KS 12

KS 12

காதல் சன்யாசி 12

சீறிப்பாயும் வெள்ளமென அவர்கள் அனைவரும் ஒன்றாய் வீட்டுக்குள் நுழைந்தனர்.

அரவம் கேட்டு பார்வதி வெளியே வர, திருமணத்திற்காக வந்த நெருங்கிய சொந்த பந்தங்கள் எல்லாம் நடு கூடத்தில் குவிந்து நின்றனர் கோபத்துடன்.

முதலில் பேசியவர் ராகுலின் சித்தப்பா தான், “நீ தப்பு செஞ்சியோ, இல்லையோ? அதை பத்தி நான் பேச வரல. கண்டவ கழுத்தில தாலி கட்டி கூட்டிட்டு வந்திருக்கியே, அதை கேட்க தான் வந்தோம்” என்றார் ஆவேசமாக.

ராகுல் பதில் பேசாமல் அமைதியாகவே நின்றிருந்தான்.  தன் பக்க நியாயத்தை சொல்லி சொல்லி அவன் களைந்து போயிருந்தான்.

“செய்ய கூடாத அசிங்கத்தை எல்லாம் செஞ்சிட்டு ஒண்ணும் தெரியாத அப்பாவி மாதிரி நிக்கறதை பாரு” பெரிய அண்ணன் வெறுப்பாய் கேட்க,

“ஏதோ பெரிய இடத்து சம்பந்தம் கிடைச்சிருக்கேன்னு சந்தோச பட்டோம். அதை நீயே கெடுத்து கிட்டியே டா” என்று பெரியப்பா ஆதங்கப்பட்டார்.

“ச்சே உன்னால நம்ம குடும்ப மானமே போச்சு டா” சின்ன அண்ணனும் குற்றம் சாட்ட, அப்போதும் வாய் திறக்காமல் நின்றிருந்தான் ராகுல் கிருஷ்ணன்.

தன் மகன் மறுபடியும் அவமானப்படுத்தபடுவதைப் பொறுக்க முடியாதவராய் பார்வதி, “என் மகனோட ஒழுக்கத்தை பத்தி தப்பா பேசினீங்கன்னா, உங்க நாக்கெல்லாம் அழுகி போயிடும். அவங்க தான் வாய்க்கு வந்தபடி பேசினாங்கன்னா, உங்களுக்கு எல்லாம் ராகுலை பத்தி தெரியாதா?” என்று மகனுக்காக வாதாடினார்.

“அப்போ, அந்த வீடியோ?” பெரியவன் சாட்சியாய் குரல் எழுப்ப,

 

“என்ன பெரிய வீடியோ? என் மகன் தப்பானவன்னு. அந்த கடவுளே நேர்ல வந்து சொன்னா கூட நான் நம்ப மாட்டேன்” பார்வதி உறுதியாக சொல்ல,

‘தன் அம்மா தன்மீது கொண்ட நம்பிக்கையில் சிறிதளவு கூட நிவேதாவிற்கு தன்மீது இல்லாமல் போனதே’ என்று ராகுலின் மனம் குமுறியது.

எத்தனை உறவுகள் இருந்தாலும், தாய்மையை உயர்த்தி சொல்வதன் காரணம் அவனுக்கு இப்போது நன்றாகவே விளங்கியது.

“புள்ள பாசத்தில நீதான் பித்து பிடிச்சு உளர்ற” ராகுலின் தாய்மாமன் சகோதரியையும் சேர்த்து கோபித்தார்.

“போதும் நிறுத்துங்க டா… புத்தி கெட்டவைகளா, கூடியிருக்கிற சபையில, அத்தனை பேருக்கு முன்னால என் பேரன் அவ கழுத்துல தாலி கட்டி இருக்கான் டா. எந்த ரோசங்கெட்டவனுக்கும் இந்த துணிச்சல் வராது. என் பேரன் கிருஷ்ணன், நெருப்புல போட்டாலும் தகதகக்கிற சொக்க தங்கம் மாதிரி டா”

தும்பை பூ போன்ற பெரிய மீசையை முறுக்கி விட்டவாறே, அக்குடும்பத்தின் பெரியவர் அனுபவ அறிவுடன் உண்மை நிலையை விளக்க, சொந்தங்கள் வாயடைத்து நின்றனர்.

“எதையும் புரிஞ்சிக்காம வாய்க்கு வந்தபடி பேசறதே உங்க பொழப்பா போச்சு” என்று மேலும் அந்த பெரியவர் சலித்து கொண்டார்.

அங்கங்கே எழுந்த சலசலப்பு குரல்கள் உண்மையை உணர்ந்து ஆமோதிப்பனவாய்.

“நீங்க சொல்லறதும் சரிதான் பா. அவன் கட்டிட்டு வந்தவளை முதல்ல, வெட்டி விட சொல்லுங்க. நம்ம சொந்தத்திலேயே நல்ல பொண்ணா பாத்து, அடுத்த முகூர்த்தத்தில இவனுக்கு கல்யாணம் முடிச்சுடலாம்” என்று அவன் சித்தப்பா யோசனை சொல்ல, கூடியிருந்தவர்கள் ஒரே மனதாக ஆமோதித்தனர்.

ராகுல் இரண்டடி முன்னே வந்து, “பாவம் தமிழ், அவ எந்த தப்பும் செய்யலயே, உங்களுக்கு ஏன் அவமேல இத்தனை கோபம்?” அவர்களின் வார்த்தைகளில் சிறிது உரிமையும், பெரிதாக கசப்பும் தெரிந்தது அவனுக்கு.

“பின்ன, அறுத்து போட்டவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா, நாங்க பாத்துட்டு சும்மா இருப்போம்னு நினச்சுட்டியா?” மாமனின் கேள்வி அவன் மேல் சீறிப்பாய்ந்து.

ராகுல் அவர் பக்கம் திரும்பி, “நான் இன்னும் உயிரோட தான இருக்கேன் மாமா. அப்புறம், எப்படி நீங்க என் பொண்டாட்டிய அப்படி சொல்லலாம்?”  அவன் வார்த்தைகள் நிதானமாய் தெளிவாய் உதிர்ந்தன.

“என்னடா? ஏதோ அவசரத்தில தப்பான முடிவா எடுத்துட்டியேன்னு நல்லது சொன்னா, உனக்கு புத்திசாலி தனமா பேசறதா நினைப்பா?” அவன் மாமாவின் கோபம் அதிகமானது.

ராகுல், “ஒரு நிமிசமானாலும் நல்லா யோசிச்சு நிதானமா தான் இந்த முடிவை எடுத்தேன். எந்த சூழ்நிலையிலும் அவளை கைவிட கூடாதுன்னு மனசளவில உறுதி எடுத்துகிட்டு தான் அவளை கல்யாணம் செஞ்சு கிட்டேன்.”

“ஒரு பொண்ணு கழுத்தில தாலிய கட்டி, ஏதோ காரணத்தை சொல்லி கழட்டி விடற அளவுக்கு நான் கீழ்தரமானவன் கிடையாது”

“எங்க கல்யாணத்தை ஏத்துகிறவங்க மட்டும் என்கூட நின்னா போதும். மத்தது அவங்கவங்க விருப்பம்” ராகுல் உறுதியுடன் அழுத்தமாக பேசி முடித்தான்.

அதை கேட்டு சிலர் கோபமாக வெளியேற, பார்வதி பரிதவித்து நின்றார்.

கனிசமான உறவுகள் அவனை ஏற்றுக்கொண்டு நிற்க, ராகுல் மனதில் சற்று நிம்மதி தோன்றியது.

அதுவரை பொறுக்க மாட்டாமல் பொறுத்து கொண்டிருந்த அவன் நண்பர்கள், ஓடிவந்து அவனை நாற்புறமும் வாரி அணைத்து கொண்டனர்.

“கலக்கிட்ட டா ராகுல், எங்களுக்கு என்ன செய்யறதுன்னே புரியாம வாயடைச்சு நின்னுட்டோம். ஆனா, நீ தனி ஆளா சாதிச்சிட்ட டா” என்று மகேஷ், தேவா, வெற்றி, வினய் ஆனந்த பரவசத்தில் பாராட்டினார்கள்.

“தமிழோட வாழ்க்கைய நினைச்சு எங்களுக்கு எல்லாம் ரொம்ப கஷ்டமா இருந்தது டா. இப்போ, நாங்க எவ்ளோ சந்தோசமா இருக்கோம் தெரியுமா? உன்ன நினச்சு எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு டா” என்ற வைசாலி, ப்ரியாவின் கண்கள் பனித்தன மகிழ்ச்சியில்.

வெற்றி, “ஆமா, கல்யாணம் முடிஞ்சு போச்சு. அப்ப விருந்து எங்க டா?” என கேட்க, ராகுல் பதிலின்றி விழித்தான்.

“டேய், என் ப்ரண்ட்ஸோட கல்யாணத்துக்கு எங்களோட விருந்து. பெரிய ஓட்டல்ல தடபுடலா, வாங்க போகலாம்” என்று அவர்கள் சந்தோச கூச்சலிட்டு, அங்கிருந்த அனைவரையும் அழைத்து சென்றனர்.

“தமிழ… பார்த்துக்கங்க ம்மா!” என்று பார்வதியிடம் சொல்லி விட்டு, ராகுலும் அவர்களுடன் கிளம்பினான்.

விருந்து உண்மையில் தடபுடலாக தான் இருந்தது.  அனைவரும் தங்களுக்கு விருப்பமான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்டனர்.

பிறகு, அனைவரையும் வழி அனுப்பிவிட்டு, தன் நண்பர்களுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தான்.

“இதை செஞ்சது யாரா இருக்கும் ராகுல்?” தேவா சந்தேகமாக கேட்க,

“யார் செஞ்சிருந்தா என்ன டா? நிவி என்னை நம்பல இல்ல” ராகுல் விரக்தியாக சொன்னான்.

“இல்ல டா, நிவி சிஸ்டர் பாவம். அந்த வீடியோவ பார்த்த நாங்களே நடுங்கி போயிட்டோம். அவங்க நிலைமைய கொஞ்சம் யோசிச்சு பாரு” மகேஷ் சொல்ல,

“நான் அப்படி பட்டவனா இருக்க மாட்டேன்னு அவளுக்கு ஒருமுறை கூட தோணலையே டா” என்று சொன்ன ராகுலின் கண்கள் கலங்கின. அவனின் ஆணென்ற உறுதியையும் மறந்து.

“டேய், விடு ராகுல், ஃபீல் பண்ணாத டா” என்று அவனை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டனர் மற்ற மூவரும்.

“என்ன டா இது, சின்ன குழந்தை மாதிரி” வைசாலி கேட்க,

“அப்பா தவறினப்ப கூட, தைரியமா இருந்தியே டா. நீ அழுது நாங்க இப்ப தான் டா பார்க்கிறோம்” சொன்ன ப்ரியாவின் கண்களிலும் நீர் திரண்டது.

“ஹே டூட், கெத்தை விடாத பா. இன்னைக்கு நீ தான் ரியல் ஹீரோ” என்று வினய், ராகுல் தோளை தட்ட,

அவனும் முயன்று சிரித்து வைத்தான்.

அவர்களுடன் சிறிது நேரம் வெளிப்படையாக உரையாடியது, அவன் மனதிற்கு ஆறுதலும் நம்பிக்கையும் தருவதாய் இருந்தது.

நண்பர்கள் தைரியம் சொல்லி, வாழ்த்துக்கள் தந்து விடைபெற்று செல்ல, ராகுல் வீடு வர, மாலை நெருங்கி இருந்தது.

“ஏன் பா. இவ்வளவு நேரம்?” மகனின் களைத்து போன முகத்தை கவனித்தவாறே பார்வதி கேட்க,

“எல்லாரையும் வழி அனுப்பிட்டு வர, நேரமாயிடுச்சு ம்மா” என்ற ராகுல் சோஃபாவில் தோய்ந்து அமர்ந்தான்.

“தமிழ் எங்க ம்மா?” நினைவு வந்தவனாக அவன் கேட்க,

“அதையேன் கேக்கற? கண் விழிச்சதில இருந்து ஒரே ஆர்பாட்டம் தான். நான் எவ்வளவு சொல்லியும் கேட்கல. காலையில இருந்து பச்ச தண்ணி கூட குடிக்கல. நாள் பூரா அழுதுட்டே இருந்தா. இப்ப தான் அசதியில தூங்கி போயிருக்கா போல. அவள பார்த்தா எனக்கே பாவமா இருக்கு கிருஷ்ணா”

இன்று முழுதும் அவளுடன் பட்ட பாட்டில் பார்வதி ஒரே மூச்சில் எல்லாவற்றையும் சொல்லி முடித்தார்.

சோர்ந்த முகமாய், தளர்ந்த உடலாய், கண்மூடி கிடந்தவளை பார்த்தவனுக்கு அவள் நிலை மேலும் கவலை தருவதாய்.

துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு குளியலறை நோக்கி சென்றான்.

இதமான சுடுநீர் உடல் மீது விழ, அவன் சோர்வு நீங்கி, சற்று ஆறுதல் தருவதாக இருந்தது.

பார்வதி சாப்பிட அழைக்க, வேண்டாமென்று மறுத்தவன், தன் அறையில் படுத்து கண் மூடிக் கொண்டான்.

நிம்மதியான உறக்கம் மட்டும் அவனை வந்து சேருவதாக இல்லை.

இரவு ஏறிக் கொண்டு இருந்தது.

எங்கும் இருளும் குளிரும் சூழ, அந்த மலைநாடு நிசப்தமாகி போயிருந்தது.

அங்கே, அமைதி இழந்து துடித்து கொண்டிருந்தது என்னவோ அந்த மூன்று இதயங்கள் தான்!

மலரென மணியென வெண் பரப்புகளாய் பனி பெய்து கொண்டிருக்க, உடலின் குளிரை உச்ச நிலைக்கு ஏற்றியது.

கண்ணாடி சன்னல் வழியே காட்சியான இயற்கையின் பேரழகை, நிவேதா பார்க்க கூட இல்லை.

அந்த பனி மழைக்கு போட்டியாக, அவள் விழி வானில் சுடுபனியென கண்ணீர் பெருகி, அவள் கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தது.

இதுவரை, அழுகை என்னவென்றே தெரிந்திராதவள். கண்ணீரின் சுவையினை கூட சுவைத்து அறிந்திராதவள். இன்று, அழுது அழுதே முகம் சிவந்து போயிருந்தாள்.

‘காதல் என்பதே பெரும் பாவம். அதில் கண்ணீர் மட்டுமே பெறும் லாபம்’

என்ற வரிகள் நினைவில் வலியைத் தருவதாய்.

திருமணம் நின்று போனது கூட, அவளுக்கு பெரிய வருத்தமில்லை.

ராகுல் தனக்கு இழைத்த நம்பிக்கைத் துரோகத்தை தான் அவளால் தாள முடியவில்லை.

‘எவ்வளவு காதலித்தேன் உன்னை! என்னையும் என் வாழ்வையும் உனக்கு தர முன் வந்தேனே! எனக்கு இப்படியொரு துரோகம் செய்ய உனக்கெப்படி மனசு வந்துச்சு கிருஷ்?” என்று எண்ணி எண்ணி மனம் கொதித்து குமுறினாள் அவள்!

மல்லிகை தோரணம் இட்டு, மலர் மஞ்சம் இட்டு, பனி நனைத்த புது மலராய், தன் காதல் தேவதை, தன் கை சேருவாள் என்று அவன் கண்ட கனவெல்லாம் வெறும் கானலாய்.

‘காதல்’ என்ற காந்தச் சொல், அவர்கள் இருவரையும் சேர்த்தது.

‘சந்தேகம்’ என்ற ஆயுதம், இணைந்த இருவரையும் பிரித்தது.

வாழ்க்கை இத்தனை இரக்கமற்றதாய் இருக்கும் என்று ராகுல் நினைக்கவே இல்லை.

அவன் நிவேதா மீது கொண்ட, ஆசை, காதல், நேசம் எல்லாம் அவன் விழிகளில் கண்ணீராய் தேங்கி, வெளியே கசிந்து கொண்டிருந்தது.

தன்னிடம் நம்பிக்கை இழந்து, அருவெறுப்பாக பார்வை வீசிய நிவேதாவின் நிலவு முகம் இப்போதும் அவன் இதயத்தில் அமிலத்தை பாய்ச்சுவதாய்!

யாருக்கு யார் மீது பகையோ? யார் செய்த குற்றமோ? ஆனால், தண்டனை மட்டும் இவளுக்கு.

உடலும் உள்ளமும் பலம்‌ இழக்க, உயிர் சுமந்த வெறுங்கூடாக கிடந்தாள் தமிழ்ச்செல்வி.

கரைப்பட்ட வெண்ணிலவு அவள்!

எந்த கடலில் குதித்து கரை நீங்க?

காலில் மிதிபட்ட பூமாலை அவள்!

என்னவென்று கதறி அழ?

வடிந்து வடிந்து விழிகளின் கண்ணீரும் வற்றி போயிருந்தது.

அழுகை வந்தாலும், அவள் உலர்ந்த விழிகளில் கண்ணீர் கசிவதற்கு மிச்சமில்லை!

எது எப்படியோ, இயற்கையின் நியதியான உறக்கம் அவர்களை விட்டு வைப்பதாயில்லை.  நடுநிசிக்கு பிறகு அவர்கள் மூவரின் இமைகளும் சோர்ந்து அமிழ்தன.

# # #

“கிருஷ்ணா… கிருஷ்ணா…” விடியற்காலையில் மகனை பிடித்து உலுக்கி எழுப்பினார் பார்வதி.

அவன் கலையாத உறக்கத்தோடு கண்கள் திறக்க, “எங்க தேடியும் தமிழை காணல டா” பதற்றமாக சொன்னார் அவர்.

சட்டென துள்ளி எழுந்தவன், “இப்ப எங்க ம்மா, போயிருப்பா அவ? நல்லா பார்த்தீங்களா?” என்றான்.

தமிழ் சொல்லாமல் வெளியேறுபவள் கிடையாது என்று தோன்றியது அவனுக்கு.

“எல்லா இடத்திலேயும் தேடி பார்த்துட்டேன். அவ இல்லடா” என்றார் பதற்றம் குறையாமல்.

“தமிழை நீங்க ஏதாவது சொன்னீங்களா ம்மா?” அவன் சந்தேகமாக கேட்க, பார்வதிக்கு அவன் கேள்வியின் பொருள் நன்றாகவே விளங்கியது.

“நான் எதுவும் சொல்லல டா. தமிழை ஏத்துகிறதுல எனக்கு முதல்ல சங்கடம் இருந்தது தான். ஆனா, எப்ப அவ உயிரை விடற அளவுக்கு போயிட்டாளோ, அப்பவே நான் துடிச்சு போயிட்டேன்.”

“நீ நம்ம சொந்தகாருங்க கிட்ட பேசனதிலயே நீ அவளோட விசயத்தில எவ்வளவு உறுதியா இருக்கன்னு நான் புரிஞ்சிக்கிட்டேன். அவ மறுபடியும் விபரீதமா ஏதாவது செஞ்சிப்பாளோன்னு எனக்கு பயமா இருக்கு ராகுல். சீக்கிரம் போய் அவளை கூட்டிட்டு வாடா” அவனை துரிதபடுத்தினார்.

அம்மா, தமிழை ஏற்று கொண்டதில் ராகுலுக்கு நிம்மதி ஏற்பட்டது.

தமிழ்ச்செல்வி இப்போது எங்கே சென்றிருப்பாள் என்று அவன் யூகித்து இருந்தான்.

# # #

காதல்காரன் வருவான்…

 

 

error: Content is protected !!