MN 8

MN 8

பால்கனியில் நின்றிருந்தான் கார்த்திக். எதிரே தெரிந்த கும்மிருட்டு மனதுக்கு இதமாக இருந்த போதிலும் மனசாட்சி லேசாக முணுமுணுத்தது.
கையிலிருந்த சிகரெட்டை ஆழ்ந்து இழுத்தான் கார்த்திக். இவனது ரசனைக்கு ஏற்றமாதிரி அத்தனை பெரிதாக லண்டன் நகருக்குள் வீடு கிடைக்காததால் புறநகர்ப் பகுதியில் வீடொன்றைத் தெரிவு செய்திருந்தான் மார்க்.
தன் முதலாளியின் ரசனைகள் அவனுக்கு அத்துப்படி.‌
சௌகர்யங்களுக்கு எந்தக் குறையும் வருவதைக் கார்த்திக் எப்போதும் விரும்பமாட்டான்.
வீட்டிற்கு முன்னும் பின்னும் நல்ல விசாலமாகத் தோட்டம் இருக்குமாறு அமைந்திருந்தது அந்தப் புது வீடு. மனது கனக்கும் வேளைகளில் இப்படி ஆழ்ந்த இருட்டுக்குள் தன்னைப் புதைத்துக் கொள்வான் கார்த்திக்.
பூனை தன் கண்களை மூடிக் கொண்டால் உலகமே இருண்டு விடும் என்று எண்ணுவதைப் போல, துரத்தும் தன் மனசாட்சியிடமிருந்து தப்பிப்பதற்காக இப்போது இருட்டைச் சரணடைந்திருந்தான் கார்த்திக்.
“மித்ரா!” அவன் இதழ்கள் மெதுவாக முணுமுணுத்தது.
“ஷ்…” கையிலிருந்த சிகரெட் இவன் அணைக்க மறந்ததால் விரலைப் பதம் பார்த்திருந்தது. கையை ஒரு முறை உதறிக் கொண்டான்.
அவன் போட்ட திட்டங்கள் அனைத்தும் செவ்வனே நிறைவேறியிருந்த போதும் மனதுக்குள் ஏதோ ஒன்று குறைவது
போலவே இருந்தது.
லண்டனுக்கு அவன் வந்த நோக்கம்
இன்று இனிதாக நிறைவு பெற்றிருந்தது. வியாபாரம், தொழில் என்றெல்லாம் அவன் சொல்லிக் கொண்டது வெறும் கண்துடைப்பு.
அவன் ஒட்டுமொத்த இலக்கும் ‘மித்ரமதி’ எனும் ஒற்றை நபர்தான்.‌
அவளைப் பழிவாங்க வேண்டும். நந்தகுமாரின் கண்கள் போகக் காரணமாக இருந்த அந்தப் பெண்ணை அவன் கதறக் கதறத் தண்டிக்க வேண்டும். இது மட்டும் தான் இப்போது அவனுக்கு வேண்டும்.
நன்றாகப் போய்க் கொண்டிருந்த தொழிலை திவாகர் என்னும் கறுப்பாடு ஒன்றை வைத்து இலகுவாகச் சரித்திருந்தான் கார்த்திக்.
சின்னதாக அவன் வைத்த மிரட்டல் ஒன்று திவாகரை அவன் காலடியில் வீழ்த்தி இருந்தது. அவனுக்குத் தெரியும், யாரை மடக்கினால் காரியம் கனகச்சிதமாக முடியும் என்று.
அவன் கேட்ட அனைத்து ஆவணங்களும் இரண்டு நாட்களுக்குள் அவன் மடியில் வந்து வீழ்ந்தன. நடுத்தரமாக இயங்கிக் கொண்டிருந்த இன்னொரு கம்பெனியை ரகசியமாகக் கை மாற்றியவன் அதை வைத்து மித்ரமதியுடன் மோதினான்.
வெற்றி வெகு சுலபமாக இவன் வசம் வந்தது. அனைத்தும் அவன் திட்டமிட்டது போலவே நடந்தேறியது. ஆனால் அவனுக்கு அது போதவில்லை.
வியாபாரம் வீழ்ந்த போதும் அவள் வீழவில்லையே. விறைப்பாக நின்று அனைத்தையும் சமாளித்த பெண்ணை நொறுக்கிப் பார்க்கும் ஆர்வம் வந்தது.
தட்டுத் தடுமாறித் தாலி கட்டிய நந்தகுமார் மனக்கண்ணில் தோன்றிய போது உள்ளுக்குள் வலித்தது இவனுக்கு.
***
நந்தகுமாரும் மித்ரமதியும் ஒன்றாக ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்ஸிட்டியில் படித்தவர்கள்.
நிறையக் கனவுகளோடும் லட்சியங்களோடும் இருந்த மகனுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தபோது பெற்றவர்கள் மகிழ்ந்து போனார்கள்.
பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்து மகனை வழியனுப்பி வைத்தார்கள். அப்போது நந்தகுமார் பண்ணிய ஆர்ப்பாட்டம் இப்போதும் கார்த்திக் ற்கு ஞாபகம் இருக்கிறது.
சகலவற்றையும் அண்ணாவிடம் பகிர்ந்து கொள்பவன் அப்போதும் ஃபோனைப் போட்டுக் கொண்டாடித் தீர்த்தான்.
சித்தி மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டதால் கார்த்திக் கூட அப்போது ஒரு முறை ஆக்ஸ்ஃபோர்ட் வரை வந்திருந்தான். எல்லாம் திருப்தியாகவே போய்க்கொண்டிருந்தது.
ஏனென்றால் அப்போது இந்தப் பாழாய்ப்போன காதல் நந்தகுமாருக்கு வந்திருக்கவில்லை.
முதல் வருடம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நன்றாகத்தான் போனது. அதன் பிறகு தான் நந்தகுமாருக்குப் பிடித்தது சனி.
முக்கியமான மீட்டிங் ஒன்றில் கார்த்திக் இருக்கும் போது தம்பி அழைத்திருந்தான். என்னவோ ஏதோ என்று கார்த்திக் பதறிப் போய்த் திரும்ப அழைக்க, இளையவன் திக்கித் திணறித் தன் காதலை அண்ணாவோடு பகிர்ந்து கொண்டான்.
இதுவெல்லாம் வாலிபத்தில் வரும் வசந்தம் தானே என்று கார்த்திக்கும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. ஒரு வாழ்த்து, சில புத்திமதி. இதோடு நிறுத்திக் கொண்டான்.
ஆனால் நாட்கள் செல்லச் செல்ல நந்தகுமாரின் புலம்பல்கள் அதிகரித்தன. படிப்பு இறுதி வருடத்தின் ஆரம்பத்தை அடைந்திருந்தது. மித்ரமதியின் தோழமையைப் பெற முடிந்த நந்தகுமாரால் அவள் காதலைப் பெற முடியவில்லை.
நாகரிகமாக மறுத்துவிட்டு தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டது பெண். படிப்பிலிருந்த ஆர்வம், காதல் கல்யாணத்தின் மீதிருந்த வெறுப்பு அனைத்தும் சேர்ந்து நந்தகுமாரை நான்கோடு ஐந்தாகத் தான் பார்க்கத் தூண்டியது பெண்ணை.
நந்தகுமார் நொறுங்கிப் போனான். கனவு, லட்சியம் எல்லாம் காற்றோடு காணாமற் போயிருந்தது. மித்ரமதி என்ற ஒன்று மட்டுமே அவன் எண்ணத்தை வியாபிக்க பாதை மாறிப் போனான் இளையவன்.
கார்த்திக்கும் அப்போதுதான் அப்பாவின் தொழிலை எடுத்து நடத்த ஆரம்பித்த காலம் என்பதால் தம்பி மீது கொஞ்சம் கவனம் குறைந்து விட்டது.
அத்தோடு இப்படி முட்டாள்த்தனமாக ‘காதல் போயின் சாதல்’ என்ற கொள்கைகள் எல்லாம் இங்கு புழக்கத்தில் இல்லாததால் நந்தகுமார் இப்படியொரு முடிவை எடுப்பான் என்று கார்த்திக் கனவிலும் நினைத்திருக்கவில்லை.
காதலின் கனம் தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயற்சித்திருந்தான் இளையவன். நல்லவேளை நண்பர்கள் சரியான நேரத்தில் அவனை சிகிச்சைக்கு உட்படுத்தியதால் நந்தகுமார் பிழைத்திருந்தான்.
தகவல் கிடைத்து கார்த்திக் பதறியடித்து ஓடி வந்தபோது தன் மார்பில் வீழ்ந்து ஓவென்று அழுதான் அந்த ஆண்பிள்ளை. பெரியவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
இதற்கிடையில் சித்தி சித்தப்பாவிற்கும் அவசரகதியில் வீசா கிடைக்காததால் அனைத்துப் பொறுப்பும் கார்த்திக் வசமானது.
தகவல் கிடைத்து நண்பனைப் பார்க்க ஹாஸ்பிடல் வந்த அனைத்துப் பெண்களையும் நந்தகுமாரை விட்டு அப்புறப்படுத்தி இருந்தான் கார்த்திக். ஆனால், அந்தப் பெண்ணை மாத்திரம் மறக்காமல் அவன் பார்த்துக் கொண்டான்.
தன் தம்பியின் நிலைமைக்குக் காரணமான அந்தப் பெண்ணை அவன் விழிகள் வஞ்சத்தோடு படம்பிடித்துக் கொண்டன.
மிகுந்த போராட்டங்களுக்கு மத்தியில் அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்து விட்டு, படிப்பிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நந்தகுமாரை இந்தியா கொண்டு வந்து சேர்த்திருந்தான் கார்த்திக்.
அதுவரை எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.      தனது இடது மணிக்கட்டை இரக்கமின்றி அறுத்திருந்தான் இளையவன். இரத்தப்போக்கு அதிகம் என்று மட்டும்தான் ரிப்போர்ட் சொன்னது. அதுகூட அப்போதே ஈடுகட்டப் பட்டிருந்ததால் எந்தப் பிரச்சினையையும் யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஆனால், ஒரு மாதம் கழித்து என்ன ஆனதோ! நந்தகுமாரின் பார்வையில் லேசான குளறுபடிகள் ஆரம்பித்தன. படிப்படியாக மங்கிய அவன் உலகம், ஒரு கட்டத்தில் முழுதாக இருளடைந்து போனது.
டாக்டர்கள் கூட வியந்து போனார்கள். மின்னாமல் முழங்காமல் சிறிதாக உருவான ரத்தக்கட்டி ஒன்று மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அகப்பட்டு அவன் பார்வை மண்டலத்தைப் பாதித்திருந்தது.
மிகவும் நுண்ணிய இடம் என்பதால் சட்டென்று முடிவெடுக்கத் தயங்கினார்கள் மருத்துவர்கள். பார்வையை விட உயிர் பெரிதல்லவா? ஆனாலும் நம்பிக்கையாகத்தான் பேசினார்கள்.
அனைத்தையும் கேள்விப்பட்டபோது துடித்துப் போனான் கார்த்திக்.
சட்டென்று அவனால் மீண்டும் இந்தியா வர தொழில் பளு அனுமதிக்கவில்லை. ஆனால் மனதின் வன்மம் மட்டும் வளர்ந்து கொண்டே போனது.
காலம் கனியும் வரை காத்திருந்தான். அவன் தொழிலும் அவனுக்கு முக்கியம் என்பதால் கால் ஊன்றும் வரை காலதாமதம் செய்திருந்தான்.
***
ஒரு வெற்றிப் புன்னகை இதழ்களில் படர ஆழ்ந்து அந்த நிக்கோட்டின் வாசத்தை அனுபவித்தான் கார்த்திக்.
ஒரு பாக்கெட்டில் பாதி தீர்ந்து போயிருந்தது.
“மித்ரமதி…” இப்போதும் அவன் உதடுகள் அவள் பெயரைத்தான் அணு அணுவாக ரசித்துச் சொன்னது. அந்த ரசிப்பில் குரோதத்தையும் தாண்டிய ஒரு மயக்கம் இருந்ததைப் பாவம் அவனே அறிந்து கொள்ளவில்லை.
நேரத்தைப் பார்த்தான். இரவு பன்னிரண்டு. உரிமையாக அவன் விரல்கள் மித்ரமதியை அழைத்தது.
“ஹலோ…” தூக்கக் கலக்கத்தோடு வந்தது குரல்.
“ஹாப்பி பர்த்டே ஹனி!”
“………..”
“மித்ரா!”
“ம்…”
“ஹாப்பி பர்த்டே.” குரல் அழுத்தமாக வந்தது.
“தான்க் யூ. உங்களுக்கு… எப்படி கார்த்திக் தெரியும்?” அவள் கேள்வியை அவன் ரசித்துச் சிரித்தான்.
“எல்லாமே தெரியும் போது இது தெரியாதா மித்ரா?”
“எல்லாமே ன்னா?”
“மித்ராவைப் பத்தி எல்லாமே தெரியும். தெரிஞ்சதால தானே அவ்வளவு பெரிய முடிவை சுலபமா எடுக்க முடிஞ்சுது.”
“கார்த்திக்…”
“சொல்லுடா.”
“நீங்க… நீங்க கொஞ்சம் அவசரப் படுறீங்களோன்னு எனக்குத் தோணுது.”
“ஹா… ஹா… ஹேய் பேபி! இதுவே ரொம்ப லேட்டோன்னு எனக்குத் தோணுது.”
“அப்படியில்லை கார்த்…”
“ஹேய் பர்த்டே பேபி! பேசினது போதும், தூங்குங்க. நாளைக்குச் சின்னதா ஒரு பார்ட்டி அரேன்ஜ் பண்ணி இருக்கேன்.”
“பார்ட்டியா? எதுக்கு?”
“எதுக்கா? என்ன கேள்வி மித்ரா இது? உன்னோட பர்த்டே யை கொண்டாட வேணாமா?”
“நான் பர்த்டே எல்லாம் கொண்டாடுறது இல்லை கார்த்திக்.”
“மாத்தலாம் ஹனி! எல்லாத்தையும் மாத்தலாம். இனி இந்த மித்ரமதிக்கு பார்த்துப் பார்த்துச் செய்யத்தான் நான் இருக்கேனே…”
“…………”
“குட்நைட் டார்லிங்.”
“குட்நைட்.” பச்சக் என்று ஒரு முத்தச் சத்தம் மித்ரமதியின் காதில் வந்து ஒட்டிக் கொண்டது.
மித்ரமதி நடுங்கியே போனாள். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்று புரியவேயில்லை. கார்த்திக் ஒரு புரியாத புதிராகவே தோன்றினான் அவளுக்கு.
எல்லாவற்றையும் அவன் இஷ்டத்திற்கே பண்ணுவது போலத்தான் தோன்றியது. ஆனால் அப்படி இல்லையோ என்பதைப் போல கண்ணே, மணியே, கட்டியமுதே என்று கொஞ்சுகிறான்.
கட்டிலில் சாய்ந்த மித்ரமதி ரூமிற்குள் பரவியிருந்த அந்த இருளை வெறித்தபடியே உட்கார்ந்திருந்தாள்.
அத்தனை பேருக்கு முன்பாக அவன் மோதிரம் போட்டதும், முத்தமிட்டதும் என காட்சிகள் அவளுக்குள் லேசான பூரிப்பை உண்டு பண்ணியது.
அங்கிருந்த இளம் பெண்களின் கண்கள் கார்த்திக்கை வட்டமிட்ட போது சொல்லப்போனால் கொஞ்சம் கர்வமாகத் தான் இருந்தது.
ஆனால் அவன் வேகம் தான் அவளுக்கு அச்சத்தைக் கொடுத்தது. அவளை எதையும் சிந்திக்க விடாமல் அவளுக்காகவும் சேர்த்து அவனே முடிவெடுத்த போது கொஞ்சம் சலிப்பாக இருந்தது.
மறுத்திருக்க வேண்டுமோ? அத்தனை பேருக்கு முன்பாக அவனை உதறித் தள்ளிவிட்டு வருவது அத்தனை நாகரிகமாகத் தோன்றாததால் தான் அமைதியாக அவனை அனுமதித்தாள். ஆனால்…
கார்த்திக் இடத்தில் வேறு யாராவது இருந்து இப்படி நடந்திருந்தால் அப்போது நான் என்ன பண்ணி இருப்பேன்? இப்படித்தான் நடந்து கொண்டிருப்பேனா? அப்போதும் என் மனம் நாகரிகம் பார்த்திருக்குமா? நிச்சயமாக இல்லை!
அப்படியென்றால்…
கண்களை இறுக மூடிக்கொண்டாள் மித்ரமதி. எண்ணங்கள் சொன்ன இறுதி முடிவு அத்தனை ரசிக்கத்தக்கதாக இருக்கவில்லை.
ஒரு ஆணை நம்பி அவள் வாழ்க்கையை ஒப்படைக்கும் தைரியம் அவளுக்குக் கொஞ்சமும் இல்லை. இப்போதே தனக்கும் சேர்த்து முடிவெடுக்கும் கார்த்திக் அவளுக்குச் சரிப்பட்டு வரமாட்டான்.
சுயத்தைத் தொலைத்து விட்டு ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ என்றெல்லாம் வாழ அவளால் முடியாது.
அவள் கைபேசி லேசாக ஒளிர்ந்தது. திரும்பினாள், குறுஞ்செய்தி ஒன்று வந்திருந்தது. யாராக இருக்கும்? அதுவும் இந்த நேரத்தில்? மீண்டும் கார்த்திக் தான்.
முழங்காலை மடித்தபடி அவனிருக்க, விழிகளில் மயக்கம் தெறிக்க அவள் நின்றிருந்தாள். இரண்டு ஃபோட்டோக்கள் அனுப்பி இருந்தான். ஒன்றில் அவன் மோதிரம் அணிவிக்க,
இன்னொன்றில் அவள் விரல்களில் முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.
மித்ரமதிக்கு என்னவோ போல் இருந்தது. இது அவள் தானா?
கார்த்திக்கை அவள் பார்க்கும் பார்வையில் இத்தனை மயக்கம் தெரிகிறதா? இதைத்தான் அன்று ரிச்சர்ட் கூட சொன்னானா?
ஏதோ தோன்ற கார்த்திக்கைச் சட்டென்று அழைத்தாள் மித்ரமதி. இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதைத் தொடர்வது அத்தனை நல்லதாகத் தோன்றவில்லையே!
“ரதி! என்னடா? இன்னும் தூங்கலையா?” அந்தக் குரல் காதலில் முக்கி எடுத்தாற் போல இருந்தது.
“கார்த்திக்… தூங்கிட்டீங்களா? டிஸ்டர்ப் பண்ணுறேனா?”
“இல்லையில்லை, இப்போதான் முக்கியமான ஃபைல் ஒன்னை மார்க் அனுப்பி இருந்தான். அதைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். நீ சொல்லு பேபி.”
“கார்த்திக்…. இது…”
“ம்… கமான்.”
“இது வேணாம் கார்த்திக்.”
“ஏன்?”
“இது சரி வராது.”
“அதுதான் ஏன்?”
“நான் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன்.”
“அப்படியா?” அவன் குரலில் இப்போது கேலி.
“கார்த்திக் ப்ளீஸ். நான் எப்பவுமே ஃப்ரீயா இருக்கணும்னு நினைப்பேன். எனக்குப் புடிச்ச நேரத்துல புடிக்கிற விஷயத்தை செய்யணும்னு விருப்பப்படுவேன். எனக்காக நானே முடிவெடுக்கணும்னு ஆசைப்படுவேன்.”
“குட்… அதுல தப்பில்லையே.”
“இந்த லவ்வுக்கெல்லாம் நான் சரிப்பட்டு வரமாட்டேன் கார்த்திக்.”
“உனக்குள்ள எவ்வளவு லவ் இருக்குன்னு உனக்கு இன்னும் புரியலை ரதி!” அவன் குரல் ஹஸ்கியாக மாறி இருந்தது. காதுக்குள் கேட்ட அந்தக் குரலில் நிலைகுலைந்தாள் மித்ரா.
அது என்ன? இப்போதெல்லாம் என்னைப் புதிதாக ‘ரதி’ என்கிறான்!
“உன்னோட கண்ணு  என்னைப் பார்க்கும் போது உனக்குள்ள இருக்கிற அந்த லவ்வை எம்மேல கொட்டுறது உனக்குத் தெரியலை ரதி. ஆனா அது எனக்குத் தெரியும்.”
“கார்த்திக்!”
“இல்லைன்னு பொய் சொல்லப் போறியா பேபி? காதலைக் காட்டின உன் கண்ணை மட்டும் தான் இத்தனை நாளா நான் பார்த்திருக்கேன் பேபி. ஆனா இன்னைக்கு நான் தொட்டப்போ…”
அவனை மேலே பேச விடாமல் சட்டென்று ஃபோனை அணைத்து விட்டாள் மித்ரமதி. முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டாள்.
நினைக்கவே வெட்கமாக இருந்தது. என்ன ஆனது எனக்கு? அவன் தொட்டால் அப்படிக் குழைந்து போக வேண்டுமா? அப்படிக் குழைந்து கொண்டு வேண்டாம் வேண்டாம் என்றால்…
இவள் சிந்தனை இவ்வாறு இங்கே இருக்க, அங்கே கையிலிருந்த ஃபைலைத் தூக்கித் தூரப் போட்டான் கார்த்திக். இரு கைகளையும் கோர்த்துச் சோம்பல் முறித்தவன் அதே கைகளைத் தலைக்கு அணையாகக் கொடுத்துக் கொண்டான்.
அவள் அம்மா தங்களைப் பார்க்கிறார் என்பதற்காகத் தான் அப்படியொரு நெருக்கத்தைக் காட்டத் திட்டமிட்டான்.
மித்ரமதியின் அம்மா அவளை கல்யாணத்திற்காக நெருக்குவது அவனுக்குத் தெரியும். திவாகர் உபயம். அவரை வைத்து இலகுவாகக் காய் நகர்த்தத் தான் சட்டென்று அவள் இடை அணைத்தான்.
திரைச்சீலை அத்தோடு மூடிவிட்டது. அவனும் அத்தோடு நிறுத்தி இருக்கலாம். அதுதான் நினைத்தது நடந்து விட்டதே! ஆனால்…
கார்த்திக் நிறுத்தவில்லை. நிறுத்தவும் தோன்றவில்லை. ஏதோ தனக்கே சொந்தமான ஒன்றை எந்தத் தடையும் இல்லாமல் கையாள்வது போல நடந்து கொண்டான்.
அவளிடம் விழிகளாலாவது ஒரு அனுமதி கேட்க வேண்டும் என்ற இங்கிதம் கூட அவனுக்கத் தோன்றவில்லை. அந்த இதழ்களைத் தீண்டி விட்டான்.
முடிவெடுத்து விட்டான். ஆனால் முடிக்கத்தான் முடியவில்லை. முயன்று தோற்றுப் போனான்.
தன் கைகளுக்குள் குழைந்து நின்ற அந்த வெண் பளிங்கு தேகக்காரிக்கு அவனை அத்தனை பிடிக்கும். அது அவனுக்கு சர்வ நிச்சயமாகத் தெரியும்.
ஆனால்… அதே எழிலோவியத்தை அவனுக்கும் அவ்வளவு பிடிக்கிறது என்று அவனுக்கே புரியவில்லை.
*  *  *  *  *  *  *
காலையில் கொஞ்சம் தாமதமாகத்தான் எழுந்தாள் மித்ரமதி. அம்மாவின் புன்னகை முகம் கொஞ்சம் குழப்பமாக இருந்தது மகளுக்கு.
“ஹாப்பி பர்த்டே மித்ரா.”
“தான்க் யூ ம்மா.”
“பார்சல் ஒன்னு வந்திருக்கு.”
“யாரு அனுப்பி இருக்கா?”
“கார்த்திக் ன்னு தான் பெயர் போட்டிருக்கு.” சொன்ன அம்மாவைச் சட்டென்று திரும்பிப் பார்த்தாள் மித்ரா. இப்போதும் ஒரு புன்னகையோடே நகர்ந்து விட்டார் தேவகி.
அவசர அவசரமாக சோஃபாவுக்கு வந்தவள் அங்கிருந்த பெட்டியைத் திறந்தாள். உள்ளே கறுப்பு நிறத்தில் அழகானதொரு கவுன் இருந்தது.
சரியாக மூன்று மணிக்கு நகரத்தின் பிரபலமானதொரு பார்லரில் அவளுக்கான அலங்காரத்திற்கு முன்னேற்பாடும் செய்யப் பட்டிருந்தது.
அவள் அமர்ந்து இருந்த சோஃபாவிற்குப் பின்புறமாக வந்து எட்டிப் பார்த்த தேவகி சிரித்துக் கொண்டு ஃபோனில் யாரையோ அழைத்தபடி நகர்ந்து விட்டார்.
சக்திவேல் மாமாவிடம் எதுவோ பேசுவது போல கேட்டது மித்ரமதிக்கு.
குழம்பிப் போனாள். இதுவரை தனக்காகத் தானே எல்லாம் செய்து பழக்கப்பட்டிருந்தவளுக்கு இப்போது இன்னொருவர் பார்த்துப் பார்த்துப் பண்ணுவது இதமாக இருந்த போதும்…
கார்த்திக்கை உடனேயே அழைத்தாள். எதுக்கு இந்த ஆர்ப்பாட்டம்?
“ஹாய் ஹனி. எழுந்தாச்சா?”
“கார்த்திக்! என்ன இதெல்லாம்?”
“நான் தான் சொன்னேனே மித்ரா. ஈவ்னிங் சின்னதா ஒரு பார்ட்டி. அவ்வளவுதான்.”
“அதுக்கு எதுக்கு ட்ரெஸ்? பார்லர்?”
“ஹேய் பேபி! இதெல்லாம் எல்லாரும் பண்ணுறது தானே?”
“கார்த்திக்! ப்ளீஸ்… எனக்குக் கொஞ்சம் டைம் குடுங்க. எல்லாமே ஓவர் ஸ்பீட் ல போற மாதிரி எனக்குத் தோணுது.”
“ஓகே டார்லிங். டேக் யுவர் டைம். அதுக்கும் இன்னைக்கு நடக்கப்போற பார்ட்டிக்கும் என்ன சம்பந்தம்? அது பாட்டுக்கு அது. இது பாட்டுக்கு இது.” சுலபமாகச் சொன்னவன் அத்தோடு பேச்சை முடித்துக் கொண்டான்.
சரியான நேரத்துக்குக் கார் வந்தது, அதுவே வழக்கம் என்பது போல. ஸ்விட்ச் ஐப் போட்டாற் போல அனைத்து நிகழ்வுகளும் நடக்கப் பதுமை போல அமர்ந்திருந்தாள் மித்ரமதி.
ஒரு பெண் முகத்துக்கு அலங்காரங்கள் பண்ண, இன்னொரு பெண் தலையை ஒரு வழி பண்ணினாள். ஆக மொத்தம் இரண்டு மணித்தியாலங்கள் கடந்த பின்னர் தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக் கொண்ட மித்ரமதி கொஞ்சம் பெருமிதமாகத்தான் உணர்ந்தாள்.
ஏனோ… அப்போதே கார்த்திக் முன்னால் போய் நிற்கவேண்டும் போல ஆசையாக இருந்தது. மனதின் போக்கு அவ்வப்போது கொஞ்சம் விசித்திரமாக இருப்பது அவளுக்கே புரிந்தது.
கார் நகரத்தின் மையத்தில் அமைந்திருந்த ஒரு கார்டனில் போய் நின்றது. இங்கே எதற்கு என்பது போல ஒரு குழப்பத்துடனேயே இறங்கினாள் பெண்.
கார்த்திக் தான் அவளை வந்து வரவேற்றான். படு காஷுவலாக ஒரு வெள்ளை ஷர்ட்டில் நின்றிருந்தான். அதுவே அவ்வளவு கம்பீரமாக இருந்தது அவனுக்கு. மித்ரமதி கூட கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் அவனிடமிருந்து தன் கண்களைப் பிரித்து எடுத்தாள்.
உச்சி முதல் உள்ளங்கால் வரை அவளை ஒரு முறை அவன் பார்வை வருடிச் சென்றது. கண்களில் ஒரு திருப்தி தெரிய ஒற்றைப் புருவத்தை ஒரு முறை அவன் ஏற்றி இறக்க உலகத்தை வென்ற மயக்கம் பெண்ணிற்குள்.
இயல்பாக அவன் கைகள் அவளை நோக்கி நீள, தயக்கத்துடனேயே கையை நீட்டினாள் மித்ரமதி. புன்னகைத்தபடியே அவளை அழைத்துக்கொண்டு போனான் கார்த்திக்.
இலையுதிர் காலத்தின் தொடக்கத்தில் மஞ்சளும் சிவப்புமாக இலைகளைத் தாங்கி நின்ற மரங்களுக்கிடையே மேஜை நாற்காலிகள் போடப்பட்டிருந்தது.
இத்தனை ஏற்பாடுகளை மித்ரமதி எதிர்பார்த்திருக்கவில்லை.
சக்திவேல், திவாகர், தினகர் என அனைவரும் தங்கள் குடும்பத்தோடு வந்திருந்தார்கள்.
ரிச்சர்ட் அம்மாவையும் அழைத்து வந்திருந்தான். இதையெல்லாம் தாண்டி கார்த்திக் ஒரு தம்பதியிடம் அவளை அழைத்துச் சென்று இதுதான் அவன் அம்மா, அப்பா என்று அறிமுகப்படுத்தவும் திக்குமுக்காடிப் போனாள் இளையவள்.
“ஹாப்பி பர்த்டே மித்ரா.” இது பத்மா, கார்த்திக்கின் அம்மா.
“தான்க் யூ ஆன்ட்டி.” திணறினாள் பெண்.
“எதுக்குக் கார்த்திக் இவ்வளவு க்ரான்ட் ஆ?” அவள் கேள்விக்கு ஒரு தோள் குலுக்கல் தான் பதிலாக வந்தது.
வாழ்த்துகள் சொல்லி, கேக் வெட்டி, உணவு பரிமாறி எனப் பொழுது வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. மெல்லிய விளக்குகளின் வெளிச்சத்தில் அந்த இடமே தேவலோகம் போல இருந்தது.
அத்தனை பேரும் களித்து, உணவுண்டு அமைதியாகப் பேசிக்கொண்டிருந்த சமயம் எழுந்து நின்றான் கார்த்திக். எல்லோரும் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்த போதும் மித்ரமதியைத் தன் அருகிலேயே வைத்துக் கொண்டான்.
“ஹாய் ஃப்ரெண்ட்ஸ்! இந்தச் சந்தோஷமான தருணத்துல என் வார்த்தைக்கு மதிப்பளிச்சு வந்த உங்க எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப நன்றி. இது வெறுமனே ஒரு பர்த்டே பார்ட்டி இல்லை. அதையும் தாண்டி உங்க எல்லாருக்குமே ஒரு ஆனந்த அதிர்ச்சி காத்திருக்கு.”
கார்த்திக் ஒரு இடைவெளி விட மித்ரமதிக்குள் லேசாக மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. ஏதோ ஏடாகூடமாக நடக்கப் போகிறது என்று அவள் நினைக்கும் போதே அத்தனை பேர் முன்னாலும் போட்டு உடைத்தான் கார்த்திக்.
“மிஸ்.மித்ரமதி சந்திரசேகர், இனி… மிஸஸ்.கார்த்திக் ஹரிகிருஷ்ணா.” அவன் சொல்லி முடிக்க அங்கிருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
அவள் கைப்பிடித்து அவளை எழுப்பியவன் அத்தனை பேர் முன்னாலும் அவள் கன்னத்தில் முத்தம் வைத்தான். திடுக்கிட்டு விழித்தது பெண்.
‘மிஸஸ்.கார்த்திக் ஹரிகிருஷ்ணா!’ பெயரில் கூட முழுதாக அவனே ஆட்சி செய்தான். அங்கு கூட மித்ரமதி தொலைந்து தான் போனாள்!
error: Content is protected !!