KS 3

KS 3

காதல் சன்யாசி 3

“சார், நிவேதா மேடம் வராங்க சார்!” குதித்தோடி வந்து சொன்னார் வீரமணி.

ராகுல் கணினியில் இருந்த பார்வையை உயர்த்தாமல், “நிவேதா மேடமா, யாரது?” என வினவினான்.

“அய்யோ சார், நான் முன்னமே சொன்ன இல்ல, இந்த ஊர்ல அவங்க பரம்பரை பணக்காரங்க. உங்கள போய் அவங்கள நேர்ல பார்த்துட்டு வர சொன்னா நீங்க தான் கேட்கல. இப்ப பாருங்க அவங்களே இங்க வந்துட்டாங்க” என்று படபடத்தார் அவர்.

“நீங்க சொல்றது எனக்கு புதுசா இருக்கு வீரமணி, நாம சேவை துறையில இருக்கோம், எல்லாருக்கும் ஒரே மாதிரி ரூல்ஸ் தான். பணக்காரங்களுக்குன்னு தனி ரூல்ஸ் எதுவும் நமக்கு கிடையாது” ராகுல் தெளிவாக சொல்ல,

“அட, போங்க சார், அவங்களால நம்ம பேங்க்ல எவ்வளவு ப்ரோஃபிட் தெரியுமா சார்!”

“உங்களுக்கு சொல்லி புரிய வைக்கிறது ரொம்ப கஷ்டம்” ராகுல் தோள் குலுக்கினான்.

“சார் மேடம் வந்துட்டாங்க கொஞ்சம் தாழ்ந்து பேசுங்க சரியா” என்று சொல்லி விட்டு நகரந்தவரை வினோதமாக பார்த்து விட்டு, தன் கணினி திரையில் பார்வை செலுத்தினான்.

“எக்ஸ் கியூஸ் மீ” மென்மையான குரல் கேட்டு ராகுல் நிமிர,

வெண்ணிலவின் பொற் சிற்பமாய் அவன் முன் வந்து நின்றாள் நிவேதா.

அவளின் பேரழகில் அந்த நொடியே வீழ்ந்தவன், இருக்கையிலிருந்து அப்படியே எழுந்து நின்றான்.

நாகரீகமும் மறந்து, இதுவரை பெண்களையே பாராதவனைப் போல
நிவேதாவின் முகத்திலிருந்து விழியெடுக்க இயலாதவனாய் உறைந்து நின்றான் அவன்!

என்றோ அரை தூக்கத்தில் கண்ட கனவில் வந்து போன உருவம் போல தோன்றியது நிவேதாவுக்கு, ராகுலை பார்க்கும் போது!

இதற்கு முன்னர் எங்கோ பார்த்து, பழகி, நினைவில் பதிந்ததாய் தோன்றியது அவன் தோற்றம்!

நல்ல உயரம், வசீகரிக்கும் முகம், கூர்மையான பார்வை, அந்த மாய கண்ணனை பார்த்த நொடியில் மெய்மறந்து நின்றாள் அவள்!

நிமிட கணக்கில் மௌனமாய் நின்றிருந்த இருவரையும் ஒன்றும் புரியாமல், மாறி மாறி பார்த்து கொண்டிருந்தாள் தமிழ்ச்செல்வி.

“க்க்கும்ம்!”

அவள் மெதுவாய் தொண்டையை கனைத்த பிறகும் கூட, விலக முடியாமல் நான்கு விழிகளும் சிறைப்பட்டு கிடந்தன.

தமிழ்ச்செல்வி பொறுமை இழந்து மேசையை சற்று வேகமாக இருமுறை தட்ட, இருவரும் திடுக்கிட்டு அவள் புறம் திரும்பினர்.

“ஏய், தமிழ்! நீ எப்படி இங்க?” ராகுல் இப்போது தான் அவளை கவனித்து கேட்க,

“இவ்வ்வ்ளோ நேரமா இங்க தான் நிக்கிறேன், உனக்கு தான் தெரியல” என்று பற்களை கடித்தபடி அவள் பதில் சொல்ல, ராகுல் அசட்டு புன்னகையுடன் தன் தலையை கோதி விட்டு கொண்டான்.

“இவரை உங்களுக்கு முன்னயே தெரியுமா? தமிழ்செல்வி!” இப்போது நிவேதா கேள்வி எழுப்ப,

“எஸ் மேம், சர் என்னோட காலேஜ் மெட்” என்று மரியாதையோடு சொன்னவள்,

ராகுலைப் பார்த்து, “உங்க ரெண்டு பேரையும் நான் தான் அறிமுக படுத்தணுமா, என்ன?” என்று வினவினாள்.

அவன் புரிந்தவனாய், “ஹாய், நான் ராகுல் கிருஷ்ணன்” என்று கை நீட்ட,

“ஐ அம் நிவேதா ராமசந்திரன்” என்று அவன் கையோடு கை சேர்த்து குலுக்கினாள்.

பூக்குவியலின் உள்ளே கை விட்டு எடுத்த அனுபவமாய் இருந்தது அவனுக்கு!

பின்பு மூவரும் அமர்ந்து பண பரிவர்த்தனை பற்றிய பேச்சை தொடங்கினர்.

ராகுலின் கண்கள் நிவேதாவின் ஒவ்வொரு சின்ன அசைவையும் படமெடுத்து தன்னுள் சேமித்து கொண்டிருந்தன.

அவள் சென்ற பிறகும் கூட இவனுக்கு அவனேதிரில் இன்னும் நிவைதா அமர்நத்து இருப்பது போலவே மாய பிம்பங்கள் தோன்றி இம்சை செய்தன.

தடாலென கதவை தள்ளிக் கொண்டு அனுமதியின்றி அறைக்குள் நுழைந்தவனை, சற்று கடுப்பாக நிமிர்ந்து பார்த்தான் ராகுல் கிருஷ்ணன்.

“ஓ தம்பி வேலைக்கு புதுசுங்களா? அதான் இடம் தெரியாம நோட்டிஸ் அடிச்சிட்டிங்க போல” அவன் சிரித்தபடியே எதிரில் தெனாவெட்டாய் அமர,

“சார் யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” ராகுல் கேள்வி நிதானமாக வந்தது.

“கோதண்டராமர் தம்பி, என்னவோ நாளைக்குள்ள பணம் கட்டலன்னா, எங்க இடத்தில நோட்டிஸ் ஒட்ட வேண்டியிருக்கும் மிரட்டி இருக்கீங்க”

“மிஸ்டர் கோதண்டராமர், அது மிரட்டல் இல்ல, எங்க பேங்கோட ரூல்ஸ் அது. லட்ச கணக்குல வியாபார வளர்ச்சிக்குன்னு லோன் வாங்கிட்டு, வருசம் முடிந்த பிறகும், ஒரு மாச வட்டி கூட நீங்க கட்டல, அந்த காரணத்தால தான் உங்களுக்கு நோட்டிஸ் வந்திருக்கு” ராகுல் பொறுமையாக விளக்கினான்.

“ஆங் உங்க விளக்கமெல்லாம் போதும் தம்பி, உங்களுக்கு முன்ன இருந்த மேனேஜரு ரொம்ப நல்ல மனுசன், கொடுத்ததை வாக்கிட்டு அமைதியாயிடுவாரு, நீங்க என்ன தம்பி எதிர்பார்க்கிறீங்க, தயங்காம சொல்லுங்க, தாராளமா தாரேன்”

யோசனையுடன் கணினியை தட்டியவன், “அப்ப ஒரு லட்சம் கொடுங்க அண்ணே” என்று சொல்ல, இவன் புருவங்கள் உச்சி மேட்டிற்கு ஏறி நின்றன.

“எடுத்ததுமே லட்சத்தில் இருந்து பேரம் பேசறீங்களே? பரவாயில்ல முதல் தடவ நீங்க வாய்திறந்து கேட்டதால் குறையாம கொடுக்கிறேன். இந்த லோன், நோட்டிஸ் தொல்லை எல்லாம் என்கிட்ட வராம நீங்க பார்த்துக்கோங்க” என்று பணப்பையை மேசை மீது எடுத்து வைக்க, சிதறாத புன்னகையுடன் அதை எடுத்து பண தாள்களை இயந்திர பிடியில் எண்ணி எடுத்து வைத்து கொண்டான்.

“இந்த மாசம், வட்டி தொகைக்கு இது சரியா போச்சு சார், நீங்க அடுத்த மாசமும் தவறாம வந்து வட்டி கட்டிடுங்க கோதண்டராமர்” என்று சொல்ல அவன் சீறி எழுந்து விட்டான்.

“என்ன தம்பி? சினிமா காட்டுறீங்களா? என்கிட்ட வச்சுகாதீங்க, சின்ன வயசு வேற, எந்த சுகத்தையும் அனுபவிக்காம, மேல போய் சேர்ந்துடுவீங்க” அவன் மிரட்டல் தோணியில், ராகுல் வாய்விட்டு சிரித்து விட்டான்.

“என்னை உங்களால செய்ய முடியும்னா, செஞ்சு தான் பாருங்கண்ணே, ஆல் த பெஸ்ட்” என்று அலட்டாமல் சொல்ல, அவன் ஆவேசமாக அங்கிருந்து வெளியேறினான்.

அதே வேகத்தில் தேவராஜ் உள்ளே வந்து, “என்ன சார் நீங்க, பெரிய இடம்னு சொன்னாலும் தாழ்ந்து போக மாட்டேங்கிறீங்க, இந்த ரவுடி பயலுங்க கிட்டயும் அடங்கி போக மாட்டேங்கிறீங்க, பொழைக்க தெரியாத ஆளா இருக்கீங்களே” என்று ஆதங்கப்பட்டான்.

“எனக்கு தெரிஞ்சது இந்த பொழைப்பு தான் சார். அடங்கி போற, ஒடுங்கி போற பொழப்பெல்லாம் உங்களோடவே வச்சுக்கங்க, போங்க சார்”

“அவன் பெரிய ரவுடி சார், தெரியாம மோதிட்டிங்க, எதுக்கும் இனிமே ஜாக்கிரதையா இருங்க” என்று எச்சரிக்கை செய்துவிட்டு செல்ல, ராகுல் அசட்டையாய் தோளை குலுக்கி கொண்டான்.

வில்லனாக வந்து மிரட்டி சென்றவன் தூரமாகி போக, தேவதையாய் வந்து மென்னகை தந்தவள் அவன் நினைவுகளில் நிறைந்து போனாள்.

‘ஒரேயொரு முறை பார்த்து பேசனதுக்கே இப்படி இம்சை பண்றாளே? டேய் ராகுல் கிருஷ்ணா, இந்த நினப்பு நல்லதுக்கு இல்ல, எப்பவும் போல சைட் அடிச்சோமா, தொடைச்சு போட்டோமான்னு போயிட்டே இரு. வானத்து நிலாவ கயிறு கட்டி இழுக்க நினைக்கிறது மடத்தனம்’

அவன் அறிவு அறிவுறுத்தியும் மனம் ‘நிவி’ ‘நிவி’ என்று சிணுங்கி கொண்டே இருந்தது.

“சான்ஸே இல்ல, பொண்ணா அவ எப்ப்ப்பா…! அவளை பார்த்து பத்து நாளைக்கு மேல ஆச்சு. ஆனா,
அவளோட முகம் என் கண்ண விட்டு மறையவே இல்ல” என்று ராகுல் சிலாகித்து சொல்லியபடி இருந்தான்.

காய்கறிகள் வாங்க நல்ல மார்க்கெட் கடைகளை காட்டும்படி தமிழ்ச்செல்வியிடம் அவன் உதவி கேட்டுருக்க, அவளும் நண்பனுக்கு உதவியாக வந்திருந்தாள்.

“யாரு டா அந்த பொண்ணு?” காய்களை தேர்ந்தெடுத்து கூடையில் போட்டு கொண்டே கேட்டாள் தமிழ்ச்செல்வி.

“வேற யாரு, நிவேதா தான்” அவன் பதில் சொல்ல, தமிழ் சட்டென நிமிர்ந்தாள்.

“டேய், என்ன கொழுப்பு இருந்தா மேடம் பத்தி என்கிட்டயே வம்பளப்ப?” என்று அவனை முறைத்தாள்.

“உண்மைய தான சொன்னேன், எஸ்டேட் முதலாளின்னு சொன்ன உடனே, யாரோ ஒரு லேடி வருவாங்கன்னு நினைச்சா, தேவதை மாதிரி எதிர்ல வந்து நிக்கிறா!” ராகுல் விழி விரிக்க,

“மரியாதையா பேசு” என்று அவனை கண்டித்தவள், காய் பையை எடுத்து தன் ஸ்கூட்டியில் வைத்தாள்.

அவள் பையை கவனித்த ராகுல், “ஏய், என்ன இவ்வளவு கஞ்ச தனமா காய் வாங்கி இருக்க, இவ்வளோ நல்லா சாப்பிடறதால தான் வெண்டைக்காய்க்கு கை, கால் முளைச்ச மாதிரி இருக்க” என்று கிண்டலாகவே கேட்டான்.

“தினமும் இந்த வழியா தான வீட்டுக்கு போறேன், அப்பப்ப வாங்கிட்டு போவேன்!” என்று ஸ்கூட்டியை தள்ளிக்கொண்டு நடந்தாள்.

அவனும் தனது காய்கறி பையை பைக்கில் மாட்டி விட்டு, வண்டியை தள்ளியபடி அவளுடன் நடந்தான்.

“நிவேதா பத்தி பேசுனா ஏன் இவ்வளோ கோபபடற?” என்று ராகுல் மறுபடி நிவேதா பேச்சுக்கே வந்தான்.

“நீ நினைக்கிற மாதிரி நிவேதா மேடம் சாதாரண பொண்ணில்ல!”

“என்ன? பெரிய பணக்காரி, பணத்திலயே பொறந்து, வளர்ந்தவள்னு சொல்ல போற, அதானே” ராகுல் இளப்பமாய் சொல்ல, தமிழ் நின்று அவன் பக்கம் திரும்பினாள்.

“ஒரு பெண்ணோட தரம் அவங்களோட அழகோ, வசதி வாய்ப்போ இல்ல ராகுல். ஏன்னா, இது ரெண்டுமே நிரந்தரமானது இல்ல. அவங்களோட நேர்மையான குணம், திடமான சிந்தனை, செய்த சாதனை இதுல எல்லாம் தான் இருக்கு” தமிழ்ச்செல்வி அழுத்தமாக சொல்ல,

ராகுல் கேலி சிரிப்புடன், “அப்படி என்ன சாதனை செஞ்சாங்க உன் மேடம்? அதையும் சொல்லு” என்று கேட்டான்.

தமிழ் சற்று பொறுத்தவளாய், “ஒன்னரை வருசத்துக்கு முன்னாடி நிவேதா மேடமோட அப்பாவுக்கு கை, கால் விலங்காம போயிடுச்சு, எவ்வளவு வைத்தியம் செஞ்சும் முழுமையா குணப்படுத்த முடியல. இன்னைக்கு வரைக்கும் அவர் பெட் ரெஸ்ட்ல தான் இருக்கார்.”

“…!”

“வீடு, எஸ்டேட்ஸ், கம்பெனி, ஓட்டல்ஸ், பேக்ட்ரி எல்லாத்தையும் சார் தான் கவனிச்சிட்டு இருந்தார். நிவேதா மேடம்க்கு அப்பான்னா ரொம்ப பிடிக்கும், திடீர்னு சாருக்கு அப்படி ஆனதால, எல்லாமே ஸ்தம்பிச்சு போச்சு. கம்பெனி லாசாகிற நிலைமைக்கு போயிடுச்சு. அதில வேலை செஞ்ச நாங்க எல்லாருமே தவிச்சு போயிட்டோம்.”

“…!”

“அப்படியொரு இக்கட்டான நிலைமையில தான், நிவேதா மேடம் கம்பெனி பொறுப்பை ஏத்துக்கிட்டாங்க. இந்த ஒரு வருசத்துல சார் நடத்தும் போது இருந்ததைவிட, கம்பெனி ரெண்டு மடங்கு வளர்ச்சி அடைஞ்சிருக்கு. இதுக்கெல்லாம் காரணம் நிவேதா மேடம் தான். அவங்களோட திறமையான செயல்பாடு தான்!” என்று பெருமையோடு சொல்லி முடித்தாள்.

ராகுல் மலைத்து போய் நின்றான்.

இப்போது நிவேதாவை எண்ணும்போது அவன் மனதில் மரியாதையும் தோன்றியது.

# # #

error: Content is protected !!