UKK14

UKK14

உலாவரும் கனாக்கள் கண்ணிலே-14

 

பணியின் நிமித்தம் காலையில் வெகுசீக்கிரம் எழும் அமர், தனக்குத் தேவையான காலை உணவைத் தயாரிக்க அர்ச்சனாவையும் எழுப்பிவிட்டு, தனது வேலையில் கவனமாக இருந்தான்.

தூக்கக் கலக்கத்துடன் இருந்தவள் சப்பாத்திக்கு மாவு பிசைந்து முடிக்கவே பதினைந்து நிமிடங்களுக்கு மேலாகியிருந்தது. இடையில் மனைவியிடம் பேச்சுக் கொடுத்தவாறு கிளம்பிக் கொண்டிருந்தான்.

அடுத்து வந்த அரை மணி தியாலத்தில் ஒரு வழியாக கணவன் வேலைக்குச் சென்றிருக்க, அர்ச்சனாவின் காலைத் தூக்கமும் விடைபெற்றுச் சென்றிருந்தது. படுக்கையில் படுத்தவளுக்கு உறக்கம் வராமல் இருக்கவே… நேரத்தை பார்த்தாள் மணி ஆறு பத்து என அலைபேசி காட்டியது.

வாட்ஸ் அப்பில் அர்ச்சனாவின் ஆட்காட்டி மற்றும் கட்டை விரல்களுக்கு வேலை கொடுத்தாள். ஒரு சேமிக்காத புதிய வெளிநாட்டு இலக்கங்களுடன் கூடிய எண்ணிலிருந்து செய்தி வந்திருக்க, டிபியிலும் படம் எதுவும் இல்லாமல் இருக்க… அதை ‘யாராயிருக்கும் புது நம்பரா இருக்கே‘, என எண்ணியபடி திறந்தாள்.

“ஆலப்புழாவுக்கு அப்புறம் கோராபுட் ஃபால்ஸா!” அருகே இரு யோசிக்கும் ஸ்மைலிகள்

“அடுத்து எங்க?

நான் யாருனு உனக்குத் தெரியுதா?”, என்ற மூன்று தங்கிலீஸ் செய்தியுடன் இருந்தது.

’வெளிநாட்டில் இருந்து யாராக இருக்கும்?’ என யோசித்தவளுக்கு அதை யார் அனுப்பியது என அறிந்து கொள்ளும் ஆவலில்

“நீங்க யாருன்னு எனக்குத் தெரியல… யாருன்னு சொல்லுங்க”, என செய்தியை அடித்து அனுப்பினாள்.

பிறகு வேறு வேலைகளில் கவனம் இருந்தாலும், பதில் வந்துவிட்டதா? என அலைபேசியை எடுத்து பார்த்தபடியே எட்டு மணி கடந்திருந்தது.

அடுத்து சிறிது நேரம் வேறு வேலைகளைப் பார்த்துவிட்டு, காலை உணவை முடித்துக் கொண்டு வந்தவளை வரவேற்றது, புதிய எண்ணிலிருந்து புதுச் செய்திகள்.

“என்னைத் தெரியலயா? என் நம்பர் பாத்து கண்டுபிடிச்சிருவனு நினச்சேன்

நீ டிகிரியெல்லாம் பண்ணிருக்கனு தப்பா எடை போட்டுட்டேன்

நான் தான் நினைவின் சின்னம்…..

இப்போ யாருனு தெரியுதா?

தெரிஞ்சாலும் சரி. நானே சொல்லீறேன்…

மௌனிகா”

அதை வாசித்தவளுக்கு எங்கோ வலி… வீட்டில் மிக நெருங்கியவர்களின் எதிர்பாரா மரண செய்தியைக் கேட்டவுடன் எழும் அவஸ்தை போல அர்ச்சனாவின் உள்ளம் பாராமாக கனத்தது.

ஒரு மணித் தியாலம் கனத்த மனதுடன் கவலையும், பயமும் ஒருங்கே அர்ச்சனாவை விரட்ட மன அழுத்தத்தினால் அமைதியாக இருந்தாள்.  மனம் சற்றுத் தெளிந்தவுடன்,

‘மீண்டும் இவளா?

என்னுடைய மொபைல் நம்பர் இவக்கிட்ட யாரு கொடுத்திருப்பா?

நாங்க ஆலப்புழாவுக்கும், கோராபுட் ஃபால்ஸூக்கும் போனத யாரு சொன்னது இவகிட்ட?

இப்பதான் முருங்க மரத்தில ஏறுன வேதாளம் இறங்கி வந்துச்சுன்னு நிம்மதியா இருந்தேன்.  அதுக்குள்ள இவளுக்கு மூக்குல வேர்த்திருச்சு போல

இத இப்படியே வளர விடக் கூடாது, வரட்டும் இவரு… இந்த ஆளு சொல்லாம அவளுக்கு எப்டி தெரிஞ்சுதுன்னு மொதல்ல கேப்போம்?’, என தனது கணவனின் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் அர்ச்சனா.

நீண்ட நேரத்திற்குப் பின் மௌனிகாவிடமிருந்து மீண்டும் குறுஞ்செய்தி வந்திருக்க, வேகமாக திறந்து பார்த்தாள்.

“என்ன சைலண்ட் ஆகிட்ட?

அடுத்து எங்கூட கொல்கத்தா வரான் அமர்

அந்த ட்ரிப்ல நீ மிஸ்ஸிங்”,என்ற செய்தியைப் பார்த்தவள் நீண்ட நேரம் ‘அது எப்படி சாத்தியமாகும்னு பாக்குறேன்”, என யோசித்தாள்.

‘இது வரை எல்லா விடயத்துலயும் அவசரப்பட்டு மூக்கு உடஞ்சது தான் மிச்சம், இந்த முறை நிதானமா செயல்படனும், அந்த மேனா மினுக்கி மோனிகாவா (மௌனிகா) இல்ல நானானு முடிவு பண்ணுறேன்’, என தனக்குள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள், அர்ச்சனா.

மதியம் இரண்டு மணிக்குமேல் வீட்டிற்கு வந்த கணவனை ஆராய்வதாக எண்ணி தன் எக்ஸ்ரே கண் கொண்டு நோக்கினாள்.  அமர் வழக்கம்போல இருந்தான்.  ஒன்றும் வித்தியாசமாகத் தெரியவில்லை. வரும் அழைப்புகளை மனைவியின் அருகில் அமர்ந்தவாறே ஏற்றுப் பேசினான்.

மாலையில் அலுவலகம் சென்றவன் வீடு வந்தவுடன் மனைவியை அழைத்தான்.

“அர்ச்சனா, இங்க வாயேன்”

“என்ன?”, கேள்வியுடன் வந்தவளை அருகே அமரச் செய்தான்.

“எங்க சீனியர் போறதா இருந்த மீட்டிங்கு, இப்போ என்ன போக சொல்றாங்க”, என அமர் சொல்லி முடிக்கும் முன்பே

“எங்க மீட்டிங்”, என அர்ச்சனா கேட்டிருந்தாள்.

“கொல்கத்தாவுல”

“என்னடா ஆளு ரொம்ப அமைதியா இருக்கீங்களே… இன்னும் விசயத்த சொல்லாமனு! , நான் அப்பவே நினச்சேன்,”

அர்ச்சனாவின் வார்த்தைகள் புரியாமல் “என்ன அர்ச்சனா சொல்லுற, இந்த விசயம் எனக்கு தெரியும் முன்ன எப்டி உனக்கு தெரியும்?”

“மூஞ்சிபுக்கு (ஃபேஸ்புக்), ட்விட்டர் இதுலலாம் வந்துச்சு, அப்புறம் பிபிசிலயும் சொன்னாங்க”, என்றாள் நக்கலாக

மனைவியின் மாறுபட்ட பேச்சில் நிதானமாக நின்றபடியே யோசித்தான். ‘காலைல நல்லா தான இருந்தா, மதியம் கவனிக்காம விட்டுட்டனே! இப்ப என்ன பிரச்சனைனு தெரியலயே, பேத்த… அழகா இருந்தா மட்டும் போதுமா? அறிவு வேணா…!

மண்ட முழுக்க க்ளேவ வச்ச ஆண்டவா… நீயா என்னனு க்ளு குடுத்தா தான் நான் தப்பிப்பேன். சாதா விசயத்தல்லாம் விசமா மாத்திருவாளே, நல்ல நேரத்துல தாலி கட்டுடானு பெரியவங்கல்லாம் சொல்லித்தான் நம்பிக் கட்டுனேன்.. நாசமா போனேன்.

ராகு காலமில்லா நல்ல நேரம்னாலும் ராட்சசி கழுத்துல தாலி கட்டுனா ஜிலு ஜிலுனா இருக்கும்… என்ன அவ பிளான்னு தெரிஞ்சா நல்லாருக்கும்… ஒன்னும் தெரியாத அப்பாவிய இன்னைக்கு என்ன செய்ய காத்திருக்காளோ கடவுளே…’

“நீ இப்பல்லாம் லோகல் சேனல பாக்றதில்லயா அர்ச்சனா?”, வேண்டுமென்றே அமரும் கேட்க

“என்னயும் அங்க கூட்டிட்டு போவீங்களா?இல்லையா?”, கேள்விகளை உதாசீனம் செய்து வினாவெழுப்பினாள்.

“அத கேக்கத்தான் உன்ன கூப்டேன், அதுக்குள்ள நீதான்…”, எனக் கூறி அமரின் வார்த்தைகளை நிறைவு செய்யுமுன்

“என்ன பண்ணேண்?”

“சரி அப்போ நீயும் வர… ரெண்டு பேருக்கும் வேணுங்கறத எடுத்து வச்சிரு… நான் இப்போ டிக்கட்கு சொல்லிறேன்”, என நாசூக்காக பேச்சை மாற்றிவிட்டு, வெளியே கிளம்பிவிட்டான்.

யோசனையோடு டிவியின் முன் அமர்ந்திருக்க, டிவியின் நிகழ்ச்சிகள் மனதில் ஒட்டாமல் மௌனிகா பற்றியே சிந்தித்திருந்தாள், அர்ச்சனா

*****************************************************

 

வேளைக்கு உணவருந்தாததாலும், காலை உணவை பெரும்பாலும் தவிர்த்ததாலும் சுகவீனமாக ஜனதா இருப்பதாக மருத்துவர் கூறியதைக் கேட்ட அன்பரசிக்கு ஏமாற்றமாகியிருந்தார்.  ஆனாலும் மகளிடம் தனித்து பேசும் சந்தர்ப்பம் அதிகம் கிடைக்காமல் போயிருக்க, மகளை வீட்டிற்கு அழைத்து வந்தவர் அவர்களின் குடும்ப சூழலை கேட்டறிந்தார்.

லோபிரஷர் மற்றும் அனிமிக்கை சரி செய்ய பசிக்கும் நேரத்திற்கு உணவை தவிர்க்காமல் எடுக்குமாறு கூறியிருந்தார் மருத்துவர்.  மேலும், காலை உணவை அறவே தவிர்த்தல் கூடாது எனவும் கூறியிருந்தார்.  தனித்து உண்ண யோசித்து சில நேரங்களில் ஜனதா உணவைத் தவிர்த்ததை அறிந்தவர் ஒரு வாரம் நெய்வேலியில் தங்குமாறு கூறியதோடு மருமகனிடமும் விடயத்தைக் கூறியிருந்தார், அன்பரசி.

சந்துருவிற்கு, ஜனதாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மறுத்து கூற இயலாமல் சரியென்று விட்டான்.  இரண்டு நாட்கள் பத்ரியின் மகள்களைக் கூட காணாமல் உடல் அயர்வுடன் உறங்கியவளைக் கண்டு வீட்டில் இருந்த பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வருத்தமடைந்திருந்தனர்.

மருத்துவமனையில் இருந்து வந்தவள், கணவனுடன் பேசக்கூட யோசிக்காமல் படுத்துவிட்டாள்.  சந்துருவிற்கு விடயத்தை அன்பரசி அழைத்துக் கூறியிருந்தார்.  மனைவி தன்னைத் தேடாதது வருத்தத்தைத் தர வேலையிலும் கவனம் போகாமல் தடுமாறினான். அவனது அழைப்பு எடுக்கப்படவில்லை.  இரண்டு நாட்களுக்குபின்  தனது மொபைலுக்கு வந்திருந்த கணவனின் மிஸ்டு கால்களைப் பார்த்தவள் அவனுக்கு அழைத்தாள்.

இரண்டே ரிங்கில் எடுத்த கணவனின் செயலைக் கூட உணராதவளாய்,

“என்னங்க கால் பண்ணியிருந்தீங்களா?”

“ஆமா, எப்டி இருக்க ஜனதா?”

“என்னனு தெரியலங்க, எந்திரிச்சா தலைய கொண்டு தள்ளுது, அதான் படுத்தேன். அப்படியே தூங்கிட்டேன் போல, யாரும் எழுப்பல, நீங்க இங்க வந்து சாப்டுட்டு போங்களேன்”

அன்பரசியின் அழைப்பிற்கு வேலை இருப்பதாகக் கூறி மறுத்தவன், மனைவி அழைத்ததும் சரியென்றுவிட்டான்.

“அப்புறம் இங்க எப்ப வர?”, என்ற சந்துருவின் கேள்விக்கு பதிலளிக்கு முன், தன் அறையை நோக்கி வரும் அரவம் உணர்ந்து காதிலிருந்த போனை எடுத்துவிட்டு அறை வாயிலைப் பார்த்தாள்,

உணவுடன் அறைக்குள் நுழைந்த உமாவைக் கண்ட ஜனதா, பதறியவளாய்

“எதுக்கண்ணி நீங்க எடுத்துட்டு வரீங்க, பசிச்சா நானே வந்து சாப்பிடுவேன்”, லைனில் இருந்த கணவனுக்கு அழைத்த காலை கட் பண்ணாமல் பேச

லைனில் இருந்த சந்துருவைப் பற்றி அறியாதவளாய்,

“கல்யாணத்துக்கு முன்ன ஒரு நாளு கூட முடியலனு நீ சொல்லி நான் கேட்டதில்ல ஜனதா, எப்பவும் சுறுசுறுப்பா இருந்து தான் நான் உன்ன பாத்திருக்கேன்.  ஆனா வந்ததுல இருந்து உடம்புக்கு முடியாததால ஒரே தூக்கமா தூங்குற, எனக்கே கஷ்டமா இருக்கு… உங்க அண்ணன் ஒரே புலம்பல்…

அதுக்கு மேல அத்தையும், மாமாவும்… அதான் எழுப்பியாது சாப்பிடச் சொல்லலாம்னு எடுத்துட்டு வந்தேன்.. ஆறதுக்கு முன்ன நீ சாப்பிடு”, என்றவள் அங்கிருந்து அகன்றிருந்தாள், உமா.

உமா அறையிலிருந்து வெளியே சென்றவுடன்,

“அண்ணி வந்தாங்க… அதான்… நீங்க வந்துனா என்ன இப்போ அங்க கூட்டிட்டு போங்களேன்”, எதிர்முனையில் எந்த பதிலும் இல்லாமல் போக

“ஹலோ… என்னங்க லைன்ல இருக்கீங்களா?”

“ம்… இருக்கேன்… சொல்லு”, உயிரில்லாமல் வந்த வார்த்தைகளை உணர்ந்தவள், இது நேரம் வரை நன்றாகப் பேசியவனின் வார்த்தைகள் எப்படி திடீரென்று மாறியது என யோசித்தாள். புரிந்தது தான் செய்த தவறு.  ஆனாலும் அவளாக எதுவும் விளக்கம் அளிக்கவும் இல்லை.  கணவனிடம் அது பற்றி கேட்கவும் இல்லை.

“எப்ப வரீங்க?”

“அத்த ஒரு வாரம் கழிச்சு உன்ன இங்க அனுப்பறதா சொன்னாங்க, நீ ஒரு வாரம் கழிச்சே வா,  எனக்கு இப்ப ஒரு வேலை இருக்கு நான் அப்புறம் பேசுறேன்”, என்றவன் வைத்துவிட்டான்.

உணவை உண்டவள் தட்டுடன் அறையை விட்டு கிச்சனுக்குள் சென்றாள்.  பிறகு தன் தாயை தேடிச் சென்றவள்

“அம்மா நான் விருத்தாசலத்துக்கு கிளம்புறேன், அண்ணண கொண்டு வந்து விடச் சொல்லுங்கம்மா”

“நான் மாப்பிள்ளைக்கிட்ட பேசிட்டேன் ஜனதா, ஒரு வாரம் இருந்து உடம்ப தேத்திட்டுப் போ”, அன்பரசி

“அங்க போயி தேத்திக்குறேன், என்ன கொண்டு போயி அங்க விடுங்க”

“ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடு, தனியா சாப்பிட ஒரு மாதிரியா இருக்குனு பட்டினி கிடந்தா உனக்குத் தான் கஷ்டம் பாத்துக்க சொல்லிட்டேன்”

அதற்குமேல் இருப்பு கொள்ளாமல் தவித்தவள், பத்ரி வந்தவுடன் கொண்டு போய் விடுமாறு கூற

“ஒழுங்கா உடம்ப கவனிச்சுக்குவனா இப்போ அங்க போ, இல்லனா உன் வீட்டுக்காரர்கிட்ட நான் பேசுறேன்”, பத்ரி

“நான் இனி நேரத்துக்கு நல்லா சாப்பிடுறேண்ணா, இப்ப என்ன அங்க கொண்டு போயி விடுங்க”, அதற்குமேல் ஜனதாவை வற்புறுத்தவில்லை பத்ரி.

கிளம்பும் முன் போன் செய்து சந்துருவுடன் பேசினான் பத்ரி.  இதை அறியாத ஜனதா கணவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப் போவதாக எண்ணி புகுந்த வீட்டிற்கு தன் தமையனுடன் கிளம்பிச் சென்றாள்.

**************************************

 

கிராமத்தில் திருவிழா முடிந்து சுசீலா சத்தியவாடியில் தங்கிவிட்டிருந்தார்.  வீட்டிற்கு அழைத்த விருந்தினர்களுக்கு ஆடைக்கான தொகையை மகனிடம் இருந்து வாங்கித் தருமாறு கணவனைப் பணித்திருந்தார், சுசீலா.

கைக்கு வரும் பணத்தை பெற்றுக்கொண்ட பிறகே விருத்தாசலம் வீட்டிற்கு வருவேன் என சுசீலாவும், உன்னால் இயன்றால் மகனிடம் நீயே கேட்டு வாங்கு என செழியனும் கூற ஒரு முடிவுக்கு வராமல் இருவரும் சத்தியவாடியில் தங்கியிருந்தனர்.

ஆனால் அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தான் சந்துரு. திருவிழாவன்று எதிர்பாராமல் தங்க நேர்ந்த இரவில், தனது தமக்கையிடம் இது பற்றி வினவ அப்படியெல்லாம் பழக்கமில்லையே நம்ம ஊரில் என மங்கை கூற, சந்தேகம் கொண்ட சந்துரு அருகில் இருக்கும் உறவினர்களிடம் விசாரித்தான்.  அவர்களும் மங்கை கூறியதையே கூறினர்.

அதன்பின் தாய் மற்றும் தந்தையின் செலவுக்கு பணம் வேண்டுமெனக் கேட்காமல் விருந்தினர்களுக்கு என கேட்கும் அவர்களின் புது உத்தியை எண்ணி வருந்தினான். இதைச் செயல்முறைப்படுத்தும் தாயையும், அதற்கு ஒத்துழைக்கும் தந்தையையும் எண்ணியவன் அதற்கு மேல் அதைப் பற்றி எதுவும் கேட்காமல் மறுநாள் அதிகாலையில் ஜனதாவுடன் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.

எதிர்பாரா விதமாக ஜனதா நெய்வேலி சென்றிருக்க, விருத்தாசலத்தில் உள்ள வீட்டில் சந்துரு தனித்து தங்கியிருந்தான். இதைப் பற்றி எதுவும் அறியாத ஜனதா வீட்டில் மாமியார் வந்திருப்பார் என எண்ணிபடி வீட்டிற்கு வந்திருந்தாள்.

வாசலுக்கு வந்து பத்ரியை வரவேற்ற கணவனைக் கண்டவள், வீட்டின் நிலையைப் பார்த்து யூகித்திருந்தாள்.  அவளே அடுக்களைக்குள் சென்று தனது தமையனுக்கும், கணவனுக்கும் தேநீர் தயாரித்து தந்தாள்.

பத்ரி சற்றுநேரம் சந்துருவுடன் பேசியபடி இருந்து விட்டு கிளம்பிவிட்டான்.  அது வரை கிச்சனை ஒழுங்குபடுத்தியவளைக் கண்டு கொள்ளாமல் இருந்தான் சந்துரு.  பத்ரி சென்ற பிறகும் அடுக்களைக்குள் சென்ற மனைவியை அழைத்தவன்

“நீ இப்ப எதுக்கு இங்க வந்த?”

“…”, கணவனின் எதிர்பாரா கேள்வியில் பதில் சொல்லாமல் நின்றிருந்தாள் ஜனதா.

“கேட்டதுக்கு பதில் சொல்லு ஜனதா”

‘என்னவென்று சொல்ல, உன்னை விட்டு என் தாய் வீட்டில் இருக்க முடியவில்லை என்றா இல்லை நேரத்திற்கு உணவைத் தேடாத கணவனின் நலனில் அக்கறை கொண்டதால் வந்தேன் என்றா’, என யோசித்தவள்

“வந்துட்டேன், இப்ப நான் என்ன செய்யணும்?”, அந்நியமான கேள்வியை தன்னை நோக்கி எழுப்பிய கணவனை பார்த்து வினா எழுப்பினாள்.

“போயி ரெஸ்ட் எடு”, கணவனின் பதிலில் ‘சே இம்புட்டு தானா கொஞ்ச நேரத்துல பயந்துட்டேன்’, என எண்ணியபடி பெருமூச்சு விட்டாள், ஜனதா.

அதற்குமேல் அங்கிருக்காமல் தனதறைக்குச் சென்றவள், அமரின் நினைவு வரவே கால் செய்தாள்.

தனது தங்கையிடம் இருந்து வந்த காலை எடுத்து பேசியவன்,

அடுத்த நாள் நடக்கவிருக்கும் மீட்டிங்கிற்கு கொல்கத்தா வந்திருப்பதாகவும், உடன் அர்ச்சனாவையும் அழைத்து வந்திருப்பதாகவும் கூறினான்.

அமருடன் பேசும் போது அர்ச்சனாவின் ஃபேஸ்புக்கில் லொகேசன் ஷேர் செய்வதால் வரும் எதிர்பாரா சங்கடங்களைப் பற்றி கூறியவள் அதனை அர்ச்சனாவிடம் டீஅக்டிவேட் செய்து வைக்குமாறு கூறச் சொன்னாள்.

அர்ச்சனாவின் ஃபேஸ்புக்கில் மொபைல் எண் பப்ளிக்காக இருப்பதால் அதை லாக் செய்யுமாறு கூறியவள் பிறகு பொதுவான விடயங்களைப் பேசிவிட்டு வைத்தாள்.  ஜனதா அமருடன் பேசியபடி இருக்கும் போது அறைக்குள் வந்த சந்துரு அமைதியாக மனைவியைப் பார்த்திருந்தான்.

திருமணத்தின் போது இருந்தபடி இல்லாமல் சற்று மெலிந்திருந்தவளைக் கண்டவன், ஒரு ஆணாக எண்ண செய்ய இயலுமோ அதைச் செய்யாமல் தவறிவிட்டோமோ எனப் பதறினான்.  மனைவிக்குத் தேவையானவற்றை அவள் தன்னிடம் கேட்டு வாங்கிக் கொடுக்க தவறியதில்லை.  ஆனால் எதனால் இந்த  மெலிவு.  புரியவில்லை.

பேசி முடித்து பேசியை வைத்தவளிடம், உடல் நிலையில் வந்த திடீர் மாற்றம் எதனால் எனக் கேட்டான், சந்துரு.

“உனக்கு வேணுங்கறத வாங்கி மட்டும் தான் என்னால கொடுக்க முடியும், நீ சின்ன புள்ளயா? வேளைக்கு சாப்பிடு, எனக்காக வயிட் பண்ணாத, உனக்கு எதுனா என்ன தான் குறை சொல்லுவாங்க

உங்க வீட்ல உள்ளவங்க என்னை வாழ்த்தறதும், தூத்துறதும் உன் கைல தான் இருக்கு பாத்து நடந்துக்க ஜனதா”, என்றவன் அதற்குமேல் இரவு உணவாக இட்லி வாங்கி வருவதாகக் கூறி வெளியே கிளம்பினான்.

பிறகு நிதானித்தவன், “உன்னால இப்போ வெளியே கிளம்பி வர முடியும்னா ரெண்டு பேருமா போயி சாப்பிட்டுட்டு வரலாமா?”

“இதோ வரேன்”, என கணவனுடன் கிளம்பினாள் சந்தோசமாக…

**************************************

error: Content is protected !!