VNE 27

VNE 27

அத்தியாயம் 27

இரவு உணவை உண்டு கொண்டே வெகு தீவிரமாக மெடிக்கல் ஜர்னலை படித்துக் கொண்டிருந்தாள். நாளை மறுநாள் டிப்பார்ட்மெண்ட்டில் சப்மிட் செய்தாக வேண்டிய பேப்பருக்கான ரெஃபெரன்ஸ். மண்டை வலித்தது. எத்தனை நேரம் தான் புரியாததை புரிந்தது போலவே படிப்பதாம்?

படிப்ஸான பிருந்தாவும் சற்று திணறிக் கொண்டு தானிருந்தாள். அவளுக்கு கார்த்திக்கோடு பிணக்கு வேறு! அவனாவது சமாதானக் கொடியை பறக்க விடுவான் என்று நினைத்தால் அவன் அதற்கும் மேல் முறைத்துக் கொண்டு நின்றான். அவனது கோபம் எல்லாம் மஹா மேல் தான். அந்த கோபத்தை பிருந்தா மேலும் காட்டிக் கொண்டிருந்தான்.

அன்றைய வாக்குவாதத்திற்கு அவன் பிறகு மகாவிடம் பேசவே இல்லை. இவளாகத்தான் ‘அண்ணாவென’ அழைத்துக் கொண்டு போனாள். ஒவ்வொரு முறையும் மகாவை முறைத்துக் கொண்டு சென்றவனை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று புரியாமல் இருந்தாள்.

“என்ன மஹா… இப்படி இருக்காங்களே…” என்று புலம்பியவளிடம்,

“கொஞ்சம் விட்டுப் பிடி பிருந்தா… என்கிட்டவும் மூஞ்சிய தூக்கி வெச்சுட்டு தான் இருக்கான்…” என்று சமாதானப்படுத்த,

“ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம்டி… அந்த ஷ்யாம் கூட அப்படியென்ன உனக்கு ப்ரென்ட்ஷிப் வேண்டியிருக்கு?” என்று வைதவளை மெளனமாக பார்த்தாள் மஹா. என்ன சொல்லி விளக்குவது? எந்த விளக்கமும் பயனில்லாத போது எப்படி அதை முன்னெடுப்பது?

“இதை கேட்டா மட்டும் சைலன்ட்டாகிடு! அப்புறம் உங்க அண்ணனுக்கு கோபம் வராம என்ன பண்ணும்? இத்தனை வருஷம் வளர்த்தவங்க சொல்றது உனக்கு பெருசா தெரியல… கூட பிறந்தவங்க பெருசா தெரியல… ஆனா ஒரு அவுட் சைடர், அதுவும் அவர் ரொம்ப மோசமானவங்கன்னு தெரியுது, அவங்க கூட பழக்கம் வேண்டாம்ன்னு சொன்னா கேட்க மாட்டேங்கற… அவங்க உன்னை கஸ்டடி எடுக்கறதுக்காக கிட்னாப் பண்ணிவங்க மஹா. புரிஞ்சுக்க…”

மூச்சு விடாமல் பேசியவளை இடைமறிக்காமல் கேட்டுக் கொண்டிருந்தாள். எத்தனையோ முறை அன்னையும் பாட்டியும் பேசிக் கொண்டிருப்பது தான்.

அதை பிருந்தாவும் கூறிக் கொண்டுதானிருந்தாள்.

ஒவ்வொருவருக்கும் அவளது பதில் மௌனம் மட்டுமே.

ஏன் அவனை விட்டுக் கொடுக்க முடியவில்லை என்பதை இவளும் யோசித்துப் பார்த்தாள். அவன் மேல் கொள்ளை கோபம் இருந்தது. ஆம் இருந்தது… அது இறந்த காலமாகி இருந்தது.

அழ வைப்பேன் என்று சவால் விட்டான். ஆனால் அவன் கண்ணில் தான் கண்ட கண்ணீரின் பளபளப்பு உண்மை, வெகு உண்மை!

அவளை கஷ்டப்படுத்த வேண்டும் என்பதுதான் முதலில் அவனது நோக்கமாக இருந்தது. ஆனால் அவன் அவளை நோக்கி வைத்த ஒவ்வொரு அடியிலும் அவனது அக்கறை தெறித்தது. உனது பாதுகாப்பை உறுதி படுத்துவேன் என்ற அவனது உறுதிமொழியை கடைசி வரை காப்பாற்றினான். வார்த்தைகளால் ஒப்புவிக்காமல், செயல்களால் உறுதி செய்தான்.

ஆரம்பத்தில் இவளும் கோபத்தில் நிறைய வார்த்தைகளை விட்டிருந்தாள் தான். ஆனால் இப்போது அதையெல்லாம் நினைத்தால் சிரிப்பு வந்தது.

அவளை பொறுத்தவரை, அவளிடம் அவனுரைக்கும் வார்த்தைகள் உண்மை! அவனது செய்கை உண்மை! அவனது எண்ணங்கள் உண்மை!

அந்த உண்மை எனும் வஸ்து தான் அவளை அவனுடன் கட்டிப் போட்டு வைத்திருந்தது. அவனை விட்டுக் கொடுக்க முடியாது என்று கூற செய்தது.

அவனது காதலை அவன் சொல்லியிருந்தாலும், அதை தாண்டி உனது நட்பு மட்டுமே போதும் என்று அவனிடம் பிடிவாதம் பிடிக்கவும் வைத்தது.

ஆனால் கார்த்திக்கு அவனது கோபம் நீறு பூத்த நெருப்பாக உள்ளே கனன்று கொண்டிருக்கிறது என்பதை மஹா அறிந்து இருந்தாள்.

எப்படி சொன்னாலும் அவளால் ஷ்யாமை விட்டுக் கொடுக்கவே முடியாது.

உறுதியாக எண்ணிக் கொண்டவள், அப்போதைக்கு,

“உன்னை விட்டுக் கொடுக்க சொன்னா என்னால எப்படி முடியாதோ… அதே மாதிரி தான் அவனையும்…” என்று நிறுத்தியவள், “முடியாது பிருந்தா…” என்று முடிக்க,

“இத்தனை வருஷம் பழகின நானும், சில நாள் பழகின அவனும் ஒண்ணா?” அவளது இயல்பான பொசசிவ்நெஸ் தலை தூக்க அவள் கேட்க,

“கரண்ட் வயரை தொட்டா என்னாகும்?” சம்பந்தமே இல்லாமல் மஹா கேட்க, அவளை புரியாத பார்வை பார்த்தவள்,

“ம்ம்ம்… ஷாக்கடிக்கும்…”

“ஷாக்கடிக்க ஒரு மணி நேரம் பிடிக்குமா?” என்று கேட்க,

“ஏய் லூஸு… அதுக்கு எதுக்கு ஒரு மணி நேரம்? ஒரு செக்கன்ட் பத்தாதா?” என்ற அவளது கேள்வியில், இவளது முகத்தில் புன்னகை அரும்பியது.

“ஷாக்கடிக்க ஒரு செக்கன்ட் போதும்… ஆனா உண்மையை, நேர்மையை ஃபீல் பண்ண உனக்கு வருஷக்கணக்காகனுமா?” என்ற மகாவின் கேள்வியில் ஒரு விதமாக அவளைப் பார்த்து குழம்பினாள் பிருந்தா.

“ஹீ இஸ் ஜென்யுயின் பிருந்தா… அது எனக்கு பிடிச்சுருக்கு… இதோட இந்த பேச்சை விட்ரலாமே… ப்ளீஸ்…” என்று முடித்து விட்டவளை என்ன சொல்வது?

ஆக மொத்தத்தில் இவளது பிடிவாதத்தை மாற்ற முடியாது என்று முடிவு செய்து கொண்டவள், அப்போது அவளை முறைத்தபடி மௌனமாகியிருந்தாள்.

“சரி… பேப்பர் சப்மிஷனுக்கு ப்ரிபேர் பண்ணிட்டியா?” பிருந்தா அவளாகவே பேச்சை மாற்றினாள்.

இரவு உணவை உண்டு கொண்டே இதை நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு புன்னகை மலர்ந்தது.

அருகில் அமர்ந்திருந்து கொண்டு பூண்டை உரித்துக் கொண்டிருந்த  பைரவி, “ஒன்னு படி … இல்லைன்னா சாப்பிடு… ரெண்டையும் சேர்த்து பண்ணாத கழுதை…” என்று எப்போதும் போல அன்பாக கூற, அவரை நிமிர்ந்து பாராமல்,

“ஏதோ படிக்கறதுனால இந்த இட்லி உள்ளே போகுது… அதுக்காக நீதான் இந்த புக்குக்கு தேங்க்ஸ் சொல்லணும்…” என்று கிண்டலடிக்க,

“அப்படியா? அப்படியொண்ணும் நீ சாப்பிட வேண்டான்டி… பட்டினி கெட…” என்றவர், சிரிக்க,

“ப்ச்… நான் பட்டினி கிடந்தா என்னோட டார்லிங் நீயும் பட்டினி கிடப்பியே… அந்த ஒரு ரீசனுக்காக தான் சாப்பிடறேன்…” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, அவளது செல்பேசி அழைத்தது.

ஷ்யாம் தான் அழைத்திருந்தது.

“நான் சாப்பிட்டா மட்டும் இவனுக்கு மூக்கு வேர்த்துடுமே…” என்று கூறியவளை, “யாருடி?” என்று கேட்டு கேள்வியாய் பார்த்தார், பைரவி!

“ஷ்யாம் தான்…” என்று வெகு இயல்பாக கூற, “திருந்த மாட்ட… பட்டாத்தான் உனக்கு புத்தி வரும்…” என்று கூறியவர் முறைத்தார்.

முன்தினம் தான் அவளது செல்பேசியை இளங்கவி கொண்டு வந்து கொடுத்திருந்தான். பைரவி இருப்பதை பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல், பிருந்தாவிடம் பேசுவது போலவே ஸ்பீக்கரில் போட்டபடி தனது உணவு உண்ணும் பணியை தொடர்ந்தபடி,

“ம்ம்ம்… சொல்லுடா…” என்று ஆரம்பிக்க,

“என்ன கொட்டிக்காச்சா?” என்று சிரிப்போடு ஆரம்பிக்க,

“ம்ம்ம்… இப்ப தான்… நீ?”

“இனிமே தான்…” என்றவன், “நாளைக்கு ஈவினிங் ஃப்ரீயா மஹா?” என்று கேட்க,

“நாளன்னைக்கு காலேஜ்ல பேப்பர் சப்மிஷன் இருக்கு… அதனால செம டென்ஷன்ல ரெஃபரென்ஸ் பார்த்துட்டு இருக்கேன்…சோ நோ சான்ஸ்…”

“காப்பி பேஸ்ட் பண்றதுக்கு போய் ஏன் லூசு டென்ஷன்?” என்று அவன் சிரிக்க,

“ஹலோ… எல்லாரும் உன்னை மாதிரியே இருப்பாங்களா? நாங்கள்லாம் சின்சியரா படிச்சு சீரியசா பேப்பர் சப்மிட் பண்றவங்க…” கெத்தாக இவள் கூற,

“சரி சின்சியர் சிகாமணி… இப்ப அதுல என்ன ப்ராப்ளம்?”

“டாப்பிக் புரிஞ்சா பரவால்ல… ஒண்ணுமே புரியாம சப்மிட் பண்ண சொன்னா என்ன பண்ணறது?”

“என்ன டாப்பிக்?”

“சைக்கியாட்ரி…” என்றதும் ஒரு நிமிடம் யோசித்தவன்,

“நான் ஒரு நம்பர் தரேன் மஹா… அவருக்கு போன் செஞ்சு உன்னோட டவுட்டை க்ளாரிஃபை பண்ணிக்க… அவர் கரெக்டா இருப்பார்…” என்றதும், பைரவி புருவத்தை உயர்த்தினார்.

“அப்படியா? யாரை சொல்ற நீ?” என்று இவள் கேட்க,

“டாக்டர். ஆன்டன் ஷிகாவ்…” என்று அவன் கூறும் போதே, கன்னத்தை தாங்கியிருந்த அவளது கை படக்கென்று கீழே விழுந்தது.

“ஷ்யாம்… ஆர் யூ சீரியஸ்?” நம்பாமல் கேட்டாள். ஏனென்றால் அந்த ரஷிய மருத்துவர், சைக்கியாட்ரியில் ஒரு என்சைக்ளோபீடியா! அவரது பேச்சை கேட்க தவம் ஒரு கூட்டமே தவம் கிடக்கும். அவரிடம் பேசி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதா? இவனென்ன விளையாடுகிறானா? அவரது அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமா முதலில்? அதில் செல்பேசியை எல்லாம் நினைத்து தான் பார்க்க முடியுமா? இது போன்ற பல கேள்விக்குறிகள் எழுந்தன மனதுக்குள்.

“வெரி சீரியஸ்…”

“போடா லூசு… அவர் பேரை கேட்டவுடனே எனக்கு நடுங்குது… அவர் கிட்ட போய் நான் டவுட்டை கிளியர் பண்றதா? ஓ மை காட்…” என்றவளுக்கு நிஜமாகவே நடுங்கத்தான் செய்தது.

“அட பக்கி… அவர் கிட்ட பேச இவ்வளவு நடுங்கற? ஓகே… நான் கால் பண்ணிட்டு உனக்கு கான்பரன்ஸ் போட்டு விடட்டா?”

“வேணாம்… அழுதுருவேன்…” வடிவேலு பாணியில் மஹா கூற, ஷ்யாம் மட்டுமல்ல… பைரவியும் சேர்ந்தே சிரித்தார்.

“எல்லாம் சும்மா வாய்பேச்சு தானா? சரியான பயந்தாங்கொள்ளி…” என்று அவன் சிரிக்க,

“திடீர்ன்னு அவர் கிட்ட பேச சொன்னா?”

“நீயெல்லாம் நல்லா மூணு வேளைக்கு ஆறு வேளை மூக்கு பிடிக்க கொட்டிக்கத் தான்டி லாயக்கு… உருப்படியா எதையும் செய்ய மாட்ட…” சிரிப்பதை கைவிட்டு சற்று சீரியசாகவே திட்டினான் ஷ்யாம். அது சரியாக வேலை செய்தது.

“நான்லாம் அப்படி இல்ல… நீ கான்பரன்ஸ் போட்டு விடு… நான் பேசறேன்…” என்று ஒப்புக்கொள்ள, ஷ்யாம் அவருக்கு அழைத்து, இவளது எண்ணுக்கு கனெக்ட் செய்து விட்டான்.

மூச்சை இழுத்துப் பிடித்து தன்னை சமன் செய்து கொண்டு திரும்ப மூச்சை விட்டாள். ரத்த அழுத்தம் உயர்ந்த பட்சமாக எகிறிக் கொண்டிருந்தது.

“ஹாய் ம்மஹா…” என்று ரஷ்ய ஸ்லாங்கில் அவளுடைய பெயரை ஷிகாவ் உச்சரித்த போது அவளது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே கிடைக்கவில்லை. யாருடைய புத்தகத்தை படித்து எக்ஸாமில் கொட்டுகிறோமோ அவரிடமே சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைத்து விடும் என்பதை அவள் அறியவில்லை. ஆனால் இப்போதைக்கு அவள் ஒன்பதாவது மேகத்தில் பறந்து கொண்டிருந்தாள்.

அடுத்த பத்து நிமிடம் அவள் கேட்ட சந்தேகத்திற்கு எல்லாம் நிதானமாக பொறுமையாக பதில் கூறிய அந்த ஆன்டன் ஷிகாவ், நிறைய ரெஃபரென்ஸ்களையும் கொடுக்க, மிகவும் திருப்தியாக பேசிவிட்டு நன்றி தெரிவித்தாள். அதுவரை அமைதியாக இருவர் பேசுவதையும் கேட்டுக் கொண்டிருந்தான் ஷ்யாம்.

“என்ன ஓகே வா?” என்று அவன் கேட்க, மஹாவோ சந்தோஷத்தின் உச்சியில் நின்றுக் கொண்டு கூத்தாடினாள்.

“ட்ரிப்பில் ஓகே…” என்றவளின் குரலில் அந்த சந்தோஷம் தெறித்தது. “ஆனா அவரை எப்படி உனக்கு தெரியும் ஷ்யாம்? நிஜமாவே நீ அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?” என்று கேலியாக இவள் கேட்டதற்கு, வாய்விட்டு சிரித்தவன்,

“சுஷ்ருதால அவர் விசிட்டிங் ஃபேக்கல்டி…” என்று கூற,

சுஷ்ருதாவிற்கு தான் அவன் அன்று அழைத்துச் சென்றதும். அது சென்னையின் மிகப் பெரிய ஆடம்பரமான மருத்துவமனை என்பதோடு, மருத்துவ கல்லூரியையும் இப்போது உள்ளடக்கி கொண்டிருந்தது. சேர்மேன் அறையில் அவன் இருந்ததை வைத்து அதற்கும் இவனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கக்கூடும் என்று கணித்தாள். அது போல தான் போல என்று நினைத்துக் கொண்டு,

“ஓஓஓ…” என்றவள் அதற்கும் மேல் துருவ விரும்பவில்லை. அவனும் பேசவில்லை.

“ஓகே எம்பிபிஎஸ் முடிச்சுட்டு என்ன பண்ண போற?” என்ற அவனது அடுத்த கேள்விக்கு,

“ம்ம்ம்… நீ பண்ணி வச்ச வேலைக்கு என்ன பண்றதாம்?” சட்டென கடுப்ஸ் மோடுக்கு போனவள், கடித்து வைக்க,

“ஏன் நான் என்ன பண்ணினேன்?”

“ஒன்னும் பண்ணலை… அதான் ஜாதக கட்டை தூக்கிட்டாங்க…” அதே கடுப்போடு கூறியதை கேட்டவன்,

“ஆழ்ந்த அனுதாபங்கள் குல்பி…” என்றவன், “அது பாட்டுக்கு ஒரு பக்கம் இருக்கட்டும்… அடுத்ததா என்ன பண்ண போற?” என்று இவன் விடாமல் கேட்க,

“அடுத்த வருஷம் இன்டர்ன் ஷிப் முடியட்டும் ஷ்யாம்… நிதானமா யோசிக்கலாம்…” என்று நழுவினாள். அவன் வேறு ஏதோ முடிவு செய்து இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டவள், அதில் சிக்க விருப்பப்படவில்லை.

“சரி… இன்டர்ன்ஷிப் முடிஞ்சு?” விடுவேனா என்று விடாமல் துளைக்க,

“எம்டி தான் போடணும்… கார்டியோ தான் நினைச்சுட்டு இருக்கேன்… பார்க்கலாம்…” என்று விடாமல் இவளும் நழுவினாள்.

“ஓகே… ஜான்ஸ் ஹாப்கின்ஸ்ல அப்ளை பண்ணு…” என்று அவன் கூலாக கூற, அன்றைய தினம் இரண்டாவது முறையாக அதிர்ச்சியில் ஆழ்ந்தாள்.

“விளையாடறியா ஷ்யாம்? ஒன் ஆப் தி டாப்மோஸ்ட் இன் தி வோர்ல்ட்…” என்றவளுக்கு உண்மையிலேயே நடுக்கமாக இருந்தது. இவள் எம்பிபிஎஸ் படித்ததே பிருந்தாவை பிரிய முடியாமல் எனும் போது, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் எல்லாம் நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஹாவர்ட், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் எல்லாம் அறிவு ஜீவிகளுக்கான இடம் என்பதை தெரியாதவளா அவள்?

“நோ ஐ ஆம் வெரி சீரியஸ்… எம்டி எம்பிஏ கோர்ஸ் ஒன்னு இருக்கு… எம்டி கம்பைன்ட் வித் ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட்…” என்க,

“எஸ்… ஐ நோ… பைவ் இயர்ஸ் கோர்ஸ்… பட் எனக்கு அது தேவையில்லை… அவ்வளவு கமிட்டட்டா என்னால படிக்க முடியாது…” மிகவும் தீவிரமான மனோபாவத்துக்கு மாறியிருந்தாள். விட்டால் அதற்கும் அவளை ஒப்புக் கொள்ள செய்து விடுவானோ என்ற பயம் அவளுக்கு.

“எதுவா இருந்தாலும் பெஸ்ட்டா பண்ணனும் குல்பி… அட்மிஷனை பத்தி கவலைப் படாத, நான் பார்த்துக்கறேன்… படிச்சா டாப்மோஸ்ட்ல படிக்கணும்… அந்த கமிட்மென்ட் கூட இல்லாம நீ எப்படி சர்வைவ் பண்ணுவ?” என்ற அவனது கேள்வியிலிருந்த உண்மை அவளை சுட்டது.

“தெய்வமே… என்னை விட்டுடு… ஏதோ படிச்சேன்… படிக்கறேன்… இனிமேவும் படிப்பேன்னு நினைக்கறேன்… ஆனா என்னை கொண்டு போய் அவ்வளவு பெரிய கிணத்துல தள்ளி விடனும்ன்னு நினைக்கறியே… உன்னை என்ன பண்றது? எனக்கு அந்த கோர்ஸ்ஸால என்ன யூஸ்?”

“பின்னாடி யூஸ் ஆகும்… இப்ப இருந்தே ப்ரிபேர் பண்ணு…” என்று முடித்து விட, இவள் பல்லைக் கடித்தாள்.

“போடா லூசு… நீ சொன்னா நான் செய்யனுமா? முடியாது…” என்று முரண்டு பிடித்தவளை பைரவி கோபமாக பார்த்தார். இந்த சீரியஸ்னஸ் இல்லாததால் தானே அவர் அவளை திட்டுவது. முதன் முறையாக ஷ்யாம் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் வந்தது.

“நல்லதுக்கு தான சொல்றாங்க… கேளேன்டி…” என்றவரை வியப்பாக பார்த்தாள்.

“ம்மா…” ஆச்சரியத்தில் வாயை பிளக்க,

“எவ்வளவு செலவாகும், என்ன ஏதுன்னு கேட்டு வெச்சுக்க…” என்கவும், அவளது ஆச்சரியம் கூடித்தான் போனது.

அவரது கேள்வியை கேட்டவன், அவனாகவே, “ஒரு டூ லேக் செலவகும்ன்னு அவங்க கிட்ட சொல்லு…” எனவும்,

“வெறும் டூ லேக் தானா?” என்று கண்களை விரித்தாள்.

“ம்ம்ம்… டூ லேக் டாலர்ஸ்…” எனவும், அவளுக்கு நெஞ்சு வலி வந்துவிடும் போல இருந்தது.

“அடங்க மாட்டியா? இதுக்கு பைரவி எனக்கு நூறு பவுனை போட்டு கட்டி கொடுத்து பேக் பண்ணிடறதே பெட்டருன்னு சொல்லிடும்…” தீவிர குரலில் கூறியவளின் தொனியில் வாய்விட்டு சிரித்தான்.பைரவி அவளை நறுக்கென்று கொட்டினார். ‘ஸ்ஸ்ஸ்…’ என்று தலையை தடவிக் கொண்டு அவரை பார்த்து ‘ஈஈஈஈ’ என்று இளித்து வைக்க,

“ஆஹான்… அப்படியா? சரி கட்டிக் கொடுத்துட்டா உன் புருஷன் உன்னை படிக்க வைக்கட்டும்… எப்படி இருந்தாலும் நீ ப்ரிபேர் பண்ணித்தான் ஆகணும்…” என்று மீண்டும் சிரிக்க,

“அந்த ஆணிய பத்தி நீ பேசவே வேண்டாம்…” என்று கடுப்படிக்க, அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“சரி பேசலை…” என்றவன், சற்று இடைவெளி விட்டு, “நாளைக்கு ஈவ்னிங் ஒரு ஒன் ஹவர் ஸ்பேர் பண்ண முடியாதா மஹா?”

“என்ன விஷயம் ஷ்யாம்?”

“அம்மாவுக்கு நெக்ஸ்ட் வீக் பர்த்டே வருது… ஜுவெல் ப்ரெசன்ட் பண்ணலாம்ன்னு ஒரு ஐடியா… பர்சேஸ் பண்ண போறேன்… கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்…” எனவும் அதற்கும் மேல் மறுக்க முடியவில்லை.

“ஓகே… வரேன்…” என்று இவள் இங்கு சொல்லிக் கொண்டிருக்க, ஷ்யாமுக்கு எதிரான சதிவலையின் முதல் காட்சியை அரங்கேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான் விஜய்!

“நாளைக்கு காலைல இந்த நியுஸ் முகத்துல தான் இந்த தமிழ்நாடே முழிக்கணும்… என்ன ஓகே வா?” என்று அவன் யாரிடமோ கூறிக் கொண்டிருக்க,

“கண்டிப்பா சர்… நாளைக்கு காலைல எடிஷன்ல முதல் பக்கத்துல கொட்டை எழுத்துல வரும்… நீங்க கவலைப் படாதீங்க…” என்றுக் கூறி கொண்டிருந்தான், அந்த இன்னொருவன்.

*****

“கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே”

பூஜையறையில் பைரவி சுப்ரபாதத்தை பாடிக் கொண்டே,

“அடியே கழுதை… எழுந்துரு…” என்று கத்த, அவரது அந்த கத்தல் எல்லாம் காதில் வாங்காமல் சுகமான நித்திரையில் ஆழ்ந்திருந்தாள் மஹா. ஆறரை மணியிலிருந்து ஆரம்பிக்கும் இந்த வேணுகானம் கல்லூரி சமயமென்றால் எட்டு மணி வரை நீடிக்கும். இதுவே விடுமுறைஎன்றால் பத்து வரையும் கூட நீடிக்க ஆகச் சிறந்த வாய்ப்புகள் உண்டு.

பைரவி மாடியேறி வரும் வாய்ப்புகள் சற்று குறைவென்பதால் பெரும்பாலும் அவரது சுப்ரபாதத்தை கண்டுக் கொள்ள மாட்டாள்.

அப்படியே வந்தாலும், அர்ச்சனை, சகஸ்ரநாமம், அஷ்டோத்திரம் என்று அனைத்தையும் அவர் முடித்த பிறகு தான் திருப்பள்ளியெழுச்சி நடைபெறும்.

“ச்சே… இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல…” என்று தலையணையை காதில் வைத்து அடைத்தவள், இன்னும் தீவிரமாக உறக்கத்தை தொடர, பைரவிக்கு தான் ரத்த அழுத்தம் எகிறிக் கொண்டிருந்தது.

முந்தைய தினம் அந்த ஷிகாவ் தெரிவித்த ரெஃபரென்ஸ் புத்தகங்களை எடுக்க நூலகத்திற்கு நேரத்திலேயே போக வேண்டும் என்று சொல்லிவிட்டு, “ம்மா கண்டிப்பா என்னை சீக்கிரம் எழுப்பி விட்டுடு…” என்றும் சொல்லியபின் தான் உறங்க சென்றதே!

“கழுதை குட்டி… எழுப்ப சொல்லிட்டு… தூங்கறதை பாரு…” காபியை கலக்கிக் கொண்டே திட்டிக் கொண்டிருந்தார்.

“விடேன்… கொஞ்ச நேரம் தான் தூங்கிட்டு போகட்டுமே பைரவி…” என்ற கிருஷ்ணம்மாளை முறைத்தவர்,

“அப்படீன்னா நீங்களே போய் உங்க பேத்திக்கு திருப்பள்ளியெழுச்சி பாடுங்க…” என்று கடித்து வைக்க,

“காலங்கார்த்தாலேயே மாமியார் மருமக குடுமி பிடி சண்டை ஆரம்பமாகிடுச்சா?” என்று வாக்கிங்கை முடித்தபடி டைனிங் டேபிளில் வந்தமர்ந்தார் முருகானந்தம்.

“ஆமா… நீ தான் கண்ட… நாங்க என்னமோ பேசிட்டு போறோம்… உன் வேலைய பாருடா முருகா…” என்று சேம் சைடு கோலடித்தார் கிருஷ்ணம்மாள்.

“அதானே… நீங்க எதுக்கு தலையிடறீங்க?” என்று ஒத்து ஊதினார் பைரவி.

“இதெல்லாம் எனக்கு தேவைதான்…” என்றவர், “ரெண்டு பேரும் வாய் கிழிய பேசறீங்களே… ஒரு நாளாச்சும் என் கூட யாராவது வாக்கிங் வரீங்களா? எப்ப பாரு இந்த அடுப்படிதான் திருப்பதி…” என்றவரை,

“நாங்க அடுப்படிதான் திருப்பதின்னு இருக்கறதால தான் நீங்க வெங்கடாசலபதி மாதிரி மைனர் துரை மின்றீங்க… இல்லன்னா முடியுமா?” பைரவி பதிலுக்கு ஆப்படிக்க,

“ஆமா மின்ற மின்னல்ல பாக்கறவங்க கண்ணு பூத்துருச்சாம்…” என்று சிரித்தவர், “காபி கொடுங்க மகாராணி…” என்று பைரவியிடம் கேலியாக கேட்க,

“ம்மா… அப்படியே எனக்கும் ஒன்னு…” என்று கொட்டாவி விட்டபடி தந்தையின் மேல் சாய்ந்தமர்ந்துக் கொண்டு தனது தூக்கத்தை தொடர முயற்சித்த மகளை பார்த்து பல்லைக் கடித்தார் பைரவி.

“அடியே பல்லை விளக்குனியா?”

“ம்மா… ஆடு மாடெல்லாம் பல்லை விளக்கிட்டு தான் காபி குடிக்குதா?” என்றவள், தந்தையின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு உறக்கத்தை தொடர்ந்தாள்.

“ஆடும் மாடும் நீயும் ஒண்ணுன்னு ஒத்துக்கறியா?” என்று பதில் கேள்வி கேட்ட பைரவி,

“இதுல எல்லாம் உங்க பொண்டாட்டி ரொம்ப புத்திசாலிப்பா…” என்று அவர் மேல் படுத்துக் கொண்டே சிரிக்க,

“ஆமா லட்டுக் குட்டி… அமெரிக்க அதிபரே இவ கிட்டதான் போன் போட்டு ஐடியா கேக்கறாங்களாம்… காத்து வாக்குல காதுல விழுந்துச்சு…” என்று சிரிக்க, அவர்கள் இருவரையும் முறைத்தபடி, ஜாகிங் முடித்து விட்டு, “ம்மா… காபி…” என்றழைத்தபடி வந்தமர்ந்தான் கார்த்திக்.

“ம்க்கூம்… சாமியே சும்மா போகுதாம்… இதுல பூசாரிக்கு புல்லட் கேக்குதாம்…” மஹா கிண்டலாக கூற,

“இப்ப எதுக்கு லட்டு இந்த புல்லட்டை ஓட்டுன?” முருகானந்தம் சின்ன சிரிப்போடு கேட்க,

“நாம எவ்வளவு நேரமா ஒரு காபி கேட்டுட்டு உட்கார்ந்துட்டு இருக்கோம்… இப்ப வந்துட்டு சாருக்கு உடனே வேணுமாம்…” என்ற மகாவுக்கு எப்போதும் போல ஒரு கொட்டு விழுந்தது.

“அடிக் கழுதை… உன் அண்ணன் காலைலேயே எழுந்து, பல்லு விளக்கிட்டு, ஜாகிங்கையும் முடிச்சுட்டு வரான்… அவனும் நீயும் ஒண்ணா அழுக்கு மூட்டை? எந்திருச்சு ஒரு சூரிய நமஸ்காரம் பண்ண துப்பில்ல உனக்கு காபி வேற கேக்குதா?” என்ற அடுத்த அர்ச்சனையை ஆரம்பிக்க,

“மாதாஜி… இந்த நாள்…” என்று அண்ணாமலை ரஜினி பாணியில் ஆரம்பித்தவள், “உன் டைரில குறிச்சு வெச்சுக்க…” என்க, கேட்டுக் கொண்டிருந்தவர்களின் முகத்தில் அடக்க முடியாத சிரிப்பு. கார்த்திக்கும் கூட சிரித்தபடி வேறு புறம் திரும்பினான். அவன் இன்னமும் மகாவிடம் பேசவில்லை. அவனது கோபம் போகவுமில்லை.

“குறிச்சு வெச்சு?” பைரவி விடுவேனா என்று கேட்க,

“நானே காபி போட்டு, நானே குடிச்சுட்டு, உனக்கு நான் வெவ்வே காட்டலை… என் பேரு…” என்று நிறுத்தி விட்டு, “மஹாவேங்கடலக்ஷ்மி இல்ல… இல்ல… இல்ல…” என்று டேபிளை தட்ட, அது அதிர்ந்தது.

“அதென்ன பாப்புக்குட்டி மூணு இல்ல?” என்று முருகானந்தம் கேட்க,

“ப்பா… அது ஒரு இல்ல தான்… மத்த ரெண்டும் எக்கோ…” என்று சீரியசாக சொல்வது போல நடித்தவளை பார்த்து சிரித்தார்.

கணவருக்கும் மகனுக்கும் காபியை கொடுத்த பைரவி, “எருமை… போய் பல்லை விளக்கு…” என்று மீண்டும் கொட்டி அவளை விரட்ட,

முருகானந்தம் காபியை எடுத்துக் கொண்டு பேப்பரையும் கையில் எடுத்து விரித்தார்.

கார்த்திக் நியுஸ் பார்ப்பதற்காக தொலைகாட்சியை ஆன் செய்தான்.

‘பிரபல தயாரிப்பாளரின் மகளை கடத்தி பணத்தை வசூல் செய்த பைனான்சியர்’

கொட்டை எழுத்தில் முன் பக்கத்தில் செய்தியாகி இருந்தார்கள் ஷ்யாமும் மஹாவும்.

அதையையே காலை செய்தியில் படித்தாள் அந்த செய்தியாளர், தொலைகாட்சியில்!

‘இது போன்ற கட்டபஞ்சாயத்துகளில் முதன்மையான அந்த பைனான்சியரிடம் இதை பற்றி கேட்டபோது நோ கமெண்ட்ஸ் என்று முடித்துக் கொண்டார்’ என்று அந்த செய்தி முடிந்திருந்தது.

அதோடு மிக முக்கியமாக, தயாரிப்பாளரின் மகளின் கற்பு இப்போது கேள்விக்குறி தான் என்று கேள்விக்குறியோடு முடிந்திருந்தது தான் அந்த கட்டுரையின் ஹைலைட்!

அதையே மாற்றி மாற்றி ஒவ்வொரு செய்தி சேனலிலும் கூறிக் கொண்டிருந்தனர் ஒவ்வொருவரும்!

மஹாவின் கால்களுக்கு கீழ் உள்ள பூமி பிளந்து கொண்டிருந்தது.

‘நோ கமெண்ட்ஸ்’ என்று கூறினானா?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!