KNK21

அத்தியாயம் 21

இரவு மணி எட்டை நெருங்கிக் கொண்டு இருக்கும் பொழுது வீட்டை அடைந்தது கார் அந்த பிரம்மாண்டமான கேட்டை திறந்து கொண்டு ஆதித்யனின் வீட்டிற்குள் நுழைந்தது.காரை விட்டு இறங்கிய அரசிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.தோட்டம் முழுக்க வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு இருக்க விருந்தினர்கள் நிறைய பேர் வந்து இருப்பதை வாசலில் அணிவகுத்து நின்ற கார் உணர்த்தியது.கேள்வியாக நிமிர்ந்து கணவனின் முகத்தைப் பார்த்தாள்.

 

“ஏதாவது பார்ட்டியாக இருக்கும்” என்று அசட்டையாக தோள் குலுக்கி சென்றவன் வீட்டின் உள்ளே முன் வாசல் வழியாக செல்லாமல் தோட்டத்தை சுற்றிக் கொண்டு பின் வாசல் வழியாக லிப்டை அடைந்தான்.அங்கிருந்து அவனது அறைக்கு செல்லும் வரை அரசியின் கையை விடாமல் பற்றி இருந்தவன், அறைக்குள் சென்ற பிறகு தான் அரசியை விடுவித்தான்.

 

“கொஞ்சம் அசந்து போய் தெரியற…முகத்தை கழுவிட்டு வேற புடவையை மாத்திக்கிட்டு அப்புறம் கீழே போ”உத்தரவாக சொன்னான்.

 

திரும்பி அருகில் இருந்த கண்ணாடியில் முகம் பார்த்தாள் அரசி.அதில் காற்றில் கலைந்து போன கேசத்தையும்,கொஞ்சம் நலுங்கிப் போய் தெரிந்த அவளின் தோற்றத்தையும் கண்டாள். ‘இவனுக்கு அடங்கி,இவன் சொல்வதை கேட்பதா’ஊரில் யாரிடமும் தனித்து பேச விடாமல்…அப்படியே பேசினாலும் அதையும் ஒட்டுக்கேட்டு கயலை மிரட்டி,கார்த்திக்கை என்ன செய்கிறேன் பார் என்று அவளிடமே சூளுரைத்தது என்று வரிசையாக நினைவுக்கு வர அவனை எதிர்த்து கேள்வி கேட்டாள் அரசி.

 

“ஏன் இப்படியே போனா உங்க தகுதிக்கு ஏத்த பொண்ணு இல்லைங்கிற உண்மை மத்தவங்களுக்கு தெரிஞ்சுடும்னு கவலையா?”

“நாம ரெண்டு பேரும் ஊருக்கு போய்ட்டு வந்த விஷயம் யாருக்கும் தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இல்லை அரசி.இப்போ பார்ட்டி நடக்கும் போது இப்படி கசங்கின புடவையோடும்,கலைஞ்ச தலையோடவும் நீ போய் நின்னா எல்லாரும் என்ன நினைப்பாங்க”சலிப்புடன் விவரித்தான் விக்ரமாதித்யன்.

 

“என்ன நினைப்பாங்க” அவனை கோபப்படுத்தி பார்க்க நினைத்தவள் பேச்சை அத்தோடு விட மனமில்லாமல் மேலும் சீண்டினாள்.

 

“இப்படி நினைப்பாங்க” என்று சொன்னவன் நொடியும் தாமதிக்காமல் அவளை இறுக்கி தன்னுடைய பிடிக்குள் கொண்டு வந்தான். கசங்கியிருந்த புடவையை மேலும் கசக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.அவளது பின்னங்கழுத்தில் கையை கோர்த்து தலையை அழுத்திப் பிடித்தவன் இதழோடு இதழ் சேர்த்து கவி எழுதத் தொடங்கினான்.

 

அவனை தள்ளி விட அரசி செய்த முயற்சிகள் அனைத்திற்கும் பயன் இல்லாமல் போய் விட,அவனோடு சேரவும் முடியாமல் விலகவும் முடியாமல் தவித்தாள் அரசி.கண்களில் இருந்து வெளிவந்த கண்ணீரின் மூலம் அவளின் மனநிலையை உணர்ந்தவன் மனமே இல்லாமல் அவளை விடுவித்தான்.

 

“நானும் மனுஷன் தான் பொழில்…எப்பவும் என்னோட உணர்வுகளை கட்டுக்குள் வச்சுத்தான் எனக்குப் பழக்கம்.ஆனா உன்கிட்ட மட்டும் அது நடக்க மாட்டேங்குது.”என்று சொன்னவன் அவளைப் பார்க்காமல் வேறுபுறம் திரும்பி நின்று கொண்டான்.

 

“சீக்கிரம் வெளியே வந்து சேர்” என்று சொன்னவன் அவளுக்கு உடுத்துவதற்கு சரியான உடைகளை வழக்கம் போல எடுத்து வைக்க தவறவில்லை.

கணவனின் குரலில் இருந்த வருத்தம் மனைவியவளை தாக்க தவறவில்லை.பின்னோடு சென்று அவனை சமாதானம் செய்யத் துடித்த கால்களை அடக்கி தடுத்தாள்.உடல் அசதியாக இருக்கவே குளித்து முடித்து வெளியே வந்தவள் கணவன் தனக்காக எடுத்து வைத்து இருந்த புடவையை கைகளால்  தடவிப் பார்த்தாள்.இளம்சிவப்பு நிறத்தில் கறுப்பு வண்ண பூக்கள் மின்னிய அந்த டிசைனர் புடவையின் விலை நிச்சயம் அதிகம் தான் என்பதை பார்த்தாலே தெரிந்து கொள்ள முடிந்தது.

 

ரிசப்ஷனின் போது உடையை தேர்ந்தெடுக்க முடியாமல் நான் தடுமாறியதை இன்றும் நினைவில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் அந்தந்த நிகழ்விற்கு ஏற்றது போல கணவன் அவளுக்காக உடையை தேர்ந்தெடுத்து வைப்பதை அவள் நன்கு அறிவாள்.ஆனால் அவனின் இந்த சின்ன செய்கையில் கூட அவன் வெளிப்படுத்தும் காதலை அவள் உணர்ந்தாலும் அதை காட்டிக் கொள்ள அவள் விரும்பவில்லை.அதற்கு காரணம் அன்று ஆதித்யன் தன்னுடைய தாயாருடன் பேசியதை கேட்டதே ஆகும்.

 

ஆதித்யன் நெருங்கி வரும் பொழுதெல்லாம் தன்னை மயக்க முயலுவதாகே அவளுக்கு தோன்ற ஆரம்பித்தது.அவனே சகலமும் என்று மாறி விட்ட பின் தந்தையின் மரணத்தை மறந்து விட வைத்து விடலாம் என்ற ஆதித்யனின் கூற்று அப்படியே உண்மையாகி விடுமோ என்று அஞ்சினாள் பொழிலரசி.

 

அதனை மனதில் வைத்துத் தான் அவன் தன்னை நெருங்கும் போதெல்லாம் அவளையும் மீறி கண்ணீர் வழிந்தோடுகிறது.கொஞ்சம் சிரித்த முகமாக பேசி விட்டால் கூட ஆதித்யன் தன்னை மேலும் நெருங்க முயற்சி செய்வானோ என்ற அச்சம் இருந்ததாலோ என்னவோ முடிந்தவரை அவனை பேச்சால் குத்தி காயப்படுத்த முனைந்தாள்.இதுவரை அவள் அப்படி செய்த பொழுதெல்லாம் அதற்கு பலன் என்னவோ பூஜ்யமாகத் தான் இருந்து இருக்கிறது.

 

 

அடித்தால் கூட மீண்டும் தாயின் மடியிலேயே ஆறுதல் தேடும் குழந்தையைப் போல அவளிடம் தான் வந்து நின்றான் ஆதித்யன்.அது கோபத்தை காட்டுவதற்காக என்றாலும் சரி,துன்பத்தை குறைத்துக் கொள்ளுவதற்காக என்றாலும் சரி.அதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தாள்.அவள் அவனுக்கு கோபத்தை கொடுத்தாலும் அவனோ அவளுக்கு காதலை கொடுத்தான்.அதை உணர்ந்தவளோ தடுமாறி நின்றாள். 

இப்பொழுதும் அவனை கொன்றாக வேண்டும் என்ற எண்ணம் நீரு பூத்த நெருப்பாக உள்ளுக்குள் கனன்று கொண்டு தான் இருக்கிறது.அதை மறுப்பதற்கு இல்லை.ஆனால் இவனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் குழம்பிப் போனாள் பொழிலரசி.

 

பொழிலரசியை பொறுத்த வரை மனதளவில் அவள் இன்னும் பதினேழு வயதுப் பெண் தான்.அதற்குப்பின் மூன்று வருடங்கள் கடந்து இருந்தாலும்,அதை அவள் உணரும் மனநிலையில் இல்லாததாலோ என்னவோ அவளால் அந்த வயதிற்கு உரிய பக்குவத்தை அடைந்து இருக்க முடியவில்லை.

 

அவள் பாட்டிற்கு சிவனே என்று இருந்தவள் இப்படி ஒரு பருந்திடம் மாட்டிக் கொள்வோம் என்றா நினைத்துப் பார்த்தாள்.அப்படி பருந்தாக வந்தவன்,இரை தேடும் பருந்தாக இல்லாமல்,கோழிக்குஞ்சை பாதுகாக்கும் தாய் கோழியை போல நடந்து கொண்டது தான் அவளை மேலும் குழப்பியது.

 

ஒருவேளை ஆதித்யன் அவளிடம் மிக மோசமான ஒரு வில்லனை போல நடந்து கொண்டு இருந்தால் , அவளும் இன்னும் தீவிரம் காட்டி தன்னுடைய செயல்களை வெற்றியாக முடித்து இருப்பாளோ என்னவோ.ஆனால் அவனின் மேல் இருக்கும் வன்மம் அதிகரிக்கும் பொழுதெல்லாம் எதையாவது செய்து அவளை குழப்பி விடுகிறான்.அதை தெரிந்து செய்கிறானா இல்லை தெரியாமல் செய்கிறானா என்பதையும் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

 

தன்னுடைய சிந்தனைகளில் மூழ்கி இருந்தவளை இன்டர்காம் மூலம் அழைத்து  அவளை கீழே வர சொன்னான் அவளுடைய ஆதித்யன்.மனதில் தோன்றிய கேள்விகளுடனேயே கீழே ஹாலை கடந்து தோட்டத்திற்கு போனாள் பொழிலரசி.

 

ஆதித்யனை கண்களால் தேட தன்னை சுற்றிலும் ஒரு படையே சூழ்ந்து இருந்தாலும் எந்த வித செயற்க்கை தனங்களும் இல்லாமல் கம்பீரமாக அமர்ந்து இருந்த கணவனை விழிகளால் பருகினாள்.அவனையே பார்த்தபடி மெல்ல அவன் அருகில் சென்றவள்,சரியாக அவள் அவனை பார்க்கும் நேரம் வேடிக்கை பார்ப்பது போல எதிர்புறம் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

 

“இங்கே வா பொழில்” என்ற கணவனின் குரலை கேட்டதும் அப்பொழுது தான் அவனை பார்ப்பது போல இயல்பாக திரும்பி,அவனருகில் போய் நிற்க அதை விட இயல்பாக அவளின் கரம் பற்றி தன்னருகில் அமர்த்திக் கொண்டான்.

 

தன்னை சுற்றி இருந்த பெண்களின் கண்களில் பொறாமை இருப்பதை உணர்ந்த அரசிக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.சுற்றிலும் அத்தனை பெண்கள் இருந்தாலும் பார்வையாலேயே தன்னை கபளீகரம் செய்யும் கணவனின் செய்கையில் வெட்கம் ஒருபுறம் வந்தாலும், அதையும் தாண்டி அவளுக்கு பெருமையாக இருந்தது.

 

சுற்றிலும் இருந்த ஆணும் பெண்ணும் ஏதேதோ பேசினார்கள்,ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்துக் கொண்டார்கள்.அது எதுவும் அரசிக்கு புரியாதது தான் பரிதாபமாக போயிற்று.

அனைவரும் சரளமாக ஆங்கிலத்தில் பேச,அதை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறினாள் பொழிலரசி.பதட்டத்தில் எப்பொழுதும் போல அவள் நிமிர்ந்து ஆதித்யனை ஒற்றை பார்வை பார்க்க,அதில் என்ன புரிந்து கொண்டானோ அவளின் அருமை மணாளன்.அவளின் கையை பற்றியவாறே எழுந்து கொண்டவன் அங்கிருந்த மேடைக்கு அவளை அழைத்துச் சென்றான்.

 

“ஹலோ பிரண்ட்ஸ்… என்னோட மனைவியை நான் காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷயம் உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும்…”

 

‘இது என்னடா புதுக்கதையா இருக்கு’ இமைகளை சிமிட்டக் கூட செய்யாமல் கணவனின் முகம் பார்த்தாள் பொழிலரசி.

 

“அதுக்கு காரணம் அவளோட தனித்தன்மை தான்…எந்த சூழ்நிலையிலும்,எப்பேர்பட்ட மனநிலையிலும் தன்னுடைய நிலையில் அவ உறுதியா இருப்பா.அதுதான் அவகிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்”

 

‘எப்படி வாய் கூசாம புளுகறான் பாரு’

 

“என்ன தான் நம்மை சுற்றி மற்ற மொழிகளின் ஆதிக்கம் அதிகம் இருந்தாலும் அவளுக்கு எப்பவும் தன்னுடைய தாய் மொழி தமிழைத் தான் ரொம்பவும் பிடிக்கும்.அவளுக்கு பிடிச்சதாலேயே எனக்கும் தமிழும்,தமிழ்ல பேசுறவங்களையும் ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு.”

 

‘டேய் இப்ப எதுக்குடா இப்படி சம்பந்தம் சம்பந்தம் இல்லாம புளுகிகிட்டு இருக்க…பயபுள்ள எதிலயும் கோர்த்து விடப் போறானா?’

 

“எந்த அளவுக்குனா போன வாரம் தமிழில் பேசினாங்க அப்படிங்கிற காரணத்திற்காகவே xyz கம்பனிக்கு ஒரு ஐம்பது கோடிக்கு காண்டிராக்ட் கொடுத்தேன்னா பார்த்துக்கோங்களேன்” என்று சொல்லி விட்டு மற்றவர்கள் அறியாதவண்ணம் குறும்பாக ஒற்றை கண் சிமிட்டலை அவள் புறம் வீசியவன் தொடர்ந்து பேசினான்.

 

“என்னோட மனைவி அருமையா பாடுவாங்க தெரியுமா…அவங்களோட குரலை கேட்டு தான் நான் அவங்ககிட்ட மயங்கிப் போய் இருக்கேன்.அப்படிப்பட்ட அவங்களோட குரல் இனிமையை நீங்களும் கேட்கனும்னு தோணுச்சு…அதான்” என்று சொன்னவன் அரசியின் கைகளில் மைக்கை கொடுத்து விட்டு நகர்ந்து நின்று கொண்டான்.

 

அதுவரை அவன் பேசியதை எல்லாம் , ‘அடக்கிராதகா! எப்படி எல்லாம் புளுகுறான் பாரு’ என்று திறந்த வாயை மூடாமல் வேடிக்கை பார்த்தவள் மைக்கை அவனிடம் கொடுத்து விட்டு நகரவும் பேந்த பேந்த முழிக்க ஆரம்பித்தாள்.

 

‘பயபுள்ளை கோர்த்து விட்டானே…இப்ப என்ன செய்றது? நாம பாடினா சுத்தி உள்ள கூட்டம் எல்லாம் கல் எறிஞ்ச காக்காய் மாதிரி ஓடிப் போய்டுமே’ என்று மனசுக்குள் கவுண்டர் கொடுத்தவள் வேறு வழியின்றி துணிவை வரவழைத்துக் கொண்டு பாடத் தயாரானாள்.

 

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா
அந்த நதியின் கரையை நான் கேட்டேன் அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை

இறுதியில் உன்னைக் கண்டேன் இருதயப் பூவில் கண்டேன்
என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா

 

 

இறுதி வரிகளை பாடும் பொழுது அவளின் குரலில் இருந்த கண்ணீரை உணர்ந்தவன் இயல்பாக பற்றுவதை போல மைக்கை வாங்கி அவன் பாட ஆரம்பித்தான்.

 

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
என்ன தரப் போகிறாய்
கிள்ளுவதைக் கிள்ளி விட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

 

ஒவ்வொரு வரிகளையும் அவளை பார்த்தவாறே பாடியவனின் பார்வையில் இருந்த பொருள் என்ன என்பதை அரசியால் புரிந்து கொள்ள முடியவில்லை. ‘நான் காட்டிய சோகத்திற்கு அர்த்தம் இருக்கிறது.ஆனால் இவனுடைய பாட்டின் மூலம் இவன் சொல்ல வருவது என்ன?காதல் இவனுக்கு சிறகு என்று பொருள் கொண்டால் இவன் சிலுவை என்று எதை சொல்கிறான்.’ என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அவளிடம் மீண்டும் மைக்கை நீட்ட வேறு வழியின்றி வாங்கினாள்.

 

‘பாடு ‘ என்று கண்களால் அவன் ஜாடை வேறு செய்ய அதற்கு மேலும் பொறுப்பாளா அவள்.

 

அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே உன்
ஆனந்த மோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா

அவள் எதற்காக இந்தப் பாடலை பாடுகிறாள் என்பதை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக அவன் இமை மூடித் திறக்க அவளின் பாடல் அத்தோடு நின்று போனது. ‘உனக்கு எல்லாமும் தெரியும்? ஆனால் ஒன்றும் செய்ய மாட்டாய்? அப்படித்தானே?’ என்று பார்வையால் அவனை குற்றம் சாட்ட அதை வழக்கம் போல கண்டு கொள்ளாமல் நகர்ந்து அவளின் தோளின் மீது கையை போட்டு நெருங்கி நின்று கொண்டான்.ஆத்திரமாக அவனை முறைக்கத் தொடங்கியவள் சுற்றிலும் கேட்ட கைத்தட்டல் ஒலியில் தன்னை மீட்டுக் கொண்டாள்.

 

“இரண்டு பேரும் அருமையா பாடுனீங்க” என்று சுற்றி இருந்தவர்களின் பாராட்டை பெற்றுக் கொண்டவளின் காதிற்கு அதற்குப் பிறகு ஆங்கிலம் பெயரளவிற்கு மட்டுமே ஒலித்ததில் கொஞ்சம் ஆசுவாசமானாள்.மற்றவர்கள் அவர்களை விட்டு நகரும் எண்ணத்தில் இருப்பது போல தெரியாததால் அவளை அழைத்துக் கொண்டு பஃபே முறைப்படி விருந்து தயார் ஆகி இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றவன் அவளுக்கு பிடித்த உணவுகளை ஒவ்வொன்றாக கேட்டு அவளின் தட்டுகளில் நிரப்பிக் கொடுத்தான்.

 

இருவரும் அப்படியே தோட்டத்திற்கு செல்ல அங்கிருந்த மேசையில் அமர்ந்து உணவுகளை உண்ணத் தொடங்கினார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் நிமிர்ந்து பார்க்கவில்லை.பேசிக் கொள்ளவும் இல்லை.ஏதோ ஒருவித மௌனம் அவர்களை  சூழ்ந்து இருக்க இருவருக்கும் ஏனோ அதை கலைக்க மனம் வரவில்லை.இருவரின் கவனமும் உணவில் மட்டும் இருப்பதை போல இருந்தாலும் உண்மை நிலவரம் அதுவல்ல என்பது அவர்கள் இருவருக்குமே புரிந்து தான் இருந்தது.

 

ஏதோ யோசனையில் இருந்த விக்ரமாதித்யன் சட்டென்று வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான். ‘என்ன விஷயம்’ என்று கண்களாலேயே அவள் கேட்க ஒருவாறு சிரித்து முடித்தவுடன் அவளுக்கு விளக்கலானான்.

 

“அது ஒண்ணும் இல்லை…இப்போ உள்ளே சும்மா பேச்சுக்கு தமிழ்ல பேசினா எனக்கு பிடிக்கும்னு ஒரு வார்த்தை சொன்னேன் இல்லையா? இங்கே கிளம்பி வரும் போது ஒரு பொண்ணு, இன்னொரு பொண்ணுகிட்டே சீரியசான குரல்ல சொல்லிக்கிட்டு இருந்தா , “ சீக்கிரமே முப்பது நாளில் தமிழ் கற்பது எப்படின்னு புக் வாங்கி படிக்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தா…அதை நினைச்சுத் தான் சிரிச்சேன்” என்று சொல்லவும் அவளின் சிரிப்பு அவளையும் தொற்றிக் கொண்டது.

 

“அதுக்கு காரணம் நீங்க தானே…நாளையில் இருந்து எல்லாரும் உங்ககிட்டே தமிழ் புலவர் மாதிரி பேசப் போறாங்க… அதை எப்படி சமாளிப்பீங்க?”என்று கூறிவிட்டு கிண்கிணியென சிரித்தாள் பொழிலரசி.

 

இருவர் மனதிலும் இருந்த ஏதோ ஒன்று தகர்ந்ததை போல இருவரின் மனநிலையும் காற்றை போல இலகுவாக மாறி இருந்தது.அவர்களின் தனிமையை கெடுப்பது போலவும்,அங்கிருந்த அமைதியான சூழலுக்கு சற்றும் பொருந்தாத வண்ணம் கலீரென்று ஒரு பெண்ணின் சிரிப்பொலி கேட்க,அசூசையான பார்வையுடன்  இருவரும் யார் என்பதை பார்க்க சுற்றிலும் பார்வையிட்டனர்.

 

சற்று தொலைவில் இருந்த டேபிளில் அமர்ந்து இருந்தது விஜயேந்திரனும், மேனகாவும் என்பது அவர்களின் குரல் மூலமாகவும்,உடலின் வரிவடிவின் மூலம் தெரிந்து கொண்ட அரசி மேற்கொண்டு எதுவும் பேசாமல் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தாள்.

 

கணவனின் தட்டில் உணவு வகைகள் அப்படியே இருக்கவும் நிமிர்ந்து அவனின் முகத்தை பார்த்தவள் திகைத்துத் தான் போனாள்.செந்தணலை வாறிப் பூசிக் கொண்டது போல இருளில் கூட முகம் ஆத்திரத்தில் ஜொலித்ததை அவளால் உணர முடிந்தது.இதை இப்படியே விடக் கூடாது என்று எண்ணியவள் கணவனிடம் பேச ஆரம்பித்தாள். ‘ஒருவேளை தான் சொன்னால் அதை கேட்டு கணவன் அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறதோ’ என்ற எண்ணத்தில் தான் அவள் பேசத் தொடங்கியதே.

 

“இரண்டு பேருக்கும் ரொம்ப நல்ல ஜோடிப்பொருத்தம் இல்லையா?”

 

“ம்ச்…எனக்கு ஒண்ணும் அப்படி தோணலை…”அவனின் விட்டேற்றியான குரலில் இருந்து அவளால் எதையும் கணிக்க முடியவில்லை.

 

“இப்படி சொன்னா என்ன அர்த்தம்”

 

“எனக்கு இந்த பேச்சு பிடிக்கலைனு அர்த்தம்…வேற ஏதாவது பேசுன்னு அர்த்தம்”அழுத்தமான அவனின் பேச்சு அவனின் பிடித்மின்மையை வெளிப்படுத்த கொஞ்சம் தயங்கினாலும் மீண்டும் அதே பேச்சை பேசவும் செய்தாள்.

 

“மேனகா நல்ல பொண்ணு”

 

“ஆமா உனக்கு ரொம்ப தெரியும்…”

 

“நிச்சயமா…அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரா இருக்காங்க…”

 

“அதுக்கு இப்ப என்ன செய்யலாம்னு சொல்ற…”அவன் குரலில் ஒட்டாத தன்மை வந்து இருந்தது.

 

“அவங்களுக்கு கல்யாணம்…”

 

“அது நடக்கவே நடக்காது”

 

“இது தப்பு…காதலிக்கிறவங்கள பிரிக்கிறது ரொம்ப பெரிய பாவம்…”

 

“இருந்துட்டு போகட்டும்.அதனால் எனக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லை…”அசட்டையான தோள் குலுக்கல் மட்டுமே அவனிடம் இருந்தது.

 

“ஏன்…இதனால் உங்களுக்கு என்ன நஷ்டம்?”

 

“நீ தான் ரொம்ப பெரிய புத்திசாலி ஆச்சே…கண்ணை நல்லா திறந்து வச்சு பார்.உனக்கே அது தெரியும்…”

 

“ம்ச்…” என்று சலித்துக் கொண்டவள் பாதி சாப்பாட்டில் எழுந்து விட்டாள்.

 

“இப்போ எதுக்கு எழுந்திரிக்கிற…உட்கார்ந்து முழுசா சாப்பிடு அப்புறம் போகலாம்.”

 

“அதுதான் சிஐடி வேலை கொடுத்து இருக்கீங்களே அதை செய்யப் போறேன்… என்று சலிப்பாக சொன்னவள் கார் பார்க்கிங்கை நோக்கி சென்றாள்.

 

“அதுக்கு எதுக்கு அந்தப் பக்கம் போற…”

 

“எனக்கு கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்.நீச்சல் குளத்திற்கு போறேன்”

“சரி போ” என்றதற்கு மேலே வேறு வார்த்தை பேசாமல் சாப்பாட்டில் கவனமானான் ஆதித்யன்.

 

‘சரியான கல்நெஞ்சக்காரன்.கொஞ்சம் கூட என் மீது அக்கறையே இல்லை இவனுக்கு.அப்படி இருந்து இருந்தால் இப்படி சலனமே இல்லாமல் இருப்பானா?நான் சொன்ன பிறகாவது எனக்காக அவர்களை சேர்த்து வைக்கிறேன் என்று சொல்லி இருந்தால் எவ்வளவு சந்தோசப் பட்டு இருப்பேன்.’ என்று யோசித்தபடியே நடந்தவள் அங்கிருந்த நீச்சல் குளத்தை அடைவதற்காக கார் பார்க்கிங்கை கடந்து சென்று கொண்டு இருந்தாள்.

 

அப்படி அவள் கடக்கவும் அங்கே ‘டமார்’ என்ற பெரும் சத்தத்துடன் ஏதோ வெடிக்கவும் சரியாக இருந்தது.

 

சாப்பிட்டுக் கொண்டே இருந்த ஆதித்யன் மற்ற அனைத்தையும் மறந்து விட்டு ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போய் ஆடாமல் அசையாமல் நின்று விட்டான்.அவன் கையில் இருந்த முள் கரண்டி தவறி தரையில் விழுந்தது.

 

“அம்மா” என்ற அரசியின் வீறிடலை கேட்டவுடன் காற்றை கிழித்துக் கொண்டு அந்த இடத்தை நோக்கி ஓடினான்.

 

“பொழில்ல்ல்”

 

காதலாகும்…