மறுநாள் காலை 5 மணிக்கே காயத்ரிக்கு உறக்கம் கலைந்துவிட, அறையின் வெளியே வெளிச்சம் தென்பட மெதுவாய் கதவைத் திறந்து முகம் மட்டும் வெளியே தெரியும் படி எட்டிப் பார்த்தாள்.
அங்கே காலை ஜாகிங் செல்லத் தயாராய், ஒரு கால் நாற்காலியின் மேல் வைத்தபடி கைப்பேசியைப் பார்த்துக் கொண்டு இருந்த சிவா அனிச்சையாய் அவள் பக்கம் திரும்ப,
“ஹெய்ய் !” என்று பயந்து தடுமாறி விழுந்துவிட்டான்.
“ஐயோ ! என்னைப் பார்த்தா பயந்தீங்க? ” என்றபடி காயத்ரி ஓடி வர,
“பின்ன இருட்டில் பிசாசு மாதிரிக் கதவு இடுக்கு வழியா எட்டி பார்த்தா என்ன நினைப்பாங்களாம்? அதுவும் என்னைத் தவிர யாருமே இதுவரை தங்காத ரூம்மிலிருந்து”என்று சொல்லிக்கொண்டே எழுந்தவன், அவள் நின்றிருந்த கோலம் கண்டு, தலை குனிந்து சிரிப்பை கட்டுப்படுத்த பாடுபட்டான்.
தன்னைத்தானே சந்தேகமாக பார்த்துக் கொண்டவளோ
“நான் என்ன அவ்வளவு அசிங்கமாவா இருக்கேன்?” என்று உதட்டைப் பிதுக்க,
“வாட்? அசிங்கமா? நான் அப்படி சொன்னேனா?” அவன் கண்ணில் குறும்பு மின்ன
“அப்போ ஏன் சிரிக்கறீங்க ? சொல்லுங்க”
“கூல் கூல் ! இந்த நைட் ட்ரெஸ்ஸும், உன் விரித்து விட்ட முடியும் அப்படியே பார்க்க ‘சமாரா’ மாதிரி இருக்கே…அதான்”
“யார் சமாரா?” என்று அவள் பேந்த பேந்த விழிக்க,
“ம்ம்ம் உங்க அக்கா” என்றான் மூக்கை சுருக்கி.
“எனக்கு ஏது அக்கா ?” என்று அவள் திரும்பக் கேட்க.
அவனோ தலையில் அடித்துக் கொண்டு.
“நீ ‘தி ரிங்’ படம் பாத்திருக்கியா இல்லையா ?”
“எஸ்! அதுக்கு என்ன…” என்று முடிக்கும் முன்பே புரிந்து கொண்டவள்,
“நான் என்ன பேயா ? அந்தப் பேய் சமாரா மாதிரியா இருக்கேன் ?” என்று கோவமாய் முறைக்க.
“ஹா…ஹா ! இப்போ புரியுது நீ முறைச்சா உதயா ஏன் உன் கன்னத்தைக் கிள்ளரான்னு !” என்று குறும்பாய் சொன்னவன் தன் முகத்தைச் சட்டெனக் கடினமாக்கிக் கொண்டு,
“சரி நான் ஜாகிங் போயிட்டு வரேன். நீ காலேஜ்க்கு தயாராகு” என்று சென்றுவிட்டான்.
சிறிது நேரம் கழித்து, காயத்ரியின் அறைக்கு வந்த உதயா,
“என்னப்பா நீ அதுக்குள்ள ரெடியா?“
“இல்லப்பா சீக்கிரமா தூக்கம் கலைஞ்சுப் போச்சு அதான்” என்று காயத்ரி சொல்ல, உதயா “சரி டா நானும் ஒரு 15 மினிட்ஸ்ல ரெடி ஆகிட்டு வந்துடறேன்” என்று விரைந்தாள்.
பெண்கள் இருவரும் கீழ்த்தளம் சென்ற பொழுது அங்கே சமையலறையில் பெண்ணொருவர் சமைத்துக் கொண்டிருந்தார்.
“இவங்க மரகதம்மா, நாங்க எது கேட்டாலும் இரண்டு நிமிஷத்தில் செஞ்சு கொடுத்துடுவாங்க, அவளோ ஸ்பீடு. அதுனால நாங்க செல்லமா மேகிமா’ன்னு கூப்பிடுவோம். ” என்று புன்னகைத்துக் கொண்டே டைனிங் டேபிளில் உதயா அமர, காயத்ரியும் அவள் பக்கத்தில் அமர்ந்தாள்.
“மேகிமா, இது காயத்ரி, என் பிரென்ட், இனிமே இங்கதான் இருக்க போறா. இப்போ எனக்கு ஒரு காபியும் இவளுக்குச் சாக்லேட் மில்க்கும் கிடைக்குமா ?” என்று உதயா கேட்க.
“ப்ரவுன் பாலா ?” என்றார் மேகிமா.
‘என்னது ப்ரௌன் பாலா?‘ என்று காயத்ரி யோசிக்கும் போதே உதயா அவள் காதில் “சாக்லேட் மில்க்கை தான் அவங்க அப்படி சொல்லுவாங்க” என்றாள்.
“மேகிமா எனக்கு ஒரு ஸ்டராங் காபி, சிவாக்கு அவன் ப்ரவுன் பால்” என்றபடியே கௌதமும் அலுவலகம் செல்லத் தயாராய் வந்து சேர்ந்தான். அவன் பின்னே சிவாவும்.
அனைவருக்கும் அவர் அவர்கள் கேட்ட பானங்களும் கூடவே சுட சுட காலைச் சிற்றுண்டி இட்லியும், சாம்பாரும் வந்து சேர்ந்தது.
“என்னடி தட்டைப் பார்த்து யோசிக்கிறே ? இட்லியை வச்சு எதான டாக்குமெண்ட்ரி எடுக்கப் திட்டம் போட்டு இருக்கியா?” என்று உதயா கிண்டலாகக் கேட்க.
காயத்ரியோ “இல்லடி இந்தச் சாம்பார் கிண்ணி பாரேன். வெள்ளை பீங்கான் அதுல நீல டிசைன், அதுக்குள்ள சிகப்பு சாம்பார், மேல பச்சை கொத்தமல்லித் தழை…காண்ட்ரஸ்டா பார்க்க அழகா இருக்கு டா. ஒரு நிமிஷம் இரு கேமரா கொண்டு வரேன். ஹோட்டல் மெனு டிசைன் ப்ராஜெக்ட்க்கு யூஸ் ஆகும்ல” என்று எழுந்த வேகத்திலேயே
“ஆஹா! கேமரா இங்க இல்லையே வீட்ல இருக்கு” என்று சோகமாய் அமர்ந்தாள்.
“அதுனால என்ன ? எங்கிட்ட இருக்கே. இரு கொண்டு வரேன்” என்று உதயா எழ.
“உதயாம்மா என்ன இது சாப்பிடும்பொழுது நடுவில் எழுந்து போற பழக்கம் ? உட்கார்! ” என்று சிவா மிரட்ட.
“சாரி அண்ணா” என்று தலைகவிழ்ந்து உதயா அமர.
” காயு ! நீயும் கேட்டுக்கோ. சாப்பிட உட்கார்ந்தால், சாப்பிட்டு முடிக்காமல் நடுவில் எழுந்து போனால் எனக்குப் பிடிக்காது புரியுதா. ” என்று அதட்டலாகவே சொல்ல.
“சரி” என்று அவனை நிமிர்ந்து பார்க்காமலே தலையை ஆட்டினாள் காயத்ரி.
அவள் மட்டுமே இருக்கும் வீட்டில், எது தேவை என்றாலும் அவள் தானே எழுந்து போக வேண்டும்? யார் இருக்கிறார் அவளுக்கு வந்து பரிமாற?. இருந்தாலும் இது ஒரு புது பாடம் என்று எண்ணி மனதில் பதிய வைத்துக்கொண்டாள்.
காலை உணவு முடியும் பொழுதே நால்வருக்கும் மதிய உணவும் டிபன் பாக்ஸில் பேக் செய்யப் பட்டுத் தயாராக இருந்தது.
சிறிது நேரம் கழித்து “கெளதம் நான் உதயாவையும், காயுவையும் கூட்டிண்டு கிளம்பறேன் நீ நம்ம பிளான் படி வேலையை ஆரம்பி“ என்றான் சிவா.
“டேய் நீயாடா ? காலேஜ்கா ? “ என்று புருவம் உயர்த்திய கௌதம், ஜன்னல் வழியே எட்டி பார்த்தபடி“ நம்ம சென்னையில் அதுவும் இந்த ஜூன் மாசத்தில் மழை ஏதும் பெய்யுதா ? ” என்று நக்கலடிக்க.
சிவாவோ “தலைக்கு மேலே வெள்ளம் போனதுக்கு அப்புறம்! இனி ஜான் போனா என்ன ? முழம் போனா என்ன ? லூஸ்ல விடு!” என்று கௌதமிற்கு பதில் சொன்னபடி டைனிங் அறையை விட்டு வெளியேறினான்.
அவனைப் பின்தொடர்ந்த பெண்கள் ‘இவங்க என்ன பேசிக்கிறாங்க ?’ என்று ஒன்றுமே புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
அந்தக் கருப்பு ‘ரேஞ் ரோவர்’ கார் சிவாவின் உயரத்திற்கு ஏற்றார் போல் கம்பீரமாகவே இருந்தது. மூவரும் புறப்பட்ட அரைமணி நேரத்தில் காயத்ரியின் வீட்டை அடைந்தார்கள்.
தனக்கு வேண்டியவற்றை அவள் எடுத்துவைக்க உதயாவும் சிவாவும் அவளுக்கு உதவினார்கள்.
“அண்ணா இங்க பாருங்க, இதான் காயத்ரியுடைய டெடி! ” என்று ஒரு கரடி பொம்மையைக் கொண்டு வந்தாள் உதயா.
அச்சு அசலாய் சிவாவின் கரடி பொம்மை (டெட்டி பியர் – டெட்டி) போலவே ஐந்து அடியில், க்ரீம் நிறத்தில். சற்று அதிர்ந்த சிவா தன் நடுங்கும் கைகளால் அதை வாங்கி இறுகக் கட்டிக் கொண்டான்.
உணர்ச்சிகளை வெளிக்காட்டாது இருக்க,
“காலேஜ் பேக் மட்டும் எடுத்துக்கோ காயு, மீதி எல்லாம் இங்க இருக்கட்டும். நாங்க அப்புறமா வந்து எடுத்துக்கறோம். சாவியை மட்டும் குடுத்துடு ஞாபகமா” என்று கூறிக்கொண்டே தான் அணைத்திருந்த டெட்டியுடன் காரை நோக்கிச் சென்றான்.
பெண்களும் வீட்டைப் பூட்டிக் கொண்டு காரில் ஏற, அங்கு அவனோ முன் சீட்டில் காயத்ரியின் டெடி பொம்மையை வைத்து அதற்க்கு சீட் பெல்ட் வேறு அணிவித்திருந்ததை பார்த்த உதயா,
“அண்ணா நீங்க என்ன டெட்டிய கையோட எடுத்துட்டு வந்துடீங்க? இந்த டெடி இவளோடது” என்று ஞாபகப் படுத்த.
“இல்ல நீங்க வச்சுக்கோங்க நான் வீட்டுக்கு வந்து வாங்கிக்கிறேன்” என்று காயத்ரி சொல்ல.
“அநியாயம் டீ, நான் ஒருநாள் வச்சு விளையாடிட்டு தரேன்னு சொன்னதுக்கு தராமல் இப்போது சிவா அண்ணா எடுத்து வச்சுருக்கபோ ஒன்னும் சொல்ல மாட்டேங்கற. இதெல்லாம் ட்டூ மச்சா இல்ல? அண்ணா மட்டும் உனக்கு ஸ்பெஷலா?” என்று உதயா பொய்யாய் கோவம் கொள்ள.
மௌனமாய் இருந்த காயத்ரி அவள் கன்னங்கள் சூடேறிச் சிவப்பதை மறைக்க வெளியில் வேடிக்கை பார்ப்பதுபோல் திரும்பிக் கொண்டாள்.

‘கண்டிப்பாகத் தன் மாநிறத்திற்குக் கன்னம் சிவந்தால் தெரியாது’ என்று அவள் நினைத்துக்கொள்ள, பாவம் அவள் அறியவில்லை அனைத்தையும் மீறி அந்தச் சிவப்பு அவள் கன்னங்களில் தெரியத்தான் செய்ததென்று. அதை அவனும் ரியர் வியூவ் கண்ணாடியில் பார்த்து ரசித்தவாறே தான் காரை செலுத்தினான்.

அந்தக் கலைக் கல்லூரி வளாகம் மிகப் பெரியது. வாசலிலிருந்து கட்டிடங்கள் 1கிமீ உள்தள்ளி இருக்கப் போகும் வழியில் இருபுறமும் மரங்களுடன் நடுவே பாம்பைப் போல் வளைத்துச் செல்லும் சாலை. அந்த வளாகத்தில் மொத்தம் ஐந்து கட்டிடங்கள். இவர்களது வகுப்பு இருந்த கட்டிடம் நான்கு தளங்களைக் கொண்டது. அதன் முன் பக்கம் திறந்த வெளி கேன்டீன் மரங்கள் சூழ இருந்தது.

கேன்டீன் அருகே சிவா காரை நிறுத்த அந்தக் காரைப் பார்த்து அங்கே விரைந்து வந்த இரு வாலிபர்கள் அதன் முன் நின்று வித விதமாய் செல்ஃபி எடுத்து கொள்ள துவங்கினார்.

சிவா காரை விட்டு இறங்குவதைக் கண்ட அவர்களில் ஒருவன் “சாரி சார் ! கார் கெத்தா இருந்ததா அதான் …” என்று வழிய, காரிலிருந்து உதயாவும், காயத்ரியும் இறங்குவதைக் கண்ட மற்றவன்,

“ஹே உதயா,காயு! உங்க காரா ? சூப்பர் போ அப்போ தாராளமா போட்டோ எடுத்துக்கலாம்“ என்று அவன் கைப்பேசியை எடுக்க.

உதயாவோ “ஹே வேண்டாம் இது என் கார் இல்ல சிவா அண்ணா கார்“ என்று அவர்களிடம் அவனை அறிமுகம் செய்தாள்.

“அண்ணா இது சுப்ரமணியன், அது ஸ்ரீவத்ஸன் ஷார்ட்டா சுப்பு, ஸ்ரீவதஸ்“ என்று அவர்களை அவனுக்கும் அறிமுகம் செய்தாள்.

அதன் பின்னே சற்று சகஜமான சிவா “ஹாய்! நான் சிவா, சிவா ராம் பிரசாத் ! ” என்று அவர்களுடன் கைக்குலுக்க அப்பொழுதுதான் காயத்ரிக்கு அவனின் முழு பெயர் தெரிய வந்தது.

“நான், இவன், உதயா, காயு எல்லாரும் ஒரே பெஞ்ச் கடந்த ரெண்டு வருஷமா, நாங்க அப்படியொரு திக் ஃபிரெண்ட்ஸ் ! “ என்று இரு கை விரல்களைக் கோர்த்துக் காட்டி சுப்பு சிலாகித்துக் கொண்டிருக்க

“சாரி நேரம் ஆச்சு நான் கிளம்பறேன்” என்று பொதுவாய் சொன்ன சிவா, உதயாவை நோக்கி

“உங்களைப் பிக்கப் பண்ண எத்தனை மணிக்கு வரணும் ? ” என்று கேட்க.

“கிளாஸ் 3:30 மணிக்கு முடியும் அதுக்கு அப்புறம் எப்போ வந்தாலும் ஓகே அண்ணா ! “என்றாள் உதயா.

“நாங்க இவங்கள பத்திரமா பாத்துப்போம், நீங்க நிம்மதியா கிளம்புங்க சிவா சார்.” என்றான் சுப்பு.

மெல்லிதாய் புன்னகையுடன் தலையசைத்து விடை பெற்றவன்,

காரில் ஏறிய மறுநொடியே முகத்தில் புன்சிரிப்பு மறைந்து, முகம் சிவந்து, கைமுஷ்டி இறுக, ஸ்டீயரிங் வீலை ஓங்கி குத்தினான்.

“இவன் பாத்துகிறானாம். அதையும் என்கிட்டியே சொல்றான். இடியட்!” என்று பொறுமியவன் கௌதமிற்கு கால் செய்தான்.

கௌதம் : சொல்லுடா
சிவா : …….
கெளதம் : அவங்கள ட்ராப் பணியாச்சா ?
சிவா : ……..
கெளதம் : டேய் லைன்ல இருக்கியா ? ஹலோ !
சிவா : ம்ம்ம்
கெளதம் : பேசேன்டா ஏன்டா சைலண்டா இருக்கே ?
சிவா : ஒன்னும் இல்லடா ஆபீஸ் வந்து பேசிக்கிறேன் !
கௌதம் : அதுக்கு எதுக்குடா ஃபோன் பண்ணே ?
சிவாவோ பட்டென்று அழைப்பை துண்டித்தான்.

கல்லூரி வளாகத்தை தாண்டிய அவன் கார் அவன் அலுவலகத்தை நோக்கி சாலையில் சீறிப் பாய்ந்தது

மறுமுனையில் கௌதமோ “இவன் எதுக்குக் கால் பண்ணான்? எதுக்கு ஒன்னும் பேசாம எரிஞ்சு விழறான் ? ஆஹா இன்னிக்கி அவன் காலையிலேயே நல்ல மூடுல இருக்கான் போலவே ! ” என்று பதற்றமானான்.

கல்லூரி வகுப்பறையில் …

நால்வரும் வகுப்பிற்கு வந்த நேரம் லட்சுமி

“என்னடி எங்க போனீங்க ஏன் நேத்து கிளாஸ்சுக்கு வரலை ? . மூன்றாம் ஆண்டு தொடங்கிய முதல் நாளே லீவு போட்டா நியாயமா ? ” என்று பட படக்க

“சாரி டீ ! இனிமே உன்கிட்ட சொல்லிட்டு லீவு போடறோம்” என்று காயத்ரி கண் அடித்தபடி பெஞ்சில் உட்கார்ந்து கொள்ள.

“ஆமா சுப்பு நீ ஏண்டா நேத்து வரலை ? “ என்று அவனை லட்சுமி பிடித்துக்கொள்ள

“பல் வலிடி ! “ என்றான்

“பல் வலியா! எதுனால ? “ என்று அவள் சீரியசாகக் கேட்க

“ பல்லுனால தான் “ என்றான் சுப்புவும் சீரியசாக,

அவனை முறைத்த லட்சுமி “போடா லூசு தடியா! பல்லுக்கு என்னடான்னு கேட்டேன்”

“அதைப் பல்லு கிட்டத்தானே கேட்கணும் “ என்றான் மீண்டும்.

“ கேட்கிறேன் கிட்டவா “ என்று அவள் அவனைக் கோவமாய் நெருங்கச் சுப்பு அங்கிருந்து அவள் கையில் அகப்படாமல் ஓடியே விட்டான்.

***
தன் நிறுவனத்தின் வாயிலில் காரை நிறுத்திய சிவா கோபம் சற்றும் தணியாமல் சாவியை செக்கியூரிட்டியிடம் கொடுத்துவிட்டு ஆவேசமாக லிஃப்டில் ஏறினான்.

சில நொடிகள் சிலைபோல் நின்று கொண்டிருந்தவன் ஏதோ சத்தம் கேட்டு சுயநினைவுக்கு வந்து, ஏழாவது தளத்திலிருந்த அவன் அலுவலக அறைக்குச் சென்று நேராக இருக்கையில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டான்.
‘இதுக்குதான் பயந்தேன்! இதுக்குதான் நான் அவளைத் தவிர்த்தேன்! ‘ தனக்குள்ளே பொருமினான்.
“ஏய் அந்த திவாவை கண்டுபிடிச்சிட்டேன் டா” என்று கெளதம் சொன்ன பொழுது தான் அவனும் அந்த அறையிலிருந்ததை உணர்ந்த சிவா,
“என்ன சொன்னே? என்ன? “என்று கேட்க.
“என்னடா ஏன் ஏதோ போல இருக்க? ஃபோன்லையும் உன் குரல் சரி இல்லை. டக்குன்னு கட் பண்ணிட்டே என்னாச்சு டா ? ” என்று கௌதம் அவன் தோளைப் பற்ற
” முடியலடா ! நான் காலேஜுக்கு போயிருக்கக் கூடாதோ? இதுக்கு தானேடா பயந்தேன். ஒரு வருஷம் நீ பொறுத்திருக்க கூடாதா? நான் ஏன் இப்படி ? கோவமா வருதுடா. என்னால என்னை ஏன் கட்டுப்படுத்த முடியலை? ” தலையைப் பிடித்துக்கொண்டு நாற்காலியில் சாய
விஷயம் புரிந்த கெளதம் மெதுவாக “கூடப்படிக்கிற எவனையாவது பார்த்தியா ? ”
” ஆமா ! சுப்பு, ஸ்ரீவட்சன், ஒரே பெஞ்ச் வேறயாமே! ஏன்டா நாம படிக்கும்போது பாய்ஸ் கேர்ள்ஸ் தனித்தனியா தானேடா உட்காருவோம். இதென்ன எல்லாரும் ஒரே பெஞ்சாம் ! ” என்று மறுபடி பொரும
” டேய் என்னடா இதுக்கே இப்படி குதிக்கறே! நீயா ஒரு வருஷம் பொறுமையா இருந்திருப்பே? நல்லவேளை உன் திட்டத்தை நான் மாத்தினேன்” என்று சொல்லிக் கொண்டே கெளதம, சிவா சொன்ன வாலிபர்களின் பெயர்களை கைப்பேசியில் பதித்துக் கொண்டான் .
” போட்டியா எவனாது வருவான்னு சாருக்கு பயமா இருக்கோ? ” என்று கெளதம் நக்கல் அடிக்க.
” நான் ஏன்டா பயப்பட போறேன் அதுவும் பொடி பசங்களைப் பார்த்து. இதுக்கா இத்தனை வருஷம் காத்துகிட்டு இருந்தேன் ! ” என்று சிவா மறுபடி படபடக்க.
அவன் மனதை மாற்ற கெளதம் உடனே “டேய் அதை விடுடா, நீ உள்ள வந்ததுமே நான் அந்த திவா யாருன்னு கண்டுபிடிச்சுட்டேன்னு சொன்னேன். அதைக் காதில் வாங்கினியா நீ ? ”
“யாருடா அவன் ? என்ன டிபார்ட்மென்ட் ?”
“அவன் அக்கவுண்ட்ஸ் டீமில் இருக்கான், திவாகர், லஞ்ச் அப்புறம் வரச் சொல்லிருக்கேன்” என்று கெளதம் பதிலளிக்க, சரி என்பது போல் தலையசைத்து அன்றைய வேலைகளைத் தொடங்கினான் சிவா.

error: Content is protected !!