KS 21

KS 21

காதல் சன்யாசி 21

பனிகொட்டும் இரவு பொழுது, மேகத்திரைக்குள் கொஞ்சம் ஒளியை மட்டும் காட்டி தன் வரவை உணர்த்தும் பாதி நிலா வான்வலம் செய்து கொண்டிருக்கும் நேரம், அந்த மலை நாட்டில் எங்குமே அமைதியின் இரைச்சல், இவள் மனதிற்குள் அழியாத ரணமான நினைவுகளின் பேரிரைச்சல்!

“என்ன? ஆழ்ந்த யோசனை போல!” தோட்டத்தில் கவலையுடன் அமர்ந்திருந்த தமிழ்ச்செல்வியிடம் ராகுல் வந்து பேச்சு கொடுக்க, அவள் மௌனம் கலையாமல் அமர்ந்திருந்தாள்.

அவள் உடல் குளிரில் லேசாய் நடுக்கம் கண்டிருக்க, “ம்ம் கொட்டற பனியால கூட, உன் மனச குளிர வைக்க முடியல போல” என்று தன் தோளிலிருந்த போர்வையை எடுத்து அவளுக்கு போர்த்தி விட, தமிழ் அவனை வித்தியாசமாக பார்த்தாள்.

“உனக்கு கொஞ்ச கூட வருத்தம் இல்லையா டா?”

“நான் எதுக்கு வருத்தப்படணும்?”

“அந்த சாருமதி எவ்ளோ கீழ்த்தரமா திட்டம் போட்டு உன்னையும் நிவேதா மேடமையும் பிரிச்சி இருக்காங்க. உனக்கு கோபம் கூட வரலையா?” தமிழ் ஆதங்கமாக கேட்க, அவன் முகம் இறுகி போனது.

“வரல, அவங்க பணக்கார புத்தி சின்ன தனமா யோசிக்கிறது புதுசு இல்லையே. ஆனா, நிவேதாகிட்ட நான் எந்தவொரு சின்ன விசயத்தை கூட மறைச்சது இல்ல. அவளுக்கு என்மேல கொஞ்ச கூட நம்பிக்கை இல்லாம போச்சே!” விரக்தியாய் சொல்லி விட்டு பெருமூச்செறிந்தான்.

“அந்த வீடியோவ பார்த்த எல்லாரும் தான நம்மள சந்தேகபட்டாங்க?” தமிழ் பொதுப்படையாக சொல்ல,

“அம்மா என்னை சந்தேக படலையே, நம்ம ப்ரண்ட்ஸ், சொந்தக்காரங்க எல்லாரும் தான அந்த வீடியோவ பார்த்தாங்க. அவங்க யாரும் என்மேல நம்பிக்கை இழக்கலையே!”

“…”

“நீ கூட தான் தமிழ், அந்த சூழ்நிலையில அங்க உனக்கு ஏற்பட்ட அத்தனை அவமானத்துக்கு பிறகும் நிவேதா கிட்ட எனக்காக தான பேசின.”

“…”

“என்னை சுத்தி இருக்கிறவங்க எல்லாரும் என்னை நம்பும் போது, என் வாழ்நாள் முழுக்க என்னோட வருவாள்னு நான் உயிருக்குயிரா நேசிச்சவ, என்னை நம்பவே இல்ல. எனக்கு எப்படி வலிச்சது தெரியுமா?”
ராகுல் வருந்தி சொல்ல, அவன் மனதின் வலியை புரிந்தவளாய் தமிழும் மௌனமானாள்.

பனி பெய்து கொண்டே இருந்தது. இருவரிடையே நீடித்த வெறுமையான அமைதியை கலைப்பதாய், “என்ன இருந்தாலும் அந்த பணத்திமிர் பிடிச்ச சாருமதி மூக்க உடைக்கணும்!” என்று ஆத்திரமாக பேசினாள் தமிழ்ச்செல்வி.

“…?”

“அதுக்கு நீயும் நிவேதா மேடமும் மறுபடியும் ஒண்ணு சேர்ந்து அவங்க முன்னாடி வாழ்ந்து காட்டணும்!” அவள் உறுதியாக அழுத்தி சொல்ல, ராகுலின் புருவங்கள் உயர்ந்தன.

“ஓஓ இவ்வளவு நேரம் இந்த மாஸ்டர் ப்ளான் தான் யோசிச்சிட்டு இருந்தியாக்கும்?”

“ஏன்? காதலிச்சவங்க கல்யாணம் பண்ணிக்கிறது தப்பில்லையே” அவள் குருட்டு தனமாய் விடாமல் கேட்க,

“சரி தான் ஆனா… கட்டிட்டு வந்த உன்ன கைவிடறது. அதைவிட பெரிய தப்பாச்சே” அவளின் கோணல் எண்ணம் புரிந்து, ராகுல் எதிர்வாதம் செய்தான் முகத்தில் குறும்பு விரிய கண்ணடித்து.

“எப்படி இருந்தாலும் நாளைக்கு நான் உன்ன விட்டு போக தான போறேன்”
அவள் சட்டென சொல்ல,

“என்ன?”

“நாளையோட நீ சொன்ன ஏழு நாள் முடியுது. என்னை தடுக்க மாட்டேனு சொல்லியிருக்க” என்று அவள் சந்தேகமாக இழுத்தாள்.

ராகுல் நினைவு வந்தவனாக, “ச்சே ச்சே சொன்ன வார்த்தைய மீறுற பழக்கம் எனக்கில்ல” என்றான் அவளை ஆழமாய் பார்த்தபடி.

அவன் சொன்னதில் நிம்மதியுற்றவள், “நான் போனதுக்கு அப்பறம் நீ என்ன பண்ணுவ ராகுல்?” அக்கறையாக விசாரிக்க,

“ம்க்கும் அதையும் நீயே சொல்லி தொலை”

“நீ ஆசபட்ட மாதிரியே. நிவேதா மேடம கல்யாணம் செஞ்சிட்டு சந்தோசமா இருடா” என்று ஆர்வமாக சொன்னாள் அவள்.

ராகுல் அவள் இதைதான் சொல்வாள் என்று தெரிந்தவனாய், “ஐடியா சூப்பரா தான்டி இருக்கு. ஆனா, எனக்கு ரெண்டாம் தாரமா வர, நிவி சம்மதிப்பாள்னு நீ நினைக்கிற?” வேண்டுமென்றே அவளை கிளறினான்.

“அதெப்படி ரெண்டாம் தாரமாகும்?
நமக்குள்ள தான் எதுவுமே நடக்கல இல்ல்ல்…” வீம்பாய் சொல்லிக் கொண்டே போனவள், சட்டென நாக்கை கடித்து கொண்டாள்.

“என்ன என்ன? என்ன நடக்கல நமக்குள்ள?” அவன் வேகவேகமாய் கேட்க,

தமிழ், ‘என்ன உளறி தொலைச்சேன்’
என்று நெற்றியில் அடித்து கொண்டு, சங்கடத்தோடு அங்கிருந்து ஓடியே போய்விட்டாள்.

ராகுல், அவளின் துடுக்கு தனத்தை எண்ணி சிரித்தபடியே அவனும் நடந்து வர, அவன் கைப்பேசி இசைமீட்டியது.

எடுத்து பார்த்தவனின் முகம் யோசனையைப் பூசிக் கொள்ள, அழைப்பை ஏற்று காதுக்கு ஒற்றினான்.

என்னதான் முன்பே வெறுப்பில் நிவேதாவின் பெயரையும் எண்ணையும் கைப்பேசியில் அழித்து விட்டு இருந்தாலும், அவளின் எண்களை தன் நினைவில் இருந்து அழிக்க முடியவில்லை அவனால்.

“ஹலோ நிவேதா…!”

“…!”

வீண்பேச்சின்றி, அவள் கோரிக்கையை நேராக வைக்க, இவன் யோசனையோடு பதில் தந்தான்.

“தமிழ் இதை எப்படி எடுத்துப்பான்னு தெரியல நிவி, அவளுக்கு விருப்பம்னா, எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல” என்று இணைப்பை துண்டிக்க, ஒருபுறம் நிவேதாவை எண்ணி இவன் மனம் இரக்கம் கொண்டது.

அதோடு தமிழின் பைத்தியக்கார தனமான பேச்சை நினைத்து சலிப்போடு உள்ளே சென்றான்.

மறுநாள் விடியும் போதே இவளுக்குள் இதமான சுதந்திர உணர்வு பெருகியது.

‘இனியும் அவள் யாருக்கும் பாரமாக இருக்க தேவையில்லை!’

‘இனி அவள் இருபுறம் தீ பற்றிய மெழுகாய் உருக தேவையில்லை!’

இன்று காலையில் இருந்து அவள் முகத்தில் நிறைந்திருந்த சந்தோசத்தையும் பார்வையில் வெட்டும் துள்ளலையும் கவனித்தவனின் முகம் வாடியது.

அவள் இங்கு வந்த இத்தனை நாட்களில் அவள் முகத்தில் இத்தனை மலர்ச்சியையும் நிம்மதியையும் அவன் பார்த்ததில்லை.

“என்னை விட்டு போறதில உனக்கு இவ்வளவு சந்தோசமா தமிழ்?” ராகுல் முகம் சுருங்க கேட்டு விட்டான். தலைக்கு கையூன்றி படுக்கையில் இருந்து எழாமல் அவளை பார்த்திருந்தான்.

“ஆமா டா, எங்க நீயும் அம்மாவும் என்மேல காட்டற அக்கறையில மனசுமாறி உங்க கூடவே இருந்திடுவேனோன்ற, பயத்தில தான் விலகி போறேன்!”

தன் மனதை திறந்து வெளிப்படையாகவே பேசினாள். இது அவனை பிரியும் கடைசி தருவாய் என்ற எண்ணத்தில். அவள் கண்ணாடி முன்னின்று தன் நீண்ட கூந்தலை பின்னிக் கொண்டிருந்தாள்.

“நான் புரியாம தான் கேக்கறேன், மத்த பொண்ணுங்க மாதிரி புருசன், குழந்தை, குடும்பம்ன்னு வாழ‌ணுன்னு உனக்கு ஆசையே இல்லையா?”
ராகுலும் வெளிப்படையாகவே கேட்க, தமிழ் இல்லையென்று தலையாட்டினாள்.

அவன் புறம் நேராக திரும்பி நின்று,
“இப்ப என் மனசுல ஒரேயொரு எண்ணம் மட்டும் தான் இருக்கு. இப்பவே, நான் உன்ன விட்டு தூரமா போயிடணும். இனி எப்பவுமே நான் உன்ன சந்திக்கவே கூடாது!”
தமிழ் அழுத்தமாக சொல்ல, ராகுல் அதிர்ந்து போய் துள்ளி எழுந்து அமர்ந்தான்.

“அடிப்பாவி! என்ன கருங்கல் மனசு டீ உனக்கு? கொஞ்ச கூட உன் மனசுல ஈரமே இல்லையா?” என்று ஆதங்கமாக கேட்க, அவள் இறுக்கமாக நின்றாள்.

“உன்கூட இருக்கற ஒவ்வொரு நிமிசமும் நான் அனுபவிக்கிற மரண அவஸ்தை உனக்கு புரியாது டா” அவள் விரக்தியாய் சொல்ல,

“அப்ப, நீ என்னை பிரிஞ்சு அதே வேதனைய எனக்கு தரணும்னு நினைக்கிறியா?” அவன் பதில் கேள்வி வேகமாக வந்தது.

தமிழ், “வீணா பேச்சை வளர்க்காத, என் வழியில என்னை போக விடு”

ராகுல், “போடி போ! உன்ன பத்தி எனக்கு என்ன?” என்று ஆற்றாமல் சொன்னவன்,
எழுந்து வேகமாக குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

“நேத்தே என் திங்க்ஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டேன். அம்மாகிட்ட சொல்ல தான் எனக்கு பயமா இருக்கு, நீ அவங்ககிட்ட சொல்றியா ராகுல்” மூடிய கதவின் வெளியே தயக்கமாக அவள் கேட்க, படாரென கதவை திறந்தவன், “இன்னும் ஏழாவது நாள் முடியல, அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு?” என்று கேட்டுவிட்டு மறுபடி கதவடைத்துக் கொண்டான் அவன்.

“ஈவ்னிங் வரைக்கும் தான் உனக்கு டைம்” என்று சத்தமாக சொல்லி விட்டு, மறுபடி கதவை திறந்து அவன் கத்தும் முன் அறையை விட்டு வெளியேறி விட்டாள்.

பின்பு தயாராகி எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகத்துடனே ராகுல் வங்கி நோக்கி சென்று விட, அவன் இன்று என்ன சமாதானம் சொன்னாலும் தன் முடிவிலிருந்து மாறவே கூடாது என்ற உறுதியோடு மாலைப்பொழுதை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

மாலை விரைவாகவே வீட்டிற்கு வந்த ராகுல், நேராக தமிழின் முன்
ஒரு காகித கவரை நீட்டினான்.

அவள் கேள்வியாக பார்க்க, “ம்ம் என்னோட சவால்ல தோத்து போய் எனக்கு பழக்கம் இல்ல டி! உன் வேலைக்கான அப்பாயின்ட்மென்ட் லெட்டர் இது!” ராகுல் சலிப்பாக அவள் கையில் திணித்தான்.

இவள் நம்பாமல் அவசரமாய் அதை பிரித்து பார்க்க, நிலை தடுமாறித் தான் போனாள்.

“ராகுல்… எனக்காக நீ, நிவேதா மேடம் கிட்ட வேலை கேட்டியா?” அவள் நம்ப முடியாமல் கேட்டாள்.

“ச்சே ச்சே இல்ல. நான் உனக்கு வேலை தேடுற விசயம் தெரிஞ்சு அவ தான் என்கிட்ட பேசினா”

“…!”

“நீ இல்லாம கம்பனி வேலையில நிவேதாவுக்கு கை ஒடிஞ்ச மாதிரி இருக்காம். ரெண்டு மாசமா தேடியும் உன்ன போல திறமையானவங்க யாரும் அந்த வேலைக்கு அமையலையாம். நீ மறுபடியும் வேலையில சேர்ந்தால். அவ ரொம்ப சந்தோசபடுவேன்னு சொல்ல சொன்னாள்.”

ராகுல் சொல்லி நிறுத்த, தமிழ் என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி நின்றாள். அவள் நிலை மேலும் தலைகீழானது. வைத்த பந்தயத்தில் அவன் ஜெயித்து விட்டான்!

ராகுல் அவள் முகத்திற்கு நேராக விரல்களை சொடக்கிட்டு, “ஏய், உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு நீயோ? நானோ? ஆசபட்டு போட்டதில்ல. அது கடவுள் போட்ட முடிச்சு. அவ்ளோ சீக்கிரம் உன்னால விலகியோட முடியாது!” சவால் விடுபவனை போல் பேச, தமிழ் விதிர்த்து விழித்தாள்.

‘இல்ல. இது சதியால விழுந்த முடிச்சு!’ அவள் மனம் உள்ளே கூக்குரலிட்டது.

மறுபடியும் அதே சிலந்தி வலைக்குள் தான் சிறைப்பட்டதாய் உணர்ந்தாள் அவள்.

தமிழின் கலங்கிய முகம் ராகுலை இறங்க செய்தது. அவள் தோள் பற்றி இருக்கையில் அமர வைத்தவன், “இந்த வேலைக்கு போறதும் போகாததும் உன் விருப்பம் தான் தமிழ். வேலைக்கு போயாகணும்னு உனக்கு எந்த கட்டாயமும் இல்ல. நிதானமா யோசிச்சு நல்ல முடிவா எடு” என்று அறிவுறுத்தி விட்டு நகர்ந்தான்.

தமிழ்செல்வி குழம்பி தவித்தாள்.

‘இனி நீ என்ன சொன்னாலும் ராகுல் கேட்க போறதில்ல. அவனுக்கு வெட்டி பாரமா இருக்கிறதுக்கு வேலைக்கு போய் வந்தா தேவல. நிவேதா மேடம் பெருந்தன்மையா மறுபடியும் வேலை கொடுத்திருக்காங்க. வேணாம்னு சொன்னா வருத்தபடுவாங்க. இதுபோல நல்ல வேலை மறுபடியும் அமையாது’ அவளின் மனசாட்சி அலசி அறிவுரை பகிர, அவளாலும் ஒரு முடிவிற்கு தான் வர முடிந்தது.

அன்று இரவு அறைக்குள் வந்தவள்,
“நான் வேலைக்கு போறேன் ராகுல்!” சொன்ன தமிழ்ச்செல்வியின் முகத்தில் வருத்தமே மிஞ்சி இருந்தது.

ராகுல் ஆமோதித்து தலையசைத்தான். அவள் இந்த முடிவு தான் எடுப்பாள் என்று அவன் முன்னமே யூகித்து இருந்தான்.

“மறுபடியும் அதே வேலைக்கு போக போற, வாழ்த்துக்கள் டி பொண்டாட்டி!”

அவள் மௌனமாய் நின்றிருக்க, “இனிமே வீட்ட விட்டு போறேன். என்னை விட்டு போறேன்னு லூசு தனமா எதையும் உளர கூடாது. புரிஞ்சுது இல்ல”

தமிழ் தெளியாத முகத்தோடு அமைதியாய் இருக்க, “நீ என்னை பத்தி கவலைப்பட வேண்டிய அவசியமில்ல. உன் மனசார நீ என்னை ஏத்துக்கற வரைக்கும் நான் காத்திருப்பேன். அதுக்கு எவ்வளவு நாளானாலும் பரவால்ல!” ராகுல் அவளின் மன கலக்கம் புரிந்து உறுதி கூற, தமிழ் வெறுமையாய் நிமிர்ந்தாள்.

“என்னால உன்ன… கடைசி வரைக்கும் ஏத்துக்க முடியலன்னா?” அவளின் பரிதவித்த கேள்வி குத்தீட்டியாய் பாய்ந்தது அவன் நெஞ்சில்.

“…!”

“…”

“நீ என்னோட இருக்குற, இந்த சின்ன சந்தோசமே போதும் டி எனக்கு!”
உண்மையோ! பொய்யோ! ராகுல் திடமாய் சொல்ல, தமிழ் திடுக்கிட்டு போனாள்.

அவன் சாதாரணமாக சொன்னதை அவளால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அவள் அடி நெஞ்சம் நடுக்கம் கொண்டது!

# # #

விலகாத சஞ்சலத்தோடு, தமிழ்செல்வி கம்பெனிக்குள் நுழைய, அங்கிருந்த அனைவரும் அவளை வேற்று கிரக வாசியைப் போல் மிரட்சியாக பார்த்தனர். தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.

அவர்களின் பார்வையும் பேச்சும் தமிழுக்கு சற்று கோபத்தை உண்டாக்கவே செய்தன.

ரேவதி அவசரமாக சென்று தமிழ்ச்செல்வி வந்திருக்கும் சேதியை, பதற்றமாய் நிவேதாவிடம் தெரிவிக்க,
நிவேதா விரைந்து வந்து தமிழை எதிர் கொண்டாள்.

“நீங்க மறுபடியும் வேலைக்கு வர சம்மதிச்சதுல எனக்கு ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்கள் தமிழ்செல்வி” நிவேதா மென்னகையோடு அவளை வரவேற்றாள்.

“ரொம்ப நன்றி மேம். உண்மையிலேயே உங்களுக்கு பெரிய மனசு மேம்” தமிழ் நெகிழ்ச்சியாக நன்றி உரைத்தாள்.

“அப்படி எதுவும் இல்ல. நான் செஞ்ச தவறுக்கு என்னாலான சின்ன பரிகாரம். அதோட, நீங்க இல்லாம கம்பெனி நிர்வாகம் நடத்த எனக்கு கொஞ்சம் கஷ்டமாவே இருந்தது!” என்று சொல்லி மெலிதாய் புன்னகைக்க, அவளின் குழந்தை மனதை எண்ணி தமிழ் அதிசயித்தாள்.

அவளின் காதல் கோட்டை தகர்ந்ததிற்கு தானும் ஒரு காரணம் என்றிருக்க, இப்போதும் நிவேதா அவள் மீது காட்டும் பரிவை எண்ணி பிரமித்தாள்.

நிவேதா அங்கிருந்த அனைவரிடமும் தன் திடமான பார்வையை செலுத்தி, “தமிழ்ச்செல்வி மறுபடியும் நம்ம கம்பெனில ஜாயின் பண்ணியிருக்காங்க. நாம எல்லாரும் அவங்களை வாழ்த்து சொல்லி வரவேற்கலாம்” ஆணையிடும் குரலில் பேச, அங்கிருந்தவர்கள் ஒன்றும் விளங்காமல் திகைத்து நின்றவர்கள்,
சில நொடிகளில் சமாளித்துக் கொண்டு கரவொலி எழுப்பி தமிழ்ச்செல்வியை வரவேற்றனர்.

# # #

நாட்கள் மிக வேகமாக கடந்து கொண்டிருப்பதைப் போல தோன்றியது.

நிவேதா கம்பெனி வேலைகளில் எப்போதும் போல, முழு மூச்சாய் செயல்பட ஆரம்பித்து இருந்தாள்.

வீடு, அப்பா, ஆஃபீஸ், கம்பெனி, ஓட்டல்ஸ், எஸ்டேட், ஃபேக்டரி என அவள் வேறு எண்ணங்களில் மனதை செலுத்த நேரமின்றி விரைந்து கொண்டிருந்தாள்.

தமிழ்செல்வி வீடு, வேலையென பம்பரமாய் சுழன்றாள். வீட்டு வேலைகளில் பார்வதி பெரிதும் துணையாயிருந்தார்.

தமிழ்ச்செல்வியின் முன்னைய நாட்கள் திரும்பி வந்ததாகவே தோன்றின. முன்பெல்லாம், வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால், வெறுமையும் தனிமையும் மட்டுமே அவளை சூழ்ந்திருக்கும்!

இப்போது அவளுக்காக ராகுல் காத்திருந்தான். விடாப்பிடியாக காலையும் மாலையும் மனைவியை வேலைக்கு அழைத்து சென்று, வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான். தன்னை கண்டதும் அவன் இதழ் உதிர்க்கும் புன்னகை… தமிழின் பாலைவன நெஞ்சத்திலும் பால் மழை பொழிய தான் செய்தது!
என்றாலும் தாமரை இலை நீர் போல அவர்களின் வாழ்க்கை மிக தவிப்பாகவே சென்றது.

அன்பான கணவன், தாயாய் பரிவு காட்டும் பார்வதி, அழகான குடும்பம், இனிமையான வாழ்க்கை. அவள் கனவில் கூட நினைத்துப் பாராத எல்லாமே, நிஜமாகவே கிடைத்த பிறகும், ஏனோ அவளால் இந்த வாழ்வை முழுமையாய் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளுக்குள் புழுகி தவித்தாள். நீங்காத சஞ்சலத்துடனே வலம் வந்தாள்.

ராகுல் அவளிடம் தந்த வாக்குறுதியை இந்தமுறை பிசகாமல் காப்பாற்றி கொண்டு தான் இருந்தான்.

தங்களின் இல்வாழ்க்கை எந்தவித நெறுடலும் இன்றி, இருவரின் முழுமையான மன விருப்பத்தோடு தொடங்க வேண்டும் என்ற மன உறுதியுடன் காத்திருந்தான்.

காத்திருப்பு எதுவரை நீளுமோ? இல்லை சலிப்பை தந்து பாதைமாறிட தூண்டுமோ?

விடியற்காலையின் கலையாத தூக்கத்தை கலைத்து எழுந்தாள் நிவேதா.

கண்ணாடி ஜன்னல் வழியே பார்க்க, வெளியே சாரல் மழை அழகாய் தூரிக் கொண்டிருந்தது.

ஜன்னலின் அருகே அமர்ந்து, வானம் வீசிய திரவ பூக்களை ரசித்து இருந்தாள் அவள். மழைச்சாரலை விழிகளால் பார்க்கும் போதே அவள் உடல் சில்லிட்டது.

இதமாய் அவன் நினைவுகள் அனுமதியின்றி அவள் மனதில் மையம் கொண்டன.

இதே சாரல் மழையில் அன்று அவனுடன் கைகோர்த்து நனைந்த நிமிடங்கள் அவள் நினைவில் இப்போதும் தேன் வார்ப்பதாய்!

‘கிருஷ்!’

இவளை கடந்து சென்றுவிட்ட வசந்த காலம் அவன்…! என்ற உண்மை புரிய, அவள் உள்ளம் கனத்தது.

வேகமாய் ஜன்னல் திரையை மூடிவிட்டு குளியலறை நோக்கி விரைந்தாள்.

அடுத்த அரை மணியில் தயாரானவள், குறையாத கம்பீரத்துடன் படிகளில் இறங்கி வர, மகளை பெருமையாக பார்த்து புன்னகைத்தார் ராமச்சந்திரன்.

“குட் மார்னிங் டேட். ஏன் என்னை அப்படி புதுசா பார்க்கறிங்க?” என்று அவளும் இளநகையுடன் வினவ,

“என் நிவிய பழைய உறுதியோட கம்பீரமா பார்க்கும் போது சந்தோசமா இருக்கு டா” என்று அவர் உற்சாகமாய் சொன்னார்.

நிவேதா அவரை உணவு மேசை அருகே அழைத்து வந்து, தானும் அவருடனே அமர்ந்து உணவருந்தினாள்.

“எனக்கு தெரியாம, இங்க என்னென்ன நடந்திட்டு இருக்கு?”

சாருமதியின் கோபமான வார்த்தைகள் அம்பாய் பாய்ந்து, அங்கு நிலவி இருந்த அமைதியை கிழிக்க, ராமுவும் நிவியும் அவளின் கத்தலை காதில் வாங்காமல் காலை உணவில் கவனாமாயிருந்தனர்.

வேகமாய் அவர்கள் எதிரில் வந்தவள், “யாரை கேட்டு அந்த தமிழ்ச்செல்விய மறுபடியும் வேலையில சேர்த்துகிட்ட நிவி?” குறையாத ஆத்திரமாக கேட்டாள்.

“யாரை கேக்கணும்?” என்று நிவேதா நிமிர,

“உன் அம்மாவை கேக்கணும்!”

“அப்படி யாரும் எனக்கில்ல!” நிவேதா சட்டென சொல்ல, சாருமதி கொதித்து போனாள்.

“இவ பேசறதை கேட்டுட்டு நீங்களும் அமைதியா இருக்கீங்களே ராம்?” என்று கணவனிடம் முறையிட,

“உன் பாவத்துக்கு தான் நிவி பரிகாரம் தேடிட்டு இருக்கா, அது தெரியாம ஏன் இப்படி குதிக்கிற சாரு” அவரும் காரமாகவே பதில் பேசினார்.

“சும்மா ஏதாவது சொல்லாதிங்க. அந்த பிஏவை இப்பவே நம்ம கம்பெனிய விட்டு துரத்தணும். இது என்னோட ஆர்டர்” சாருமதி பிடிவாதமாக உத்தரவிட,

உணவை முடித்துக் கொண்டு எழுந்த நிவேதா, “நீங்க சொல்லறதை கேக்கணும்கிற எந்த அவசியமும் எனக்கில்ல” என்ற பதிலடியில் சாருமதி வாயடைத்து போனாள்.

“பை டேட்” தந்தையிடம் விடைபெற்று நிவேதா கிளம்பி விட்டாள்.

# # #

காதல்காரன் வருவான்…

error: Content is protected !!