உலாவரும் கனாக்கள் கண்ணிலே-9

 

அர்ச்சனாவின் அதிர்ந்த, குழப்பமான முகம் சொன்ன செய்தியை, வலுவாய் மறந்து போகுமாறு செய்தவன், மனைவியின் அருகில் வந்து,

“என்னடா அச்சு”

“ம்…”, அவளின் சுரத்தில்லாத பதிலில் ஏதோ புரிந்தாலும், புரியாதவனாக

“என்ன பார்சல்? யார்கிட்ட இருந்து?”, போட்டு வாங்கும் உத்தியை அவளிடம் கேட்டு வாங்கினான்.

“பாத்துட்டு இருக்கேன், யாருன்னு தெரியல?”, தனக்குள் பேசியவாறு கையில் இருந்த வாழ்த்து மடலல்ல, குழப்ப மடலைப் படித்தாள்.

 

மரிக்கும் வரை – என்

நினைவலைகளில்

கொலுவீற்றிருக்கும்

மறக்க முடியாத மன்மதன்

மாலையிட்டதால் உன்வசம்!

 

பறிக்கும் வரை – என்

மன அலமாரியில்

கொலுவீற்றிருந்த

மறுக்க முடியாத என்னவன்

தவறவிட்டதால் உன்வசம்!

 

வாழ்த்த மனதில்லை!

 

காதலின் நினைவுச்சின்னம் – இனி

என் நினைவின் சின்னம்!!!

யாருக்கு?

கண்டுபிடி…!!!

  • மௌனிகா

 

கொரியரின் கவரில் இருந்த முகவரி, பரிசுப் பொருள், மடல் அனைத்தையும் மாறி மாறி பார்த்தாள், அர்ச்சனா.

‘யாரிவள் மௌனிகா? எதற்கு இவற்றையெல்லாம் எனக்கு அனுப்பனும்? அவளின் நோக்கம் என்ன?’

பரிசுப்பொருளுடன் வந்திருந்த கடித்தத்தின் வார்த்தைகளை பலமுறை படித்து புரிந்து கொள்ள முயன்றாள், அர்ச்சனா.

‘இவளை நான் எதுக்கு நினைக்கனும்? தேவையில்லயே.. அப்போ நினைவின் சின்னம் யாருக்கு? நம்ம மன்மத குஞ்சுக்கோ(அமர்நாத்)?!… மன்மதன் மாலையிட்டதால் உன்வசம் னா’ அருகில் நின்ற அமரைப் பார்த்தவள், ‘இவன் தானா அது? அவ தவறவிட்டதால என் வசமா?  வாழ்த்த மனசில்லனா சும்மா இருக்க வேண்டியது தான!  எதுக்கு இத அனுப்பி என்ன குழப்பறா?’ என பலவாறாக யோசித்தவள், ஒன்றும் அறியாதவன் போல நின்ற அமரைப் பார்த்தாள்.

 

மறுவீட்டிற்கு இங்கு வந்திருந்த தன் தமையனும், கணவனும் பேசிக் கொண்டிருந்த வார்த்தைகளை கண்களை மூடி நினைவு கூர்ந்தாள்…

“உங்கப்பாகிட்ட சொல்லலயா இது பற்றி?”, தமையன்

“அண்ணனுக்கு மட்டும் தெரியும்.  அப்பாகிட்ட பேசினா உடனே அவங்க வீட்டுக்கே கிளம்பி போனாலும் ஆச்சர்யமில்ல… அவங்க அப்பா நல்ல மாதிரி, அவருக்காகவும், அவ ஃப்யூச்சருக்காகவும் பாத்தா, அது அந்த பொண்ணுக்கு புரியுதானே தெரியல”, கணவன்

“வேற எதுவுமின்னா உடனே என்ன கூப்பிடுங்க, அந்த பொண்ணுகிட்ட இருந்து கொரியர் எதுவும் வந்தாலும் சொல்லுங்க…”, தமையன்

“கண்டிப்பா…”, கணவன்

 

ஏதோ புரிவது போல் தோன்றினாலும், அமரின் எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது போன்ற தோரணை கோபத்தைக் கொண்டு வந்திருந்தது. இவ்விடயம் பற்றி தனது தமையனுக்கும் தெரிந்திருக்கிறது என்ற எண்ணம் சற்று தைரியத்தைத் தந்தது.

‘இன்னும் எவ்வளவு நேரம் என்னிடம் உன் நடிப்பைக் காட்டுவாய் பார்க்கிறேன்’ என அமரைப் பற்றி நினைத்தவள் அவனிடம் எதுவும் பேசவில்லை.

அர்ச்சனாவை பார்த்தபடி நின்று கொண்டிருந்த அமரை நோக்கியவள், ஐந்து மாதங்களுக்கு முன்பு தனது தமையன் வாங்கித் தந்திருந்த புது அலைபேசியை எடுத்து சந்துருவிற்கு கால் செய்தாள்.

அர்ச்சனாவின் மௌனம், அலட்சிய பார்வை, கனிவில்லா செயல்கள் சொல்லாமல் சொன்னது, வந்திருந்ததை அனுப்பியது மௌனிகாவென்று.  ஆனாலும் பொறுமையுடன் காத்திருந்தான், அமர்.

முழுவதுமாக ரிங் சென்று நின்று போனது.  சற்று நேரம் அலைபேசியையே பார்த்திருந்தவள், கணவனின் “அர்ச்சனா”, என்ற மெல்லிய அழைப்பில் நிமிர்ந்தாள்.

அது வரை அவள் கைகளில் இருந்த காதல் நினைவின் சின்னமும், கடிதமும் அர்ச்சனாவால் மட்டுமே பார்க்கப்பட்டும், படிக்கப்பட்டும் இருந்தது.

“யார்கிட்ட இருந்து வந்திருக்கு?”, ‘உள்ளுணர்வு சொல்வது பொய்யாகக் கூடாதா?’ என்று எண்ணியபடி கேட்டான், அமர்நாத்.

“ஏன் உங்களுக்கு தெரியாதா?”

“தெரியாததால தான் கேக்குறேன்”

“தெரியாத..” சற்று நிதானித்தவள், “எனக்கு வரப்போற கொரியர் பத்தி… வந்த உடனே எங்கண்ணங்கிட்ட எப்டி கண்டிப்பா சொல்றேனு சொன்னீங்க?”, யூகத்தை வேகத்துடன் கேட்டாள்.

மனைவியின் கேள்வியில் நிதானித்தவன், ‘இது எப்டி இவளுக்கு தெரியும்?!’ என யோசித்தபடி

“அத கொஞ்சம் தரியா?”

“ஏன் ஞாபகம் வந்திருச்சா? இதுல போட்டோவெல்லாம் அனுப்பல”, என்ற அர்ச்சனாவின் எகத்தாளமான வார்த்தையில் முகத்தில் அறை வாங்கிய உணர்வு பெற்றான், அமர்நாத்.

 

ஆனாலும், தவறாத மனம் நிமிர்ந்தது, “எவ ஞாபகமும் இப்போ எனக்கில்ல!, என்ன வந்திருக்குனு பாக்கலாம்னு கேட்டேன்”, குரலில் கோபம்.

“அனுப்புனது அவனில்ல… அவனு தெரியுதே உங்களுக்கு!”, ஆச்சர்ய அலட்சிய குரல் “அப்போ முன்ன இருந்திருக்கு அவ ஞாபகம்…”

“முதல்ல வந்தத காமி”

“என்னனு பாக்கலனா தல வெடிச்சிருமோ?”

“என்ன பேசுறனு புரிஞ்சுதான் பேசுறியா?”

“எல்லாம் புரியுது… என்னைக் கல்யாணம் பண்ணதுக்கப்புறமும் ஏமாத்திருக்கீங்க!”

“யாரு!? நான்… உன்ன.. ஏமாத்தினேனா…?”

“பின்ன”

“யோசிக்காம வாயில வர்றத பேசாத அர்ச்சனா”

“உண்மைய பேசுனா கஷ்டமாதான் இருக்கும்!”,

“எது உண்மை?”

“அவ கொரியர் அனுப்புவானு உங்களுக்கு யாரு சொன்னா?”, யோசனையின் தீர்வான அர்ச்சனாவின் முதல் முத்தான கேள்வி.

“…”, அர்ச்சனாவின் எதிர்பாரா கேள்வியில் ஜெர்க்காகியிருந்தான், அமர்.

“ம்… என்னை ஏமாத்திட்டிங்கல்ல?”

“ஆமா உன்ன காதலிச்சு… எல்லாம் முடிச்சு… ஏமாத்திட்டேன்… போடீ”, சமாளித்திருந்தான்.

“இப்டி வேற ஒரு ஆசயா உங்களுக்கு!, நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க மொதல்ல?”

“என்ன கேட்ட?”, அலட்சியம் வந்திருந்தது.

“கேட்ட கேள்வியே மறக்க வைக்குற அளவுக்கு அவ மாயக்காரியா?”

“அவள பத்தி இப்போ எதுக்கு பேச்சு?”

“இப்பவும் எங்கிட்ட சொல்லணும்னு தோணலல்ல உங்களுக்கு?”

“….”, அர்ச்சனாவின் கேள்வியில் திணறினாலும், காட்டாமல் தன்னைக் காட்டிக் கொண்டான்.

“பொண்டாட்டிய கூப்பிடறமாதிரி அவள அவ, இவன்னு வேற சொல்றீங்க!”

“நீ அவனு பேசுனதால நானும் ஒரு ஃப்லோவுல அப்டி சொல்லிட்டேன்…, படுத்தாதடி…”

“அதுக்குள்ள உங்களுக்கு என்ன பிடிக்கல”

“அப்டி நான் சொன்னனா?”

“சொல்லலனாலும் எனக்கு தெரியும்!”

“என்ன தெரிஞ்சது இப்ப?”

“எல்லாத்தையும் எங்கிட்டருந்து மறைக்கிறீங்க!”

“பார்சல்ல வந்தது என்னனு கூட எங்கிட்ட சொல்லவும் இல்ல, காட்டவும் இல்ல, என்ன, ஏதுனு நிதானமா கேக்கவும் இல்ல, உன் விருப்பத்துக்கு பேசுற, நீயா ஒன்னு நினச்சுகிட்டு பேசாத”

“நான் கேட்டதுக்கு பதிலே சொல்லாம, மாத்தி மாத்தி பேசுறீங்க”

“எதையும் மாத்திப் பேசல, உனக்கு இப்ப என்ன தெரியணும்?”

“அவ யாரு?”

“எவ?”, புத்திசாலியாகக் காட்டிக் கொள்ளும் பிரயாசம்

கையில் இருந்த கொரியர் கவரை, அமரிடம் கொடுத்திருந்தாள், அர்ச்சனா. கவரில் இருந்த முகவரியைப் பார்த்தவன்… மௌனிகாவின் வீட்டு முகவரி அதில் இருக்க, அது மௌனிகாவின் கையெழுத்து இல்லை என்பதையும் கண்டு கொண்டான்.

“யாருனு தெரியுதா?”, நக்கல்… குரலில் தெரித்தது.

“ம்…”, ஏனோ தைரியம் தலைமறைவாயிருந்தது.

“யாரு?”

“மௌனிகா, என் காலேஜ்மேட்…”, உண்மை சொல்லப்பட்டதால்.. நிம்மதி… இவ்வளவு சுகமானதா? என மனம் யோசித்திருந்தது.

“இத எனக்கு ஏன் அனுப்பியிருக்கா?”, புரியாத புதிரை அவிழ்க்க கைகோர்க்க விழைந்தாள்.

“அவகிட்ட தான் கேக்கணும்?”, மனதை படிக்க…  படிக்கவில்லை.

“அவள உங்களுக்கு எவ்வளவு நாளா தெரியும்?”

“யுஜி  படிக்கும் போதிருந்தே தெரியும்”

“ஏன் அவள நீங்க கல்யாணம் பண்ணிக்கல?”

“…”, தெரியாத கேள்விக்கு தெரிந்த பதில் மௌனம், ஆனாலும் பதில் சொல்ல விழைந்தான், “அவள நான் ஏன் கல்யாணம் பண்ணிக்கனும்?”, பதில் வினாவாகியிருந்தது.

“லவ் பண்ணா கல்யாணம் பண்ணனும்ல!”, சந்தேகம்… தேகம் தேய்க்கும்.

“நான் சொன்னேனா அவள லவ் பண்ணேனு”, கேட்டவளின் இதயம் மகிழ்ந்திருந்தது.

“அப்போ உங்களுக்குள்ள என்ன பிரச்சனை?”

“ஒரு பிரச்சனையுமில்ல”

“அப்றம் எதுக்கு இத அனுப்பியிருக்கா”

“திரும்பவும் ஆரம்பிச்ச இடத்துக்கே வந்துட்ட அர்ச்சனா, அத வச்சிட்டு போயி ரெஃப்ரெஷ் ஆகு போ…”

“எங்கண்ணன் வரட்டும், என்னனு விசாருச்சேனு கேக்கறேன்”

“உங்கண்ணன் வர்ற வரை, நீ தனியா உக்காந்து விசாரிச்சிட்டு இரு, நான் போயி என் வேலய பாக்குறேன்”, வயதின் பக்குவம் அங்கிருந்து அகலச் சொன்னது.

அங்கிருந்து அகன்றவன் களைப்பு தீர நன்கு குளித்தான்.  மனதில் அவனையறியாமல் சுழன்றடித்த புயல் மனைவியின் அலட்சிய செயல்களினால் ஓய்ந்து, ஓய்வெடுத்துக் கொண்டது.  அவள் மௌனிகாவைத் தெரிந்து கொண்டாள், இனி என்னவானாலும் பார்க்கலாம் என்ற… வாழ்க்கையில் தவறாதவர்களின் தெனாவெட்டு, அமருக்கு வந்திருந்தது.

பிரச்சனைகள் அணுகும் முன்பு இருக்கும் பதற்றம், அணுகிய பின் பறந்து போகும்,  அந்நிலைக்கு அமரை, அர்ச்சனாவின் விழிப்பற்ற பேச்சு தள்ளி நிறுத்தியிருந்தது.

குளியலின் போது, கடந்தபோன தேனிலவு நாட்களில், தனது கைகளுக்குள் தனை மறந்து மயங்கியிருந்த அர்ச்சனாவிற்கும், கொரியரில் வந்த குழப்பத்திற்கு பிறகான அர்ச்சனாவிற்கும் இடையே ஆயிரம் வித்தியாசங்களை உணர்ந்திருந்தான், அமர்.

வயதில் அவனைவிட மிகவும் சிறு பெண்ணாக இருந்தாலும், தனக்கு கொரியர் வருவதை முன் கூட்டியே உனக்கு தெரியப்படுத்தியது யார்? என்ற அவளின் சரியான கேள்வியில் மனைவியின் கணிப்பை மனதிற்குள் பாராட்டினான்.

சாதூர்யம் தெரிந்தவளானாலும், அவளின் யோசிக்க விரும்பாத சில முதிர்ச்சியற்ற பேச்சுகள் முரண்கொண்ட பேச்சாக இருந்ததையும் உணர்ந்தான்.  பிறகு, அவர்களது அறையிலிருந்து வெளியே வந்தான்.  சந்துருவை அலைபேசியில் அழைத்தான்.  அமரின் அழைப்பும் எடுக்கப்படவில்லை.

தங்கைக்கு அழைத்து பேசியவன், இயன்றால் நாளை இருவரும் வீட்டிற்கு வந்து செல்லுமாறு, தான் கூறியதாக சந்துருவிடம் கூறுமாறு கூறிவிட்டு, பொதுவான விடயங்கள் பேசி வைத்தான்.

பிறகு வீட்டிலுள்ளவர்களிடம் பேசியவன், கொரியர் பற்றி விசாரித்தான். பெரியவர்கள் இருவரும் அறியவில்லை என்பதை உணர்ந்தவன், உமாவிடம் கேட்டறிந்தான்.

அதுவரை கொரியர் பற்றிய சிந்தனை வராமல் இருந்த உமா, கொரியர் வந்த தினம் பற்றி கொழுந்தனிடம் கூறினாள். இரவு உணவிற்குப் பின் அறைக்குள் சென்றவன் அர்ச்சனாவை அவள் காணாமல் பார்த்தான்.  தனக்குள் அமைத்திருந்த விவாதமேடையில், தானே, தன்னுடன் விவாதிக்கும் தோரணையில் இருந்தவளை “சாப்பிடலயா?”, எனக் கேட்டான்.

“…”, அமரின் கேள்வியை உள்வாங்காமல், கொரியரை உள்வாங்கியிருந்தாள்.

“அர்ச்சனா….”, கணவனைப் பார்த்தவள் ஒன்றும் பதில் கூறாமல் இருக்கவே,

“போயி சாப்பிட்டு வந்து படு”, அதற்கும் பதிலில்லாமல் போக, அர்ச்சனாவை பொருட்படுத்தாமல் படுக்கையில் சென்று படுத்துவிட்டான்.

அர்ச்சனாவைப் பற்றி வீட்டில் இருந்தவர்கள் யாரும் கேட்கவில்லை.  தேனிலவு சென்று வந்த களைப்பில் இருப்பவளைத் தொந்திரவு செய்ய வேண்டாமென விட்டிருந்தனர்.

 

சற்று நேரம் கழித்து படுக்கைக்கு வந்த அர்ச்சனா, உறக்கம் வராமல் நீண்ட நேரம் படுக்கையில் உழன்று கொண்டிருந்தாள்.  மனைவியின் மன உளைச்சலை உணர்ந்தவன், தன்னவளை தன்னை நோக்கி இழுத்தான்.  தன்னிடமிருந்து முரண்டவளை இறுக அணைத்திருந்தான்.  எப்பொழுதும் தனது அணைப்பிற்குள் ஒடுங்குபவள் அமரைத் தவிர்த்து அவனிடமிருந்து விலகினாள்.  விலகளில் வீம்பு தெரிய… விட்டு விலகினான்.

மீண்டும் தன்னை நாடி வருவான் என எண்ணியவளை ஏமாற்றி உறங்கியிருந்தான், அமர்.

 

படகு வீடு பயணத்தில், கண்ணைக் கவரும் காட்சிகளுடன், அர்ச்சனாவும் போட்டி போடுவதாகவும், எதைப் பார்க்க, எதை விட எனத் தெரியாமல் குழப்பம் உண்டாவதாகக் கூறி அமர் செய்த காமனின் லீலைகளை உறக்கம் வராமையால் நினைவு கூர்ந்தாள்.

 

படகு பயணம் ஆரம்பித்தவுடன் சேலை மாற்றி வந்தவளை, எலுமிச்சை சாறை (ஜூஸை) புன்முறுவலுடன் எதிர்கொண்டவனை ஆச்சரியமாக எதிர்கொண்டாள், அர்ச்சனா.

“இந்தா முதல்ல ஜூசை குடி”

“ஏறுனவுடனே ஜூஸா?”

“அடுத்து தீயா வேல செய்யப் போறல்ல, அதுக்கான எனர்ஜி ட்ரிங்க்”

“வேலயா?”

“ம்…”

“என்ன வேல?”

“அது சஸ்பென்ஸ்… குடிச்சு முடி, அப்றம் சொல்றேன்”

வேகமாகக் குடித்து முடித்தவள்,”ம் இப்போ சொல்லுங்க”

“இது சொல்றது இல்ல, செய்யறது”

“…”, ஒரு கனம் யோசித்தவளை, யோசிக்கவிடாமல் வாவென அழைத்தவன் அர்ச்சனாவின் கைபிடித்தபடி, நேராக படுக்கை அறைக்குள் அழைத்துச்செல்ல, “இங்க எதுக்கு இப்போ கூட்டிட்டு வந்தீங்க?”

“நல்லா கவனி, இப்போ தான் நாம ட்ராவல் ஆரம்பிச்சு இருக்கோம்…  ஒரு டாஸ்க் (பணி) லன்ச் வர, அதுல யார் வின் பண்ணாலும், அவங்க சொல்றத தான் தோற்றவங்க ஹனிமூன் முடியற வரை கேட்கணும்”

“எப்போ லன்ச் டைம்?”

“இப்போ ட்வெல்வ் ஃபார்ட்டி ஃபைவ்… டூ டு டூதர்ட்டிக்குள்ள லன்ச் டைம், ஏன் கேக்கற?”

“சும்மாதான்”

“சரி நான் சொல்றத நல்லா கவனிச்சுக்க… நான் லெஃப்ட் சைட் சீனரி வாட்ச் பண்ணுவேன், நீ ரைட் சைட் சீனரி வாட்ச் பண்ணு”

“சரி… அப்புறம்?”, கணவன் எதற்கோ அடிப்போடுகிறான் என புரிந்தாலும், அதையும் அமரே கூறட்டும் என அமைதி காத்தாள்.

“ஆப்போசிட் சைட்ல இருந்து சின்ன போட் வந்தாலும் சரி, பெரிய போட் வந்தாலும் சரி, யாரு சைட்ல போட் பாக்கறமோ அவங்க அப்ப என்ன சொன்னாலும் மற்றவங்க கேக்கணும்”

“என்ன விளையாட்டு இது, நான் வரல”

“அப்றம் எதுக்குடி இங்க வந்துருக்கோம்?… அப்போ வா ஊருக்கே போயிரலாம்”

“…”

மனைவியிடம் பதிலில்லாமல் போகவே, “என்ன டாஸ்க் ஓகே வா, யாரு அதிகமா போட் பாக்கறமோ அவங்க தான் ஃபைனலா வின்னர்…”

கணவனின் டாஸ்கை கேட்டவளுக்கு ‘என்னடா இது… இப்படி ஒரு டாஸ்கை இவனைத் தவிர வேற யாராலும் யோசிக்க முடியாது எனத் தோன்றியது’, இருந்தாலும் “ஒரு நிமிசத்துல வரேன்”, என்றவள் படுக்கை அறையிலிருந்து வெளியே பால்கனிக்கு வந்தாள்.

அப்பொழுது அங்கிருந்து ஏராளமான படகு வீடுகள் தனது பயணத்தை ஆரம்பித்திருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தங்களுடன் பயணத்தை துவங்கிய படகுகள் அங்கொன்றும், இங்கொன்றுமாகத் தெரிய, எதிரில் படகுகள் எதுவும் எதிர்படாததைப் பார்த்தவள், ஒரு முடிவுடன் கணவனிடம் வந்தாள்.

“என்ன ஆச்சு அச்சு? டைம் ஆகுது… இல்லனா வேற டாஸ்க் சொல்லவா?”

‘அம்மாடி இந்த டாஸ்குலயே உள்குத்து என்னனு தெரியாம என் மனசு பயத்துல டான்ஸ் ஆட ஆரம்பிச்சிருச்சு, இதுல… இன்னும் வேற ஒரு டாஸ்கா’ என மனதிற்குள் அலறியவள் “இல்லல்ல இந்த டாஸ்கே… எனக்கு ஓகே”

சிரித்தபடி அவரவரின் சாளரப் பக்கத்தில் அமர்ந்தவாறு, கண்கள் நான்கும் வேடிக்கை பார்க்க, நீலக்கதைகள் பல அமர் பேச, அவனுடன் வழக்காடியபடி வந்தாள், அர்ச்சனா.  பத்து நிமிட பயணத்திற்குப் பின் “ஹையா என் சைட்ல ஒரு போட் வருது” என குதூகலித்தவன், மனைவியிடம் காட்ட… அதைப் பார்த்தவளுக்கு ‘அடுத்து என்ன சொல்லப் போகிறானோ?’ என யோசித்தபடியே கணவனைப் பார்க்க,

“அர்ச்சனா இங்க வா”

“வேணும்னா நீங்க இங்க வாங்க”

தோளை குலுக்கியபடி மனைவியின் அருகில் வந்தவன், “இப்போ மச்சானுக்கு ஒரு டீசர் (Teaser Kiss) கிஸ் ஒன்னு தர”, எனக் கேட்க

“டீசர் கிஸ்ஸா?, அப்டினா!”,

“தெரியலனா கேளு மச்சான் எதுக்கு இருக்கேன், உனக்கு சொல்லிக் கொடுப்பேன்… அது முத்தாவா (முத்தத்தை) நெத்தியில ஆரம்பிச்சு… அப்டியே லிப்கு வந்து… அப்புறம்…”, அவன் முடிக்கும் முன்னே “என்னால முடியாது”, என அவள் முடித்திருக்க

“சொல்லிக்கிட்டு இருக்கும் போது இடையிலே ஏன் பேசுற… மொதல்ல எதுனாலும் முழுசா கேக்கணும்”, என்றவன் விட்டதைத் தொடர்ந்திருந்தான் “அப்டியே கைல கொடுத்து முடிக்கணும்”

கணவனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாது என்று அர்ச்சனா மறுக்க, “அப்போ நானே தரேன்”, என டீசர் கிஸ்ஸை மனைவிக்குத் தந்துவிட்டு, “உன் டாஸ்கை நாந்தானே பண்ணேன், சோ இதுக்குரிய பாயிண்ட் எனக்குதான்”, என அவன் பாயிண்டை ஏற்றியவன் அவளின் பீப்பீயையும் ஏற்றிவிட்டு,  அவன் இடத்திற்கு வந்தமர்ந்தான்.

அமரின் முத்தத்தில் சித்தம் இழந்தவள், பித்து போலாகியிருந்தாள்.

சற்று நேரம் கழித்து, அவளின் புறம் வந்த படகை பார்த்தவுடன், கணவனை அழைத்துக் காட்டியவள்,

“இப்போ நான் சொல்றததான நீங்க கேட்கணும்?”, எனக் கேட்டாள்.

“ஆமா… நீ தான் சொல்லு அச்சு”, என அமர் ஊக்கப்படுத்த… மெல்லிய குரலில், “நான் வரல இந்த ஆட்டைக்கு“, என்றாள்.

“ம்ஹூம்… ம்ஹூம்… ஆரம்பிச்சத முடிக்காம விடக்கூடாது, டாஸ்கை ஸ்டாப் பண்றத தவிர வேற என்னனாலும் சொல்லு அச்சு, நான் கேக்குறேன்”

யோசித்தவள், “படத்துலலாம் ஹீரோ ஹீரோயின ரெண்டு கையால தூக்குவாங்கள்ல அந்த மாதிரி என்னைத் தூக்குங்க”, என்றவுடன்

அலேக்காக அர்ச்சனாவை இரு கைகளிலும் ஏந்தியவன், அவள் கூறியதைச் செய்ததோடு தன்னோடு அவளை அனைத்து மீண்டும் ஒரு முத்த கதையை எழுதியிருந்தான்.

கணவனின் செயலில் வெட்கம் வர… ‘இது இப்படியே நீண்டால் என்ன செய்வோம்?!’ என ஒரு புறம் ஆவலும், மறுபுறம் வெட்கம் தடுக்க மறுப்பும் ஒருங்கே மனதில் எழ, ‘எப்பொழுது இரண்டு மணியாகும்…? எப்பொழுது இந்த டாஸ்க் முடியும்’ எனக் காத்திருந்தாள்.

படகு பயணத்தில், செல்லும் வழிகளில் இருபுறங்களிலும் அமைந்திருந்த  வீடுகளுக்கு தேவையான, பால், காய்கறிகள், சிலிண்டர் மற்றும் இதர தேவைகளுக்கான அனைத்து பொருட்களும் சிறு சிறு படகுகள் மூலமாக அங்கு விற்பனை செய்யப்படுவதால், அடுத்து வந்த பயணத்தில் அதிகமான சிறு அளவிலான படகுகள் எதிர்ப்பட்டது.

அமரின் ஆவலால் அதிக டாஸ்குகளை செய்தும், அர்ச்சனாவை கட்டாயப்படுத்தி செய்ய வைத்தும் வெற்றியாளனாக ஆகியிருந்தான். அமரின் வெற்றிக்கான எதிர்பார்ப்புகளை, தேவைகளைப் பூர்த்தி செய்யும் முன், ஒரு வழியாகியிருந்தாள் பெண்.

மதிய உணவிற்குப்பின் உண்ட மயக்கத்தினால் உறக்கம் கண்களைத் தழுவ, உறங்க விடாத புதுவிதமான டாஸ்குகளை வைத்து அர்ச்சனாவை விழிக்கச் செய்திருந்தான், அமர்.  வேளைக்கு உணவு, தின்பண்டங்கள் என வர, அர்ச்சனாவிற்கு உண்ணவும் இயலவில்லை.

மாலை ஆறு மணி வரை நீடித்த படகு பயணம் அமரின் இடைவிடாத டாஸ்குகளால் விரைவில் முடிந்திருக்க, மறக்க முடியாத இனிய நினைவுகளை இருவருக்கும் தந்திருந்தது.  இரவு நெருங்க, தன்னை நெருங்க ஆசையுடன் காத்திருக்கும் கணவனை எதிர்கொள்ளத் தயாராகியிருந்தாள், அர்ச்சனா.

புதுவிதமான உணர்வுகளை உணர்த்தியவன், உறங்கவிடாமல் இரவு முழுவதும் உறவாடியிருக்க, அன்று விடியலும் விரைந்து வந்திருந்தது.  காலை ஒன்பது மணியுடன் முடிவடையும் படகு பயணம் ஏக்கத்தைக் கொடுத்து ஏமாற்றியிருந்தது.

கடந்து போன தேனிலவு நாட்களை எண்ணிய அர்ச்சனாவிற்கு இன்றைய தினம் மிகுந்த சோதனை நாளாகத் தோன்றியது.

தேனிலவு நாட்களில், விடியல்வரை கணவனின் தனக்கான தேடல்களை நினைவு கூர்ந்தாள். கனநேரமும் மனைவியை கைவளைவிலிருந்து விடாதவனின் ஒவ்வொரு செயலிலும் தடுமாற்றத்துடன் கூடிய புது முயற்சிகளைப் பார்த்த நினைவு… நினைவில் வந்து போனது. வந்திருந்த கொரியருக்கான பிழை அமரிடம் இல்லை என தனக்குள் தீர்மானித்து, அலுப்பினால் கண்கள் அயர உறங்க ஆரம்பித்தாள், அர்ச்சனா.

***********************

 

பதினோரு மணியளவில் வீட்டிற்கு வந்த கணவனின் ஓய்ந்த தோற்றம் வருத்தத்தைத் தர, அதுவரை உண்ணாமல் காத்திருந்தவள் இருவருக்குமான உணவை எடுத்து வந்தாள், ஜனதா.

தன்னை சுத்தம் செய்து கொண்டு உண்ண வந்தவன்,

“எனக்கு வேல, வர லேட்டாயிருச்சு, அதனால லேட்டா சாப்பிடுறேன், நீ ஏன் இவ்வளவு நேரம் சாப்பிடாம இருக்க?”

“எனக்கு தனியா சாப்பிட்டு பழக்கமில்ல, அதான் நீங்க வர வரை சாப்பிடல”

“பசிக்கலயா?”

“தெரியல”

“அது எப்டி தெரியாம இருக்கும்?”

“அப்ப எனக்கு பசிக்கல போல”

“உடம்புக்கு ஏதும் வந்திர போகுது, நேரத்துக்கு ஒழுங்கா சாப்பிடு”

“…”, பதிலில்லாமல் போன மனைவியைப் பார்த்தவன், அதற்குமேல் பேச்சை வளர்க்காமல் உண்டு எழுந்தான்.

அமரின் அழைப்பைப் பற்றி சந்துருவிடம் சொன்னாள், ஜனதா.  “நானும் மிஸ்டு கால் பார்த்தேன்.  பத்து மணிக்கு மேல போன் போட வேணாம்னு விட்டுட்டேன், அர்ச்சனாவும் பண்ணிருக்கு! என்னனு தெரியல”

“நாளைக்கு காலைல முடிஞ்சா நெய்வேலி வர நம்ம ரெண்டு பேரயும் வந்துட்டு போகச் சொன்னாங்க”

“அப்டியா?”

“ம்… ஆமா”

“அப்போ சீக்கிரமா எழுந்து ரெடியாகியிரு, காலைல போயி உங்கண்ணன பாத்துட்டு, அப்டியே வேலைக்கு நான் அங்கிருந்து போயிக்கிறேன், நீ உங்கம்மா வீட்ல இரு, சாயந்திரமா வந்து கூப்பிட்டுக்கறேன்”, என சந்துருவால் முடிவு செய்யப்பட்டது.

ஜனதாவும் அதை ஆமோதித்திருந்தாள்.

**************************************

 

விடிகாலையில் கிளம்பியவர்களைக் கண்ட சுசீலா, என்ன? ஏது என விசாரிக்க, பதில் சொல்ல வந்த ஜனதாவைப் பார்வையால் அடக்கியவன்,

“அர்ச்சனா போன் பண்ணுச்சு, அதான் போயி பாத்துட்டு அப்டியே வேலைக்கு போறேன்”

“அர்ச்சனா வந்திருச்சா?, எங்கிட்ட ஒன்னும் சொல்லலயே சேகரு, இல்லனா நானும் உங்ககூட வந்திருப்பேனே”

“உங்களுக்கு எதுக்குமா அலச்சல், நான் போயி பாத்துட்டு, நீங்க வர சொன்னதா அர்ச்சனாட்ட சொல்லிட்டு வரேன்”

“ம்… சரி அப்போ கிளம்பிட்டியாக்கும்”, என இழுத்த சுசீலாவிற்கு, “ம்…”, என்ற ஒற்றை வார்த்தைக்கு மேல் பதில் சொல்லாமல், மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தான், சந்துரு.

*****************************************

 

அதிகாலையில் வந்து நிற்கும், மகளையும், மருமகனையும் பார்த்த கிருஷ்ணனுக்கு மகிழ்ச்சி ஒரு புறம்.  மகிழ்வுடன் இருவரையும் வரவேற்று அமரச்செய்தவர், கிச்சனில் இருந்த பெரிய மருமகளிடம் ஜனதா, சந்திரசேகரின் வருகையைப் பற்றிச் சொன்னார். மருமகனுக்கு டீ எடுத்துவரப் பணித்துவிட்டு, மீண்டும் ஹாலுக்கு வந்துவிட்டார்.

ஜனதா, கிச்சனில் இருந்த உமாவிடம் சென்று நலம் விசாரிக்க, சந்துரு ஹாலில் தனியே அமர்ந்திருந்தான்.  சந்துருவின் தனிமையை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட கிருஷ்ணன், அமரின் அழைப்புக்கான காரணத்தை அறிய அமரின் வருகைக்காக காத்திருந்தார்.

வெகுநேரம் கழித்து எழுந்து வந்தவன், ஹாலில் இருந்த சந்துருவைப் பார்த்து நலம் விசாரித்தான், அமர். பிறகு தனக்கும், அர்ச்சனாவிற்குமான கொரியர் பற்றிய உரையாடல்களைப் பற்றிச் சொன்னான்.  அப்போது அங்கு பத்ரியும் வர… கொரியர் பற்றிய செய்தியை அமர் கூற, மற்றவர்கள் அது பற்றி கலந்து ஆலோசித்து இருந்தனர்.

அன்பரசியும் வந்து மருமகனை வரவேற்றுவிட்டு, கிச்சனில் நின்ற மகளிடம் சென்று என்ன விடயம்? எனக் கேட்க, உமாவின் தயவால் கொரியர் பற்றிய செய்தியை அவ்வீட்டு பெண்களும் அறிந்து கொண்டனர்.

தனக்காக காத்துக் கொண்டிருக்கும் குடும்பத்தினரை பற்றி அறியாமல், தேனிலவு பயண அலுப்புடன், நேரம் கடந்து உறங்கியதால் விழிப்பு வராமல் உறங்கிக் கொண்டிருந்தாள், அர்ச்சனா.

 

உலாவின் களைப்பால் உறங்கிய உள்ளத்தில் கனா!

ஊடலும், கூடலும் கனாவில் மாறிவர உறக்கம் கலையுமோ!!!

error: Content is protected !!