KS 23

KS 23

காதல் சன்யாசி 23

காய்கறிகள் நிறைந்த பையை சுமந்தபடி மார்க்கெட்டில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள். ஏதாவது ஆட்டோ கிடைக்குமா என்று பார்த்தபடி,

அவளை நோக்கி வேகமாய் வந்த கார் குறுக்கே நிற்க, தமிழ்ச்செல்வி திடுக்கிட்டு திரும்பினாள்.

அந்த காரிலிருந்து சாருமதி திமிராய் இறங்கி நிற்க,
அவளை பார்த்த, தமிழின் முகம் ஆத்திரத்தில் சிவந்திட, விலகி வேகமாக நடக்க தொடங்கினாள்.

“ஏய், உன்ன தான் நில்லு” சாருமதி அவளை ஏக வசனத்தில் விளிக்க,

தமிழ் கோபமாக திரும்பி, “மரியாதையா பேசுங்க, இல்ல, உங்க மரியாதை கெட்டு போயிடும்” அனலாய் பதில் தந்தாள்.

“என்ன வார்த்தை நீளுது? எங்ககிட்ட சம்பளம் வாங்கிறவ தான் நீ. ஞாபகத்தில வச்சு பேசு” சாருமதி மறுபடியும் அவளை கீழ்மைப்படுத்தி பேச,

“நான் செய்யற வேலைக்கு தான் உங்க சம்பளம். அதை முதல்ல நீங்க ஞாபகத்தில வச்சிக்கங்க” தமிழின் பதிலும் அழுத்தமாக வந்தது.

சாருமதியின் நெற்றி சுருங்க, “பரவாயில்ல, எதிர்த்து பேச கூட கத்துக்கிட்ட போல” என்று ஏளனமாக சிரித்தாள்.

தமிழ் சிடுசிடுத்த முகமாய் திரும்பி வேகமாக நடந்தாள். அவளிடம் பேச பேச இவளின் ஆத்திரம் அதிகரித்து கொண்டிருந்தது.

“ஏய், உன் புருசன் உனக்கு உயிரோட வேணாமா?” சாருமதி உயர்த்திய குரல், அவள் இதயத்தில் கத்தியைப் பாய்ச்சுவதாய்,

பதறிப்போய் திரும்பி ஓடி வந்தவள், “ரா… ராகுலுக்கு என்னாச்சு?” துடிதுடித்து கேட்டாள்.

“ம்ம் இதுவரைக்கும் ஒண்ணும் ஆகல. இனிமே தான்…” சாருமதி பரிகாச புன்னகையோடு முடிக்காமல் விட,

“ஏன் இப்படி எல்லாம் செய்ற? அவன் உனக்கு என்ன செஞ்சான்? நீ தான கேவலமா திட்டம் போட்டு அவனோட சந்தோசத்தை கெடுத்த” அந்த சந்தடி மிகுந்த சாலை ஓரத்தில் தமிழ் அவளிடம் கதறி கொண்டிருந்தாள்.

“ஏய் ஷு, இப்ப என்னோட இந்த நிலைமைக்கு அந்த ராகுல் தான் காரணம். என் ராமும், நிவியும் என்னை குப்பை மாதிரி தூக்கி போட்டுட்டாங்க. சொந்த வீட்ல அகதி மாதிரி இருக்கேன் தெரியுமா உனக்கு” சாருமதி கொதிப்போடு பேச,

“உங்க கெடுதல் புத்திக்கு கிடைச்ச பரிசு அது” தமிழும் எதிர்த்து பேசினாள்.

சரியாக சாருமதியின் கைப்பேசி ஒலியெழுப்ப அதை எடுத்தவள், தமிழுக்கும் கேட்குமாறு ஸ்பீக்கரில் வைத்து பேசினாள்.

“ம்ம் சொல்லு, இப்ப முடிச்சிடுவீங்க இல்ல?”

“மேடம், நீங்க சொன்ன அந்த ராகுல், நாம பிக்ஸ் பண்ண ரூட்ல தான் பைக்ல வரான், பத்து நிமிசத்துல அடிச்சு தூக்கிடலாம்” எதிர்முனையில் கரகரப்பான ஆண்குரல் சொல்ல, தமிழ்ச்செல்வி அலறி விட்டாள்.

“ம்ம் அவன் கை, கால் எது உடைஞ்சாலும் பரவால்ல. பட் அவன் உடம்புல உயிர் மட்டும் மிச்சமிருக்கட்டும். ஏன்னா அவனோட புது பொண்டாட்டி இங்க துடிச்சிட்டு இருக்கா, பார்க்க கொஞ்சம் பாவமா இருக்கு அதான்” சாருமதியின் பதிலில் தமிழ் முழுவதும் வெடவெடத்து போனாள்.

“சரிங்க மேடம், பாத்துகிறேன் விடுங்க”

“இன்னைக்கு அவன் முழுசா வீடு போய் சேர கூடாது” சாருமதி ஆத்திரமாக பேசிக் கொண்டிருக்க,

தமிழ் ஏதோ தோன்றியவளாய் அங்கிருந்து நகர்ந்து அவசரமாய் தன் கைப்பேசியில் ராகுலுக்கு தொடர்பு கொண்டாள்.

“ரா…ராகுல் ஆ…ஆபத்து! வழியில உன்ன அடிக்க ஆளுங்க காத்திட்…” சாருமதி அவள் கைப்பேசியை வேகமாய் பிடுங்கி கொண்டாள்.

“ரொம்ப தான் அக்கறை” என்று அவளை பிடித்து இழுத்து காரின் பின் இருக்கையில் தள்ளிவிட்டு தானும் அமர்ந்து கொண்டாள்.

“இன்னும் கொஞ்ச நேரம் ஆர்ப்பாட்டம் செய்யாம அமைதியா இரு. இல்ல, அவன் உடம்புல உயிர் கூட மிஞ்சாது” என்று மிரட்டினாள்.

தமிழின் இதயத்துடிப்பு இருமடங்கு பெருகி துடித்தது.

என்ன செய்வது என்று யோசிக்க, அவளுக்கு எதுவும் பிடிபடவில்லை.

புயலில் சிக்கிக் கொண்ட இலையைப் போல அவள் உள்ளம் படபடத்துக் கொண்டிருந்தது.

ஏதோ நினைவு வர, “உ… உங்க ஆளுங்க மொத்தம் எத்தனை பேரு?” தமிழ் பதற்றமாக கேட்க,

சாருமதி அசட்டை சிரிப்போடு, “ஒருத்தன் ரெண்டு பேர் இல்ல, மொத்தம் அஞ்சு பேர், கொலை செய்ய கூட பயப்படாத முரடனுங்க.”

சொல்லும் போதே தமிழ்ச்செல்வியை பயப்பட வைத்தவள், அவள் துடிப்பதை ஏளனமாக பார்த்தபடி, “இப்ப உங்க ரெண்டு பேருக்கும் விழுற அடில, இந்த ஊர விட்டே ஓடி போகணும், ம்ம் சரியா” மிரட்டலாய் சொல்ல, தமிழின் எண்ணம் முழுவதும் ‘ராகுலுக்கு ஒண்ணும் ஆகாது’ என்ற நம்பிக்கையும் வேண்டுதலையும் வைத்து கொண்டிருந்தது.

#
#
#

இருபுறமும் மரங்கள் அடர்ந்த மலை சாலையில் அவன் வண்டி ஊர்ந்து கொண்டிருந்தது.

திடீரென யாரோ குறுக்கே ஓடி வர, ராகுல் சற்று தடுமாறி வண்டியை நிறுத்தினான்.

அது காட்டு விலங்குகள் நடமாடும் பாதை என்பதால் அவன் மிதமான வேகத்தில் தான் வந்திருந்தான். எனவே எதிர்பாராத தாக்குதலிலும் வண்டியை அவனால் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.

ஐந்து முரடர்கள் அவனை நோக்கி ஓடிவர, ராகுல் உடனே சுதாரித்துக் கொண்டான்.

வண்டியில் இருந்து இறங்கியவன், அவன் மேல் விழுந்த முதல் தாக்குதலை தன் தோளின் குறுக்கே மாட்டி இருந்த பையை முன்னே பிடித்து தடுத்து, எதிரில் வந்தவனின் முகத்தில் ஒரு குத்துவிட்டான்.

அவன் மூக்கில் இரத்தம் வழிந்து தடுமாற, ராகுல் விட்ட அடுத்த உதையில் இரண்டடி தள்ளி விழுந்தான்.

மற்ற நால்வரும் அவனை சூழ்ந்து தாக்க முற்பட, தன் வண்டியின் பக்கவாட்டில் இருந்து ஒரு நீண்ட இரும்பு கம்பியை உருவி எடுத்தவன், அவர்கள் தாக்குதல்களை சமாளித்து புகுந்து விளையாடினான்.

அவன் இரும்பு கரத்திற்கு முன்னால் அந்த முரடர்களின் ஆயுதங்கள் செயலிழந்து போயின.

அவன் வேகத்தையும் லாவகமான தாக்குதல்களையும் சமாளிக்க முடியாமல் அவர்கள் நிலை குலைந்து போயினர்.

ஒவ்வொருவரின் உடம்பும் அவன் கைவண்ணத்தில் நிறம் மாறி துவள, அவர்கள் தப்பித்தால் போதுமென ஓட்டம் பிடித்தனர்.

#
#
#

சாருமதியின் கைப்பேசி ஒலிக்க, தமிழின் இதயம் தடதடத்தது.

சாருமதி ஏளன சிரிப்போடு ஸ்பீக்கரில் வைத்து பேசினாள்.

“ம்ம் சொல்லு”

“மேடம், அவன் மாடு மாறி அடிக்கிறான். வித்தை தெரிஞ்சவன் போல.”

“அவன அடிச்சி போட்டிங்களா? இல்லையா?”

“எங்களால அவனை எதுவும் செய்ய முடியல மேடம். அவன் பக்கத்தில கூட நெருங்க முடியல.”

“ச்சே” என்று இணைப்பை துண்டித்தவளின் முகம் கடுகடுத்து இருண்டு போனது.

தமிழ் வெகுண்ட பார்வையோடு, “மேடம், என் ராகுல் பத்து பேர் வந்தாலும் பதறாம அடிச்சு துவைச்சிடுவான். கத்தி, கம்போட நாலு பேரை பார்த்தவுடனே பயந்து ஓடுறவன்னு நினச்சிட்டிங்க இல்ல” திடமாக சொல்ல, சாருமதி இயலாமையில் பற்களை கடித்து கொண்டாள்.

அவளிடம் இருந்த தமிழின் கைப்பேசி ஒலிக்க, அதை கோபமாக அவள் புறம் வீசினாள்.

தமிழ் அதை அவசரமாய் எடுத்து காதில் ஒற்றி, “ராகுல்” அழைக்கும் போதே அவள் குரல் உடைந்தது.

“தமிழ், உனக்கு எந்த பிரச்சனையும் இல்லயே? இப்ப எங்க இருக்க?”

“மார்கெட் பக்கத்தில இருக்க காஃபி ஷாப் பக்கத்தில சீக்கிரம் வாடா…” என்றாள் பரிதவிப்பாய்.

சாருமதி மேலும் சகித்துக் கொள்ள முடியாமல், எழுந்து வெளியே வர, தமிழ் அவள் குறுக்கே வந்து மரித்து நின்றாள் ஆவேசமாய்.

“பாவத்தை எல்லாம் நீ செஞ்சிட்டு என் ராகுலை பழி தீர்க்க நினைக்கிறியா? இத்தனை கீழ் தரமா நடந்துக்கிற நீங்கெல்லாம் ஒரு பெரிய மனுசி, ச்சே”

“நீங்க மறுபடியும் ராகுல் விசயத்தில் தலையிட்டா, நான் சும்மா இருக்க மாட்டேன்.”

“என்ன டீ பண்ண முடியும் உன்னால?” சாருமதி குறையாத திமிராய் சீறினாள்.

“உன்ன கொன்னுடுவேன். சும்மா சொல்லல, அத்தனை பேருக்கு முன்னால என்னை அவமானபடுத்தின
உன்ன என் கையாலயே துடிக்க துடிக்க கொன்னு பழிதீர்த்துக்க தயங்க மாட்டேன்” கண்கள் சிவக்க கோப கனலாய் தமிழ் கைகளை நெரிப்பது போல் அவள் கழுத்தருகே கொண்டு வர, சாருமதி பயந்து தான் போனாள்.

“தமிழ்…” ராகுலின் அழைப்பு குரல் கேட்டு இருவரும் திரும்பினர்.

அவனை நேராய் பார்த்த பிறகு தான், தமிழுக்கு தன் உயிர் மீண்டது போலானது. அவனருகே ஓடி வந்தவள்,
“எல்லாத்துக்கும் காரணம் இவங்க தான். இவங்கள சும்மா விடாத டா” என்று சாருமதியை கைகாட்ட, ராகுல் அவரை அமர்த்தலாய் பார்த்தான்.

அவன் எச்சரிக்கும் பார்வைக்கே சாருமதிக்குள் கிலி பரவியது. அவன் எதற்கும் அஞ்சாதவன் என்பதை இவள் முதலிலேயே அறிந்திருந்தாள்.

அவரிடம் வந்தவன், “எனக்கும் உங்க பொண்ணுக்கும் இப்ப எந்த சம்பந்தமும் இல்ல. எல்லாத்தையும் மறந்துட்டு என் வாழ்க்கை, என் குடும்பம்னு வாழ முயற்சி பண்ணிட்டு இருக்கேன். மறுபடியும் என்னை சீண்ட நினைச்சீங்க, இப்படி பொறுமையா பேசிட்டு இருக்க மாட்டேன். அப்பறம் என் முடிவு, உங்களுக்கு விபரீதமா போயிடும் ஜாக்கிரதை” அவன் அமர்த்தலானக் குரலில் எச்சரிக்க, தன் வயதிற்கு ஒரு சிறுவனிடம் தன் தரம் தாழ்ந்ததைப் போல அவமானமாக உணர்ந்தாள் அவள்.

“முதல்ல நீங்க தொலைச்ச உங்க பொண்ணையும் புருசனையும் மீட்டெடுக்கற வழிய பாருங்க. அதான் உங்களுக்கும் நல்லது” என்று எச்சரித்து அறிவுறுத்திவிட்டு தமிழை அழைத்து கொண்டு தன் வண்டியில் பறந்து விட்டான்.

குற்றவுணர்வில் சாருமதியின் தலை தாழ்ந்தது. அவளின் பிடிவாதமும் கோபமும் அவளின் குடும்ப சந்தோசத்தை முழுமையாக அழித்து விட்டதென்ற உண்மை சுள்ளென சுடுவதாய்.

தமிழ்ச்செல்விக்கு சப்பென்று போனது. அவள் முகமும் சுருங்கி போனது.
“என்னாச்சு டா உனக்கு? அவங்க உன்ன கொலை செய்ய முயற்சி பண்ணியிருக்காங்க, அவங்க முகத்திலேயே ஓங்கி ரெண்டு அறை விடாம என்னவோ அறிவுரை சொல்லிட்டு வர?”
வண்டியில் ஏறி அமர்ந்தவுடனேயே தமிழின் குரல் ஆதங்கமாக கேட்டது.

“விடு தமிழ் மறப்போம் மன்னிப்போம்” என்று ராகுல் சாதாரணமாக சொல்ல,

“என்ன? உனக்கு கை தான டா அதிகமா பேசும். புதுசா எங்க இருந்து இந்த பொறுமை எல்லாம் கத்துகிட்ட?” அவள் வியப்பாக கேட்டாள்.

“உன்கிட்ட இருந்து தான் தமிழ்!”
ராகுல் கிருஷ்ணாவின் பதில் தெளிவாக வந்தது.

“…!”

“உன் வாழ்க்கையில எத்தனை கஷ்டம் வந்தாலும் அதை நீ பொறுத்துட்டு தான இருக்க. ஆத்திரத்தில அவசரப்பட்டு நான் அவங்க மேல கையோங்கி இருந்தேன்னா அவங்களோட பழி உணர்ச்சி இன்னும் அதிகமாகி இருக்கும். அதான் அமைதியா இருந்துட்டேன்” ராகுல் எடுத்து சொல்ல, தமிழ் பதிலின்றி மௌனமானாள்.

அவன் மேலும், “நீ பயப்படாத தமிழ் இனிமே அவங்க நம்ம விசயத்தில தலையிட மாட்டாங்க. இங்க நடந்தது அம்மாக்கும் நிவிக்கும் தெரிய வேணாம். வீணா அவங்களும் வேதனைபடுவாங்க” என்று சொல்ல,

“ம்ம் சரி” அவள் குரல் இறங்கி ஆமோதித்தது.

“சினிமால எல்லாம் ஹீரோ சண்டை போட்டு ஜெயிச்சு வந்தா ஹீரோயின் ஓடி வந்து கட்டிப்பா, அது எனக்கும் வொர்க் ஆகும்னு நெனச்சேன் ப்ச்” ராகுல் கவலை போல சொல்லி தோள் குலுக்க,

அவன் சொன்னதை கேட்டு சட்டென சிரித்து விட்டவள், “ம்ம் அதுக்கு வேற ஆள பாரு டா” என்றாள்.

“என் ஆள் நீ பக்கத்தில இருக்கும் போது நான் ஏன் டீ வேற ஆள பார்க்கணும்” ராகுல் பைக்கை செலுத்திய படியே அவளை வம்பிழுக்க, தமிழ் செல்ல முறைப்போடு அவன் தோளை தட்டினாள்.

அவன் வலியில், “அஆ…” என்று முனங்க, “என்னாச்சு டா?” என்று பதறினாள்.

“ஏய் சண்டைன்னா அடிபட தான செய்யும்” என்று அவன் சாதாரணமாய் சொல்ல, அவள் விழிகளில் நீர் கோர்த்தது.

ராகுலின் உடலில் அடிப்பட்டு சிவந்திருந்த காயங்களுக்கு மருந்திட்ட, தமிழின் கண்கள் குளமாயின. அவன் வலியின் வேதனையை அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை.

ராகுல் நன்றாய் உறங்கிவிட்ட பிறகும், இவள் இமைகள் சிறிதும் சாயவில்லை.

இன்று அவனுக்கு ஏற்பட்ட ஆபத்தை அவளால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள இயலாமல் தவித்தாள்.

தனது பாவப்பட்ட விதியால் அவனுக்கும் ஏதேனும் விபரீதம் நேர்ந்து விடுமோ? என்று மனம் பேதலித்தாள். ஏதேதோ நினைத்து கொண்டு தனக்குள்ளேயே குழம்பி தவித்தாள்.

கலங்கிய சிறு குட்டையாக அவள் உள்ளம் கலக்கம் கொள்ள, முடிவற்ற பாதாளத்திற்குள் அவள் விழுந்து கொண்டிருந்தாள்.

ஏதோ பாதுகாப்பற்ற நிலை அவள் மனதை சூழ்ந்து இம்சித்தது.

இன்றைய எதிர்பாராத நிகழ்வில் பயந்து, அவள் உடைந்து போயிருந்தாள்.

# # #

காதல்காரன் வருவான்…

error: Content is protected !!