KS 2

KS 2

காதல் சன்யாசி 2

உயர்ந்து நின்ற அந்த கம்பெனியின் முன்னே கார் நிற்க, இறங்கிய நிவேதா நிமிர்ந்த நடையோடு உள்ளே சென்றாள்.

அங்கு வேலை பார்க்கும் ஒவ்வொருவராக காலை வணக்கம் தெரிவிக்க, சின்ன தலையசைப்போடு அதை ஏற்றுக் கொண்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

வழக்கம்போல் நிவேதா நினைவில் வந்தது தமிழ்ச்செல்வி தான்!

ரிசீவரை எடுத்து, “தமிழ் செல்வி என் கேபின் வாங்க” என்று அழைப்பு விடுத்து தன் மடிக்கணினியை எடுத்து மேசையில் வைத்து உயிர்ப்பிக்க,

அடுத்த நிமிடம், அனுமதிக்கேட்டு தயக்கத்துடன் உள்ளே வந்த திவ்யா, “ஹேப்பி நியூ இயர் மேம்!” என்றாள் விரிந்த புன்னகையோடு.

நிமிர்ந்த நிவேதாவின் நெற்றி சுருங்க, “ஹேப்பி நியூ இயர் திவ்யா! தமிழ்செல்வி எங்க?” சற்றே அழுத்தமாய் அவள் கேட்க,

“எஸ் மேம் ச…சாரி மேம்!” என்று ஏதோ உளரி விட்டு திவ்யா வெளியேற,
அடுத்ததாய் தமிழ்ச்செல்வி அவள் முன் வந்து நின்றாள் மங்காத புன்னகையுடன்.

பார்வைக்கு உறுத்தாத சாதாரணமான சேலை, அவள் உடலுடனே வைத்து தைத்தது போல வாகாய் பொருந்தி இருந்தது. அதற்கு மேல் அணிந்திருக்கும் குளிர் ஸ்வெட்டர்!
நீண்ட கார் கூந்தலை வாரி எடுத்து நேர்த்தியாய் போடப்பட்ட கொண்டை! இவ்வளவு இவ்வளவே தான் தமிழ்ச்செல்வி!

அந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த இந்த இரண்டு வருட இடைவெளியில், தமிழ்ச்செல்வி அச்சடித்த சித்திரம் போல மாறாதவளாய் அப்படியே இருக்கிறாள்.

உண்மையில் உருவத்திற்கும் திறமைக்கும் சிறிதும் சம்பந்தம் காட்டாத தமிழ்ச்செல்வியின் இந்த குணத்தை எண்ணி நிவேதா பலமுறை வியந்திருக்கிறாள்.

ஆனால், தமிழ்ச்செல்வியிடம் நிவேதாவிற்கு பிடிக்காத ஒரே விசயம், அவளின் முட்டாள் தனமான மூட நம்பிக்கை தான்!

தமிழ்ச்செல்வி, “குட்மார்னிங் மேம்” வழக்கமான புன்னகையுடன் சொல்ல,

“மார்னிங் தமிழ்ச்செல்வி, என்ன விளையாட்டு இது? உங்கள கூப்பிட்டா திவ்யா வந்து நிக்கிறாங்க” நிவேதா அமர்த்தலாய் கேட்டாள்.

நிவேதாவின் கோபம் எப்போதுமே அமர்த்தலான ஒரு பார்வை, அழுத்தமான ஒரு வார்த்தையில் வெளிப்பட்டு விடும்.

“சாரி மேம், அது… இன்னைக்கு புது வருசம் பிறந்திருக்கு! அதான், நீங்க என்னை!”

“ஷட்அப் நீங்க உங்க இஷ்டத்துக்கு நடந்தா எம் டி ன்னு எனக்கு என்ன மரியாதை இங்க?”

“…!” தமிழ்ச்செல்வி சங்கடத்துடன் தலைதாழ்த்தி கொண்டாள்.

“என் கம்பெனி பத்தின முழுவிவரமும் தெரிஞ்சது, எனக்கு அப்புறம் உங்களுக்கு தான். எப்பவும் என் கூட இருக்கற வேலை தான் உங்களுடையது. மறுபடியும் அதிர்ஷ்டம் அது இதுன்னு முட்டாள் தனமா செஞ்சா பேசிட்டு இருக்க மாட்டேன். மைண்ட் இட்!” என்று நிவேதா பொறுமையிழந்து அவளை எச்சரிக்க,

தமிழ்ச்செல்வி, “ஓகே மேம், மார்னிங் 10 மணிக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. 11.30 க்கு ஓட்டல் விசிட் சொல்லி இருந்தீங்க. அப்புறம், 3.20 க்கு எஸ்டேட்ஸ், ஃபேக்ட்ரி பார்க்க போகணும். இன்னைக்கு இவ்வளோ தான் மேம் புரோகிராம்” என்று பேச்சை மாற்றி வியாபார சந்திப்பிற்கான கோப்பினை அவள் பார்வைக்கு வைத்தாள்.

நிவேதாவும் அவளின் தந்திரம் புரிந்து, மெல்லிய இதழ் விரிப்புடன், அந்த கோப்பினை ஆராய ஆரம்பித்தாள்.

அன்றைய பொழுது இருவருக்கும் வழக்கம் போலவே கழிந்தது. புதுவருட பிறப்பானதால் எங்கும் விடுமுறை கொண்டாட்டங்கள் களைக்கட்டின.

சில முக்கிய சந்திப்புகள் மற்றும் வேலைக்காக மட்டுமே இன்று நிவேதா, தமிழ்ச்செல்வி வந்திருந்தனர். அதுவும் முடிய, நேரமாகவே தமிழ்ச்செல்வி கிளம்பி விட்டாள்.

தன் ஸ்கூட்டியில் எரிபொருள் நிரப்பி கொண்டு செல்ல யத்தனிக்க, “தமிழ்! தமிழ்…! தமிழ்…!” என்ற பழகிய குரலின் அழைப்பு கேட்டு சட்டென திரும்பினாள்.

‘ராகுல்! ராகுலா அது! ஆமா அவனே தானா?’

எதிர்பக்கமிருந்து தன் பைக்கை தள்ளிக்கொண்டு வந்தவனை சற்று உற்று நோக்கி, ‘ராகுல் தான்!’ என்று எண்ணும் போதே அவள் கண்களிலும் மனதிலும் மகிழ்ச்சி பொங்கியது.

அவள் அருகில் வந்தவன், அவளை பார்த்து விட்ட ஆனந்த சந்தோசத்தில் வார்த்தை வராமல் தத்தளித்தான்.

“தமிழ்! சான்ஸே இல்ல! நீ…! உன்ன இங்க பார்ப்பேன்னு கனவுல கூட நினைக்கல தெரியுமா? எப்படி இருக்க?” என்று விசாரித்தான் குரலிலும் உடலிலும் உற்சாகம் பொங்க,

“நல்லா இருக்கேன் ராகுல். நீ எப்படி இருக்க? கொடைக்கானல் எப்ப வந்த?”

“எப்பவும் போல நான் சூப்பர் இல்ல. இங்க வந்து ரெண்டு மாசமாச்சு. ஐயாவுக்கு இங்க பேங்க்ல வேலை கிடைச்சிருக்கு” காலரை தூக்கி விட்டு பெருமையாய் சொன்னான்.

“என்ன பியூன் வேலையா?” தமிழ் சட்டென கேட்டுவிட,

“மேனேஜர் வேலை ம்மா! என்ன நினச்சுகிட்ட என்னை பத்தி?” என்று அங்கலாய்த்தான் அவன்.

பின்னே எத்தனை முயற்சி செய்து ராப்பகலாய் வராத படிப்பை வாவாவென்று படித்து, நாட்டின் முதல் தரமான வங்கியில் உயர்பதவி பெற்றிருக்கிறான் அவன்.

“நீ இன்னும் மாறவே இல்லடா” என்று சொல்லி தமிழ்ச்செல்வி சிரித்து விட்டாள்.

ராகுல், “ஆனா, நீ ரொம்ப மாறிட்ட தமிழ்! சேரி, கொண்டை! என்ன? எங்கயாவது எலிமிட்டரி ஸ்கூல் டீச்சரா வேலை பார்க்கறியா?” என்று அவன் பதிலுக்கு அவளை கிண்டல் செய்ய,

“உனக்கு ரொம்ப கொழுப்பு தான்” என்று முறைப்பு காட்டினாள்.

ராகுல் நிம்மதி பெருமூச்செறிந்தான். “உன்ன பார்த்தது எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா! எத்தனை வருசம் ஆச்சு உன்ன பார்த்து! கடைசியா உன்னோட கல்யாணத்தில பார்த்தது!” உணர்ச்சி வசமாய் பேசிக்கொண்டு போனான்.

தமிழ்ச்செல்வி, “ஓவரா ஃபீல் பண்ணாத டா. பத்து வருசம் ஒண்ணும் ஆகல. மூணு வருசம் தான் ஆச்சு!” என்று அவள் சரியாக சொல்ல, ராகுல் முகம் மென்மையாய் மலர்ந்தது.

கல்லூரியில் படித்து, பழகிய காலங்கள் பசுமையாய் அவர்கள் நினைவில் இப்போதும் மாறாமல் எஞ்சி இருந்தன.

“ஆமா, எப்படி இருக்கார் உன் வீட்டுக்காரர்?” ராகுல் சேகரை பற்றி விசாரிக்க,

“அது அவர்…!” தமிழ்ச்செல்வி முழுதாய் சொல்லும் முன்,

“அவருக்கு என்ன குறைச்சல் நல்லா தான் இருப்பாரு. கல்யாணத்துக்கு அப்புறம் சேகர் தான் உலகம்னு நீ இருக்கறதுல தப்பில்ல. ஆனா, இத்தனை வருசத்துல ஒருமுறை கூட, எங்களுக்கு ஃபோன் பண்ணி பேசனும்னு தோணல இல்ல உனக்கு! நீயெல்லாம் ஒரு ஃபிரண்ட்!” ராகுல் இந்த மூன்று வருட கோபத்தை அவளிடம் ஒன்றாய் காட்டினான்.

அவன் காரமாய் பேச, ஏனோ தமிழ்ச்செல்வியின் கண்கள் கலங்கின.

“நம்ம ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் ஒட்டு மொத்தமா மறந்திட்ட இல்ல நீ!” அவன் ஆற்றாமல் மேலும் பேச,

“நம்ம ஃப்ரண்ட்ஸ எப்படி டா என்னால மறக்க முடியும்? நீ, மகேஷ், ப்ரியா, தேவா, வெற்றி, வைசாலி, நான் என் குடும்பத்தோட இருந்ததை விட, உங்க கூட இருந்த நேரம் தான டா அதிகம்!” என்று கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டாள்.

“சரி சரி, அழுது வைக்காத, பார்க்க சகிக்கல” என்று ராகுல் சலிப்பு காட்ட, தமிழ் கலங்கிய விழிகளோடு சிரித்தும் விட்டாள்.

ராகுல் தன் வண்டிக்கு எரிபொருள் நிரப்பி கொண்டு வர,

“நம்ம ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்காங்க?” தமிழ்ச்செல்வி ஆர்வமாய் விசாரித்தாள்.

“ரொம்ம்ம்ப நல்லா இருக்காங்க. ப்ரியாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. மத்தவங்க எல்லாரும் நல்ல வேலையில இருக்காங்க. வாரம் தவறாம எல்லார்கிட்ட இருந்தும் ஃபோனோ, மெசேஜ்ஜோ கண்டிப்பா வந்திடும். உன்ன நான் கொடைக்கானல்ல பார்த்தேன்னு சொன்னா எல்லாரும் சந்தோசபடுவாங்க” என்று எப்போதும் போல படபடத்தான் அவன்.

“எனக்கும் நம்ம ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் சந்திச்சு பேசணும்னு ஆசையா இருக்கு டா! சரி, உன்ன பத்தி சொல்லு, அம்மாவும் அப்பாவும் நல்லா இருக்காங்களா? அவங்களையும் பார்க்கணும் போல இருக்கு!” என்று கேட்க, ராகுலின் முகம் வாடி போனது.

“என்னாச்சு டா?”

“அப்பா தவறிட்டார்!” என்று அவன் வேதனையாக சொல்ல,

“சாரி டா” என்று வருத்தம் தெரிவித்தாள்.

“அம்மா என்கூட இங்க தான் இருக்காங்க” என்று தன் அலைபேசி எண்ணை பகிர்ந்து கொண்டவன்,

“இனிமேலாவது மறக்காம ஃபோன் பண்ணு. அப்புறம், சேகர் சாரை நான் விசாரிச்சதா சொல்லு” என்று விடைபெற்றுச் சென்றான்.

அவன் சொன்னது அவள் மனதை அழுத்தினாலும், இத்தனை வருடங்கள் கழித்து, இந்த புது நாளில் தன் உயிர் தோழனை சந்தித்தது அவளுக்குள் புத்துணர்வை பரவ செய்திருந்தது.

அதே புத்துணர்வோடு அடுத்தடுத்த நாட்களும் நகர்ந்து கொண்டிருந்தன.

நிவேதா வழக்கம் போல முழுநேரமும் கம்பெனி, ஆஃபிஸ், எஸ்டேட், மீட்டிங் என்று சுற்றிக் கொண்டிருக்க, அவளோடு‌ சேர்ந்து சுற்றுவது தமிழின் கடமையாகி போயிருந்தது.

ராகுல் கிருஷ்ணனுக்கு கொடைக்கானல் வாழ்க்கை புது சுகமாய் இருக்க, இருமடங்கு உற்சாகத்துடன் தன் சேவை பணியை தொடர்ந்தான்.

வங்கி கடன், வட்டி, வரவுகளில் பல குளறுபடிகள் தென்பட்டன. முதலில் அதை களைவது அவசியம் என்றெண்ணிவன், வங்கிக்கடன் பெற்று காலத்தில் திருப்பாத அனைவருக்கும் பாரபட்சமின்றி எச்சரிக்கை கடிதம் அனுப்ப உத்தரவிட்டான். அதில் பெரிய பெரிய தலைகளும் அடக்கம்.

# # #

இரவு இரண்டு மணி,

கொடைக்கானல் கடுங்குளிரில் அந்த நட்சத்திர ஓட்டல் பதைப்பதைப்பாகி இருந்தது.

வேகமாக வந்து நின்ற காரிலிருந்து இறங்கிய நிவேதா, வேக நடையோடு உள்ளே வந்தாள். அங்கே மேனேஜர் கனகசபையும், அவளது செயலாளர் தமிழ்ச்செல்வியும் அவளை எதிர் கொண்டனர்.

ஓட்டலின் ஒருபகுதியில் தீ விபத்து ஏற்ப்பட்டது இருந்தது.

“எப்படி நடந்துச்சு?”

“மேம் அது ஷாக் அவுட் பிராப்ளம்னு சொல்லி இருக்காங்க, நாளைக்கு தான் தெரிய வரும், வேற மாதிரி ஏதாவது பிரச்சனை ஆச்சானு” அவளின் வேகத்திற்கு நடந்தபடி மேனேஜர் பதில் தந்தார்.

“ரொம்ப சுலபமா பதில் சொல்லிட்டிங்க, கனகசபை, இந்த விசயம் நம்ம ஓட்டல் பாதுகாப்புக்கு மேல கேள்வி எழ வச்சிடும், புரியுதா?”

“புரியுது மேடம், இது ஜஸ்ட் ஆக்ஸிடென்ட் தான், ஃபையர் அலாரம் கேட்டதும் உடனே ஸ்பாட்கு வந்து தீயை அணைச்சுட்டோம், இனி கவலை படற அளவுக்கு இல்ல மேடம்” அவர் தன் பணியை தான் சரியாய் செய்ததாம் விளக்கி சொன்னார்.

“யாருக்கும் ஆபத்து இல்லையே”

“இல்ல மேம், அப்ப பக்கத்துல இருந்த ஒரு ரெண்டு பேருக்கு லேசான தீக்காயம் பட்டிருக்கு, பயப்படும் படியா எதுவும் இல்ல மேம்”

அவள் மின்தூக்கியிலிருந்து வெளிவந்து அந்த ஹாலை பார்க்க, எங்கும் கரும்புகையும் பாதி எரிந்து போன பொருட்களுமாக சிதறி கிடந்தன.

மனம் சற்று சோர்ந்து போனது.

“தமிழ்செல்வி, எவ்வளவு சேதம் ஏற்பட்டு இருக்குனு பார்த்து உடனே இன்சூரன்ஸ் கிளைம் பண்ணுங்க” என்று ஆணையிட,
அதுவரை அமைதியாக உடன் வந்திருந்தவள், “எஸ் மேம்” என்றாள்.

“அப்பறம், இந்த விசயம் பெரிய இஷு ஆக கூடாது, மீடியாவுக்கு எந்த தகவலும் போக கூடாது”

“சாரி மேம், நான் இங்க வரும் முன்னமே மீடியா வந்துடுச்சு” தயக்கமாக பதில் தந்தாள்.

“அவங்களை தனியா டீல் பண்ணுங்க, இந்த நியூஸ் வெளிவராம அவங்களை சரிகட்டுங்க” அவளின் அழுத்தமான உத்தரவிற்கு இருவரும் அடிபடிந்தனர்.

அடுத்த நாள் பிரபல ஓட்டலில் தீ விபத்து என்ற செய்தி புகையாமல் அடங்கி போயிருந்தது.

# # #

காதல்காரன் வருவான்…

error: Content is protected !!