LH3

LH3

லிட்டில் ஹார்ட்ஸ்

ஹார்ட் – 3

இதுவரை:

மற்றவர்க்கு “கல்யாண நட்சத்திரம்” என்பது அண்டப்புழுகானாலும், நமது, கூரியர்புறா, குண்டு கண்மணியின் வாழ்க்கையில் நிஜமாகவே இந்த கல்யாண நட்சத்திரம் உண்மையாகிப் போனது என்னவோ நிஜம். இது பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லாமல், இரவு விடுதியில் வடித்துக் கொட்டிய லெமன் சாதத்தை, கூச்சமே பாராமல் மூன்று முறை உண்டு தன் சிறிய பானையை நிரப்பிக் கொண்ட மகிழ்ச்சியில், மெல்லிய குரட்டை சத்தம் வெளிப்பட, மானசி அவளது அறையில் உறங்கிப் போயிருந்தாள்.

இனி:

“கே.கே நிவாஸ்” என்ற தங்க நிற தகடு, வெயில் ஒளிபட்டு மினுமினுத்தது. அந்த அதிகாலை வேளையில், சென்னையின் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் அந்த “போட் கிளப்” ரோட்டில், நடைபயிற்சி மேற்கொள்வோர், கைகளை வீரநடை போட்டு, மார்ச் பாஸ்ட் செய்து கொண்டிருந்தனர். “கே.கே நிவாஸை” கண்டு களிக்கவோ, அதன் கேட்டில் இருந்து முப்படி தூரத்தில் நிற்கும் பிரம்மாண்டமான வீட்டின் கட்டிடக் கலையை பாராட்டவோ, ஏன், அந்த முப்படிதடி தூரத்தில் அழகாக பச்சை போர்வை போர்த்திக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த புல்வெளியின் கொள்ளை அழகை அள்ளிப் பருக ஒரு கலாரசிகனுக்கும் நேரமில்லை.

அப்படியே நேரமிருந்தாலும், அந்த உயரமான இரும்பு கிராதிகளுக்குப் பின் மறைக்கப்பட்டிருந்த, சூரியனுடன் போட்டி போட்டுக் கொண்டு பணக்கார பளபளப்பு மின்ன காட்சியளிக்கும் அந்த வீட்டினை ரோட்டில் இருந்து பார்க்க இயலாது. அப்படியே சில நொடி நின்று பார்வையிட்டாலும், “க்யா சாப்?”என வாயில் அருகிலேயே ஸ்டூல் போட்டு அமர்ந்திருந்த விரைப்பான கூர்காவிற்கு பதில் சொல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

அதுமட்டுமின்றி, இந்த போட் கிளப் பகுதியில், எல்லா வீடுகளுமே கிட்ட தட்ட இதே வசதி வாய்ப்புகளுடன், செல்வ செழிப்புடனும் மிளிர்வதால், “பட்டிக்காட்டன் ஐஃபோனைப் பார்ப்பது போல்” பராக்குபார்த்து கொண்டு எந்த பார்பேரியனும் நின்று ரசித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

“கே.கே நிவாஸ்” அந்த காலையில் சற்றே பரபரப்பாக காணப்பட்டது. அதிகாலையில் மும்பையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு வீடு வந்து சேர்ந்திருந்த, “மை இந்தியா” குரூப்ஸ்ஸின் மேனேஜிங் டைரக்டர் திரு.கலியமூர்த்தி வீட்டின் மற்றவர்கள் வேகவேகமாக ஓடிக் கொண்டிருப்பதையும், தன் பிரியத்திற்குரிய மனைவி கார்த்திகா, வேலையாட்களிடம் இதை செய், அதை செய் என ஏவுவதையும், தன் பாசத்திற்குரிய தாயும்,என்றைக்கும் இல்லாத அதிசயமாக மருமகளுடன் சேர்ந்து ஒத்து ஊதுவதையும் தனக்கே உரிய நிதானமான பாணியில் கண்களை மேயவிட்டபடி காபியை பருகிக் கொண்டு பால்கனியில் அமர்ந்திருந்தார்.

“என்னங்க… ஒரு காபி குடிக்க அரை மணி நேரமா…சட்டுபிட்டுன்னு வாயில கமுத்திட்டு வந்து எனக்கு கொஞ்சம் ஒத்தாசை பண்ணலாம்னு இல்லாம, ரெண்டு வருஷம் கழிச்சு விக்கி யு.எஸ்லேர்ந்து வர்றான்…பையனை ஏற்போர்ட் போய் ரிசீவ் பண்ணுவோம்னு எண்ணம் இல்லை…நடு பால்கனியில நந்திமாதிரி உட்கார்ந்துகிட்டு”என ப்ரிய மனையாள் தன்னை நந்தி என வசைபாடியதை சட்டை செய்யாமல், தன் காபி கோப்பையினுள் நீச்சலடித்துக் கொண்டிருந்தார்.

மனைவியைத் தொடர்ந்து, பால்கனியின் தொட்டி செடிகளை சரிபார்க்கவென வந்த அன்புத் தாய் கோமதியம்மாள், வாய்திறந்து ஒருவார்த்தை பேசாவிடினும், “எப்படி உட்கார்ந்திருக்கான் பாரேன். எரும மாடு குளத்தில மிதக்கற மாதிரி…ஒரு இன்ச் கூட அசையாதைக்கு…”என்று கலியமூர்த்தியைப் பார்த்தவண்ணம் மைண்ட்வாய்சில் பேசியது கலியமூர்த்திக்கு புரிந்தபோதும், அன்பு அன்னையை வெறுப்பேத்த வேண்டும் என்பதற்காகவே இன்னும் சாவகாசமாக நாற்காலியில் சாய்ந்து டீபாயின் மேல் கால்களை நீட்டி அமர்ந்துகொண்டார்.

மகனின் செய்கையை கண்ட கோமதியம்மாள் பின்வாங்குவது என்பது எந்த சரித்திர பூகோளரீதியாகவும் நடக்க வாய்ப்பில்லை. சுகமாக காலை டீபாயின் மேல் போட்டு சாய்ந்து அமர்ந்திருந்த மகனை ஒரு கண்பார்த்துக் கொண்டே, தன் பின்னால் குட்டிபோட்ட பூனைபோல் நடமாடும் தன் கணவர், விநாயகம்பிள்ளையை அழைத்தார் கோமதி. “ம்ம்ம்..ம்ம்..சோஃபா டஸ்டிங் முடிச்சுட்டு, இந்த பால்கனி நாற்காலி, டீபாய் டஸ்டிங்கும் முடிச்சிருங்க….ஸ்பெசிமன் எந்திரிக்குதான்னு பாருங்க மிஸ்டர்.பிள்ளை, இல்லைன்னா, ஸ்பெசிமனோடவே சேர்த்து டஸ்டிங் பண்ணிர்ருங்க….குளிக்கற தண்ணியாவது மிஞ்சும்”என மகனை கண்களால் முறைத்தபடியே வீட்டினுள் விரைந்தவரைத் தொடர்ந்து பால்கனிக்கு வந்தார் மிஸ்டர்.பிள்ளை என கோமதியால் செல்லமாக அழைக்கப்பட்ட விநாயகம்பிள்ளை.

வந்ததோடு மட்டும் அல்லாமல், கையுடன் வைத்திருந்த புசுபுசு டஸ்டரை மகன் முகத்திற்கு முன்பு வேண்டுமென்றே இரண்டு முறை ஆட்டிக் காண்பித்ததைக் கண்டு கலியமூர்த்தி கலகலவென நகைத்தார். “அப்பா, என்னப்பா இது நீங்க இந்த வேலையெல்லாம் செஞ்சிட்டு…வேலைக்காரங்க எங்க போனாங்க…?”

“அவங்களாம் முக்கியமான வேலையா இருக்காங்க மை சன்…நான் வெட்டியா இருக்கறேன்னு அல்லிராணி என்னை ஹெல்ப் பண்ண சொல்லியிருக்காங்க….செய்யலைன்னா என்னை “ஆண்டி இந்தியன்”ன்னு சொல்லி ஃபேஸ்புக்ல போஸ்ட் போட்றுவேன்னு பயமுறுத்தியிருக்காங்க….அதனால, மை சன் நீங்க கொஞ்சம் சேர்லேர்ந்து எந்திரிக்கரீங்களா? டஸ்ட் பண்ணனும்” என மீண்டும் அந்த பலவண்ண புசுபுசு டஸ்டரை மகனின் முன்பு ஆட்டிக் காண்பித்தார்.

“அப்பா…அந்தம்மா என்னன்னா என்னை ஸ்பெசிமன்னு சொல்லிட்டுப் போகுது…நீங்க என்னன்னா டஸ்டரை, கண்முன்னால ஐ.பி.எல் சியர் கேர்ஸ் மாதிரி ஆட்டியாட்டி காமிக்கறீங்க….உங்க அலப்பறைக்கெல்லாம் பயந்து தானே நான் நேரமா எந்திரிச்சு கம்பெனிக்கு ஓடறேன். ஒரு நாள், நான் வீட்டில ஹாயா காபி குடிக்கற இந்த ஒரே நாளையும் டிசைன் டிசைன்னா கெடுக்கனுமா?”என மகன் கர்ஜித்ததை சட்டை செய்யாத மிஸ்டர்.பிள்ளை, மனைவி உள்ளே சென்றுவிட்டாளா என ஊர்ஜிதப்படுத்திவிட்டு, “மை சன்….நீ ரோஷமா பேசறதைக் கேட்க நல்லா இருக்கு. எனக்கே ஆக்ரோஷம் வருதுன்னா பார்த்துக்கோங்க.. ஆனா இந்த ரோஷம் இந்த வீட்டுக்கு தேவையில்லாதது மை சன்.அனுபவஸ்தன் சொல்லறேன், இந்த வீட்டில ரோஷமாலாம் இருக்காத. இங்க நடக்கறது அல்லிராஜ்யம்…அவளுக பேச்சை நீ கேட்கலையோ, “எப்படி எனக்கு ரெஸ்ட் வேணும், வயசாச்சு, கம்பெனிக்கு இளரத்தம் வேணும்னு என் சேர்மன் வேலையை பிடிங்கி உங்கையில உங்கம்மா அந்த மங்கம்மா கோமதி குடுத்தாளோ, அதே மாதிரி உன் பையன் கையில உன் வேலையை குடுத்துட்டு, உன்னையும் எங்கூட சேர்ந்து நடமாடும் டஸ்டர் வேலைக்கு போட்ருவா உன் பொண்டாட்டி…எனக்காவது பரவாயில்லை, மங்கம்மா மனசில கொஞ்சூண்டு லவ் இருக்கு…உன் நிலைமைலாம்….அப்பா யோசிக்கவே மிடியல” என கடைசி டயலாக்கை வேண்டுமென்றே வடிவேலுவைப் போல பேசியவர்,

“என்னங்க…. இன்னுமா பால்கனி வேலை முடியலை” என மங்கம்மா கோமதியின் குரல் மட்டும் வீட்டிலிருந்து வெளிப்பட, “இதோ கோம்ஸ்….வந்து…துட்…டேன்.”என ராகமாக பாடிக்கொண்டே ஆவலுடன் துள்ளிச் சென்ற தந்தை விநாயகம்பிள்ளை, கலியமூர்த்தியின் தலையிலும், முகத்திலும் தவறாது அந்த புசுபுசு டஸ்டரால் துடைத்துவிட்டே சென்றார். போதாக் குறைக்கு, “ஸ்பெசிமனையும் சேர்த்து டஸ்ட் பண்ணிட்டேன்” என பெருமையாக மனைவியிடம் உரைப்பது கலியமூர்த்திக்குக் கேட்டது. அழகான, குறும்பான தன் தாய் தந்தையை எண்ணி மெல்ல புன்சிரிப்பை வெளியிட்ட கலியமூர்த்தி, “இருக்கட்டும் இருகட்டும்….விக்ரம் பய யு.ஏஸ்லேர்ந்து கொண்டு வரப்போற அணுகுண்டை எப்படி ஹேண்டில பண்ணறீங்கன்னு பார்க்கறேன்….ஸ்பெசிமனாம்ல ஸ்பெசிமன்….இன்னும் கொஞ்சம் நேரம் உட்கார்ந்திருந்தா சேரோட தூக்கிட்டுப் போய் குளிப்பாட்டிருவாங்க” என முனுமுனுத்தவண்ணம் மெல்ல பால்கனியில் இருந்து நகர்ந்து தன் அலுவல்களை கவனிக்க ஆயத்தமானார்.

கலியமூர்த்தி குளித்து முடித்து தன் அறையிலிருந்து வெளிப்படும் போது, எப்போதும் உணவு தயாராகி மேஜைமேல் அலங்காரமாக வீற்றிருக்கும். இன்றைக்கு அது இல்லாமல் போக, “கார்த்தி….கார்திகா…அம்மா….விஷி குட்டி” என அந்த வீட்டின் அனைத்து பெண் உறுப்பினர்களின் பெயரையும் வரிசையாக ஏலமிட்டார். ஆனால், என்ன ஏதென்று கேட்பதற்கு அந்த வீட்டில் அப்போதைக்கு எவரும் இல்லை. மேஜை மேல் உணவுக்குப் பதிலாக நான்காக மடித்த காகிதம் மட்டுமே வீற்றிருந்தது.

காதிகத்தைக் கையிலெடுத்த கலியமூர்த்தி, பொங்கும் சிரிப்புடன் அதை வாசித்தார். “மை டியர் ஸ்பெசிமன்…”என்ற துவக்க வாக்கியத்தைப் படிக்கும் போதே, தன்னைப் பெற்ற மகராசி மங்கம்மா கோமதியின் வேலை தான் இது என யூகிக்க முடிந்தது.

“நீ என்ன விதமா கத்தி கூப்பாடு போட்டாலும் எங்களுக்கு கவலையில்லை. நாங்க விக்கிய ரிசீவ் பண்ண ஏர்போர்ட் போறோம். போறவழியில சரவணபவன்லையோ, சங்கீதாலையோ நெய் மணக்கும் பொங்கலையும், மொறுமொறு வடையயும் ஒரு வெட்டு வெட்டிக்குவோம்….நீயும் உன் ஆபீஸ் போற வழியில உன் டிரங்க் பெட்டியை நிறைச்சுட்டு போ… வீட்டில இருக்கற வேலைக்காரங்களை தொந்தரவு பண்ணாத. அவங்கல்லாம் முக்கியமான வேலை செஞ்சிட்டு இருக்காங்க….” இப்படிக்கு யுவர் ப்ரிட்டி மாம்….கோம்ஸ் என ஆங்கிலத்தில பாதியும் தமிழை சற்றே கொலைசெய்தும் எழுதியிருந்த வாசகத்தைக் கண்டதும் கலியமூர்த்திக்கு கெக்கபெக்கவென சிரிப்பு வந்துவிட்டது.

அதை விடவும், பின்பக்கத்தில் கொசுரு செய்தியாக, “எனக்கும் ஒரு ப்ளேட் பிரியாணி பார்சல் வாங்கிவிடு. கோதுமை தோசை சாப்பிட்டு என் நாக்கு செத்துவிட்டது. நைட் யாருக்கும் தெரியாம சாப்பிட்டுக்கறேன்…மை சன்…ஏமாற்றிவிடாதீர்கள்” என அவசரமாக கீறுக்கி, அதனடியில்”யுவர்ஸ் லவிங் டேட்.” என விநாயகம்பிள்ளை கையெழுத்திட்டிருந்தார். “ப்ரிட்டி மாம்”, “லவிங்க் டேட்” …..ஈஸ்வரா…காலம்போன கடைசில இந்தப் போடு போடுதுக ரெண்டும்” என முனுமுனுத்தவர், டிரைவரிடம் தன் காரை எடுக்கும் படி பணித்துவிட்டு, பின் இருக்கையில் அமர்ந்து கொண்டார் கலியமூர்த்தி.

சாலையில் ஓடிக் கொண்டிருந்த வாகனங்களை பார்வையிட்டபடிக்கு இருந்தவர், போக்குவரத்து சிக்னல் ஒன்றில், இரு வெளிநாட்டவர்களைக் கண்டார். அவரையும் அறியாமல் கலியமூர்த்தியின் நினைவுகள், தன் மகன் விக்ரமிடமும் அவன் இரண்டு தினங்களுக்கு முன்பு கூறிய விஷயத்திலும் லயித்தது. விக்ரம், இந்தியா கிளம்ப இரு தினங்கள் இருந்த போது தந்தையின் கைப்பேசிக்கு, அதிலும் அலுவலக நேரத்தில அழைத்திருந்தான். குடும்ப உறுப்பினர்கள் கலியமூர்த்தி இல்லாமலேயே முடிந்த வரையில் எல்லா விஷயங்களையும் சமாளித்துக் கொள்வர். அடிக்கடி கைப்பேசி தொந்தரவுகள் என்பது முற்றிலும் இருக்காது.

அன்று, அதிசயமாக மூத்த மகன், அலுவலக வேளையில் அழைக்க, சற்றே துணுக்குற்று கைப்பேசியை உயிர்பித்தார். “டாட்…சாரி, ஆஃபீஸ் அவர்ஸ்ல டிஸ்டர்ப் பண்ணறேனா?”என மன்னிப்பு கோரிவிட்டே பேசத்துவங்கினான் விக்ரம். அவனது பேச்சில் தூக்கலாக அமெரிக்கன் வாடை வீசியது.

“பரவாயில்லை விக்கி. என்ன விஷயம்னு சொல்லு…” என மகனின் திடீர் அழைப்பிற்கான காரணத்தை கேட்டறிய காத்திருந்தார். மறுமுனையில் தொண்டையை செருமிக் கொண்டு விக்கி என்று அழைக்கப்படும் விக்ரம் பேசத் துவங்கினான்.

“டாட்…அதுவந்து….எப்படி நீங்க எடுத்துக்குவீங்கன்னு தெரியலை….ரேச்சல் உங்களுக்கு தெரியுமில்லையா டாட்?”

“ரேச்சல்? யாரு உன்னோட ஃப்ரெண்ட்னு சொல்லுவியே…அந்த பொண்ணா?” என அக்கரையாக வினவினார் கலியமூர்த்தி. அவருக்கு ரேச்சல் யாரென்று தெரியாமல் இல்லை. இருப்பினும், மகனின் வாயிலாகவே சொல்லக்கேட்லாம் என ஒன்றும் அறியாதவர் போல் வினவினார்.

தந்தையின் பட்டும்படாத பேச்சு புரிந்து தான் சொல்லவந்ததை பூதகரமான விஷயத்திற்கு வண்ணசாயம் பூசி மழுப்பலாக பேசிவிடலாம் என நினைத்த விக்ரம், தந்தையின் கேள்வியை ஒருகணம் உள்வாங்கிக் கொண்டு, “டாட்…தெரியாத மாதிரியே பேசறீங்க….ரேச்சல் இஸ் மை கர்ள்-பிரண்ட்… உங்களுக்குத் தெரியும்தான..” என விக்ரம் பரபரப்பாக வினவியதைக் கேட்டு சற்றே சிரித்துவிட்ட கலியமூர்த்தி சட்டென சுதாரிப்புடன் பேசினார்.

“ம்ம்ம்….சரி, இப்போ அவளுக்கு என்ன?” என கராராக வினவ, “டாட்…அவளும் என் கூட இந்தியா வர்றா.. நான் அவளை வீட்டில இன்ரொடியூஸ் பண்ணப்போறேன்..நீங்க என்ன நினைக்கறீங்கன்னு தெரிஞ்சுக்கலாம்னு தான் ஆசைப்பட்டேன்”என தான் சொல்லவந்த விஷயத்தை சுற்றிவளைக்காமல் பேசி முடித்தான் விக்ரம்.

சில நிமிடம் மெளனமாக இருந்த கலியமூர்த்தி, “உனக்கு 28 வயசாகுது விக்கி. உனக்கு என்ன மாதிரி பொண்ணு வேணும், எப்படி லைஃப்ல அவகூட ஸ்பெண்ட் பண்ணபோறேன்னு நீ நிறைய யோசிச்சு வச்சிருப்ப…நான் என் குழந்தைக மூனு பேர்த்தையும், இண்டிபெண்டண்டா தான் வளர்த்தியிருக்கேன். சோ, நீ என்ன முடிவெடுத்தாலும் அதுல நான் தலையிடமாட்டேன்..இட்ஸ் யுவர் லைஃப்…யு டிசைட் இட். “என தோளை குலுக்கியபடி பேசினான். இன்னமும் சிறிது நேரம் மகனுடம் பேசிவிட்டு கைப்பேசியை அணைத்தவருக்கு, மகனின் நிலைமையை எண்ணிப் பார்க்க சிரிப்பாக இருந்தது.

“எது வேண்டுமோ அதை நீயே தேர்ந்தெடு”என ஒரு குழந்தையை மிட்டாய் கடையில் விட்டால் என்ன செய்யுமோ, அந்த மனநிலையில் இருக்கும் மகனிடம் அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என தான் ஏதேணும் சொல்லப்போக, அது விபரீதமாகிவிடக்கூடாது என கலியமூர்த்தி மிகுந்த எச்சரிக்கையாக இருந்தார்.

“கண்ணாடிப் பீங்கான் பெண் பதுமை, அதுவும் அயல் தேசத்தில் செய்யப்பட்ட சிற்பம், தங்களது பாரம்பரிய வீட்டையும், அதைவிடவும் பெருமதிப்பு வாய்ந்த இந்த பத்திரிக்கையின் செயல்பாட்டையும், கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டு எப்படி பொருந்திப் போகும்? என கலியமூர்த்திக்கு நியாயமாக கவலையாக இருந்திருக்க வேண்டும். ஆனால், மகனின் மூளை எப்படி வேலை செய்யும் என தெரிந்திருந்த தந்தை“பட்டால் திருந்திவிடும் ரகம்” தன் மகன் என முற்றிலும் உணர்ந்திருந்தார்.

அதனாலேயே, “உன் முடிவுகளை நீயே எடுத்துக் கொள்”என ஒதுங்கிக் கொண்டவர், விக்ரம் கேட்டுக் கொண்டதற்காக வீட்டின் மற்ற உறுப்பினர்களிடம் “ரேச்சலின்”வருகையைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

ஆனால், இரண்டு தினங்களாக இரவு உணவு உண்ணும் வேளையில், தன் முகத்தையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்த கடைகுட்டி மகன், விமலிடம் கலியமூர்த்திக்கு சற்றே சந்தேகம் இருந்தது. விக்ரமும் விமலும் எப்போதுமே கூட்டுக்களவாணிகள் தான். இருவருக்கும் இடையில் 4 வயதே வித்யாசம் என்பதால், அண்ணன் தம்பி என்பதைவிடவும் நண்பர்கள் போலவே பேசிப் பழகுவர். ரேச்சலைப் பற்றி விமலுக்கு கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். “டாட்ட மட்டும் சொல்லிடலாம் விக்கி” என விக்ரமிற்கு விமல் யோசனை சொல்லியிருக்கவும் வாய்ப்புள்ளது.

இப்படி தன் இருமகன்களையும், குடும்பத்தையும் பற்றி சிந்தித்துக் கொண்டே காரில் பயணித்துக் கொண்டிருந்த கலியமூர்த்தி, “ரேச்சல் அணுகுண்டு இந்த வீட்டில என்ன பண்ணப்போகுதோ, அதுக்கு இந்த டைனோசர் பேமிலி எப்படி ரியாக்ட் பண்ணப் போகுதோ….இது தெரியாம, வரவேற்க ஏர்போர்ட் வேற போயிருக்காங்க” என வேடிக்கையாக முனுமுனுத்த வண்ணம் மவுண்ட் ரோட்டில் இருந்து சற்றே உள்ளடங்கியிருந்த கிரீம்ஸ் ரோட்டில் வீற்றிருக்கும் அந்த பெரிய பத்திரிக்கை அலுவலகத்தின் உள்ளே நுழைந்து தன் அன்றாட வேலைகளில் கவனம் செலுத்தினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!