MM 6

MM 6

மாயவனின் மயிலிறகே

அத்தியாயம் 6

மாற்றம் ஒன்றே நிலையானது. நேற்று இருந்த மனநிலை இன்று இருப்பதில்லை. இன்று போல் நாளை விடிவதில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் புது அனுபவத்தை வழங்கிகொண்டேதான் இருக்கிறது. அது நல்லதோ? கெட்டதோ? சூழ்நிலையை பொறுத்தது.

டாக்டர். சார்லஸ் பாப்புவையும், அவள் ஸ்கேன் ரிப்போர்ட்டுகளையும் நன்கு பரிசோதித்து தலையில் வேறு ஒன்றும் பாதிப்பு இல்லை என்றும், அடிபட்டதில் நினைவடுக்குகளில் ஏற்பட்ட பாதிப்பால் இப்போது ஆறு வயது சிறுமியாக உணர்கிறாள். அதுவும் ஆறு வயது வரை நிகழ்ந்தது முழுமையாக எதுவும் நினைவில் இல்லை.

பேசும் மொழி, இடதுகை, வலது கை பழக்கங்கள், சில திறமைகள் உதாரணத்திற்கு டான்சராக இருந்தால் தானாக நடன அசைவுகள் இயல்பாகவே வெளிப்படும், ஓவியராக இருந்தால் இப்போதும் நன்றாக படம் வரைவர். இதுபோன்ற நினைவுகள் அழியாது. நினைவுகளை தட்டி எழுப்பக்கூடிய எதாவது ஒரு விசயத்தை பார்த்தாலோ, கேட்டாலோ நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மீளலாம்.

உள்ளம்தான் குழந்தையே தவிர உடல் இல்லை. அதனால் ஹார்மோன்களின் மாற்றத்தால் வயதுக்குரிய உணர்வுகள் இருக்கும். மற்ற இயல்பான உடலின் வேலைகள் நடந்துகொண்டேதான் இருக்கும். அதை பக்குவமாக எடுத்து கூறினால் புரிந்து கொள்வார்கள் என்று கூறி, மூளை நரம்புகள் வலுப்பெற மருந்துகளை எழுதிக்கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.

இதற்கிடையில் இவளை பற்றி யாரென்று அறிய முற்பட்ட போது முட்டுச்சந்தில் முட்டிக் கொள்ளும் நிலைதான். எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. விளம்பரம் கொடுத்து பார்க்கலாம் என்றாலோ அவளது மனநிலை அதற்கும் தயாராக இல்லாதது பெரும் பின்னடைவாகவே இருந்தது. வேறு வழியே இல்லாமல் அவளது பொறுப்பை முழுதாக ஏற்றான் அவளின் ஜித்து.

அதேபோல பாப்புவும் ஜானகி சொல்லி கொடுக்க, தன் அத்தியாவசிய தேவைகளை தானே நிறைவேற்றிக் கொள்ள கற்றுக்கொண்டாள். ஆனாலும் அவள் ஜித்துவை விட்டபாடில்லை… காலையில் வருபவன் அவளுடன் சேர்ந்து சின்ரல்லா, ராஜா ராணி, மான்ஸ்டர் கதைகள் என தனது குழந்தை பருவத்தையும் மீட்டுக்கொண்டிருந்தான்.

அவளுடன் சேர்ந்து லூட்டி அடித்துவிட்டு, தன் காலை உணவையும் அவளோடு சேர்ந்து முடித்துவிட்டு அலுவலகம் செல்வான் . அதுவும் ஆயிரம் சமாதானங்கள் கூறி அவள் சம்மதித்த பின்னரே. அவளின் சிரிப்பு சத்தமும் குறும்பு பேச்சும் அந்த நாள் முழுதும் அவன் காதில் எதிரொலித்துக்கொண்டே இருக்கும்.

இதுவே அவள் நினைவுகளை மறக்காமல் இருந்திருந்தால் அவன் நிலை அறையின் வாயிலோடு நின்றிருக்கும். இப்போது ஆறு வயது சிறுமியாக அவளின் நினைவுகள் திரும்பியதாலே அவளுடனான இந்த உறவு.

சில உறவுகளுக்கு பெயர் வைக்க முடியாது. ஆனால் பெயர் வைத்த உறவுகளுக்குள் இல்லாத அன்பும் பிணைப்பும் இதில் அதிகமாகவே இருக்கும். அப்படி ஒரு உறவுநிலைதான் இவர்களுடையது. இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பதை அவன் அறியாமல் இல்லை.

ஒற்றை மரமாய் தனித்து நின்றவனுக்கு அடியில் சிறு தளிர் முளைத்தது போல இவளின் பாதுகாப்பு என்னுடையது என பேணி காக்க முயலுகிறான்.

அவனுக்கு இது அவசியமில்லாத வேலைதான். அவளை மருத்துவமனையின் பொறுப்பில் விட்டு சென்றிருக்க முடியும்தான். ஆனால் முடியவில்லை. ஏதோ ஒரு உந்துசக்தி இவளை நோக்கி விசையை செலுத்த அவனும் அதன்போக்கில் சென்று கொண்டிருந்தான்.

இரு விழிகளும் சிமிட்டகூட மறந்து விட்டனவோ! என எண்ணும் படியாய் அறையின் வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த டீன்ஏஜ் குழந்தை. ஏதாவது அறையை நெருங்கும் சத்தம் கேட்டால் பரபரப்பாவதும், அது கடந்து சென்றதும் சோக ஸ்மைலி போல உதடு வளைவதும் இந்த ஆறு நாட்களாக வாடிக்கையாகிவிட்டது.

“ஜித்து உன்கூட டூ என்னை பார்க்க வரவே இல்ல நீ ஒன்.. டூ.. த்ரீ.. ஃபோர் .. ஃபைவ்.. சிக்ஸ்.. டேய்ஸ் ஆகுது எனக்கு அழுக அழுகையா வருது” என முணுமுணுத்தவாறே கலங்கிய கண்களை புறங்கையால் துடைத்துக் கொண்டு தலையணையை அணைத்துக் கொண்டாள். ஆம் ஜித்து அவளை ஆறு நாட்களாக காண வரவில்லை.

முதல் நாள் சாதாரனமாக இருந்தவளின் அவனுக்கான தேடல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. மருத்துவமனையின் டாக்டர்கள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் பாப்பு.. பாப்பு என இவளை செல்லமாக தாங்கினாலும் இவள் தேடலோ அவள் ஜித்துவுடனே நின்றுவிட்டது.

“கண்ணில் படாதது கருத்தில் நிற்காது” இது மற்றவற்றிற்கு பொருந்தும் ஆனால் பாசத்திற்கு அது பொருந்தாது கண்ணில் படாதது மட்டுமே கருத்தில் நிலைத்துநிற்கும். அதுபோல ஜித்துவின் மேல் கொண்ட நேசம் முன்பு இருந்ததை விட நங்கூரம் போல ஆழமாகவும் அழுத்தமாகவும் அவளுள்ளே இறங்கியது.

சஞ்சுவும் ஜானகியும் கூட பழகிய இந்த குறுகிய காலத்தில் அவனை இவ்வளவு தேடுவாள் என நினைக்கவில்லை. சமயத்தில் மருந்துகூட எடுத்துக்கொள்ளாமல் ஜித்து வந்தால்தான் என அடம்பிடிக்க ஜானகிக்குதான் மனதை என்னவோ செய்தது. அவசரப்பட்டுவிட்டோமோ! என எண்ணினார். அவருக்கு அபிஜித்திடம் பேசியது நினைவில் ஆடியது.

அன்று ஒருநாள் இடுப்பில் காயம் ஓரளவு குணமாகியிருக்க, தலையில் தலைப்பாகை போல இருந்த கட்டு, பின்னந்தலையில் பெரிய அளவில் பிளாஸ்த்திரி ஒட்டப்பட்டு அதற்கு மேல் மெல்லிய துணியால் தலையை சுற்றி கட்டு போடப்பட்டிருந்தது. மொட்டை அடித்திருந்த தலையில் முடிகள் முள்ளப்பன்றியின் முட்களை போல நீட்டிக் கொண்டிருந்தது. பெட்டில் அமர்த்தவாறு சஞ்சு கொடுத்து சென்ற பொம்மையை சேர்த்து பிரித்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

அன்றும் காலையில் வழக்கம்போல அபிஜித் அவளை காண வந்திருந்தான். மடித்துவிடப்பட்ட இளரோஜா நிற முழுக்கை சட்டை , கருமை நிற பேண்ட் அணிந்து கேசம் அவன் நடைக்கு ஏற்றவாறு தாளம் போட மற்ற பெண்கள் தன்னை ரசனையுடன் நோக்குவதை கவனியாதவனாக துள்ளலான நடையில் அவள் அறைக்குள் நுழைந்தவன்

“பாப்பு குட்டி ஜித்து வந்தாச்சு” என அறிவிப்பு விட, உடனே மின்னல் கீற்றாய் அவளிதழில் புன்னகை குடியேறியது.

அவளும் அவனிடம் கெஞ்சி, கொஞ்சி சீராடிக் கொண்டிருந்தாள். அவனும் சலிக்காமல் பொறுமையாக அவளின் சிறுபிள்ளைத்தனங்களை ரசித்து பார்த்துக்கொண்டே அவளை கவனித்துக் கொண்டு இருந்தான்.

காலை மாலை என அவளுடன் இருக்கும் இந்த நான்கு மணி நேரங்கள் அவன் தனிமைக்கு மருந்தாய், மனதில் சேமிக்க வேண்டிய அற்புத தருணங்களாக அமைந்தன.

காலை கடன்களை முடித்து உணவு உண்ண தயாராக இருந்தவள் “ஜித்து என்னை வெளிய கூட்டிட்டு போறயா? எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல ஒரே மருந்து வாடையா இருக்கு”

தலையை சாய்த்து பாவமாக இவனை பார்த்தவளை கண்டு இவனது மனமும் சற்று சாயத்தான் செய்தது. இழுத்து பிடித்தவன்

“நோ பாப்பு இப்போ வெளிய எல்லாம் போக வேண்டாம். உடம்பு சரியாகட்டும் அப்பறமா கூட்டிட்டு போறேன்”

உடனே பெட்டை விட்டு இறங்கி தடுமாறியவாறு
தான் அனிந்திருந்த மருத்துவ உடையை இருபுறமும் விரித்து பிடித்து சுற்றிக் காட்டியவள்

“நான் நால்லாயிருக்கேன் ஜித்து பாரேன் ப்ளீஸ் ப்ளீஸ் கூட்டிட்டு போயேன்”. அவளின் குழந்தைதனத்தில் அடங்க மறுத்த புன்னகையை அடக்கியவன்

“சரி சரி ஆனா டாக்டர்கிட்ட கேட்டுட்டுதான் கூட்டிட்டு போவேன். முதல்ல வந்து சாப்பிடு வா” என்றவன் தானே ஊட்டி விட்டான்.

நடுநடுவே அவளும் ஊட்டி விட எதையோ நினைத்து கலங்கிய கண்களை கட்டுபடுத்தி கொண்டான். மனநிறைவோடு உண்டு முடித்ததும், அவள் “போகலாமா” என கேட்க, சரியென கை பிடித்து எழுப்பியவன்

“இன்னைக்கு இங்கயே கார்டனை சுத்தி பாக்கலாம் நல்லா குணமாகட்டும் இன்னொரு நாள் வெளிய கூட்டிட்டு போறேன் சரியா” முகம் தொங்கி போனது,

“இங்கயா!! வேணாமே வெளில போகலாம் ஜித்து” அவன் சட்டை நுனியை பிடித்து இழுத்தவாறு வினவ,

“ச்சோ. எவ்ளோ அழகு” என அவளது புசுபுசுவென்ற கன்னத்தை இரு பக்கமும் ஆட்டியவாறு

“இப்படியேவா வெளில போவாங்க” அவனது மறுப்பில் வந்த கோபத்தில் அவன் கையை தட்டி விட்டவள்

“ஏன் இதுக்கென்ன”

என்று தன் உடையின் மேலாக கை வைத்து அழுத்தி கேட்க, உடனே அவள் முகத்தில் ஒரு மாறுதல் இப்போதுதான் இந்த மாற்றம் தெரிகிறது போல, கீழே குனிந்து மேலும் மேலும் தன் அங்கங்களை தொட்டுபார்க்க அவள் முகத்தில் பதற்றம், தவிப்பு அழுகை என மாறி மாறி வர, அதை கவனித்தவன்

“பாப்பு என்னாச்சுடா எங்கேயாவது வலிக்குதா” தலையை தூக்கி அவனை பார்த்தவள்

“ஜித்து இங்க பாரு”

என அவன் கையை பிடித்து தன் வளர்ந்த அங்கத்தின் மேல் வைத்து விட்டாள். சட்டென நடந்த இந்நிகழ்வில் வெலவெலத்து போனவன் கையை வெடுக்கென இழுத்தவாறு

“பாப்பு என்ன பன்ற நீ”

அதட்டி கேட்க நினைத்தாலும் குரல் நடுங்கதான் செய்தது. கைகள் வெளிப்படையாக நடுங்க முகத்தில் முத்து முத்தாய் வியர்த்தது.

அவன் அதிர்வை கவனிக்கும் நிலையில் இவள் இல்லை. தனக்கு ஏதோ வியாதி வந்துவிட்டதை போல எண்ணிக் கொண்டாள்.

தன் மேல் கையை வைத்து “இது ஏன் ? எனக்கு இப்படி இல்லையே.. பயமா இருக்கு ஜித்து எனக்கு என்னாச்சு”

நடுங்கும் விரல்களை உதட்டின் மீது வைத்து கண்கள் கலங்க கேட்டவள் பின் ஆதரவு தேடுவது போல அவனை இறுக அணைத்துக் கொண்டாள். அணைத்ததில் மேலும் தடுமாறினான். உணர்வுகள் கட்டுக்கட்காமல் பேயாட்டம் போட்டது. அவளுக்கே தெரியாமல் அவனை முழு ஆண்மகனாக உணர வைத்துக் கொண்டிருந்தாள்.

“என்ன செய்கிறாய் நீ சிறு பிள்ளையாய் உன்னிடம் ஆதரவு தேடுபவளை இப்படியா நினைப்பாய் இது தவறு” என மனம் எடுத்துரைக்க முயன்று தன்னை சமன்படுத்தியவன் அவளை ஆறுதல் படுத்த வேண்டி அவள் தலையை தடவியவாறு

“ஒண்ணுமில்லடா பாப்பு”

என ஆறுதல் கூறினாலும் அவனுக்கு மிகுந்த தயக்கமாய், தவிப்பாய் கடவுளே இந்த பெண்ணுக்கு ஏன் இப்படி? இனி இந்த சமுதாயத்தை எவ்வாறு எதிர்கொள்ள போகிறாள்.

குழந்தைகளையே விட்டு வைக்காத அரக்கர்கள் வாழும் இடத்தில் இவளின் நிலை என்னவாகும். ம்ஹூம் இல்லை ஒன்றும் நடக்க விடமாட்டேன் இனி எதுவாக இருந்தாலும் என்னை தாண்டிதான் இவளை நெருங்கும் என அவளை எதிலிருந்தோ பாதுகாப்பவன் போல தயக்கத்தை விடுத்து இறுக அணைத்துக் கொண்டான்.

அந்த நேரம் பார்த்து ஜானகி அறையினுள் நுழைய பின்னால் சஞ்சுவும் “ஹாய் க்யூட் டாலி” என்றவாறு வந்தான். இருவரும் நின்ற நிலைய வைத்து ஏதோ சரியில்லை என்று உணர்ந்து

“அபி என்னாச்சு” ஜானகி வினவ,

கலக்கத்துடன் அவரை பார்த்தவன் கைகளை விலக்கி நகர பார்க்க எங்கே அவள் விட்டால்தானே “பாப்பு ஜானும்மா வந்துட்டாங்க அவங்க பாத்துப்பாங்கடா” இல்லை என்று தலையாட்டியவள் அவன் சட்டையை பற்றி மேலும் ஒன்றியவாறு

“பயம்மா இருக்கு ஜித்து நீயும் இரேன்” மெல்லிய குரலில் விசும்ப

“நான் இங்கதான் இருக்கேன்டா இதோ வெளிய போய் ஒரு போன் பேசிட்டு இப்ப வந்துடறேன்” என்றவன் அவளை சமாதனபடுத்திவிட்டு

“பாப்புகிட்டயே கேளுங்க ஜானுமா நான் வெளிய இருக்கேன்” என கூறி புரியாமல் பார்த்த சஞ்சுவையும் அழைத்துகொண்டு சென்று விட்டான்.

அவர்கள் சென்றபின்அவளை அழைத்து சென்று கட்டிலில் அமர்த்தியவர் நீர் அருந்த வைத்து அவள் கையை ஆறுதலாக பற்றிக் கொண்டவர்

“பாப்புக்கு எதுக்கு இந்த அழுகை” என தாடையை பிடித்து வினவ,

அபிஜித்திடம் கேட்ட அதே கேள்வியை இவரிமும் கேட்டாள். அதில் இவருமே சற்று அதிர்ந்திட அபிஜித்தின் நிலமையை நினைத்து பார்த்தவருக்கு சற்று சங்கடமாக இருந்தது. குழந்தையாய் நினைத்தாலும் இவள் குழந்தையல்லவே. அவள் தன் முகத்தையே பார்ப்பதை அறிந்தவர் ஒரு முடிவு எடுத்தவராக

“உனக்கு ஒண்ணு காட்டறேன் என்கூட வா”

என அவள் கையை பிடித்து அழைத்து சென்றவர் ஆளுயர கண்ணாடி போல தெரியும் அறைகதவின் முன் நிறுத்தியவர் அதில் அவள் பிம்பத்தை காட்டினார். முதலில் அது யாரோ என சுவாரசியமாய் பார்த்தவளுக்கு போகபோக அது தான்தான் என்பது புரிய மெல்ல அருகில் அவள் தலை முதல் பிம்பத்தை வருடியவள் சடாரென பின்னால் இரண்டு எட்டு நகர்ந்திருந்தாள்.

“ஜானும்மா…இது நான் இல்ல ந்…ந்…நான் குட்டியா இவ்வ்ளோ தான் இருப்பேன். இது வேற யாரோ” என திக்கி திக்கி கூறியவள்

“ஆனா அழகா இருக்கா” என கன்னத்தை தடவியவாறு மெல்லியதாக தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.

அவள் முணுமுணுத்தது கேட்டுவிட சிரிப்புடனே “அது நீதாண்டா”

“நானா!”

ஆவென தன் உருவத்தை நோக்கினாள். அவளை மீண்டும் அறைக்கு அழைத்து வந்தவரிடம்

“எனக்கு எதாவது வியாதியா அதான் இப்படி ஆகிட்டனா? ஆனா எனக்கு எதுவும் ஞாபகம் இல்லையே! அதனாலதான் என்னோட அப்பா அம்மா என்னை விட்டு போய்ட்டாங்களா சொல்லுங்க ஜானும்மா” அவரோ என்னடா இந்த பொண்ணு இவ்வளவு யோசிக்குது என வியந்தவர்

“ஏன்டா அப்படி கேக்கற”

“அப்பறம் நான் ஏன் இப்படி இருக்கேன் என்னோட அப்பா அம்மா எங்க” என படபடப்புடன் கேட்டாள். என்னா வேகம் என நினைத்தவர்

“நான் சொல்றத கேட்பியா பாப்பு”

“ம்..” என தலையசைக்க

“கடவுள் ஒருநாள் இந்த உலகத்துல சமத்தா இருக்க குட் கேர்ள் யாருண்ணு தேடினாராம். அப்ப இந்த பாப்புகுட்டிய பார்த்தாராம். இந்த பாப்பு குட்டிதான் பெஸ்ட் கேர்ள்னு கடவுள் கண்டுபிடிச்சாராம்… அதனால அவர் பாப்புக்கு பரிசு கொடுக்க ஆசைபட்டு, கொடுத்த பரிசுதான் இந்த அழகான உருவமாம்” என கதை போல ஏற்ற இறக்கத்துடன் கூற,

“ஓ… ஆனா அப்பா அம்மா அவங்க எங்க”

“அவங்க பாப்புவுக்கு பரிசு கொடுத்ததுக்காக கடவுளுக்கு நன்றி சொல்ல போயிருக்காங்க”

“அப்ப என்னை ஏன் கூட்டிட்டு போகல” ஜானகி நொந்தேவிட்டார் சஞ்சு கூட இவ்ளோ கேள்வி கேட்டதில்ல

“பாப்புக்கு தான் உடம்பு சரியில்லையே”

அடுத்து அவள் ஏதோ கேட்க வரவும் அவள் உதட்டின் மீது விரலை வைத்தவர்

“மூச் இனி எதுவும் பேச கூடாது தூங்கு” என படுக்க வைத்து போர்த்தி விட்டு தலையை வருடியவர் சீக்கிரமே இவ குணமாகனும் என எண்ணிக்கொண்டு திரும்பினார்.

“ஜானும்மா” அவர் திரும்பி பார்க்க “இந்த பரிசு வச்சு என்ன பண்ண, எப்படி பத்திரமா வச்சுக்க” அறியாபிள்ளையாய் கேட்க அவளை நெருங்கியவர் அவள் தலையை வருடியவாறு

“இந்த பரிசு விலைமதிப்பில்லாதது பாப்பு அதை பத்திரமா பாத்துக்கனும். சோ.. பாய்ஸ் யாரையும் இங்க..இங்க பேட் டச்ச் பண்ண விடாதே” என அந்தரங்க உருப்புகளை காட்டி கூறினார்.

” பாய்ஸா!” என யோசித்தவள் “சஞ்சுண்ணா, ஜித்துவும் கூடவா”

“அவங்க குட் பாய்ஸா? பேட் பாய்ஸா?”

“குட் பாய்ஸ் ” யோசாக்காமல் பட்டென்று கூற,

“குட் பாய்ஸ் பேட் டச்ச் பண்ண மாட்டாங்க”

“ஓ.கே இனி கிஃப்ட்ட பத்திரமா பார்த்துப்பேன் ஜானும்மா. தேங்க்யூ காட் உங்களோட கிஃப்டுக்கு அழகா இருக்கு” அவள் வெகுளிதனத்தில் கன்னத்தை தட்டி சிரித்தவர்

“தூங்குடா பாப்பு நான் அப்பறம் வரேன்”

அதில் கிளுக்கிச் சிரித்தவள் கள்ளப்பார்வை பார்க்க

“போக்கிரி ஏமாத்த பாக்கறியா தூங்கலன்னா ஊசிதான் ஆமா ” என செல்லமாய் மிரட்டினார்.

“தோ தூங்கிட்டேன்”

என சமத்தாய் தூங்க ஆரம்பித்தாள். அவளையே வாஞ்சையுடன் பார்த்தவர் பெருமூச்சுடன் கதவை சாற்றி விட்டு வந்துவிட்டார்.

ஜானகியின் அறையில் அபிஜித் தவிப்புடன் அமர்ந்திருந்தான். காபி வரவைத்து கொடுத்திருந்தான் சஞ்சு. ஆனால் அதை கவனிக்கும் மனநிலையில் அவன் இல்லை.

சஞ்சுவுக்கு அங்கு என்ன நடந்தது எதுவும் புரியவில்லை. அங்கு நடந்ததை யாரிடமும் கூற அபிஜித்தும் விரும்பவில்லை. அது பாப்புவின் அந்தரங்கம், எனக்கும் பாப்புவுக்கும் மட்டுமேயான அந்தரங்கம் இதை யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தான். சஞ்சுவும் அவன் குழப்பத்தில் இருப்பதை கண்டு தனிமை கொடுக்க விரும்பி

“நான் ரவுண்ட்ஸ் போய்ட்டு வரேன்டா அம்மா இப்ப வந்துடுவாங்க”

“ம்” என தலையசைக்க தோளில் தட்டி விட்டு சென்றுவிட்டான்.

எதுவும் கூறாமல் புரிந்து நடக்கும் உண்மையான நண்பர்கள் கிடைப்பதும் வரமே. நடந்ததில் யார் மீதும் தவறில்லை. ஆனால் ஏற்புடையதும் இல்லை என்பதை உறுதியாக எண்ணினான் அபிஜித்.

ஜானகி அவரது அறையில் பார்த்தது ஆடை படிந்த காபி கப்பை பிடித்தபடி அமர்ந்திருந்த அபிஜித்தையே. அவனது மனநிலை புரிந்தது. மௌனமாக அவன் எதிரில் அமர்ந்து இன்டர்காமில் இரண்டு காபிகளை அவரது அறைக்கு கொண்டு வரச்சொன்னார். அதில் கலைந்தவன் அவரது முகத்தை பார்க்க முடியாமல் தவறு செய்தவனை போல தலை குனிய,

“அபி என்னை பாரு” அவன் தயக்கமாக பார்க்க

“நீ தப்பான எண்ணத்தோட உன் பாப்பு கூட பழகினயா?”

சரேலென எழுந்தவன் “ம்மா பாப்பு எனக்கு குழந்தை மாதிரிம்மா” அவன் முகம் நொடியில் சூரியனின் நிறத்தை கொண்டது.

“காம் டௌன் அபி” அழுத்தமாய் வந்தது அவரது குரல்.

தன் தவறை உணர்ந்தவன் “சாரிம்மா” என மீண்டும் அமர்ந்து கொண்டான்.

“அப்பறம் ஏன் இந்த தலை குனிவு”

“அது….அது என்ன இருந்தாலும் ..பாப்பு குழந்தை இல்லையே” என வார்த்தைகள் தந்தியடித்தது.

“அதோட நீ அம்மாவும் இல்லை அபி .. எல்லாமே மாதிரிதான் சரிதான”

அவன் மௌனமாய் இருக்க பேனா தாங்கியிலிருந்து ஒரு பேனாவை எடுத்தவர் அதன் மூடியை கழட்டி பூட்டியவாறு

“இந்த உலகம் இருக்கே அபி அதோட கண்களுக்கு சிவப்பு, பச்சை, நீல நிறங்களை தெரிஞ்ச அளவுக்கு வெள்ளை நிறங்கள் தெரியாது. தெரியாதுங்கறத விட தெரிஞ்சிக்க விரும்பாது. வெள்ளை நிறத்துல விருப்பப்பட்ட நிறம் கலந்து சுவாரசியமா பார்க்கும். உங்களோட உறவும் அதுதான் என்னதான் நீ குழந்தையா பார்த்தாலும் அவ குழந்தை இல்லை அபி . அதோட இந்த உலகத்தோட கண்ணோட்டம் உங்க உறவு மேல தப்பாதான் விழும். அது அவளுக்கும் நல்லதில்ல உனக்கும் நல்லதில்ல” என எதார்தத்தை எளிமையாக உரைத்தார்.

அபிஜித் பேச்சற்று அமர்ந்திருந்தான் அவனுக்கும் புரியத்தான் செய்தது. இந்த ஒரு சம்பவமே போதுமே. அவன் முடிவெடுத்து விட்டான். எழுந்தவன் “நான் வரேன்மா பாப்புவ பாத்துக்குங்க” என கூறி சென்றுவிட்டான்.

ஜானகிக்கும் வருத்தம்தான் இருவரின் கள்ளமில்லா அன்பை கண்டவராயிற்றே. ஆனால் இதுவே வாழ்க்கையாகாதே இதற்கு மேல் இன்னும் நீண்ட தூரம் இருவருக்கும் உள்ளதே.

இந்த பிணைப்பு அவர்களின் எதிர்கால வாழ்க்கை பயணத்தை பாதிக்க கூடாது என்றால் இந்த கசப்பை கடக்கத்தான் வேண்டும் என எண்ணிக்கொண்டார். இந்த இடத்தில் இருவருக்கும் தாய் ஸ்தானத்தில் இருந்து யோசித்து சரியான வழியை காட்டினார் ஜானகி.

அவரின் அறையை விட்டு வெளியே வந்து நடந்தவனின் கால்கள் பாப்புவின் அறையின் முன் சிறிது நேரம் தேங்கியது. காலையில் இருந்த மனநிலை என்ன இப்போது இருக்கும் மனநிலை என்ன..

எனக்கு மட்டும் பாசம் நேசம் எல்லாம் வெறும் கானல் நீரா? மனம் கனத்தது உள்ளே செல்ல முயன்ற கால்களை அடக்கி விடுவிடுவென வெளியேறிவிட்டான்.

error: Content is protected !!