காதல் சன்யாசி 24
நாட்காட்டியின் தேதியை கிழித்த ராகுல் கிருஷ்ணன், ஏதோ நினைவு தோன்ற முகம் மாறினான். ஏதோ பாரம் மனதை அழுத்த தனக்குள் ரணமில்லா வலியை உணர்ந்தது அவன் உள்ளம்.
கவலை தோய்ந்த அவன் முகத்தை கவனித்த தமிழ்ச்செல்விக்கு ஏதோ நெருடலானது.
கைப்பேசியில் தகவல் வர, ராகுல் உடனே தன் நண்பனிடம் விரைந்தான்.
“நிஜமா தான் சொல்றீங்களா திவாகர், யாரது? என்மேல அவங்களுக்கு என்ன பகை?” ராகுல் நெற்றி சுருக்கி கேட்டான்.
சாருமதியும் கோதண்டமும் தன்மீது பகை கொள்ள காரணம் இருக்கிறது சரிதான், இது யார் புதுமுகம்? எனக்கும் அவருக்கும் நடுவே என்ன சம்பந்தம்? அவனுக்கு குழப்பமாக இருந்தது.
ராகுலுக்கு பழக்கமான காவல்துறை நண்பன் திவாகரிடம் முன்பே இதை பற்றி ஏதேனும் தெரிந்தால் கூறுமாறு கோரியிருந்தான்.
அவன் தான் இதைப்பற்றி முக்கிய விசயம் கிடைத்திருக்கிறது என்று ராகுலை நேரில் அழைத்தான்.
“பகைன்னு சொல்லமுடியாது ராகுல், அவர் உங்களை ஆபத்துல இருந்து காப்பாத்தி தான் இருக்கார்” திவாகர் சொல்ல,
“புரியல”
“சாருமதி உங்கமேல போலிஸ் கம்ப்ளெய்ண்ட் பண்ணிருந்தாங்க இல்ல…”
“ம்ம் ஆனா அதைப்பத்தி விசாரிக்க யாரும் வரல, அதால நானும் பெருசா கண்டுகலை”
“உங்க மேல எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாதுன்னு ஏசி சார்க்கு பெரிய இடத்தில இருந்து ஃபோன் வந்திருக்கு. அதை செய்தது யாருன்னு தெரியுமா?”
ராகுல் சற்று யோசித்து, “நிவியோட அப்பா, ராமச்சந்திரன் அங்கிளா?” அவருக்கு தன்மீது நல்ல அபிப்பிராயம் இருப்பதை அறிந்திருந்ததால் அவர் பெயரைச் சொன்னான்.
“அவர் இல்ல ராகுல், ஈஸ்வர் சர்” மரியாதையாக ஒலித்தது திவாகர் பதில்.
“ஈஸ்வர்… யாரது? எனக்கு அப்படி யாரையும் தெரியாது!”
“ஆனா, அவருக்கு உங்களை தெரிஞ்சு இருக்கே, ஈஸ்வர் சர் நம்ம நாட்டுல விரல்விட்டு எண்ணக்கூடிய பணகாரர்கள்ல ஒருத்தர். அவர் கை வைக்காத தொழிலே இல்லன்னு சொல்லலாம். போன மாசம் கூட அவரை பத்தி ஒரு கவர்ஸ்டோரி மேகஸீன்ல வந்திருந்ததே, நீங்க கவனிக்கல”
திவாகர் சிலாகித்து சொல்ல, ராகுல் அதனை நினைவுபடுத்த முயன்றான்.
“ஓ அவர் இப்ப எங்க இருப்பாரு, நான் அவரை பார்க்க முடியுமா?”
“கஷ்டம் தான். சாரோட சொந்த ஊரு மதுர பக்கம். அவரோட குடும்பம் ராஜவம்ச பரம்பரையை சேர்ந்தாம். ஆனா அவர் தொழில் நடத்தறது எல்லாமே மும்பைல தான்” என்று திவாகரன் ஈஸ்வர் பற்றிய தகவல்களை அடுக்கிக் கொண்டே போக,
“தேங்க் யூ திவாகர், எப்பவாவது ஈஸ்வர் சாரை சந்திக்கிற வாய்ப்பு எனக்கு கிடைச்சா, கண்டிப்பா என் நன்றிய அவருக்கு சொல்லணும்” என்று ராகுல் தெளியாத குழப்பத்துடனே விடைபெற்று சென்றான்.
# # #
நாள் முழுவதும் நிவேதாவும் வாடிய முகத்துடனே வலம்வர, இதையும் கவனித்த தமிழ்ச்செல்வி, இன்று இவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ மறக்க முடியாத நாளாக இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள்.
அது என்ன என்பதை பற்றி அவள் அதிகமாக யோசிக்கவில்லை. அவளது மனம் ராகுலுக்கு ஏற்பட்ட ஆபத்திலேயே கட்டுண்டு கிடந்தது.
மணிக்கு ஒருமுறை அவனுக்கு ஃபோன் செய்து அவன் உடல் நலம் விசாரித்து கொண்டிருந்தாள்.
“நீ வீணா பயந்திருக்க தமிழ். எனக்கு ஒண்ணும் இல்ல டீ, இங்க பேங்க் ஃபுல்லா கூட்டம் நிரம்பி கிடக்கு, நாம வீட்ல வந்து பேசலாம்” என்று ராகுல் அவசரமாக சொல்லி தொடர்பை துண்டித்தான்.
தங்களை சுற்றிலும் பின்னப்பட்டிருக்கும் இந்த மாய வலையில் இருந்து விடுபட வழியே இல்லையா? என்று அவள் மனம் கெஞ்சியது.
இந்த பிரச்சனைகள் தீர, அவள் எதை செய்யவும் தயாராக இருந்தாள். ஆனால் என்ன செய்வது என்று மட்டும் அவளுக்குத் தெரியவில்லை.
#
#
#
பனியில் குளித்த சிவப்பு ரோஜா கூட்டத்தை கொத்தாக எடுத்து வந்து அவள் முன் நீட்டினான் ராகுல்.
எல்லையற்ற சந்தோசமும் சின்ன வெட்கமுமாய் நிவேதா அதை பெற்று கொண்டு, “இன்னைக்கு என்ன விசேஷம்?” பூரிப்புடன் வினவ,
“இன்னைக்கு காதலர் தினம் இல்ல” என்றான் அவன்.
“அது பிப்ரவரி பதினாலு தான?”
“ம்ம் ஆனா, நமக்கு மட்டும் இன்னைக்கு தான் காதலர் தினம்”
அவள் கையோடு தன் கையை கோர்த்து மென்மையாய் அழுத்தியவன், “நீ முதல் முதலா உன் மனசுல இருந்த காதலை சொன்னது இன்னைக்கு தான், எப்பவும் இந்த நாளை என்னால மறக்கவே முடியாது நிவி” என்று சொல்லி அழகாய் புன்னகைத்து கண் சிமிட்டினான்.
#
#
#
கடந்ததை நினைத்து உள்ளம் நோக கண் கலங்கினாள் நிவேதா.
வழக்கம் போல முறிந்து போன காதல் நினைவுகள் அவள் நெஞ்சை தீயில் வாட்டுவதாய்.
கேபினுக்குள் வேகமாக தமிழ்ச்செல்வி வர, நிவேதா அவசரமாய் கண்ணீரை மறைத்துக் கொண்டாள்.
தயங்கி நின்ற தமிழ், “சாரி மேம், இது இம்பார்ன்டன்ட் பேப்பர்ஸ். உங்க சைன் வேணும் அதான்” சங்கடமாய் சொல்ல,
அவள் நீட்டிய காகிதங்களை சரிபார்க்காமல் கூட நிவேதா கையெழுத்து இட்டு கொடுத்தாள்.
“மேம், நீங்க பேப்பர்ஸ்ஸ படிக்கவே இல்ல…”
“அவசியமில்ல, நீங்க வெரிஃபை பண்ணா போதும்” என்ற நிவேதா இருக்கையின் பின்னால் சோர்ந்து தலை சாய்த்து கண் மூடினாள்.
நிவேதாவின் துயரம், பார்த்து நின்ற தமிழின் மனதையும் பிசைவதாய்.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக நிவேதாவை பார்த்து வருகிறாள்.
எத்தனை இக்கட்டான சூழ்நிலையிலும் தளராமல் சாதிக்கும் அவளின் ஆளுமை கண்டு பலமுறை பிரம்மித்து இருக்கிறாள்.
தமிழின் மனதில் எப்போதுமே நிவேதா மேடமிற்கு என்று சிறப்பான இடம் உண்டு.
அவள் அறிந்த வரையில் நிவேதாவின் முதல் தடுமாற்றம் ராகுல் தான். நிவேதாவின் முதல் தவறான கணிப்பும் அவனே ஆகி போனது தான் துரதிஷ்டம்.
ராகுலின் மீது கொண்ட அளவற்ற நேசமே நிவேதாவின் அறிவை மங்க செய்துவிட்டதோ என்னவோ? என்று தமிழ் எண்ணிப் பார்த்து தலையை குலுக்கி கொண்டாள்.
எது எப்படியோ நிவேதாவின் இந்த துன்பம் தமிழையும் கலங்கடிக்கத்தான் செய்தது.
அவள் மனதின் பாரம் மேலும் கூட, வேதனையோடு அங்கிருந்து நகர்ந்தாள்.
நிவேதாவின் கலங்கிய முகம் அவள் நினைவில் மீண்டும் மீண்டும் வந்து போக, தன் தலையை அழுத்தி பிடித்துக் கொண்டாள் தமிழ்ச்செல்வி.
அவளின் எண்ணங்கள் எங்கெங்கோ அலைப்பாய்ந்து ஒரு புள்ளியில் வந்து நின்றது. அவளின் மூளைக்குள் ஒரு யோசனை தோன்ற, விழிகள் திறந்தவளின் முகத்தில் பிரகாசம் கூடியது.
தான் நினைத்தது மட்டும் நடந்து விட்டால் நிச்சயம் தங்கள் மூவரின் கவலையும் ஒரே சமயத்தில் நீங்கிவிடும் என்று நம்பினாள் தமிழ்.
தன் மனதில் சிறிதாய் தலைக்காட்டிய தயக்கத்தை உதறி தள்ளியவள், ஆழ மூச்செடுத்து விட்டு துணிவுடன் நிவேதாவிடம் சென்றாள்.
நிவேதா இன்னும் தெளிவற்ற மனநிலையில் தவித்து கொண்டிருக்க, தமிழ்ச்செல்வி ஏதோ சொல்ல தயங்குவதை கவனித்து அவளை கேள்வியாய் ஏறிட்டாள்.
“மேம் இன்னைக்கு… உங்களுக்கும் ராகுலுக்கும் ஏதாவது மறக்க முடியாத நாளா?”
தமிழின் தன்மையான கேள்வியில் நிவேதா துணுக்குற, “ச்சே ச்சே அப்படி எதுவும் இல்ல” வேகமாக மறுத்து சொன்னாள்.
“இல்ல மேம், காலையில ராகுல் முகமும் சரியில்ல. நீங்களும் வாட்டமா தெரியறீங்க. அதான் கேட்டேன்” தமிழ் வார்த்தைகளை லாவகமாக பயன்படுத்தினாள்.
‘இந்த நாளை அவனாலும் மறக்க முடியலையா’ என்ற எண்ணம் ஓட நிவேதாவின் மனம் சற்று பேதலித்தது.
பதிலேதும் சொல்ல தெரியாமல் மௌனமானாள்.
“மேம், நீங்க பதில் எதுவும் சொல்லலையே” தமிழ் இரண்டில் ஒன்று முடிவு தெரியாமல் அங்கிருந்து நகருவதாக இல்லை.
“நான் என்ன சொல்லணும்?” நிவேதாவிடம் இருந்து சலிப்பாக கேள்வி வந்தது.
“உங்களால ராகுல இன்னும் மறக்க முடியல தானே மேம்?”
தமிழின் நேரடி கேள்வியில் ஆடி போனவளாய் நிவேதா இறுக்கையில் இருந்து வேகமாக எழுந்து, “நீங்க எங்களை சந்தேகப்படுறீங்களா?” நிவேதாவும் சளைக்காமல் எதிர் கேள்வி கெட்க, தமிழ்ச்செல்வியின் பதில் திடமாக வந்தது.
“நிச்சயமா இல்ல மேம், என்னால எல்லாத்தையும் பார்க்க முடியும். நீங்க உங்க லேப்டாப்ல அவன் ஃபோட்டோவ பார்த்து அழறது தெரியும்”
“…”
“அவனும் உங்க ஃபோட்டோவ கப்போர்ட்ல மறைச்சு வச்சுகிட்டு, எல்லாத்தையும் மறந்திட்ட மாதிரி காட்டிக்கிட்டு அவன அவனே ஏமாத்திட்டு இருக்கான்”
அதை கேட்டதும், கிருஷின் மனதில் தனக்கான காதல் இன்னும் உயிரோடு இருப்பதை எண்ணி அவள் உணர்ச்சி வசப்பட்டாள்.
நிவேதாவின் அரைநொடி சந்தோசம் தமிழை பார்த்து அடங்கி போனது.
கலக்கமாக, “நான் எல்லாத்தையும் மறக்க தான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்” என்க.
“ஆனா, உங்களால முடியல இல்ல மேம்?” தமிழின் குறுக்கு கேள்வியில், நிவேதா விழியோரம் நீர் துளிர்த்தது. மறுபடி இருக்கையில் அமர்ந்து தோய்ந்து அமர்ந்து விட்டாள்.
அவளின் நிலை காண தமிழுக்கு பரிதாபமாக இருக்க, “நம்ம மூணு பேரோட பிரச்சனையும் தீர, ஒரு வழி இருக்கு மேம்” அவள் என்ன சொல்ல போகிறாளோ என்று நிவி கலவரமாக நிமிர,
“ராகுலும் நீங்களும் ஏன் கல்யாணம் செஞ்சுக்க கூடாது?” இதை வேறெப்படி கேட்பது என்று தமிழுக்கு தெரியவில்லை.
அவள் இதை கேட்பாள் என்று நிவி நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.
“நீங்க என்ன பேசறிங்கன்னு தெரிஞ்சு தான் பேசறிங்களா?” அவள் கலக்கத்துடனே கேட்க, தமிழ் ஆமோதித்து தலையசைத்தாள்.
“எல்லா தெரிஞ்சி தான் பேசறேன் மேம். அன்னிக்கு எல்லோரும் எங்களை தப்பா பேசினதால தான். ராகுல் என்னை கல்யாணம் செஞ்சு கிட்டான்.”
“அது தவிர, எங்களுக்கு நடுவில வேறெந்த உறவும் இல்ல மேம்!”
தமிழ் தரும் அடுத்தடுத்த பேரதிர்ச்சிகளில் நிவேதாவின் தலை கிறுகிறுத்து போனது.
“நீங்க சொல்றதை என்னால நம்ப கூட முடியல?”
“என் மனசாட்சி மேல சத்தியம் மேம். என்னால ராகுலை ஃபிரண்டா தவிர வேற மாதிரி ஏத்துக்க முடியல” தமிழ் உறுதியாக சொன்னாள்.
நிவேதா தலையை பிடித்து கொண்டு தளர்ந்து அமர்ந்து விட்டாள்.
நிவேதா சற்று நேரம் பொறுத்து, “உங்க ஃபியூச்சர் பத்தி யோசிக்காம பேசறீங்க தமிழ்ச்செல்வி” என்று சொல்ல,
“நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்தா அதைவிட பெரிய சந்தோசம் எனக்கு வேற எதுவுமே இல்ல மேம். உங்களோட பிரிவுக்கு நான் காரணம் ஆகிட்டேன்ற குற்றவுணர்ச்சியில இருந்து மீண்டாலே எனக்கு அதுவே போதும் மேம்”
நிவேதாவிற்கு வாய்விட்டு அழ வேண்டும் போல தோன்றியது. தமிழ்ச்செல்விக்கு தன் மேல் இருக்கும் அக்கறையில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட தன்னை பெற்றவளுக்கு இல்லாமல் போனதை எண்ணி அவளின் நெஞ்சம் அடைத்து கொண்டது.
“உங்க கிட்ட பர்சனல் விசயம் எதுவும் பேச கூடாதுன்னு ராகுல் எனக்கு சொல்லி இருந்தான். ஆனா, உங்க ரெண்டு பேரோட கஷ்டத்தையும் பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியல மேம். அதான் எல்லாத்தையும் உங்க கிட்ட சொல்லிட்டேன்.”
“நீங்க ராகுல் கிட்ட ஒருமுறை பேசுங்க மேம். அவனால உங்கள வேண்டாம்னு சொல்லவே முடியாது.”
நிவேதாவிடம் எந்த பதிலும் இல்லை. இனி சொல்லவும் தமிழுக்கு எதுவும் இல்லை. நிவேதாவின் குழப்பமான முகத்தை பார்த்தபடி அங்கிருந்து நகர்ந்தாள்.
# # #
வெகுநேரமாய் தமிழ்ச்செல்வி கோயில் பிரகாரத்தில் அமர்ந்திருந்தாள்.
அலையாடாமல் எரிந்து கொண்டிருக்கும் கருவறை தூங்கா விளக்கினை போல, அவளின் மனநிலையும் ஒரே நிதானத்தில் இருந்தது.
‘நான் செஞ்சது சரியா? தப்பா?ன்னு தெரியல. ராகுல், நிவேதா சந்தோசத்துக்காக தான் துணிஞ்சு இதை செஞ்சேன். தயவு செஞ்சு அவங்க வாழ்க்கைய அவங்களுக்கு மீட்டு கொடு. இனிமே அவங்களோட வாழ்க்கையில எல்லா சந்தோசமும் நிறைஞ்சு இருக்கணும். அவங்களுக்கு நடுவுல நான் எப்பவுமே இடையூறா இருக்க கூடாது!’
அவள் மனதிற்குள் வேண்டிக் கொண்டிருக்க, கோயில் மணியோசை அவள் காதுகளில் நிறைந்தது.
அதே நேரத்தில்,
மாலை கவிழ்ந்த இரவின் விளக்கொளியில் அந்த பூங்கா பேரழகாய் காட்சி தந்தது எப்போதும் போலவே.
ஒருவித சஞ்சலத்துடன் தான் ராகுல் கிருஷ்ணா அந்த பூங்காவிற்குள் நுழைந்தான்.
அதே பச்சை புல்வெளி விரிப்பு! அதே வண்ண பூக்களின் இதமான வாசம்! அதே குளிர்காற்று! இன்றும் வானில் வட்டமிடும் வெண்ணிலாவும் அதே தான்! ஆனால், அவன் காதல் இதயம் மட்டும் வெறுமையாய்.
வந்ததிலிருந்து நிவேதா ஏதும் பேசாமல் சங்கடத்துடன் அமர்ந்திருக்க, அந்த நீண்ட மௌனத்தை தாங்க முடியாமல் ராகுல், “ஏதாவது பிரச்சனையா நிவி? என்னை உடனே பார்க்கணும்னு வர சொன்ன?” என்று வினவினான்.
அவனுக்காக நிமிர்ந்தவள், “என்னால முடியல கிருஷ். நான் எப்பவுமே இவ்வளவு வலியை, வேதனைய அனுபவிச்சதில்ல. எனக்குள்ளேயே புழுகி, புழுகி வெடிச்சுடுவேனோன்னு தோணுது” நிவேதா சஞ்சலமாக பேச, அவனிடம் எந்த பதிலும் இல்லை.
“என்னால எதையுமே மறக்க முடியல கிருஷ்! உன்னையும் உன் காதலையும் கூட!” நிவேதா கலங்கி மொழிய, ராகுல் அதிர்ச்சியானான். அவள் முடிந்த கதையைப் பேசுவாளென்று அவன் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.
“என்னாச்சு நிவி உனக்கு? ஏன் இப்படி எல்லாம் பேசற? எனக்கு இப்ப கல்யாணம் ஆயிடுச்சு. அதை கூட மறந்து…” அவன் நிதானம் இழக்காமல் கேட்க,
“என்னால எதையுமே யோசிக்க முடியல கிருஷ். உன்ன தவிர எனக்கு வேற எதுவும் நினைவில இல்ல” என்றாள் தவிப்புடன்.
ராகுல் திகைத்து பார்க்க, “என்னை தப்பா நினைக்காத ப்ளீஸ், எனக்கு என்ன செய்றதுன்னே ஒண்ணும் புரியல கிருஷ்”
“…!”
“உன்ன மறக்கவும் முடியாம, வெளிய சொல்லவும் தெரியாம, எனக்குள்ளேயே துடிச்சிட்டு இருக்கேன். நம்ம காதலை தீயில் போட்டுட்டு அதே தீயில நானும் வெந்துட்டு இருக்கேன்!” நிவேதா உணர்ச்சி வசமாய் உடைந்த குரலாய் பேச பேச ராகுல் விக்கித்து தான் போனான்
“நான் எதுக்காகவும் அழுதது இல்ல, உன்ன பிரிஞ்ச நாள்ல இருந்து இப்ப வரைக்கும் நம்ம காதலை மறக்க முடியாம அழுதுட்டு தான் இருக்கேன். வேற எதுவும் செய்ய முடியாம!”
‘ஆம் அவன் முதல் முதலாய் இப்போது தான் அவள் கண்களில் ஈரத்தை பார்க்கிறான். அதுவும் தனக்காக!’ என்று தோன்றும் போதே அவனின் ஆண் மனம் பேதலித்தது.
அவன் காதல் கொண்ட தேவதை அவள்!
இணையற்ற அழகின் அற்புத புத்தகம் அவள்!
இவன் அணு அணுவாய் ரசித்த கலைச் சிற்பம் அவள்!
வாழ்நாள் முழுவதும் இனி அவளோடு என அவன் உயிருக்கு உயிராய் நேசித்த அவன் காதலி!
அவளோடு அவன் காதலில் திளைத்திருந்த இன்ப தருணங்கள் அவன் நினைவலையில் காட்சியாக, அவன் மனம் திசை மறந்து தடுமாறுவதாய்!
“எனக்கு எதுவுமே வேணாம் நீ மட்டும் தான் வேணும்னு தோணுது கிருஷ்!” என்றவள் தீரா காதலோடு அவன் மார்பில் முகம் சாய்த்து கொண்டாள்.
ராகுல் நெகிழ்ந்து நிற்க, அனிச்சையாய் அவன் கைகள் அவளை அணைத்திருந்தன.
# # #
காதல்காரன் வருவான்…