UUP–EPI 4

அத்தியாயம் 4

 

அட்ரெலனின்(adrenaline) எனப்படும் ஹார்மோன், நாம் எதாவது ஆபத்தில் மாட்டி இருக்கும் போதோ, பிரச்சனையில் இருக்கும் போதோ வெளிவருகிறது. இது வெளியாவதால் தசைகளுக்கு அதிவேகமாக ஆக்சிஜன் அனுப்பப்படுகிறது. அட்ரெலனின் ரத்த நாளங்களில் இருந்து இருதயத்துக்கும் நுரையீரலுக்கும் ரத்தத்தை வேகமாக பாய்ச்சுகிறது. இதன் பலனாக நாம் ஆபத்தில் இருந்து தப்பி ஓடவோ, திருப்பி போராடவோ சக்தி பெறுகிறோம்.  

 

அன்று

 

“சத்தம் போடாம எல்லாரும் கீழ உட்காருங்க” ஆசிரியையின் கண்டிப்பான குரலில் கமுக்கமாக கீழே அமர்ந்தார்கள் மாணாக்கர்கள்.

அவர்கள் பள்ளியின் ஆண்டு விழா இன்னும் இரண்டு வாரத்தில் வரவிருக்கிறது. கதிர், சண்மு வகுப்பில் இருந்து ஒரு டான்ஸ் ஐட்டம் வைக்க சொல்லிப் பணித்திருந்தார் தலைமையாசிரியர். அதற்கு பயிற்சி செய்யத்தான் வகுப்பின் மேசை நாற்காலிகளை ஓரமாக ஒதுக்கி விட்டு எல்லோரும் கீழே அமர்ந்திருந்தார்கள்.

“இன்னில இருந்து டான்ஸ் ப்ராக்டிஸ் செய்யப் போறோம். மூனு பேர் மேய்ன் டாண்ஸ் ஆட, ஏழு பேர் பின்னால க்ரூப் டாண்ஸ் பண்ணப் போறீங்க. மத்தவங்க எல்லாம் காஸ்ட்யூம் டெகரேட் செய்யறது, மேடைய காடு மாதிரி செட் பண்ண மரம் செடி கொடி செய்யறதுன்னு ஹெல்ப் பண்ண போறீங்க! புரியுதா?”

கீழே அமர்ந்திருந்த பிள்ளைகள் வேகமாக தலையை உருட்டினார்கள். அவர்களின் வகுப்பாசிரியை ராதா டீச்சர் மிகவும் கண்டிப்பானவர். நம் சண்மு கூட அவர் வகுப்பில் இருந்தால், வாலை சுருட்டி வைத்திருப்பாள். நன்றாக படிக்கும் கதிர் மட்டும் அவருக்கு பெட். எல்லா விஷயத்துக்கும் அவனைத்தான் முன்னிருத்துவார் அவர்.

“கதிர்! எழுந்து வந்து முன்ன நில்லு. நீ தான் மேய்ன் டான்சர்” என அவர் சொல்ல சண்மு வேக வேகமாக கையைத் தட்டினாள். முகத்தில் அவ்வளவு பூரிப்பு அவளுக்கு.

கதிருக்கு ஆபரேஷன் முடிந்து ஓராண்டு ஆகி இருந்தது. இப்பொழுது அவன் பார்வை நேர்கோட்டில் சந்தித்துக் கொண்டது. சிறு பிள்ளையில் இருந்து வேறு வேறு திசையை நோக்கி இருந்தவனுக்கு, இந்த மாற்றம் கொஞ்சம் சிரமமாக இருந்தது. விடாமல் செய்த கண் பயிற்சிகள், கண் மருந்து என ஓரளவு பார்வை அவன் வசப்பட்டிருந்தது.

கதிர் எழுந்துப் போய் முன்னே நிற்க, அவன் ஜோடியாக இரு மாணவிகளை நிறுத்தினார் ஆசிரியை. அவர்களின் பின்னால் ஆட மூன்று மாணவன்களையும், மூன்று மாணவிகளையும் ஜோடியாக நிறுத்தினார். இதில் சண்மு இல்லை. ஆட்டத்தில் சண்முவை ஓரம் கட்டி இருந்தார் ஆசிரியை. ஒவ்வொரு மாணவர்களின் பெயரை சொல்லி அழைத்து நிறுத்திய போதும், அடுத்து தன் பெயர் வருமா என ஆவலாக பார்த்து, தான் அழைக்கப்படவில்லை என லேசாக கண் கலங்கிய சண்முவையே பார்த்திருந்தான் கதிர்.

பெருமாளை அழைத்து தனியாக நிறுத்திய ஆசிரியை, டேப் ரேகார்டரில் பாடலை ஒலிக்க விட்டார். என்பதுகளில் மிகப் பிரபலமான என் ஜோடி மஞ்சக் குருவி எனும் பாடல் வகுப்பறையை நிறைத்தது.

“முதல்ல கையக் கால ஆட்டி சும்மா ஆடுங்க! ஸ்டேப்லாம் டீச்சர் இன்னும் கொஞ்ச நேரத்துல சொல்லித் தரேன்” என்றவர் ஒவ்வொருவர் ஆட்டத்தையும் கவனிக்க ஆரம்பித்தார். கதிர் மட்டும் அசையாமல் நின்ற இடத்தில் ஆணி அடித்தது போல அப்படியே நின்றிருந்தான்.

“கதிர், ஏன் அப்படியே நிக்கற? ஆடுப்பா!” அவனிடம் பேசும் போது மட்டும் ராதா டீச்சருக்கு குரலில் கனிவு வந்து விடும்.

முடியாது என்பது போல தலையை ஆட்டினான் கதிர். பாடலை நிறுத்திய டீச்சர் அவன் அருகில் வந்து நின்றார்.

“ஏன்? என்னாச்சு? நீ நல்லாத்தானே ஆடுவ!”

“நான் ஆடனும்னா சம்முவும் என் கூட ஆடனும் டீச்சர்! ப்ளீஸ்!” மூக்கை சுருக்கிக் கெஞ்சினான் கதிர்.

“சண்முவ ஆட சொன்னா எக்சர்சைஸ் பண்ணுவாடா கதிர்! அவ வேணா!”

கீழே அமர்ந்திருந்த மற்றவர்கள் கொல்லென சிரிக்க, பெருமாளோ உருண்டுப் புரண்டு சிரித்தான். சண்முவின் முகம் அவமானத்தில் சுருங்கியது. தன் தோழியை பாவமாகப் பார்த்திருந்தான் கதிர். பின் நடந்துப் போய் அவள் அருகில் அமர்ந்துக் கொண்டான்.

“கதிர்!!!” லேசாக கோபம் எட்டிப் பார்த்தது டீச்சரின் குரலில்.

“நான் ஆடல! ஆடனா, கண்ணு வலிக்குது டீச்சர்” என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான் கதிர். அவன் பிடிவாதத்தில் பல்லைக் கடித்த ராதா டீச்சர்,

“சண்மு உன் கூட ஆடனா கண்ணு வலி போயிருமா கதிர்?” என கேட்டவர் கதிருக்கு ஜோடியாகப் போட்டிருந்த இன்னொரு பெண்ணை பின்னால் ஆட சொல்லி நிறுத்தினார். அவளுக்கு ஜோடியாக இன்னொரு மாணவனையும் சேர்த்து விட்டார்.

சண்முவுக்கு சந்தோஷம் தாளவில்லை. கதிரைப் பார்த்து முகம் மலர சிரித்து வைத்தாள்.

“பயப்படாத சம்மு. உனக்கு நல்லா டான்ஸ் வரும். ஸ்டேப் நல்லா பாத்துக்கோ! நாம சாயந்திரம் விளையாடறப்போ மறுபடி ஆடிப் பார்க்கலாம்” என மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னான் கதிர். தலையை பலமாக ஆட்டியவள், போருக்குப் போவது போல விரைப்பாக உடலை வைத்துக் கொண்டு ஆட ரெடியானாள்.

எல்லோரையும் ஆட விட்டுப் பார்த்த ராதா டீச்சர், பின்பு ஒவ்வொருவருக்கும் அவர்களின் ஸ்டெப்சை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். பெருமாளுக்கு அந்தப் பாடலில் ஆடும் ஜனகராஜின் பாகம் கொடுக்கப்பட்டது. எல்லோரும் ஆடும் போது அவன் மட்டும் இடை இடையே புகுந்து ஆடிக் கொண்டு வருவான். எல்லோரையும் ஆட வைக்க முடிந்தவரால், ரோபோட் போல கை காலை அசைக்கும் சண்முவை மட்டும் ஆடவே வைக்க முடியவில்லை. திட்டிப் பார்த்தார், ஏசிப் பார்த்தார், கொட்டிக் கூட பார்த்தார், ஆனால் சண்முகப்ரியாவுக்கு  ஆட்டம் கூட ஆட்டம் காட்டியது. கதிர் பொறுமையாக இரவு பகல் பாராமல் ஆட சொல்லிக் கொடுக்க, ஓரளவு ஸ்டெப்சை மட்டும் பிடித்துக் கொண்டாள் சண்மு.

எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்த பள்ளியின் ஆண்டு விழாவும் வந்தது. பெண்களுக்கு பச்சை வர்ணத்தில் பாவாடை சட்டையும், ஆண்களுக்கு அதே பச்சையில் சட்டையும் கால் சட்டையும் தைத்திருந்தார்கள். மீனாட்சிதான் தைத்துக் கொடுத்திருந்தார். கதிருக்கு மட்டும் தலையில் கருப்பு வர்ண தொப்பி. அவன் ஜோடியான சண்முவுக்கும் இன்னொரு மாணவிக்கும் காதில் பெரிய செம்பருத்திப் பூ சொருகப் பட்டிருந்தது. பெருமாளுக்கு பச்சை வர்ண சட்டையும், பச்சை வர்ண பாவாடையும் கொடுக்கப்பட்டது, ஜனகராஜ் போல தெரிவதற்கு.

அந்த நாளில் பெற்றொர்களால் பள்ளி நிரம்பி வழிந்தது. நாற்காலி மேசைகளை நகர்த்தி விட்டு பள்ளி அறையிலேயே நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மீனாட்சியும், பார்வதியும் கூட தங்கள் பிள்ளைகள் ஆடுவதைப் பார்க்க வந்திருந்தார்கள். பரமுவும் மகனின் வேண்டுகோளுக்கு இணங்கி சரக்கடிக்காமல் வெள்ளையும் சொள்ளையுமாய் வந்திருந்தார்.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியரே தலைமைத் தாங்கினார். வந்தவர்களை வரவேற்று அமர சொன்னவர், தனது சொற்பொழிவை ஆற்றோ ஆற்று என ஆற்றினார். வேலை வெட்டியை விட்டு விட்டு பிள்ளைகள் பாடுவதையும், ஆடுவதையும் பார்க்க வந்திருந்தவர்களுக்கு கடுப்பாகிப் போனது. அதில் பரமு வேறு எப்பொழுது மகன் ஆட்டம் முடியும், சரக்கடிக்கப் போகலாம் என நெளிந்தப்படியே அமர்ந்திருந்தார். அவரின் கை கால்களோ சரக்கு இன்னும் உள்ளே போகாமல் இருந்ததால் இசை இல்லாமலே டிஸ்கோ ஆடிக் கொண்டிருந்தன. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்த பரமு எழுந்து நின்று பக்கத்தில் அமர்ந்திருந்த தன் தெருவில் மூன்றாவது வீட்டில் வசிக்கும் மனிதரைப் பார்த்து சத்தமாக,

“இதுக்குத்தான் இந்த கர்மம் புடிச்ச நிகழ்ச்சிங்களுக்கு எல்லாம் என்னைக் கூப்டாதீங்கன்னு சொல்றது! மைக்கு கிடைச்சிட்டாப் போதுமே, அப்படியே ஆத்திருவீங்களே ஆத்தி! மைக்க புடிச்சவன்லாம் மைக் மோகனும் இல்ல, முறுங்கைக்காய வளச்சிக் கட்டறவன்லாம் பாக்யராஜும் இல்ல! புரியுதா?” என சவுண்ட் விட்டார்.

அந்த சத்தத்தில் ஆடிப்போன தலைமை, கர்சிப்பால் தன் வழுக்கையை வழித்து விட்டு,

“இதோ இனி கலை நிகழ்ச்சி இனிதாய் ஆரம்பமாகும்” என சொல்லி உரையை முடித்துக் கொண்டார். பார்வதி எழுந்து நின்று முறைத்த முறைப்பில், பரமுவும் வாலை சுருட்டிக் கொண்டு அமர்ந்தார்.

முதல் நிகழ்ச்சியாக கடவுள் வாழ்த்து வந்தது. பின் அப்பொழுது எல்லாம் நாட்டியம் என்றாலே போடுடா இந்தப் பாட்டை எனும் சொல்லும் அளவுக்கு புகழ் பெற்று இருந்த ஓம் நமச்சிவாயா பாடலுக்கு மாணவி ஒருத்தி நடனம் ஆடினாள். அதன் பிறகு கந்தன் கருணை நாடகம் ஒன்று வந்தது. பள்ளி நிகழ்ச்சி என்றால் சின்ன சின்ன ஆசை இல்லாமலா? அந்தப் பாடலும் ஒரு மாணவியால் அழகாகப் பாடப்பட்டது. அதன் பிறகே மேடை ஏறினார்கள் கதிர், சண்மு கோஷ்டி.

பரமு எழுந்து நின்று விசிலைக் கிளப்பினார்.

“என் மகன் தான் ஹீரோ! என் மகன், என் மகன் கதிரு!” என ஒரே பெருமை அவருக்கு.

என் ஜோடி மஞ்சக்குருவி என பாடல் ஒலிக்க ஆரம்பிக்க ஆட்டம் ஆரம்பமானது. கதிர் அநாயசமாக ஆட, அவன் பக்கத்தில் ரோபோட்டுக்கு கை கால் முளைத்து போல ஆடினாள் சண்மு. கதிரின் இன்னொரு ஜோடியான மாணவியும் தூள் கிளப்பினாள். நடுநடுவே புகுந்து ஆடிய பெருமாளுக்கு, சண்முவைப் பார்த்து ஒரே நக்கல் சிரிப்பு. கடைசி வரியான ஒன்னப் பாரு மண்ணப் பாரு பொன்னப் போல மின்னும் பாரு வரும் போது, சண்மு ஆட்ட வேகத்தில் பெருமாளின் பாவாடையை மிதிக்க, அது அப்படியே கலன்று விழுந்தது. ஊரின் முன்னே பெருமாள் ஜட்டியோடு நிற்க, கூட்டம் கொல்லென சிரித்தது. பின்னே ஆடியவர்களும் ஆட்டத்தை நிறுத்தி விட்டு விழுந்து புரண்டு சிரிக்க, பெருமாள் கோபத்தில் சண்முவின் மேல் பாய்ந்தான். தன் தோழியைக் காப்பாற்ற கதிர் பெருமாள் மேல் பாய, அந்த இடமே ரணகளமானது.

ஆசிரியர்கள் சண்டையைப் பிரித்து விட மேலே போனால், கீழே பெருமாளின் அப்பாவுக்கும் பரமுவுக்கும் அடிதடி ஆரம்பித்திருந்தது. பரமுவின் சொந்தங்கள் அவருக்கு சார்பாய் களமிறங்க, பெருமாளின் சொந்தங்கள் அவருக்கு ஆதரவு தர, சண்முவின் கைங்கர்யத்தால் பள்ளி ஆண்டு விழா, காண்டு விழாவாக மாறிப்போனது.

 

இன்று

 

ஜெயங்கொண்டம் ஊராட்சியில் இருந்த ஒரு குட்டி நர்சரியை விலைக்கு வாங்கி இருந்தாள் சண்மு. சின்ன வயதில் இருந்தே செடி கொடிகளுடன் வளர்ந்தவளுக்கு, அதுவே உயிர் மூச்சாகி இருந்தது. ஏற்கனவே அதை நடத்தியவருக்கு, மூப்பின் காரணமாக செடி கொடிகளை பராமரிக்க முடியவில்லை. வேலைக்கு ஆள் வைத்தும் எதுவும் சரியாகப் போகவில்லை. விற்க முனைந்தவருக்கு, தன்னைப் போல தாவரங்களை காதலிக்கும் சண்முவை மிகவும் பிடித்துப் போனது. பெண் பிள்ளையாய் போற்றி, பாதுகாத்து, பாசம் வைத்து வளர்த்த தன் நர்சரியை நிறைவான மனதுடனே சண்முவுக்கு தாரை வார்த்துக் கொடுத்தார்.

நர்சரியை வாங்கியவள், அதன் முன்னே சின்னதாக கடை ஒன்றையும் கட்ட ஆயத்தம் செய்தாள். செடிகளை மட்டும் விற்காமல், இந்தக் காலத்துக்கு ஏற்ற மாதிரி ப்ளோரிஸ்ட் கடையையும் செட் செய்ய முனைந்தாள் சண்மு. கடையைக் கட்டிக் கொடுக்க ஒரு பில்டரை அணுகி இருந்தாள். அவர்கள் காலை பத்து மணிக்கு வருவதாக சொல்லி இருக்க, இவள் பூச்செடிகளை ஆராய்ந்தப் படி நடந்தாள். முந்தைய ஓனர், கூடாரம் போல இடம் அமைத்து, சூரிய ஒளி பட்டும் படாமல் இருப்பது போல கூரை வைத்திருந்தார். மெல்லிய சூரிய ஒளி ஊடுருவ, பனியில் நனைந்து கிடந்த செடிகளை மெல்ல தன் கையால் வருடிக் கொடுத்தாள் சண்மு. அவள் முகத்தில் அழகான புன்னகை வந்தமர்ந்தது.

ரொம்ப அமைதியாக இருந்த சூழல் பிடிக்காமல் போக, பேச்சுத் துணைக்காக தான் எப்போதும் கூட வைத்திருக்கும் குட்டி ஸ்டேரியோவை காரில் இருந்து எடுத்து வந்தாள் சண்மு. பாட்டரியால் இயங்கும் அந்த ரேடியோவை ஆன் செய்தவள், கைப்போன போக்கில் ஏதோ ஒரு ரேடியோ செனலில் வைத்தாள். ரோடியோ, பேசி பாட தன் தனிமை கொஞ்சம் குறைவதாக உணர்ந்தவள், துப்பட்டாவை இடுப்பில் கட்டிக் கொண்டு வேலையை ஆரம்பித்தாள்.

ஜாடியில் வைத்திருந்த செடிகளில், புற்கள் வேண்டாத விருந்தாளியாய் ஊடுருவி இருக்க, களை எடுக்க ஆரம்பித்தாள் சண்மு. நெற்றியில் மெல்ல வியர்வைப் பூக்க, அதை புறங்கையால் துடைத்தப்படியே வேலையைப் பார்த்தாள். வரிசையாக அடுக்கி இருந்த பூ ஜாடிகளில் சிலது தாறுமாறாய் கிடக்க, குனிந்து அதில் ஒரு ஜாடியை மெல்லத் தூக்கினாள்.

“காத்தடிச்சா விசா இல்லாமலே பறந்துப் போய் பாகிஸ்தான்ல விழுந்துருவ போல இருக்க! நீ எதுக்கு இதெல்லாம் தூக்கற!” என கேட்ட கடுமையான குரலில் திடுக்கிட்ட சண்மு கையில் பிடித்திருந்த ஜாடியைப் பட்டென கீழே போட்டாள். விழுந்த வேகத்தில் ஜாடி உடைந்து பூஞ்செடியோடு மண் தெறித்து விழுந்தது. திடீரென கேட்ட ஆண் குரலில் மிரண்டவள், நெஞ்சில் கையை வைத்துக் கொண்டே கண்களில் பயம் சூழ திரும்பிப் பார்த்தாள்.

வந்திருந்தவன் முகத்தைப் பார்த்து, கலக்கம் மெல்ல வடிய முகம் நிம்மதி சாயலைப் பூசிக் கொண்டது.

“கதிர்!!” மெல்ல முணுமுணுத்தாள் சண்மு.

“கதிர்வேலன் அசிஸ்டேண்ட் கமிஷனர் ஆப் போலிஸ்” அழுத்தமாக உச்சரித்தவன் சண்முவின் கண்களை ஆழ்ந்து நோக்கி வலது கையை நீட்டினான்.

கையைத் துப்பட்டாவால் துடைத்துக் கொண்டவள், மெல்ல தன் கையை நீட்டி அவன் கையைப் பற்றிக் கொண்டாள். ஆண்மையான கதிரின் கரத்துக்குள், மென்மையான சண்முவின் கை மறைந்துப் போனது.

“சண்முகப்ரியா, வாழாவெட்டி சண்முகப்ரியா!!!!”

அவள் வார்த்தையைக் கேட்டு மென்மையாக அவள் கைப்பற்றி இருந்தவனின் பிடி, இரும்பாய் இறுகியது.

 

(உயிர் போகும்)