Konjam vanjam kondenadi – 23(1)

Konjam vanjam kondenadi – 23(1)

வாக்கு

தந்தையை காணாமல் தேடி கொண்டிருந்த ஷிவானியின் மனமும் முகமும் கலக்கமுற்றது. அதோடு சிறுபிள்ளை போல அவள் கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தோட

அதனை தன் கைகுட்டையால் விடாமல் துடைத்து கொண்டே இருந்தாள் அவள்

“என்னாச்சு சிவானி… புகை பட்டு ரொம்ப கண் எரியுதோ?!” என்று குரு வினவ, “உம்ஹும்” என்றாள் விசும்பலோடு!

“அப்புறம் என்னல?!”

“டேடை காணோம்” என்றவள் சொன்ன நொடி அவனுக்கு கடுப்பானது.

“அவக என்ன குழந்தையா?… காணாம போக… இங்கனதான் எங்கேயாச்சும் இருப்பாங்க… சத்த கண்ணை துடைச்சிட்டு… தேம்பிறதை நிறுத்திறிகளா… பார்க்கிறவைங்கலாம் என்னையதான் தப்பா நினைப்பாங்க” என்றவன் அவளிடம் ரகசியமாய் சொல்ல

ஷிவானியின் தவிப்பு அடங்காவிட்டாலும் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு விசும்பலை சிரமப்பட்டு கட்டுப்படுத்தி கொண்டாள்.

அந்த சமயம் வேதா எப்படியோ தன் கணவனை தேடி கண்டறிந்துவிட்டாள். அவர் கோவிலின் பின்புறம் தன்னந்தனியே நின்று கொண்டிருக்க,

“இங்க என்ன பன்றீங்க?” என்ற கேள்வியோடு வேதா அவர் முன்னே வந்து நிற்க சபரி சிகரெட்டை புகைத்து கொண்டிருந்தார். அதனை பிடுங்கி வீசியவள்,

“வாணிம்மாவுக்கு சிகரெட் பிடிக்க மாட்டேன்னு நீங்க செஞ்சி கொடுத்த சத்தியம் மறந்து போச்சா?”என்று கோபமாய் வினவினார் வேதா.

“ஆமா மறந்து போச்சு… இப்போ என்னங்கிற?!” கடுகடுத்த முகத்தோடு அவர் கேட்க,

“இந்த விஷயம் அவளுக்கு தெரிஞ்சிதுன்னா ரொம்ப வருத்தப்படுவா” வேதா வேதனை நிரம்பிய குரலில் உரைத்தார்.

“இனிமே அவ என்னை பத்தியெல்லாம் கவலை படப் போறாளா என்ன?”  மகளின் மீதான உரிமை பறி போக போகிறதே என்ற ஏமாற்றத்தோடு சபரி சொல்ல,

“என்ன பேசிறோம்னு யோசிச்சிதான் பேசிறீங்களா?!” அதிர்ச்சியாய் கேட்டார் வேதா.

“இப்ப என்னடி வேணும் உனக்கு?” அவர் சத்தமிட,

“புரிஞ்சிக்கோங்க… பாதை பூஜை சடங்கிருக்கு… உங்க பொண்ணு வேற உங்களை காணாம தேடிட்டிருக்கா… இன்னைக்குன்னு பார்த்து நீங்க அவகிட்ட உங்க கோபத்தை காட்டி அழவைச்சிராதீங்க… உங்களை நான் கெஞ்சி கேட்கிறேன்… வேணா உங்க காலில் கூட விழறேன்… ப்ளீஸ் வாங்க” என்று தன்னால் முடிந்தளவு கெஞ்ச நெற்றியை தேய்த்து கொண்டு யோசித்தவர்,

“சரி போ வர்றேன்” என்று மனமிறங்கி மணமேடை நோக்கி நடந்தார்.

அந்த இடத்தை நெருங்க நெருங்க அவருக்குள் இருந்த கோபத்தீ விஸ்வரூபம் எடுத்து கொண்டிருந்தது.

ஷிவானியை குரு அருகில் அமர்ந்திருப்பதை பார்க்க அவரால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.

கிளியை வளர்த்து யாராவது பூனை கையில் கொடுப்பார்களா? அந்த எண்ணம்தான் அவருக்கு. தான் ஆசையாய் பொத்தி பொத்தி வளர்த்த மகளை இப்படி அனாமத்தாக தூக்கி கொடுக்கிறோமே!

அவரின் மனசாட்சி அவரை நிந்தித்து கொண்டிருக்க அந்த திருமணத்தை நிறுத்த முடியாத இயலாமையில் அவர் மனமெல்லாம் கொதிப்படைந்திருந்தது.

அவரின் மனகுமறலுக்கு முழுக்க முழுக்க காரணமானவள் ஷிவானிதான். அவள்தானே இந்த திருமணத்தை செய்து கொண்டே தீருவேன் என பிடிவாதம் பிடித்தாள்.

இதில் விதியின் சதியும் இருந்தது. இல்லையெனில் மலேசியா விமானம் ஏறுவதற்காக விமான நிலையம் வரைக்கும் போய்விட்டு அவர்கள் போகமுடியாமல் திருநெல்வேலிக்கே மீண்டும் திரும்புவார்களா?

நன்றாக பேசி நடமாடி கொண்டிருந்த வள்ளியம்மையின் உடல்நிலை தீடீரென்று மோசமாகுமா?!

இந்த விஷயத்தை கேள்விப்பட்டு சபரிக்கும் கொஞ்சம் அதிர்ச்சிதான். இப்படி ஒரு செய்தியை கேட்ட பின் எப்படி அந்த பயணத்தை மேற்கொள்ள முடியும்.

அதுவும் ஷிவானி ரொம்பவும் மனமுடைந்து போயிருக்க தன் கோபத்தை எல்லாம் ஒதுக்கிவிட்டு மனைவியையும் மகளையும் அழைத்து கொண்டு புறப்பட்டார்.

ஷிவானி மலேசியாவிற்கு போகவே விருப்பமில்லாமல்தான் புறப்பட்டாள். அவள் புறப்படுவதாக தெரிவித்த கணத்திலிருந்து குரு அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

போகும் போது கூட அவளை வழியனுப்ப வராமல் மெஸ்ஸில் வேலையிருப்பதாக சொல்லி தவிர்த்துவிட்டான்.

அவள் மனதளவில் ரொம்பவும் வேதனையுற்றிருந்தாள். இருந்தும் அவள் எல்லோரிடமும் இயல்பாகவே விடை பெற்று கொண்டு போக ஒருவர் விடாமல் எல்லோரும் கண்ணீர் வடித்தனர்.

ராகினியும் ஐஸ் மட்டும் ஓர் ஆழ்ந்த பெருமூச்சொன்றை வெளிவிட்டு நிம்மதியடைய,

ஷிவானி கடைசியாய் வள்ளியம்மையிடம் புறப்படும் தகவலை சொல்ல அவர் அவள் கரத்தை பிடித்து கொண்டு கண்ணீரில் கறைந்தார். மற்ற பேத்தி பெயரன்களை விட ஷிவானியின் மீது அவருக்கு அதீத பாசம்தான்.  அது ஏனோ. அவருக்குதான் தெரியும்.

‘இத்தனை நாளா உன்னை பார்க்கதான் தாயி உசுரை பிடிச்சி வைச்சிருந்தேன்’ என்றவர் சொன்ன வார்த்தை பொய்யில்லை. அதுதான் நிஜமாய் போனது கடைசியில்.

ஷிவானி வீட்டிற்கு வந்து சேர்ந்தவள்  வள்ளியம்மை படுத்த படுக்கையாய் இருப்பதை பார்த்து உடைந்து போனாள். அவரை சுற்றி பேத்தி பேரன்ங்கள் எல்லாம் சூழ்ந்திருக்க

“அம்மாட்சி… என்னாச்சு உங்களுக்கு?” என்று அழுகையோடு அவள் குரல்கொடுக்க வள்ளியம்மை விழிப்படையவில்லை.

அவளின் வெகுநேர அழைப்பும் கண்ணீரும் அவரை சுயநினைவுக்கு இழுத்துவர மெல்ல விழிகளை திறந்து பேத்தியை பார்த்த இன்ப அதிர்ச்சியில்,

“சிவானி” என்றவர் பூரிப்படைய,

“உங்களுக்கு ஒண்ணுமில்ல அம்மாட்சி… நீங்க சீக்கிரம் குணமாயிடுவீங்க” என்று நம்பிக்கை வார்த்தை உரைத்தாள்.

ஆனால் அவர் முகத்திலிருந்த சோர்வு  அவநம்பிக்கையை மட்டுமே தேக்கி வைத்திருந்தது.

வள்ளியம்மை எல்லார் மீதும் தன் பார்வையை ஓருமுறை வீசிவிட்டு குருவை அருகில் அழைக்க,

“என்ன அப்பத்தா?” என்றவன் அவர் தலையணை பக்கம் அமர்ந்தபடி தழுதழுத்த குரலில் வினவினான்.

“இந்த கிழவி உசுரை விடறதுக்கு முன்னாடி உன்னைய சிவானி கூட கல்யாண கோலத்துல பார்க்கனும்…  செய்வீகளா?” என்று திக்கிதிணறி கேட்க,

குரு பதிலேதும் பேசாமல் ஷிவானி முகத்தை பார்த்தான். அவள் அந்த வார்த்தைகளை கேட்டு அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.

அவள் மட்டுமா ? அங்கிருந்த எல்லோரும்தான். ராகினியும் கனகமும் பதறி போக, ஐஸ்ஸிற்கும் அமிர்தத்திற்கு அதே நிலைதான். இத்தனை நாள் காத்திருந்ததெல்லாம் வீண் என்று அவர்கள் மனமுடைந்திருக்க,

சபரிக்கு பிபி ஏகபோகமாய் ஏறி தலையெல்லாம் சுற்ற தொடங்கியிருந்தது.

தன் கோபத்தை பிராயத்தனப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தவர் தன் மனைவியின் கையை பிடித்து தரதரவென இழுத்து கொண்டு வெளியேறினார்.

அப்போது முருகவேலும் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, “உனக்கு ஒண்ணு ஆகாது ஆத்தா… முதல்ல ஆஸ்பத்திரி போய் உடம்பை தேத்திக்கிட்டு பிறவு மத்ததெல்லாம் பேசிக்கலாம்” என்க,

“இந்த வீட்டு வாசலை தாண்டிறது என் பிணமா மட்டும்தான் இருக்கும்ல” என்றவர் தீர்க்கமாய் உரைத்தார்.

“என்ன பேச்சு பேசுதீக?” என்று குரு பதறினான்.

“நான் பிழைக்க மாட்டேன்… என் சாவு நெருங்கிடுச்சு…கடைசி கடைசியா என் பேரன் பேத்தியை கல்யாண கோலத்துல பார்த்துப்புட்டன்னா நான் நிம்மதியா உசுரு வுட்டுபுடுவேன்… இல்லன்னா இந்த கட்டை வேவாது சொல்லிப்புட்டேன்” என்று தன் மகனை பார்த்து தடுமாற்றத்தோடு உரைக்க,

“ஆத்தா நீ பேசிறது நியாயமே இல்ல… குரு கல்யாணத்தை  பார்க்கனும்னு சொல்லுக… இப்பவே ஏற்பாடு பண்ணுதேன்… ஆனா சிவானி புள்ளய” என்றவர் தயங்கி தன் தாயை கெஞ்சலாய் பார்க்க,

வள்ளியம்மை முகத்தை மெல்ல ஷிவானி புறம் திருப்பினார். அவள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அமர்ந்திருக்க,

சிவானி முகவாயை எட்டி பிடித்தவர்,

“ஏன் தாயி… இந்த கெழவி ஆசைபடிறதை செய்ய மாட்டீகளா?” என்று விழியில் நீர்சூழ கேட்க,

“அம்மாட்சி” என்று வார்த்தையெல்லாம் குரல் வளைக்குள்ளேயே நின்று கொண்டு காற்று மட்டுமே வந்தது அவளுக்கு.

“குரு உன்னைய தங்கமா பார்த்துக்கிடுவான்… நீ அவனை கட்டிக்கிடுவே.” என்றவர் உரைக்க அவள் திருதிருவென விழித்தாள்.

அவர் மேலும், “கட்டிக்கிடுதேன்னு இந்த கெழுவிக்கு வாக்கு கொடுங்க” என்று தன் கரத்தை ஷிவானியிடம் நீட்ட அவளுக்கு கண்ணீர் பெருகி ஓடியது.

அவள் ஒன்றும் புரியாமல் விழிக்க  அங்கிருந்த யாரும் குறுக்கே பேசாமல் மௌனமாய் நின்றனர்.

‘இந்த கையாலம்தாம்ல நான் உன்னை முதல்முதல்  தூக்கிக்கிடுதேன்’ என்று வள்ளியம்மை அவள் பிறந்த தருவாயை சொன்ன நினைவு அவள் காதுகளில் ஓலிக்க, இப்போது அந்த கரம் அவளிடம் கேட்கும் வாக்கை எப்படி மறுக்க முடியும்.

“சரிங்க அம்மாட்சி… நான் கட்டிக்கிறேன்” என்று சொல்லி அவள் வாக்குறுதி கொடுக்க குரு அவளை ஆச்சர்யமாய் பார்த்திருந்தான்.

அங்கிருந்த எல்லோருமும் ஷிவானியை வியப்பாய் பார்க்க, சபரி அப்போது அங்கில்லை.

வள்ளியம்மை அதோடு விடவில்லை.

தன் மகன் முருகவேலை பார்த்து, “உடனே ஒரு நல்ல நாளா பார்த்து நம்ம ஐயனார் கோவில்ல அவக கல்யாணத்தை ஏற்பாடு பண்ணுவே” என்று தன் மனஎண்ணத்தை சொல்ல முருகவேல் அதிர்ந்தார்.

அவர் என்ன செய்வதென்று புரியாமல் அந்த அறையை விட்டு வெளியேற தங்கம் கணவன் பின்னோடு வந்து,

“அத்தை சொல்ற மாறி” என்றவர் பேசும் போது இடைமறித்தவர்,

“உனக்கும் அந்த கிழவி மாறி கூறுகெட்டு போச்சுதாவே… எப்படில உன் மருமவன் இதுக்கு ஒத்துப்பாக” என்க,

“அது சரிதான்” என்றவர் சுற்றும் முற்றும் பார்த்து,

“வேதாவையும் அவைகளையும் இங்கன காணோமே… எங்கே அவக?” என்று கேட்டார். அவர்கள் அங்கே இல்லைதான்.

வேதாவை இழுத்து கொண்டு கொள்ளை புற வாசலுக்கு போன சபரி அங்கே தன் மனைவியுடன் ஒரு உலக போரையே நடத்திவிட்டார்.

“இதுக்கும்  எனக்கு சத்தியமா சம்மந்தமில்ல ங்க” என்று கணவனிடம் இறங்கிய தொனியில் வேதா சொல்ல,

“சரி.. அப்படின்னா உடனே கிளம்பு… புறப்படுவோம்” என்று பணித்தார் சபரி.

வேதா தவிப்போடு, “எப்படிங்க?  என்னை மார் மேலயும் தோள் மேலயும் தூக்கி போட்டு வளர்த்தவங்க… அவங்க இப்படி இருக்கும் போது” என்று சொல்ல அவர் முகம் கடுகடுவென மாறியது.

“நீ எக்கேடு கெட்டோ போ… நான் என் பொண்ணை கூட்டிட்டு புறப்பிடிறேன்” என்று சொன்னவர் விறுவிறுவென நடந்து வள்ளியம்மை படுக்க வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்த மறுகணம்,

“வாணிம்மா எழுந்திரு… புறப்படலாம்” என்றார் அதிகார தொனியில்.

“இல்ல டாடி… அ ம் மா ட் சி” என்றவள் தயங்க,

“இங்க இத்தனை பேர் இருக்காங்க… அவங்கெல்லாம் அம்மாட்சியை பார்த்துக்க மாட்டாங்களா என்ன? நீ வா போலாம்” என்றழைக்க,

“அதில்ல டேட்… நான் சொல்ல வர்றதை கொஞ்சம் கேளுங்களேன்” என்று தவிப்பாய் அவள் உரைக்க சுற்றியிருந்தவர்கள் யாரும் அப்பா மகளின் உரையாடலில் கலந்து கொள்ளாமல் வேடிக்கை மட்டும் பார்த்தனர்.

“இப்போ நீ வர்ற போறியா இல்லையா?” சபரியின் குரல் கர்ஜனனாய் வெளி வர,

அவள் தலைகவிழ்ந்தபடி, “சாரி டேட்… குரு மாம்ஸை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அம்மாட்சிக்கு ப்ராமிஸ் பண்ணிட்டேன்” என்று அழுகை தொனியில் சொல்ல சபரியின் தலையில் இடியேயிறங்கிறது.

சட்டென்று தன் பார்வையை குருவின் புறம் திருப்பியவர் அவன் சட்டையை கொத்தாய் பிடித்து,

“இதெல்லாம் உன் வேலையா… என் பொண்ணை கட்டிக்க இப்படியெல்லாம் டிராமா பண்ணிட்டிருக்கியா?” என்று கேட்டு முறைக்க,

“டிராமா கீமானெல்லாம் சொல்ற வேலை வைச்சுக்காதீங்க” என்றவன் பதிலுக்கு முறைத்தான்.

அங்கே வந்த முருகவேல் சபரியை தள்ளி நிறுத்தி, “தம்பி… எதுவாயிருந்தாலும் பொறுமையா வெளியே போய் பேசிக்கிடலாம்…  இங்கன வேண்டாம்” என்க,

சபரி அடிப்பட்ட சிங்கம் போல் உறுமியபடி வெளியே வர, மற்றவர்களும் அவர்களோடு சேர்ந்து அந்த அறையை விட்டு வெளியேறினர்.

error: Content is protected !!