KS 6

அத்தியாயம் பதினொன்று

மருத்துவ குழுவின் தீவிர கண்காணிப்பில் இருந்தாள் மேகா, லிலாவதி மருத்துவமனையில்… மருத்துவமனையில் அனுமதித்த இரண்டாம் நாள்!

“மேகா… மேகா…” நூறாவது முறையாக உலுக்கி பார்த்து விட்டு கண்களில் கலக்கத்துடன் அருகில் அமர்ந்து இருந்தாள் அஞ்சலி! சின்ன அசைவு கூட இல்லாமல் பார்வை ஒரே திக்கை பார்க்க அமர்ந்தது அமர்ந்தவாறே இருந்தாள் மேகா! கண்களில் ஒளி இறந்திருக்க முகம் உணர்வை தொலைத்து பார்வை நிலைகுத்தி கற்சிலையாக அமர்ந்து இருந்தவளை பார்க்கையில் அஞ்சலிக்கு உள்ளுக்குள் வேதனை பொங்கியது! ஒரு நாள் பழக்கம் தான்… ஆனாலும் ஆண்டாண்டு காலம் பழகிய உறவு தராத வலி!

சசியின் தற்கொலையை பார்த்ததில் அதீத அதிர்ச்சி அடைந்தாலும் உண்மை தெரியாத போலீசாரும் மற்றவர்களும் இதை வெறும் தற்கொலை வழக்காக பதிவு செய்து முடித்து விட்டிருந்தனர்! உண்மை தெரிந்த ஒரே ஆள் மேகா… ஆனால் அவளோ தன்னிலை மறந்து மருத்துமனையில்… கௌதமுக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை… தன்னிடம் சரண்டர் ஆவதாக தானே கூறினான்… பின்னர் ஏன் தற்கொலை செய்து கொண்டான் என்று குழம்பினான்… ஆனாலும் சசி அவனிடம் கடைசியாக கூறி விட்டு வைத்த வார்த்தைகள் நினைவுக்கு வந்து இம்சை படுத்தியது!

“உன்னை நம்பி போறேன் கெளதம்…” என்ன மாதிரியான வார்த்தைகள் இவை… அணைகிற விளக்கிற்கு தெரியுமா அது அணைய போவது? என்னை நம்பி போனாயா சசி? என் மேல் நீ வைத்த நம்பிக்கையை என்ன சொல்வது? உன்னுடைய நம்பிக்கையை காப்பாற்றுவேன் சசி… ஆனால் என்னால் முடியுமா? முடியவில்லை என்றாலும் இந்த பிறவியில் எனக்கு மேகா மட்டும் தான்! அர்ஜுனுடன் சேர்ந்து மேகாவுக்கு சிகிச்சை அளிக்கும் தலைமை மருத்துவரை பார்க்க போய் கொண்டிருந்தான் கெளதம்! இருவரையும் பார்த்ததும் அமர சொல்லி விட்டு கேஸ் பைலை எடுத்து பார்வை இட்டார்! தன் அருகில் இருந்த உதவியாளரிடம்

“what about the vitals?”

“normal doctor… but not responding…”

“what about MRI?”

“MRI with 1. 5 tesla shows a severe stenosis in the left MCA doctor… may be due to shock… cerebral angiogram was done… and this showed the narrowed left M1 MCA… TCD done doctor… temporal windows were poor and hence the MCA could not be evaluated… posterior circulation vessels were normal… and all other studies normal doctor…”

“ok… continue with the same medicines Athul…”

தமிழரான அந்த மருத்துவர்

“கெளதம்… கொஞ்சம் சிரமமான நிலைமை தான்… stenosisன்னு சொல்லுவாங்க… அதாவது மூளைல போற ரத்தக்குழாய் திடீர்ன்னு ஏற்பட்ட அதிர்ச்சிய தாங்காம நேரா ஆய்டறது… அதாவது ஸ்ட்ரோக்குக்கு முந்தின நிலைமை… கொஞ்ச நேரம் கடந்து இருந்தாலும் ஸ்ட்ரோக் வந்திருக்கும்…”

சொல்ல சொல்ல அதிர்ச்சியில் உறைந்து போய் கேட்டு கொண்டிருந்தனர் இருவரும்!

“அப்படீன்னா மே… மேகா டாக்டர்?”

கெளதம் திக்கி திணறி கேட்க

“இப்போதைக்கு அப்சர்வேஷன்ல இருக்கட்டும் கெளதம்… ட்ரீட்மென்ட் போகட்டும்… ஆனா இப்போதைக்கு இன்னொரு அதிர்ச்சிய தாங்க முடியாது அவங்களுக்கு… சப்போஸ் அவங்களுக்கு பிடிக்காத ஏதாவது நடந்து அதனால அவங்க டென்ஷன் ஆனா ஒண்ணுமே சொல்ல முடியாது… ஸ்ட்ரோக் எப்போ வேணும்னாலும் வந்துரும்…”

“அப்படீன்னா ஸ்டென்டிங் பண்ண தேவை இருக்குமா டாக்டர்?” என்று அர்ஜுன் கேட்க

“இல்ல அர்ஜுன்… அந்த அளவு நிலைமை இல்ல… இப்போதைக்கு மெடிசின்ஸ்ல கொண்டு வர பார்க்கலாம்… அப்படி முடியலைன்னா… வி வில் கோ பார் ஸ்டென்டிங்… இப்போதைக்கு anticlotting மெடிசின்ஸ் தான் குடுக்கறோம்… இப்போ ஸ்ட்ரோக் வர்றத தடுத்தா போதும்… ஆனா காயம் மட்டும் பட கூடாது… ரத்தம் லாஸ் ஆச்சுன்னா ஆபத்துதான்”

மனம் சோர்ந்து போய் அறைக்கு திரும்பியவர்களுக்கு மேகாவை பார்க்க இன்னமும் துக்கமாக இருந்தத்து… ஒரு சிறு அசைவு… ப்ச்… எதுவுமே இல்லாமல் உறங்கி கொண்டிருந்தாள் இருந்தாள்… போட்ட ஊசியின் விளைவால்…

“ஏதாவது டெவலப்மென்ட் தெரிஞ்சுதா அஞ்சு?” மனம் கனக்க கேட்டான் கெளதம்…

“இல்லண்ணா… ஒண்ணுமே தெரியல…”

“கெளதம்… மேகா அப்பாகிட்ட சொல்லிட்டியா?” அர்ஜுன் கேட்க

“ம்ம்ம்… நேத்து இன்கம் டாக்ஸ்ல மாட்டிட்டு இருந்தார் அர்ஜுன்… விஷயத்த சொல்லவும் போன்லையே கதறிட்டார்… இப்போ கிளம்பி வந்துட்டு இருக்கார் போல…”

“ப்ச்… அவர் பாவம் என்ன பண்ணுவார்… பிரச்சனை எல்லா பக்கமும் சூழ்ந்து இருந்தா… அவங்க அப்பா வந்தவுடனே அவர் கிட்ட ஒப்படைக்கிற வரை இத பத்தி மேகா முன்னாடி பேச வேணாம் கெளதம்… கொஞ்சம் ப்ரெஷா எதாச்சும் பேசி அவங்க மைன்ட்ல வேற தாட்ஸ பதிய வைக்கணும்ப்பா…” என்று கௌதமிடம் கிசுகிசுப்பாக சொன்னான்!

“ஆமாம் அர்ஜுன்… ரைட்தான்…”

பெருமூச்சு ஒன்றை விட்டு விட்டு கெளதம் முதுகை தட்டி கொடுத்து விட்டு

“கெளதம்… உன் தங்கச்சி இங்க இருந்து பார்த்துகட்டும்… நீ இங்க இருக்கியா இல்ல என் கூட வரியா… மேகாவுக்கு தேவையான ஐடம்ஸ் வாங்கிட்டு வந்துடலாம்…”

அஞ்சலியின் நினைவில் கலங்கி அமர்ந்து இருந்தவள் அர்ஜுன் கூறியதை கேட்டு தலையை உயர்த்தி பார்த்தாள்…” உன் தங்கச்சியா?” … ஏன் அஞ்சு என்னாச்சு? அவளது பார்வையில் கேள்வி தொக்கி நிற்க

“இல்ல அர்ஜுன்… நான் மேகா கூட இருக்கேன்… நீ அஞ்சுவ கூட்டிட்டு போய் வாங்கிட்டு வா… எமர்ஜென்சின்னா நான் இருக்கணும்…”

“இல்ல… அவ வேணாம்… நானே முடிஞ்ச அளவு பார்த்து வாங்கிட்டு வரேன்…”

அஞ்சு எரிச்சலாக கெளதமை பார்த்து

“அண்ணா… ஹாஸ்பிடல் காம்ப்ளெக்ஸ்லையே டிரஸ் மத்த எல்லாம் கிடைக்கும்… நான் இங்கயே வாங்கிடறேன்… உன் பிரெண்டுக்கு வேலை இருக்கும்… அதை போய் பார்க்க சொல்லு…”

“செல்லம்… ரெண்டு பேரும் ஆரம்பிக்காதீங்க… அப்படி சண்டை போடறதுன்னா உங்க ஆபீஸ்ல போய் சண்டை போடுங்க…”

“ஆமா இவ கூட சண்டை போடத்தான் காத்துட்டு இருக்காங்க…” என்று முனகி கொண்டு அவன் திரும்ப… பார்த்து முறைத்தாள் அஞ்சலி…

மூவருமாக பேசி கொண்டு இருக்க அதே நேரத்தில் அவசரம் அவசரமாக உள்ளே நுழைந்தார் கணபதியும் அவரது மனைவியும்…

“ஐயோ மேகி…” பிருந்தா அழுது கொண்டே படுக்கைக்கு அருகில் போக

“ஆன்ட்டி அழாதீங்க… இங்க… நர்ஸ் பார்த்தா திட்டுவாங்க…” அஞ்சலி அவசரமாக கூறினாள்!

கெளதம் கையை பிடித்து கொண்ட கணபதிக்கு வார்த்தைகள் வராமல் இருந்தது… கண்களில் நீர் மட்டும்…

“உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல தம்பி… எங்க உயிரை மீட்டு குடுத்து இருக்கீங்க…” என்று கையை பிடித்து கொண்டு அழ…

“சார்… எமோஷன் ஆகாதீங்க… இப்போதைக்கு மேகா தான் முக்கியம்…”

“இல்லப்பா… என் பொண்ண இனிமே பார்போமான்னு நினைச்சேன்… ஆனா இப்போ பார்க்கறேன்னா நீங்க தான் தம்பி காரணம்…” கௌதமிடம் கண்களில் உயிரை தேக்கி கூற

“இல்ல சார்… என்னை விட அர்ஜுன் தான் காரணம்… அவன் ஹெல்ப் இல்லைன்னா சான்சே இல்ல சார்…” என்று கூறவும்

அப்போதுதான் கவனித்தார் அர்ஜுனை…

“தம்பி… நீங்க… விக்டரி…” என்று தடுமாற

“ஆமா சார்… அர்ஜுன் விக்டரி க்ரூப்ஸ் வானமாமலை சாரோட பையன்…” என்று கெளதம் அறிமுக படுத்தி வைக்க

வியந்து போய் அர்ஜுனிடம் கை கொடுத்தார்… அர்ஜுனும் புன்னகைத்து கொண்டே

“ப்ளீஸ் டு மீட் யு… எல்லாம் கெளதம்காக சார்…” என்று கூறவும் கணபதிக்கு ஒரு ஓரமாக எதுவோ புரிவது போல இருந்தது…

“பெரியவங்க நீங்க எல்லாம்… ரொம்ப சந்தோஷம் தம்பி…” என்று கூறுவதை பெருமையுடன் பார்த்து கொண்டிருந்தாள் அஞ்சலி!

சப்தம் கேட்டு விழித்தாள் மேகா…

முதலில் அவள் கண்களில் பட்டது கௌதமும் அர்ஜுனும்… வெறுமையாய் பார்வையை நகர்தியவள் கண்களில் பட்டவர் கணபதி… உடலில் ஒரு நடுக்கம்… கண்களில் கசப்பு வெறுப்பு என்று அனைத்தும் ஒன்று சேர பார்த்தாள்!

“மேகா…” வியப்பில் கூவினாள் அஞ்சலி!

அனைவரும் மகிழ்ச்சியாக அவள் அருகே செல்ல… மேகாவின் உடல் நடுக்கம் அதிகமாக… கணபதியை வெறுப்பாக பார்த்து நடுங்கி கொண்டே

“அந்த ஆள போக சொல்லுங்க…” திக்கி திணறி கூறினாள்…

“யாரம்மா…” கெளதம் பரிவாக கேட்க

“கெளதம்… அந்த ஆள்…” என்று கணபதியை சுட்டி காட்டி

“போக சொல்லுங்க…” நடுங்கி கொண்டே கூறினாள்

“மேகா… உன் அப்பாம்மா…” என்று நேயமாக கூற

“அந்த ஆள என் அப்பான்னு சொல்ல மாட்டேன்… இங்க இருந்து போக சொல்லுங்க…” அடி தொண்டையில் இருந்து கத்த

சப்தம் கேட்டு வந்த மருத்துவர்கள்

“சார்… அவங்களை டென்ஷன் பண்ணாதீங்க…” என்று கோபமாக கூறி விட்டு செல்லவும் கணபதி ஆற்ற முடியாத துயரத்தோடு வெளியே போனார்… கணபதி பலருக்கு கெட்டவர் தான்… தன் மகளின் மனதுயரத்தினை அறியாதவர் தான் ஆனாலும் அவரது பாசத்தை குறைத்து மதிப்பிட முடியாது… மிகுந்த பாசம் வைத்த தன் மகள் இப்படி சொன்னதை விட அவருக்கு வேறென்ன தண்டனை வேண்டும்?

மேகாவின் உடல் நடுங்கி கொண்டே இருந்தது… கண்களில் இருந்து வழிய ஆரம்பித்த நீர் நிற்காமல் வடிந்து கொண்டே இருக்க கெளதம் அவளை வருடி கொடுத்து

“மேகா… மறந்துடு மேகா… உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம்… அந்த எபிசொட் முழுக்க மறந்துடு…”

“ஆமா மேகா… என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியலடா… ஆனா ஏதுவா இருந்தாலும் மனச மாத்து…” என்று அஞ்சலியும் கூற

கண்களில் வலியோடு வார்த்தைகளில் வெஞ்சினத்தோடு

“யார மறக்க சொல்ற அஞ்சலி? என் சசியையா? அதுக்கு நான் செத்தே போயிருவேன்டா…” என்று சொல்லி விட்டு கதற ஆரம்பிக்க அவளை வெறுமையாய் பார்த்தான் கெளதம்!

அவள் அழுது முடிக்கும் வரை யாரும் அவளை தடுக்கவில்லை… அசைவில்லாமல் இருந்தவள் இந்த மட்டிலும் அழுகிறாளே என்று ஒரு நிம்மதி… பல நேரங்களில் கண்ணீரும் நம்மை காக்கின்றன… அழாமல் இரும்பு நெஞ்சத்தோடு இருப்பவர் நிறைய பேர் மாரடைப்பால் தான் இறந்தும் இருக்கின்றனர்! அழுது தன் துயரை தீர்ப்பது என்பது உளவியல் ரீதியான ஒரு வடிகால் துயரத்தில் இருந்து தப்பிக்க… அது போல தான் சசி இறந்தவுடன் மேகா அழுது இருந்தால் அவளது துயர் ஆறி இருக்குமோ என்னவோ…

மேகா அவளது தாய் பிருந்தாவை பார்த்து

“தயவு செஞ்சு நீயும் போய்டு… எனக்கு தாங்க முடில…” என்று நடுக்கம் மாறாமல் கூற

“டேய்… நான் உன் அம்மா டா…” அதிர்த்து கூறினார்

“இது உனக்கு இப்போ தான் ஞாபகத்துக்கு வருதா? ஆனா உன்னை பார்க்கும் போது நீ கணபதியோட பொண்டாட்டி அப்படீங்கறதுதான் எனக்கு நினைவுக்கு வருது…”

“கண்ணா… தயவு செஞ்சு புரிஞ்சுக்கோம்மா… உன்னை பார்த்துக்க ஆள் வேணும்டா…”

“என்னை பார்த்துக்க யாரும் வேணாம்… அப்படி நீ இங்க இருந்தா… நான் இங்க இருக்க மாட்டேன்… இந்த ஜன்னல்ல இருந்து குதிச்சு கீழே விழுந்து செத்து போய்டுவேன்… போய்டு…” கத்தினாள் மேகா…

“மேகி… ப்ளீஸ் டா…”

“போய்டு…” அவளது அடிகுரல் சீற்றம் எதிரொலித்தது!

மேகாவின் தாய் என்ன செய்வது என்பது புரியாமல் அவர்களை பார்க்க

“மேகா… அம்மா ப்பா… ப்ளீஸ்…” முடிந்த அளவு பாந்தமாக கூறினான் கெளதம்…

“இப்போ போறியா இல்லையா?” என்று கோபமாக கேட்டு விட்டு அருகில் இருந்த ஊசியை எடுத்து ஆழமாக தன் கையை கிழித்தாள் மேகா… ரத்தம் பீறிட்டு கொண்டு வந்தது…

“ஐயோ… மேகி… என்னடா பண்ணிட்ட…” என்று பதறி கையை பிடிக்க வந்த பிருந்தாவை

“இப்போ போறியா இல்லையா…” அடி குரலில் கர்ஜித்தாள்!

அவளது கையில் வழிந்த ரத்தத்தை பார்த்தவர்கள் பதற, கெளதம் கையை பற்றி கொண்டு அருகில் இருந்த பஞ்சை எடுத்து ரத்தத்தை அழுத்தி பிடித்தான்! அஞ்சலியும் அவனுக்கு உதவ, அர்ஜுன் அவரை வெளியே அழைத்து போய்

“அம்மா… கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருக்காங்க… கொஞ்சம் பொறுங்க… இப்போ அவங்களை டென்ஷன் பண்றது நல்லது இல்ல… மூளைக்கு போற ரத்த குழாய்ல கொஞ்சம் ப்ராப்ளம் இருக்கு… டென்ஷன் ஆனா ஸ்ட்ரோக் வந்துரும்ன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க…” என்று கூறவும்

“ஐயோ மேகி…” என்று கணபதியும் பிருந்தாவும் பதறினர்…

“நாங்க பார்த்துக்கறோம்… பயப்படாதீங்க… நீங்க போய் என் வீட்ல இருங்க… நாங்க பேசி என்னன்னு பார்த்து கண்டிப்பா சமாதானபடுத்தி வைக்கறோம் சார்… டோன்ட் ஒரி…” என்று பொறுப்பாக கூறினான் கெளதம்!

“எல்லாம் நான் செஞ்ச பாவம் தம்பி… என் பொண்ணை இப்படி ஆளாக்கி விட்டது…” என்று முகத்தை மூடி கொண்டு கதற

“சார் கண்ட்ரோல் பண்ணிகோங்க…” என்று கூறி விட்டு கௌஷிக்கை அழைத்தான் செல்பேசி மூலமாக

“கௌஷிக்… என்னோட கெஸ்ட் ரெண்டு பேர் வராங்க… கம்பெனி கெஸ்ட் ஹவுஸ கொஞ்சம் கிளீன் பண்ண சொல்லிடு…”

பின்னர் உள்ளே சென்றவன்

“மேகா… நீ எதை பத்தியும் கவலை படாதம்மா… நாங்க இருக்கோம்… பாரு இந்த அறுந்த வால உன் கூடவே வெச்சுக்கோ… முதல்ல ட்ரீட்மென்ட் முடியட்டும்… அப்புறம் பேசிக்கலாம்மா… சரியா…” மேகாவிடம் கூறியவன் கௌதமிடம் திரும்பி…

“சரிடா… நான் கிளம்பறேன்… நீ பார்த்துக்கோ… உன் தங்கச்சிய வர சொல்லு… தேவையானத வாங்கி குடுத்து விடறேன்…”

அந்த நிலைமையிலும் அஞ்சலிக்கு கோபம் வந்தது… ஒன்றும் பேசாமல் கிளம்பினாள்…

எல்லோரும் சென்ற பிறகு… விட்டத்தையே வெறித்து பார்த்து கொண்டிருந்த மேகாவை,

“மேகா… என்ன நினைக்கிறப்பா… எதுவா இருந்தாலும் சொல்லும்மா…”

கண்களில் நீர் பெருக்கெடுக்க ஒன்றும் பேசாமல் அமர்ந்து இருந்தாள்! பக்கத்தில் போன கெளதம் அவளது தலையை ஆதூரமாக தடவி கொடுக்க அதுவரை மெளனமாக அழுதவள் வெடித்து கதறினாள்!

“ஹேய்… மேகா… இங்க பாரு… மேகா…” அவளது தலையை தன் மார்போடு அணைத்து முதுகை தடவி குடுத்தான்! அதில் ஒரு சின்ன கல்மிஷமோ களங்கமோ இல்லாத தூய அன்பே தெரிந்தது…

“புரியுதும்மா… உன்னோட உணர்வு… உன்னை நான் கன்ட்ரோல் பண்ண விரும்பல… எவ்ளோ வேணுமோ அழுது தீர்த்துடு ஆனா போனவன் திரும்ப வர மாட்டான்ம்மா…”

கதறி கொண்டே கூறினாள்

“ஆமா கெளதம்… போனவர் திரும்ப வர மாட்டார்… ஆனா அவர் போக காரணமே நானா ஆகிட்டேனே…” என்று கூறி விடு மீண்டும் கதற

“எவ்வளவோ சொன்னாரே… சரண்டர் ஆகிடறேன்னு… அதுக்கு விட்டுருந்தா அவர் முகத்தையாச்சும் பார்த்துட்டு இருந்து இருப்பேன்… பாவி கெளதம் நான்… பாவி… நானாத்தான் வந்தேன்னு சொல்ல வந்தேன் போலீஸ் கிட்ட… அதனால் தான் அவர்… ஐயோ…” அவளது கதறலை பார்த்த கௌதமுக்கு மனம் வலித்தது… எந்த அளவு உன்னதமான காதல்… சசிக்கு குடுத்து வைக்கவில்லையே… ஆனால் ஏன் இந்த திடீர் முடிவு எடுத்தான் என்பது அவனுக்கு புரியவில்லை…

“ஓகேம்மா… புரியுது… புரியுது…” அவளை தன் மார்போடு அணைத்தவன் ஆறுதல் கூற முடியாமல் கண்கலங்கி நின்றான்… தொண்டை எல்லாம் வறண்டு இருக்குமே… சுற்றிலும் பார்த்தவன் அருகில் தண்ணீர் பாட்டில் இல்லாததை கவனித்து…

“இரும்மா… கொஞ்சம் தண்ணீர் வாங்கிட்டு வந்துடறேன்…” என்று கூறி விட்டு வெளியே போய் அவசரமாக தண்ணீர் எடுத்து கொண்டு விரைந்தான்… அங்கே அவன் கண்ட காட்சி…

மேகா தனது கை நரம்பை அருகில் இருந்த பழம் வெட்டும் கத்தியால் வெகு ஆழமாக கிழித்து விட்டு ரத்தம் கொட்ட கொட்ட வெறுமையாக வெறித்தபடி அமர்ந்து இருந்தாள்… முதலில் அறுத்த போதே நிற்காத ரத்தம் இப்போது படுக்கையை நனைத்து கொண்டிருந்தது…

அத்தியாயம் 13

அதிர்ந்து போய் இருந்தான் கெளதம்… தண்ணீரை எடுத்து கொண்டு தான் உள்ளே வந்து பார்த்த போது கண்ட காட்சி அதிர வைத்தது… அதற்க்கு முன்னர் தான் டாக்டர் சொல்லி இருந்தார்… ரத்த இழப்பு மட்டும் தான் இந்த நேரத்தில் ஆபத்தாக முடியும் என்று… அப்படி இருக்கும் போது அவள் தன் கை நரம்பை அறுத்து விட்டு விட்டு… கடவுளே… இதென்ன சோதனை… அவசரமாக நர்ஸிடம் சொல்லி விட்டு அறையில் இருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்த ஐஸ் பேக்கை எடுத்து அவசரமாக அவளது கையில் வைத்து அழுத்தினான்… ரத்த போக்கு கொஞ்சம் மட்டுபட்டாலும் பரவாயில்லையே…

அவளை எரிச்சலாக பார்த்து

“ஏன் மேகா இப்படி பண்ற? உனக்கே நல்லா இருக்கா?” என்று அவன் கேட்க அதை பற்றிய உணர்வே இல்லாமல் தரையை வெறுமையாக பார்த்தபடி அமர்ந்து இருந்தாள் மேகா… நர்ஸ் வந்து அவசரமாக பார்த்து விட்டு டாக்டரை அழைக்க, அவர் வந்து தையல் போட்டு கட்டு கட்டிவிட்டு சென்றார்… எச்சரிக்கை செய்து…

அதன் பின்னர் அந்த பக்கம் இந்த பக்கம் என்று அசையாமல் அவளை பார்ப்பதே வேலையானது கெளதமிற்கு… என்ன பேசினாலும் பதில் பேசாமல் விட்டத்தையே பார்த்து கொண்டு இருப்பவளிடம் என்ன பேச?

அர்ஜுனோடு சென்று மேகாவின் பெற்றோரை வீட்டில் விட்டு விட்டு அவளுக்கு தேவையானவற்றை வாங்கி கொண்டு மருத்துமனைக்கு வந்தவளுக்கு மேகாவின் இந்த தற்கொலை முயற்சி பெரும் அதிர்ச்சியை தந்தது! அவள் நல்ல மனநிலையில் இருந்தாலாவது பரவாயில்லை… அவளோ உடலும் சரி இல்லாமல் மனமும் சரி இல்லாமல்… கடவுளே… எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு நிலை வர கூடாது… !

கெளதம் சைகை செய்ய, ஆதூரமாக மேகா பக்கத்தில் அமர்ந்து தலையை கோதி விட்டவள்… , அவளது தற்கொலை முயற்சியை பற்றி பேசாமல்

“மேகா… கொஞ்ச நேரம் வெளிய வாக் போயிட்டு வரலாம்… வர்றியாடா?” என்று கேட்க அவளை பார்த்து லேசாக தலை அசைத்தாள் மேகா…

நர்ஸிடம் சொல்லிவிட்டு மூவருமாக மருத்துவமனை பூங்கா பக்கம் சென்றவர்கள் அங்கேயே சிறிது நேரம் நடந்தனர்… சலசலவென்று கௌதமிடம் பேசிக்கொண்டே வந்த அஞ்சலியின் அருகாமை மேகாவுக்கு உண்மையிலேயே தேவைப்பட்டது… கௌதமின் அருகாமை ஏதோ ஒரு அமைதியை தந்தது… அவளை பற்றி, அவளது கல்லூரி அனுபவங்களை பற்றி பேசி கொண்டே வந்த போது மனம் கொஞ்சம் துயரத்தில் இருந்து விடுபட்ட உணர்வில் இருந்தது…

“எங்க கிளாஸ்ல யாருக்காச்சும் போர் அடிச்சா உடனே எனக்கு லெட்டர் பாஸ் பண்ணிடுவாங்க மேகா… தெரியுமா…”

“எதுக்கு…” மேகா குழப்பமாக

“வேற எதுக்கு… இந்த மகராசி தான் வர்ற ப்ரோபசர்ஸ கேள்வி கேட்டே துரத்துவா… அதுக்குதான்…” என்று கெளதம் வார

“அண்ணா… அது ஒரு கலை… உனக்கெல்லாம் வரவே வராது… புத்திசாலியா இருந்தா தான் கேள்வி கேக்க முடியும்… ஹிஹி நான் புத்திசாலின்னு எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கு…”

“ஆமா எலிக்குட்டி… வரவே வராதுதான்… அப்புறம் அது என்ன புத்திசாலியா? யார பத்தி சொல்ற? அதுக்கும் உனக்கும் சம்பந்தமே இல்லையேடா குட்டி…”

“உன் பூனை கண்ணுக்கு தான் தெரியல… நீ அகமதாபாத் போய்ட்ட இல்ல… அதான் நம்ம அருமை பெருமை எல்லாம் உனக்கு புரியல…”

“உன் பெருமை எல்லாம் நல்லா தெரியுமே… அந்த பையன் கார்த்திக்க துரத்தி விட்ட பாரு அத யாராச்சும் மறக்க முடியுமா? அதுவும் எப்படின்னு தெரியுமா மேகா… ஹேய் சொல்லட்டா எலிக்குட்டி?”

“அண்ணா… வேணாம்… அப்புறம் உன் கதைய நான் ஓபன் பண்ணுவேன்…”

“என் கதை போய் என்ன இருக்கு… இந்த கதைய சொல்றேன் கேளு மேகா… ஒரு சுபயோக சுபதினத்துல… கார்த்திக்… அதாவது சித்தப்பா இருக்கற அப்பார்ட்மென்ட்ல இருக்கற கார்னர் பிளாட்ல இருக்கற பையன் இந்த பிசாசுகிட்ட வந்து ப்ரோபோஸ் பண்ணான்… அதுக்கு இவ என்ன சொல்லணும்? எஸ் இல்லைன்னா நோ தானே… எலி என்ன பண்ணுச்சு தெரியுமா…” என்று சொல்லி விட்டு இருவரையும் பார்க்க

“ம்ம்ம்… சொல்லுங்க கெளதம்…” என்று மேகா கேட்கவும் கெளதம் சிரித்து கொண்டே அஞ்சலியை பார்க்க…

“கெளதம்ம்ம்ம்ம்… வேணா…”

“நீ பேர சொன்னதுக்காகவே சொல்லுவேன்… நீ கேளு மேகா… ஒரு பெரிய குழிய வெட்டி அதுல களிமண்ண போட்டு நிரப்பி தண்ணிய விட்டு சொத சொதன்னு ஆழமா சேறு குழம் மாதிரி பண்ணி அதுக்கு மேல புல்லெல்லாம் போட்டு ரெடி பண்ணி… அவன பிளான் பண்ணி இந்த எலி அண்ட் கோ தள்ளி விட்ருச்சுங்க…”

“ஐயோ… எலி அண்ட் கோன்னா என்ன?”

“வேற யாரு… இந்த எலியோட கூட்டு களவானிங்க… ஷாஷு, மிக்கி, ஷஹீத், பிராணா தான்… எல்லாம் இந்த வானரத்தோட சேர்ந்த வானர படை… ரொம்ப டேஞ்சர் மேகா… ரொம்பாஆஆஆஆஆ டேஞ்சர்…”

அதை கேட்டு மேகா சிரிக்க இருவரும் திருப்தியாக பார்த்து கொண்டார்கள்… கெளதம் மனதில் நிம்மதி படர்ந்தது… அஞ்சலியின் முகத்தில் நிம்மதி தெரிந்தது… இனிமேல் எப்படியும் மாற்றி விடலாம் என்ற நம்பிக்கை வந்தது…

கால் வலிக்கவே அங்கே பூங்காவில் அமர்ந்த போது அருகே ஒரு அழகான குழந்தை… மிகவும் அழகான குழந்தை… விளையாடி கொண்டிருக்க அதை அழைத்த அஞ்சலி கை வளைவில் நிறுத்தி கொண்டு கொஞ்சி கொஞ்சி அதனிடம் விளையாடி கொண்டிருந்தாள்… அதை பார்த்த மேகாவும் தன் கூட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து அந்த குழந்தையிடம் பேச ஆரம்பித்தாள்! நேரம் போக போக மேகா அந்த குழந்தையிடம் பேசி சிரிக்குமளவு கொண்டு வந்து விட்டாள் அஞ்சலி… மனம் லேசானது…

அழகான ஆங்கிலத்தில் அந்த குழந்தை பேச அதை கட்டிக்கொண்டு மேகா பேச அந்த காட்சி கெளதம் மனதில் கல்வெட்டாக பதிந்தது… எப்படியும் இவள் மனதை மாற்றி விடலாம் என்கிற தைர்யம் வந்தது!

******

வாக்கிங் போய் விட்டு அறைக்கு வந்த மூவருக்குமே மனம் லேசாக இருந்தது! சோர்வு கொஞ்சம் தாக்க மேகா படுத்து கொள்ள மருத்துவர் வந்து பரிசோதித்தார்!

“ம்ம்ம்… பரவால்லையே… நல்ல இம்ப்ரூவ்மெண்ட்… இப்படியே மெயின்டைன் பண்ணுங்க…” வியப்பாக கூறி விட்டு செல்ல கெளதம் மனதில் நிம்மதி பிறந்தது… சும்மாவா… இரண்டு நாட்களாக அவன் மனதில் அடைந்த துன்பம்… கடவுளே எப்படியாவது மேகாவின் மனதை மாற்று…

அர்ஜுனுக்கு போன் செய்து விடயத்தை கூற அவனுக்கும் மகிழ்ச்சியே!

“நான் வேணும்னா வரட்டுமா கெளதம் இப்போ?”

“இல்லடா… நைட் ஏழு மணி ஆகிட்டது… காலைல பார்க்கலாம் ஓகே வா…”

“ம்ம்ம் சரிடா… சரி என் தங்கச்சிய நல்லா பார்த்துக்கோ…”

“ஹஹா உன் தங்கச்சியா…”

“பின்ன… நீ லவ் பண்றீன்னா எனக்கு தங்கச்சிதானே…”

“இத வெச்சு நீ என்ன சொல்ல வர மகராசா?”

“அதாவது உன் தங்கச்சிய நான் லவ் பண்ண உன் கிட்ட பர்மிஷன் கேக்க மாட்டேன்னு அர்த்தம் தான் மந்திரிகுமாரா…”

“நீ இன்னும் அஞ்சலிகிட்ட அடி வாங்கலைன்னு நினைக்கிறேன்… அதான் இந்த தைர்யம்…”

“அந்த அழுமூஞ்சி என்னைய அடிக்குமா? ஹஹஹா…”

“சரி சரி… என்னமோ நடத்து மகனே நடத்து… பேரு ரிப்பேர் ஆகிடாம நடத்து…”

“ஓகே டா மச்சான்…”

“சரி டா மாப்பிள…”

என்று கூறவும் சிரித்தவாறே அர்ஜுன் போனை வைத்தான்… பக்கத்தில் அமர்ந்து இருந்த கணபதி வியப்பாக பார்த்தார்!

“என்ன சார்… இப்படி பார்க்கறீங்க?”

“இல்ல… இல்ல…” தடுமாறினார்!

“கெளதம் மேகாவ லவ் பன்றானான்னு கேக்கறீங்க… கரெக்டா?”

“ம்ம்ம்… ஆமா தம்பி…”

“ம்ம்ம் ஆமா சார்… லவ் பண்றான்… ஆனா உங்க பொண்ணுக்கு இன்னும் தெரியாது… அது வேற மனநிலைல இருக்கு… இப்போதைக்கு சொல்லல… ஏங்க எங்க கௌதம்க்கு உங்க மேகாவ குடுக்க மாட்டீங்களா?”

“ஐயோ என்ன தம்பி இப்படி சொல்றீங்க… எங்க உயிரை மீட்டு குடுத்த மனுஷன் அந்த தம்பி… நீங்களும் கூடத்தான்… நான் மத்தவங்களுக்கு எப்படி வேணும்னாலும் இருக்கலாம்… ஆனா என் பொண்ணுக்கு அப்பா… என் தங்கம் நல்லா இருந்தா போதும்… அவளுக்காக தானே இப்படி ஓடி ஓடி பணம் சேர்க்கறது…”

“அப்போ எந்த அபிப்ராய பேதமும் இல்ல இல்லையா?”

“கண்டிப்பா இல்ல தம்பி… எவ்வளவு பெரியவங்க நீங்க… நீங்க சொல்லும் போது நான் என்ன சொல்லுவேன்…”

“ஹய்யோ அப்படி எல்லாம் சொல்லாதீங்க… விட்டா என்னை கிழவனா ஆக்கிருவீங்க போல இருக்கே…” என்று சொல்லி சிரிக்க

“தம்பி… தங்கத்துக்கு எப்படி இருக்காம்? ” என்று தயங்கி கொண்டே கேட்க

“ம்ம்ம் நல்ல முன்னேற்றம் சார்… இப்போ மேகா நல்லா பேசராப்ல… டாக்டரும் நல்ல ஒப்பீனியன் சொல்லிட்டு போயிருக்காங்க…”

“தம்பி செலவெல்லாம் யார் குடுக்கறாங்க… நான் குடுத்துடறேன்ப்பா…”

“அதை பத்தி இப்போ நீங்க எதுக்கு சார் கவலைப்படறீங்க… லிலாவதில சேர்த்தது மட்டும் தான் நான்… இப்போ உங்க மாப்ள சார் தான் பார்க்கராப்ல… என்னை குடுக்க விடல…”

“கடவுளே… அந்த தம்பிக்கு ஏன்ப்பா வீண் செலவு?”

“சார்… விடுங்க… எல்லாம் அவன் பார்த்துக்குவான்…”

“தம்பி நாங்க போய் கொஞ்சம் பாப்பாவ பார்த்துட்டு வந்தரலாமா? இப்போ தான் கொஞ்சம் நல்லா இருக்குன்னு சொன்னியலே…” கண்களில் எதிர்பார்ப்புடனும் மனதில் ஆற்றாமையுடனும் கேட்க

“சார்… இப்போ வேணாம்… இன்னும் கொஞ்சம் ஸ்டபிலைஸ் ஆகட்டும்… ரெண்டு நாள் போகட்டும்…”

“இல்லப்பா… மனசே சரி இல்ல… பாப்பாவ ஒரு தட பார்த்துட்டா போதும்… தகவல் ஒன்னு வந்து இருக்கு… அந்த பசங்க தீயில இறந்து போன விஷயத்துல என்னை அரஸ்ட் பண்ண போறதா… அதுக்கு முன்னால ஒரு தடவை தங்கத்த பார்த்துட்டு போயிடறேன்…”

முகத்தில் ஒரு உணர்வும் இல்லாமல் கணபதியை பார்த்தான் அர்ஜுன்… மனதில் என்ன நினைத்தானோ…

“சரி சார்… வாங்க… ஆனா விசிட்டர் டைம் முடிஞ்சுதுன்னா உள்ள விட மாட்டாங்க… எதுக்கும் ட்ரை பண்ணி பார்க்கலாம்…”

அவனை பொறுத்த வரை மேகாவை கடத்தி வைத்து கணபதியை மிரட்டியவன் சசி… கணபதியை சூழ்ந்து உள்ள இப்போதைய பிரச்சனைகளின் ஆணிவேரே கணபதிதான் என்பது தெரியாது… கௌதமும் தன்னிடம் சசி கூறியதை அர்ஜுனிடம் இன்னும் கூறவில்லை… அதனால் பிரச்சனையின் ஆழம் தெரியாத அர்ஜுன், அவனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்…

*****

பக்கத்து அறையில் ஒரு தமிழ் குடும்பம் தங்கள் தாத்தாவை அட்மிட் செய்து இருந்தது… அவர்களுக்கு இரு இரட்டை குழந்தைகள் சாரா, சம்ருத்… துறுதுறுவென விளையாடி கொண்டிருந்த அவர்களிடம் பேசி மூவரும் நன்பர்களாகி விட்டனர்… வேறு யாராம்? தி கிரேட் அஞ்சலியோடு தான்…” வா நம்ம ரூம்ல விளையாடலாம்”என்று இவர்களது ரூமிற்கு தள்ளி கொண்டு வந்து விட… அவளை பார்த்த கௌதமுக்கு சிரிப்பாகத்தான் வந்தது…

“ஏய் எலிக்குட்டி… எங்க போனாலும் எப்படிடி உனக்கு மட்டும் குட்டீஸ் பிரெண்ட்ஸ் கிடைச்சுடறாங்க?”

“என்னடா பண்றது… நான் அநியாயத்துக்கு நல்ல பிள்ளையா இருக்கேனே… அதோட சின்ன பிள்ளைங்களுக்கு சின்ன பிள்ளைங்க தான் பிரெண்ட் ஆவாங்க தெரியுமா?”

“நீ நல்லவளா… அதுவும் சின்ன பிள்ளையா… ஐயோ… என் நெஞ்சே வலிக்குது… மேகா… அப்படியே நர்ஸ கூப்டு… எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு…”

இருவரின் கேலி கிண்டல்களை பார்த்து சிரித்த மேகா…

“எதுக்கு கெளதம்… நர்ஸ் யாராவது ரொம்ப அழகா இருக்காங்களா?” என்று கேட்க

ஆச்சரியமாக திரும்பிய கெளதம்

“ஹேய் மேகா… நீ கூட இப்படி பேசுவியா?”

“ஏன்டா… மேகா பேச மாட்டாளா? இங்க பாரு நாங்க ரெண்டு பேரும் ஒரு செட் தெரிஞ்சுக்கோ…” என்று இல்லாத காலரை தூக்கி விட

“என்ன செட்டு எலி… ஷேவிங் செட்டா?”

“அது நீயும் உன் பிரெண்டும்டா… நாங்க நல்ல பொண்ணுங்க… தெரிஞ்சுக்கோ…”

“ஆமா ரொம்ப நல்லவங்கஆஆஆஆஆஆ தான்… இன்னைக்கு காலைல தான் பிபிசில சொன்னாங்க ஆத்தா…”

“டேய் கௌஸ்… நேத்தே சிஎன்என் ல சொல்லிட்டாங்கடா! நீ பார்க்கலையா?”

“வேணாம் எலிக்குட்டி… என்னை கௌஸ்ன்னு கூப்டாத… அடி தான் விழும்… பாவம் பிள்ளை தனியா இருக்கியேன்னு விடறேன்…”

“போடா கௌஸ்… வெவ்வேவே…” என்று அழகு காட்டி விட்டு அந்த குழந்தைகளிடம் விளையாட இதை பார்த்த மேகா அனைத்தையும் மறந்து சிரித்தாள்! இருவரும் சேர்ந்து அவளை வேறு எதை பற்றியும் நினைக்கவிடாமல் மாற்றி மாற்றி சிரிக்க வைக்க பேசி கொண்டும் குழந்தைகளை அழைத்து வந்து விளையாட வைத்தும் அவளது மனதை சசியின் நினைவுக்குள் செல்லவே விடாமல் வைத்து இருந்தனர்… ஆனால் அதற்கு ஆயுள் குறைவு என்பது அவர்களுக்கு தெரியவில்லை…

அந்த குழந்தைகளிடம் பேசி சிரித்து பேசி விளையாடி கொண்டிருந்தனர்… அவர்கள் இருந்தது விஐபி ரூம்… அதனால் அந்த அறை பெரியது என்பது மட்டுமில்லாமல் இரண்டு பகுதியாக பகுக்க பட்டிருக்கும்… நோயாளிகளுக்கு தொந்தரவு தர கூடாது என்று எண்ணுபவர்கள் முன்னறையிலேயே உட்கார்ந்து பேசி விட்டு செல்லலாம்… அந்த பெரிய அறையில் அந்த நிலைமையில் கண்ணாமூச்சி விளையாடி கொண்டிருக்கும் ஒரே ஜீவன் அஞ்சலியாகத்தான் இருக்கும்… கண்களை கட்டி கொண்டு சாராவையும் சம்ருத்தையும் தேடி தேடி ஒரு வாராக ஒரு உருவம் கைக்கு தட்டுப்பட…

“ஹைய் கௌஸ் அவுட்… கௌஸ் அவுட்…” என்று குதித்தாள்…

“ஹேய்…”

எல்லாருமாக கை தட்டும் ஓசை கேட்க… கண் கட்டை கழட்டி பார்த்தாள்! அங்கே இருந்தது அர்ஜுன்… அவள் கண்களில் வெட்கம் தோன்ற… சட்டென்று பின்னடைந்தாள்!

“ஹைய்… புது அங்கிள் அவுட்… இப்போ நீங்க தான் கண்ண கட்டனும்… மேகா ஆன்ட்டி… என்ன ஓகே வா?” என்று அந்த குழந்தைகள் ஆர்வமாக கேட்க

“ஓகே ஓகே ஓகே…” என்று மேகாவும் உற்சாகமாக கூறினாள்! அதை பார்த்த அர்ஜுன் ஆச்ச்சரியமாகி போனான்… காலையில் தற்கொலைக்கு முயன்ற பெண்… இப்போது இவ்வளவு உற்சாகமாக! ஆர்வமாக கெளதமை பார்த்து கண்களால் கேட்க அவனோ அஞ்சலியை குறிப்பால் காட்டினான்! அட நம்மாளுக்கு இவ்வளவு திறமையா? இருக்கும் இடத்தை உற்சாகத்தால் நிரப்பும் வித்தை இவள் மட்டுமே அறிந்தது போலும்… எப்படி ஒரு துள்ளும் உற்சாகம் வருகிறது இவளை பார்த்தாலே என்று அடிக்கடி நான் நினைப்பது உண்மைதான்! மனதுக்குள் அஞ்சலியை பற்றி பெருமையாக நினைத்தாலும்…

“ஏய் லூசு… இங்கயும் வந்து உன் லூஸ் தனத்த காட்டுறியா? உன் வால அடக்கி வெச்சுட்டு ஒழுங்கா அமைதியா இருக்க மாட்ட… மேகாவ டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கியா? சரி சரி நீ கிளம்பு… நீ இங்க சரி வர மாட்ட தாயே…”

“அர்ஜுன் அண்ணா… அதெல்லாம் ஒண்ணுமில்ல… அஞ்சலி என்னை டிஸ்டர்ப் பண்ணல… இப்போ தான் ரொம்ப நல்லா இருக்கு…” என்று மேகா சிரித்து கொண்டு சொல்லி கொண்டிருக்கும் போதே உள்ளே வந்தனர்… கணபதியும் பிருந்தாவும்…

மேகாவின் பேச்சு அந்த இடத்திலேயே நின்றது… உடல் முறுக்கியது… கண்கள் சிவக்க முகத்தில் கடுமை ஏறியது… இருவரையும் உறுத்து விழித்தவளை பார்த்த போது, அனைவருக்கும் உள்ளுக்குள் குளிர் பிறந்தது… அருகில் வந்த கெளதம்… அவளது கையை பிடித்து அமைதிபடுத்த முயல அவனது கையை இறுக்கமாக பற்றியவள் நடுங்கி கொண்டே…

“கெளதம்… அந்த ஆள போக சொல்லுங்க…” நடுங்கி கொண்டே

“இல்லம்மா… ஒரு அஞ்சு நிமிஷம் அவங்க உன்னை பார்த்துட்டு போகட்டும்… உன்னோட பேரன்ட்ஸ் மா…” என்று அமைதியாக கூறி அவளை அமைதிபடுத்த முயல… ஆனால் அவனது சமாதானம் அவளிடம் எடுபடவில்லை…

“வெளிய போக சொல்லுங்க…” அடி தொண்டையில் கத்தினாள்!

“ஏன்டா இவங்களை கூட்டிட்டு வந்த…” என்று கண்களால் அர்ஜுனுக்கு கண்டனம் தெரிவித்து கொண்டிருந்தான் கெளதம்… அந்த சூழ்நிலையை அப்போதுதான் முழுதாக உணர்ந்தான் அர்ஜுன்…

“அம்மா… நீ என் பொண்ணுடா…” என்று கீழ்குரலில் கணபதி கெஞ்ச

“யார் உன் பொண்ணு… யாருமில்ல… மத்த பொண்ணுங்களை பொண்ணா மதிக்காம… ச்சே சொல்றதுக்கு என் வாய் கூசுது… நீயெல்லாம் எனக்கு அப்பனாடா… வெளிய போ… இல்லைன்னா நான் செத்து போய்டுவேன்…” என்று மேகா கத்த… கணபதிக்கு கூசியது…

“மேகா… அப்பாவ அப்படி எல்லாம் பேசாதடா…” என்று அவர் கெஞ்சிக்கொண்டு இருக்க… அவரை சமாதானபடுத்தி வெளியே அழைத்து போக அர்ஜுன் முயன்றான்…

“உன்னால தான் என் சசி இப்போ… ஐயோ… என்னால தாங்க முடியலையே… ஐயோ… என் உடம்பெல்லாம் எறியுதே… என் கண்ணு முன்னாடி வராத… வெளிய போ… இல்லைன்னா நானே உன்னை கொலை பண்ணிடுவேன்… என்னை கொலைகாரி ஆக்கிடாத… வெளிய போ…” அடி குரலில் கர்ஜிக்கவும்…

“சார்… வாங்க ப்ளீஸ்…” கணபதியை இழுத்து கொண்டு வெளியே போனான் அர்ஜுன்…

“ஐயோ கெளதம் என் உடம்பெல்லாம் எரியுது… அஞ்சலி… உள்ளுக்குள்ள என்னமோ நடுங்குது… ஐயோ… தாங்க முடியலையே… சசி… சசி… ஏன் சசி என்னை விட்டுட்டு போனீங்க… எங்க சசி போனீங்க… உங்கள எரிச்சப்போ இப்படி தான் எரிஞ்சுதா உங்களுக்கு… தாங்க முடியலையே ஐயோ சசி…” அவளை அறியாமல் பிதற்றி கொண்டிருக்க அவசரமாக மருத்துவரை அழைத்து வந்தான் கெளதம்… பரிசோதிக்கும் போதும் பிதற்றலும் நடுக்கமும் குறையவில்லை… அமைதி படுத்த ஒரு ஊசி போட்டு விட்டு சலைன் ஏற்ற நர்ஸிடம் கூறி விட்டு சென்றார்…

மருந்தின் தாக்கத்தால் பிதற்றி கொண்டே உறங்க தொடங்கினாள் மேகா… கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாகி ஆழ்ந்த உறக்கத்துக்குள் போனாள்…

வெளியே வந்த கெளதம்,

“சார்… மேகா மனசுல ஏதோ ஆழமா பதிஞ்சு இருக்கு… தயவு செஞ்சு நாங்க சொல்ற வரைக்கும் வந்து பார்க்காதீங்க… இதை சொல்றதுக்கு என்னை என்ன நினைத்தாலும் பரவால்லை… ஆனா இவ்வளவு நேரமா எப்படி சிரிச்சுட்டு இருந்த பொண்ணு… ப்ச்… தப்பா எடுத்துக்காதீங்க சார்…”

இதை கூறும் போதே பெற்றோர் இருவரும் கதறி அழ ஆரம்பித்தார்கள்…

“எல்லாம் நான் பண்ண பாவம் தம்பி… பாவம்… என் பொண்ணுக்காக ஓடி ஓடி சொத்த சேர்த்தேன்… ஆனா கடைசில அவ வாயாலேயே நீயெல்லாம் ஒரு அப்பனான்ற வார்த்தையையும் வாங்கிட்டேன்… ஐயோ என் செல்லமே… உன்னை இப்படியா நான் பார்க்கணும்…” முகத்தில் அறைந்து கொண்டு அழ ஆரம்பிக்க அதே நேரத்தில் அவரது செல்பேசி அழைத்தது…

“சொல்லு பெருமாள்…” குரல் வெளியே வராமல் கனமாக

“அண்ணாச்சி… பிடிவாரன்ட் இஸ்யு பண்ணிட்டாங்க…”

“ஓ… சரி… நான் வரேன்…” உணர்ச்சியே இல்லாமல் வைத்தார்…

அதே முகத்தோடு சொன்னார்

“செத்தும் கொடுத்தான் சீதக்காதின்னு சொல்லுவாங்க… சசி செத்து சாதிச்சுட்டு போய்ட்டான்…” சொல்லி விட்டு விடுவிடுவென்று நடக்க துவங்கினார்…

******

இரவின் கருமை ஆட்சி செய்தது… வித்தியாசமாக இருந்தது… வாழ்க்கையின் தத்துவத்தை தெரிந்து கொள்ள நமக்கு போதி மரம் எல்லாம் தேவை இல்லை… ஒரே ஒரு நாள் மருத்துவமனையில் உட்கார்ந்து அனைவரையும் கவனித்தாலே போதும்… வாழ்க்கை என்பது நிலையற்றது என்பதை அறிய… இன்று இருப்பவர் நாளை இருக்க மாட்டார்… நம் கண் முன்னரே உயிரும் கூட போகும்… உயிரும் காப்பாற்றப்படும்… இதெல்லாம் இங்கு சகஜம்…

“ஜனகன மன என ஜதி சொல்லும் நேரம்

ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்…”

அந்த நிலையற்ற வாழ்க்கை நிலையானது என்ற இறுமாப்பில் மனிதர்கள் போடும் ஆட்டம் தான் எத்தனை எத்தனை… அவர்கள் அதுக்காக போடும் வேடம் தான் எத்தனை எத்தனை… !

… விஐபி ரூம் என்பதால் முன்னறையின் சோபாவில் கெளதம் குறுகி படுத்து கொள்ள அஞ்சலி மேகா இருந்த பகுதியில் இருந்த சிறு கட்டிலில் படுத்து கொண்டாள்!

கௌதமுக்கு ஏனோ அன்றைக்கு உறக்கம் வரவே மறுத்தது… எதுவோ புது இடம் என்பதால் இப்படி இருக்கலாம் என்று நினைத்து கொண்டு கண்களை இறுக்கமாக மூடி கொண்டு உறங்க முயற்சித்தான்!

திடீரென்று ஏதோ சத்தம்… கண்களை மட்டும் நிமிர்த்தி பார்த்தான்… அதிர்ந்தான்…

மேகா தனது ஷாலை மேலே பேனில் கட்டி தனது கழுத்தில் கட்டி முடிச்சிட போனாள்! எங்கிருந்துதான் அந்த வேகம் வந்ததோ கௌதமுக்கு! இழுத்து கீழே விட்டு பளாரென்று ஒரு அறை அறைந்தான்… கோபத்தை எல்லாம் ஒன்று திரட்டி… சுருண்டு கீழே விழுந்தவள் முகத்தை பற்றி கொண்டு அழ ஆரம்பித்தாள்…

“நல்லா அழு மேகா… நல்லா அழு… ஏன் இப்போ நிறுத்திட்ட… அடுத்தது எப்படி தற்கொலை பண்ணிக்கலாம்னு யோசிக்கறையா?”

“கெளதம்…” அழுது கொண்டே…

“இதுக்கு தான் உன்னை காப்பாத்தி கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துட்டு இருக்கோமா மேகா…”

சப்தம் கேட்டு அஞ்சலி விழித்து, நடந்த ஒன்றுமே புரியாமல் மலங்க மலங்க பார்த்தாள்!

“ஏன் ஷால்ல தூக்கு போட்டுக்கற… கயிறு வாங்கிதரேன்… ஸ்ட்ராங்கா போட்டுக்கோ தாயே… போட்டுக்கோ…”

“நான் எதுக்காக வாழனும்?” அழுது கொண்டே கேட்க

“நீ எதுக்காக சாகணும்?”

“சசி இல்லையே…” அழுகை தொடர…

“நான் இல்லையா…” இடைவெளி விட்டு மூச்சை உள்ளே இழுத்து கொண்டு… அதிர்ச்சியாக முகத்தை உயர்த்தி பார்த்தாள்!

“உன்னையே உயிரா நினைக்கிற நான் உனக்கு இல்லையா மேகா… நீ தான் என் வாழ்க்கைன்னு நினைக்கிற நான் உன் கண்ணுக்கு தெரியவே இல்லையா… சாகறதுக்கு முன்னாடி சசி கடைசியா என்ன சொல்லிட்டு செத்தான் தெரியுமா உனக்கு… என் மேல நம்பிக்கை வைச்சு… மேகாவ உங்க கிட்ட ஒப்படைச்சுட்டு போறேன்… பத்தரமா பார்த்துகோங்கன்னு சொல்லிட்டு போனான்… என் காதுல இப்ப கூட ஒலிக்குது… நான் அவனுக்கு குடுத்த வாக்க காப்பாத்தணும்…”

முகத்தை கடுமையாக வைத்து கொண்டு அவளை எழுப்பி

“உன்னை சாக விட மாட்டேன்… அப்படியே நீ சாக நினைச்சா செத்துக்கோ… ஆனா உன் பின்னாடி நானும் வந்துடுவேன்… அதை மட்டும் நினைப்புல வெச்சுக்கோ”