UKK12

UKK12

உலாவரும் கனாக்கள் கண்ணிலே-12

 

 

காலையில் எழுந்து கிளம்பி வந்த சந்திரசேகரிடம்,

“மாப்பிள்ளைக்கிட்ட பேசிரு… சேகரு”, செழியன்

“என்னப்பா பேச?”, அறியாதது போல கேட்டு வைத்தான்.

“அங்க வசதியா இல்லனா அர்ச்சனாவை, அவங்க வீட்ல கொண்டு வந்து விட்டுட்டுப் போகச் சொல்லு”

“என்னப்பா சொல்றீங்க!”

“வேற என்னப்பா பண்றது, உங்க அம்மா ரா… முழுக்க ஒரே புலம்பல்”

“அம்மா பேச்ச கேளுங்க வேணாம்னு சொல்லல, ஆனா அங்க என்ன நிலவரம்னு தெரியாம நம்மளா எதுவும் பேசக்கூடாதுல்ல”

“அர்ச்சனா தான் அங்க இருக்க முடியலனு சொல்லி அழுதுச்சாம், உங்க அம்மா சொல்றா”

“நான் கண்டிப்பா மாப்பிள்ளைக்கிட்டயும் பேசுறேன், அர்ச்சனாகிட்டயும் பேசுறேன்”

“என்னத்த பேசப்போற, அத கூட்டிட்டு வந்து விடச்சொல்லு”

“ஒரிசா கிட்டயா இருக்கு, போன வேகத்துல வந்து விடச்சொல்ல”

“அர்ச்சனா அப்டி இடத்துலல்லாம் இருந்தது இல்லலப்பா”, தன்மையாக வந்தது வார்த்தைகள்.

“சத்தியவாடி பெரிய டவுனாக்கும்? அங்கதான பிறந்து வளந்துது, அத விட மோசமான இடமால்லாம் இருக்காது!”

“அவுக வீட்ல வேணாம்னு சொன்னாகூட இங்க வந்து இருக்கட்டும்னு உங்க அம்மா சொல்றா, அதனால தோதுபடும்போது கொண்டு வந்து சீக்கிரமா விட்டுட்டுப் போகச் சொல்லு”

“இங்க வந்து எதுக்கு விடச்சொல்லணும்? இருந்தா மாப்பிள்ளையோட இருக்கட்டும், இல்லனா அவங்க வீட்ல மாமியாரு மாமனாரோட இருக்கட்டும், இங்க வந்து இருக்கவா கல்யாணம் பண்ணி கொடுத்தோம்?”

அதற்குள் அங்கு வந்த சுசீலா

“இதென்னப்பா புதுசா சொல்ற, ஆதரவு இல்லனா அர்ச்சனாவ இங்க தான கூட்டிட்டு வரணும்”

“என்ன ஆதரவு இல்லாம இருக்கு, தெரியாமல் தான் கேக்குறேன் சொல்லுங்க… உங்க மக என்ன எலக்சன்லயா நிக்குது?”

“என்னப்பா அதுக்கு ஒத்தாசையா நாமளும் இருக்கணுமில்ல”

“அர்ச்சனாவோட வாழ்க்கைய வீணாக்கப்போறதே நீங்களும் , உங்க யோசிக்காத பேச்சுக்களும் தான், என்ன ஆதரவு இல்லாம இருக்குங்கிறீங்க? ஒத்தாசை பண்ண போறேனு சொல்றீங்க, அங்க என்ன அத கொடுமை பண்ணற மாதிரியே பேசுறீங்க…

போயி ஒரு நாளு கூட ஆகல… நீங்க போயி நேருல போயி பாத்த மாதிரி எதாவது சொல்லாதீங்க!, போயி இறங்குனவுடனே அந்த ஊரப் பத்தி உங்க மகளுக்கு எல்லாம் தெரிஞ்சுருச்சாக்கும்?”

“நான் எதுக்குபா சும்மா சொல்ல போறேன்!, அது சொல்றத வச்சுதான் பெத்த மனசு கேக்காம புலம்பறேன்”,  தன் மனதில் எழுதிய திரைக்கதையினை மகனிடம் நடித்துக்காட்டினார், சுசீலா.

“நீங்க முதல்ல உங்க புலம்பலை நிறுத்துங்க, நான் பேசிக்கிறேன்”

“என்ன விசாரிச்சனு தெரியல…! மாப்பிள்ளய பத்தி… பட்டிக்காட்டுக்குள்ள… படிச்சவருக்கு என்ன வேலயோ போ…!, பேசாம இங்க கூட்டிட்டு வந்து விடச்சொல்லு”, சலிப்பாக வந்தன வார்த்தைகள்.

“அவரு அங்க தொழில் பண்ணல, நினச்ச நேரம் வரதுக்கு…, கவர்மெண்ட் வேலல இருக்காரு, கல்யாணத்துக்கு வந்தவரு திருப்பி வேலைக்கு இப்பதான் போயிருக்காரு, அதனால அப்டி உடனே கொண்டு வந்து விட தோது இருக்காது”

“கஷ்டமுன்னா என்னனு தெரியாம வளர்ந்த புள்ள, மாசா மாசம் இங்க செலவுக்கு பணம் அனுப்பிட்டா அதுபாட்டுக்கு இருக்கும், ஒன்னும் தெரியாத புள்ள நம்ம அர்ச்சனா”

“அந்த மாதிரி இடத்துல இருந்து சம்பாத்தியம் பண்ணுற மாப்பிள்ளையோட காசு பணம் வேணும், அவரு கஷ்டத்துல பங்கெடுக்க மாட்டேனு சொன்னா என்னமா நியாயம்? அவருக்கு வேண்டியத செய்துக்கிட்டு அங்க இருந்தாதான் அவரோட கஷ்ட நஷ்ட தெரியும் அர்ச்சனாவுக்கு, இருக்கட்டும் அங்கயே, நீங்க ரெண்டு பேரும் இதுக்கு மேல எதுவும் பேசாதிங்க”, என்று கறாராகக் கூறியவன்… பெற்றோர் இருவரும் பேச்சை வளர்க்காமல் இருக்க அங்கிருந்து சென்றிருந்தான்.

அதற்கு மேல் மகனிடம் என்ன பேச என யோசிக்க முடியாமல் வாயை அடைத்த மகனின் வார்த்தைகளில் இருந்த நிதர்சனம் புரிய செழியனும், சுசீலாவும் அவரவர் பணிகளைக் கவனிக்கச் சென்றுவிட்டனர்.

அங்கு நடந்த அனைத்து பேச்சுக்களையும் கேட்டவாறு அடுக்களையில் வேலையாக இருந்தாள், ஜனதா.

ஒடிசாவினைப் பற்றியும், தனது தமையனின் பணி பற்றியும், பொட்டங்கி பற்றியும் ஓரளவு அறிந்திருந்தவள், மாமியாரின் புதுவிதமான ஒடிசா பற்றிய செய்திகளைக் கேட்டவளுக்கு, எதற்காக இந்த முரணான தகவல்கள் எனப் புரியாமல் அவளது பணிகளைக் கவனித்தபடி இருந்தாள்.

 

 

வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பு அலைபேசியில் தொடர்பு கொண்டு அமரிடம் பேசினான், சந்துரு.  பொதுவான விடயங்கள் பேசிவிட்டு, தற்போது தங்கியிருக்கும் இடம் பற்றியும், உணவு முறைகள் பற்றியும் விசாரித்து அறிந்தான்.

அமரும் பொறுமையுடன் அருகில் இருக்கும் கிராமத்து மக்கள் பெரும்பாலும், பருப்பு வகைகளுடன், உருளை, புளிச்ச கீரை மற்றும் இதர கொடிகளின் இலைகளைக் கொண்டு சமைத்து உண்பார்கள் என்றும் கூறினான்.  கடுகு எண்ணெய் மட்டுமே இங்குள்ள மக்கள் அதிகமாக பயன்படுத்துவர், ஆகையால் மற்ற எண்ணெய்கள் இங்கு விற்க மாட்டார்கள்.  அருகிலுள்ள நகரங்களிலும் ஒரு சில கடைகளில் மட்டுமே கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றை வாங்க இயலும் எனக் கூறினான்.

கத்தரி, வெண்டை, காரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ் போன்ற தமிழ்நாட்டினர் பயன்படுத்தும் காய்களை பொட்டங்கி வாழ் மக்கள் பெரும்பாலும் வாங்கிப் பயன்படுத்தாததால் அருகில் இருக்கும் கடைகளில் அக்காய்களை வாங்கி விற்க மாட்டார்கள் எனவும் கூறினான்.  அதனால் சற்று தொலைவில் இருக்கும் நகரில் சென்று வேண்டியவற்றை நேற்று வாங்கி வந்ததாகவும் தெரிவித்திருந்தான்.

அரிசி சாதத்திற்கு பருப்புடன் கீரை கூட்டை வைத்துக் கொண்டே பெரும்பாலும் அம்மாநில மக்கள் உணவை உண்டு விடுவார்கள் என்பதையும் கூறினான்.  நீர் நிலைகளான, ஏரிகள், ஆறுகள்,  டாம் இவற்றிலிருந்து கிடைக்கும் மீன்களை கிடைக்கும் போது வாங்கிப் பயன்படுத்துவார்கள் எனவும் கூறினான்.

நமது ஊரில் மீன் குழம்பு வைப்பது போல அங்கு வைக்க மாட்டர்கள் எனவும், கிராமத்தில் விளையக்கூடிய பொருட்களைக் கொண்டே இங்குள்ளவர்கள் உணவு முறைகளைப் பின்பற்றுவார்கள் என்பதையும் கூறினான்.

அர்ச்சனாவைப் பற்றி சந்துரு கேட்ட மேலும் சில கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தவன், வேலை இருப்பதால் பிறகு பேசுவதாகக் கூறி அலைபேசியை வைத்துவிட்டான்.

 

 

அலுவலகம் சென்று, சற்று நேரம் கழித்து தங்கைக்கு அழைத்தான். நீண்ட நேரம் அழைப்பு போனாலும், அவனது அழைப்பு அர்ச்சனாவால் எடுக்கப்படவில்லை.  அரை மணி தியாலம் கழித்து மீண்டும் அழைத்தும் அர்ச்சனா எடுக்காமல் போகவே,  அமரைத் தொடர்பு கொண்டான்.

“என்னனு தெரியல அர்ச்சனா போன எடுக்க மாட்டிங்குது, அதான் உங்களுக்கு போன் போட்டேன்”

“நான் சைட்ல இருக்கேன், வீட்டுக்கு போக எப்படியும் ரெண்டு மணிக்கு மேல ஆகும், போயி பாத்துட்டு அப்புறம் உங்கள கூப்பிடுறேன்”

“இப்ப பத்தரை மணி தான் ஆகுது, அங்க வேற யாருக்காவது போன் போட்டு விசாரிக்க முடியுமா?”

“நான் கால் பண்ணி பாக்கறேன், அப்பவும் எடுக்கலனா ஆஃபீஸ்கு போன போட்டு வாட்ச்மேன் கிட்ட போயி பாத்துட்டு வரனா சொல்றேன், பயப்பட ஒன்னும் இருக்காது”

 

அதன்பின் அமர், அர்ச்சனாவிற்கு மூன்று முறை அழைத்தும் அவளால் அழைப்பு எடுக்கப்படாமல் போகவே அலுவலகத்திற்கு அழைத்து, வாட்ச் மேனை அழைக்கச் செய்து வீட்டிற்குச் சென்று நேரில் விபரம் அறிந்து வரச் சொன்னான்.

பிறகு, அரை மணித் தியாலத்திற்கு பின் அழைத்துக் கேட்க இன்னும் வீட்டிற்குச் சென்ற வாட்ச்மேன் அலுவலகம் வரவில்லை எனும் தகவல் வர… அமருக்கும் சற்று கவலை தோன்றியிருந்தது.  அதற்குமேல் வேலையில் கவனம் இல்லாமல் போகவே அடுத்த அரை மணித்தியாலத்தில் சைட்டில் இருந்து கிளம்பியிருந்தான்.

ஒன்றரை மணிக்கு அலுவலகம் வந்து ரிப்போர்ட் செய்தவன், அங்கு நின்றிருந்த வாட்ச் மேனை அழைத்து விபரம் கேட்க, எவ்வளவு நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால், அலுவலகம் திரும்பிவிட்டதாகத் தெரிவித்தான். அடுத்த ஐந்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்திருந்தான்.

வாசலுக்கு வந்தவன் கதவைத் தட்டியபடி,  “அர்ச்சனா”, என அழைக்க

அர்ச்சனாவின் கொலுசொலி கேட்க சற்று நேரத்தில் கதவு திறந்திருந்தாள்.

எந்த விதமான பதட்டமும் இல்லாமல் இயல்பாக கதவைத் திறந்துவிட்டு சென்ற மனைவியை பார்த்தான்.  சற்று முன்பு தூங்கியெழுந்ததற்கான தோற்றத்துடன் இருந்தாள், அர்ச்சனா.  வீட்டினுள் சென்றவன், மனைவியின் செயலைச் சற்று நேரம் உள்வாங்கினான்.

“ஆஃபீஸ்ல இருந்து வந்து உன்ன கூப்டாங்களே, என்ன பண்ணிட்டு இருந்த அப்போ நீ?”, அறியாதவன் போல அவளை அறிந்தவன் பேசினான்.

“யாரும் வரலயே”

“என்ன செய்துட்டுருக்க?”

“சமைக்கறேன்”

“இனிமேல் தானா? மணி ரெண்டாகப்போகுது!”

“ஆமா அதுக்கென்ன?”

“ஒன்னுமில்ல, உங்க அண்ணன் காலையில போன் பண்ணதயும் ஏன் எடுக்கல?”

“எப்ப பண்ணுச்சு அண்ணன்?!”

“நானும் தான் பண்ணேன்”

“நீங்களுமா?”, என்றவள் அவளின் மொபைலை எடுத்துப்பார்க்க பத்து மிஸ்டு கால்கள். அதில், சுசீலா, செழியன், சந்துரு அடுத்து அமர் என அனைவருடைய அழைப்பும் எடுக்கப்படாமல் இருந்ததாக காட்டியது, அலைபேசி.

“சைலண்ட்ல இருந்திருக்கு போல”, என நழுவலான பதில் அர்ச்சனாவிடமிருந்து வர, அதற்கு மேல் என்ன பேச இவளிடம் என எண்ணியவன், கை, கால் அலம்பிவிட்டு மொபைலுடன் அமர்ந்துவிட்டான்.

பத்து நிமிடம் எந்த சத்தமும் வராமல் போக, கணவனைத்தேடி  வந்தாள்.  அலைபேசியில் பேசியபடி இருந்தவனிடம், “நான் குளிக்கப் போறேன், பத்து நிமிசத்துல அடுப்பை அணைச்சுருங்க, மறந்துறாதீங்க”, என்றவள் கணவனின் பதிலை எதிர்பார்க்காமல் குளிக்கச் சென்று விட்டாள்.

சந்துருவிற்கு அழைத்துப் பேசியவன், அடுத்து வந்த திட்ட மேலாளரின் அலுவலக அழைப்பினை ஏற்று பேச ஆரம்பித்த போது, அர்ச்சனா வந்து கூறிச் சென்றிருந்தாள். ஆனால் அவள் பேச்சை அமர் கவனிக்கும் முன் பேசியபடியே குளியலறையில் நுழைந்திருந்தாள்.  ஏதோ கூறிச் சென்றாள் என்பதைத் தவிர என்னவென்று தெரியாமல் பேசியபடி ஹாலிலிருந்து அடுக்களைக்கு வந்தான்.

அடுப்பில் குழம்பு சிம்மில் இருக்கவே அதைத் திறந்து பார்த்துவிட்டு மூடினான்.  அப்போது “அமரா” என்ற மாத்யூவின் அழைப்பைக் கேட்டவன், காதில் வைத்திருந்த அலைபேசியில் பேசியபடியே வெளியே வந்திருந்தான்.

பேசியபடி வந்த அமரைக் கண்ட மாத்யூ சற்று நேரம் அமைதியாக நின்றிருக்க, பேசியை திட்ட மேலாளர் வைத்தவுடன் மாத்யூவிடம் வந்த விடயம் என்னவெனக் கேட்டான்.

“பதினொன்னர மணிக்கு… வாட்ச்மேன் நிங்கட பார்யாவை கொட்டத்தி வந்து விளிச்சுனு, எண்ட மிஸ்ஸஸ் பரஞ்சு, அதானு பறயாம் வேண்டி வந்து” (பதினொன்றரை மணிக்கு வாட்ச்மேன் தங்களின் மனைவியை வீட்டில் வந்து அழைத்ததை பார்த்ததாக என் மனைவி கூறினாள், அதைக் கூறுவதற்காக வந்தேன்)

“ஆமா நான் தான் வீட்ல பாத்துட்டு போன் பண்ணச் சொன்னேன்”

“மேம் சாப்னு வாட்ச்மேன் விளிச்ச சப்தம் கேட்டானு எண்ட பார்யா இவிடே நோக்கினு பரஞ்சு” (மேடம்னு, வாட்ச்மேன் கூப்பிட்ட குரலைக் கேட்டு, என் மனைவி இங்கு பார்த்ததாக கூறினாள்)

“அவளுக்கு பாசை புரியல அதனால பேச யோசிச்சு கதவ திறக்கலயாம்”, என அவனாகவே காரணம் சொன்ன அமர், அதற்கு மேல் மாத்யூவிடம் பேச்சை வளர்க்காமல் விடைபெற்று வீட்டிற்குள் வந்திருந்தான்.

மனைவி சொன்ன நேரத்திற்கு மேல் பதினைந்து நிமிடங்கள் ஆகியிருக்க அடுப்பில் இருந்த குழம்பை மறந்தவன், அதற்கு மேல் வந்திருந்த புதுக் குழப்பத்தை நீடிக்க விரும்பாமல் டிவியை ஆன் செய்து அமர்ந்துவிட்டான்.

 

அடுத்த ஐந்து நிமிடத்தில் குளித்துவிட்டு வந்தவள், அடுக்களையில் வற்றிப்போன குழம்பைப் பார்த்தவுடன், அடுப்பை அணைத்துவிட்டு அமரைத் தேடி வந்தாள்.

“டிவி தான பாக்குறீங்க, அடுப்ப ஆஃப் பண்ணச் சொல்லிட்டு போயி அர மணி நேரமாகுது, இன்னும் ஆஃப் பண்ணல, அப்டி என்ன நினப்புல தான் இருக்குறீங்க?”, வற்றிப்போன குழம்பால் வார்த்தைகளை விட்டிருந்தாள்.

 

டிவியில் வால்யூமைக் கூட்டியவன், “நான் டிவிய ஆன் பண்ணி அஞ்சு நிமிசம் தான் ஆகுது, நீ சொன்னத நான் கேக்குறதுக்கு முன்னாடி குளிக்கப் போயிட்ட, அப்ப நான் எங்க பி.எம் (புராஜெக்ட் மேனேஜர்) கிட்ட பேசிட்டு இருந்தேன்.

மொபைல்ல ஒருத்தன் பேசிட்டு இருக்கும்போது யாருகிட்ட பேசுறாங்கன்னு கூட பாக்காம, யோசிக்காம நீயா இடையில வந்து பேசுற, முதல்ல உனக்கு எங்க எப்டி நடந்துக்கணும்னாவது தெரியுதா? படிச்சிருக்க தான? இனி இப்டி இடையில வந்து பேசு, அப்றம் உன்ன என்ன செய்யுறேன்னு பாரு…

இதுல குழம்ப ஆஃப் பண்ணல, ஆன் பண்ணலன்னு கேள்வி வேற, அப்டி என்ன நினப்புல காலைல இருந்து நீ இருந்தன்னு மொதல்ல சொல்லு… யாரு கால் பண்ணாலும் எடுக்காம என்ன செஞ்சுட்டு இருந்த இவ்ளோ நேரம்?

கேட்டா சைலண்ட்ல மொபைல் இருக்குங்கற… சைலண்ட்ல இருந்த போன மூனு மணி நேரத்துல ஒரு தடவை கூட எடுத்துப் பாக்கமாட்டியா? எடுத்துப் பாத்திருந்தா மிஸ்டு கால்ஸ் பாத்திருக்கலாம்.  பாத்துட்டு கூப்பிட்டு பேசியிருந்தா நானும் வேலய முடிச்சுட்டு நிதானம வந்திருப்பேன்.  எனக்குன்னு வந்து சேந்துருக்கியே… ஆளும் மூஞ்சியும்… என் நிம்மதிய பறிக்கனு வந்திருக்க…

சரி… ஒரு சாதமும் குழம்பும் வைக்க இவ்ளோ நேரமா உனக்கு?  தூங்கிட்டு இருந்துட்டு என்ன தூக்கி எறிஞ்சு பேசுனா நீ பண்ற தப்பு எனக்கு தெரியாதா? இல்ல தூங்குன உன் முகத்த பாத்தா தெரியாத எனக்கு? எங்க வீட்லயும் அம்மா, அண்ணி, தங்கைனு பெண்கள் இருக்காங்க,   ஆனா உன்ன மாதிரி ஒரு ஆள நான் இப்ப தான் பாக்குறேன்.

ஒழுங்கா நான் சொல்றத கேட்டு இருந்தா உனக்கு நல்லது.  இல்லனா அப்றம் வரக்கூடிய விளைவுகளுக்கு நான் பொறுப்பு எடுத்துக்க முடியாது, நான் நேத்து கடைக்கு போனவுடனே வீட்டுக்கு போன் போட்டு அழுதியாம்… ஏன்? சொல்லுடி… உன்னதான கேக்குறேன்”, என பசி தந்த அயர்ச்சியில் அமரும் விடாமல் பேச

இதுவரை அமைதியாக இருந்த அமரை பார்த்திருந்தவளுக்கு, வித்தியாசமான குரலுடன், கோபத்தில் முகம் சிவக்க பேசியவனைக் காணும்போது சற்று பயம் வர, ஆனாலும் அதை வெளிக்காட்டாமல்

“ஏன் அடுப்ப ஆஃப் பண்ணா குறஞ்சா போயிருவீங்க… அதுக்கு தேவையில்லாம என்னன்னவோ பேசிக்கிட்டு”, என்றவள் தனது பயத்தைக் கணவனுக்கு காண்பிக்காது அங்கிருந்து அகல முயல

“ஏய்… உங்கிட்ட தான பேசிட்டு இருக்கேன், பேசிட்டு இருக்கும்போது போனா என்னடி அர்த்தம்? குழம்பு ஆஃப் பண்றதுக்கு ஆள் வப்பமா? சொல்லு… இல்ல அது கூட உன்னால செய்ய முடியலனா… உனக்கு என்ன வேல இங்க?”, என அமர் எகிற

“உங்ககிட்ட பேச பிடிக்கல எனக்கு”

“எங்கூட பேசப் பிடிக்காதவளுக்கு இங்க என்ன வேல, முதல்ல இங்க இருந்து கிளம்பு”,

“எனக்கு இங்க ஒன்னும் தெரியாதுன்னு தான இப்டியெல்லாம் பேசுறீங்க?”, அழுகை வருவது போல குரலில் இருக்க, ஆனாலும் அழுவேனா நான் என்ற குரலில் பேசினாள்.

“ஆமா உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு குழந்தைகிட்ட சொன்னாக் கூட நம்பாது”, பாயிண்டை கேட்ச் செய்தும் பயனில்லாமல் இருந்தது, அமருக்கு.

“தேவையில்லாம என்ன பத்தி நீங்க எதுவும் சொல்ல வேணாம்”, அவன் சொல்லுமாறு நல்ல விடயங்களைச் செய்யாது, தேவையில்லாமல் பேசியிருந்தாள்.

“ஆமா எனக்கு உன்ன பத்தி பேசணும்னு, சொல்லணும்னு வேண்டுதல் பாரு”

“என்ன பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?”, எல்லாம் தெரிந்தவனிடம் கேள்விகளைக் கேட்கும் துணிவு அர்ச்சனாவிற்கு அசட்டுத்தனமாக வந்திருந்தது.

“உன்னய பத்தி தெரிய நீ என்ன எலிசபத் ராணியா?”, ஆண்களின் அலட்சிய கேள்வியை அமரும் கேட்டிருந்தான்.

“உங்களுக்கு எலிசபத் மாதிரிதான் பொண்ணு வேணும்னா என்னய ஏன் கல்யாணம் பண்ணீங்க?”, சரியாக கேட்பதாக எண்ணி தவறாக கேட்டிருந்தாள்.

“என் நேரம், வேற என்னத்த சொல்ல… உங்கிட்ட வந்து மாட்டிக்கிட்டு இப்டி அல்லல் படணும்னு விதி இருக்கும்போது தேவத மாதிரியா பொண்ணு அமையும், ராட்சசி…”

“அப்ப நான் அவ்ளோ கேவலமாவா இருக்கேன்?”

“இத வேற நான் சொல்லணுமா? அழகுங்கறது பொண்ணுங்க நடந்துக்கற முறையில வரது… நீயெல்லாம் அத பத்தி பேசக்கூட… கூடாது”

“ஆமா நீங்க மோனிகா கூட திரிஞ்சாலும் அத பத்தி நான் கேக்ககூடாது”, விதி வலியது, சனி நாவில் குடி வந்திருந்தது.

“மோனிகாவா…?”, விபரமறிந்த நாள் முதலாய் அறியாத ஒரு பெண்ணின் பெயர்.

“தாஜ்மகால் அனுப்புனாளே அவளத்தான் சொல்லுறேன்”

“ஓஹ்…. அது மௌனிகா, அவளப் பத்தி தேவையில்லாம பேசுன பல்லு கில்ல பேத்துருவேன் பேத்து”

“அவ மேல அம்புட்டு ஆசயா?”

“லூஸு மாதிரி பேசறத விடு மொதல்ல… அறிவிங்கறது முத இருக்கா உனக்கு? அவ மேல ஆச இருந்திருந்தா அவளயே கல்யாணம் பண்ணிக்கிறதுல்ல எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல, இனி ஒரு முறை அவள பத்தி எங்கிட்ட பேசுன… அவ்ளோதான்”

“அப்புறம் ஏன் அவள நினச்சுகிட்டு என்னய கண்டுக்கவே இல்ல?”

“திரும்பத் திரும்ப அவள பத்தி ஏன் பேசுற?”

“அதனால தான என் நினப்பு கூட இல்லாம என்ன விட்டு விலகி இருக்கீங்க?”

“என்னடி சொல்ற?”, உண்மையில் புரியவில்லை அதனால் வினவினான்.

“அப்றம் அதுகூடவா தெரியாம இருக்கேன் நான்!”

“என்ன தெரிஞ்சிருச்சு இப்போ உனக்கு?”

“அவ மேல இருக்குற ஆசைல தான என்ன ராவுல கூட தேடமாட்டிங்கறீங்க?”

“மட்டி… மட்டி, மனுசியா நடந்துகிட்டா நானும் மனுசனா நடந்துக்குவேன், அன்னைக்கு நைட் சாப்பிடாம படுத்த உன்ன அன்போட அணைச்சப்போ வீம்பு பிடிச்சது நீதான், நான் தொட்டா கூட பிடிக்காதவள… எப்படி நான் வற்புறுத்தி எங்கூட வாழச் சொல்ல முடியும்…?

வந்து உன்னக் கெஞ்சணும்னா அதுக்கான ஆளு நான் இல்ல, நீயும் உன் அறிவும், இன்னொரு முற அவள பத்தி எங்கிட்ட பேசினா அதுதான் உங்கிட்ட நான் கடைசியா பேசுற பேச்சா இருக்கும், அதுக்கு மேல உன்ன நினைக்ககூட மாட்டேன்… போடி என் முன்ன நிக்காம”, என்றவன் அதற்கு மேல் பேசாமல் வெளியில் சென்று விட்டான்.

சற்று நேரம் அமரின் கொந்தளிப்புகளை சீரணிக்க அழுதவள், அதற்கு மேல் அழ முடியாமல் சோர்வு அழுத்த, உணவை உண்டாள். உண்டு முடித்துவிட்டு வந்தவள், மொபைலை எடுத்து சுசீலாவிற்கு அழைத்தாள்.

சுசீலா போனை எடுத்தவுடன், “ஏம்மா நீ எம்புருசன் கிட்ட என்ன சொன்ன?”

“நான் ஒன்னும் சொல்லலயே, ஏன் அர்ச்சனா? எதுவும் பிரச்சனையா?”

“நான் அழுதேன்னு யாரு சொன்னது அவருகிட்ட?”

“எனக்கு தெரில ராசாத்தி, யாரு இப்டியெல்லாம் இல்லாத பொல்லாததெல்லாம் உன்ன பத்தி அவருகிட்ட சொல்றது?”

“அண்ண பேசிச்சா அவருகிட்ட?”

“தெரியலயேம்மா”

“சும்மா சொல்லாதம்மா, உண்மைய சொல்லு, அண்ணங்கிட்ட பேசச் சொன்னியா?”

“ஊருக்கு போனபின்ன போனு போட்டு கேக்க சொன்னேன், அத கேட்டுருப்பானாயிருக்கும்”

“நீதான் ஒன்னுன்னா ரெண்டுன்னு சொல்லிருப்ப, எனக்கு தெரியும்”, என்றவள், “சரி நீ போன வையி” , என்று போனை கட் செய்தவள் தந்தைக்கு அழைத்தாள்.

“என்னம்மா அர்ச்சனா நல்லாயிருக்கியா”

“இருக்கேன்பா, அம்மா என்ன சொல்லுச்சுபா நேத்து உங்ககிட்ட”, என்ற அர்ச்சனாவின் கேள்விக்கு, முந்திய தின சுசீலாவின் அனைத்து புலம்பல்களையும் கூறி களைத்திருந்தார், செழியன்.  பிறகு மகளைப் பற்றியும் விசாரித்தார்.  மகளின் பேச்சில் இருந்து எந்த பிரச்சனையும் அவள் தங்கியிருக்கும் இடத்தில் இல்லை என்பதை உணர்ந்தவர், நிம்மதியாக மூச்சு விட்டார், செழியன்.

 

வெளியில் சென்ற அமர் உணவிற்காகவும் வரவில்லை, உறவிற்காகவும் வரவில்லை.  உறவும் தேடவில்லை.  எந்த பதட்டமும் இன்றி அவளின் அன்றாட பணிகளுள் ஒன்றான முகநூலுடன் முகம் புதைத்திருந்தாள், அர்ச்சனா.

********************

error: Content is protected !!