Kodimalar 8

Kodimalar 8

சூரிய குடும்பத்தில் பூமி ஒரு கோளா?, இல்லை பூமியில், சூரியன் ஒரு நபரா?? என்பது போல் இருந்த உச்ச வெயில் நேரம்…

ரீசார்ஜ் கடையின் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு, அந்த சில்லென்ற காற்றை சுவாசிக்க ஆரம்பித்தனர், கிழவிகளும் தங்கராசுவும்….

மூவரும் ரீசார்ஜ் கடைக்குள் வருவதைப் பார்த்த மலர், அவர்கள் அருகில் வரும் வரை அமைதியாகவே இருந்தாள்.

வந்ததும்… “என்னாத்துக்கு இப்பம் இங்கன வந்திருக்கீக… அப்பமவே சொல்லிட்டேன்ல… மறுக்கா மறுக்கா சொல்ல முடியாது… இதுகணக்கா கரைச்சல் கொடுக்குற வேல வச்சுக்காதீக… இப்படி பொறவால வந்தீகனா…அம்புட்டுத்தான்… நீங்க என்னாத்துக்கு வந்தீகளோ, அது நடக்கவே நடக்காது…” என்று படபடவென்று பொறிந்து தள்ளிவிட்டாள்.

“அப்பம், இங்கன ரீசார்ஸ் பண்ண மாட்டீகளா…” என்று பாவமாக கேட்டார் பேச்சிக்கிழவி

” ரீசார்ஜா… ”

இவர்கள் வந்து வேலை இதுவா, நான்தான் வாயை விட்டுவிட்டேனா… – இது மலரின் மனக்குரல்.

“ம்ம்… ரீசார்ஸ்தான்… நீங்க என்னா நினைச்சீங்க… ”

தலையை ஒருமுறை உலுக்கிக் கொண்டு… “ஒன்னுமில்லை… நம்பர் சொல்லுங்க… ” என்றாள்.

“இவுக நெம்பருக்குத்தான்… ” என்று தங்கராசை காட்டினார்.

மாலையில் கோர்க்கப்படாத மலரைப் போல் இருந்தது, அவன் முகத்தில் வாட்டம்…

இருந்தும்… “யாருனாலும், நம்பர் சொல்லுங்க, ரீசார்ஜ் செய்றேன்… ” என்றாள்.

அதற்கு மேல் பொறுமைகாக்க பேச்சிக்கிழவிக்கு முடியவில்லை… பொங்கல் பானை, பொங்கி வருவது போல் பொங்கியெழுந்து விட்டார்…

“ஏன்ட்டி, இவன் நெம்பர் ஒனக்குத் தெரியாதா…”

“இவுகளே தெரியாது… அப்புறம் இவுக நம்பர் எப்படித் தெரியும்…” என்றாள், பொங்கல் வைத்த திருப்தியுடன்.

பேச்சிக்கிழவிக்கு, ஒருகணம் என்ன செய்வதென்றே தெரியவில்லை… யோசித்தார்…

நீ படிச்சிக்கிட்டிருக்க மேதைனா, நான் படிக்காதமேதை… – பேச்சிக்கிழவி மனக்குரல்.

” போஃன் கொடுலே தங்கராசு…”

“ஆச்சி என் நெம்பர்தான் ஒங்களுக்கு தெரியும்ல… ”

” கொடுலே…”

தங்கராசுவிடமிருந்து கைப்பேசியை வாங்கிய பேச்சிகிழவி, ஏதோ ஒன்று பண்ணி, சில பொத்தான்களை அழுத்தினார்… மலரின் கைபேசி ஒலித்தது…

மலரோ மாட்டிக்கொண்டது போல் ஆச்சியைப் பார்த்தாள்…

“ஒன் போஃன்ல, ஒரு நெம்பர் வருதுல… அந்த நெம்பருக்கு ரீசார்ஸ் பண்ணுட்டி… ”

பொங்கல் வைத்தாலும் சரி, உறியடித்தாலும் சரி… பானை நீதான் என்கின்ற ‘மொமென்ட்’…

இதற்குமேல் இவர்களை சமாளிப்பது கடினம் என்று நினைத்தாள்.

“ஆச்சி, இப்பம் ஒங்களுக்கு என்னா வேனும்…” என்றாள்.

“இதுகணக்கா, முதலய கேட்டிருக்கலாம்ல…”

“ஏலே ராசு, அத எடுத்து மேச மேல வைலே…”

தங்கராசு, ஒரு ரோசாப்பூவையும், வாழ்த்து அட்டையையும் எடுத்து மேஜையின் மீது வைத்தான்.

அவளுக்குப் புரிந்து போயிற்று… தங்கராசுவிற்கு, சமாதான தூதுவராக இரு கிழவிகளும் வந்திருக்கின்றனர் என்று…

” என்னா இது… “-தெரியாதது போல் மலர்.

“ஏய், நீதான் கேட்டியாம்ல… ”

“அப்பம் கேட்டேன்… இப்பம் வேண்டாம்…” என்று, மல்லிகை மொட்டு போல், முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டாள்.

“ஏன்ட்டி, இந்த அட்டூழியம் பண்ற…”

“நேத்து, இவுக செஞ்சது மட்டும் செரியா… எனக்கு எம்புட்டு அழுகாச்சியா வந்தது தெரியுமா…” என்று மலர் வாடியது.

“மலரு… மலரு… மன்னிச்சிடுங்க மலரு… மலரு ”

மலரின் கவலைச் சூட்டில் கரைகின்ற, கருப்பட்டியாய், தங்கராசு.

“லே நிறுத்திலே… ஏன்ட்டி நீ செஞ்சததான சொன்னான்… ஆனா, அவன் அம்மைக்கு எதுத்தால பேசறப்ப ஏதாவது சொன்னானா? ”

சரிதானே! அவள் அப்பா சொன்ன ஒரு வார்த்தைக்கே, கைநீட்டிக் கொண்டு வந்தவன், அவள் பேசிய அத்தனை பேச்சுக்களையும், கைகட்டி நின்று வேடிக்கைத்தானே பார்த்தான்…

மல்லிகை மொட்டு, மலர்ந்தது போல் இருந்தது மலரின் முகம்.

“யாராவது ரோசுகூட, சாரி கார்டு கொடுப்பாகளா…”

“அப்பம் இந்தக் காரடு வேண்டாமா…” -பேச்சிக்கிழவி.

“ம்கும்…” – மலர் தலையாட்டியது.

“நான், சொன்னேன்ல மலரு நல்லபுள்ள… மன்னிப்பெல்லாம் கேட்கனும்னு நினைக்காது… ”

மலரின் இதழ்கள், மேற்கும் கிழக்கும் சென்று கொண்டே, பேச்சுக்கிழவியை முறைத்தது…

“தங்கராசு, அந்த மன்னிப்பு காரட எடுத்திருலே..”

அவனும், சொன்ன சொல் தட்டாமல், மன்னிப்பு அட்டையை எடுத்தான்.

“இப்பம், அந்தக் காரட எடுத்து வையிலே…”

தன் சட்டைப்பையில் வைத்திருந்த, ஒரு அபிமான வாழ்த்து அட்டையை எடுத்தான்… கரைந்த கருப்பட்டியின் தித்திப்பாய், சிரித்துக் கொண்டே, அதை அவள் முன்னே வைத்தான்.

“இது என்னா… ஒங்களுக்கு என்னா வேனும்…” – தெரியாதது போல் மலர்.

“அந்தப் பய கூட பேசு மலரு…” – முத்துக்கிழவியின் கெஞ்சல்.

“இங்க பாருங்க ஆச்சி, நான் சொன்னது கணக்கா… பாஸாயிட்டு ஒங்க வீட்டு வாசல்ல வந்து நிப்பேன்… ”
“அப்பம், ஒனக்கு தங்கராசு மேல கோவம் இல்லே… ” – முத்துக்கிழவி.

” அது வேற… இது வேற… ”

“வாலே போலாம்… அவ பாஸாகட்டும்” என்று கிளம்பினார்கள்.

“ஆனா அதுல ஒரு சிக்க இருக்கு… ” என்று சொல்லி, அவர்களை நிறுத்தினாள்.

” என்னா சிக்க… ” – பேச்சிக்கிழவி.

“என்னய படிக்க வேண்டாம்னு, எங்க அப்பா சொல்லிட்டாக… ”

மலரின் படிப்பு மீது கொண்ட அதீத நம்பிக்கையால் பேச்சிக்கிழவி… “வாவ்… ” என்று ஆரம்பித்தவர்… மலரின் முகம் போன போக்கைப் பார்த்து… ” வொய்… ” என்று முடித்தார்.

“இது என்னா வார்த்தை… வாவொய்… ” – புரியாமல் மலர்.

” இது இன்ங்கிலீஷு… ”

” இங்க பாருக… எனக்கும் இங்கிலீஷ் தெரியும்… இது, அதுகணக்கா இல்லே… ”

“ஒனக்கு புரியாதுட்டி…”

“நானும் இங்கிலீஷ் படிச்சிருக்கேன்…
ஏமாத்தாதீக… ”

“நீ பிபிசி பார்த்திருக்கியா… ”

“இல்லே…”

“இது பிபிசி இன்ங்கிலீஷு… வாவொய்…. ஒன் புத்தகத்தில இருக்காது… ஒனக்கு புரியவும் செய்யாது… ”

“ஏன்ட்டி பேச்சி… சும்ம இருட்டி… நீ சொல்லு மலரு…” – முத்துக்கிழவி.

“எங்கப்பாக்கு என் மேல நம்பிக்கை இல்லையாம் முத்தாச்சி… அதே, பரிட்சை எழுத வேண்டாம்னு சொல்லிட்டாக… ” – உதட்டை சுழித்து, கண்ணை விரித்துக் கவலையுடன் மலர்.

“இப்பத்தான் ஒங்கப்பாவுக்கு அது புரிஞ்சதா… ” – பேச்சிக்கிழவி.

“பாருங்க முத்தாச்சி… எப்படி எடக்கா பேசறாகனு… பாஸாகாட்டி, ஒங்க வீட்டுக்கு வர மாட்டேன்…”

“செரிட்டி… ஒங்க அப்பாவுக்கு தெரியாம போய் பரீட்சை எழுதிட்டு வந்துரு… ” – முத்துக்கிழவி யோசனை.

“ஏற்கனவே எங்க அப்பாவுக்கு தெரியாம ஒரு காரியம் பண்ணிட்டேன்…. மறுக்கா அதுகணக்கா செய்ய மாட்டேன்… எங்கப்பா சொன்னாதான் பரிட்சை எழுதுவேன்… ”

” ஒன் பிரச்சனை என்னா மலரு… ” – பேச்சிக்கிழவி.

“ஒங்க வீட்லருந்து ஒரு ஆள் வந்து பேசினதாலதான, என்னால பரீட்சை எழுத முடியாம போச்சு… ”

” ஏய், என்னா ஆளு கீளுன்ன பேசுற… நீ, அவன் அம்மயப்பத்தி என்னா பேசினாலும் சும்ம நிக்கிறானுதான, இதுகணக்கா பேசிகிட்டு இருக்க…”

“பிரச்சனை என்னான்னு, வெரசா சொல்லு மலரு… ” – முத்துக்கிழவி.

“எங்கப்பாகிட்ட போய் பேசுங்க… பாஸாயிட்டு, ஒங்க வீடு மின்னாடி வந்து நிக்கிறேன்… ”

“அம்புட்டுதான… வாலே கிளம்பலாம்… ” என்று எழுந்து நடக்கத் தொடங்கினர்.

அபிமானத்தைப் பரிமாறிக் கொண்டது போல், அபிமான அட்டையையும் பரிமாறிக் கொள்ளலாம் என்று நினைத்தனர் அபிமானிகள்… ஆனால் அதில் சிறிது ஏமாற்றம்தான்!

“ஆச்சி, காரட கொடுத்திட்டு வந்திரட்டுமா…” – தன் தேவைக்காக வாய் திறந்தான் தங்கராசு.

“இருலே… அவளே வந்து வாங்குவா… அந்த வாய் எம்புட்டு பேசிருக்கு… காரட கேட்டு வாங்கத் தெரியாதா…”

“ஒரு நிமிஷம் அங்கனயே நிக்கிறீகளா…” என்று மலர் எழுந்து, அவர்கள் அருகில் சென்றாள்.

“என்னா வேனும்…” – பேச்சிக்கிழவி.

“கார்டு கொடுக்காம போறீகளே…”

தங்கராசு காதுக்குள், பேச்சிகிழவி ஏதோ ஓதியது. இரண்டு வாழ்த்து அட்டையையும் எடுத்தவன், இரு கைகளிலும் ஒவ்வொன்றாய் பிடித்தான்.

“ரெண்டு வேனாம், ஏதாவது ஒன்னு போதும் ஆச்சி… ”

“ஒனக்கு எது வேனுமோ, அத நீயே அந்தப் பயகிட்டருந்து எடுத்துக்கோ… எங்களுக்கு வாசிக்க தெரியாது… ”

“வாங்கறப்போ, எப்படி வாங்கனீக…”

“கடைக்காரன் ஒத்தாசை செஞ்சான்…”

மலரின் இதழ்கள், காற்றில் அசையும், விரிமலர் போல், அங்கும் இங்கும் போய்க் கொண்டு வந்தது…

” என்னா முணுமுணுக்க… ”

“ஏசிக்கிட்டு இருக்கேன்…”

” யாரட்டி… ”

” ம்ம்ம்.. ஒத்தாசை செஞ்சவுகள… ”

“ஒத்தாசை பண்றவன ஏசுறதுதான ஒங்க வீட்டு வழக்கம்…”

அபிமான வாழ்த்து அட்டையை, அவனிடமிருந்து வாங்கவில்லை, பிடுங்கிக் கொண்டாள்!

“நான் சொன்னேன்ல தங்கராசு, மலரு அந்தக் காரட எடுக்கும்னு… ”

“வாசிச்சு பார்க்காமலே, இப்பம் எப்படி தெரிஞ்சுச்சு …”

“அதுல ஆர்ட்டு போட்டுருக்கிட்டி… ”

“அது, ஆர்ட்டு இல்லே…ஹார்ட்டு… ” என்று சொன்னவள், தங்கராசுவின் சட்டைப் பையில் பேனாவைப் போல் சொருகி வைத்திருந்த ரோசாப்பூவை பார்த்தாள்…

“ராசு, ரோசு கொடுக்கிறியா… ” – மலரின் ரவுசு.

“என்னாட்டி மருவாதைய கம்மி பண்ற… ஒழுங்கா பேசுட்டி… ”

“செரி ஆச்சி… ராசு மாமா, ரோசு கொடுக்கிறீகளா…”

தினமும் தோட்டத்தில் விதவிதமான பூக்களுடன் பொழுதைக் கழிக்கின்றவன்தான்… ஆதலால் பூக்களின் மென்மை குணம் பற்றித் தெரியும்… ஆனால், இந்த மலர் மட்டும் எப்படி? இப்படி அடாவடித்தனம் செய்கிறது!!

“ஆல் தி பெஸ்ட்…” என்றான், ரோசாப்பூவை எடுத்து, மலரிடம் நீட்டி.

“மறுக்காவுமா… ”

“ஏம்லே, ரோச கொடுத்திட்டு, இப்படியா சொல்லுவாக… படத்ல இதுகணக்கா சொல்ல மாட்டாகளே… ” என்று இழுத்து யோசித்தார்.

” நல்லா கேளுங்க ஆச்சி… அந்த மூனு வார்த்தை சொல்லுங்க ராசு மாமா… ” என்று வெட்கி, நாணி, கோனி முயற்சித்தாள்.

” என்னா மூனு வார்த்தை… ” – இது முத்துக்கிழவி.

“நீ சும்ம இருட்டி முத்து… லே சொல்லுலே… ”

“இப்பம் வேண்டாம்… ” – இது தங்கராசு வெட்கம்.

“ஏம்லே, நீயெல்லாம் தளபதி ரசிகர் மன்றத் தலைவரு… பேசாம பதவிலருந்து விலகிருலே…”

“ஆச்சி சும்ம இருங்க… அந்தப் புள்ள படிச்சி, பாஸாகட்டும்… அப்பதான், நம்ம வீட்டுக்கு வருவாக… ”

“ராசு மாமா … நீங்க கவலைப்படாதீக, நான் நெசமா ஒங்க வீட்டு மின்னாடி வந்து நிப்பேன், ராசு மாமா… ” என்று, அவனை உரசி நின்று கொண்டு, குழைந்து கொஞ்சினாள்.

“அவனுக்கு கவல, நீ வீட்டு மின்னாடி வந்து நிப்பியானு இல்லே… பாஸாவீயான… ” என்று, அந்தக் கொஞ்சலில் கும்மியடித்தார் பேச்சிக்கிழவி.

“அப்படியா, ராசு மாமா… ” என்று விலகி நின்று கேட்டாள்.

” இல்லே மலரு… ” – ராசுவாகிப் போனவனின் நம்பிக்கை!!

“ராசு மாமா, நீங்க சொன்னாதான் படிப்பேன்… சொல்லாட்டி படிக்க மாட்டேன்… ”

“ஏன்ட்டி… பாஸாகாட்டி வீட்டுக்கு வரமாட்ட… ஒங்கப்பாகிட்ட பேசாட்டி பரிட்சை எழுது மாட்ட… இப்பம் இதுவுமா… ஒனக்கு நெசமா பரிட்சை எழுத ஆசை இருக்கா? இல்லையா? ”

“இருக்கு ஆச்சி… ” என்று சிரித்தாள்.

“மலரு, அப்பம் படிங்க… அந்தால மிச்சத்தை பார்க்கலாம்… செரியா… ” என்றவனுக்கு, மூன்று வார்த்தை, மிச்சமாகிப் போனது.

“அய்யோ… ராசு மாமா, நான் ஏற்கனவே இத ரெம்ப தடவ படிச்சிட்டேன்… ”

“கொறச்சலே இல்லையாட்டி… ” என்று பேச்சிக்கிழவி தலையில் அடித்துக் கொண்டார்.

“செத்த தேரம் பேசுங்க… நாங்க வெளில நிக்கிறோம்… “என்று முத்தாச்சிதான், பேச்சிகிழவியை அழைத்துக் கொண்டு வெளியேறினார்.

அவர்கள் போனவுடன்…

ராசு, மலரையே பார்த்துக் கொண்டிருந்தான்…

“கோவமா மலரு… ”

” இல்லேயே… ” என்றாள், குனிந்து அவன் வாங்கி வந்திருந்த வாழ்த்து அட்டையின் வார்த்தைகளை விரும்பி வாசித்தபடி.

அவள் நாடியைப் பிடித்து, மெல்ல தலையை நிமிர்த்தினாள். மலரின் கண்களில், லேசான ஈரங்கள்.

“என்னாச்சு மலரு…” என்ற கேட்ட அடுத்த நொடி, அவனைக் கட்டிக் கொண்டாள்.

“அப்பா பேசமாட்டிக்காக ராசு… எப்பவுமே இப்படி இருக்க மாட்டாரு… என்னால யாருகிட்டயும் பேசாம இருக்க முடியாது… இசக்கியும் இல்லே… ஒண்டியா(alone) இருக்கிற மாதிரி இருக்கு…” என்று புலம்பித் தள்ளினாள்.

“செரியாயிரும்… நான் போஃன் போட்டா எடுத்துப் பேசுங்க…” என்று, அவளைத் தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தினான்.

‘ஏன்’ – மலரின் பார்வை.

பின்னால் இருந்த கண்ணாடிக் கதவுகளைக் காட்டினான்.

“அது இப்பம்தான் தெரியுதா, ராசு மாமா…”

அசட்டுச் சிரிப்புகள்!!

*****
லுங்கியைத் தூக்கி கட்டிக் கொண்டே,
ரீசார்ஜ் கடையின் படிகளில் இறங்கி வந்தான், தங்கராசு.

” என்னாலே, ரெண்டு பேரும் ஒத்துப் போயாச்சா… ”

“ம்ம்ம்… ”

“இவளப் படிக்கவைக்கிறது நாமலே படிச்சிறலாம் போல… நீ என்னாலே சொல்ற… ”

“அடுத்து என்னா ஆச்சு செய்ய… ”

“வார்த்தைக் கூட படிக்கிறேன் சொல்ல மாட்டியாலே… ”

“அடுத்து என்னா செய்யனு, சொல்லு பேச்சி…”

“அடுத்து… ம்ம்ம்ம்… ரேஷன் கடைக்காரருக்கு காரடு அடிக்க வேண்டியதுதான்…”

error: Content is protected !!