Manmo 10

கார்த்திக் வீட்டு மொட்டை மாடியில் நின்றிருந்தான். சுற்றி வர இருந்த இருளும், ஏகாந்தமும் மட்டுமே இப்போது அவனுக்குத் துணை.

அவன் மன சஞ்சலத்தின் அளவைச் சொல்வது போல ஏற்கெனவே ஒரு பாக்கெட் தீர்ந்து போயிருந்தது. ஏனென்று தெரியாமல் இன்று முழுவதும் எல்லாரிடமும் எரிந்து விழுந்திருந்தான்.

‘என்னடா கண்ணா ஆச்சு உனக்கு?’ ஒரு கட்டத்திற்கு மேல் பத்மாவே இப்படி மகனைப் பார்த்துக் கேட்டிருந்தார்.

அவன் மனம் என்ன உணர்கிறது என்று அவனுக்கே தெரியாத போது மற்றவருக்கு அதை எப்படி விளக்குவான்! கார்த்திக் குழம்பிப் போனான்.

அவள் எதற்கும் அத்தனை இலகுவில் சம்மதிக்க மாட்டாள் என்று தெரிந்து தான் அவள் வார்த்தைகளைப் புறக்கணித்திருந்தான். அவன் இஷ்டம் போல அனைத்து ஏற்பாடுகளிலும் இறங்கி இருந்தான்.

அவளுக்கு அவனைப் பிடிக்கும். நிரம்பவே பிடிக்கும். அது கார்த்திக்கிற்கும் தெரியும். அதனால் தான் எல்லாவற்றையும் முன்னெடுத்துச் சென்றான்.

ஆனால் அவனும் அவள் பால் வீழ்ந்து போவான் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அன்று பார்க்கில் அத்தனை பேரும் கிளம்பிய பின்னும் திட்டமிட்டுத்தான் அவளோடு தனித்திருந்தான்.

மழை வரும் அறிகுறிகளும் அதிகமாக இருந்ததால் அந்தக் கணத்திற்காகக் காத்திருந்தான். மழையும் வந்தது. மங்கையும் மயங்கியது. ஆனால் கடைசியில்… காதல் சொன்னது அவன்!

மித்ரமதி அன்றைக்கு எத்தனை தூரம் நெகிழ்ந்து போயிருந்தாள் என்பதை அவன் நன்கு அறிவான். பெண்களை அறியாதவனா என்ன அவன்?

அந்தக் கணத்தில் அன்றைக்கு அவன் சின்னதாக ஒரு பொறி மூட்டியிருந்திருந்தால் அவள் கன்னிக்காடே முழுதாகப் பற்றி எரிந்திருக்கும். ஆனால்… அவனால் அது முடியவில்லை.

அவன் ரதியின் இடத்தில் அன்று வேறு யாரும் இருந்திருந்தால் நிலைமையே வேறு. ஆனால் அவளை அப்படியெல்லாம் பார்க்கத் தைரியம் இல்லாமல் தான் ஓடி வந்து விட்டான். போதாததற்கு அந்தச் சின்னப் பெண் அதை வேறு நையாண்டி பண்ணுகிறாள்.

கார்த்திக்கின் முகத்தில் இப்போது மின்னலாக ஒரு புன்னகைக் கீற்று. நான் ஏன் இப்படி ஆகிப்போனேன்?

இதுவரை தன்னைக் கடந்த பெண்களைக் கையாண்டது போல மித்ரமதியை அவனால் நடத்த முடியவில்லை. அதற்கான தைரியமும் அவனிடத்தில் இருக்கவில்லை. எல்லை மீறத் திட்டம் போட்டவன், கோடு தாண்டப் பயந்து புறமுதுகு காட்டி ஓடி வந்து விட்டான்.

ஃபோன் சிணுங்கியது. மித்ரமதி தான் அழைத்துக் கொண்டிருந்தாள்.

“மித்ரா!”

“கார்த்திக்… தூங்கிட்டீங்களா?”

“இல்லை… சொல்லு.”

“என்ன பண்ணுறீங்க?”

“மொட்டை மாடி, பார்க்கிற பக்கமெல்லாம் இருட்டு, கையில ஒரு

பாக்கெட் சிகரெட்…” அவன் அனுபவித்துச் சொன்னான்.

“ஓ… ஸ்மோக் பண்ணுவீங்களா?”

“ஏன்? பிடிக்காதா?”

“ம்ஹூம்… அந்த ஸ்மெல் எனக்குக் கஷ்டமா இருக்கும்.”

“அது இல்லைன்னா சில சமயங்கள்ல எனக்குக் கஷ்டமா இருக்கும்.

“ஓ… அப்போ இப்ப என்ன கஷ்டம்?” சரியாகப் பாயின்ட்டைப் பிடித்தாள் மித்ரமதி. கார்த்திக் குரலே எழும்பாமல் சிரித்தான்.

“ஒரு பொண்ணு இன்னைக்கு என்னைப் பார்த்துக் கேலியாச் சிரிச்சா. அதை நினைச்சேன்.”

“இதுல என்ன கஷ்டம் இருக்கு கார்த்திக்?”

“இல்லையா மித்ரா? ஹீரோக் கணக்கா இருந்துக்கிட்டு இப்படி ஓடி வந்தா சிரிப்பாங்க தானே?”

“ஹீ… ரோவா…”

“இல்லையா? நாங்களும் கண்ணாடி பார்க்கிறோம் இல்லை! அதை விடு பேபி… அது என்ன அப்படியொரு நக்கல் சிரிப்பு இன்னைக்கு? நீங்க சொன்ன ஒழுகும் குடைக்குக் கீழே இன்னும் கொஞ்ச நேரம் நின்னிருந்தா எல்லாம் கை மீறிப் போயிருக்கும் ன்னு வந்தா… உங்களுக்குக் கேலியா?”

“ஐயே… போதுமே…” அவள் ஒரு தினுசாக அங்கிருந்து அழகு காட்ட இங்கு கார்த்திக் சிரித்தான்.

“கிளம்பி வா மித்ரா.”

“எங்க கார்த்திக்?”

“இங்க தான் பேபி. இப்போவே கிளம்பி வா.”

“என்னாச்சு? ஏன் திடீர்னு கூப்பிடுறீங்க?”

“சும்மா தான், நீ இப்போ பக்கத்துல இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது. கிளம்பி வா பேபி.”

“ம்ஹூம்… நான் மாட்டேன் பா.”

“ஏன்? நம்ம வீட்டுக்குத் தானே, கிளம்பி வா ரதி!” அவன் அழைப்பு ‘ரதி’ என்றிருந்தால் அதன் அர்த்தமே வேறென்று அவள் அறிவாளே! போதாததற்கு அவன் குரல் வேறு கரகரத்திருந்தது.

“இல்லை கார்த்திக்.”

“அப்போ இப்போ எதுக்குக் கூப்பிட்டே?” அவன் குரலில் இப்போது சினம்.

“எதுக்கு இவ்வளவு கோபம் கார்த்திக்?”

“கிளம்பி வர முடியுமா? முடியாதா?”

“ம்ஹூம்…”

“குட்நைட்.” ஃபோனைச் சட்டென்று அணைத்து விட்டான் கார்த்திக். சுறுசுறுவென்று கோபம் தலைக்கேறியது. அடுத்த பாக்கெட்டையும் காலி பண்ண ஆரம்பித்திருந்தான்.

அந்தப் பக்கமாக மித்ரமதி தவித்துப் போனாள். பேசிக் கொண்டிருக்கும் போதே பாதியில் ஃபோனை அணைத்து விட்டிருந்தான் கார்த்திக்.

மீண்டும் மீண்டும் அவள் அழைக்க, எந்தப் பதிலும் இல்லை. இந்த அர்த்த ராத்திரியில் வேறு யாரை அங்கே அழைப்பது? அதுவும், யார் நம்பரும் அவளிடம் இல்லையே!

இரவு முழுவதும் தவித்த படியே இருந்தவள் விடிந்ததும் கிளம்பி விட்டாள். அம்மாவிடம் கூட எங்கே போகிறாள் என்று சொல்லவில்லை. அனுமதிக்க மாட்டார் என்று தெரியும்.

“இது என்ன சின்னப் புள்ளைங்க மாதிரி. சொன்னாப் புரிஞ்சுக்க வேணாமா? அர்த்த ராத்திரியில ஒரு வயசுப் பொண்ணைக் கூப்பிடுறோமே ன்னு யோசிக்க வேணாம்?” காரை ஓட்டிய படியே முணுமுணுத்தாள் பெண்.

காலை நேரம் என்பதால் அத்தனை வாகன நெரிசல் இருக்கவில்லை. பார்கவியின் குரலைக் கேட்டு நெடுநாள் ஆகிவிட்டதால் நேரத்தைச் சரிபார்த்த படியே ட்ரைவ் பண்ணிக் கொண்டிருந்தாள்.

“கலர்க் கலர்க் கனவுகளை நனவாக்கி வந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகரத்தின் நூற்றி இரண்டு புள்ளி ஐந்து எஃப் எம் தென்றல் வானொலியில் உங்களைச் சந்திப்பது, உங்கள் மனதிற்கினிய தோழி பார்கவி. நிகழ்ச்சி ஆரம்பிச்ச உடனேயே ஒரு நேயர் வந்திருக்காங்க. அவரை யாருன்னு பார்த்திடலாம். ஹலோ வணக்கம்.”

“டீ கோந்தே, நன்னா இருக்கியோன்னோ?”

“அடடே! அம்புஜம் மாமி. வாங்கோ வாங்கோ. நான் சௌக்யமா இருக்கேன். என்ன ரொம்ப நாளா ஆளே காணோம்? நன்னா இருக்கேளா?”

“எனக்கென்ன… நான் நன்னாத்தான் இருக்கேன். அதை விடுடி பார்கவி. நான் கேள்விப்பட்டது உண்மையா?”

“நீங்க என்ன கேள்விப்பட்டேள்?”

“நோக்குக் கல்யாணம் ஆயிடுத்தாமே?” பட்டென்று கேட்டார் அம்புஜம் மாமி. இங்கு மித்ரமதி கூடத் திகைத்துப் போனாள்.

‘ஓ… பார்கவிக்குக் கல்யாணம் ஆச்சா? வாழ்த்துகள் பார்கவி.’

“ஆமாம் மாமி.”

“ஈஷ்வரா! நீ நன்னா இருக்கணும்டி கோந்தே! எத்தனை மனுஷாளுக்கு அவா சோர்ந்து போற நேரத்துல அனுசரணையாப் பேசுறே. உம் மனசுப் பிரகாரம் நீ நன்னாத் தொங்கத் தொங்கத் தாலியோட தீர்க்காயுசா இருக்கணும். மாமாக்கும் ரொம்ப சந்தோஷம். ஆமா… ஆம்படையான் என்ன பண்ணுறார்?”

“மாமி… நாம பேசுறதை இப்போ ஒலகமே கேட்டுன்டிருக்கு. நீங்க லைன்லயே இருங்க, கட் பண்ணிடாதீங்கோ.”

“சரிடீ.” மாமி வானலையில் அமைதியாக நிகழ்ச்சிக்கு வந்தாள் பார்கவி.

“இந்த நிமிஷத்துல எனக்காக வாழ்த்துச் சொல்லுற அனைத்து உள்ளங்களுக்கும் பார்கவியோட நன்றிகள். ஒரு இனிமையான பாடல் வருது. கேட்டு ரசியுங்க நேயர்களே!”

‘குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்.’ ஜானகி ஆரம்பிக்க மித்ரமதி புன்னகைத்தாள். தமிழ்ப் பாடல்கள் பெரிதாக அத்தனை பரிட்சயம் இல்லை என்றாலும் ரசிப்பாள்.

ஏ ஆர் ரஹ்மானின் பாடல்கள் ஓரளவு தெரியும். அந்தத் துள்ளலிசை, மெலடி என அனைத்தும் பிடிக்கும்.

கார் கார்த்திக்கின் வீட்டை நெருங்கி இருந்தது. இறங்கி கேட்டைத் திறந்தவள் மீண்டும் காரை ட்ரைவ் பண்ணினாள். திருடர்கள் பயம் இல்லாததால் இங்கெல்லாம் இப்படித்தான்.

அந்த நேரத்திற்கு அங்கே போய் நிற்பது ஒரு மாதிரியாக இருந்த போதும் காலிங் பெல்லை அழுத்தினாள். இதுவரை கார்த்திக்கின்

ஃபோன் உயிரில்லாமலேயே கிடந்தது. பல முறை முயற்சித்திருந்தாள்.

கதவைத் திறந்த பத்மா ஆச்சரியப்பட்டுப் போனார்.

“மித்ரா! வா வா.”

“ஆன்ட்டி… சாரி. டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.”

“சேச்சே! நான் அப்பவே எந்திரிச்சுட்டேன். என்னாச்சு மித்ரா? ஏன் முகம் ஒரு மாதிரியா இருக்கு?”

“கார்த்திக் எங்க ஆன்ட்டி?”

“இன்னும் எந்திரிக்கலை ம்மா. தூங்குறான். ஏன்? ஏதாவது பிரச்சனையா?”

“நைட் பேசும் போது கோபத்துல ஃபோனை வெச்சுட்டாங்க. ஃபோன் வேற ஆஃப் ல இருக்கு.”

“முரடன்… அவன் அப்படித்தாம்மா. நீ கண்டுக்காத. கோபம் வந்தா இப்படித்தான் முரட்டுத்தனமா ஏதாவது பண்ணுவான். கிறுக்கன்.” பத்மா திட்டவும் பரிதாபமாகப் பார்த்தாள் மித்ரமதி.

“மேல தான் அவன் ரூம் இருக்கு. நீ போய் பாரும்மா.”

“ம்…” மேலே வந்தவள் அங்கிருந்த கதவுகளில் ஒன்றைத் திறக்க சுகமான தூக்கத்தில் இருந்தான் கார்த்திக்.

வெளியே இருந்த வெளிச்சம் உள்ளே வராதவாறு கர்ட்டன் மாட்டப்பட்டிருந்தது. மெல்லிய வெளிச்சத்தில் தெரிந்த அவன் ரூமை அவள் கண்கள் ஒரு முறை வலம் வந்தது.

ரூம் நல்ல விசாலாமாக இருந்தது. நேர்த்தியாக எல்லாவற்றையும் பேணியிருந்தான் கார்த்திக். பார்த்துப் பார்த்து ஒவ்வொரு பொருட்களாக அவன் தேர்ந்தெடுத்து அலங்கரித்திருந்தான்.

“கார்த்திக்!” மெதுவாக அவள் அழைக்க அவனிடம் அசைவில்லை. பாதி தூக்கத்தில் எழுப்பினால் கோபப்படுவானோ! ஏற்கனவே பேசவில்லை.

தயக்கத்தோடே போர்வையை மெதுவாக விலக்கினாள் மித்ரா. அவன் வெற்று முதுகு தெரிய போர்வையை அத்தோடு நிறுத்திக் கொண்டாள்.

“கார்த்திக்!” குரலை லேசாக உயர்த்தி, தான் பிடித்திருந்த போர்வையை மெதுவாக அசைத்தாள்.

“கார்த்திக்.”

“ம்…” தலையை மட்டும் திருப்பிப் பார்த்தவன் மித்ராவைக் காணவும் சட்டென்று திரும்பினான்.

“ஹேய் மித்ரா!”

“குட்மார்னிங் கார்த்திக்.”

“குட்மார்னிங் பேபி. என்ன இந்த நேரத்துல?” தூக்கக் கலக்கத்தோடு வந்தது குரல்.

“எம் மேல கோபமா இருக்கீங்களா கார்த்திக்?” அவள் கேட்கவும் தான் இரவு நடந்த சம்பாஷனை நினைவு வந்தது அவனுக்கு. ஒரு கணம் அவள் கண்களைப் பார்த்தவன் அவளையும் இழுத்துத் தன் போர்வைக்குள் போட்டுக் கொண்டான்.

“கார்த்திக்! என்ன பண்ணுறீங்க?” திமிறியவளை லேசாக அடக்கியவன்,

“நேத்து நைட் கூப்பிட்டா இன்னைக்கு காலையில வந்து நிக்கிற. ஃப்ளைட்ல வந்தியா?” என்றான்.

“விடுங்க என்னை, எல்லாமே விளையாட்டு.”

“முடியாது.” அவளை இன்னும் தன்னோடு இறுக்கிக் கொண்டான் கார்த்திக். வெற்று மார்போடு அவனிருந்த கோலம் என்னமோ பண்ணக் கண்களைத் திருப்பிக் கொண்டாள் மித்ரமதி.

“நைட் அந்த நேரத்துக்கு கூப்பிடுறீங்களே, என்னால வர முடியுமான்னு யோசிச்சீங்களா கார்த்திக்?”

“ஏன்டா? வரமுடியாதா?”

“அம்மா கொன்னுடுவாங்க.”

“ஓ…”

“இப்போ கூட இங்க தான் வர்றேன்னு சொல்லாம வந்திருக்கேன்.”

“ஏனப்படி?”

“விடமாட்டாங்க கார்த்திக். உங்க ஃபோன் எங்க?”

“தெரியாதே…”

“தெரியாதா!”

“ம்… நைட் நீ வர முடியாதுன்னு சொல்லவும் கோபத்துல எங்கேயோ தூக்கிப் போட்டேன். எங்கன்னு ஞாபகம் இல்லை. அப்படியே தூங்கிட்டேன்.”

“அடிதான் வாங்கப் போறீங்க. நைட்ல இருந்து எத்தனை தரம் கால் பண்ணினேன். நீங்க என்னடான்னா கூலாத் தூங்கி இருக்கீங்க.”

கோபமாகச் சலித்துக் கொண்டவளை அப்படியே பார்த்திருந்தான் கார்த்திக். அவன் சுட்டுவிரல் அவள் முகவடிவை அளந்தது.

“கூப்பிட்டா எங்கேயும் வர்றதில்லை. அப்போ இந்த ஒரு மாசமும் நான் என்னதான் பண்ணுறது மித்ரா?”

“ஆஃபீஸ் வாங்களேன் கார்த்திக். அங்க பார்க்கலாம் தானே?”

“ஆஃபீஸ்ல இதெல்லாம் பண்ண முடியாதே ரதி.” அவன் கைகள் சற்றே எல்லை மீற அவனைப் பிடித்துத் தள்ளியவள் வெளியே போய்விட்டாள்.

கார்த்திக் மீண்டும் கட்டிலில் மல்லாந்து படுத்துக்கொண்டான். இந்தப் பெண்ணைத் தான் நல்ல ஒரு சூழ்நிலையில் சந்தித்திருக்கக்

கூடாதா என்று மனம் கிடந்து ஏங்கித் தவித்தது.

இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. மித்ரமதி கொஞ்சம் சோர்வாக அமர்ந்திருந்தாள். ரிச்சர்ட் கூட அவள் புலனைத் திருப்பப் பலமுறை முயற்சித்துத் தோல்வி கண்டிருந்தான்.

ஃபோனையே பார்த்த படி அமர்ந்திருந்தாள் பெண். கார்த்திக் அழைக்கவே இல்லை. அமெரிக்கா போய் இன்றோடு ஒரு வாரம் ஆகி இருந்தது. திடீரென்று அங்கிருந்த தொழிலில் ஓர் சிக்கல் வரவும் அவசராகக் கிளம்பி இருந்தான்.

மித்ரமதி தான் ஏர்போர்ட் வரை போயிருந்தாள். கல்யாண வேலைகள் தலைக்கு மேல் இருந்ததால் சக்ரதேவ் அசையவில்லை. கார்த்திக்கையே அனுப்பிவிட்டார்.

முதல் இரண்டு நாட்களும் தொடர்பு கொண்டவன் அதன் பிறகு பேசவில்லை. மிகவும் பிஸியாக இருந்தால் அழைக்க மாட்டேன் என்று சொல்லியிருந்த போதும் மித்ரா கொஞ்சம் தவித்துத் தான் போனாள்.

“மேடம் டீ.” இது ரிச்சர்ட்.

“ம்ப்ச்… தேவையில்லை ரிச்சர்ட்.”

“சீக்கிரம் குடிச்சு முடிச்சீங்கன்னா வேலையைப் பார்க்கலாம்.”

“என்ன வேலை?”

“சரியாப் போச்சு! இன்னைக்கு உங்களை ஃபிட் ஆன் க்கு கூப்பிட்டிருக்காங்க மேடம்.”

“அட ஆமாமில்லை. மறந்து போச்சு ரிச்சர்ட்.”

“உங்களுக்குக் கார்த்திக் சாரைத் தவிர இப்போ எல்லாமே மறந்து போச்சு மேடம்.”

“அப்படியெல்லாம் இல்லை. நீயா எதையும் கற்பனை பண்ணிக்காதே.”

“நம்பிட்டேன்!” ரிச்சர்ட் நகரவும் புன்னகைத்துக் கொண்டாள் பெண்.

ரிச்சர்ட்டோடு அந்தப் பிரபலமான மணப்பெண் ஆடைகள் வடிவமைக்கும் கடைக்கு வந்திருந்தாள் மித்ரமதி. ஏற்கெனவே எல்லாம் தெரிவு செய்து அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது.

கார்த்திக் தான் அன்று அவளோடு வந்திருந்தான். இருவருமாக ஒன்றைத் தெரிவு செய்து அதில் சில திருத்தங்களும் சொல்லி விட்டுச் சென்றிருந்தார்கள்.

அவளின் உடைக்கு ஏற்றாற் போல அவனும் தெரிவு செய்வதாகச் சொல்லி இருந்தான். ஒவ்வொன்றையும் அவளுக்காகப் பார்த்துப் பார்த்துத் தெரிவு செய்தான்.

முதன் முதலாக இன்று அவர்கள் தெரிவு செய்த ஆடையை அணிந்து பார்க்கும் போது அபிப்பிராயம் சொல்ல அவனில்லையே என்று வருத்தமாக இருந்தது மித்ரமதிக்கு.

இதில் அங்கு வேலை பார்க்கும் பெண் வேறு சார் வரவில்லையா என்று கேட்கவும் கொஞ்சம் வருத்தப்பட்டாள்.

ஆடை வெகு திருப்தியாக இருந்தது. வெளியே நிற்கும் ரிச்சர்ட்டிடம் காட்டி அபிப்பிராயம் கேட்கலாம் தான். இருந்தாலும் அதற்குப் பெண் மனம் ஒத்துக்‌ கொள்ளவில்லை.

ஆஃப் வயிட் என்பார்களே, அந்த நிறத்தில் இருந்தது ஆடை. அவள் மெல்லிடைக்குக் கனகச்சிதமாகப் பொருந்தும் படி தான் தெரிவு செய்திருந்தான்.

மிகவும் ஆடம்பரம் இல்லாமல் கழுத்து கைப் பகுதிகளில் மட்டும் லேஸ் வேலைப்பாட்டில் இருந்த அந்த ஆடை அவளையும் வெகுவாகத் திருப்திப் படுத்தி இருந்தது.

கண்ணாடியில் முன்னும் பின்னுமாகத் திரும்பிப் பார்த்துக் கொண்டாள். ஆடையை வடிவமைத்த பெண் அவள் அணிய உதவி செய்து விட்டு வெளியே போய்விட்டார்.

திருத்தங்கள் ஏதும் இல்லாததால் ஒரு திருப்திப் புன்னகையோடு அவர் நகர மனதில் சுணக்கத்தோடு நின்றிருந்தாள் பெண்.

கதவு லேசாகத் தட்டும் ஓசை கேட்டது. அங்கு வேலை செய்யும் பெண்ணாக இருக்கும் என்று நினைத்து லேசாகத் தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தவள் திகைத்துப் போனாள்.

“கார்த்திக்!” இரண்டு நாட்கள் சவரம் செய்யாத முகத்துடன் பயணக் களைப்போடு அவள் எதிரே நின்றிருந்தான் கார்த்திக்.

“கரெக்ட் டைமுக்கு வந்துட்டேனா ஹனி?” என்றபடி. அவனை அப்போது அங்கே எதிர்பாராததால் திடுக்கிட்டுப் போனவள் அனைத்தையும் மறந்து ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.

“கார்த்திக்!”

“ஹேய்! ட்ரெஸ் கசங்கிடும் டா.” அணைத்தபடியே அவளை ரூமிற்குள் அழைத்துச் சென்றான். அவளைச் சற்றுத் தூரத்தில் நிறுத்தி விட்டு கை இரண்டையும் இடுப்பில் வைத்துக்கொண்டு

அவளை அங்குலம் அங்குலமாக ரசித்தான்.

“எப்படி இருக்கு கார்த்திக்?” கன்னங்கள் செம்மையுற அவள் கேட்ட போது கார்த்திக் மதி மயங்கித் தான் போனான். இதழ்களைக் குவித்து முத்தமொன்றை அவள் பக்கமாக அவன் அனுப்ப முழுதாகச் சிவந்தது பெண்.

“ரொம்ப அழகா இருக்கு ஹனி.” அவன் ரசித்துக் கிறக்கமாகச் சொல்லவும் அவள் புன்னகைத்தாள்.

“ஏர்போர்ட்ல இருந்து நேரா இங்க தான் வர்றீங்களா?”

“ம்… மேடம் ரொம்ப டல்லா இருக்காங்க ன்னு ரிச்சர்ட் சொன்னான். அதான் நேரா இங்கேயே வந்திட்டேன்.”

“அப்போ போகலாம் கார்த்திக். நீங்க ரொம்ப டயர்டா இருப்பீங்க.”

“ஓகே பேபி.” கார்த்திக் வந்தவுடன் ரிச்சர்ட் கிளம்பி விட்டதால் அவளையும் அழைத்துக் கொண்டு அந்த ப்ளாக் ஆடி விரைந்து சென்றது.

அவன் வந்து விட்டதே போதும் என்பது போல ட்ரைவ் பண்ணிக் கொண்டிருக்கும் அவன் முகத்தையே திரும்பித் திரும்பிப் பார்த்தபடி இருந்தாள் மித்ரா.

ஒரு கட்டத்திற்கு மேல் அவள் அலைப்புறுதலைப் பொறுக்க முடியாமல் காரை ஒதுக்குப் புறமாக நிறுத்தினான் கார்த்திக். அவள் புறமாகத் திரும்பி அமர்ந்தவன் கைகள் இரண்டையும் விரிக்க,

“கார்த்திக்!” என்ற கேவலுடன் அவனிடம் ஐக்கியமாகி இருந்தாள் மித்ரா.

அவனும் அவளை இறுக்கிக் கொள்ள, அவன் முகமெங்கும் முத்தம் வைத்தாள் பெண். அவள் தவிப்பைப் புரிந்து கொண்டவன் போல அவனும் அமைதியாக அவளை அனுமதித்தான்.

“ஏன் கால் பண்ணலை?”

“ரொம்ப பிஸிடா. நான் தான் சொன்னேன் இல்லை.”

“ம்… சொன்னீங்க தான். இருந்தாலும்…”

“அங்க வேலையெல்லாம் முடிக்கும் போது இங்க மிட் நைட் ஆகிடுது. அதுக்கப்புறம் எப்படி மித்ரா கூப்பிடுறது?”

“பரவாயில்லை விடுங்க கார்த்திக். கிளம்பலாம், ஆன்ட்டி காத்துக்கிட்டு இருப்பாங்க.”

“அவ்வளவு தானா?”

“என்ன அவ்வளவு தானா?”

“ஃபுல் மீல்ஸ்ஸா கேக்கிறேன்? வெறும் ஸ்டார்ட்டர் தானே. அதுவும் வெஜ் ன்னா எப்படி மித்ரா?” அவன் பாஷை முதலில் அவளுக்குப் புரியவில்லை. புரிந்தவுடன் அவள் ரியாக்ஷன் பார்த்துக் கார்த்திக்கே பயந்து போனான்.

“ஐயையோ! நான் ஒன்னுமே சொல்லலை ம்மா. விட்டா இவ அழுதிடுவா போல இருக்கே.” புலம்பிய படியே காரை நகர்த்தினான்.

***

அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் ஹாலில் தம்பதி சகிதமாக நின்றிருந்தார்கள் கார்த்திக்கும், மித்ரமதியும். அன்று காலையில் தான் கோவிலில் வைத்துத் தாலி கட்டி இருந்தான்.

சொந்த பந்தம் அனைத்தையும் மாலை ஹோட்டலுக்குத் தான் அழைத்திருந்தார்கள். கோவிலுக்கு நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே வந்திருந்தன.

லதா சித்தியையும் கெஞ்சி அழைத்திருந்தான் கார்த்திக். ஆனால், நந்தகுமாரின் நிலையைக் கருத்திற்கொண்டு அவர் வர மறுத்து விட்டார்.

பெண்ணின் ஃபோட்டோவை அனுப்பி வைத்திருந்தான். பெயரை ‘மதி’ என்று மட்டுமே சொல்லிவிட்டான். சித்திக்கு நந்தகுமாரின் கடந்தகாலம் தெரிந்தாலும் பெண் யாரென்றெல்லாம் தெரியாது.

ஃபோட்டோவைப் பார்த்து இனங்காணக்கூடிய ஒரே ஆள் நந்தகுமார் தான். அதுவும் இப்போது சாத்தியம் இல்லாததால் பெயரை மட்டும் சுருக்கி விட்டான்.

லதாவிற்கு அத்தனை மகிழ்ச்சி. இத்தனை நாளும் கல்யாணம் வேண்டாம் என்று அடம்பிடித்தவன் இப்போது சம்மதிக்கவும் கார்த்திக்கை ஒரு வழி பண்ணிவிட்டார்.

வரவேற்பு அத்தனை கோலாகலமாக நடந்தேறி இருந்தது. தேவகியைக் கையில் பிடிக்க முடியவில்லை. தன் ஒற்றைப் பெண்ணின் வாழ்வு மலர்ந்து போனதில் பூரித்துப் போனார்.

பத்மாவும் சக்ரதேவும் கூட ஆனந்த மயமாகவே நின்றிருந்தார்கள். தங்கள் பிள்ளையும் இனி நல்லவழி நடப்பான் என்பதே அவர்கள் மனதிற்கு நிம்மதியைக் கொடுத்திருந்தது.

சக்திவேல், திவாகர், தினகர் எல்லோரும் கல்யாணத்தில் கலந்து சிறப்பித்திருந்தார்கள். அத்தனையையும் முடித்துக்கொண்டு வீடு கிளம்ப நள்ளிரவு ஆகி இருந்தது.

அன்றே நல்ல நாள் என்பதால் புதுத் தம்பதிகளைத் தங்கள் வீட்டிற்கே அழைத்து வந்து விட்டார் பத்மா. தேவகியும் மறுக்கவில்லை. இத்தனை பாசமாக ஒரு மாமியார் தன் பெண்ணிற்கு வாய்த்திருப்பதே பெரும் பேறு என்று எண்ணிக் கொண்டார்.

மித்ராவின் பொருட்கள் அத்தனையும் கார்த்திக்கின் ரூமில் தான் வைக்கப்பட்டிருந்தன. தனக்காக ஒரு தனி ரூமை எதிர்பார்த்திருந்தவள் ஏமாந்து போனாள். அவள் முகபாவம் சட்டென்று பத்மாவிற்குப் பிடிபட்டது.

“நான் எவ்வளவோ சொன்னேன் மித்ரா. ஆனா கார்த்திக் தான் சம்மதிக்கலை. மித்ரா என் ரூம்லயே இருக்கட்டும் ன்னு சொல்லிட்டான்.”

“பரவாயில்லை ஆன்ட்டி.”

பத்மா நகர்ந்து விட மாடி ஏரியா முழுவதும் இளையவர்கள் வசமானது. விருந்தாளிகள் யாரையும் பத்மா வீடு வரை அனுமதிக்காததால் நிசப்தம் எங்கும் குடிகொண்டிருந்தது.

அறைக்குள் நுழைந்தாள் மித்ரமதி. கார்த்திக் அங்கு இல்லை. அறை முழுவதும் முதலிரவிற்கான அடையாளங்கள். பகட்டாக இல்லாமல் பதவிசாக இருந்தது.

நெஞ்சம் லேசாக மத்தளம் கொட்ட குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் இளையவள். அவள் வெளியே வந்த போது கார்த்திக் அவள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

முகத்தில் வந்து மோதிய மலர்களின் வாசத்தை ரசித்தபடி எதிரே நின்றிருந்த மனைவியைக் கண்கொட்டாமல் பார்த்திருந்தான் கார்த்திக்.

அவன் அவள் பக்கத்தில் வந்த போது தன் சுட்டு விரலால் மூக்கை உரசிக் கொண்டாள் பெண்.

“கார்த்திக், ஸ்மோக் பண்ணினீங்களா?”

“ம்…”

“ஓ… அந்த ஸ்மெல் எனக்குக் கஷ்டமா இருக்கும்.” சொல்லிய படி அவள் மெதுவாக அவனை விட்டு நகர அதற்கு இடம் கொடுக்காமல் அவளை நெருங்கினான் கார்த்திக்.

“கார்த்திக் ப்ளீஸ்… வேணாம்… சொன்னாக் கேளுங்க.” அவள் சொல்லச் சொல்ல அதை கணக்கில் கொள்ளாதவன் அவளை நெருங்கி இருந்தான்.

சிகரெட்டையும் தாண்டி ஏதோவொரு வாசத்தை அவள் நாசி உணர்ந்து இருந்தது. முகத்தைத் திருப்பிக் கொண்டவளைத் தன் புறமாகத் திருப்பியவன் அந்த இதழ்களைச் சொந்தம் கொண்டாடினான்.

லேசாகக் குமட்டிக் கொண்டு வந்தது பெண்ணுக்கு. முயன்று அவனை விலக்க நினைத்தபோதும் அவளால் அது இயலவில்லை. அவனாக அவளை விடுவித்த போது மித்ரமதி கலங்கிப் போனாள்.

வாழ்க்கையைப் பற்றி என்றுமே கனவுகள் காணாத பெண்ணவள். தொழிலிலும் சாதித்து மட்டுமே பழக்கம்.

ஆனால் கார்த்திக்கைப் பார்த்த பிறகு தான் எல்லாமே மாறிப்போனது.

தனக்கு வரவே வராது என்று எண்ணியிருந்த காதல் வந்தது. கூடவே கனவுகளும் வந்தது. தன் எதிரில் நிற்கும் இவனோடு ஒரு ஒப்புவமையே இல்லாத வாழ்க்கை வாழவேண்டும் என்ற ஆசையும் வந்தது.

அவள் எதிர்பார்ப்புகள் அனைத்திற்கும் ஈடுகொடுத்தான் கார்த்திக். அவன் கண்களில் அவளையும் மிஞ்சிய காதலை அவள் பார்த்திருக்கிறாள்.

அர்த்த ராத்திரியில் அவளை அழைத்தது தவறாகத் தோன்றினாலும் அது அவள் மீதான அவனின் தேடல் தானே? அதை நினைத்துப் பூரித்திருக்கிறாள்.

“ரதி!” அவன் குரலில் இருந்த மயக்கம் இப்போது பெண்ணுக்கு பீதியைக் கொடுத்தது.

“கார்த்திக்! ட்ரிங்க் பண்ணி இருக்கீங்களா?”

“பேபி… லைட்டா.” இருந்தாலும் அவன் நிதானம் தவறவில்லை.

“அப்போ தூங்குங்க.”

“ஹேய்…” இப்போது அவன் வாய்விட்டே சிரித்தான்.

“கார்த்திக் ப்ளீஸ். நம்ம லைஃப் இப்படி ஆரம்பிக்க வேணாம். புரிஞ்சுக்கோங்க.”

அவன் எதையும் புரிந்து கொள்ளத் தயாராக இருக்கவில்லை. அவன் ஆரம்பித்து வைத்த ஆட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர அத்தனை ஆவலாக இருந்தான்.

அவள் பெண்மை அந்த ஆண்மையிடம் தோற்று நின்றது. இன்பமாக அவள் உணர வேண்டிய அந்த முதற் தோல்வி துன்பமாக உணரப்பட்டது.

கண்ணீரோடு கண்ணயர்ந்தாள் மித்ரமதி.