அம்மாவும் மகனும் ஏன் இப்படி பார்த்துக் கொள்கிறார்கள் என்று தோன்ற தான் செய்தது வெண்பாவுக்கு. இப்போது தான் சொன்னதுக்கும் இதற்கும் எதுவும் சமந்தம் உண்டா ,தெரியாது!
வெண்பா வீட்டில் இருந்தாள். அவன் தன் பணிக்கு எப்போதும் போல் போக ஆரம்பித்திருந்தான். மீதி நேரம் ஊருக்காக ஷாப்பிங், பேக்கிங் என்று படு பிஸியாக இருந்தான். வெண்பாவுக்கு விழியனுடனான நேரம் இனிமையாய் கடந்தது. விழியன் அவள் மனம் புரிந்து இத்தனை விட்டு கொடுப்பான் என்று நினைத்து கூட பார்க்க
வில்லை.
அவனிடம் சீக்கிரம் சமாதானம் ஆகிவிட்டாள், ஆனாலும் அவளை ‘டேக் இட் பார் கிராண்டட்’ ஆக அவன் எடுத்துக் கொள்வானோ என்ற எண்ணம் மட்டும் என்றைக்கேணும் எட்டி பார்த்தது!
மனைவி என்று ஆகிவிட்டால் அது தானே நிலைமை !வெண்பாவுக்கு யார் தான் இதை சொல்வதோ!
அடுத்த நாள் ரேணுகா அவளிடம் ஒரு கவரை தந்தாள்.
“வெண்பா சின்ன பிரச்சனை மா.அந்த வீட்டில் சீலிங்கில் பெரிய கீரல் விழுந்து கெடக்கு… காலி பண்ணி போனவன் இதை பத்தி ஒன்னுமே சொல்லாம போயிட்டான்.. ஆனா அதை அப்படியே மறுபடியும் வாடகைக்கு விட முடியாது! மேஸ்திரி வந்து பார்த்திட்டு கொஞ்சம் வேலை இருக்குன்னு சொல்லிட்டார்… அதுனால அந்த பொண்ணை வேற வீடு பார்த்துக்க சொல்லிடு வெண்பா”
சப்பென்று ஆகி போய்விட்டது! ரதி வந்துவிடுவாள், தனக்கு மதி இல்லாமல் போனதற்கு நல்லதொரு துணையாய் ரதி இருப்பாள் என்று நினைத்திருந்தது இப்போது நடக்காது போலிருக்கு!
“இந்த வீட்டுக்காக தான் இத்தனை நாள் காத்திருந்த அத்தை, இப்ப போய் எப்படி சொல்ல?”
மருமகளை நினைத்து மானசீகமாய் தன் தலையில் அடித்துக் கொண்ட ரேணுகா,
“நாம என்ன வேணுமின்ன சொல்றோம்?நிலைமை அப்படி ஆகிட்டு, என்ன செய்ய முடியும்?”
அத்துடன் அங்கு நிற்காமல் அகன்று விட்ட அத்தையை பார்த்தபடி, ரதிக்கு போன் செய்தாள். எடுத்தாளில்லை!
விழியனின் பேக்கிங்கில் இவளாக போய் எதாவது அவனுக்கு உதவினால் தான் உண்டு! அவனாய் எதுவும் மனைவி என்று இவளிடம் கேட்பது இல்லை. அன்றும் அது போல் இவள் அறைக்குள் செல்ல அவன் டைரியை தன் பெட்டிக்குள் வைத்துக் கொண்டிருந்தான். அவள் வாசித்து விட்டாள் என்றதும் இப்போதெல்லாம் அதை கண்ணில் பார்க்க முடிவதில்லை… மறைத்து வைக்க ஆரம்பித்து விட்டான் போல!
“நீங்க எப்போதிலிருந்து டைரி எழுதுறீங்க விழியன்”
அவள் கேள்வியில் அவளை பார்த்தவன்,
“இப்ப அதை தெரிஞ்சு என்ன பண்ண போறே?”
இந்த ஊருக்கு போகும் வேலையே அவனுக்கு பிடிக்கவில்லை. எல்லாம் இவளால் தான்! நொந்தபடி அவன் பெட்டியை கட்ட இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் புது மாப்பிள்ளைக்கு கோவம் வராதா?!
வாயை மூடிக் கொண்டாள். அவன் துணியை மடிக்க உதவினாள். பெட்டியை அழகாய் பேக் செய்து தந்தாள்… இதெல்லாம் மட்டும் ஒழுங்கா செய்! கொஞ்சம் அவளை ரசிக்க ஆரம்பிக்க போன் அடித்தது, ரதி தான். இவள் அழைத்த நேரம் அவள் எடுக்கவில்லை.
“ஹலோ ரதி” இவள் பேச ஆரம்பித்ததும் விழியன் தன் காதுகளை தீட்டி வைத்துக் கொண்டான்.
வீடு விஷயத்தை இவள் சொல்ல , எதிபக்கம் அவள் என்ன சொன்னாளோ!
“நான் கூட நீ இங்க வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சிட்டிருந்தேன் ரதி!”
‘ஆமாடி ரொம்ப நல்லா இருக்கும்! நல்லா வந்திரும் என் வாயில்! பேசாமல் இவளிடம் நடந்ததை சொல்லி விடலாமா?’யோசிக்க ஆரம்பித்துவிட்டான் விழியன்!
‘வேணாம் டா விழியா,உன் பொண்டாட்டி தனியா எல்லாம் முருங்கை மரம் ஏற வேண்டாம். அங்கே தான் அவ ஆல்ரெடி குடி கொண்டிருக்கா!’
மனசாட்சி சொன்னதென்னவோ உண்மை தான், அதை மீறும் எண்ணம் இப்போதைக்கு இல்லை!
அவள் பேசுவதை சற்று நேரம் கவனிக்க, இப்போது திருமண வாழ்க்கையை பற்றி கேட்டிருப்பாள் போலும்,
“நல்லா போயிட்டிருக்கு ரதி!” வெட்கப்பட்டு இவள் சொல்ல, கடுப்பாகி போனான் விழியன்!
‘ஏன் டீ இப்படி அநியாயமா நடிக்கிற! அதுவும் அவ கிட்ட போய்… உனக்கு வினையே அவ தான்!’
ரதியிடம் அசடுவழிந்தபடி போனை வைத்தவள் திரும்ப , கைகட்டி அவளை பார்த்துக் கொண்டு நின்றான் அவள் கணவன்! அந்த காந்த பார்வை என்னென்னவோ செய்தது வெண்பாவை!
பார்க்காதே பார்க்காதே..அய்யயோ பார்க்காதே
பார்க்காதே… பார்க்காதே… அய்யய்யோ பார்க்காதே….
நீ பார்த்தா பறக்கிறேன்.. பாதை மறக்கிறேன்…
பேச்சை குறைக்கிறேன் சட்டுன்னுதான்….
ரதிக்கு வெண்பாவிடம் பேசிய பிறகு எப்படி இருந்ததாம்!
‘என் வாழ்க்கையை இப்படி கேள்விக் குறி ஆக்கிட்டியே விழியன்’
‘ஏன் டா என் வாழ்க்கையில் வந்தே?’
‘நானா டா உன்னை என் கிட்ட பழக சொன்னேன்?’
‘என்னை ஏன் டா வேணாம்னு சொன்னே?’
‘உன்னை மாதிரி என்னால சீக்கிரம் மாற முடியலையே டா’
மனம் அவனை நினைத்து ஊமையாய் அழுதது!
இரண்டொரு நாளில் பிரகாஷிடம் பேசிய சங்கர நாரயணன் , தனக்கு இந்த திருமணத்தில் பரிபூரண சமந்தம் என்றும் இன்னும் தன் மகளை சமாளிக்க வழி யோசித்து கொண்டிருப்பதாகவும் சொன்னார்.
“சார், ரதிக்கு இஷ்டமில்லைன்ன இந்த பேச்சை இத்தோட விட்டிடுடலாம். எனக்கு அவளை கட்டாயப்படுத்த இஷ்டமில்லை.உங்க பேச்சை கேட்டுப்பான்னு நினைச்சு தான் உங்க கிட்ட இந்த விஷயத்தை கொண்டு வந்தேன்!”
“இல்லை தம்பி. அவ கேட்டுக்கிற பெண் தான். ஆனா இப்ப கொஞ்சம் குழப்பத்தில் இருக்கா. சரி செய்திடலாம்…”
அவர் சொன்னதில் பிரகாஷிற்கு இது சரிபட்டு வருமா என்ற ஐயம் தோன்றியது!முடிந்த அளவுக்கு ரதியை ஆபிஸில் சந்திப்பதை தவிர்த்து வந்தான்!
இதை எதையும் பற்றி அறிந்திடாத ரதிக்கு பழைய நினைவுகள் அடிக்கடி வர ஆரம்பிக்கிறது.
அவனிடம் தன் மனதில் இருந்ததை சொல்லிவிட்ட பிறகு விழியனை பல வழிகளில் தன்னை காதலிக்க வைக்க முயன்று கொண்டிருந்தாள். அவன் விலகி சென்ற தோடில்லாமல் அவளிடம்
மிகவும் கோவப்பட ஆரம்பித்த விட்டான்! அவர்கள் தோழமையை மொத்தமாக குழி தோண்டி புதைத்தும் விட்டான்.
அதற்காகவெல்லாம் அவனை விட்டு விட முடியாதே! எப்படியாவது தன் அன்பை புரிய வைத்து விட வேண்டும் என்ற முனைப்பு!
தொட்டு பேசுவதும், அவன் போகும் வழிகளில் எல்லாம் குறுக்கிடுவதுமாய் என்னென்னவோ செய்ய ஆரம்பித்தாள்!அவளுக்கே தெரிந்தது அதிகமாய் போய் கொண்டிருக்கிறோம் என்பது! அந்த கட்டத்தில் தான் அவள் தந்தையிடம் மாட்டி விட்டான்! அதன் பின் நடந்த நிகழ்வுகள் எல்லாம் அவளால் என்றைக்கும் மறக்க முடியாதவை. தந்தையிடம் அவள் வாங்கிய முதல் அடி நெஞ்சில் வலித்தது!
சங்கர நாராயணன் மகளை வற்புறுத்தி தன்னுடன் கோவையில் இருக்க வைத்ததோடு இல்லாமல் அவள் பார்த்துக் கொண்டிருந்த வேலையையும் விட வைத்தார்.வீட்டில் இருந்தவளை , திருமணம் செய்து கொடுக்க எத்தனித்து அவளை அதற்கு தயார் செய்ய ஆரம்பித்தார்.என்ன சொன்னாலும் கேட்கும் தந்தை இப்போது என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்றானார்.
தனக்கு மிகவும் பிடித்த விழியனும் போய் வேலையும் போய் வீட்டில் இருந்தாள்.தெளிவான மனிதரான சங்கர நாராயணன் இபோது குழப்பவாதியாகிவிட்டார்!
நற்பெயர் மட்டும் வாங்கி கொண்டுருந்த மகள் இப்படி வழி தவறிவிட்டாளே என்பது அவருக்கு பெரும் கலக்கமாக ஆகி போனது! அந்த பதட்டத்தில் சில பல தவறுகளை அவரும் செய்தார்!மகளுக்கு புரிய வைக்க முயன்று அவளை வேலைக்கு அனுப்பியிருந்தாலும் பரவாயில்லை! ‘குவாலிட்டி கண்ட்ரோல்’ என்பதாய் அவர் எடுத்த சில விபரீத முடிவுகள் , தந்தை மகள் உறவை குலைக்க போதுமானதாய் இருந்தது!
நினைவுக்கு திரும்பினாள்.செய்ய வேண்டிய சேதாரங்கள் எல்லாம் செய்துவிட்டு இப்போதும் அது பத்தாது என்று எதையோ சொல்கிறாரே என்றிருந்தது ரதிக்கு!இனி எவர் பேச்சையும் கேட்டுக் கொள்ள அவள் தயாராய் இல்லை!
அவன் வீட்டின் பக்கம் போய்விட்டால் தான் நினைத்த காரியம் எதையும் எளிதாக செய்யலாம் என்று நினைத்தால் அதிலும் இப்போது சிக்கல்! என்னதான் செய்வது! அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை! ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது.வெண்பாவின் வாழ்க்கையில் இருந்து அவனை விலக்குவது மட்டும் அவளின் முதல் டார்கெட்!
தமிழ் வீட்டிற்கு சென்றிருந்தாள் வெண்பா! அவள் மாமியார் இருக்கும் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன் என்றிருந்தவளை,
“அவங்க ஊருக்கு போயிட்டாங்க, வா டீ, கட்டாயம் இந்த முறை திடீர்னு வந்துட மாட்டாங்க . என்னை நம்பு” என்று சத்தியம் செய்து வரவழைத்திருந்தாள் தமக்கை!
பொற்பாவையும் கூட சேர்ந்து “வா வெண்பா, எத்தனை நாள் ஆச்சு” என்று அன்பாய் அழைக்க வந்துவிட்டாள் இங்கே!
நீண்ட நேரமாய் வாயடித்ததில் நேரம் போனதே தெரியவில்லை,அப்போது தான் வந்தது போல் இருக்க, அங்கிருந்து கிளம்பவே மனமில்லை வெண்பாவுக்கு. அவள் தயக்கத்தை பார்த்து “இங்கேயே தங்கிடேன்” என்ற பொற்பாவையை தமிழ் அதட்ட, வெண்பாவும் கூட்டு சேர்ந்து தான் அங்கேயே தங்குவதாய் சொல்லி விட்டாள்.
தமிழுக்கு தங்கையை விரட்டிவிட வேண்டுமா என்றிருக்க, அமைதி காத்துக் கொண்டாள்.ரேணுகாவிடம் வெண்பாவே தான் இன்று வரவில்லை என்பதை போனில் சொல்ல, மருமகளை ஒன்றும் சொல்லாமல்விட்டாள் அவளும். தன்னை மண்டகப்படி கிடைக்கும் என்று தெரியாதே!
விழியனுக்கு பயங்கர கோவம்!
“அம்மா நான் ஊரில் இருக்கிற வரை கூட அம்மணிக்கு என் கூட இருக்க முடியாதா? எப்படி நீங்க இதுக்கெல்லாம் ஒத்துகிட்டீங்க? நீங்க ஒரு மாமியாரா இருக்கிறதுக்கே லாயிக்கே இல்லை மா. நல்லா மிளகாய் அரைக்கிறா உங்க தலையில்!”
என்றவன் வண்டியுடன் அவளை அழைத்து வர கிளம்ப, தலையில் கைவைத்துக் கொண்டாள் ரேணுகா.
“என்னை நடுவில் வச்சிகிட்டு ரெண்டும் வம்பு பண்ணுதுங்க!”
சமையலைறையை தமிழ் ஒழுங்குபடுத்த அங்கிருந்த மேடையில் அமர்ந்து கொண்டாள் வெண்பா!
பொற்பாவை அங்கில்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்ட தமிழ்,
“என்ன வெண்பா , எப்படி போகுது கல்யாண வாழ்க்கை என்க”
“ஏதோ போகுது!” என்று நகைத்த தங்கையிடம்,
“வேண்டாம்னு சொன்னியே?”
“அது அப்போ…இப்ப விழியனை ரொம்ப பிடிச்சிருக்கு! ஆனா என்னவோ அவன் கிட்ட இயல்பா இருக்க முடியலை!”
“ஏனோ?”
பழைய கதையை அக்காளிடம் சொல்ல, விழுந்து விழுந்து சிரித்தாள் தமிழ்.
“சும்மா இரு தமிழ் , அடி வாங்க போறே”
அவளை தேடி இங்கே வந்தவன், வாசலில் பொற்பாவை இருக்க, அவள் மூலம் கதவை திறந்து கொண்டு வந்துவிட்டான் வீட்டினுள்… சமையல் கட்டில் வெண்பாவின் குரல் கேட்க, அங்கிருந்தபடி அவளின் சம்பாஷனைகளை கேட்ட சமயம் தான்,
“விழியனை பிடிச்சிருக்கு” என்று தன் மனதை வெளிகாட்டிக் கொண்டிருந்தாள் அவனருமை பொஞ்சாதி!
அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அந்த சின்ன வயது கதையை சொல்ல, இப்போது கடுப்பாகி போனான்!
‘ஆமா டீ ஊர் பூரா போய் இன்னமும் இதையே சொல்லி என் மானத்தை வாங்கு!’
அவன் எண்ணம் தெரியாமல் அவள் தொடர்ந்தாள்.
“அவன் ஊருக்கு போறதே என்னால தான் தெரியுமா… எப்படி அவன் இல்லாம இங்க இருக்க போறேனேன்னு தெரியலை தமிழ்”
கதவின் மறுபக்கம் இருந்தவனுக்கு தன் காதல் மனைவியின் இந்த வாக்குமூலம் எப்படி இருந்ததாம்!
இத்தனை ஆசை வைத்துக் கொண்டு தான் அந்த ஆட்டம் போடுறியா?இன்னும் ஏதாவது சொல்வாளா என்று அவன் காத்திருக்க,
“சித்தப்பூ இங்கே என்ன பண்றீங்க?வெண்பா யார் வந்திருக்கா பார்!” என்று குரல் கொடுத்தாள் பொற்பாவை!
அந்த சத்தம் கேட்டு சமையற்கட்டில் இருந்து வெளியில் வந்தனர் இரு பெண்களும்!
“வா விழியன், என்ன திடுதிப்புன்னு!” தமிழ் அவனை சீண்ட,
“மாப்பிள்ளை ஊருக்கு போறானே, அவன் இருக்கிற வரை கூட இருக்கணும்னு உங்க தங்கச்சிக்கு நீங்க சொல்லி தந்திருக்கலாம் தமிழ் கா”
அவள் மகிழ்ந்த முகமாய் வெண்பாவை பார்க்க, அவள் இப்போது தரையை பார்த்து கொண்டு நின்றாள்…
“போலாமா வெண்பா , நேரமாச்சு!”என்றவன் வண்டி பக்கம் செல்ல,
எந்த தாமதமும் இல்லாமல் கிளம்பியாயிற்று!
‘வீட்டுக்கு வாடி உனக்கு இன்னிக்கு இருக்கு!’ விழியனின் வண்டி பறக்க ஆரம்பித்தது!