந்தியன் பேங்க், இந்தியன் பேங்க்…இந்த பேர் சொன்னதில லிட்டிலா ஸ்லிப்பாகி யோசிக்காம நானும் இண்டர்வியூக்கு வந்திட்டேன். கடைசில பார்த்தா எஞ்சினியரிங்க படிச்ச என்னை, எக்-எசல் ஷீட்ல வேலை செய்ய வச்சுட்டியேடி குந்தாணி. அதைக் கூட நான் பொறுத்துக்குவேண்டி ஆனா, அந்த டில் இருக்கானே….ஷ்ஷ்ஷ்…அவனை நினைச்சாலே காண்டாகுது. என்ன பார்த்து என்ன கேள்வி கேட்டுச்சு அந்த காண்டாமிருகம், சொல்லு…சொல்லு…நீ பக்கதில நின்னு கெக்க பெக்கேன்னு சிரிச்சதை நான் பார்த்தேண்டி…சொல்லிரு…என் வாயால திரும்ப சொல்லவச்சு என்னை பேச வச்சு பார்க்காத” என மானசி உரும,

“நீங்க மேரீடா மேடம்? எத்தனை கிட்ஸ்ன்னு?” என குண்டுகண்மணி விழிகளை உருட்டியதைப் பார்த்து பயந்து போய் மெல்ல பேசிய காயத்ரியை, பாவம் என அப்போதும் விடாமல் இம்சித்தாள் மானசி. “என்னைப் பார்த்து, என் பேபி ஃபேட்டைப் பார்த்து அந்த ரைநோசரஸ் கேட்டா, உனக்கு சிப்பு வருதா சிப்பு…பிச்சுபிடுவேன்….நீ என்ன பண்ணற, இப்பவே வேண்டற, நமக்கு, உனக்கும் சேர்த்து தான், நமக்கு நல்லதா ஐ.டி கம்பெனில வேலை கிடைக்கனும். அதுக்காக நாங்க நடந்து திருப்பதி வர்றோம்னு வேண்டற…எங்க வேண்டு…”

“கோவிலுக்கு போய் வேண்டிக்கலாம் மானு… கண்ட கண்ட இடத்திலலாம் வேண்டுதல் பண்ணக்கூடாதுடீ…” என பரிதாபமாக காயூ மொழிய,

“பெருமாள் என்னை மாதிரி தூண்லையும் இருப்பார், உன்னை மாதிரி துரும்புலையும் இருப்பார்…நீ வேண்டு…வேண்டுங்கறேன்”என கீழுதட்டைப் பிதுக்கி இரண்டடி முன்னே காலை வைக்க, காயூ அலறிக் கொண்டு, மானசி சொன்னபடியே வேண்டிக் கொண்டாள்.

“வேலை கிடைச்சதுக்கு அப்பறமா தான மானு?”என தன் குருவி மூளையில் உதித்த சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என காயூ கேட்க, “அடிச்சேன்னா…ஏற்கனவே இந்த வேலையில நான் சேர்ந்து மூனு மாசமாச்சு. வர்ற பத்தாயிரம், வாய்க்கும் வயித்துக்குமே பத்தலை…என்ன பார்க்கற, வயிறு பெருசா இருந்தா அப்படி தான் பத்தாதுன்னு மைண்ட் வாய்ஸ்ல பேசறீயா??”என காயூவை முறைத்தாள் மானசி. காயத்ரி இல்லை என தலையசைக்க, “அது… நாம வெங்கிக்கு முன்னாடியே செய்யவேண்டிய கடமைகளை செஞ்சிடனும். அப்போ தான், உரிமையா சண்ட போடலாம்?எங்கைய்யா நான் சொன்ன வேலைன்னு கெத்தா கேட்கமுடியும்..என்ன சொல்லற?”

“டீ அது சாமிடீ. ஏதோ உன் பக்கத்துவீட்டு பையங்கிட்ட சண்ட போடற மாதிரி பேசற?”

“எனக்குத் தெரியாதா? நீ சாமியாவே பாரு. நான் எனக்கு ஃப்ரெண்டா பார்க்கறேன்…இதுல என்ன இருக்கு”என பேசி காயத்ரியை சம்மதிக்க வைத்துவிட்டாள். ஆனால் காயத்ரிக்கு அந்த பெருத்த கேள்விமட்டும் தீரவில்லை. அறையில் மற்றவர்களை எப்படி சம்மதிக்க வைக்கப் போகிறாள் என்ற கேள்வி பெரிதாக தோன்றியது. ஏனென்றால், ஷீலாவிற்கு கடவுள் நம்பிக்கை மருந்துக்கும் இல்லை. ப்ரீத்தியின் எழுத்தபடாத கார்டியன் ஷீலா மேடோம். அவர் போலாம் என்றாள் ப்ரீத்தி கிளம்புவாள், இல்லையேல் அமைதியாக இருந்துவிடுவாள். இப்படிப்பட்டவர்களை எப்படி பேசி முயற்சிக்கப் போகிறாளோ என எண்ணிய போதும், மானசியின் வாய்த்திறனின் மேலிருந்த அபார நம்பிக்கையின் காரணமாக அடுத்து எக்குத்தப்பாக கேள்விகள் கேட்காமல் விட்டுவிட்டாள் காயூ.

மானசியும் எடுத்தோம் கவிழ்த்தோம் என சம்மதம் கேட்கவில்லை. “வர இயலாது”என சொல்ல சிறு சந்தர்ப்பம் கூட அளிக்காமல், நேக்காக மயக்கியிருந்தாள். அவள் கையாண்ட விதம் சற்றே கேனத்தனமாக, முழுதாக உண்மை என்று நம்பும்படிக்கு இல்லை என்றாலும், சொல்லிய விஷயம் ஒருவேளை மெய்யோ என்ற சந்தேகம் அனைவருக்கும் வந்துவிட்டிருந்தது.

அந்த நொடி நேர தயக்கத்தை தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட மானசியைக் கண்டு காயத்ரிக்கு சிரிப்பு வருவது சாதாரண விஷயம். மற்றவர்க்கு “கல்யாண நட்சத்திரம்” என்பது அண்டப்புழுகானாலும், நமது, கூரியர்புறா, குண்டு கண்மணியின் வாழ்க்கையில் நிஜமாகவே இந்த கல்யாண நட்சத்திரம் உண்மையாகிப் போனது என்னவோ நிஜம்.

இது பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லாமல், இரவு விடுதியில் வடித்துக் கொட்டிய லெமன் சாதத்தை, கூச்சமே பாராமல் மூன்று முறை உண்டு தன் சிறிய பானையை நிரப்பிக் கொண்ட மகிழ்ச்சியில், மெல்லிய குரட்டை சத்தம் வெளிப்பட, மானசி அவளது அறையில் உறங்கிப் போயிருந்தாள்.

error: Content is protected !!