VNE24

அத்தியாயம் 24

தாங்க முடியாத அதிர்ச்சியில் மஹாவுடைய மூளை ஒரு சில நொடிகள் வேலை நிறுத்தம் செய்திருந்தது.

அடுத்த நொடி மிகத் தீவிரமாக அவனை தள்ளி விட முயன்றவளின் முயற்சிகளை சுலபமாக முறியடித்து அவளை தன்னுடைய உயரத்திற்கு தூக்கி இறுக்கி அணைத்தபடி அவளது உதடுகளை விடாமல் சிறை செய்திருந்தான் ஷ்யாம்.

அப்படியொரு மயக்கமும் கிறக்கமும் அவள் மீது. விட்டு விட முடியாமல், விட்டால் மீண்டும் கிடைக்குமோ கிடைக்காதோ என்று பயம் கொண்டு அமிழ்தத்தை அருந்தும் அசுரனாக மாறியிருந்தான்.

அந்த மயக்கம் அவனை பித்தம் கொள்ள செய்தது. கிறக்கம் சித்தத்தை தடுமாற வைத்தது. காதலும் மோகமும் சேர்ந்தால் ஒரு சிறு முத்தம் கூட உயிருக்குள் தீ மூட்டும் என்பதை அந்த நொடிகளில் தான் கண்டுகொண்டான் அவன்.

இதுநாள் வரை வெகு சாதாரணமாக கடந்திருந்த இதழ் முத்தத்தின் ரசவாதத்தை அந்த ஒற்றை நொடியில் உணர்ந்திருந்தான். அப்போதுதான் புதிதாக பிறந்தது போன்ற அந்த உணர்வு அவனுக்கு புதியது… மிக மிக புதியது…

அவனது ஒவ்வொரு அணுவிலும் மஹா மேல் கொண்ட காதலும், அந்த காதல் தூண்டிய மோகமும், அவளை விட்டுத் தரவே முடியாது என்ற தீர்மானமும் மட்டுமே பொங்கி வழிந்தது.

மீள முடியாத அந்த போதை மீண்டும் மீண்டும் வேண்டும் என்று மனம் கேட்டது. அது ராஜ போதை… கஞ்சாவோ மார்ஃபினோ வேறு எந்த போதை வஸ்துவுமே கொடுக்க முடியாத ராஜ போதை.

அது காதலினால் மட்டுமே கிடைக்கும் ராஜ போதை!

இந்த போதை காலம் முழுக்க வேண்டும் என்ற ஆசை அவனை ஆட்டிவைத்தது. அந்திம காலத்திலும் கூட இதே போதையோடு இவளோடு காதல் கொள்ள முடியும் என்று கட்டியம் கூறியது அவனது மனம்.

இது சற்று நேர தேவையல்ல… ஏழ் பிறப்பும் தொடரும் பந்தம் என்ற எண்ணம் தோன்றியது. அந்த எண்ணம் ஏன் தோன்றியது என்றெல்லாம் அவன் ஆராய்ச்சி செய்யவில்லை.

அந்த எண்ணம் அவனை ஆதியும் நீயே… அந்தமும் நீயே என்று அவளில் சரணடைய சொன்னது.

சரணடைந்தான்!

நீண்ட இதழ் யுத்தத்தை ஒருவாறாக முடித்துக் கொண்டு அவளை மெதுவாக தரையில் இறக்கி விட்டான். அவன் கைகளிலிருந்த இடையும், அவன் மேல் உரசிய அவளது உடலும் அவனுக்குள் எரிந்து கொண்டிருந்த நெருப்புக்கு எண்ணையை வார்த்தன!

மஹாவால் ஷ்யாமை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. உள்ளுக்குள் அவமானமாக உணர்ந்தாள். யாருமற்ற வனாந்திரத்தில், என்ன செய்தாலும் கேட்க ஆளில்லை என்ற நிலையில் தன்னை நிறுத்தி அவன் செய்ததை அவளால் மன்னிக்க முடியுமென்று தோன்றவில்லை.

ஷ்யாம் இப்படி நடந்து கொள்வான் என்பதை அவள் சிறு அளவு கூட எதிர்பார்க்கவில்லை. அவன் நண்பன்… வெளிப்படையானவன்… உண்மையானவன்… எதை பற்றி வேண்டுமானாலும்  விவாதிக்க கிடைத்த புத்திசாலி… இவ்வளவு மட்டுமே அவன் மேல் இவள் கொண்ட மதிப்பீடு.

வெட்கப்பட வைக்கும் அளவு கேலியும் கிண்டலும் வெகு இயல்பாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது அவன் நடந்து கொண்ட முறைக்கு அவன் என்ன நியாயம் கற்பிக்கக் கூடும்?

கண்களில் நீர் சூழ பார்த்தது. முயன்று அடக்கினாள்.

மனம் கோபத்தில் கொந்தளித்தது. முகம் வெளிறி, உதடு துடிக்க, நீ இவ்வளவு தானா என்ற இகழ்ச்சியான, அருவருத்த பார்வை பார்த்தவள்,

“ச்சே…” என்று வெறுப்பாக மொழிந்து விட்டு திரும்பினாள். கொண்ட நம்பிக்கை குலையும் போது ஏற்படும் கோபம் வெறுப்பின் ஒரு வகை!

அவளது அந்த ஒற்றை சொல் அவனை கோபப்படுத்தியது. தன்னை போலவே அவளும் காதல் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அவனது காதலை அவள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. எப்படியும் அவளிடம் போராட வேண்டியிருக்கும் என்பதும் தெரியும். ஆனால் ஆரம்பமே இப்படி ஒரு வார்த்தையோடு ஆரம்பிக்கும் என்று அவன் எண்ணவில்லை.

அவனது ஈகோவை தட்டியெழுப்பியது அந்த ஒற்றை சொல்.

அவளது கையை பிடித்தான் ஷ்யாம்!

“கையை விடு…” அவனிடமிருந்து கையை விடுவித்துக் கொள்ள போராடினாள் மஹா. அவனோ விடவே முடியாது என்ற தீவிர எண்ணத்தோடு அழுத்தமாக பற்றியிருந்தான்.

“முடியாது… என்னை பார் மஹா…” அழுத்தமாக அவனழைக்க, அவள் பல்லைக் கடித்தாள்.

“முடியாது… என்னை விடு…” வெறுப்பாக அவனிடமிருந்து மீட்டுக் கொள்ள முயன்றாள்.

“ஏய் குல்பி… சொன்ன கேக்க மாட்ட?” என்றவன், பிடித்திருந்த கையை சட்டென இழுத்து தன்னோடு பிணைத்துக் கொண்டான். முதுகோடு இப்போது அவளை அழுத்திப் பிடித்ததில், அவனிடமிருந்து மொத்தமாக விடுபட்டாக வேண்டிய கட்டாயம் அவளுக்கு.

“இப்ப விடறியா? இல்லையா?” கொதித்தது அவளது குரல்.

“கொஞ்சம் பொறுமையா கேளேன்டி… ப்ளீஸ்…”

“எதை பொறுமையா கேக்க சொல்ற? எனக்கு அசிங்கமா இருக்கு…” கண்ணீரையும் கட்டுப்படுத்த முடியாமல், பேசவும் இயலாமல் அவளுக்கு திக்கியது. ஆனாலும் அப்போதும் அவன் முன்பு அழுது விடக் கூடாது என்கிற வைராக்கியம் அவளுக்கு! அவளுடைய தைரியமெல்லாம் எங்கே போனது என்று அவளுக்கே தெரியவில்லை. உடலில் ஒருவித நடுக்கம் பரவி இருந்தது.

இது போன்ற அனுபவங்களை அவள் எதிர்பார்கவில்லை. அவன் தீண்டிய இடமெல்லாம் எரிந்தது. ஆனால் அவளது வார்த்தைகள் அவனை எரித்தது. மெளனமாக அவளை பார்த்தான். இவளுக்கு என்ன சொல்லி புரிய வைக்க? அவளை மெல்லமாக விடுவித்தான் அவன்.

“ப்ரெண்ட்ன்னு சொல்லிட்டு இப்படி நடந்துக்க உனக்கே அசிங்கமா இல்லையா? உன்னை நான் நம்பினேன்… ஆனா…” வலித்து வெளிவந்தது அவளது வார்த்தை.

“உன்னோட நம்பிக்கைய நான் எந்த விதத்திலும் காயப்படுத்த விரும்பலை… கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் என்னால அந்த லிமிட்குள்ள நிற்க முடியும்ங்கற நம்பிக்கை இருந்தது… ஆனா எப்ப அந்த நம்பிக்கை போச்சோ… அதுக்கும் மேல நீ நடிக்கற மாதிரி போலியா என்னால உன்கிட்ட நடிக்க முடியாது…” கொஞ்சம் சூடாகத்தான் கூறினான்.

“நான் நடிக்கறேனா? லூசா நீ?” அதிர்ந்து அவனை பார்த்தாள்.

“கண்டிப்பா… எதுன்னாலும் நான் வெளிப்படையா சொல்லிடுவேன் மகா… ஆனா நீ அப்படி கிடையாது… போலித்தனமா ப்ரெண்ட்ன்னு சொல்லிட்டா நாம ப்ரெண்ட்ஸ் கிடையாது… அந்த லிமிட்ல நான் இல்ல…” என்று நிறுத்தியவன், “நீயும் இல்ல…” என்று முடித்தான்.

அவனை இகழ்ச்சியாக அலட்சியப் பார்வை  பார்த்தவள், “உன்னோட உளறலை எல்லாம் நான் கேட்க முடியாது… நான் கிளம்பறேன்…” என்று அவளது பேக்பேக்கை நோக்கி போனாள்.

அவனை பதற்றம் தொற்றிக் கொண்டது.

விட்டால் இவள் கிளம்பி விடுவாளே! இந்த வனத்தில் எங்கு செல்ல முடியும்? ஆனால் கோபத்தில் எதை வேண்டுமானாலும் செய்து விடுபவள் அல்லவா… வீட்டிலிருக்கும் போது சண்டையிட்டுக் கொண்டு அவள் வெளியே சென்றது நினைவுக்கு வர, அவசரமாக அவளை நோக்கி போனான்.

“எங்க கிளம்பற?” அவளை உறுத்து விழித்தவன், கோபமாக கேட்க,

“எங்கயும் போக முடியாதுங்கற தைரியத்துல தானே என்கிட்ட இப்படி நடந்துட்ருக்க?” அதை சொல்வதற்கு அவள் திணறினாள். கண்ணீர் விழவா? எழவா? என்று காத்திருந்தது.

“மஹா… ஒரு விஷயத்தை புரிஞ்சுக்க… நார்மலா இருந்தவனை தண்ணில விளையாட்டு காட்டி ட்ரிகர் பண்ணி விட்டது நீ தான்…” என்று அவளையே பழி கூறியவனை எரிச்சலாக பார்த்தாள்.

“ஏன்? நான் தான் இப்படி பண்ண சொன்னேன்னே சொல்லேன்?”

“இல்லடா… நான் சொன்னதோட அர்த்தம் வேற… உனக்கு என்னமோ ஆகிடுச்சுன்னு நான் பயந்த அந்த நேரத்துல தான் உன் மேல இருக்க விருப்பம் புரிஞ்சுது… என்னாலேயே முதல்ல அதை ஏத்துக்க முடியல… ஆனா ஐ குட்ன்ட் ரெசிஸ்ட் மை ஃபீலிங்க்ஸ்… அதுவும் உன்கிட்ட எதையும் மறைச்சு வைக்க வேண்டிய அவசியம் இல்ல… அதான் உடனே சொல்லிட்டேன்… உன்கிட்ட முகமூடி போட்டுக்க முடியாது…” தன்னால் முடிந்தவரை அவளுக்கு விளக்க வேண்டும் என்று தான் அவன் நினைத்தான். முடிந்தவரை அதை செய்யவும் செய்தான்.

“லவ்…??” அவள் எள்ளலாக கேட்டு சிரித்தாள். அந்த எள்ளல் தீவிரமாக கசந்தது. அதே எள்ளலோடு, “நான் எத்தனையாவது நம்பர்?” என்று அவள் கேட்க,

ஷ்யாம் மெளனமாக அவளை பார்த்தான்.

“ஓ உங்களுக்கே தெரியாதுல்ல… உலக அழகிங்க எல்லாம் உங்க காலடில இருக்காங்கல்ல ஹிஸ் மெஜஸ்டி… என்னோட சீரியல் நம்பரை எல்லாம்  உங்களால பிகர் அவுட் பண்ண முடியுமா?”

அவன் எதுவும் பேசவில்லை. அவள் தொடர்ந்தாள்.

“பாஸ்ட்ல உங்களால கவுன்ட் பண்ண முடியாது ஹிஸ் மெஜஸ்டி… அது எனக்கே தெரியும்… ஆனா பியுச்சர்ல?”

அவளை ஆழமாக பார்த்தான்.

சிறிய பெண் என்று அவளை நினைக்க முடியாது என்று அவனுக்கும் தெரியும். ஆனால் அவளது வார்த்தைகள் மிகுந்த வலியை கொடுத்தது. அவனது திமிரை அகழ்வாராய்ச்சி செய்து உயிர்த்தெழ செய்தாள்.

“இதுவரைக்கும் எனக்கு லவ்ல நம்பிக்கை வந்தது இல்லை… யாரையும் லவ் பண்ணதும் இல்லை… அது உனக்கும் தெரியும்…” இறுக்கமாக வெளிவந்தன அவனது வார்த்தைகள்.

“இப்ப மட்டும் எப்படி வந்தது?” என்ற அவளது நேரடியான கேள்வியும், குற்றசாட்டும் அவனை வெகுண்டெழ செய்தது.

“இப்பவும் லவ் பண்றேன்னு சொல்லலையே…” வீம்புக்கென்றே கூறியவனை அதிர்ந்து பார்த்தாள்.

“வாட்?”

“எஸ்… உன்னை கிஸ் பண்ணும் போது தான் நான் ஃபீல் பண்ணேன் தட்  யூ ஆர் வெரி ஸ்பெஷல் டூ மீ… அந்த மாதிரி ஒரு ஃபீலிங்கை நான் இதுவரைக்கும் உணர்ந்தில்லை… எனக்கு அந்த ஃபீலிங் ரொம்ப பிடிச்சு இருக்கு… லாங் லாஸ்ட்டிங்கா இருக்கலாம்… கண்டிப்பா இருக்கும்… அதை லவ்வா லஸ்ட்டான்னு ரிசர்ச் பண்ண நினைக்கலை… சம்திங் கிரேட்… அவ்வளவுதான் மஹா…”

வெளிப்படையாக கூறியவனை கொன்று விடும் கோபம் வந்தது. எவ்வளவு சாதாரணமாக கூறுகிறான். தான் என்ன இவனை பொறுத்தவரை விளையாட்டுப் பொருளா? அல்லது ஆராய்ச்சி எலியா? அதுவும் மற்றவர்களோடு ஒப்பிட்டு விமர்சிக்க எவ்வளவு தைரியமிருக்க வேண்டும்?

“ச்சே…” என்று திரும்பி நின்று கொண்டாள். அவள் மேலேயே அவளுக்கு வெறுப்பு தோன்றியிருந்தது. அவன் முத்தமிட்ட உதடுகள் எரிந்தன. அதை பியைத்து எறியும் ஆத்திரம் வந்தது.

இப்போது கோபம் அவன் முத்தமிட்டதற்கா? இதுவரை இந்த உணர்வை உணர்ந்ததில்லை என்ற ஒப்பீடுக்கா? அவளது மனம் கேட்டது.

அவளது உணர்வு போராட்டங்களை பார்த்துக் கொண்டிருந்தவன், மெல்ல அவளை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான்.

“கொஞ்சம் ஃப்ரீயா விடுடி… என்னோட பாஸ்ட் அவ்வளவு நல்லா இல்ல தான்… ஆனா ஐம் யுவர்ஸ்… ஒன்லி யுவர்ஸ்… இன்னைல இருந்து நான் முழுக்க முழுக்க மஹாவோட ப்ராபர்ட்டி…” அவளது காதுக்குள் கிசுகிசுப்பாக கூறியவனை என்ன சொல்வது?

“இதை நான் திருப்பி சொன்னா எவ்வளவு அசிங்கமா இருக்கும்? யோசிச்சு பார்த்தியா?”அவனை தள்ளி நிறுத்த பெருமுயற்சி செய்தபடி அவள் வெடிக்க,

“தெரியுது மஹா… ஆனா நடந்த சம்பவங்களை என்னால மாத்த முடியாதே…” அவனது வார்த்தைகளில் உண்மையிருந்தது.

அவனை வலுகட்டாயமாக பிரித்து தள்ளி நிறுத்தியவள்,

“நான் ரொம்பல்லாம் எதிர்பார்க்கல ஷ்யாம்… என்னோட புருஷன் எனக்கே எனக்குன்னு இருக்கனும்ன்னு நினைக்கறது தப்பா? உன்னால அப்படி இருக்க முடியுமா?”

“தப்பே கிடையாது… ஆனா கேரன்ட்டி வாரண்டி கொடுத்துட்டு தான் லவ் பண்ணனும்ன்னு சொன்னா எப்படி முடியும்?”

“ஆனா அந்த கேரன்ட்டி உனக்கே கூட இல்லாம உன்னால எப்படி லவ் பண்ண முடியும்? என்னை பொறுத்தவரைக்கும் லவ் வேற லஸ்ட் வேறல்ல… ரெண்டுமே ஒருத்தர் கிட்ட மட்டும் தான் பீல் பண்ண முடியும்ன்னு நினைக்கறேன்… ஆனா உன்னோட டெஃபனிஷன் வேற இல்லையா? லஸ்ட் வேற லவ் வேறன்னு சொல்ற அளவு உனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு… அதை ஒரு தோழியா என்னால ஏத்துக்க முடியும்… உன்னை பெருமையா நினைக்க முடியும்… ஆனா ஒரு காதலியா மனைவியா எப்படி என்னால ஏத்துக்க முடியும்? அதை நினைச்சு பார்த்தியா?”

அவள் கேட்டதில் உள்ள உண்மை அவனை சுட்டது. ஆனால் அப்படியே விட்டுவிட முடியாதே!

“நீ சொன்ன அத்தனையும் உண்மை, உண்மை மட்டும் தான் மஹா. உண்மையை தாண்டி ஒரு வார்த்தை கூட நீ பேசலை… பேசவும் மாட்ட… ஐ நோ… நான் கம்ப்ளீட்டா அக்செப்ட் பண்ணிக்குவேன்… ஒரு ப்ரெண்டா! ஆனா ஒரு காதலனா, எதிர்காலத்துல உன்னோட கணவனா உன்னோட வாதத்தை எப்படி அக்செப்ட் பண்ணிக்க முடியும்?” என்று கேட்டவன் சற்று நிறுத்தி,

“எல்லாருக்குமே பாஸ்ட்ன்னு ஒன்னு இருக்கும் மஹா. நான் எல்லாத்தையும் உன்கிட்ட வெளிப்படையா சொல்லிட்டேன்… அதனால கேள்வி கேக்கற… இதே சொல்லாதவனா இருந்தா உன்னால அக்செப்ட் பண்ணிருக்க முடியும்… எதிர்காலத்திலையும் நீ மட்டும் போதும்ன்னு சொல்லிட்டு வெளிய வேற மாதிரி இருந்தான்னா  உன்னால என்ன பண்ண முடியும்?

ஆனா என்னால அப்படி இருக்க முடியல… கண்டிப்பா முடியாது… உன்கிட்ட உண்மையா இருக்கனும்ன்னு நினைக்கறேன்… நீ என்கிட்டே சண்டை போட்டாக் கூட பரவால்ல… உண்மைய சொல்லிடனும்னு நினைக்கறேன்… ஆக உன்னோட ப்ராப்ளம் என்னோட உண்மைகள் இல்ல… வெளிப்படையா, உண்மையா இருக்கனும்ன்னு நினைக்கறது தான் இல்லையா?”

நேராக அவன் கேட்ட கேள்வி அவளை தாக்கியது.

நிஜம் தானே!

அவன் வெளிப்படையாக சொல்லாதவனாக இருந்தால்?

அவனது விருப்பத்தை ஒப்புக்கொண்டிருப்பாளாக இருக்கக் கூடும்.

ஆனால் அவன் மூலமாகவே தெரிந்த அவனது கடந்த காலம் அல்லவா நடுவில் உறுத்திக் கொண்டிருப்பது.

அவன் நினைத்திருந்தால் அதை மறைத்திருக்க முடியும்… ஆனால் அவன் அதை செய்ய நினைக்கவில்லை. அவனது ஒவ்வொரு உணர்வையும் அவளிடம் வெளிப்படையாக்கி இருக்கிறான், தோழனாக… இப்போது காதலனாக!

அவன் வெளிப்படையாக்காமல் இருந்திருந்திருந்தாலும் அவளுக்கு எதுவும் தெரியாமல் போய்விடாது. ஆனால் அவனிடம் உண்மை என்ற ஒன்றை அவள் கண்டிருக்க மாட்டாள்.

அவளால் அத்தனையையும் ஜீரணிக்க முடியவில்லை. எந்த காலத்திலும் அது முடியாது. பெற்றோர் பார்த்து திருமணம் செய்விக்கும் போது தான் எதிர்நோக்கும் வாழ்க்கையின் தன்மையும் இப்படி இருக்கலாம். அதற்கும் எந்தவிதமான உத்தரவாதமில்லை. ஆனால் அது வேறு!

தெரியாமல் குழியில் விழுவதற்கும், தெரிந்தே குழியில் விழுவதற்கும் வித்தியாசமில்லையா?

எந்த விதத்தில் இருவருக்கும் பொருந்திவிட கூடும்?

அவனது குணத்திற்கும் தன்னுடைய குணத்திற்குமே பொருந்தாது. அதோடு அவனுடைய கடந்த காலம், எதிர்காலத்தில் பிரச்சனைகளை கொண்டு வரும் பட்சத்தில் என்ன செய்ய முடியும்?

அதிலும் கொடுத்த கடனுக்காக தன்னை இவன் கஸ்டடி எடுத்திருக்கும் ஈரமில்லாத வட்டிக்கடைக்காரன் என்பதை சிரமப்பட்டு நினைவுக்கு கொண்டு வந்தாள்.

இருவருக்கும் இருக்கும் பிரச்சனையே ஒன்று தான்.

ஷ்யாம் நிகழ்காலத்தை முக்கியமாக நினைப்பவன்… எதிர்காலத்திற்காக பெரிய திட்டங்கள் எதுவும் வைத்துக் கொள்ளாதவன். அதன் மேல் பெரிய நம்பிக்கை இல்லாதவன்.

ஆனால் மஹா, ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் ஆயிரம் திட்டங்களையும் கொள்கைகளையும் கொண்டவள். எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்ற முன்யோசனை அதிகம்.

அவனால் கடந்த காலத்தை தனிமைப்படுத்தி பார்க்க முடிந்தது. எதிர்காலத்தை குறித்த திட்டமிடல் இல்லாததால் அவன் எந்த உறுதியையும் கொடுக்க முனையவில்லை. அது நேர்மையான பதில் என்று அவளுக்கு தெரிந்தாலும், அவளே கூறுவதை போல, நண்பியாக ஏற்க முடித்த விஷயத்தை காதலியாக ஏற்க முடியாது என்பதுதான், இருவருக்குமிடையில் எழுந்த பிரச்சனையின் மூலாதாரம்.

“இல்ல ஷ்யாம்… நீ சொல்ற உண்மை பிரச்சனை இல்லை… எனக்கு நீயே பிரச்சனை தான்… என்னால கண்டிப்பா எந்தவிதத்திலும் உன்னை சகிச்சுக்க முடியும்ன்னு தோனலை… இந்த விஷயத்தை விட்டுடு…”

“எப்படி பொருந்தலைன்னு சொல்ற மஹா? உன்னோட கண் வேற சொல்லுதே…” அவளை ஆழ்ந்து நோக்கியவன், நிஜத்தை கூற,

“எது என்ன சொன்னா என்ன? நான் சொல்றது இதுதான்…” பல்லைக் கடித்துக் கொண்டாள்.

இவளிடம் இனி பேசி புரியவைக்க முடியாது என்பதை புரிந்து கொண்டான். அவளாக புரிந்து கொண்டு இறங்கி வந்தால் தான் உண்டு. புரியாதவர்களுக்கு புரிய வைக்க முடியும். ஆனால் புரிந்தும் புரியாதது போல நடிப்பவர்களுக்கு என்ன சொல்லியும் புரிய வைக்க முடியாது. தீர்மானித்துக் கொண்டவன்,

“ஓகே டார்லிங்… ஆஸ் யூ விஷ்…” என்று தோளை குலுக்கிக் கொண்டவன், “குளிச்சுட்டு கிளம்பு… வீட்டுக்கு போய் திங்க்ஸ எடுத்துகிட்டு சென்னை கிளம்பறோம்…”

“சென்னைக்கா?” வியப்பாக கேட்டாள் மஹா. அதுவரை இருந்த பூசல் இப்போது பின்னிற்கு சென்று விட்டது.

“எஸ்…”

“நிஜமாவா?” கண்களை விரித்துக் கொண்டு சந்தோஷமாக கேட்டவளை திரும்பவும் கட்டிக் கொள்ள வேண்டும் போல அவனுக்கு தோன்றியது. ஆனால் இனி அவளாக தான் வர வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டதை நினைவு படுத்திக் கொண்டான்.

“எஸ்…”

இவ்வளவு சாதாரணமாக இந்த விஷயத்தை எப்படி விட்டு விடுவான் என்று யோசித்தாள். அவனுக்கு தேவையென்ற விஷயத்தை எப்படியாவது சாதித்துக் கொள்ளும் அவனது குணம் அவளுக்கு அத்துப்படியாகி இருந்தது. எப்படி இருந்தாலும் தன்னால் அவனோடு ஒத்துப் போக முடியாது என்பதை மிகத் தீவிரமாக நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி இருந்தது.

“என்ன திடீர்ன்னு?”

“போதும்மா தாயே… நாலு நாள்ல நான் காலி… இன்னும் ரெண்டு நாள் வெச்சு இருந்தேன்னா கண்டிப்பா என்னை பைத்தியமாக்கி விட்டுடுவ…” விளையாட்டாக சொல்வதை போல சொன்னாலும் அவன் உண்மையை தான் கூறினான்.

அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவன் மேல் கோபம் இருந்தாலும் அதை தாண்டி அவனது அந்த நக்கல் பேச்சு, சிரிப்பை வரவைத்தது.

“ஷ்யாம் தி கிரேட் இப்படி சொல்லலாமா?” கேலியாக கூறியவளை பார்த்து கைகூப்பி வணங்கினான்.

“போதும்… இனிமே உனக்கும் எனக்கும் எந்த பேச்சும் வேண்டாம்… குளிச்சுட்டு கிளம்பு…” என்றவனும் நீரை நோக்கி போக, அவனது கையை பிடித்து தடுத்தாள்.

“ஏன்டா ஒரு மாதிரியா பேசற… ஆஸ் எ ப்ரெண்ட் உன்னை ரொம்ப பிடிக்கும் ஷ்யாம்…” திணறியபடி கூறியவளை கூர்மையாக பார்த்தான்.

“ஹிப்போக்ரெட்…” என்றான் கசப்பாக!

“ஐ மீன் இட் ஷ்யாம்… இப்ப நடந்த விஷயத்தை மறந்துடலாம்… என்கிட்டே முன்ன மாதிரி பேசு… ப்ளீஸ்…” உண்மையிலேயே அவனது நட்பை விட்டுவிட அவளுக்கு பிடிக்கவில்லை.

“மறக்கறதா?” கோபமாக கேட்டவன், “என்னால உன்கிட்ட இப்படி போலித்தனமா இருக்க முடியாதுன்னு முன்னாடியே சொல்லிட்டேன்… நீயும் போலியா இருக்காதே… தயவு செஞ்சு வேண்டாம்… ரொம்ப அருவருப்பா இருக்கு…” என்றவன், வெப்பத்தை குறைக்க நீருக்குள் மூழ்கினான்.

எவ்வளவு நேரம் நீருக்குள் இருந்தாலும் அவனது வெப்பமும் கோபமும் குறைந்து விட போவதில்லை. அவன் அறிவான்… அவனது காதலை!

அவள் மேல் கொண்ட காதல் எப்படியும் தன்னை வாழ விடாது என்று அறிந்தே தான் அவளை முத்தமிட்டு காதலை சொன்னதும். ஆனால் அவளது வார்த்தைகள்?! அவனை உயிரோடு எரித்தன.

மஹா அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்து குழந்தையை தன் கையில் கொடுத்தபோது தான், தனக்கும் இப்படியொரு குழந்தை பிறந்தால் எப்படி இருக்குமென்று கற்பனை தோன்றியது. அந்த கற்பனை குழந்தை மகாவை போலவே இருக்கக் கண்டான்!

அவளை போன்ற குணத்தோடு… அழகோடு… பண்போடு… இரக்கத்தோடு இருக்கக் கண்ட போது தான் அவளை முதன் முதலில் அணைத்துக் கொள்ள தோன்றியது.

இது காதலில்லை என்றால் வேறேது காதல்? வேறு யார் கண்டுகொள்ள முடியும், காமத்திற்கும் காதலுக்குமான வித்தியாசத்தை?! அவன் நேர்மையாக ஒப்புக்கொண்ட விஷயங்களே அவனுக்கு எதிராக திரும்பும் என்று கண்டானா என்ன?

அவளது உறுதியைப் பற்றி அவன் நன்றாகவே அறிவான். அழ வைப்பேன் என்று வீம்பிற்காக இவன் மிரட்டியதை தீவிரமாக எடுத்துக் கொண்டு, தன் முன் அழக் கூடாது என்று எத்தகைய கஷ்டமாக இருந்தாலும் கல் போல இருப்பவளை அறிவான்.

கண்கள் கலங்கியது. கலங்காதிருக்க அவன் மீண்டும் நீருக்குள் மூழ்கினான்.

அவன் நீருக்குள் மூழ்கியபடி இருந்ததை பார்த்தவளுக்கு கண்கள் கலங்கியது. முயன்று கண்ணீரை அடக்கினாள்.

மேற்கொண்டு எதையும் பேசாமல் குளித்து விட்டு, உடைமாற்றிக் கொண்டு, எங்கும் நிற்காமல் வீட்டிற்கு வந்து சேர்ந்த போது இரவாகியிருந்தது.

பேச்சும் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே!

அவளாக பேசினால் கூட அவன் தவிர்த்தான்!

“அண்ணா பணத்தை கொடுத்தாச்சா ஷ்யாம்?” அவளுக்கு இந்த விஷயத்தை தெளிவுபடுத்திக் கொண்டேயாக வேண்டியிருந்தது. அவனிடமிருந்து விடுதலையை இலவசமாக பெற்றுக் கொள்ள அவளுக்கு விருப்பமில்லை. அதற்காக பணிய நேரிடுவதும் அவளால் ஆகாத ஒன்று!

“நாளைக்கு கொடுத்துடுவான்…” இறுக்கமாக அவன் கூறுவதை கேட்டபோது அவளுக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது.

“எப்படி சொல்ற?”

“அது உனக்கு தேவையில்லாத ஆணி… எனக்கு புடுங்க தெரியும்… போய் ஃப்ரெஷ் பண்ணிட்டு மட்டும் வா…” என்று கடிக்க, அதற்கும் மேல் அவனோடு வம்பை வளர்க்காமல், அவளது கைப் பையை மட்டும் எடுத்துக் கொண்டு, அவளது குர்தி பலஸோவுக்கு மாறியிருந்தாள்.

தலை இன்னமும் லேசாக காயாமலிருந்தது. இரண்டு பக்கமும் முடியை எடுத்து கிளிப் குத்தி முதுகில் படர விட்டிருந்தாள். அது கிட்டத்தட்ட முட்டியை தொட்டிருந்தது. அவளது வெண்மை நிறம் இப்போது வெளிர் ரோஜா நிறமாக மாறியிருந்தது. கண்களுக்கு மையும், உதட்டுக்கு லேசான ரோஜா நிற லிப் க்ளாசுமாக தயாராகி வந்தாள்.

உபயம் அவளது ஹேன்ட் பேக்.

இடது கையில் வாட்சை அணிந்தவாறே, “நான் ரெடி…” என்று வந்தவளை, அவனையும் மீறி காதலாக பார்த்தான். அவனும் ஜீன்ஸ் டி ஷர்ட்டுக்கு மாறியிருந்தான்.

“ஏன் முடியை இப்படியேத்தான் விட்டுட்டு வர போறயா? ஒழுங்கா பின்னு…” என்று கூறியவனை,

“முடி காயலை… அப்படியே பின்னினா தலைவலி வந்துடும்…” என்று கூற, அருகில் வந்தவன், நிதானமாக முக வடிவை அளந்தான்.

அவளுக்கு சிலிர்த்தது.

“கேரன்ட்டி, வாரண்டி கொடுத்துட்டு லவ் பண்ண முடியாதுடி… அது லவ் இல்ல… டீல்… பிசினஸ் டீல்… மனசு சொல்றதை கேளு… டோன்ட் பி எ ஹிப்போக்ரெட்… ஐ ல் பி வெய்டிங் ஃபார் யுவர் கால்…”

நெருக்கமாக நின்றபடி கூறியவனை உணர்வற்ற பார்வை பார்த்தாள்.

“போலாமா?” என்று அவன் கேட்ட கேள்விக்கு தலையாட்டியவளை ஆழ்ந்து பார்த்தான். அவளை முத்தமிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல தோன்றியது.

முயன்று எண்ணத்தை மாற்றியவன், அதற்கும் மேல் பேசாமல் கதவை பூட்டிவிட்டு வர, நாகம்மாள் தயாராக இருந்தாள். சாவியை அவளிடம் கொடுத்தவன், அவளிடம் சொல்லிவிட்டு கிளம்பினான். அவனது ஜாகுவார் தயாராக நின்றிருந்தது.

மகாவேங்கடலக்ஷ்மியோடு சென்னையை நோக்கி கிளம்பினான்.

மியுசிக் சிஸ்டத்தில் அர்ஜுன் ரெட்டிக்காக ப்ரீத்தி ஷெட்டி உருகிக் கொண்டிருந்தாள்.

மதுரமே ஈக்ஷணமே ஓ செல்லி

மதுரமே ஈக்ஷணமே

மதுரமே வீக்ஷணமே ஓ செல்லி

மதுரமே வீக்ஷணமே

மதுரமே லாலசையே

மதுரம் லாலநயே

மதுரமே லாஹிரிலே

மதுரம் லாலிதமே

மதுபவனம் வீச்சி மதுபவனம் வீச்சி

பருவமே மைமரசிந்திலே….

****

நேராக அவர்கள் வந்து சேர்ந்த இடம் ஒரு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல். சென்னையின் மிக முக்கியமான மருத்துவமனை. மருத்துவ கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டு கிட்டத்தட்ட இரண்டாண்டுகளே ஆகியிருந்தது. கல்லூரியை விரிவாக்கம் செய்ய போவதாகவும் பேச்சு இருந்ததை அவளறிவாள்.

மருத்துவமனையின் உள்கட்டமைப்பை பார்வையிட்டுக் கொண்டு வந்தவளுக்கு சற்று வியப்பாகத்தான் இருந்தது. அந்த மருத்துவமனையை மருத்துவ மாணவியாக கேள்விப்பட்டிருந்தாள். ஆனால் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இரவு அவனோடு கிளம்பியபோதுதான், தான் இருந்த இடம் கர்நாடகத்தின் தலகுப்பா என்பதே தெரிந்தது. அங்கிருந்து சென்னை வந்து சேர கிட்டத்தட்ட காலை பத்து மணியாகி இருந்தது.

எங்குமே நிறுத்தாமல் அவன் ஓட்டிய விதத்தை பார்க்கையில் அவளுக்கு மனம் திக் திக் தான். அன்று முழுக்க நடந்திருந்தார்கள். அருவி ஏரியில் நீந்தியிருந்தார்கள். அவளுக்கு உடல் வலியும் தாள முடியவில்லை. அதோடு உறக்கமும் கண்ணை அழுத்தியது. முயன்று விழித்துக் கொண்டு வந்தாள். ஷ்யாம் ஓட்டிய வேகத்தை பார்த்தவளுக்கு உறக்கம் பறந்து விட்டது.

அப்படி பறக்க விட்டு வந்தான் வாகனத்தை!

அதிலும் துளி கூட உறக்கமில்லாமல் !

இவனென்ன மனிதனா? ராட்சசனா?

அவன் வாகனத்தை நிறுத்தியதே அந்த மருத்துவமனையில் தான்.

அதி நவீன மருத்துவமனை… மருத்துவ ஆராய்ச்சிக்காக தற்போது புகழடைந்து கொண்டிருந்தது.

தரையில் முகம் பார்க்கலாம் என்பது போன்ற செழிப்பு!

நேராக சேர்மன் அறைக்கு சென்றவன், சோபாவில் அவளை அமர செய்துவிட்டு, இன்டர்காமை எடுத்து,

“இளங்கவி… பேப்பர்ஸ் ரெடியா?” என்று கேட்க,

“ரெடி சர்…”

“ஓகே… விஜய் இருக்காரா?”

“எஸ் சர்…”

“ஓகே… கம் வித் விஜய்…”

இளங்கவி உள்ளே வர ஒரு நிமிடமாகியது. உடன் விஜய்யும்.

மகாவை கண்ட விஜய்யின் முகத்தில் தவுசன்ட் வாட்ஸ் வெளிச்சம்! அவனது மனதுக்குள் அத்தனை மகிழ்ச்சி பிளஸ் நிம்மதி. அது அவனது முகத்தில் வெளிப்படையாக தெரிந்தது. கண்களோரம் மெலிதாக நீர் கோர்த்தது. அதுவரை எதையோ இழந்தது போல கண்களில் கருவளையம் சூழ்ந்து, நான்கு நாள் தாடியோடு பார்க்கவே பரிதாபமாக இருந்தவன், இப்போது சந்தோஷமாக,

“பாஸ்…” என்றழைக்க, அவனை பார்த்து புன்னகைத்தான் ஷ்யாம்.

“கார்த்திக் ரொம்ப கஷ்டபட்டுட்டாரா?” இளங்கவி கொடுத்த பைலை பார்வையிட்டுக் கொண்டே இவனிடம் கேட்க,

விஜய் மெளனமாக இருந்தான்.

படித்துப் பார்த்துவிட்டு அனைத்து பேப்பர்களிலும் கையெழுத்திட்டவன், இளங்கவியிடமே கொடுத்து,

“ப்ராசஸ் பண்ண ஆரம்பிச்சுடு கவி…” என்று முடித்து விட்டு, இன்னொரு கற்றை காகிதத்தை எடுத்துப் பார்த்தான்.

அது கார்த்திக் சம்பந்தப்பட்ட கடன் ஒப்பந்தங்கள்!

“பணம் வந்தாச்சுல்ல கவி?” என்று நிமிர்ந்து இளங்கவியிடம் கேட்க,

“எஸ் சர்… செட்டில் பண்ணிட்டாங்க…” என்று கூற, விஜய் அதற்கு ஆமோதிப்பாய் தலையாட்டினான்.

நிமிர்ந்து மகாவை பார்த்தவன், அவளை பார்த்தவாறே அந்த ஒப்பந்தங்களில் கோடிழுக்க துவங்கினான்.

அந்த ஒப்பந்தங்கள் காலாவதி ஆனதற்கான பத்திரங்களில் கையெழுத்திட்டு, அதை இளங்கவியிடம் கொடுத்தவன், விஜய்யிடம் திரும்பி,

“மேடமை கொண்டு போய் அவங்க வீட்ல விட்டுடு விஜி…” என்றவன், இளங்கவியிடம் திரும்பி, “விஜி சர் கூட போய், அங்க கார்த்திக் சர் கிட்ட கொடுத்துடு கவி…” என்று முடிக்க, விஜய்யின் முகத்தில் மெல்லிய அதிர்ச்சி.

பைனான்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்தையும் இத்தனை நாட்களாக ஒற்றை ஆளாக விஜயன் மட்டுமே பார்த்து வந்தான். இளங்கவி உள்ளே நுழைந்ததில்லை. ஆனால் இப்போது இளங்கவியை உள்ளே கொண்டு வரும் ஷ்யாமின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை அறியாதவனல்ல விஜய்.

கட்டம் கட்டப்பட்டு விட்டோம் என்பது புரிந்தது.

அனைத்தையும் மெளனமாக பார்த்துக் கொண்டிருந்தாள் மஹா. இன்னும் சில நிமிடங்களில் கிளம்பியாக வேண்டும். நான்கு நாட்களாக சண்டையிட்டு, சிரித்து, அழ வைத்து, அழுது, புலம்பி, கடைசியாக முத்தமிட்டு என்று அவர்களுக்கிடையில் நடந்த ஒவ்வொன்றையும் மனக் கண்ணில் ஓட்டிப் பார்த்தாள்.

எப்படி பார்த்தாலும் இந்த நான்கு நாள் அனுபவத்தை திரும்ப பெற முடியாது என்று நினைத்த போது மனம் கனத்தது.

மஹாவை ஆழ்ந்து பார்த்தான் ஷ்யாம். அதே நேரத்தில் விஜய்யும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“மகாலக்ஷ்மி…” என்று ஷ்யாம் அழைத்தபோது வேறு யாரையோ அழைக்கிறானோ என்று தோன்றியது.

நிமிர்ந்து அவனது கண்களை பார்த்தாள்.

“சாரி ஃபார் த இன்கன்வீனியன்ஸ்…” அமர்த்தலான குரலில் கூறியவனை நம்ப முடியவில்லை. நான்கு நாட்களாக பார்த்த ஷ்யாம் இவனல்ல!

எதுவும் பேசாமல் அவனருகில் வந்தவள்,

“நான் என்னோட ஃப்ரெண்டை மிஸ் பண்ணுவேன்…” என்று மிகவும் சிறிய குரலில் கூற,

“ஹிப்போக்ரெட்…” என்று ஷ்யாம் புன்னகைக்க, அதை கேட்டவளின் கண்களில் நீரின் பளபளப்பு!

பார்த்துக் கொண்டிருந்த விஜிக்கு ஏதோ புரிவது போலும் இருக்க, புரியாமலும் இருந்தது.

விதி தனது கண்ணாமூச்சியை துவங்கியிருந்தது!

முதல் பாகம் முடிந்தது

comments