KOA17

17

எழுந்து வந்தவன், 

“ஏன் வெண்பா சிரிச்சே, ஒழுங்கா சொல்லிடு”

அவள் நாற்காலியில் இருந்து எழ முடியத வாறு இருக்கையின் இரண்டு பக்கமும் கை வைத்துக் கொண்டு கேட்டான்.

இத்தனை நேரம் பேசிய பேச்செல்லாம் அடங்கி அவனை மருண்ட பார்வை பார்த்தாள்!

டைரி படிச்சேன்னு சொன்னா கோவப்படுவானோ!

“எதுவுமில்லை விழியன், என்னை நம்பு”

“ம்ம்ஹும் , என்னவோ இருக்கு, சொல்லு உன்னை விடுறேன்”

அவன் சுவாசக்காற்று அவளை தீண்டும் தூரத்தில் இருந்தான். இன்ப அவஸ்தையாக இருந்தது! அதிலிருந்து தப்பிக்கும் பொருட்டு!

“உன் டைரியில் எழுதினதை படிச்சேன் , அதான் சிரிப்பு வந்திட்டு”

சொல்லி முடிக்கும் முன்னரே மீண்டும் சிரிப்பு வந்து தொலைத்தது!

‘இதில் சிரிக்க என்ன டீ இருக்கு…எல்லாம் உன்னால் தானே!’

அவள் செய்கையில் அவனுக்கு பற்றி கொண்டு வந்தது!

“என் அவஸ்தை உனக்கு சிரிப்பா இருக்கா வெண்பா! இதுக்கு உனக்கு ஏதாவது தண்டனை கொடுத்தே ஆகணுமே!”

அவன் சொன்னதில் விக்கித்து போனாள்.

“வேண்டாம் விழியன் எனக்கு பிடிக்காதது எதுவும் செய்யாதே!” 

அவள் பக்கம் முட்டி போட்டவன் ,

“நான் எதுவும் செய்யலை , நீயா ஒண்ணு கொடு , விட்டிடுறேன்!”

அவன் கன்னத்தை காட்ட ,

“முடியாது , போடா”

“புருஷனை டா போட்டு கூப்பிட கூடாது செல்லம்! கமான்”

இடத்தை விட்டு நகராது அப்படியே இருந்தான் !தள்ளி விட்டு பார்த்தாள். அவனை அசைக்க கூட முடியவில்லை.

“இனி சிரிக்க மாட்டேன் விழியன் .என்னை விடு”

“சிரிக்க மாட்டியா .குட் கேர்ள் . ஆனா இப்ப சிரிச்சு என்னை வெறுப்பேத்தினதுக்கு ஒண்ணு கொடுத்தே ஆகணும்!”

தடியன்! நெருங்கி இருந்தவனிடமிருந்து தப்பிக்கும் பொருட்டு நீண்ட தடுமாற்றத்திற்கு பின் அவன் கன்னத்தில் தன் இதழ்களை பதித்தாள். கண்ணை மூடிக் கொண்டிருந்தவன்,

“சீக்கிரம் வெண்பா முட்டி வலிக்கிது”

“இப்ப தானே கொடுத்தேன் ?!” வெட்கம் பிடுங்கித் தின்றது அவளை!

வாங்கிக் கொண்டு இல்லை என்கிறானே!

“என்னது கொடுத்திட்டியா? தெரியவே இல்லை , இன்னொரு தடவை ஒழுங்கா கொடு!”

‘பாவி படுத்துறானே’

மறுமுறையும் அவள் தர அதை வாங்கியவன் தன் மற்றொரு கன்னத்தை காண்பித்தான்!

அவள் திகைத்து விழிக்க,

“ஒரு கன்னத்தில் கிடைத்தா மறு கன்னத்தையும் காட்டணுமாம் ! பெரியவங்க சொல்லியிருக்காங்க!”

“அது அறை வாங்குவதற்கு…இதுக்கு இல்லை…!”

அவள் வீம்பு காட்டவும்,

“நீ சரிபட்டு வர மாட்டே , நான் என் வழியில் செய்றேன்!” எழ முயன்றவனின் முகம் பற்றி அடுத்த கன்னத்தில் ஒன்று கொடுத்தவள், முழு பலத்தையும் கொண்டு அவனை விலக்கி விட்டாள்.

எப்படியோ இருந்தது அவளுக்கு! என்னவிதமான உணர்வென்று புரியவில்லை!

சமையல்கட்டில் தன் வேலையில் மூழ்கியதை போல் பாவலா காட்டியவள், அவர்கள் அறைக்குள் செல்வதை தாமதிக்க,அவளை மேலும் சோதிக்காமல் விட்டு விட்டான் விழியன்! எல்லாம் முடித்து ஹால் சோபாவில் படுத்தவள் அங்கேயே அப்படியே உறங்கிவிட்டாள்!

மதிவதனிக்கு எல்லாமே மிகவும் வேகமாக நடந்ததை போல் இருந்தது. பெண் பார்க்க வந்தான், பேசினான் பழகினான், தாலி கட்டினான். இன்று அவன் மடியில் படுத்துக் கொண்டிருந்தவளை ரசனையாய் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையை இவளும் திருப்பித் தர,

“என்ன அப்படி பார்க்குறே!”

“போன மாசம் வரை யாருன்னே தெரியாது, இப்ப என் உயிரா ஆகிட்டீங்க மதன்”

ஆசையுடன் அவன் அவளை கட்டிக் கொள்ள,சிணுங்கியவள்,

“இப்படியே கொஞ்சிகிட்டு இருந்தீங்கன்ன வெளியே போன மாதிரி தான், கிளம்புங்க. எனக்கு போட்டிங் போகணும்”

“எந்த விஷயத்துக்காக வந்தோமோ அதை செய்ய விடுறீ!”

“இன்னிக்கு போதும் மிஸ்டர்… நகருங்க”

வெளியே செல்வதற்கு தயாராக ஆரம்பித்தாள். அவளை கிளம்ப விடாமல் தொல்லை செய்ததையெல்லாம், எளிதாய் சமாளித்து கிளம்பி முடிக்க அவள் மொபைல் அழைத்தது!

“வெண்பா கூப்பிடுறாங்க பாரு, பேசு வதனி!”

என்றவன் போனை மனைவியிடம் தந்துவிட்டு அவளை உரசிக் கொண்டு அமர்ந்தான்!

மதியுடன் பேசியே நாள் ஆனதை போல் இருந்தது வெண்பாவுக்கு.

அதற்காக அழைக்க, அவள் ஊட்டியில் இருப்பது அவள் சொல்லும் வரை தெரியாது!

“ஹேய் சாரி டீ,நீ பிஸியா இருப்பே…தெரியாம கூப்பிட்டிட்டேன்”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை , சொல்லு. நீ எப்படி இருக்கே? நீயும் அதே பிஸி தானே?”

தோழி சிரிக்க அவளை ஆமோதிப்பதை போல் சிரித்து வைத்தாள்.

இவளிடம் சொன்னால் வேறு வினையே வேண்டாம்!அதன் பின் பேச்சை மாற்றவென்று,

“விழியன் வெளிநாடு போறதால், கொஞ்சம் ஆபிஸ் வரை போயிருக்கார்”

அதற்குள் மதன் தன் மதனலீலைகளை மதியிடம் காட்ட ஆரம்பித்து விட்டான்.

அவள் அத்தனை நேரம் கஷ்டப்பட்டு கட்டிய புடவை இப்போது அவன் தயவில்!

“ச்சு. நீ எப்போ ஜாயின் பண்றே…?”சின்ன குரலில் ‘விடுங்க மதன்’ என்று மதிவதனி சொல்லிக் கொண்டிருந்தது நன்றாக கேட்டது வெண்பாவுக்கு! 

“அடுத்த வாரம் மதி!” எதிர்தரப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, 

“சரி நான் அப்புறம் பேசுறேன் டீ” அவள் போனை வைப்பதற்கு முன்பே, 

‘மதன் சொன்னா கேளுங்க’ என்று மதியின் இரைஞ்சல் போனின் வழியாக கேட்டது!

மதிவதனியின் குரலை நினைத்து நகைத்துக் கொண்டவள், நிமிர இவளை பார்த்தபடி வீட்டினுள் வந்தான் விழியன்!

“என்ன ரொம்ப முத்தி போச்சா, தனியா சிரிக்கிறே”

வம்பு செய்வதே இவனுக்கு வேலை! அதற்கு பதில் சொல்லாது…

“காபி குடிக்கிறியா விழியன்?” அவன் பதிலுக்கு காத்திராமல் , சமையல் கட்டில் அவனுக்காக தயாரிக்க போக , அவன் பின்னோடு போனவன் அவள் தலையில் அவன் வாங்கி வந்திருந்த பூவை வைத்துவிட்டான். நிதானமாய் அவன் செய்த செயலில் ஏகப்பட்ட கெமிக்கல் ரியாக்‌ஷன் உள்ளுக்குள் நடந்தாலும் அதை வெளிகாட்டாது அவனுக்கு முதுகு காட்டியபடி நின்றாள் வெண்பா. பூ வைத்த கடமையை முடித்தவன் குனிந்து அவள் பின்னங்கழுத்தில் தன் இதழ்களை பதித்தபின் அகன்றான்! அவள் போட்டிருந்த பானம் ஆறிப்போய்விட்டது வெண்பா நினைவிற்கு திரும்புவதற்குள்! 

பிரகாஷ் சங்கர நாராயணிடம் போனில் பேச அவர் அவனை நேரில் சந்திக்க வென்று சென்னை வந்தார்.ஆபிஸில் பேச முடியாது என்பதால் ஒரு காபி ஷாப்பில் இருந்தனர் இருவரும்! 

“சார் , நான் ரதியை கல்யாணம் செய்துக்க விரும்புறேன்!”

நேற்றே அதை பற்றி சொல்லியிருந்ததால், இன்று நேரிடையாக சொல்லிவிட்டான்.

“அவ மேல் அக்கறையோ இருக்கீங்கன்னு நேற்று பேசும் போதே புரிந்தது. ஆனா அவளுக்கும் உங்க மேல் இஷ்டம் தானா!”

நிச்சயம் இருக்காது என்பது அவருக்கே தெரியும்!

இல்லை என்பது போல் தலையசைத்தவன் !

“அவ யாரையோ விரும்புகிறாளாம் ! அதுனால் முடியாதுன்னு சொல்லிட்டா!”

ஆமோதிப்பதை போல் தலையசைத்தவர்,

“ஆமா ஆனா இவளுக்கு மட்டும் தான் அந்த விருப்பம் , அந்த பையனுக்கு இவ மேல் இல்லை!”

“ஓ”

“உங்க பயோடேட்டா கொடுங்க தம்பி, நான் யோசிச்சு உங்களுக்கு சொல்றேன்.ஆனா ரதி ரொம்ப பிடிவாதக்காரி . அம்மா இல்லாத பொண்ணுன்னு வளர்க்க தெரியாமல் வளர்த்திட்டேனோன்னு இருக்கு! அவளை சமாளிக்க ரொம்ப பொறுமை வேணும்!உங்களால் முடியுமான்னு பார்த்துகோங்க!” என்றார்.

பிரகாஷிற்கு சங்கர நராயணனின் நேர்மை பிடித்திருந்தது! வல்லவள் நல்லவள் என்று மகளை பற்றி வீண் பெருமை பேசவில்லை , உள்ளதை சொன்னார்!

“சார் நான் ஒரு அனாதை .எனக்குன்னு இந்த உலகத்தில் யாரும் கிடையாது .ரதியை ஒரு வருஷமா தான் தெரியும் .ஆனா என் வாழ்க்கையில் அவ இருக்கணும்னு இருக்கு! எனக்கு அவ பழைய வாழ்க்கை பத்தி எந்த வருத்தமும் இல்லை!என்னை பத்தின விஷயங்கள் எல்லாமே இதில் இருக்கு! நீங்களும் விசாரிச்சு கோங்க! யோசிச்சு உங்க முடிவை சொல்லுங்க” என்றபடி விடைபெற்றுக் கொண்டான்.

அவன் சென்ற பின்பு நீண்ட நேரம் அவனை பற்றிய சிந்தனையில் இருந்தார் அவர். அனுபவஸ்தன் கண்களுக்கு போலியை அசலையும், பொய்யையும் உண்மையையும் பிரிக்க தெரிந்தது!

ஆனாலும் ஒருமுறை விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று நினைத்தவர், ரதியை அழைத்தார் தொலைபேசியில்!

இவராய் அழைத்தாள் மட்டுமே மகளிடம் பேச முடியும். தந்தை என்ற பாசம் எல்லாம் இல்லாமலே போய்விட்டது, விழியனின் பிரிவினால்… அவரும் தான் அதற்கு காரணம் என்ற கோபம். இன்று என்ன நினைப்பில் இருந்தாளோ சட்டென்று போனை எடுத்துவிட்டாள்.

“ரதிமா அப்பா சென்னை வந்தேன் , உன்னை பார்க்க முடியுமா டா”

அத்தனை ஏக்கமும் குரலில் காட்டி விட, மறுக்க முடியவில்லை அவளால்.

அன்னை இறந்த பின் தனக்காய் வாழும் ஒரே ஜீவன்.

“எங்க இருக்கீங்க?”

உடனே கிளம்பிவிட்டாள். அவர் சொன்ன அதே காபி ஷாப்பில் அடுத்த பத்து நிமிடத்தில் இருந்தாள்.மகளை கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு பார்க்கிறார்.போன தடவை கோவையில் இருந்து வந்தவரை ஆபிஸ் வரவேற்பரையில் வைத்து சில நிமிடங்கள் இஷ்டமில்லாது பேசி அனுப்பி வைத்துவிட்டாள்.பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல் என்பதை அவள் பல முறை நிருபித்து காட்டியிருந்தாளும், அன்று தான் உச்சக்கட்டம்!

மகளின் பாரா முகம் எதனால் என்பது சங்கர நாராயணனுக்கு புரிந்ததால் மன்னிக்க முடிந்தது!ஆனால் எத்தனை நாள் இப்படி விட முடியும் ? தன் பெண்ணை விட்டால் அவருக்கும் வேறு யார் இருக்கிறார்கள்! 

இப்போது அவர் எதிரே அவள் வந்து அமரவும், தனக்கு பின் தன் மகளுக்கு யார் இருக்கிறார்கள் என்ற கவலை ஆட்கொண்டுவிட்டது!

அவரின் உடல்நிலை முன்பு போல் இல்லை, தன் காலத்தில் ரதியின் வாழ்க்கையை சரி செய்திட வேண்டும் ! 

பழைய சினேகிதனை , நீண்ட வருட சண்டைக்கு பின் கண்டவள் போல் இருந்தது ரதியின் மனநிலையும்,

மெனு கார்ட்டை புரட்டியவள்,

“என்ன பா குடிக்கிறீங்க?”

“இப்ப தான் குடிச்சேன் , நீ உனக்கு தேவையானதை வாங்கிக்கோ ரதி மா”

“வந்து ரொம்ப நேரம் ஆச்சா பா? என்ன திடீர்னு வந்திருக்கீங்க?”

“ஆமா.உன்னையும் பார்த்திட்டு , மாப்பிள்ளையையும் பார்த்திட்டு போக வந்தேன் ரதி மா!”

டேபிளில் மீது இருந்தவரின் கையை இத்தனை நேரமும் ஆதரவாய் பிடித்துக் கொண்டிருந்தவள், மாப்பிள்ளை என்ற வார்த்தை கேட்கவும் , கையை விலக்கி கொண்டாள்.

தந்தையின் கண்களை நேராக சந்தித்தவள்,

“என்னால் விழியனை தவிர யாரையும் கல்யாணம் பண்ண முடியாது பா”, அவனை மறக்க முடியலை”

மகளின் நிலைமை வருத்தம் தான். ஆனால் பிடிக்கவில்லை என்றவனை கட்டாயப்படுத்த முடியாதே! இன்னும் என்ன அவனிடம் காதல்!

“ரதி நான் சொல்ல வருவதை கேளு மா! அவனை மறந்திடு. அவனுக்கு இந்நேரம் கல்யாணம் கூட ஆகியிருக்கலாம். இனி அவனை நினைக்கிறது பாவம்!” தந்தை சொல்லை கேட்கும் நிலையில் இல்லை அவள்.

“இதை பத்தி பேசாதீங்க பா.என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்!”

இந்த விஷயத்தை வளர விடக் கூடாது. முன்பு செய்திருந்த அத்தனை வழிகளும் வீணாகி போயிருக்கிறது! தான் ஏதேனும் இதில் சீக்கிரம் செய்ய முடியுமா என்று யோசிக்க ஆரம்பித்தார் ரதியின் தந்தை!

விழியன் கிளம்ப இன்னும் இரண்டு நாட்களே இருந்த நிலையில் ரேணுகாவும் திரும்பி விட்டாள். அவள் வந்த பிறகு தான் வெண்பாவுக்கு நிம்மதியானது! 

“வீட்டை நல்லா வச்சி இருக்கியே வெண்பா மா” மருமகளை அவர் புகழ, 

“அது எல்லாத்துக்கும் காரணம் நான், தெரிஞ்சிகோங்க! மேடம் சமைக்கிறேன்னு கிட்சனை விட்டு வெளியே வரலை” என்றான் விழியன்!

“ஹ ஹ…நல்ல முன்னேற்றம் டா மகனே” 

மூவரும் பேசிக் கொண்டிருந்த வேளையில், வீடு காலி செய்தவர் வந்து சாவியை கொடுத்து விட்டு போனார்.

“அத்தை சாவியை என் பிரண்டு கிட்ட கொடுத்திரலாமா? அவ தான் அட்வான்ஸ் தந்துட்டாளே”

“ஆமா வெண்பா , மறந்தே போயிட்டேன்” என்ற ரேணுகா, சட்டென்று நினைவுக்கு வந்தவர் போல்,

“உன் பிரண்டு பெயர் என்னமா?”

“ரதிமீனா” வெண்பா சொல்ல,அதிர்ச்சியில் விழியனும் ரேணுகாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்!

comments