KS 17

காதல் சன்யாசி 17

கல்லென பாரமாய் இருந்த இமைகள் சிரமப்பட்டு திறக்க, எழ முயன்றவள் தோய்ந்து மீண்டும் படுக்கையில் விழுந்தாள்.

உள்ளே வந்த ராகுல், தான் வாங்கி வந்த மருந்து பையை வைத்து விட்டு தமிழை பார்த்து நின்றான் யோசனையாய்.

அவளின் திடீர் காய்ச்சலுக்கான காரணம் விளங்கவில்லை அவனுக்கு.

“தமிழு, இந்த கசாயத்தை குடிச்சா எந்த காய்ச்சலா இருந்தாலும் ரெண்டே நாள்ல ஓடி போயிடும். கொஞ்ச கசப்பா இருக்கும். கண்ணை மூடிட்டு குடிச்சிடு” என்று அவளை உட்கார வைத்து, கையில் ஆற்றிக் கொண்டிருந்த கசாயத்தை தந்தார் பார்வதி.

மறுப்பேதும் சொல்லாமல் அதை வாங்கி குடித்த தமிழை பார்த்து ராகுல் முகம் அஷ்டகோணலாக சுருங்கியது.

‘தனக்கு காய்ச்சல் வரும் போது அம்மா தரும் அதே கசாயம். வாயில் வைக்க முடியாது. அத்தனை கசப்பு! கொஞ்சம் குடித்தாலும் குமட்டி கொண்டு வரும் ஊவேக்’ என்று அவன் எண்ணம் ஓட,
சிறிதும் முக மாற்றம் இன்றி அதை பருகியவளை பார்த்து இவன் புருவங்கள் வியப்பில் உயர்ந்தன.

“நான் வேணா சக்கர எடுத்து தரவா?” ராகுல் பரிதாபமாக கேட்க, தமிழ் வேண்டாமென தலையசைத்தாள்.

“ஏய், உனக்கு உண்மையிலேயே கசப்பா இல்லையா?”

“இதைவிட அதிகமான கசப்பை வாழ்க்கையில பாத்துட்டேன். அதோட, இதுல கசப்ப விட, அம்மாவோட அன்பு தான் அதிகமா தெரியுது” என்று தளர்ந்த குரலில் சொல்லிவிட்டு படுத்துக் கொண்டாள்.

அன்றிரவு தமிழுக்கு மீண்டும் காய்ச்சல் அதிகமாக, ராகுல் வெகுநேரம் தூங்காமல் அவளுக்கு நெற்றி பற்று வைத்து கொண்டிருந்தான்.

காய்ச்சலின் வேகத்தில் அவள் ஏதேதோ பிதற்றினாள். புரியாத வார்த்தைகளை முனங்கினாள். அடிக்கடி பயந்து துடித்து அலறினாள்.

அவளின் கதகதத்த உடலை தன் மேல் சாய்த்து கொண்டு அவள் முதுகை வருடி கொடுத்தபடி உறங்கி போயிருந்தான் இவன்.

காலை அலாரம் அவனை எழுப்பி விட, அவன் மனையாள் காய்ச்சல் விட்டு, மாத்திரை மயக்கத்தில் உறங்கி கிடந்தாள்.

இரவில் சரியான தூக்கம் இல்லாததால் விண்ணென்று வலித்த நெற்றியை தேய்த்தபடி எழுந்து குளிக்க நகர்ந்தான்.

பகல் முழுவதும் பார்வதி அவளை கவனித்து கொள்ள, இருவரும் காட்டிய அக்கறையில், விளக்க முடியாத ஏதோவொரு நிறைவு அவள் மனதை நிறைத்தது.

பார்வதி சூடு பறக்க ரவை கஞ்சி செய்து கொடுக்க, ராகுல் அதை இதமாக ஆற வைத்து அவளிடம் நீட்ட,
தமிழ் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் என்னவென்று புருவம் உயர்த்த, “நான் உனக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்கிறேன் இல்ல ராகுல்?” என்றாள் வாட்டமாய்.

“ம்ம் ஆமா, ரொம்ப படுத்தற டீ என்னை, இந்த காய்ச்சல் உனக்கு வந்தாலும் வந்துச்சு, நீங்க என்னவோ பெரிய மகாராணி மாதிரி, நான் என்னவோ உனக்கு சேவகன் மாதிரி ஆகி போச்சு என் நிலைமை” என்றவன் நொந்து கொண்ட விதத்தில் இவளும் சோர்வாய் சிரித்து வைத்தாள்.

அவனிடமிருந்து கஞ்சியை வாங்கி, தானே மெதுமெதுவாக பருகலானாள்.

தமிழ்ச்செல்வி படுக்கையில் இருந்து எழ இரண்டு நாட்கள் ஆகின.

அடுத்தடுத்த நாட்களில் காய்ச்சல் முழுமையாக குணமானது. அவளும் புத்துணர்வோடு வேலைகளைச் செய்ய ஆரம்பித்திருந்தாள்.

துணிகளை அயர்ன் செய்து மடித்து வைத்து கொண்டிருக்க, அப்போது தான் வேலையிலிருந்து வந்தவன், அவள் அருகில் எதையோ வைத்து விட்டு நகர்ந்தான்.

அதை கவனித்தவள், “என்ன இது?”
என்று வினவ,

“மருந்து” ராகுலின் பதில் ஒற்றை வார்த்தையில்.

“எனக்கு தான் காய்ச்சல் குணமாயிடுச்சே”

“இது தழும்பு மருந்து, தினமும் பூசினா எந்த தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்னு டாக்டர் சொன்னார்”

அந்த மருந்தை அவன் கையில் திருப்பி கொடுத்தவள், “இந்த மருந்தை எனக்கு வாங்க தெரியாதா? முதுகுல இருக்க தழும்புக்கு என்னால எப்படி மருந்து போட முடியும்?” என்றாள்.

“ம்ம் உனக்கு ஆட்சேபனை இல்லன்னா, நானே போட்டு விடறேன்” என்று அவன் குறும்பாய் இழுக்க, அவள் அவனை காட்டமாய் முறைத்து நின்றாள்.

அவள் தலையில் தட்டியவன், “நீ முறைப்பன்னு தெரியும் டி, அம்மாகிட்ட சொல்லு அவங்க பூசி விடுவாங்க” என்று அவள் கையில் மருந்தை திணித்தான்.

“ரொம்ப தலைவலியா இருக்கு தமிழ், சூடா ஒரு காஃபி, சீக்கிரம் எடுத்து வரையா, ப்ளீஸ்” என்று சொல்ல,

அப்போது தான் அவன் சோர்ந்த முகத்தை கவனித்தவள், அவனுக்கு குளம்பி தயாரிக்க விரைந்தாள்.

ராகுல் அந்த தழும்பின் காரணத்தை பற்றி மறுபடி கேட்டு அவளை குடைய விரும்பவில்லை. தன்னிடம் சொல்ல தோன்றும் போது அவளே சொல்லட்டும் என்று விட்டு விட்டான்.

# # #

பொலிவிழந்த முகமும் ஒளியிழந்த கண்களுமாய் தங்கள் முன் அமர்ந்திருந்தவளை‌ இருவரும் காட்டமாக முறைத்தபடி இருந்தனர்.

“சும்மா முறைக்காத பா, கொஞ்சம் பிஸி அதான் உங்கள கான்டாக்ட் பண்ண முடியல. சாரி டியர்ஸ்” நிவேதா இயல்பாக பேச முயல,

“ஏன் இதுக்கு முன்ன எல்லாம் மேடம் பிஸியா இருந்ததே இல்லையா? அப்ப மட்டும் எங்க கூட சாட் பண்ண டைம் இருந்தது. அரட்டை அடிக்க டைம் இருந்தது. இப்ப, இல்லாம போச்சுன்னு நாங்க நம்பணும்?” ரேணுகா படபடவென தன் தோழியிடம் பொரிந்தாள்.

“எந்த அளவுக்கு நீ உடைஞ்சு போயிருக்கன்னு உன்ன பார்த்தாலே தெரியுது நிவி, இந்த நேரத்தில உனக்கு நாங்க சப்போர்டா இருக்கணும்னு நினைக்கிறோம். ஏன் எங்கள அவாய்ட் பண்ற?” மாலினியும் ஆதங்கமாய் கேட்டாள்.

“நான் உங்கள அவாய்ட் பண்ணல ஃப்ரண்ஸ், நான் என்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடிட்டு இருக்கேன். ராகுல் செய்ததை என்னால மன்னிக்கவும் முடியல, மறக்கவும் முடியல” நிவி கசப்பாய் மொழிய,

“அவன் செஞ்ச காரியத்தை மறக்கணும்னு நினைக்கறதை விட்டுட்டு, உன்னோட இந்த நிலைமைக்கு காரணமானவனை எப்படி அழிக்கணும்னு நினைச்சு பாரு” ரேணு ஆவேசமாக கூறினாள்.

“ஆமா நிவி, உன்ன ஏமாத்தி, கலங்க வச்சான் இல்ல, அவனை இப்படியே விட கூடாது, ஏதாவது செய்யணும்” மாலினியும் ஆதங்கமாக பேசினாள்.

அவர்கள் சொல்வதை எல்லாம் யோசனையுடன் உள்வாங்கி கொண்டவள், “என்ன… செய்யறது?” என்க.

“எங்க பழைய நிவி இருந்தா இப்படி கேட்டுட்டு இருக்க மாட்டா, இந்நேரம் அவனை எழ விடாம முடிச்சிருப்பா”

“நிவிக்கு அடிதடி எல்லாம் பிடிக்காது ரேணு. மிடில் கிளாஸ் பீப்பிள்ஸோட பெரிய மைனஸ், வேலையும் வருமானமும் இல்லாம போறது தான். ராகுல வேலையிலிருந்து உன்னால தூக்க முடியுமில்ல?” மாலினி கேட்க,

நிவேதா ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.

“முதல்ல அதை செய்” தோழிகள் இருவரும் சுலபமாக சொல்லிவிட்டு சென்றிருந்தனர். ஆனால், நிவேதாவினால் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

ராகுலுக்கு அவன் வேலை மீது எத்தனை பிடிப்பு என்று இவளுக்கு நன்றாகவே தெரியும். அதனால் இவள் மனம் தயங்கவே செய்தது.

அவனை பழிவாங்குவதை விட முக்கியம் அவன் நினைவுகளை தன்னிலிருந்து பிரித்து எடுப்பது தான் என் எண்ணிக் கொண்டாள். ஒருவேளை அவனை பழிதீர்த்து கொண்டால் தான் தன்னுள் கொந்தளிக்கும் எண்ணங்கள் அமைதி பெறுமோ! என்ற கேள்வியில் அவளின் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது.

# # #

தமிழ்ச்செல்வி வழக்கம் போல வீட்டு வேலைகளில் மும்முரமாக இருக்க,
ராகுல் கிருஷ்ணன் சிரத்தையாக தன் கைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தான்.

இருவரையும் மாற்றி மாற்றி கவனித்து கொண்டிருந்த பார்வதிக்கு தன் தலையில் அடித்து கொள்ளலாம் போல இருந்தது.

“சரியான டம்மி பீஸ் டா நீ, வெட்டி வம்புக்கும் வாய் சவடிலுக்கும் மட்டும் தான் நீ லாயக்கு” பார்வதி மகனை காட்டமாக ஏச,

நிமிர்ந்தவன், “சும்மா செல்ஃபோன் நோண்டிட்டு இருக்கற சிங்கத்தை சொரண்டி பார்க்காத பாரு, அப்பறம் கலவரம் ஆகிடும் பாத்துக்க” அவனும் அவருக்கு சமமாய் வாய் அடித்தான்.

“போடா புண்ணாக்கு, உன் வெத்து வேட்டு பில்டப்ப விட்டுட்டு ஆகற வேலை ஏதாவது செய்றியா”

“இப்ப என்ன ஆகாத வேலை செஞ்சுட்டேனா நானு? தேடி வந்து என் இமேஜ்ஜ டேமேஜ் பண்ணிற”

“பின்ன என்ன? கல்யாணம் முடிஞ்சு மாச கணக்குல ஆகுது. அவ வீடே கதின்னு இருக்கா, நீ வேலை வேலைன்னு ஓடற. லீவ் நாள்ல கூட உன் பொண்டாட்டிய சினிமா, ஓட்டல்னு அழைச்சிட்டு போகணும்னு உன் மரமண்டைக்கு தோணலையே டா” என்று படபடத்தார்.

“அட நீ வேற போ ம்மா, வெளியே போலாமான்னு கேட்டாலே, அவ என்னை எரிக்கற மாதிரி பாக்கறா, நான் என்ன செய்யட்டும்?” அவனிடம் அலுப்பாக பதில் வந்தது.

“என்கிட்ட கூட நீ இவ்வளவு பயந்தது இல்லையே டா? அவளை பார்த்து என்னவோ இப்படி நடுங்குற” பார்வதி கிண்டலாகவே கேட்க,

“ப்ச் பயமில்ல ம்மா, இது எல்லாத்துக்கும் காரணம் நான் தான, பாவம். அவளையும் குறை சொல்ல முடியாது என்னை ஏத்துக்க முடியாம தவிச்சு போறா” அவன் சங்கடமாய் சொல்ல, அவர் முகமும் சுருங்கி போனது.

“முதல்ல நீ தமிழ மனசார ஏத்துக்கிட்டயா கண்ணா?” அவரின் கேள்வி சந்தேகமாக எழ,

“என் மனைவி தமிழ் தான்னு திரும்ப திரும்ப என் மனசுல பதிய வச்சுட்டே இருக்கேன் ம்மா. தமிழ்கிட்டையும் பிரண்ட்டா மட்டும் இல்லாம கணவனா உரிமை எடுத்து பழக தான் ட்ரை பண்றேன். ஆனா?” ராகுல் தன் மன போராட்டத்தை அம்மாவிடம் மறைக்காமல் சொல்லி விட்டான். தனக்குரியவர்களிடம் எதையும் மறைத்து பழக்கமில்லை அவனுக்கு.

“வாழ்க்கைய ப்ளான் பண்ணி எல்லாம் வாழ முடியாது ராகுல். அப்படி செஞ்சா அதுக்கு பேரு வாழ்றேன்னு அர்த்தமில்லை.”

“…”

“தமிழ் எதையும் வெளிப்படையா பேசற பொண்ணில்லடா. அதோட அவளுக்கு பயந்த சுபாவம் வேற, நான் சும்மா அதட்டு போட்டா கூட அப்படி நடுங்கி போறா அவ.”

“ஆமா ம்மா, அவ முன்ன இருந்தே சரியான பயந்தாங்கொள்ளி தான். லெக்சரர் சும்மா கோபத்தில திட்டி, எல்லாரையும் பென்ச் மேல ஏறி நிக்க பனிஷ் பண்ணா கூட முதல் ஆளா அவ தான்‌ ஏறி நிப்பா” என்று சொல்லி ராகுல் மென்மையாய் புன்னகைத்தான் பழைய பசுமையான நினைவுகளில்.

“எப்பவும் இப்படியே சிரிச்சிட்டு இரு கண்ணா. எல்லாமே சீக்கிரமே சரியா போயிடும்” என்று வேண்டுதலாய் அவன் கேசத்தை வருடி தர,

“எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு ம்மா. ஆனா என்ன? உன் மருமக தான் ஒத்தே வர மாட்டேங்கிறா” என்று செல்லமாக நொடிந்து கொண்டான் அவன்.

“ம்ம் சரிதான். போடா போய் ரெடியாகு. என் மருமக உன் கூட இப்ப வருவா, அதுக்கு இந்த மாமியார் பொறுப்பு” என்று சொல்ல மகிழ்ந்தவன்,
தன் அம்மாவின் இரு கன்னங்களை கிள்ளி, “அம்மான்னா அம்மா தான்” என்று செல்லம் கொஞ்சினான்.

அவன் கையை தட்டி விட்டவர், “ஆனா, யாருக்கும் அடங்காம திமிரா சுத்திட்டு இருந்த இல்ல. இப்ப, என் மருமக உன்ன பெட்டி பாம்பா அடக்கி வச்சிட்டா. அதுவரைக்கும் எனக்கு ரொம்ப சந்தோசந்தான் பா” என்று பார்வதி சிலாகித்து கொள்ள,

ராகுல் ‘அப்படியா?’ என்பது போல் அம்மாவை முறைத்து வைத்தான்.

தமிழ் அவன் வாழ்வில் வந்த பிறகு, அவனுள் ஏற்பட்ட மாற்றம் அவனுக்கும் புரிவதாய்.

“இந்த வேலையெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ சீக்கிரம் கிளம்பு” பார்வதி தமிழிடம் சொல்ல,

“எங்க ம்மா?”

“அவன் உன்ன வெளிய அழைச்சிட்டு போறானாம்.”

“எதுக்கு?”

“ம்ம் கேள்வி கேட்டுட்டே நிப்பியா? சீக்கிரம் கிளம்புற வழிய பாரு.”

“நான் போகல ம்மா” தமிழ் மறுத்து சொல்ல,

“என்னை எதிர்த்து பேச கூட ஆரம்பிச்சுட்டையா?” பார்வதி அதிகார தோரணையில் மிரட்டினார்.

தமிழ் அவரை வேறாக பார்த்து, “ஏம்மா? நீங்க எனக்கு மாமியார் ஆகணும்னு பாக்கறிங்களா?” என்று கேட்க, அவர் விழிகள் தானாய் தாழ்ந்தன.

“இல்ல தமிழ், உனக்கும் அம்மாவ இருக்கணும்னு தான் நினைக்கிறேன். நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா வாழறதை பார்க்கணும்னு ஆசைபடறேன். என் ஆசை தப்பில்லையே?” என்று பரிவாய் சொன்ன பார்வதியின் பார்வையில் ஒருவித எதிர்பார்ப்பும் தொற்றி இருந்தது.

சின்னவள் மேலும் மறுத்து பேச இயலாமல் நகர்ந்தாள்.

பெரிதாக அலங்காரம் ஏதுமின்றி, சேலை மட்டும் மாற்றிக் கொண்டு, நீண்ட பின்னல் அவள் இடை கீழே நீண்டு தொங்க, இயல்பான அழகோடு வந்து நின்றாள் தமிழ்.

ராகுல் பைக்கை உயிர்பிக்க, அவள் பின்னால் அமர்ந்தவுடன் அவனிதழோரம் குறுஞ்சிரிப்பு விரிய, வண்டி வேகம் பிடித்தது.

‘நீ கூப்பிட்டா நான் வரமாட்டேன்னு அம்மாகிட்ட சொல்லி என்னை கூட்டிட்டு போற இல்ல. இப்பெல்லாம் ஏன் உன் புத்தி இப்படி தாறுமாறா அலையுதுன்னு தெரியில? உனக்கு என் நிலைமைய எப்படி புரிய வைப்பேன்? சொன்னாலும் உன்னால புரிஞ்சுக்க முடியுமான்னு தெரியிலேயே?’ அவள் மனம் குழம்பி தவிப்புற்றது.

நேராக அவளை சினிமாவிற்கு தான் அழைத்து சென்றான். திரைப்படம் நன்றாகவே இருந்தது. நகைச்சுவை படம் தான்.

ஒரு நேரத்திற்கு பிறகு, தமிழால் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை. இருகைகளாலும் வாயைப் பொத்திக்கொண்டு கண்களில் நீர் கசியுமளவு சிரித்து விட்டாள்.

அவளின் தாங்க முடியாத கண்ணீரையும் கவலையும் மட்டுமே சமீபமாக பார்த்து பழக்கப்பட்டவன், அவளின் தாங்க முடியாத சிரிப்பை பார்த்து, படத்தை மறந்து ராகுல் அவளை ரசித்திருந்தான்.

படம் முடிந்து இருவரும் வெளியே வர, “படம் உனக்கு ரொம்ப பிடிச்சது போல” ராகுல் கேட்க,

தமிழ், “ம்ம் ரொம்ப நாளைக்கு அப்புறம் படம் பார்த்தேன். உண்மையிலேயே படம் நல்லாயிருந்தது” என்றாள்.

“ஆமா, நீ கடைசியா பார்த்த படம் எது?”

தமிழ் படத்தின் பெயரை சொல்ல அவன் தேங்கி நின்று விட்டான்.

“ஏய், அது நம்ம ஃப்ரண்ட்ஸோட நாம கடைசியா சேர்ந்து பார்த்த படம் தான, அதுக்கு அப்புறம் நீ சினிமாக்கே போனதில்லையா?” ராகுல் நம்ப முடியாமல் கேட்க, அவள் இல்லையென்று தலையசைத்தாள்.

“அப்ப நீ சேகர் கூட எந்த படமும்… ம்க்கும்” மேலெழுந்த வார்த்தைகளை தொண்டையோடு விழுங்கி கொண்டான் அவன்.

அவன் கேட்க முயன்றது அவளுக்கும் புரிய, அவள் ‘இல்லை’ என்று தலையசைத்து மௌனமாகவே நடந்தாள்.

“…?”

அதற்கு மேல் அவனும் தேவையற்ற பேச்சை வளர்க்க விரும்பவில்லை. அமைதியாக உணவகத்திற்கு அழைத்து வந்திருந்தான்.

அவன் தேர்ந்தெடுத்த உணவு வகைகள் சுவையாகவே இருந்தன. ஆனால் தமிழ் தான் அதில் மனம் லயிக்காமல் சாப்பிட்டாள்.

ராகுல் உணவை அரைகுறையாக கொரித்தவாறே தீவிரமாக எதிர்புறமாய் நோட்டம் விட்டு கொண்டிருந்தான்.

அவன் பார்வையில் விசமம் தொனிக்க, இவளும் பின்புறம் திரும்பி பார்த்தாள்.

அங்கே, ஒரு இளம் ஜோடி, ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஊட்டி விட்டபடியே, கைகள் பின்ன, கால்கள் உரச காதல் மொழி பரிமாறி, உல்லாசமாய் இருந்தனர்.

அந்த அரை வெளிச்சத்தில், அவர்களை பார்த்த இவளின் முகம் அஷ்ட கோணலாகியது.

ராகுலின் தோளை தட்டி, “வெட்கமே இல்லாம அவங்கள பார்த்துவிட்டு இருக்க சீக்கிரம் சாப்பிட்டு தொலை டா” என்று முகம் சுளித்தாள்.

“ஏய், அதில்ல டி, அவங்களும் புதுசா கல்யாணம் ஆனவங்க போல” என்று கிசுகிசுத்தான் ராகுல்.

“அதுக்கு பப்ளிக்ல இப்படியா அசிங்கமா நடந்துப்பாங்க ச்சே.”

“இதுலென்ன இருக்கு. சினிமால ஹீரோ, ஹீரோயின் ரொமான்ஸ் சீன நாம தான ரசிச்சு பார்க்கிறோம். இதையும் அப்படி நினைச்சுக்க வேண்டியதுதான்” என்றான் அவன் சாதாரணமாய்.

அவள் தன் தலையில் அடித்து கொண்டு, “உன்ன எல்லாம் திருத்தவே முடியாது டா” அவள் சொல்லி முறைக்க,

அவன் அசட்டு வழிய இளித்து விட்டு, நல்ல பிள்ளை போல சாப்பிட தொடங்கினான்.

அவளும் சாப்பிட தொடங்க, சற்று நேர அமைதிக்கு பின், “நாமளும்… புது கல்யாண ஜோடி தான் தமிழ்” என்று சொல்ல, துணுக்குற்று நிமிர்ந்தாள்.
அவனின் ஏக்க பார்வை அவள் முகத்தில் பதிந்து இருந்தது.

அங்கு பரவி இருந்த அரை வெளிச்சமும் ஆர்பாட்டம் இல்லாத அமைதியும், அவன் மனதின் மெல்லிய அசைவுகளையும் அவளுக்குள் மடைமாற்றம் செய்வதாய்.

அவன் விழி தீண்டலில் இவளின் பெண்மை விதிர்க்க, விழிகள் கீழே தாழ்ந்தன.

அவர்கள் மேசையில் மெலிதாய் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி, அந்த ஏந்திழைக்கு போட்டியாய் உருகி கொண்டிருக்க,

அவளவன், அவள் மலர் கரம் பற்றி மென்மையாய் அழுத்த, பறவைகள் உலர வைக்கும் ஈர சிறகாய், அவள் மனம் படபடவென அடித்து கொண்டது.

அவள் பூ விரல்களில் உரிமையுடன் இதழ் பதித்தான் அவன்!

கையை விலக்கிக் கொள்ளவும் மறந்து விரைத்து இருந்தாள் அவள்!

காதல்காரனின் இரு கரங்களுக்கிடையே மெல்லியலாளின் கரம் பத்திரமாய் சிறைப்பட்டது.

அத்தகைய இன்ப வேளையில் அவளின் கண்கள் கலங்கிய காரணம் மட்டும் அவனுக்கு புரியவில்லை. சங்கடமாய் அவள் கையை விடுவித்தான்.

தமிழ் ஏதும் பேசாமல், கலக்கத்தோடு அங்கிருந்து செல்ல, ராகுலுக்கு அவள் மனநிலை புரிவதாக இல்லை.

தான் நெருங்கி நெருங்கி வர, அவள் விலகி விலகி செல்ல, எத்தனை நாட்கள் இந்த நாடகம் நீளும் என்று தெரியாமல் அவனும் சலிப்பாக எழுந்து சென்றான்.

# # #

காதல்காரன் வருவான்…