NN 7

NN 7

மறுநாள் காலை சிவாவும் கௌதமும் சேர்ந்தே உதயாவையும் காயத்ரியையும் கல்லூரியில் விட்டு அலுவலகம் சென்றனர்.

அலுவலகம் சென்ற அவர்கள் மீட்டிங் , வேலை என்று அதிலே மூழ்கி போக அன்று முழுதுமே அவர்களால் லயாவை பற்றி விசாரிக்க , ஏன் சிந்திக்க கூட முடியவில்லை . வேலை மிகுதியால் உதயாவிற்கு போன் செய்து அவர்கள் இருவரையும் கல்லூரி பஸ்ஸில் வந்து விட சொல்லி விட்டான் கெளதம். அன்று சிவாவும் கௌதமும் வீடு திரும்பும் பொழுது பெண்கள் இருவரும் உறங்கி இருந்தனர் .

அதன் பின் வந்த சில தினங்களும் அலுவலக வேலை மிகுதியால், சிவாவும் கௌதமும் மிகவும் பிசியாகவே இருக்க, சில நாள் காலை உணவின் பொழுது கூட அவர்களை காண முடியாமல் போனது.

கல்லூரியிலும் பாடம் தொடங்கி விட்டதால் உதயாவிற்கும் காயத்ரிக்கும் நூலகம் செல்வது, புகைப்படம் எடுக்க வெளியே செல்வது என இரவுவரை நேரம் இல்லாமல் போனது .

ஒரு வாரம் கழித்து ஒரு நாள் மதியம், சைதன்யா குரூப்ஸில் காண்ட்ராக்ட் அவர்களுக்கு கிடைத்து விட்டதாக ஈமெயில் வர கெளதமும் சிவாவும் மிகவும் சந்தோஷத்தில் இருந்தனர் .

” ஹே ! கெளதம் அந்த லயாவை கண்காணிக்க மறந்தே போனோமே! ” என்று சிவா சொல்ல.

“அதெல்லாம் ஆள் ஏற்பாடு செஞ்சாச்சு எப்போவோ ! , கூடிய சீக்கிரம் ரிப்போர்ட் வரும் உனக்கிட்ட சொல்லலாம்னு வெயிட் பண்ணேன் ” என்றான் கெளதம் .

” நீ கில்லாடி தான் டா! நானும் வேலை வேலை என்று இருந்ததாலே மறந்து மறந்து போனேன் இதுக்குதான் கெளதம் வேணும்னு சொல்லுறது ” என்று நண்பனை புகழ்ந்தான் சிவா.

” சிவா , நாம உதயா காலேஜ்க்கு போய் ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு டா ! இன்னிக்கி போகலாமா? ”
என்று கெளதம் கேட்க,

” சரி டா ! போலாம், முடிஞ்சா இந்த வார கடைசி நாம எல்லாரும் எங்கயான பிக்னிக் போவோமா? ” என்றான் சிவா உற்சாகமாய் .

அவர்கள் கல்லூரியை சென்றடைந்த பொழுது மணி 3 தான் ஆகி இருந்தது. வகுப்புகள் முடிய இன்னும் அரை மணி நேரம் இருப்பதால் கேன்டீனில் காத்திருக்கலாம் என்று முடிவு செய்தனர். ஆளுக்கொரு ஜூஸ் வாங்கி கொண்டு அவர்கள் சென்று மர நிழலில் இருக்கும் ஒரு மேஜையின் முன் அமர. அவர்கள் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்த இரு மாணவர்கள் பேசுவது அவர்கள் காதில் விழுந்தது.

” சொன்ன கேளுடா மனோ , இப்போ நீ கொடுக்க போற குரூப் ப்ராஜெக்ட், டீம் பட்டியலில் என்னை ராகேஷ் டீமிலிருந்து எடுத்து, காயத்ரி இருக்க குரூப்ல போடுடா ! ப்ளீஸ் ! இப்போ விட்டா அப்புறம் மூணு மாசம் ப்ராஜெக்ட் முடியரவரை டீம் மாத்த முடியாது ! ” என்று கெஞ்சினான் ஒருவன்.

” அப்போ நீ ,காயத்ரி, சுப்பு, உதயா, லட்சுமி, ஸ்ரீவத்ஸ் எல்லாரும் ஒரே டீம்ல இருப்பீங்கடா பரவா இல்லையா? உனக்குத்தான் அவனுங்கள கண்டா ஆகாதே எப்படிடா மூணு மாசம் சமாளிப்பே?” என்றான் மனோ

” அது பாத்துக்கலாம் எனக்கு காயத்ரி கூட இருக்க சாக்கு வேணும் அவ்வளவுதான்! ப்ளீஸ் மச்சி ! இத யூஸ் பண்ணி எப்படியான ப்ரொபோஸ் பண்ணிடுவேன்! நீ இந்த ஹெல்ப் மட்டும் செய் நான் உனக்கு வேண்டிய எதுனாலும் செய்றேன் ! ப்ளீஸ் டா ப்ளீஸ் மச்சி ! ” என்று மேலும் கெஞ்சினான்.

“சரி டா ! வா போலாம் எச்ஒடி கால் பன்றார் ! சீக்கிரமா ! ” என்று மனோ சொல்ல உடனே இருவரும் ஓடி சென்றனர்.

இதை கேட்டு கலவரமாக கெளதம் சிவாவை பார்க்க அவனோ கை முஷ்டி இறுக, கண்களையும் இருக்க மூடிக்கொண்டு வேகமாக சுவாசித்து கொண்டு இருந்தான்.

” சிவா ! ” என்று கெளதம் மெல்ல அழைக்க .” ப்ளீஸ் கெளதம் ! கொஞ்ச நேரம் எதுவும் பேசாதே ! ” என்று சொல்லி அமைதியானான் சிவா. அதன் பின் கௌதமும் எதுவும் பேசவில்லை.

சிறிது நேரம் கடந்தபின் ” கெளதம் ! சிவா அண்ணா! என்ன இது அதிசயமா இங்க வந்துருக்கீங்க? ” என்று கேட்டுக்கொண்டே உதயாவும், லக்ஷ்மியும் அங்கே வர அவர்கள் பின்னால் சுப்புவும் ஸ்ரீவத்ஸும் வந்து சேர்ந்தனர்.

” உங்களை இன்னிக்கி அழைச்சுட்டு போகத்தான் வந்தோம் காயத்ரி எங்கடி ? ” என்று கௌதம் கேட்க.

“அவ எச்ஓடி கூபிட்டார்ன்னு போயிருக்கா ! சீக்கிரம் வந்துருவா ! ” என்று பதில் அளித்தாள். உதயா.

சிவா மௌனமாகவே ஜூஸ் கிளாஸை பார்த்துக்கொண்டு இருந்தான். அவர்கள் இருந்த மேஜையை சுற்றி, வந்த நால்வரும் உட்கார்ந்தனர்.

ஏதோ புத்தகத்தை புரட்டி கொண்டு இருந்தனர் சுப்புவும் உதயாவும் , ஸ்ரீவத்ஸ் கைபேசியை நோண்டி கொண்டு இருந்தான் !

கௌதமிற்கு சிவாவை பார்க்க தயக்கமாய் இருக்கவே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான்.

திடீர் என்று மேஜையின் நடுவே ஒரு புத்தகம் பலமாய் வந்து விழ , சிவா உட்பட அனைவரும் திகைத்து நிமிர்ந்தனர் .

பல்லை கடித்துக்கொண்டு முகமெல்லாம் ஆத்திரம் வழிய காயத்ரி நின்று கொண்டு இருந்தாள் .

” ஹேய் என்னடி ஆச்சு ? சார் திட்டினாரா ? எதுக்கு மேடம் இவ்வளவு கோவம்? ” என்று சுப்பு கேட்டதுதான் தாமதம்,

காயத்ரி கோவமாய் ” யாருடா இப்போ அவனை நம்ம டீம்ல சேர்த்தா ? நாம கொடுத்த டீம் லிஸ்ட்லேந்து கோபாலை எடுத்து ராகேஷ் டீம்ல போட்டு, அந்த லூசை நம்ம டீம்ல போட்ருக்கார் ! ” என்று படபடத்தாள்

“வாட் ? கோபால யாரை கேட்டு எடுத்தாங்க ? எந்த லூசை நம்ம டீம்ல சேர்த்தங்க ஒழுங்கா சொல்லு ! ” என்று ஸ்ரீவத்ஸன் கடுகடுதான்.

” அந்த ராக்கேஷ், அவன் நம்ம டீமாம். கோபால் வேணும்னு மனோ சொன்னானாம், அவன்தான் சாரோட பெட் ஆச்சே அதான் மறுக்க முடியாலயாம் ! இப்போ இவன் கூட எப்படிடா மூணு மாசம்சே ! ” என்று கோவம் குறையாமல் கத்தினாள் காயத்ரி.

” முடியாது கண்டிப்பா முடியாது ! நான் ப்ராஜெக்ட் பண்ணவே போறதில்ல மார்க் போனா போகட்டும் ” என்று சுப்பு கத்த

” டேய் இருடா டென்ஷன் ஆகாதே பாத்துக்கலாம் , வேணாம்னு சொல்ல என்ன கரணம் சொல்வே யோசி மச்சான் ! காயு நீயும் கொஞ்சம் கூல் ஆகு ! ” என்று சமாதானம் செய்தான் ஸ்ரீவத்ஸ் .

உதயாவையும் காயத்ரியையும் பார்த்து ஸ்ரீவத்ஸ் ” நீங்க கிளம்புங்க ! பை கெளதம் அண்ட் சிவா சார் ! நாங்க ஏதான பண்ண முடியுதான்னு பாக்குறோம் ! வா மச்சான் வா லக்ஸ் சாரை பார்க்க போலாம் ! ” என்று கிளம்பினான்.

காரில் ஏறியது முதல் காயத்ரி கோவமாகவே இருந்தாள் . உதயாவோ எதோ யோசனையாய் இருக்க, இருவரையும் கண்ணாடியில் பார்த்துக்கொண்டே வண்டியை ஓட்டினான் சிவா.

கெளதம் மெதுவாக ” என்னாச்சு உதயா ? என்ன பிரச்சனை ? ” என்று கேட்க,

தங்கள் கிளாஸ் பையன் ராகேஷ், இரண்டு வருடமாய் காயத்ரியை பின் தொடர்வது, ஆனால் அது தெரியாதது போல் இவர்கள் நடந்து கொள்வது, இடையில் இருமுறை சுப்புவும் ஸ்ரீவட்சனும் அவனை கண்டித்தும் ராகேஷ் மாறாமல் இருப்பது என்று எல்லாம் விவரமும் சொன்னாள் உதயா .

” பையன் எப்படி நல்ல பையனா ? ” என்று கேட்டான் சிவா, கண்ணாடியில் காயத்ரியை பார்த்தவாறே .
அவளோ ஏதும் சொல்லாமல் வெளியே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

” அவன் எப்படிப்பட்டவன் தெரியலை. இதுவரை நேரா இவகிட்ட ஒன்னும் சொல்ல, ஆனா அவன் மனசு என்னனு சுப்புவும் ஸ்ரீவத்ஸனும் சொன்னாங்க. ஆமா ஏன் கேக்கறீங்க? ” என்றாள் உதயா .

” இல்லை நல்ல பையனா இருந்தா காயத்ரி ஓகே சொல்லிருக்கலாமே. அதுதான் கேட்டேன் ” என்று சிவா மிக சாதாரணமாய் சொல்ல, கெளதமும் உதயாவும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

” ஸ்டாப் இட் சிவா ! நான் யார் ப்ரபோசலை அக்சப்ட் பண்ணனும்னு நீங்க சொல்ல வேணாம் ! ” என்று காயத்ரி கத்த.

காரை வேகமாய் ஓரம் கட்டிய சிவா ” கெளதம் யு டிரைவ் ! ” என்று அவனை காரை ஓட்டும் படி சொல்லி தான் காரில் இருந்து இறங்கி விட்டு ,முன் இருக்கையின் அமர கெளதம் வண்டியை ஓட்டலானான்.

வீடு வரும் வரை காருக்குள் அமைதியே நிலவியது.

எதுவும் சொல்லாமல் காயத்ரி அவள் அறைக்குள் புகுந்து தாள் போட்டு கொண்டாள் . சிவாவும் ஹாலில் அமர்ந்து விட்டான். கெளதம் அவன் அருகே அமர்ந்து கொண்டு உதயாவை அவள் அறைக்கு செல்லும்படி செய்கை காட்டினான் .

இரவு உணவிற்கு காயத்ரி வராததை கண்டு சிவா கோவமாய் அவள் அறை கதவை தட்டி ” கதவை திற காயத்ரி ! ரைட் நொவ் ! ஓபன் தி டோர் ! ” என்று கர்ஜித்தான் .

மெதுவாய் கதவை திறந்து விட்டு, அவள் வெளியே வராமல் கட்டிலில் சென்று அமர்ந்து விட்டாள்.

” இப்போ உன் ப்ராப்ளேம் என்ன ? அப்படி என்ன சொன்னேன் ? அவனை பிடிச்சா அவன் காதலை ஏத்துக்கோனு தானே சொன்னேன் ! என்ன தப்பு? அதுக்கு என்ன இவ்ளோ சீன் கிரியேட் பண்றே ? ஏன் நான் சொல்ல கூடாதா ? ” என்று கத்தினான் சிவா.

” சொல்லக்கூடாது ! அதுவும் நீங்க சொல்லவே கூடாது ! ” என்று கண்களை மூடி கொண்டே அவள் பதில் தர .

” அப்போ உரிமை இல்லை அப்படித்தானே ? “ என்று அவன் முறைக்க.

“….”

“இல்லை நீ யார் டா சொல்லன்னு தானே மீன் பண்றே ? ” என்றான் அவன் உக்கிரமாய்

” நீங்க யாருன்னு கேக்கல ! உங்களால எப்படி சொல்ல முடிஞ்சதுன்னு தான் கேட்டேன் ! இங்க வலிக்குது சிவா வேற ஒன்னும் இல்லை! ” என்று ஒற்றை விரலால் தன் நெஞ்சத்தை சுட்டி காட்டியவள் ” சாரி ” என்று முடித்தாள்.

‘அவள் சொற்களின் அர்த்தம் அவன் நினைப்பதா ? ‘ திகைத்து நின்றான் சிவா ! வெளியே அமைதியும் மனதில் புயலுமாய் !

தன்னை சுதாகரித்து கொண்டு ” சாரி காயு ! இனிமே அப்படி பேசமாட்டேன். என்னை மன்னிச்சுடு. சாப்பிட போகலாம் ப்ளீஸ் வா டா ! ” என்று கெஞ்சலாய் கேட்டு கொண்டே , தன் கையால் அவள் குனிந்த முகத்தை நிமிர்த்தினான்.

அவள் கண்களில் இருந்த நீர் துளி ‘ சிந்திவிடுவேன்! ‘ என்று அவனை பயமுடுத்தியது .” ப்ச் , சாரி காயு , சாரி ப்ளீஸ் ! டோன்ட் க்ரை ! அழாதே ! ” என்று சொல்லி அவளை பார்த்துக்கொண்டே மௌனமாய் நிற்க .

கண்களை இறுக்க மூடி கொண்டவள் தன்னை சமாதானம் செய்த்துக்கொண்டு அவனுடன் கீழே டைனிங் ஹாலிற்கு வந்தாள்.

“சமாதான புறா பறந்தாச்சா ? அப்பாடி இவன் தின்னாம நான் எப்படி சாப்பிடறதுன்னு நெனச்சேன் நல்ல வேளை வந்துட்டான் ! இனி சண்டை போடணும்னா சாப்பிட்டு தெம்பாய் ஜம்முன்னு போடுங்கடா! ” என்று கெளதம் தன் கை முஷ்டியால் காற்றில் குத்த

காயத்ரி மெல்ல புன்னகைத்தாள். அதை கண்ட சிவாவும் ‘ இவளை எப்படி சமாளிக்க போரேன்னே புரியலையே, பொசுக்குன்னு கோவப்படறா இல்ல கண்ணுல குழாயை திறந்து விட்டுடறா. இன்னும் எல்லாம் தெரிஞ்சா என்ன செய்வாளோ ‘ என்று மனதில் நினைத்தவன் ஆழ்த்த மூச்சொன்றை விட்டு தோள்களை குலுக்க.

” எப்படிடா சமாதானம் பண்ணினே சிவா ? ” என்று கேட்டு கொண்டே அவர்கள் நால்வருக்கும் உணவை பரிமாறினான் கௌதம் .

” சாரி சொன்னேன் வேற என்ன ! ” என்று கண் சிமிட்டினான் சிவா .

” சிவா அண்ணா சாரிலாம் கேட்பீங்களா ? நம்பவே முடியலையே ! உங்களுக்கு அந்த வார்த்தையே தெரியாதுன்னு நெனச்சேன் ” என்று போலியாய் உதயா ஆச்சார்யா பட்டாள் .

காயத்ரி ஒன்றும் சொல்லாமல் சிவாவை பார்க்க , அவனோ ” சாப்பிடு காயு. நான் வாயை முடிக்கிறேன் இதோ பாரு ! ” என்று சொல்லிவிட்டு தன் வாயை ஜிப்பால் மூடுவது போல் செய்கை செய்தான்.

“அப்புறம் எப்படி சாப்பிடுவீங்க “ என்று புன்னகைத்தவள் “இட்ஸ் ஓகே நானும் சாரி ” .

” போதும்டா உங்க சாரி, சீக்கிரம் சாப்பிடுங்க டா ! தட்டுல சோத்தை போட்டுட்டு என்னடா பேச்சு? எனக்கு பசி வயத்தை கிள்ளறது ! ” என்று கெளதம் பாவமாய் அவர்களிடம் புலம்ப.

அனைவரும் புன்னகைத்துவிட்டு இரவு உணவை முடித்தனர்.

அன்றிரவு சிவாவிற்கு உறக்கமே வரவில்லை ‘அப்போ அவள் மனசுல நான் இருக்கேனா ? இல்லை வெறும் கோவத்துல அப்படி சொன்னாளா ? ஐயோ ! புரியாம தலை வெடிக்கும் போல இருக்கே ‘ என்று யோசித்து கொண்டிருக்க . அப்பொழுது அம்மா என்று காயத்ரி அலற “ போச்சுடா ! “ என்று தோளை குலுக்கியவன், அவள் அறைக்கு விரைந்தான்.

” சிவா ! சிவா ! ” என்று அவனை பார்த்தவள் அவனை அணைத்து கொண்டாள். “என்ன ஆச்சு காயு என்ன ? கூல் டௌன் ! ” என்று சிவா அவளை தேற்ற,அப்பொழுது கௌதமும் அங்கு ஓடி வந்தான் ! ” என்ன காயு! என்னடா சிவா பண்ணே ? ” என்று அவனை பார்த்து குறும்பாய் கேட்டுவைக்க “ டேய் ! “ என்று சிவா முறைத்தான்.

காயத்ரியின் முகத்தில் இருந்த பயத்தை கவனித்த பிறகு எதோ கனவு கண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து அவனும் ‘ ஆரம்பிச்சுட்டா இன்னிக்கி என்ன கனவோ ! ‘ என்று மனதில் நினைத்து கொண்டே அவள் அருகில் சென்றான் .

“சொல்லுமா என்ன கனவு.என்னாச்சு? நான் இருக்கேன் இங்க என்னை பாரு டா ” என்று அவளை சிவா தேற்ற,

அவள் அழுதுகொண்டே கௌதமை கை காட்டினாள். ” நானா ? நான் என்னடி பண்ணேன் ? ” என்று கெளதம் கேட்க .

இல்லை என்பதுபோல் தலை அசைத்த அவளோ

” கெளதம் அண்ணா தலையில் யாரோ அடிக்கிறாங்க. அவர் முகமெல்லாம் ரத்தம். எதோ ஒரு பொண்ணு ! இல்லை லயா ! ” என்றவள் கௌதமை பார்த்து.

” நீங்க காட்டின அந்த பொண்ணு தான் உங்களை அடிக்கிறா அண்ணா ! ” என்று சொல்லி சிவாவின் மார்பில் சாய்ந்து மறுபடி அழதொடங்கி விட்டாள்.

கௌதமோ ” சே ! போயும் போயும் அவகிட்டயா அடிவாங்கினேன் ! எதோ ஹீரோ கணக்கா நாலு ரௌடிய அடிச்சோமா அதுல ரத்தம் வந்ததா அத சட்டை பண்ணாம ஸ்டைலா நடந்து வந்தோமான்னு இல்லாம…. போடி நீயும் உன் இத்துபோன கனவும் ! “ என்று தலையில் அடித்துக்கொண்டு “வடை போச்சே ! ” என்று உதட்டை பிதுக்கினான்.

அதை கேட்டு காயத்ரி அவனை முறைத்துக்கொண்டே . “விளையாட்டா இருக்க அண்ணா ? என்ன ரத்தம் தெரியுமா? ” என்று தேம்ப .

” தெரியுமே ! பி பாசிட்டிவ் என் பிளட் க்ரூப் எனக்கு தெரியாதா ? சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு ” என்ற கெளதம் சிரிக்க.

“ஏன்டா நீவேற நேரம் கெட்ட நேரத்துல ! போய் தூங்கி தொலைடா ! நாளைக்கு காலை பேசிப்போம் ” என்ற சிவா , ‘நாம தனியா பேசிக்கலாம்’ என்பது போல் செய்கை செய்து கண் சிமிட்டினான்.

“ என் டைரி” என்று கண்களை துடைத்துக்கொண்டு முகம் உயர்த்தி அவள் சிவாவை கேட்க

“ மறந்து போகுற கனவா இது ? தூங்குமா பேசாம , அப்புறம் நல்ல கனவா வந்தால் சொல்லு அதை டைரில எழுதிக்கலாம், இந்த மாதிரியான என் பராக்ரமத்தை எல்லாம் பேசாம கல்வெட்டுல பதிச்சு வைமா. வர சந்ததியினர் படிச்சு தெரிஞ்சுப்பாங்க ” என்று சிரித்தபடி புலம்பி கொண்டே கெளதம் சென்றுவிட்டான் .

“அவன் கெடக்குறான், நீ தூங்கு. மார்னிங் பேசிக்கலாம் ! ” என்று சிவா நகர , “என்கூட இருங்க ப்ளீஸ் !” என்று காயத்ரி அவன் கையை பிடித்துக்கொண்டு கெஞ்ச.

” ஓகே படுத்துக்கோ ” என்று அவளை படுக்க வைத்தான் .

” தூங்க வச்சுட்டு ஓடிடுவீங்க ! “என்று அவள் மறுபடி புலம்ப

” எங்கயும் போகமாட்டேன் மேடம் ! இங்கயே உன் பக்கத்துலயே தூங்கவா ? ” என்றான் நக்கலாய்.

” ம்ம் சரி , படுத்துகோங்க ” என்று சொல்லி அவள் அருகில் இருந்த டெட்டி பொம்மையை கீழே எடுத்து வைத்தாள்.

சிவாவோ “அடிப்பாவி ஒரு பிளானோடதான் இருக்கியா !, நான் நல்லவனா இருக்க விடமாடியா? ” என்று முணுமுணுத்தான்.

” என்ன சொல்ரீங்க ?” என்று அவன் கேட்க .

” நத்திங், உன் டெட்டி கோச்சுக்காதா ?அதை தூக்கி இப்படி கீழே போட்டுட்டியே! அதான் கேட்டேன் ” என்று சமாளித்தான்.

“இல்லை நீங்கதானே அதுனால அது கோச்சுக்காது ! ” என்று சொல்ல

“நான் இங்க படுக்குறது நல்லா இருக்காது உளறாதே நீ தூங்கும் வரை இங்கயே இருக்கேன்! “ என்று அவன் எடுத்து சொல்ல

“நீங்க இங்க படுக்க கூடாதுன்னா சரி வாங்க உங்க ரூமில் நாம ரெண்டு பேரும் தூங்கலாம்” என்று எழ முயல

‘இவ குழந்தையா, குமரியா? எப்படி நெனச்சு இவகூட நான் பழகறது?’ என்று மனதில் கேட்டு கொண்டே “சரி சரி இங்கயே படு“ ஆழ்ந்த மூச்சைவிட்டவன் விளக்கை அணைத்தான்.

” ம்ம்ம் ..” என்று அவள் படுத்துக்கொண்டு , அருகில் இருந்த தலையணையை சுட்டி காட்ட .

“இரும்மா, தோ ஆச்சு ! ” என்று சொல்லி அவனும் படுத்துகொண்டான் அவள் அருகில்.

அவன் அருகாமையில் பாதுகாப்பாய் உணர்ந்தவள் சிறிது நேரத்தில் உறங்கி விட்டாள்.

காலை விடியும் பொழுது அவன் அரவணைப்பில் தூங்கி கொண்டிருந்தவளை சிவா கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான். அவள் உறக்கம் கலைவதை உணர்ந்து கண்களை மூடி கொண்டான். உறக்கம் கலைந்தவளோ அவனுள் இன்னும் புதைந்து மறுபடி உறங்கிவிட

உறங்குவதை போல் நடித்து கொண்டிருந்த சிவாவிற்கு உயிரே உறைந்து போவது போல் இருக்க, எந்த உணர்வையும் காட்டிக்கொள்ள முடியாமல் அவளை இருக அணைத்து கண்களை மூடி கொண்டான் . அவனுக்கு தன் உடல் லேசாகி பறப்பது போல் இருந்தது. எழுந்து நின்று சந்தோஷமாய் கத்தவேண்டும் போலவும் இருந்தது . ஆனால் அசையவும் மனமில்லை.

error: Content is protected !!