Konjam vanjam kondenadi – 32(final)

Konjam vanjam kondenadi – 32(final)

வானவில்

கோவில் பூசாரி சிறப்பு பூஜையை முடித்து கொண்டு ஷிவானி குருவை மட்டும் மும்முறை பிரகாரத்தை சுற்றி வர சொல்ல,

“உம்ஹும்… எனக்கு கால் சுடுது” என்று ஷிவானி முதல் பாதி சுற்றிலேயே துவண்டதும்,

குரு இடம் பொருள் ஏவல் என்று இதில் எதை பற்றியும் கவலையில்லாமல் அவளை தன்கரத்தில் அள்ளி கொண்டான்.

ஷிவானி மிரட்சியில், “விடுங்க மாம்ஸ்” என்று தத்தளிக்க,

“நீதான்ல கால் சுடுதுன்னு சொன்னவ” என்றான்.

“அய்யோ விடுங்க மாம்ஸ்… எல்லோரும் பார்க்கிறாங்க” என்றவள் நாணப்பட, அவனா விடுவான்!

எதிலும் அவன் பிடித்த பிடி உடும்பு பிடிதான்! அத்தனை பிடிவாதக்காரன்!

அவள் கெஞ்சி பார்த்தாள். கோப்பட்டு பார்த்தாள். அழுதும் கூட பார்த்தாள்.

ஆனால் அவன் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. இந்த காட்சியை பார்த்த வேதாவிற்கு சிரிப்பு வர, மகளின் தவிப்பை பார்த்து சபரிக்கு கோபம் வருவது நியாயம்தானே!

ஆனால் யார் அவனை கேள்வி கேட்பது. சிலர் முகம் சுளிக்க, சிலர் வெட்கப்பட என எல்லோருக்கும் அவரவர்களின் தனிப்பட்ட எண்ணங்கள். ஆனால் குருவிற்கு அதை பற்றியெல்லாம் துளியும் கவலையில்லை. அவன் தன் மனைவியின் நலத்தை பற்றி மட்டுமே கருத்தில் கொண்டான்.

ஷிவானியின் தவிப்பும் வெட்கமும் கூட இரண்டாம்பட்சம்தான். ஆதலாலயே கடைசி சுற்று வரை அவளை தூக்கி சுமந்து கொண்டு வந்து இறக்கிவிட,

அவள் முகமெல்லாம் கோபத்தில் சிவந்திருந்தது. அவள் முறைப்பாய் அவனை பார்க்க,

“அந்த திராட்சை கண்ணால என்னை அப்படி பார்க்காதடி” என்றவன் ஹஸ்கி குரலில் அவள் காதோரம் சொல்ல,

அதற்கு மேல் அவன் அருகில் நிற்க கூடாதென விறுவிறுவென முன்னேறி சென்று தன் தந்தையின் கரத்தை பற்றி கொண்டு அவனை பார்த்து ஒழுங்கெடுத்தாள்.

‘நீ என்கிட்ட திரும்பி வந்துதான்டி ஆகனும்’ என்றவன் சமிஞ்சை செய்ய,

மீண்டும் ஒரு முறை ஒழுங்கெடுத்துவிட்டு திரும்பி கொண்டாள்.

அப்போது குருவின் அருகில் வந்த தயா, “நீ செய்ற அலப்பாறை அந்த ஐயனாருக்கே பொறுக்காதுடா” என்றதும்,

“இப்ப என்ன செஞ்சிப்புட்டாக?” என்று எகத்தாளமாய் கேட்டான்.

“புதுசா கல்யாணம் ஆனா கூட… இப்படியாம்ல… கொஞ்சங் கூட வெட்கமே இல்லாம… தூக்கிக்கிட்டு சுத்துவ”

“இதுல என்ன மாமா வெட்கம்… என் பெண்ஜாதிக்கு கால் சுடுதுன்னு சொன்னா… தூக்கிக்கிட்டேன்… நீங்க வேணா உங்க பெண்ஜாதிக்கு கால் சுடுதுன்னா கேட்டு நீங்களும் தூக்கிக்கிடுங்க” என்றவன் சொன்ன நொடி தயா அப்படியே நெஞ்சை பிடித்து கொண்டான். அதிர்ச்சியாகிறாராம்!

“டே… நான் நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்கலயா ?! அவ வேணா என்னைய தூக்கிக்கிடலாம்… நான் எப்படிறா அவளை தூக்கிக்கிடுவேன்” என்றவன்  சொல்லவும் குரு சத்தமாய் சிரித்துவிட்டு தன் தமக்கையை சுற்றி தேடியவன்,

“யக்கோவ்… உம்ம வூட்டுக்கார்” என்றவன் ஏதோ சொல்ல யத்தனிக்க தயா குருவின் வாயை பொத்தி அவனை அந்த இடம் விட்டு அழைத்து சென்றுவிட்டான்.

இவர்களின் அட்டகாசம் ஒரு புறம் இருக்க, ராகினியின் மனதாங்கல் தீரவேயில்லை. அவள் முகமெல்லாம் இன்னும் பொறாமையால் வெந்து கொண்டிருந்தது.

“கைகாரி… வந்த ஒருவாரத்தில என் மாமனை வளைச்சிபோட்டுட்டா” என்றவள் கடுப்போடு மைன்ட் வாய்ஸை கொஞ்சம் சத்தமாய் சொல்லிவிட,

“யாரு யாரை வளைச்சிபோட்டது?” என்று பின்னோடு வந்து கேட்டான் மோகன்!

அதிர்ச்சியாய் திரும்பியவள் மோகனை பார்த்துவிட்டு அலட்சியமான பார்வையோடு திரும்பி கொள்ள அவன் மீண்டும் அதே கேள்வியை கேட்டான்.

“ஹ்ம்ம்… உங்க மாமன் பொண்ணுதான்… என் மாமனை வளைச்சிபோட்டுட்டா?” என்றவள் கடுகடுத்து சொல்ல,

“ஹெலோ!  ஷிவானிக்கு அப்படியெல்லாம் செய்ய தெரியாது… எல்லாத்துக்கு காரணம் உங்க மாமன்தான்” என்றான்.

“என் மாமன் அப்படியெல்லாம் கிடையாது… அந்த ஷிவானிதான்”

“உன் மாமன்தான்”

“ஷிவானிதான்”

இருவரும் இப்படியே மாறி மாறி சொல்லி கொண்டு முறைத்து கொள்ள

மோகன் சற்று இறங்கி வந்து,

“சரி விடு… யாரா இருந்தா என்ன?  அவங்க இரண்டு பேர்தான் சேரனும்னு விதி இருக்கு” என்றான்.

ராகினி முகத்தை திருப்பி கொண்டு முன்னேறி நடக்க,

“ஆமா… நீ சென்னையில எந்த காலேஜ்?” மோகன் கேட்கவும் திரும்பி நின்று அவனை ஏற இறங்க பார்த்தவள்,

“எதுக்கு?” என்றாள்.

“சும்மா தெரிஞ்சிக்கலாம்னு” என்று அசடு வழிய அவன் புன்னகையை உதிர்க்க,

“தெரிஞ்சிக்க வேண்டாம்” என்று மீண்டும் திரும்பி அவள் நடக்க,

“ஏய் நில்லு… நான் உன்னைய எங்கேயோ பார்த்திருக்கேன்” என்று வழிமறித்தான். 

“இதெல்லாம் செம பழைய டெக்னிக்… வேற புதுசா ஏதாச்சும் யோசி” என்று அவள் எரிச்சலாய் சொல்லிவிட்டு செல்ல,

“காலேஜை கட் அடிச்சிட்டு நீ அபிராமி மாலில் படம் பார்க்க வந்ததானே!” என்றவன் சொன்ன நொடி

ராகினி பதறி கொண்டு அவன் அருகில் வந்தவள்,

“ஷ்ஷ்ஷ்ஷ்… அம்மாவுக்கு தெரிஞ்சா என்னை வெட்டி போட்டிருவா” என்றாள்.

“அப்படியா சேதி?” என்றவன், “அத்தை” என்று குரல் கொடுத்து கொண்டே கனகத்தை நோக்கி செல்ல அவன் கரத்தை பிடித்து கொண்டு இழுத்து,

“யாரு உனக்கு அத்தை?” என்று கேட்டாள்.

“உங்க அம்மா எனக்கு அத்தைதானே ராகினி” என்றவன் முறுவலித்து சொல்லை அவள் தலையிலடித்து கொண்டாள்.

‘சரியான கிறுக்குகிட்ட மாட்டிக்கிட்டேன்’ என்றவள் எண்ணி கொண்டிருக்க,

“ஆமா! உன் போஃன் நம்பர் என்ன?” என்று தன் பேசியை கையில் தயார் நிலையில் வைத்து கொண்டு அவன் கேட்க,

“அதெல்லாம் சொல்ல முடியாது” என்றாள் முறைப்போடு!

“சரி… சொல்ல வேண்டாம்… நான் அத்தைகிட்ட கேட்டுக்கிறேன்” என்றவன் சொல்லி செல்ல பார்க்க அவனை தடுத்தபடி நின்று கொண்டவள்,

“சொல்லி தொலைக்கிறேன்” என்று எரிச்சலோடு தன் பேசியின் எண்ணை சொல்லிவிட்டாள்.

மோகன் ஒரு வாரமாய் அவளை சென்னையில் பின்தொடர்ந்து அவளின் அனைத்து செய்கையையும் உளவறிந்தவன் கிடைத்த வாய்ப்பை செவ்வனே பயண்படுத்தி கொண்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.

நல்ல வேளையாக குரு இந்த காட்சியை பார்க்கவில்லை. இல்லையென்றால் அவனுக்கு கச்சேரி வைத்திருப்பான்.

குரு அந்த சமயம் பார்த்து கோவிலின் பின்புறம் இருந்தான். அங்கிருந்து சற்று தொலைவில் இருந்து மரத்தின் பின்னே புகையாய் கிளம்ப என்ன ஏதென்று பார்க்க போனவன் சிலையாய் சமைந்துவிட்டான்.

“என்ன பன்றீங்க மாமா?” என்றவன் கேட்க சபரி அவசரமாய் தன் சிகரெட்டை காலில் போட்டு மிதிக்க,

“இப்பதானே உங்க உடம்பு சரியானுச்சு… அதுக்குள்ள இதெல்லாம் என்ன?!” என்று இறுகிய பார்வையோடு கேட்க,

“எப்பையாச்சும்தான் பிடிப்பேன்” என்று அலட்டி கொள்ளாமல் பார்வையை திருப்பி கொண்டார்.

“எப்பையாச்சுன்னாலும் உடம்புக்கு கெடுதலாக்கும்” என்றவன் சொல்ல,

“என்ன நீ? எப்பப்பாரு எனக்கு அட்வைஸ் பன்ற… என்ன? நான் என் பொண்ணை உனக்கு கட்டிக்கொடுத்திட்டேன்னு என்னைய ஏய்ச்சி மேய்க்கலாம்னு பார்க்கிறியா? அந்த கதையே நடக்காது… நான் எல்லாத்துக்கும் முன்னாடி உன் அக்கா வீட்டுக்காரன்… அந்த மரியாதை மனசில இருக்கட்டும்” என்றவர் படபடப்பாய் பொறிய,

“அதேதான் மாமோய்… நீங்க என் அக்காவூட்டுக்காரு… அந்த அக்கறையிலதான் நானும் சொல்லுதேன்” என்றான்.

“உன் அக்கறையும் வேணாம்… சக்கரையும் வேணாம்… போ” என்று சபரி சொல்லி கொண்டிருக்கும் போதே ஷிவானி அவர்களை இருவரையும் பார்த்துவிட்டு அங்கே வர,

சபரி வேகவேகமாய் தன் வாயின் புகையை விரட்டியடித்து கொண்டிருந்தார். அப்போது குரு குழப்பமாய் திரும்பி பார்த்து ஷிவானியின் வருகையை நோக்க,

அவள் அவர்கள் இருவரையும் ஆச்சர்யமாய் பார்த்தவள்,

“இரண்டு பேரும் சாப்பிட வராம இங்க என்ன பன்றீங்க?” என்றாள்.

“அது வந்து” என்று குரு ஆரம்பிக்க,

“நானும் குருவும் பேசிக்கிட்டிருந்தோம்” என்று சபரி முந்தியடித்து கொண்டார்.

“அப்படியா என்ன?!” குரு ஆச்சர்யமாய் கேட்க,

“அப்படிதான்” என்றவர் அவன் கரத்தை அழுத்த குருவிற்கு புரிந்து போனது.

சபரி மேலும், “நீ முன்னாடி போ… நாங்க சாப்பிட வரோம்” என்றதும் அவள் புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.

இவர்கள் இருவரும் பேசிதானே கொண்டாரா இல்லை சண்டையிட்டு கொண்டனரா என்றவள் யோசிக்க,

“ஷிவானி” என்று குரு ஏதோ சொல்ல வாயை எடுக்க சபரி பதட்டத்தோடு,

“என்ன வாணிம்மா? அப்படியே நிற்கிற… குருவுக்கு பசிக்குதாம்… போய் எல்லாத்தையும் எடுத்து வை” என்றார்.

“சரி” என்று குழப்பத்தோடு அவள் திரும்பி செல்ல,

சபரி குரலை தாழ்த்தி,

“நான் சிகரெட் பிடிச்ச விஷயத்தை அவகிட்ட சொல்லி வைச்சிராதே குரு… அப்புறம் அவ்வளவுதான்” என்று பம்மினார்.

குரு முறுவலித்து,

“சொல்லாம இருக்கனும்னா நீங்க பதிலுக்கு ஏதாச்சும் செய்யனுமே மாமோய்” என்றவன் சொல்ல,

“என் நேரம்” என்றவர் சொல்லிவிட்டு, “சரி என்ன?” என்று விறைப்பாய் கேட்க,

“பெரிசா ஒண்ணுமில்ல… என்னைய மருமவனேன்னு உங்க வாயால கூப்பிடுங்க” என்றான்.

சபரி சற்றுநேரம் அவனை ஆழ்ந்து பார்த்தவர்,

“நான் அப்படி கூப்பிடலன்னாலும் என் மருமகனா நீ என் மனசில எப்பவோ நின்னுட்ட குரு… ஒருதடவை என்ன… இனிமே அப்படியே கூப்பிடிறேன் மருமகனே” என்க, குரு முகம் மலர்ந்தான்.

பின் அவர்கள் இருவரும் நெருக்கமாய் பேசி கொண்டு வர எல்லோருமே அந்த காட்சியை பார்த்து வியப்பில் மூழ்கி போயினர். அதோடு குருவை சபரி மருமகனே என்று விளிப்பதை பார்த்து யார் முகத்திலும் ஈயாடவில்லை!

இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்ததென்று எல்லோருக்குள்ளும் கேள்வி எழுந்து அவர்கள் புரியாமல் பார்க்க, அந்த ரகசியம் அவர்களுக்கு மட்டுமே புரியும்.

வேதாவிற்கு அளவில்லாமல் ஆனந்தம் பெருகி விழியோரம் நீர் கசிந்திட,

உறவுகளின் அந்த சங்கமம் வானில் திடீரென்று தோன்றிய வானிவில் போல் அத்தனை அழகாய் அமைந்தது.

****

அன்று சபரியும் வேதாவும் மலேசியாவிற்கு புறப்படுவதற்காக பெட்டியெல்லாம் தயார் செய்து கொண்டு வாசலில் நிற்க,

ஷிவானி கண்ணீரால் நனைந்து போயிருந்தாள். அந்த பிரிவில் இருந்து அவளை எப்படி மீட்டெடுப்போம் என்று குருவுக்கு அச்சம் தொற்றி கொள்ள, சபரிக்கு அத்தகைய பயமோ கவலையோ இல்லை.

குருவின் மீது அவருக்கு அபரிமிதமாய் நம்பிக்கை பிறந்திருந்தது. தான் விரும்பி நேசித்த ஒரு பொருளை தன்னை விடவும் வேறு ஒருவர் கண்ணும் கருத்துமாய் பார்த்து கொள்வார் எனும் போது அதை நாம் தாரை வார்ப்பதில் தவறில்லையே!

அந்த மனமுதிர்ச்சி அப்போது சபரியை எட்டியிருக்க தனக்குள் இருந்த வேதனையை உள்ளூர விழுங்கி கொண்டிருந்தார். தான் அழுதால் தன் மகளின் அழுகையும் அதிகமாகும். ஆனால் அந்த கட்டுபாட்டை வேதாவால் கடைபிடிக்க முடியவில்லை. தாய்மையின் தவிப்பு  அது. மகள், தாய் என இருவரையும் பிரியும் துக்கம் அவர் தொண்டையை அடைக்க,

குருவின் விழிகளிலும் நீர் கசிந்தது.

“கவலைபடாதீங்க க்கா… நான் ஷிவானியை மலேசியாவுக்கு கூட்டிட்டு வர்றேன்” என்க,

“ஷிவானியை மட்டுமில்ல… அத்தை மாமா…  அக்கா… எல்லாரையும் கூட்டிட்டு வரனும்” என்றார்.

வேதா ஆச்சர்யம் பொங்க தன் கணவனை பார்க்க, குருவும் வியப்பாகதான் அவரை பதிலின்றி பார்த்தான்.

“என்ன மருமகனே? கூட்டிட்ரு வருவ இல்ல”

“ஆன் கூட்டிட்டு வந்திடுதேன்” என்று குரு தலையசைக்க தன் மகளின் புறம் திரும்பியவர்,

“வாணிம்மா” என்றழைக்க அவள் அவரை அணைத்து கொண்டு அழ தொடங்கினாள்.

“ஆழாதே வாணிம்மா!  நான் ட்வைஸ டேயாச்சும் ஸ்கைப்ல உன்கிட்ட பேசிடுவேன்” என்றவர் சொல்ல அவள் மனம் அந்த வார்த்தைகளால் ஆறுதல் பெறவில்லைதான். இருப்பினும் அவர்கள் புறப்படும் போது இப்படி அழுது கொண்டு நிற்பது உசிதமல்ல என்று தன்னைத்தானே தேற்றி கொண்டு கண்ணீரை துடைத்து கொள்ள,

சபரி தன் மகளின் நெற்றியை வருடி முத்தமிட்டார்.

மகளை பெற்ற தந்தைகளுக்கு மட்டும்தான் தெரியும். முத்தம் காமத்தில் சேர்ந்ததல்ல என்று!

இருவரும் புறப்பட தயாராக காரை நெருங்கிய சபரி,

“வர்றேன் மருமகனே… வர்றேன் மாமா வர்றேன் அத்தை… போயிட்டு வர்றேன் ஆச்சி… உடம்பை பார்த்துக்கோங்க!” என்று எல்லோரிடமும் விடை பெற்று கொள்ள,

அந்த பிரிவின் வேதனையை விட  தன் கணவனின் மனமாற்றம் வேதாவிற்கு களிப்புற செய்ய அவரும் தன் பங்குக்கு எல்லோரிடமும் விடைபெற்று கொண்டு புறப்பட்டார்.

கார் அந்த இடத்தை விட்டு கண்ணுக்கு மறைவாய் சென்ற மறுகணம் ஷிவானி தன் கண்ணீரை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் அறைக்குள் சென்று தலையணையில் முகம் புதைத்து வெதும்ப ஆரம்பித்தாள்.

தங்கம் முருகவேல் வள்ளியம்மை என அனைவரும் எத்தனையோ வழியில் அவளிடம் பேசி சமாதானம் செய்ய அவள் அமைதிபெறவேயில்லை. அவர்கள் இறுதியாய் குருவிடமே அந்த பொறுப்பை விட்டு செல்ல,

அவனுக்குமே அவளை தேற்றுவது பெரும் பாடாய் இருந்தது.

அவனுமே தன் தமக்கைகளுக்கு திருமணம் முடித்து புகுந்துவீட்டிற்கு அனுப்பும் வேதனை நிறைந்த பிரிவுகளை உணர்வுபூர்வமாய் அனுபவித்திருக்கிறான்.

ஆதலால் ஷிவானியின் வலியை அவனால் நன்காகவே புரிந்து கொள்ள முடிந்தது. அவள் தலையை வருடி கொடுத்து துணையாய் அவன் அருகிலேயே அமர்ந்து கொள்ள,

அப்போது சுப்பு அவனை பார்க்க வீட்டுக்கு வர அவளை விடுத்து வெளியே சென்றவன் அன்று தான் மெஸ்ஸிற்கு வரவில்லை என்ற தகவலை உரைத்து கொண்டிருந்தான்.

அதே நேரம் அவர்கள் இருவரும் பேசி கொண்டிருப்பதை கண்டும் காணாமல் பார்த்துவிட்டு ஐஸ் அடுக்களைக்குள் செல்ல தங்கம் அவள் முகத்தை ஏறிட்டு,

“என்னடி? பருப்பு வேணும்… சீனி வேணும்னு கேட்டுட்டு வந்திட்டு கிடப்ப… இப்ப ஆளையே காணோம்” என்றார்.

“ம்க்கும்” என்று முகத்தை சுளிக்கியவள்,

“அம்மா இதை கொடுக்க சொன்னாங்க” என்று அடுக்களை மேடையில் அந்த டம்ளரை வைக்க,

“என்னடி இது?!” என்று புரியாமல் கேட்டார் தங்கம்!

“ஆன்… சீனி… போன மாசம் வாங்கனோம்ல… அதை கொடுக்க சொல்லி அம்மா கொடுத்தனுப்பிச்சாக” என்று சொல்ல, “இதென்னடி உலக அதிசயமா இருக்கு” என்றவர் அதிசயிக்கும் போதே வெளியேறி விட்டாள் ஐஸ்!

அவள் பார்வை சுற்றும் முற்றும் அலைபாய லேசாய் ஏமாற்றத்தோடு வாசல் புறம் வர சுப்பு புறப்படுவதற்காக பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

அவள் வாசலில் வந்து நின்று அவனை பார்க்க அவனோ திரும்பி கூட பார்க்காமல் பைக்கை ஸ்டார்ட் செய்ய,

“என்ன? கண்டும் காணாம போறீக?!” என்று ஐஸ்ஸே வலிய சென்று அவனிடம் பேசினாள்.

“பார்த்து பேசி என்னவாக போகுதாம்… உமக்குதான் உன் மாமனை மாறி ஓசரமா அருவா மீசை கணக்கா வைச்சிட்டிருக்கவன்தான் மாப்பிள்ளையா வேணும்னு சொல்லிப்புட்டீக இல்ல” என்று அவள் புறம் தன் பார்வையை திருப்பாமலே அவன் சொல்ல

அவள் முகம் சுருங்கி போனது.

“அதுக்குதான் என்கிட்ட பேசி மாட்டிறீகளோ?!” ஏக்கமாய் அவள் கேட்க,

“இல்ல… நான் தாடி வளர்த்து அப்படியே சந்நியாசம் போகலாம்னு இருக்கேன்” என்றவன் அப்போதும் அவள் புறம் முகத்தை திருப்பமாலே சொல்ல,

அவள் கல்லென்ன சிரித்து விட்டாள்.

அவன் கோபமாய் அவளை பார்க்க அவள் சிரித்தபடி,

  “சந்நியாசல்லாம் ஒண்ணும் போக வேண்டாம்… நான் படிப்பை முடிச்சதும் எங்க அப்பாருகிட்ட வந்து பேசுங்க” என்றவள் சொல்லவும்,

சுப்புவுக்கு ஆச்சர்யம் தாங்வில்லை.

“நிஜமாவா?!” என்றவன் கேட்கும் போதே அவள் நாணப்பட்டு கொண்டு ஒரே ஓட்டம் ஓடிவிட்டாள்.

சுப்புவிற்கு பல வர்ண பட்டாம்பூச்சிகள் ஒன்றை பறந்தது போல் இருக்க,

“ஐஸ் நில்லு” என்று அழைத்து கொண்டே வண்டியை கிளப்பினான்.

ஆனால் குருவின் நிலைமையோ பரிதாபகரமாய் இருந்தது. அழுபவர்களை விட அழுபவர்களை சமாதானப்படுத்துவது கொடுமையிலும் கொடுமை!

பொறுமையிழந்தவன், “நான் மெஸ்ஸுக்கு புறப்படுதேன்” என்றவன் சத்தமாய் சொல்லிவிட்டு அவன் எழுந்து கொள்ள,

முகம் வாட அவனை அவள் நிமிர்ந்து பார்க்க அவன் ஏக்கத்தோடு,

“என் அழுமூஞ்சி பொண்டாட்டியும் வந்தா கூட்டிட்டு போகலாம்னு” என்றவன் இழுக்க,

“எனக்கு மூடில்ல மாம்ஸ்” என்று  படுக்கையில் மீண்டும் துவண்டு படுத்து கொண்டாள்.

“சும்மா அழுதுக்கிட்டிருக்கிறதினால எதுவும் மாறிட போறதில்ல” சற்று கோபமாகவே அவன் சொல்ல,

“என் கஷ்டம் உங்களுக்கு புரியாது மாம்ஸ்” படுத்தபடியே அவள் பதிலளித்தாள்.

அவள் அருகில் சென்ற குரு, “எனக்கு புரியாதா?!” என்றவன் கேட்டு அவள் முகத்தை நிமிர்த்த அவள் வேதனையோடு அவனை ஏறிட்டாள்.

“நாலு அக்காங்களோடு பிறந்தவன் நான்… அவக எல்லாம் கல்யாணம் கட்டி  இந்த வீட்டைய விட்டு போகும் போது எம்புட்டு கஷ்டமா இருக்கும்னு தெரியுமால?… கடைசி அக்காவை கட்டி கொடுக்கும் போது இந்த வீடே வெறிச்சோடி போச்சுது… அவைக எல்லாம் எப்பையாச்சும் வர ஒருநாளுக்காக வேண்டி நான் ஒவ்வொரு நாளும் காத்துக்கிட்டு கிடப்பேன்” என்றவன் வலியோடு பேசி கொண்டிருக்கும் போது அவன் முகம் வாட்டமுற,

அவள் எழுந்தமர்ந்து, “சாரி மாம்ஸ்… நான் அப்படி சொல்லி இருக்க கூடாது” என்றாள்.

“உன் சாரியெல்லாம் எனக்கு வேண்டாம்” என்றவன் சொல்ல, அவள் அவனையே உற்று நோக்கினாள்.

“என் கூட பைக்ல வர்றீகளா?!” என்றவன் எதிர்பார்ப்போடு கேட்க அவள் மனமும் மெல்ல இறங்கியது.

“ஹ்ம்ம்” என்றவள் சொல்லி சம்மதிக்க அவன் உற்சாகத்தோடு அவளை அள்ளி அணைத்து கொண்டான்.

இருவரும்  முதல்முறையாய் தனிமையில் ஒன்றாய் அந்த பயணத்தை மேற்கொள்ள,
அதன் ஆனந்தத்தை வார்த்தைகளை  கொண்டு விவரிக்க முடியாதது.

இங்கே இவர்கள் பயணத்தை தொடங்கிய அதே நேரத்தில் வேதாவும் சபரியும் தங்கள் பயணத்தை இனிதே மேற்கொண்டிருந்தனர்.

அப்போது சபரி தன் மனைவியின் கரத்தை அழுந்த பற்றி கொண்டு கண்கலங்க,

“என்னங்க… இன்னும் சென்னைக்கு கூட போகல… அதுக்குள்ள உங்களுக்கு வாணிம்மாவை ஞாபகம் வந்திருச்சா?!” என்றவர் கேட்க,

“உம்ஹும் உன்னைய பத்தி நினைச்சுகிட்டேன்” என்றதும் அவர் குழப்பமாய் என்ன என்பது போல் திகைக்க அவர் மேலும்,

“இத்தனை வருஷமா நீ உங்க அம்மா அப்பாவை பிரிஞ்சி எவ்வளவு வேதனைப்பட்டிருப்ப வேதா… அவங்க உன்னை பிரிஞ்சி எவ்வளவு கஷ்டபட்டிருப்பாங்க” என்றவர் சொல்ல வேதா ஆச்சர்யமாய் அவரை பார்த்தார்.

“நான் ரொம்ப சுயநலமா நடந்துக்கிட்டேன்… என்னை மன்னிச்சிடிறி” என்றவர் கெஞ்சலாய் கேட்டு தன் மனைவியின் கரத்தை அழுத்த,

வேதா வார்த்தைகளின்றி அப்படியே ஊமையாய் அமர்ந்தார். மனமெல்லாம் மகிழ்ச்சி பொங்க சபரி மேலும்,

“இனமேயாச்சும் உன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்த நான் நடந்துக்கனும்னு நினைக்கிறேன்” என்று சொல்ல,

வேதா உதட்டில் அப்போது ஓர் எகத்தாளமான புன்னகை!

“இனிமேயாச்சுமா?!” என்றவர் அழுத்தி கேட்க சபரி தோளை குலுக்கி,

“ஏ ஐம் ஜஸ்ட் பாஃர்ட்டி டூ டி” என்றார்.

வேதா சிரித்தபடி, “ஆமா ஆமா பார்ஃட்டி டூ… பொண்ணுக்கு கல்யாணம் பண்ணியாச்சு… சாருக்கு இப்பதான் இளமை ஊஞ்சலாடுதாக்கும்” என்றவர் வினவ,

“சரி வயசாயிடுச்சு… அதனால் என்ன காதலிக்க கூடாதோ?!” என்றவர் கேட்க வேதாவிற்கு மீண்டும் சிரிப்பு தாங்க முடியவில்லை.

“காதலா?!” என்றவர் எள்ளலாய் கேட்க,

மனைவியை ஆழ்ந்த பார்வை பார்த்தவர் தன் பேசியை இயக்கி அவர் முன்னே வைத்தார்.

“வாலிபங்கள் ஓடும்
வயதாகக்கூடும்

ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்

பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி
அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே

மடிமீது துயில
சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை
பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே..”

இந்த பாடலின் வரிகள் அவர்கள் இருவரின் விழிகளையும் கண்ணீரால் நனைத்து செல்ல, வேதா தன் கணவனின் தோள் மீது ஆதரவை சாய்ந்து கொண்டார்.

வஞ்சம், கோபம், காதல்,பரிவு,அன்பு என பலவண்ணங்கள் கொண்டது உறவுகள்.  அதனை சரியாய் அணிவகுத்து வானவில்லாய் மாற்றி கொள்ளும் சூட்சமத்தை நாம் அறிந்து கொண்டால் வாழும் போதே இந்த பூமி சொர்க்கமாகும்.

ஆழமான அன்பும் காதலும் கொண்ட உறவுகள் அத்தனை சீக்கிரத்தில் முடிந்தும் போகாது!

முறிந்தும் போகாது !

********முற்றும்*********

error: Content is protected !!