KS 22
KS 22
காதல் சன்யாசி 22
கோதண்டராமன் செய்த அடாவடிதனத்தினாலும் நன்மை இருக்க தான் செய்தது. வெற்று சாக்கிட்டு வங்கிக் கடனை செலுத்தாத மேதாவிகள் ஓடிவந்து தங்கள் கடனை வட்டியும் முதலுமாக அடைத்து விட்டு இருந்தனர். இதனால் மேலதிகாரிகளிடம் இருந்து ராகுல் கிருஷ்ணனுக்கு பாராட்டுகளும் சேர்ந்தன.
மாத சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினர் கூட அடித்து பிடித்து தவணையை சரியாய் கட்டிக் கொண்டு இருக்க, இந்த பருத்த பண முதலைகள் ஏனோ இருப்பதை கொடுக்கவும் அலட்சியம் செய்கிறார்கள் என்ற கோபம் தான் ராகுல், கோதண்டம் விசயத்தை கையெலெடுத்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதில் இவன் வெற்றி பெற்றதில் இவனுக்கும் சந்தோஷமே.
அந்த சந்தோஷத்தோடே மடிக்கணினியில் தன் வேலையில் அமிழ்ந்து இருக்க,
கணவனிடம் வந்தவள், “நேரமாச்சு சாப்பிட வாங்க… அம்மா வெயிட் பண்றாங்க!” என்று தமிழ் தயக்கமாக அழைக்க, தான் கொண்டவளைப் புதிதாக பார்த்தான் அவன்.
“என்ன? இன்னைக்கு மரியாதை எல்லாம் பலமா இருக்கு?”
“கட்டின புருசன, மரியாதை இல்லாம கூப்பிட கூடாதாம். இனிமே நானும் உன்கிட்ட… உங்ககிட்ட மரியாதையா தான் பேசணுமாம்” தமிழ் உம்மென்ற முகத்துடன் சொன்னாள்.
“இதை யார் உனக்கு சொன்னது?”
“அம்மா தான். என் தலையில கொட்டி, ரெண்டு திட்டு திட்டி, கண்டிச்சு சொன்னாங்க.”
அவள் முகம் சுருங்கி சொல்வதை பார்த்து அவனுக்கு சிரிப்பு வர, இதழை மடித்து கொண்டவன், “அம்மா, சரியா தான சொல்லி இருக்காங்க” என்றான்.
“அதில்ல… உங்ககிட்ட எதார்த்தமா பேசியே எனக்கு பழகி போச்சா. இப்ப திடீர்னு உன்கிட்ட மரியாதையா பேச எனக்கு… வரல டா” என்று தமிழ் பாவமாய் சொல்ல, ராகுல் வாய்விட்டு சிரித்து விட்டான்.
“சிரிக்காத டா. இதெல்லாம் உன்னால தான். எனக்கு அப்படியே பத்தி கிட்டு வருது தெரியுமா” என்று எரிந்து விழுந்தாள்.
ராகுல் சற்று பொறுத்து சிரிப்பை அடக்கிக் கொண்டு, “சரி விடு டீ, நீ எப்பவும் போலவே என்கிட்ட பேசு. அம்மா முன்னாடி மட்டும் மரியாதையா பேச முயற்சி பண்ணு. எல்லா பழகி போயிடும்” என்றான் அவன் குறும்பாய் கண்சிமிட்டி.
அவனை ஏகத்துக்கும் முறைத்த தமிழ், “ஒழுங்கா வந்து சாப்பிடு” என்று முகத்தை திருப்பி கொண்டு செல்ல, அவளின் செல்ல கோபமும் அவனை ரசிக்க தான் தூண்டியது.
விரிந்த சிரிப்போடு எழுந்து வந்தான்.
# # #
‘என்ன? என்ன? நான் உனக்கு சைவ காதலனா? என் காதல் என்னன்னு இப்ப காட்டவா?” என்றவன் அவள் கை பற்றி இழுத்த வேகத்தில் நிவேதா அவன் மீதே சரிந்தாள்.
‘என்ன கிருஷ், இப்பெல்லாம் உன் பேச்சு திசை மாறுது ம்ம்” என்று சிணுங்கினாள் அவனோடு இழைந்தபடி,
“இப்ப தான் நமக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சு இல்ல”
“ம்ம் அதுக்கு?”
“இனிமே எந்த பார்டரும் இல்லயில்ல…” என்று அவன் குறும்பாய் இழுக்கும் போதே, நிவேதா அவன் கை நழுவி அழகு காட்டி விட்டு ஓடினாள்.
“ஏய், நிவி… உன்ன…” என்று ராகுலும் முகம் கொள்ளா புன்னகையுடன் துரத்தி ஓடி வந்து அவள் பின்னால் அணைத்து கொள்ள! அந்த காதல் தருணத்தை அழியாமல் பத்திரப்படுத்திக் கொண்டது அவள் கைப்பேசி நிழற்பட பதிவு.
தன் கேபினில் அமர்ந்து அதை பார்த்து இருந்த நிவேதாவின் விழிகள் கலங்கி இருந்தன.
அவர்கள் இணைந்து எடுத்து கொண்ட ஒவ்வொரு நிழற்படமாய் அழிக்க முயன்று தோற்று கொண்டிருந்தாள் அவள். அவன் துரோகி என்று எண்ணிய போதே அவளால் அழிக்க முடியாத இந்த பதிவுகளை இப்போது அழித்தெரிய போராடிக் கொண்டிருக்க,
ஒவ்வொரு படமும் அன்றைய இன்ப தருணத்திற்கு அவளை இழுத்து செல்வதாய்,
அவள் மென் விரல்கள் நடுங்க, எந்தவொரு படத்தையும் அவளால் அழிக்க முடியவில்லை. அவனோடு இருந்த காதல் நினைவுகளைப் போல.
ராகுலின் காதலை மறக்கவும் முடியாமல், வெளியே சொல்லவும் தெரியாமல் அவனோடிருந்த நாட்களை எண்ணிக் எண்ணி உள்ளுக்குள் புழுகி துடித்தாள் அந்த பேதை.
அவன் தவறானவன் என்ற போதே அவனை பழிவாங்க தோழிகள் சொன்ன போதும் தயங்கி பேதலித்து இருந்த மனம், இப்போது அவன் நிழல் பிம்பத்தை அழிக்கவும் மருகி தவித்தது.
மறக்க நினைக்கும் அவன் காதல் நினைவுகளைத் தவிர, அவளிடம் இப்போது வேறெதுவும் இல்லை!
“மே ஐ கம் இன் மேம்?” அனுமதி குரல் கேட்டு, அவசரமாக கைப்பேசி திரையை உயிரிழக்க செய்தவள்,
தன் கண்களை அழுத்த துடைத்து கொண்டு, “எஸ் கம் இன்” என்று தோரணையாய் அனுமதி தந்தாள்.
உள்ளே வந்த தமிழ்ச்செல்வி, “எஸ்டேட் போகணும் மேம், ஃபேக்டரில ஒரு கம்ப்ளெய்ன்ட் வந்திருக்கு அதையும் பார்க்கணும்னு சொல்லி இருந்திங்க… மேம்” என்று நினைவுபடுத்த, நிவேதா தலையசைப்போடு எழுந்து நடந்தாள்.
நிவேதாவின் சிவந்திருந்த கண்களையும், வாட்டமான முகத்தையும் கவனித்தவாறே தமிழ் அவளை பின்தொடர்ந்தாள்.
தமிழ்ச்செல்வியை பார்க்கும் போதெல்லாம் நிவேதாவின் உள்ளம் குறுகுறுக்க தான் செய்தது. அப்பொழுதெல்லாம் ராகுலின் எண்ணங்கள் அவளை தீவிரமாய் வாட்டி வதைக்கலாயின.
அதுவும் தினமும் மாலையில், கம்பெனி வாயிலில், தவறாது குறும்பு செய்து தமிழிடம் சின்ன முறைப்புகளையும் செல்ல அடிகளையும் வாங்கியபடி அவளை அழைத்து செல்லும் ராகுலை தன் அறை சன்னல் வழியே கண்டு, தன் இழப்பின் அளவு புரிய நெஞ்சம் கொதித்து குமைந்து போனாள்.
அவளுக்கு தமிழ்ச்செல்வி மீது பொறாமை என்பதைவிட, தன் கைநழுவவிட்ட காதலின் மீதான வலியே அவளை உள்ளுக்குள் தின்று கொண்டிருந்தது.
காரில் உட்கார்ந்து உடன் நினைவு வர, “தமிழ்ச்செல்வி என் பிசி டேபிள்ல மறந்திட்டேன். சீக்கிரம் எடுத்துட்டு வாங்க” என்று உத்தரவிட, தமிழ் அவள் அறைக்கு விரைந்தாள்.
அங்கே மேசை மீது மடிகணினி அணைக்க படாமல் திறந்து கிடக்க, அதை உபயோகித்து அணைத்து விட்டு, எடுத்து செல்ல முயன்றவள்,
அதன் முகப்பு திரையில், ராகுல்- நிவேதா இணைந்திருக்கும் நிழற்படம் காட்ட, விதிர்த்து போனாள்.
‘மேம் இதை பார்த்து தான் அழுதிருப்பாங்களா? அப்ப, நிவேதா மேம் இன்னும் ராகுல மறக்கலையா?’ என்று சிந்திக்க, நிவேதாவின் நிலை தமிழுக்கு ஓரளவு புரிய தான் செய்தது.
ஆனால், அதற்கு என்ன செய்வது என்று புரியாமல், இவளும் துன்ப பெரு மூச்செறிந்தாள்.
எதையும் வெளி காட்டி கொள்ளாமல், மடிக்கணினியை நிவேதாவிடம் கொடுத்து விட்டு, அமைதியாக அவளுடன் பயணமானாள்.
# # #
அவன் ஆடைகளை மடித்து கப்போர்டில் லாவகமாக அடுக்கி வைத்து கொண்டிருந்தவள், ஏதோ துணுக்குற்று திரும்பினாள்.
ராகுல் தான் கள்ள பார்வையோடு அவளை நோக்கி வந்தான்.
“டேய், லுக்க மாத்து. இல்ல, கண்ண நோண்டிடுவேன் பார்த்துக்க” என்றாள் கடுப்பாய்.
‘பின்னே என்ன பார்வை இது? ஆளை அப்படியே விழுங்கும் பார்வை!’ அவள் அவன் பார்வையையும் சேர்த்து கரித்து கொட்டினாள் மனதிற்குள்.
“ஏன் டீ? நான் பார்த்தா கூட உனக்கு குத்தமா?” என்று அவன் மிரட்டலாக அவளை நெருங்கி வர, பயந்து பின்னுக்கு நகர்ந்தவள், திறந்திருந்த கப்போர்டில் முட்டி நிற்க, அதில் அடுக்கப்பட்ட உடைகள் எல்லாம் சரிந்து கீழே விழுந்தன.
“கொழுப்பு டீ உனக்கு, எங்க என் கண்ண நோண்டு பார்க்கலாம்” அவனும் சுர்ரென்று பேசினான்.
“இல்ல டா, நிஜம்மா, நீ அப்படி பார்க்கும் போது எனக்கு… எனக்கு…!” தமிழ் திக்கி திணறி மொழிந்து அங்கிருந்து நகர முயல, அவன் கைகள் அவளை மரித்தன. கப்போர்டின் இருபக்க கதவுகளிலும் கைகளை ஊன்றி பார்வையை அவள்மீது பதித்து நின்றான் அவன்.
அவள் மிரண்டு நிற்கும் மானாய் மருகி நிற்க, அவளின் முகம் வெளுத்து தலைக்கவிழ்ந்தாள்.
“ம்ம் சொல்லு, உனக்கு என்ன பண்ணுது?”
“…!”
சற்று முன் உயர்ந்த அவள் குரலும், திமிரும் எங்கே போனதென்று அவனுக்கு தெரியவில்லை. அவளின் பரிதவித்த தோற்றம் அவனை தோற்கடிப்பதாய்.
“தமிழ், ஒரே ஒருமுறை ஹக் பண்ணிக்கவா? ப்ளீஸ் டீ” அவன் உரிமையாய் யாசிக்க, பயத்தில் அவள் விழிகள் விரிந்தன.
அவளின் பதிலுக்கு காத்திராமல் ராகுல் அவளை அணைத்திருந்தான்.
“இன்னும் எத்தனை நாளைக்கு என்னை இப்படி தவிக்க விட போற, தமிழ்?” அவன் குரல் அவள் காது மடல் அருகே கிசுகிசுக்க, நொடிக்கு நொடி அவன் அணைப்பு இறுகி கொண்டே போனது.
“…”
தன்னவனின் கைச்சிறையில் இருந்து விலக முடியாமல் திணறி போனாள் அவள். அவன் மார்பில் தலைசாய்த்து இருந்த அவளுக்கு அவன் இதய துடிப்பு தெளிவாக கேட்டது.
ஏனோ இந்த இன்ப தருணத்தில், எங்கோ இருந்து அவள் சித்தியின் குரல், அவள் நினைவலையில் கீச்சிட்டது.
‘நீ ராசி கெட்டவ தான் டீ, உன்ன பாத்தாலே பாவம் சுத்திக்கும், உன்ன தொட்ட கை விலங்காம போயிடும்…’
தமிழின் உடல் நடுங்கிட, பயந்தவளாய் ராகுலை தன்னிடம் இருந்து விலக்கி தள்ளினாள்.
எதிர்பாரமல் அவள் தள்ளிய வேகத்தில் அவன் தலை கதவில் மோதிக் கொள்ள, “அஆ பாவி! ராட்சசி!” என்று நெற்றியை பிடித்து கொண்டான் அவன்.
தமிழ் பதறி துடித்தவளாய், “சாரி சாரி ராகுல், என்னால தான், நான்…” என்று அவள் அடிப்பட்ட நெற்றியை தேய்த்து கொடுக்க, ராகுல் அவள் கையை தட்டி விட்டான்.
“நான் தொட்டா தான் உனக்கு பிடிக்கல இல்ல. நீயும் என்னை தொடாத” அவளின் கலங்கிய முகத்தை பார்த்து சொல்லிவிட்டு கோபமாக சென்று விட்டான்.
தமிழ்ச்செல்வியின் மனம் கல் விழுந்த குளமாக அலைந்து கொண்டிருந்தது.
ஒருபுறம் ராகுலின் உரிமை உணர்வு! மறுபுறம் நிவேதாவின் காதல் தவிப்பு! இடையில் இவளோ விளங்காத புதிராய்! யோசிக்க சோர்ந்து போனாள்.
‘இத்தனைக்கு பிறகும் நிவேதா மேம் இவனை மறக்க முடியாமல் அங்கு தவித்து கொண்டிருக்க, இவன் மட்டும் எத்தனை சுலபமாக தன் மனதை மாற்றி கொண்டான்?’
‘ஒருவேளை அவனை பொறுத்தவரை காதல் என்றால் இவ்வளவே தானா?’
‘இதற்காகவா நிவேதா மேடமை உருகி உருகி காதலித்து தொலைத்தான்?’
‘மலருக்கு மலர் தாவும் வண்டின் குணமா? இவனுடையது!’
‘சட்டையை மாற்றி கொள்வதைப் போல, உயிர் காதலையும் மாற்றிக் கொள்பவனா இவன்? ச்சே’
ராகுலின் குணத்தை பற்றி எண்ண எண்ண, தமிழுக்கு அவன் மீது எரிச்சலாக வந்தது.
“முட்டாள் இவன், தங்கத்தை விட்டு தகரத்துக்கு ஏங்கி தவிக்கிறான். இந்த வீணா போனவனுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கறதுன்னும் எனக்கு தெரியல.”
தமிழ், அவன் மேலிருந்த ஆத்திரத்தில் சற்று உரக்கவே முணுமுணுத்து கொண்டாள்.
அதே எரிச்சலுடன் கீழே சிதறிக்கிடந்த ஆடைகளை ஒவ்வொன்றாக எடுத்து மறுபடியும் கப்போர்டில் சலிப்பாக மடித்து வைக்கலானாள்.
அவள் கையில் எடுத்த ராகுலின் சட்டையில் இருந்து ஏதோ நழுவி விழ, என்னவென்று எடுத்து பார்த்த தமிழின் விழிகள் விரிந்தன.
ராகுலின் மனநிலையை அவளால் இப்போது தெளிவாகவே உணர்ந்து கொள்ள முடிந்தது.
தன் ராகுலை எண்ணி அவள் மனம் வேதனையை தத்தெடுத்துக் கொண்டது.
# # #
மாடியில் பனி பொழியும் பால் நிலவழகை கூட ரசிக்க இயலாமல் இவன் மனம் ஆற்றாமையின் பிடியில் சிக்கி இருந்தது.
‘ஒரு ஹக் தான, அதுக்கு கூட இவ இப்படி முரண்டு பிடிக்கணுமா?’
‘என்னை பத்தி என்ன நினச்சிருக்கா?’
நல்ல தோழியாய் தமிழை முழுமையாக புரிந்து கொண்டிருந்த அவனால், தன் மனைவியாய் அவளை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறினான் ராகுல் கிருஷ்ணன்.
பெண் மனது ஆழம் என்று இதனால் தான் சொல்லி வைத்தார்களோ? என்னவோ?
கண்ணெதிரே கொண்டவள் இருக்க, ஆசை மனம் அவளின் அருகாமை வேண்டி நச்சரிக்க, எத்தனை நாள் தான் எட்டி நிற்க முடியும் தன்னால்? என்ற கேள்வி எழ, ‘சரியான நெஞ்சழுத்தகாரி, கொஞ்சமாவது ஃபீலிங்க்ஸ் இருக்கா?”
என்று முணுமுணுத்து கொள்ள,
தன் விழி தீண்டலில் அவள் முகத்தில் தோன்றிடும் மிரட்சி, தன் கைத்தீண்டலில் அவள் தேகம் சிலிர்த்து அடங்கும் நடுக்கம்… தானாய் நினைவில் வர, இவன் முகம் மென்மையாய் குழைந்தது.
‘ப்ச் தமிழ், உனக்கும் ஃபீலிங்க்ஸ் இருக்கு டி, ஆனா ஏதோ ஒண்ணு உன்ன தடுக்குது, அதையெல்லாம் தாண்டி எப்ப டீ என்கிட்ட வர போற?’ கைகளை கட்டி கொண்டு உடலை குருக்கியபடி, வெட்டவெளியில் ஏக்கமாக பிதற்றி நின்றான் அவன்.
மென்மையாய் பூங்கரம் அவன் தோள் தீண்ட, ராகுல் கிருஷ்ணா திரும்பினான்.
தெளிந்த முகமாய், விரிந்த புன்னகையாய் அவன் முன் தமிழ்ச்செல்வி நின்றிருந்தாள்.
அவளின் சினேக புன்னகை அவனுக்கு புதுமையாக தோன்றவே, அவன் ‘என்ன’ என்பது போல் புருவத்தை உயர்த்தினான்.
தமிழ் பேச்சை எப்படி தொடங்குவது என்று தெரியாமல் திணறினாள்.
அழகு கொஞ்சும் நிலவோ, பொழியும் வெண் பனியோ அவளின் கருத்தை கவரவில்லை.
“அது அது ராகுல்… ம்ம் காதல்ன்னா என்ன?” அப்போதைக்கு வாயில் வந்ததை கேட்டு வைத்தாள்.
ராகுல் நம்ப முடியாமல் அவள் முகத்தை ஆய்ந்தவனாய், “காதலை பத்தியா கேட்ட?” என்று வியப்பாக அவன் கேட்க, தமிழ் சிறுபிள்ளை போல மேலும் கீழுமாக தலையாட்டி வைத்தாள்.
ராகுலின் நெற்றி சுருங்கிட, அவன் இதழில் மென்மையான புன்னகை விரிய, வெண்ணிலவை ஏறிட்டான்.
தாயின் முந்தானை சேலைக்கு பின்னால் ஒளிந்து மெதுமெதுவாய் முகம் காட்டும் சிறுவனைப் போல, மேகச் சேலைக்கு பின்னால் வான் நிலவு அரை முகம் காட்டி கொண்டு இருந்தான்.
திறந்திருந்த அவன் மனக் கதவுகளின் வழியே அவன் உள்ளம் மேலும் விசாலம் காட்டியது.
“காதல்! அதுவொரு புதுவித பரவச அனுபவம் தமிழ். நாம தேடி அலைஞ்சாலும் கிடைக்காது. ஓடி ஒளிஞ்சாலும் தப்பிக்க முடியாது.”
“…!”
“சலிச்சு போன இந்த அருத பழசான பூமிய, புதுசா காட்டறது காதல் மட்டும் தான்! காதலிக்கும் போதுதான் மனுசன் அழகா தெரியிறான்! அழகை தெரிஞ்சிக்கிறான்! முதல் காதல்…” அவன் முகம் லேசாக வாட்டம் கண்டது.
“…!”
“முதல் காதல் தர சந்தோசம், உற்சாகம், புது துடிப்பு, சுகம், ரணம்! அதோட வலி! வேதனை! கடைசி மூச்சிருக்கிற வரைக்கும் மனசுல உறுத்திக்கிட்டே தான் இருக்கும் போல…”
ராகுல் உணர்ச்சி வசப்பட்டு சொல்லிக்கொண்டே போக, தமிழ் அவனை அனுதாபமாக பார்த்தாள்.
“அப்ப, உன்னால இன்னும் நிவேதா மேடமோட காதலை மறக்க முடியல தானே?”
அவன் முகத்தில் விழி பதித்தவளாய் கேட்க, ராகுல் திடுக்கிட்டு திரும்பினான். ஏதோ வேகத்தில் வாய்தவறி, உளறிவிட்டதை எண்ணி தன்னையே நொந்து கொண்டான்.
எனினும், “என்ன டி? என்னை சந்தேகபடறியா?” அவளை மேலோட்டமாக முறைத்தபடி கேட்டான்.
தமிழ் அசராமல், “இல்ல டா, உன் மனசுல இன்னும் நிவேதா மேம் தான் இருக்காங்கன்னு அடிச்சு சொல்றேன்” அவள் அத்தனை உறுதியாக பதில் தர,
“ஆமா, என் மனச அப்படியே நல்லா புரிஞ்சி வச்சிருக்க பாரு, சும்மா பழச கிண்டாம போயிடு” ராகுல் கடுப்பாகி அவளை விரட்டுவதில் குறியாக இருந்தான்.
“ம்ம் நான் போயிறேன், அதுக்கு முன்ன… இந்த ஃபோட்டோ உன் சர்ட்குள்ள எப்படி வந்தது?” அவள் மறைத்து வைத்திருந்த நிழற்படத்தை அவனிடம் நீட்டினாள்.
அது நிவேதாவின் நிழற்படம்! நிவேதாவிடமிருந்து முதன் முதலாய் அவன் பெற்று கொண்ட காதல் பரிசு அது!
ராகுலின் முகம் அப்பட்டமாக அதிர்ச்சி காட்டியது. ‘போயும் போயும் இந்த பிசாசு கிட்டையா இந்த ஃபோட்டோ கிடைக்கணும். இப்ப என்ன புதுசா பிளான் பண்ணி தொலைச்சிருக்காளோ?’ என்று மனதுக்குள் அரற்றி கொண்டவன்,
“இல்ல தமிழ்… இந்த ஃபோட்டோவ… மறந்து வச்சிருப்பேன்” என்று ஏதோ சொல்லி மழுப்பலானான்.
தமிழ் இன்று அவனை விடுவதாய் இல்லை. “ஓஓ அப்படிங்களா சார், நிவேதா மேடம் சம்மந்தப்பட்ட எல்லா பொருளையும் தூக்கி வீசினிங்களே சர். அப்ப, இந்த ஒரு ஃபோட்டோவ மட்டும்! எடுத்து போட மனசு வராம…” அவள் கிண்டலாக முடிக்காமல் இழுத்தாள்.
‘கடவுளே, எல்லாரையும் சமாளிக்க முடிஞ்ச என்னால, இந்த ஒரு குட்டி சாத்தான மட்டும் சமாளிக்க தெரியாம முழி பிதுங்க வைக்கிறியே!’ மனதுக்குள் புலம்பி தவித்தவன்,
“இப்ப என்னடி உன் பிரச்சனை? இந்த ஃபோட்டோ தான” அவள் கையிலிருந்த நிழற்படத்தை பிடுங்கி கசக்கி வேகமாக தூர வீசினான்.
இதை சற்றும் எதிர்பாராதவள் அவன் செயலைக் கண்டு பதறியவளாக, “இப்படி சுலபமா அவங்க ஞாபகத்தையும் தூக்கி வீச உன்னால முடியல இல்ல?” தமிழ் கேட்க, ராகுல் பதிலின்றி இறுகி நின்றான்.
“ஏன் டா? உனக்குள்ளயே எல்லா வேதனையும் மறச்சிக்கிட்டு வெளியில எதுக்கும் கவலபடாதவன் மாதிரி நடிச்சிட்டிருக்க இல்ல?” தமிழ் அவன் மனவேதனை புரிந்து வருந்தி பேச,
“நான் நடிக்கல தமிழ்” அவன் குரல் இறங்கி ஒலித்தது. “இந்த ஃபோட்டோவ அப்ப போட மனசு வரல தான். அதுக்காக அதை தினமும் நான் எடுத்து பார்த்தேன்னு அர்த்தம் இல்ல” அவனுக்கு எப்படி அவளிடம் தெளிவாக சொல்வதென்று தெரியவில்லை.
“உன் மனசுக்குள்ள காதலை மறச்சு வச்சிகிட்டு, தாலி கட்டின பாவத்துக்காக என்னை மனைவியா ஏத்துகிட்டா, உனக்கு எல்லாரும் நல்லவன்னு தியாகி பட்டம் கொடுப்பாங்கன்னு நினச்சிட்டியா” தமிழ் ஆற்றாமையில் கேட்டு விட,
“ஏய் நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல டி. கொஞ்ச நாள்ல எல்லாமே சரியா போயிடும்! பழசெல்லாம் மறைஞ்சு போயிடும்!” ராகுல் அவளுக்கு எதார்த்தத்தை புரிய வைக்க முயன்றான்.
“இல்ல… எதுவுமே சரியாகாது. நான் உங்க லைஃப்ல வராமலேயே போயிருக்கணும். இல்ல, நான் இந்த உலகத்தில பொறக்காமலேயே போயிருக்கணும்” தமிழ் அவன் முன்பு உடைந்து அழுது விட்டாள்.
‘அவர்கள் இருவரின் வாழ்க்கைக்குள் தன்னை நுழைத்து வேடிக்கை காட்டும் என்ன பொல்லாத விதி இது?’
ராகுல் அவள் கண்ணீரை காண சகிக்காமல், அவளை தோளோடு சேர்த்து அணைத்து கொண்டான். ஆறுதலாய் ஆதரவாய்.
“என்னை நம்பு தமிழ், எல்லாமே சரியாயிடும். என்னால எல்லாத்தையும் சரி செய்ய முடியும் டீ” அவன் வார்த்தைகள் தனக்கும் அவளுக்கும் சேர்த்து நம்பிக்கை தருவதாய்.
அவனிடம் இருந்து விலகியவள், “முடியாது டா, அங்க… ஆஃபீஸ்ல கூட மேம்… உன் ஃபோட்டோ பார்த்து அழுதுட்டு இருந்தாங்க, தெரியுமா?” தமிழ் தேம்பலோடு சொல்ல,
ராகுலின் முகம் யோசனையாய் சுருங்கியது.
“அது நல்ல விசயம் தான் தமிழ்! நிவி பழசை எல்லாம் மறக்க முயற்சி பண்றா, முதல்ல அது கஷ்டமா இருந்தாலும் சீக்கிரமே அவளால அதிலிருந்து வெளியே வர முடியும். ஏன்னா, நிவி உன்ன மாதிரி முட்டாள் இல்ல. கண்டதையும் போட்டு குழப்பிக்க.”
அவன் இயல்பாக சொல்ல, இவள் அவனை மலைப்பாக வெறித்தாள்.
‘இவனால மட்டும் எப்படி எல்லாத்தையும் புது கோணத்தில, அவனுக்கு சாதகமா யோசிக்க முடியுது! ஒருவேளை இவன் சொல்றது தான் உண்மையா இருக்குமோ? நான் தான் குழம்புறேனோ?” யோசிக்க அவள் தலை கிறுகிறுத்தது.
அவள் தலையில் தட்டியவன், “நான் முன்ன சொன்னது ஞாபகம் இருக்கு இல்ல. நிவி கிட்ட ஏதாவது எக்கு தப்பா உளறி வச்ச, மவளே உன்ன அப்படியே கடிச்சு வச்சுடுவேன். ஒழுங்கா வேலைக்கு மட்டும் போயிட்டு வரணும்” என்று அவன் மறுபடியும் எச்சரித்து சொன்னான்.
“…!”
“இப்ப வா கீழ போலாம். பனி அதிகமாயிடுச்சு பாரு” என்று குழம்பி நின்றிருந்தவளை இழுத்து கொண்டு கீழே சென்றான்.
# # #
காதல்காரன் வருவான்…