KS 29 (Final)

KS 29 (Final)

காதல் சன்யாசி 29 (நிறைவு)

ஒரு வருடத்திற்கு பிறகு,

கதிரவன் விழித்தெழாத நேரத்தில், கரை வேட்டி, வண்ண சட்டையோடு தயாராகி விட்டிருந்த ராகுல் கிருஷ்ணன், நடு கூடத்தில் நிலை கொள்ளாமல் அப்படியும் இப்படியும் நடந்து கொண்டிருந்தான்.

பதினான்காவது முறையாக கைக்கடிகாரத்தை திருப்பி பார்த்து கொண்டவன், “தமிழ் முடிஞ்சதா? இல்லையா?” என்று பொறுமை இழந்து குரலை உயர்த்தினான்.

‘ச்சே இந்த பொண்ணுங்களே இப்படி தான், எந்த வேலையும் நேரத்துக்கு செய்யறதே இல்ல’ என்று சத்தமாகவே முணுமுணுத்துக் கொண்டான்.

பட்டு சேலை பாங்காய் உடுத்தி தயாராகி அறையில் இருந்து வெளியே வந்த பார்வதி மகனின் பரபரப்பை கவனித்தவராய், “ஏன் டா? கால்ல சுடு தண்ணிய ஊத்திக்கிட்டவன் மாதிரி இப்படி குதிக்கற? கொஞ்சம் பொறுமையா தான் இரேன்” என்று கடிந்தார்.

“நான் பொறுத்துக்குவேன் ம்மா, நேரம் பொறுத்துக்குமா? இப்பவே முகூர்த்தத்துக்கு நேரம் ஆச்சு” என்று படபடத்தவன்,

“தமிழ் போதும் வா, நேரம் ஆச்சு” என்று மூடி இருந்த அறை கதவை நோக்கி அலுப்பாய் சத்தமிட்டான்.

“நேத்து ரிசப்ஷனுக்கு லேட்டா போனதுக்கே, நிவி என்னை வறுத்து எடுத்துட்டா ம்மா, இப்ப முகூர்த்தத்துக்கு சரியான நேரத்துக்கு போகணுமில்லையா” தன் அம்மாவிடமும் ஆதங்கமாக காரணம் சொல்லி லொடலொடத்தான்.

“நினைக்கவே மனசுக்கு நிறைவா இருக்கு கிருஷ்ணா. நடந்ததெல்லாம் மறந்திட்டு நிவேதாவும் அவளுக்கான வாழ்க்கைய தேர்ந்தெடுத்துகிட்டா ரொம்ப சந்தோசமா இருக்கு டா”
பார்வதி மகிழ்ச்சியாக சொல்ல, ராகுலும் புன்னகையோடு ஆமோதித்து தலையசைத்தான்.

“பழசை எல்லாம் போட்டு குழப்பிக்கிட்டு தன் சந்தோசத்தை அழிச்சிக்கிற அளவுக்கு நிவி முட்டாள் இல்ல ம்மா. எப்பவும் எதையும் நேர் வழியில சிந்திச்சு செயல்படறவ. நிவியோட குழந்தை மனசுக்கு அவளோட வாழ்க்கையில எல்லா சந்தோசமும் குறைவில்லாம கிடைக்கணும் ம்மா” ராகுல் பூரிப்போடு சொல்லி கொண்டிருக்க,

“நிச்சயமா கிடைக்கும்… நிவி மேம் ஈஸ்வர் சாரோட ரொம்ப ரொம்ப சந்தோசமா இருப்பாங்க” தயாராகி அறையை விட்டு வெளியே வந்த தமிழ்ச்செல்வி முகம் முழுக்க விரிந்த புன்னகையோடு வாசகத்தை நிறைவு செய்ய, இருவரும் அவள் புறம் திரும்பினர்.

அரக்கு நிற பட்டு சேலை வாகாய் கட்டி, அணி மணிகள் மிளிர, மஞ்சள் முகம் ஒளிர வந்து நின்றாள் தமிழ்ச்செல்வி.

என்ன தான் காஞ்சிப்பட்டேயானாலும் அவளின் பூசணிக்காய் வயிற்றை மறைக்க முடியாமல் திண்டாடியது.

“எவ்வளவு நேரம் டீ ஒத்த புடைவைய கட்டி ரெடியாகறத்துக்கு உனக்கு?” என்று அவளிடம் கடுகடுத்தான் ராகுல்.

“முதல்ல ஒரு பட்டு சேலைய எடுத்து நீயே கட்டி பாருடா, பதில் உனக்கு தானாவே கிடைக்கும்” என்று பார்வதி சட்டென சொல்ல, தமிழ் களுக்கென சிரித்து விட்டாள்.

“என்ன ம்மா, உன் மருமகளுக்கு சப்போட்டா பேசறீங்களோ?” என்றவன் சிரித்து கொண்டிருந்த தாயையும் தாரத்தையும் ஒருசேர முறைத்து வைத்தான்.

அவனருகே வந்த தமிழ், “அதான் நான் வந்துட்டேன் இல்ல. இன்னும் ஏன் டா, உர்ருன்னு இருக்க?” என்று கணவனை சமாதானம் செய்ய முயன்றவள் வழக்கம் போல வார்த்தையை தவறவிட, சட்டென நாக்கை கடித்து கொண்டு, தயக்கமாக மாமியார் பக்கம் திரும்பினாள்.

பார்வதியின் முகம் மாறியது. “எத்தனை முறை சொன்னாலும் கேக்கறதில்ல. புருசன வார்த்தைக்கு வார்த்தை வாடா, போடான்னு மரியாதை இல்லாம கூப்பிட்டுகிட்டு” என்று சலிப்பாக முணுமுணுத்தப்படி முன்னே சென்று விட்டார்.

ராகுல் நமட்டு சிரிப்போடு நின்றிருக்க, தமிழ் முகம் சுருங்கி சிணுங்கியதை பார்த்து சிரித்தே விட்டான்.

“சிரிச்சு தொலைக்காத டா… அச்சோ, என்னால இந்த பழக்க தோஷத்தை மட்டும் மாத்திக்கவே முடியல” என்று நொந்தபடி தன் தலையை தட்டிக் கொண்டாள் தமிழ்.

“சரி விடு செல்லா குட்டி. நீ என்னை இப்படி கூப்பிடும்போது தான் டீ, எனக்கு உன்மேல இன்னும் அதிகமா லவ்ஸ் வருது” என்ற ராகுல் கள்ளச் சிரிப்போடு கண்ணடிக்க, தமிழ் உதடு சுழித்து அவனை முறைத்தாள்.

“லவ் யூ டீ செல்ல பொண்டாட்டி” என்று ராகுல் இதழ் குவித்து காற்றில் முத்தம் தர, அவளின் செல்ல முறைப்பில் வெட்கம் ஒட்டி கொண்டது.

மேலும் ஏதும் பேசாமல் தமிழ் வேகமாக திரும்பி நடக்க, கால் இடறி தடுமாறினாள்.

அவள் கீழே சரியும் முன்னே ராகுலின் கைகள் அவளை தாங்கி கொண்டன.

“பொறுமையா நடக்க முடியாதா தமிழ் உன்னால” என்று ராகுல் அவளை அக்கறையாய் கடிந்து கொள்ள, “ம்ம் நேரமாச்சுன்னு அவசரபட்டது யாராம்?” என்று பதில் கேள்வி கேட்டு புதுப்பூவாய் புன்னகை சிந்தினாள் அவனின் மணவாட்டி.

தன்னவளின் பொன் சிரிப்பை ரசித்தவன், “திட்டும் போது இப்படி சிரிச்சு வைக்காத டீ. சரி வா மெதுவா நட” அவள் தோளை அணைத்தபடி உடன் நடந்தான் ராகுல்.

“இன்னைக்கு ரொம்ப சந்தோசமான நாள் இல்ல ராகுல்” தமிழ் அவன் கைகளுக்குள் பரவசமாய் கேட்க,

“ம்ம் என்ன இருந்தாலும் சாருமதிய பழிவாங்கறதுக்காக, சாதாரண ஒருத்தனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு நிவி பிடிவாதமா இருந்தது எனக்கு சங்கடமா இருந்தது தமிழ். இப்பவாவது அவளோட மனசு மாறுச்சே. ரொம்ப சந்தோசமா இருக்கு” ராகுலும் நிறைவாக பதில் தந்தான்.

“நிவி மேமோட மனச மாத்தினது ஈஸ்வர் சார் தான்” தமிழ் குதூகலமாய் சொல்ல,

“பார்க்கிறதுக்கு ஈஸ்வர் அழுத்தமானவரா தெரிஞ்சாலும் மனசளவில ரொம்ப நல்ல கேரக்டர்” ராகுல், விபீஸ்வரனை மெச்சுதலாக சொன்னான்.

பேசிக்கொண்டே தமிழ்செல்வி காரின் முன் இருக்கையில் அமர உதவியவன், தானும் காருக்குள் ஏறி அமர்ந்தான்.

அழகான விடியற்காலை பொழுதில் அவர்கள் மூவரையும் ஏற்றி கொண்டு, அந்த மகிழுந்து பனி மூட்டத்தை கிழித்து கொண்டு சாலையில் விரைந்தது.

# # #

மணமகன் அறையில் இருந்து வெளிவந்த விபீஸ்வர், இறுகிய முகமும் வேக நடையுமாக மணமகள் அறை நோக்கி வந்தான்.

அவனை கண்டதும் அந்த அறையில் சூழ்ந்திருந்த பெண்கள் கிளுக்கி சிரித்து சளசளத்தபடி வெளியேற, ஈஸ்வர் கதவடைத்துக் கொண்டு உள்ளே வர, முழு மணப்பெண் அலங்காரத்தில், வ
மென்மை துடைத்த முகத்தோடு அமர்ந்திருந்தாள் நிவேதா.

அடர் சிவப்பு வண்ணத்தில் தங்க பூக்கள் வேய்ந்த பட்டு சேலையில் மிளிர்ந்தவளை ரசனையோடு வருடி தந்தது அவன் பார்வை.

பட்டு வேட்டி சட்டையில் ஆண்மையின் முழு இலக்கணமாய் வந்து நின்றவனை விழியுயர்த்தி பார்த்தவள், மௌனமாக எழுந்து நின்றாள்.

“உன் மொபைல் எடுத்து பாரு நிவி, என்னோட எந்த மெசேஜ்க்கும் நீ ரிப்லே பண்ணல, என் கால்ஸ்சையும் நீ‌ அட்டர்ன் பண்ணல, என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல?” விபீஸ்வரின் கேள்வி கோபமாகவே வர, நிவேதா பதில் தராமல் அவனை அமர்த்தலாக பார்த்து நின்றாள்.

ஈஸ்வரும் சலிக்காமல் அவளை முறைத்து நின்றான்.

இதோ இப்போதே மணமக்களை மணமேடைக்கு அழைக்க வேண்டிய நேரம் நெருங்கி இருந்தது. ஆனால் இவர்களோ பூட்டிய அறைக்குள் ஒருவரையொருவர் முறைத்து நின்றிருந்தனர்.

இருவரில்‌ முதலில் இறங்கி வந்தது ஈஸ்வர் தான். சிவப்பு ரோஜா கூட்டம் போல கண்ணெதிரே அழகு மிளிர தன்னவளை கண்ணுற்ற அவன் பார்வையில் கோபம் மாறி காதல் ஒட்டிக் கொண்டது. அதோடு அவள் கோபத்திற்கான காரணத்தையும் அவன் ஓரளவு ஊகித்திருந்தான்.

“சின்ன விசயத்துக்கெல்லாம் ஓவரா ரியாக்ட் பண்ணாத குலாபி, இன்னைக்கு நம்ம லைஃப்ல எவ்ளோ சந்தோசமான நாள், அதை கெடுக்காத நிவி” என்றான்.

“எது சின்ன விசயம் மிஸ்டர் ஈஸ்வர்? நீங்க ராஜவம்சமா இருந்துட்டு போங்க, அதுக்காக எங்க ஸ்டேட்ஸ் பத்தி குறை சொல்ல உங்க வீட்டு ஆளுங்களுக்கு எந்த ரைட்ஸ்சும் இல்ல” என்று அவனிடம் சீற,

“இது மொத்தமா நம்ம ஃபேமிலி டியர், என் வீட்டு ஆளுங்க, உன் வீட்டு ஸ்டேட்ஸ்னு பிரிச்சு பேசறது இதுதான் லாஸ்டா இருக்கணும், மைண்ட் இட்” அவன் அழுத்தமாக சொன்னான்.

“அதை அவங்களுக்கும் போய் சொல்லிவிட்டு வாங்க… ச்சே நான் ஏன் இந்த மேரேஜ்க்கு சரின்னு சொன்னேன்னு இரிட்டேங்கா இருக்கு” அவள் கசப்பாக சொல்ல,

“ஜஸ்ட் சட்அப் நிவி, நீ என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற, நம்ம லவ் உனக்கு இரிடேட்டிங்கா இருக்கா?”

“இதுபோல தான் எனக்கும் கோபம் வருது விபு, முன்ன நின்னுபோன கல்யாணத்தையும், இப்ப நம்ம ரிலேஷன்ஷிப்பையும் இணைச்சு வச்சு பேசும் போது, அவங்க கழுத்தை நெரிக்கணும் போல தான் ஆத்திரம் வருது” ஆத்திரமாக பேசினாலும் அவள் கண்கள் லேசாய் கலங்கின.

இவன் மனம் தாங்காமல், “நிவி, நான் தான் சொன்னேன் இல்ல, அத்தைக்கு அவங்க பொண்ணை எனக்கு கட்ட முடியலன்ற ஆதங்கம். அதை உன்மேல இப்படி காட்டுறாங்க, அவங்க பேச்செல்லாம் நீ இவ்வளோ சீரியஸா எடுத்துக்காத டியர், ப்ளீஸ் எனக்காக”

“ம்ஹும் முடியல விபு, கஷ்டமா இருக்கு. ஏன் உனக்கு சம்மதம் சொன்னேன்னு தோணுது” என்றவளை காட்டமாக பார்த்து நின்றான் அவன்.

பின்னே, அவளிடம் சம்மதம் வாங்க இந்த ஒரு வருடம் அவன் பட்டபாடு கொஞ்சம் நஞ்சமா? அவனின் தீவிர காதல் கணைகளை எல்லாம் அசராமல் புஸ்வாணம் ஆக்கி விட்டிருந்தாள் நிவேதா. தொழில் வட்டத்தில் அசகாய சூரன் என்று பெயர் பெற்றவன், காதலியின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கி தவிக்க விட்டாள். அவளை தன் வழிக்கு கொண்டு வரும் வகையறியாமல் இந்த பிடிவாதக்காரனை விழிபிதுங்க வைத்துவிட்டாள் அந்த பிடிவாதக்காரி.

“நான் ப்ரோபோஸ் பண்ணதும் உடனே ஓகே சொல்லிட்டது போல சலிச்சிக்கிறியே டீ, என்னை சுத்தல்ல விட்டு கடைசியா போனா போகுதுன்னு தான சம்மதம் சொன்ன?” அவன் பற்களை நறநறத்தபடி கேட்க, என்ன முயன்றும் முடியாமல் அவளின் செவ்விதழோரம் பரிகாச நகைப்பு லேசாய் எட்டி பார்த்தது.

“சிரிப்பு வந்தா சிரிச்சிடு, எதுக்கு அதையும் மறைச்சு வைக்கிற” ஈஸ்வர் சொன்ன பாணியில் இவள் வாய்விட்டு சிரித்து விட்டாள்.

அவனின் முரட்டு தனமான காதல் யாசகத்தில் இவள் மனம் முதலில் முரண்டு பிடித்தாலும், மெல்ல மெல்ல அவன் புறம் குடைசாயத்தான் செய்தது.
எனினும் தன் மனமாற்றத்தை அவனிடம் மறைத்து விட்டாள். தினம் தினம் அவன் காதலை உள்ளுக்குள் ரசித்தும் வெளியே வெறுத்தும் அவனின் ஆணென்ற திமிரை விலைப்பேசி கொண்டிருந்தவள், காலம் தாழ்த்தி தான் தன் சம்மதத்தை தந்தாள். விபீஸ்வர் காலம் தாழ்த்தாமல் இதோ திருமண ஏற்பாட்டினை முடித்து விட்டான்.

இவர்கள் மனம் அந்த சந்தோச தருணங்களை அசைபோட, இருவர் முகத்திலும் மென்மை பரவியது.

காதல் பார்வையோடு தன்னவளிடம் நெருங்கி வந்தவன், “அத்தை நைட் பேசினதுக்கு அவங்களை அப்பவே கண்டிச்சுட்டேன். இனி அவங்க நம்ம விசயத்தில தலையிட மாட்டாங்க நிவி” என்று உறுதி தந்தான்.

“அதை சொல்ல தான் கால் பண்ணேன் நீ எடுக்கல” என்று குற்றம் சாட்டி, அவள் வெண்பட்டு கன்னத்தை தன் ஒற்றை விரலால் கோடிட்டு செம்பட்டு நிறமாகச் செய்தான்.

“அவங்க நிஜமாவே ரொம்ப பேசிட்டாங்க விபு” என்று அவன் மார்பில் முகம் சாய்த்துக் கொண்டாள் அவள் ஆறுதலாய்.

“இன்னுமா அதை நினச்சுட்டு இருக்க, லிவ்இட் குலாபி…” என்று அவள் தோள் பற்றி விலக்கி நிறுத்தியவன், லேசாய் கசங்கி இருந்த சட்டையை சரிபடுத்திக் கொண்டான்.

“ஓ சாருக்கு சட்டை கசங்கினா பிடிக்காதோ?” என்று கேட்க,

“பிடிக்காது. அதோட சில்லி விஷயத்துக்கு ஓவர் ரியாக்ட் பண்றவங்களை சுத்தமா பிடிக்காது. என் குலாபி அந்த கேரக்டர் இல்ல…” முடிக்காமல் இழுக்க,

“ம்ம் சாரி விபு, நானும் கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன்” என்று நிவேதா உணர்ந்து சொல்ல, அவள் மீது இன்னும் காதல் கூடியது இவனுக்கு.

அவள் தேனிதழில் அழுத்தமாய் இதழ் பதித்து மீண்டவன், “லவ் யூ குலாபி, நீ என்னை வச்சு செய்ததுக்கு எல்லாம்… இருக்கு டீ இனி உனக்கு” என்று கறுவிவிட்டு செல்ல, பெண்ணவள் முகம் முழுதும் செஞ்சாந்து பூசிக்கொண்டது வெட்கத்தின் பிரதிபலிப்பில்.

முகூர்த்த நேரம் நெருங்க,
மங்கல மணமேடையில் நிவேதாவும் விபீஸ்வரனும் மணமாலை மாற்றி கொண்டு, புதுமண பூரிப்போடு அமர்ந்திருக்க, ராகுல், தமிழை பார்த்து வரவேற்பாய் புன்னகைத்தனர்.

தன் ஒற்றைச் செல்ல மகளின் திருமணத்தில் வெறும் பார்வையாளராய் மட்டுமே நின்றிருந்தார் சாருமதி. தன் கணவன் ராமச்சந்திரன் அருகில்.

அவர் மனவருந்தி மகளிடம் திரும்ப திரும்ப மன்னிப்பு வேண்டிய பின்னரும் கூட, நிவேதா அவரை, ‘அம்மா’வென்று அழைப்பதாக இல்லை. தன் மகள் தாய்மை அடையும் போது, ஒருவேளை அன்னையின் அருகாமைக்காக விரும்பி, தன்னை ஏற்றுக் கொள்வாள் என்று நம்பி இருந்தார் அவர்.

திருமண சடங்குகள் எல்லாம் நிறைவாய் முடிய, அதற்கு மேல் பொறுமை இழந்த ஈஸ்வர், நிவேதாவை அப்படியே இரு கைகளில் ஏந்தி கொண்டு தன் காரினை நோக்கி நடந்தான்.

“அச்சோ என்ன பண்ற விபு?” நிவேதா திகைத்து வினவ,

“இந்த பெருசுங்க எல்லாம் பேசிட்டு கிளம்ப நேரமாகும் போல. அதுக்குள்ள நாம ஒரு லாங் டிரைவ் போயிட்டு வந்திடலாம் குலாபி” என்று அவளை முன் இறுக்கையில் திணித்து கொண்டு காரில் பறந்தான் அவன்.

அவர்களை கவனித்து விட்ட அங்கிருந்த நெருங்கிய சொந்தங்கள் சிரித்து வைக்க, தமிழ்ச்செல்வியின் விழிகள் அகல விரிந்தன.

தன் மனையாளின் திகைப்பை பார்த்து ராகுல், சத்தம் இன்றி இதழ் மடித்து சிரித்து கொண்டிருக்க, அவன் கேலி சிரிப்பை பார்த்து தமிழ் முகம் சுருக்கி பழிப்பு காட்டினாள் தன் காதல்காரனுக்கு.

முற்றும்

error: Content is protected !!