VNE 26

VNE 26

அத்தியாயம் 26

கார்த்திக்கின் மனம் குமுறிக் கொண்டிருந்தது. நீலாங்கரையிலிருந்த விஜியின் பங்களாவின் மொட்டை மாடியில் எரிச்சலோடு உலவிக் கொண்டிருந்தான்.

அவன் மட்டும் தான் சென்னையில் இருந்தான். அவனது பெற்றோரும் தம்பியும் சொந்த ஊரான தஞ்சாவூரில் இருப்பதாக கூறியிருந்தான்.

கடற்கரையை ஒட்டிய வீடது! தனிமையான பங்களா. அருகருகே வீடுகள் இருந்தாலும் மக்கள் நடமாட்டம் வெகு சொற்பம். விஐபி ஏரியா. பணத்தை ஷ்யாமிடம் திருப்ப முடியாத ஒருவர், வீட்டை விஜியிடமே விற்று சென்றிருந்தார்.

அது போன்ற சொத்துக்களை ஷ்யாம் வாங்க விரும்பியதில்லை. வாங்கவும் மாட்டான். அவனுக்கு தேவை பணம். அதை மட்டும் தான் பார்ப்பான். ஆனால் விஜிக்கு அது யோகமாக தோன்ற, ஷ்யாமிடம் சொல்லாமலே அந்த பங்களாவை வாங்கியிருந்தான் முன்பு ஒருமுறை!

அதற்கு பின் அது அவ்வப்போது நடக்கும் தொடர்கதையாகி இருந்தது. கடனுக்காக விற்பவர்கள் வெகு சொற்ப விலைக்கு விற்பதும், இவன் அடித்து விலையை பேசி முடித்துக் கொள்வதும் வழக்கமாகி இருந்தது.

மாடியில் அமைந்திருந்த ரூஃப் கார்டன் மற்ற நேரமாக இருந்தால் கார்த்திக்கின் ரசனையை கிளறி விட்டிருக்கக் கூடும். இந்த நேரத்தில் அவை எதுவுமே கண்ணில் படவில்லை. வெகு அருகில்ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த கடலலைகளை வெறித்துக் கொண்டிருந்தான்.

அந்த அலைகளுக்கு போட்டியாக இவனது மனமும், கொந்தளித்துக் கொண்டிருந்தது.

சிறு பெண் என்று தான் நினைத்த தங்கையின் போக்கை நினைத்து அவனுக்கு உள்ளுக்குள் குளிர் பிறந்தது.

சுடுமென்று தெரிந்தே நெருப்பில் யாரேனும் கை வைப்பார்களா?

அது அறிவுள்ளவர்கள் செய்யும் வேலையா?

தனது தங்கை நெருப்பில் விழும் விட்டில் பூச்சியாகி விடுவாளோ என்ற பயம் மனதை கவ்வியது.

அதை விட, தனக்கே அழைத்து தங்கையிடம் கொடுக்க சொன்னவனின் வார்த்தைகள் கார்த்தியினுள் புயலை கிளப்பி விட்டிருந்தது.

முதல்கட்ட அதிர்ச்சியில் அவனால் எதையும் யோசிக்கக் கூட முடியவில்லை. அவனது குரல் அவனை யோசிக்க விடவில்லை.

யாரும் எதுவும் கேட்க முடியாது என்ற எண்ணமா ?

இவனிடம் பணிந்து போக தான் இன்னமும் அவனிடம் சிறைப்பட்டு இல்லையே!

பணத்தை முழுவதுமாக கொடுத்து முடித்த பின் அவனிடம் எதற்காக பணிய வேண்டும்?

அதிலும் மூன்று தினங்களுக்கு முன் தங்கையோடான வாக்குவாதம், அவனது பல கோபத்தை கிளறி விட்டிருந்தது.

“அவன் கிட்ட இவ்வளவு நேரம் என்ன பேச்சு பாப்பா?” ரவுத்திர மூர்த்தியாக முக சிவக்க நின்றிருந்தவன், கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்க,

“நீ தானே போனை கொடுத்த ண்ணா?” தன்னுடைய அதிர்வை மறைத்துக் கொண்டு அவள் கூற,

“நான் கொடுத்தா? அவனோட இந்தளவு எப்படி பழக்கம்?”

அவளோ சற்றும் தயங்காமல், எதையும் மறைத்து வைக்கவும் நினைக்காமல்,

“என்னோட ப்ரென்ட்…” என்று நேரடியாக கூற,

“அப்படீன்னா இது யாரு?” பிருந்தாவை காட்டி இவன் கேட்க,

“அண்ணா… பிருந்தா எனக்கு எப்படியோ, அதே மாதிரி தான் ஷ்யாமும்… எந்த டிபரன்சும் இல்ல…” தன்னை புரிய வைத்து விடும் நோக்கத்தில் அவள் கூற, இந்த வார்த்தைகளில் பிருந்தாவே அதிர்ந்தாள்.

அவளறியாமல் யாரிடமும் பேசியதும் கூட இல்லையெனும் போது தன்னை போல தான் அவன் என்று தனது தோழி கூறியது வலித்தது.

“அதெப்படி நாலு நாள்ல ப்ரென்ட்? அதுவும் இவ்வளவு க்ளோசா?” கார்த்திக் விட்டு விட முடியாது என்று உறுதியாக எண்ணிக் கொண்டு கேட்க,

“எனக்கு ஷ்யாமை முதல்லையே தெரியும்… இந்த நாலு நாள்ல நல்ல பழக்கம்… அவ்வளவுதான் கார்த்திண்ணா… இதுக்கு ஏன் இவ்வளவு கோபப்படற?” வெகு சாதரணமாக மகா கூறியது கார்த்தியின் கோபத்தை இன்னமும் கிளறி விட்டது.

“கொஞ்சம் அறிவோட பேசுடி. அந்த பொம்பளை பொறுக்கிக் கூட உனக்கென்ன பழக்கம்ன்னு தானே அண்ணன் கேக்கறான்?” மகனை தள்ளிக் கொண்டு அவளருகில் வந்த பைரவி, கோபமாக கேட்க,

“ம்மா… ஒருத்தரை பத்தி தெரியாம இப்படி பேசாதம்மா…”

“உனக்கு ரொம்ப தெரியுமா?” பல்லைக் கடித்துக் கொண்டு அவர் கேட்ட கேள்வியில் மனம் மிகவும் காயப்பட்டது.


“ரொம்ப தெரியும்ன்னு சொல்லலை… ஆனா தெரியும்… அவன் எதையுமே என்கிட்டே இருந்து மறைச்சு பேசினதில்லை…” உண்மையை தானே அவள் கூறினாள்.

“தெரிஞ்சும் எப்படி மஹா அவர் கூட பழக்கம்ன்னு சொல்ற?” இப்போது கேள்வி எழுப்புவது பிருந்தாவின் முறையானது.

“தெரிஞ்சதால தான் பழக்கம் பிருந்தா… இல்லைன்னா எப்படி ப்ரென்ட்ன்னு சொல்வேன்?” நியாயமாகத்தான் கேட்டாள். ஆனால் அங்கிருந்த யாருக்குமே அந்த நியாயத்தை ஜீரணிக்க முடியவில்லை. அவனை போன்ற ஒருவனுக்கா இவள் சப்போர்ட் செய்கிறாள் என்ற கசப்பு!

“அவன் சரியான ஆளே இல்ல பாப்பா… ரொம்ப மோசமானவன்…” முருகானந்தம் துக்கம் தொண்டையை அடைக்க அவளுக்கு விளக்கி விடும் ஆசையில் கூற,

“மத்தவங்க கிட்ட எப்படியோ? என்கிட்டே அவன் சரியாத்தான் இருக்கான் ப்பா… எனக்கு எந்த இஸ்யுசும் இல்லையே…”

“பணத்துக்காக உன்னை கஸ்டடி எடுத்தவன்… அவனுக்கு போய் சப்போர்ட் பன்றியே… உனக்கு வெட்கமா இல்லையா?” எரிச்சலாக கார்த்திக் கேட்க,

“கஸ்டடி எடுத்தது அவனோட பணத்துக்காக… உன்கிட்ட கொள்ளையடிக்க இல்ல… அவன் வியாபாரத்துல நான் தலையிட மாட்டேன்… கொடுக்க வேண்டியது நீ… வாங்கினது அவன்… அது இப்ப முடிஞ்சு போன விஷயம்… அதுவுமில்லாம உங்க டீலிங்ஸ் வேற, எங்க பழக்கம் வேற ண்ணா…”

“ரொம்ப புத்திசாலித்தனமா பேசாத பாப்பா… அவன் கொஞ்சம் கூட மனுஷத் தன்மையே இல்லாம எப்படியெல்லாம் நம்மளை படுத்தி வெச்சான்னு தெரிஞ்சும் இப்படி பேசற நீ?”

“ஏன் ண்ணா அவனை பத்தி தெரிஞ்சுதானே பணத்தை வாங்கின? அப்ப இதெல்லாம் உனக்கு தோணலையா?”

“தெரிஞ்சு தான் வாங்கினேன்… ஆனா நீ இப்படி மாறி போனதுதான் ஆச்சரியமா இருக்கு மஹா… மனசு வலிக்குது…”

“அண்ணா நான் மாறில்லாம் போகலை… அவனை உன்கிட்டவும் விட்டுக் கொடுக்க முடியல… அவன் கிட்ட உன்னையும் விட்டுக் கொடுக்க முடியல….” என்று கூறும் போதே குரல் உள்ளே சென்று விட்டது.

“அப்படி விட்டுக் கொடுக்க முடியாத அளவு என்ன பழக்கம் மஹா? அதுவும் அந்த பொம்பளை பொறுக்கிக் கூட?” பைரவி அந்த வார்த்தையிலேயே நிற்க,

“ம்ம்மா…” தாயை எப்படி சமாளிப்பது என்று அவளுக்கு தெரியவில்லை.

“எதுக்கு கோபப்படற? நீ கோபப்பட்டா அவன் நல்லவன்னு ஆகிடுமா?” கார்த்திக் கொந்தளித்தான்.

“அவன் நல்லவன்ன்னு எப்பண்ணா சொன்னேன்? அவன் அப்படித்தான்… அது எனக்கு நல்லாவே தெரியுமே… ஆனா அவன் எப்படிப்பட்டவனா இருந்தா எனக்கென்ன? அது அவனோட பர்சனல் ண்ணா… என்கிட்டே  அவன் சரியா இருக்கான்… அவனோட ப்ரென்ட்ஷிப்பை என்னால விட்டுக்கொடுக்க முடியாது…” தீவிரமான குரலில் முடித்தவளை பரிதாப பார்வை பார்த்தான்.

அவனது நிலையை எண்ணி அவனுக்கே பரிதாபமாக இருந்தது.

தங்கையின் பிடிவாதத்தை பார்த்து அயர்ந்து தான் விட்டான்.

இத்தனைக்கும் அவள், அவனை நண்பன் என்று தான் கூறினாள். அதையே அவனால் ஏற்க முடியாமல் தவித்தான்.

ஷ்யாமை போன்றவனுடன் எப்படி நட்பு நீடிக்க முடியும்?

கார்த்திக்கை பொறுத்தவரை ஷ்யாம் ஒரு ராட்சசன். அத்தனையையும் விழுங்கி ஏப்பம் விட்டுவிடும் ராட்சசன். எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்க தயங்காத அசுர பிறவி அவன். அவனை பற்றி அறிந்தும் தங்கையை அவனுடன் நட்பு பாராட்டுவது எங்கு சென்று முடியும்?

“மஹா… உனக்காக நாங்க இங்க நாலு நாளா துடிச்ச துடிப்பு உனக்கு பெருசா தெரியல… பட்ட பாட்டை நீ மதிக்கல… அம்மா அழுதே கரைஞ்சது உனக்கு தெரியல… கொஞ்சம் விட்டா ஆத்தா உயிரை விட்ருப்பாங்க…” என்று கார்த்திக் கூறிக் கொண்டிருக்கும் போதே, “ண்ணா…” என்று இடையிட்டாள் மஹா. கார்த்திக் வலது கையை அவளை நோக்கி காட்டி, நிறுத்தக் கூறியவன்,

“நாய் படாத பாடு பட்ட நாங்கல்லாம் உனக்கு பெருசா தெரியல… உனக்கு அவன் பெருசா போய்ட்டான்ல…” என்று வலியோடு முடிக்க,

“அப்படியெல்லாம் இல்லண்ணா… அதே கஷ்டத்தை நானும் பட்டேன்… அவ்வளவு அவமானமா இருந்துது… முதல்ல இந்த விஷயத்துல இருந்து வெளிய வந்தா போதும்ன்னு தானே நானும் நினைச்சேன்… உன்கிட்டவும் அதை தானே சொன்னேன்… ஆனா அது வேற பழக்கம் வேற ண்ணா… புரிஞ்சுக்க…”

“அது எப்படி வேற வேறாயாகும்? அது தான் எனக்கு புரிய மாட்டேங்குது…” அவ்வளவு எரிச்சல் அவனது குரலில்!

தனது தந்தை புறம் திரும்பியவள், “ப்பா… ஷ்யாமோட அப்பா உங்களுக்கு ப்ரென்ட் தானே?” என்று கேட்க, அவர் தலையசைத்தார்.

“இந்த பிரச்சனையால அவர் கிட்ட நீங்க பேசாம இருந்துடுவீங்களா?” என்று கேட்க, அவர் மறுப்பாக தலையசைத்து விட்டு,

“அதெப்படி பாப்பா? வியாபாரம் வேற, சொந்தமும் நட்பும் வேற… அதுவுமில்லாம மச்சான் தான் ஆரம்பகாலத்துலருந்து நமக்கு தூணா இருந்தது…” என்று ஈனஸ்வரத்தில் கூற,

“அதை தானப்பா இவ்வளவு நேரம் நான் சொல்றேன்… அவர் மாதிரி இல்ல ஷ்யாம்… அதை நான் ஒத்துக்கறேன்… அவன் பழக்க வழக்கமெல்லாம் வேற மாதிரி தான்… எனக்கும் தெரியும்… ஆனா அவ்வளவு புத்திசாலி அவன்… பழகினவங்களுக்காக உயிரைக் கூட கொடுப்பான்…” என்று கூறியவளுக்கு அந்த மலைஜாதி பெண்ணுக்காக அவன் துடித்த துடிப்பு கண்ணில் வந்து போனது. அந்த குழந்தையை கையில் ஏந்தியவாறு கண்கள் பளபளக்க, ‘மஹா வேங்கட லக்ஷ்மி’ என்று பெயரிட்ட அந்த கணத்தை நினைத்துப் பார்த்தாள். அவளையும் அறியாமல், அவளது உடல் புல்லரித்தது.

“அவனோட ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்துட்டு இருக்கான் அண்ணன்… ஆனா அவனோட இன்னொரு பக்கம் யாருமே பார்க்காதது… எனக்கு தெரியும்… அதனால தான் நான் சொல்றேன்… என்னால அவனை விட்டுக் கொடுக்க முடியாது…” என்று தீர்மானமாக முடிக்க, பைரவியின் கண்களில் கண்ணீர்.

கையிலிட்டு தாலாட்டிய தனது பெண் ஒரே நாளில் எங்கோ சென்று விட்டது போன்ற பிரமை அவருக்கு.

“அண்ணா… உங்க எல்லாரோட உணர்வும் எனக்கும் இருக்கு… உங்க மான அவமானம் எனக்கும் தான்… கஷ்ட நஷ்டமும் எனக்கும் தான்… ஆனா அதை தாண்டி எனக்குன்னு ஒரு ஸ்பேஸ் இருக்குண்ணா… அது என்னோட வெரி பெர்சனல் ஸ்பேஸ்… அங்க என்னோட ப்ரென்ட்ஷிப்ப நான் மட்டும் தான் தீர்மானிக்கணும்… ஷ்யாம் என்னோட ப்ரென்ட்… அவ்வளவுதான்…” இனி பேச்சே இல்லையென்று முடித்தவளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணர்வோடு பார்த்தனர்.

“ஆனா மஹா… ஒரு நாள் இல்ல ஒருநாள் அவன் என்னை ஏமாத்திட்டான்னு வந்து நிற்க போறடி… அப்ப இருக்கு உனக்கு…” வெஞ்சினத்தோடு பைரவி பல்லைக் கடித்துக் கொண்டு கூற, மகா திடுக்கிட்டாள்.

என்ன மாதிரியான வார்த்தைகள் இவை?!

“ம்ம்மா… இப்படி பேசாத… ரொம்ப அசிங்கமா இருக்கும்மா…” தொண்டை அடைக்க கண்களில் நீரோடு கூறியவள், அதற்கும் மேல் பேச விருப்பமில்லாமல் நகர எத்தனிக்க,

“அப்படீன்னா லவ் பண்றேன்னு வருவியா?” என்று கார்த்திக் கடுமையான முகத்தோடு கேட்க,

“லவ் பண்றேன்னா அதை சொல்ல எனக்கு தைரியம் இருக்கு ண்ணா… ஆனா அவன் என்னோட ப்ரென்ட் மட்டும் தான்…” வலித்து வெளிவந்தது அவளது வார்த்தைகள்!

“நடிக்காத மஹா…” எரிச்சலாக கார்த்திக் கூற,

“அவளுக்கு நடிக்க தெரியாது…” இறுக்கமாக கூறினாள் பிருந்தா. அவளை கடுப்பாக பார்த்தான் கார்த்திக்.

“இது உனக்கு தேவையில்லாத விஷயம்…” முகத்தில் அறைவது போல பதில் கூறியவனின் தொனியில் அடிபட்டு போனாள் பிருந்தா.

அதுவரை அவர்கள் அனைவருக்கும் ஆதரவாகத்தான் இருந்தாள். அவளுமே மகா மேலிருந்த அக்கறையில் தான் கேள்வி கேட்டதும். ஆனால் கார்த்திக் ‘நடிக்காதே’ என்று கூறியபோது பிருந்தாவால் அதை ஒப்புக் கொள்ள முடியவில்லை.

மகாவை பற்றி முழுக்க முழுக்க அறிந்தவள் அவள், கார்த்திக்கை காட்டிலுமே அதிகமாக! அவளுக்கு நடிக்க தெரியாது. எதுவாக இருந்தாலும் நேரடியாக பேசிவிடுவாள். வலிக்க பேசினாலும் சரி அது நேரடியான பேச்சாக மட்டுமே இருக்கும். அப்படிப்பட்டவளை நடிக்காதே என்று கூறியது அவளை காட்டிலும் பிருந்தாவுக்கு வலித்தது.

அதோடு இது உனக்கு தேவையில்லாத விஷயம் என்று தன்னை தள்ளி வைத்தது. அடிபட்ட பார்வையோடு கார்த்திக்கை பார்த்தவள்,

“நீங்க என்ன சொன்னாலும் சரி, மஹாவுக்கு நடிக்க தெரியாது. அந்த ஷ்யாம் கூட பழக்கமே இல்லைன்னு அவ பொய் சொல்லலை… அவர் தன்னோட ப்ரெண்டுன்னு உறுதியா சொல்ல தெரிஞ்சவளுக்கு அவரை லவ் பண்ணா சொல்ல தெரியாதா? இவ்வளவு தெளிவா இருக்கறவளை நீங்க தான் குழப்பறீங்க…” என்று கார்த்திக்கை சாடியவள், பைரவி புறம் திரும்பி,

“அவ மனசு சுத்தம் ஆண்ட்டி… தயவு செஞ்சு இதுக்கும் மேல இதை பற்றி பேச வேண்டாம்…” என்று உறுதியாக கூறியவளின் தொனி இருவரையும் வாயடைக்க வைத்தது.

“ஆமா பைரவி… நம்ம பொண்ணை நாம நம்பலைன்னா வேற யார் நம்புவாங்க?” என்று கேட்ட முருகானந்தம், கார்த்திக்கிடம் திரும்பி, “டேய் பெரிய மனுஷா… என் பொண்ணை கேள்வி கேக்கற அளவு நீ பெரிய மனுஷனா இருக்கலாம்… ஆனா அவளை நான் நம்புவேன்… அந்த பையன் மேல தான் எனக்கு கோபம் இருக்கே தவிர, என் பொண்ணு மேல இல்ல…” என்று நிறுத்தியவர்,

“எந்த சூழ்நிலையா இருந்தாலும் என் பொண்ணு தடம் மாற மாட்டா… அதை யார் நம்பறீங்களோ இல்லையோ… நான் நம்பறேன்… இன்னொரு தடவை, ஏமாந்துருவா அது பண்ணிடுவா, இது பண்ணிடுவான்னு அவளுக்கு சாபம் கொடுக்கற வேலை வெச்சுக்காத பைரவி… உனக்கு வார்த்தை எல்லாம் அவ்வளவு சுளுவா வந்துடுது… ஒன்னு கெடக்க ஒன்னு பலிச்சு போச்சுன்னா நீ ரொம்ப சந்தோஷமா இருந்துடுவியா? வார்த்தைய அடக்கு… புள்ளைய புள்ளையா பாரு…” என்று கடினமான குரலில் கூற, பைரவியின் கண்களில் கண்ணீர்.

“என் பொண்ணு கெட்டு போவனும்ன்னு நானே நினைப்பேனா?” என்றவருக்கு வார்த்தை வெளிவர மறுத்தது.

“அந்த நெனப்பு இருக்கவ வார்த்தைலையும் கவனமா இருக்கணும்… கோபம் இருந்தா என்ன வேணா பேசிடுவியா பைரவி?” முருகானந்தம் விட மாட்டேன் என்று முறுக்கிக் கொண்டு கேட்க,

“நான் பெத்த பொண்ணு நல்லா இருக்கனும்ன்னு தான் நெனப்பேன்… துஷ்டனை கண்டா தூர விலகுன்னு சொல்வாங்க… இவ நட்பு பாராட்டிக்கிட்டு இருக்காளேன்னு தான் சொன்னேன்…” என்ற அவரது விளக்கமெல்லாம் அவருக்கு பொருட்டாக இருக்கவில்லை.

பிருந்தாவும் அதை கண்டித்தாள் தான். ஆனால் மகாவை முழுக்க நம்பினாள் என்பதற்கு சாட்சி இருக்கிறது. ஆனால் பைரவியும் கார்த்திக்கும்? பிருந்தா அளவு கூட தன் பெண்ணை தானே நம்பாமல் பேசலாமா என்ற ஆற்றாமை அவருக்கு!

“அவன் துஷ்டன் தான். ஆனா பொண்ணு நம்ம பொண்ணு. அவ நல்லா இருக்கனும்ன்னு தான் எப்பவுமே வாய்ல வரணும்… ஒரு வார்த்தை கூட அசமஞ்சமா பேசிடாத… என்னால முதல்ல தாங்க முடியாது… என் பொண்ணு எப்பவும் என் பொண்ணு தான்…” என்று பிடிவாதமாக கூறிய தந்தையை கண்களில் நீரோடு பார்த்தாள் மஹா.

“கண்டிப்பா ப்பா உங்க பொண்ணு எப்பவும் தப்பு பண்ண மாட்டேன்…” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே முருகானந்தத்தின் செல்பேசி அழைத்தது.

ஆத்மநாதன் தான் அழைத்திருந்தார்.

“ஷ்ஷ்ஷ்… மச்சான் தான் கூப்பிடுறாங்க…” என்றவர், “சொல்லுங்க மச்சான்…” என்று சந்தோஷமாக ஆரம்பிக்க,

“பொண்ணு வந்துடுச்சா மாப்ள?” அவரது குரலிலும் ஒரு நிம்மதி, அவரது சந்தோஷக் குரலைக் கேட்டு!

“வந்துருச்சு மச்சான்… உங்களுக்கு தான் நன்றி சொல்லணும்… பையன் கிட்ட பேசி எப்படியோ செஞ்சுட்டீங்க…” என்று நன்றியோடு கூறியவரை மறுத்தார் ஆத்மநாதன்.

“இல்ல மாப்ள… அவன் இப்ப வரைக்கும் பேசலை… அவனெல்லாம் முருங்கை மரத்துல தொங்கற வேதாளம் மாதிரி… அவனா இறங்கினா தான் உண்டு… ஆனா என்னோட கால்ஸ் பார்த்திருப்பான்… கண்டிப்பா இந்த விஷயத்துக்காக தான் கூப்பிடறேன்னு தெரிஞ்சுகிட்டும் இருப்பான்… எமகாதகன் …” என்றவரின் குரலில் வருத்தத்தை மீறிய ஒரு சந்தோஷம், ஓரத்தில் மகனை பற்றிய பெருமை என்று கூட சொல்லலாம்!

“சென்னை ஆஃபீஸ்ல விஜி இருக்கான்ல… அவன்தாம்ல சொன்னான்… கொண்டு போய் விட்டாச்சுன்னு… அதாம்ல கால் பண்ணேன்…” சந்தோஷமாக அவர் தொடர, அதே சந்தோஷம் இவருக்கும் தொற்றிக் கொண்டது.

“ரொம்ப சந்தோஷம் மச்சான்… அடுத்த தடவை சென்னை வரும் போது நம்ம வீட்டுக்கு கண்டிப்பா வரணும்… அப்பத்தான் நம்ம புள்ளைங்களுக்குள்ள போக்குவரத்து இருக்கும்…” என்று அழைக்க,

“கண்டிப்பா வரேன்… இன்னும் ஒரு வாரத்துல வருவேன்… அந்த பய என்னை பார்க்காம கடுக்கா கொடுத்துட்டே இருக்கான்… அவன் முதுகுல ரெண்டு போடறதுக்கே வரணும்…”

“வாங்க மச்சான்… நம்ம வீட்ல விருந்துக்கு வந்துருங்க…” என்று சந்தோஷமாக அழைக்க,

“கண்டிப்பா…” என்றவர், “பொண்ணு கிட்ட கொடு முருகு… சின்ன புள்ளைல பேசினது…” என்று கேட்க, முருகானந்தம் புன்னகையோடு மகளிடம் செல்பேசியை கொடுத்தார்.

தயக்கமாக வாங்கியவள், “சொல்லுங்க அங்கிள்…” என்க,

“அதென்ன ராசாத்தி அங்கிள் ன்னு சொல்ற? மாமான்னு அழகா கூப்பிடு… அதானே முறை? சின்ன புள்ளைல கார்த்தியும் நீயும் என்னையே சுத்தி வருவீங்க… நடுவுல விட்டுப் போச்சு… ஆனா பாரு ராசாத்தி, நம்ம புள்ளைங்க எல்லாம் ஊர்ல இருந்து வந்து சிட்டில செட்டிலானாலும் முறைய மறந்துட கூடாது…” என்று பாசமாக கூற, அவளது முகத்தில் புன்னகை மலர்ந்தது.

“சரிங்க மாமா…” என்று சிரிக்க,

“அந்த பயலை நான் கண்டிச்சு வைக்கறேன்டா தங்கம்… உன்கிட்ட ஒழுங்கா தானே இருந்தான்?” அவருக்கு உள்ளுக்குள் பயமாகவும் இருந்தது. மகாவிடம் அவன் எதாகிலும் தவறாக நடந்திருப்பானோ என்று!

“ச்சே ச்சே… நானே நாலு நாள்ல அனுப்பிட்டானேன்னு கவலைல இருக்கேன்…” என்று சிரிக்காமல் மகா கூற,

“அட…” என்று அந்த பக்கம் வெடித்து சிரித்தார் ஆத்மநாதன்.

“அதையும் கேட்டேன் மாமா… இன்னும் ரெண்டு நாள் உன்னை வெச்சுருந்தா எனக்கு பைத்தியம் பிடிக்க வெச்சுருவ… நீ கிளம்பு ஆத்தான்னு சொல்லிட்டான்…” என்றும் சிரிக்காமல் கூற, ஆத்மநாதனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

‘நம்ம பயலை பைத்தியம் பிடிக்க வைக்கவும் ஒரு ஆள் இருக்கா?’ என்று யோசித்தவர், பேசி சிரித்துவிட்டு வைத்து விட, இவர்களின் சம்பாஷணைகளை கேட்டபடி கார்த்திக் இறுகி போய் அமர்ந்திருந்தான்.

அதே இறுக்கத்தோடு அடுத்த மூன்றாவதுநாள் விஜியின் நீலாங்கரை பங்களாவில் அமர்ந்திருக்க, அவனுக்கு முன் அமர்ந்திருந்தான் விஜி, கையில் பக்கார்டி!

சிப் சிப்பாக அருந்திக் கொண்டிருந்தவன், கார்த்திக் கையிலிருந்த எம்ப்டி விஸ்கி கிளாசை நிறைத்தான்.

அவனது மனமும் கோபத்தில் கொதித்துக் கொண்டுதானிருந்தது.

முழுமையாக அவனது அதிகாரத்தை பறித்து இருந்தான் ஷ்யாம்.

வேலை இருந்தது ஆனால் அதிகாரமில்லை!

முழு சுதந்திரத்தோடு சென்னையில் வலம் வந்தது இனி நடக்காது என்பது புரிந்தது.

அனைத்திலும் இளங்கவியின் தலையீடு இருந்தது.

முழுவதுமாக இவனை டம்மியாக்கிவிட்டு இளங்கவியிடம் அதிகாரத்தை கொடுத்திருந்தான் ஷ்யாம்.

அது இவனது கோபத்தை அதிகப்படுத்தியது.

அதுவுமில்லாமல் முன்னெல்லாம் ஷ்யாம் சென்னையில் மாதத்தில் இரண்டு நாட்கள் இருந்தாலே பெரிய விஷயம். ஆனால் அடுத்து பதினைந்து நாட்களுக்கு இங்கு தான் என்று கூறியவன், இவன் செய்த ட்ரான்சாக்ஷன்களை தோண்டி துருவ துவங்கியிருந்தான்.

பெரிதாக இல்லையென்றாலும் ஆங்காங்கே சிறு சிறு தவறுகளை கண்டிப்பாக இவன் செய்திருப்பதால், ஷ்யாமுடைய நடவடிக்கை உள்ளுக்குள் ஆத்திரத்தை கிளப்பி விட்டிருந்தது. சிறு தவறு என்பதே சில லட்சங்கள் என்பதுதான் கணக்கு!

தான் கூறியதுதான் கணக்கு என்ற நிலை மாறி, ஒவ்வொன்றுக்கும் கணக்கு கேட்டான் இளங்கவி.

“இதையெல்லாம் நீ எதுக்கு கேக்கற கவி?” என்று கோபமாக இவன் கேட்ட போது,

“இன்னும் டென் டேஸ்ல முழுசா நான் ஆடிட் பண்ணி முடிக்கணும் விஜி சர்… அடுத்த கட்டமா வேற ஆடிட்டர்ஸ் வராங்க… நம்ம பைனான்சை  லிமிடட் கம்பெனியா மாத்தறது உங்களுக்கு தெரியாதா?” என்ற அவனது கேள்விக்கு விஜி விழித்தான்.

இந்த தகவல் அவனுக்கு புதிது.

“என்ன சொல்ற கவி?”

பாக்கியவதி பைனான்சை ப்ரைவேட் லிமிட்டட் கம்பெனியாக மாற்றலாம் தான், ஆனால் செலவுகள் அத்தனையும் சட்டபூர்மான வரவு செலவுக்குள் வந்தாக வேண்டுமே. இப்போது நடப்பதனைத்தும் அப்படி கிடையாதே .

கருப்பு பண பரிமாற்றத்திலும், பினாமி பணத்திலும் அல்லவா தொண்ணூறு சதவித பணபரிமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் தான் தானும் முடிந்தளவு கை வைக்க முடிவதும்!இதை லிமிட்டட் கம்பெனியாக மாற்றினால் அத்தகைய பரிமாற்றங்கள் எந்தளவு சாத்தியப்படும்?

தானே இந்தளவு கேட்டுக் கொள்ளும் போது ஷ்யாம் இதையெல்லாம் அறியாமல் தான் செய்வானா?

“ஆமா சர்… ஆனா எப்படியும் ப்ரோசீஜர் முடிய கொஞ்ச நாளாகிடும்…” என்றவன், சற்று குரலை தழைத்துக் கொண்டு,

“மெடிக்கல் காலேஜ்க்கு இன்வஸ்ட்மென்ட் அதிகம் விஜி சர்… பைனான்ஸ்ல இருந்து லீகலா அங்க கொண்டு போகணும்ன்னு பாஸ் நினைக்கறாங்க போல… எனக்கு தெரிஞ்ச அளவுக்கு இவ்வளவுதான்… இதுல வேற என்னன்னு இதுக்கும் மேல தெரியல…” என்று கூறிவிட்டு லேப்டாப்பில் முகத்தை புதைத்துக் கொண்டான்.

இளங்கவி விஜியிடம் முறைத்து கொள்ளவெல்லாம் இல்லை. உன்னை வேவு பார்க்கிறேன் என்றும் சொல்லவில்லை. ஆனால் அவன் தோண்டிய தகவலனைத்தும் இவனுக்கு வேட்டு வைக்க கூடியவை.

முதலில் மகா… இப்போது இவை… கோபத்தில் உச்சியில் இருந்தான் விஜி!

ஷ்யாமை ஏதேனும் செய்தேயாக வேண்டும் என்ற கோபம்.

ஆனால் அந்த கோபத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை. தான் நேரடியாக  இறங்கி செய்தால் தன்னுடைய கதையை ஷ்யாம் முடித்து விடுவான் என்பது அவனை பொறுத்தவரையில் உறுதியான ஒன்று.

இப்போது அவனிடம் இருக்கும் ஒரே துருப்பு சீட்டு, கார்த்திக்!

ஷ்யாமையும் முடிக்க வேண்டும்… மகாவும் தனக்கு வேண்டுமென்றால் கார்த்திக் நினைத்தால் முடியும் என்ற முடிவை அவனெடுத்து இருபத்தி நான்கு மணி நேரமாகியிருந்தது.

முன்னர் ஊற்றியதையும் காலி செய்திருந்தான் கார்த்திக்.

“என்ன கார்த்திக்? ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கீங்க போல?”

“ம்ம்ம்ம்… ரொம்ப கோபமா இருக்கு விஜி… என்ன பண்ணாலும் சமாதானமாக மாட்டேங்குது…” பல்லைக் கடித்துக் கொண்டு அவன் கூற,

“கூல் கார்த்திக்… என்ன விஷயம்?”

“நாலு நாள் அவன் என்னை படுத்தின பாட்டை என்னால மறக்கவே முடியல… வெறியே கிளம்புது… அவனை ஏதாவது செய்யனும்ன்னு…” என்று நிறுத்தியவன், தன்னை தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு,

“உங்க கிட்ட போய் சொல்றேனே விஜய்? உங்க பாஸ்… நீங்க விட்டுக் கொடுப்பீங்களா?” என்க,

“என் பாஸ் தான் கார்த்திக்… ஆனா அவரோட நடவடிக்கை எல்லாம் சில காலமா சரியில்லையே… அதை அப்படியே சப்போர்ட் பண்ண முடியாது…” இறுக்கமான முகத்தோடு கூற,

“ம்ம்… ஆனா மகா மாறினதை தான் ஏத்துக்கவே முடியல…” என்று நிறுத்த,

“ஏன் கார்த்திக்? என்னாச்சு?” உள்ளுக்குள் பரபரவென இருந்தாலும் வெளியே அமைதியாக கேட்டான்.

“ஷ்யாமுக்கு சப்போர்ட் பண்றா… அவன் கிட்ட போன்ல பேசறா… எனக்கு நெருப்பு மேல உட்கார்ந்து இருக்க மாதிரி இருக்கு… அவன் சரியான ஆள் கிடையாதுன்னு சொன்னா அதை ஏத்துக்க மாட்டேங்கறா…”

விஜிக்கு உள்ளுக்குள் அதிர்வாக இருந்தாலும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமலிருக்க சிரமப்பட்டான்.

“என்ன சொல்றீங்க கார்த்திக்… அவரோட சார்ம்ல உங்க தங்கை மயங்கிட்டாங்கன்னு சொல்லுங்க…” நக்கலாக கூறியவனை முறைத்தான் கார்த்திக்.

“ப்ளீஸ் விஜய்… இன்னும் என்னை கோபப்படுத்தாதீங்க…”

“சாரி… அதுக்காக சொல்லலை… நான் ஏன் ஷ்யாம் சர் நடவடிக்கை சரியில்லைன்னு சொன்னேன்? உங்க சிஸ்டர் விஷயத்தை வெச்சுதான். அவர் கிட்ட எவ்வளவோ கெஞ்சினேன். அந்த பொண்ணை விட்டுடுங்கன்னு. ஆனா எப்போவுமே இல்லாத வழக்கமா மகாவை அவரே கஸ்டடில எடுத்தார். இதுவரைக்கும் இந்த மாதிரி பொண்ணுங்களை தூக்கினதே இல்ல கார்த்திக். அப்படியே கஸ்டடி எடுக்க வேண்டிய நிலைமை வந்தாலும் பாஸ் அதுல தலையிட்டதே இல்ல. அது என்னோட பொறுப்பு தான். அவர் ஹைதராபாத்ல தான் இருப்பார்… ஆனா மஹா விஷயத்துல எல்லாமே எதிர்பார்க்காத மாதிரி நடந்துது… என்னாலேயே ஜீரணிக்க முடியலை… நீங்க பாவம் கார்த்திக்…” என்று நிறுத்தியவனை வெறித்துப் பார்த்தான் கார்த்திக்.

“இப்ப என்ன சொல்ல வரீங்க விஜய்?” சற்று நடுங்கிய குரலில் இவன் கேட்க,

“மகாவை பாஸ் குறி வெச்சுட்டார் கார்த்திக்…” என்று நிறுத்தியவன், “அவ்வளவுதான் சொல்ல முடியும்…” என்று விட்டு, “சாரி டூ சே திஸ்… அவர் குறி வெச்சா வெச்சதுதான்… அந்த பொண்ணுங்களை யாராலையும் காப்பாத்தவே முடியாது… இது என்னோட அனுபவத்துல நான் பார்த்தது…” என்று முடிக்க, கார்த்திக் அதிர்ந்து பார்த்தான்.

Comments 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!