KS7

KS7

அத்தியாயம் 14

அதீத அதிர்ச்சியை தாண்டிய ஏதோ ஒரு உணர்வில் கெளதமை பார்த்தாள் மேகா… ஒரு நிமிடம் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை! ஏனென்றால் அவள் இதை கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை… எதிர்பார்க்கவும் அவசியம் இல்லையே!

“கெளதம்… இது விளையாட்டு இல்ல… வாழ்க்கை…” குரல் நடுங்கியது

“அதே தான் மேகா நானும் சொல்றேன்… நீயும் விளையாடாதே… வாழ்க்கைய வாழ கத்துக்கோ…”

“என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு…”

“அப்படீன்னு நீ நினைச்சா அது அடி முட்டாள் தனம் மேகா… நீ விரும்பறவங்கள விட உன்னை விரும்பறவங்கள கல்யாணம் பண்ணா சந்தோஷமா இருப்பங்கறது உனக்கு தெரியாதா?”

“நான் உங்களை அப்படி நினைக்கவே இல்ல…”

“இல்ல… நினைக்க வேணாம்… நீ என்னை லவ் பண்ண சொல்லி நான் கேக்கல… கட்டாயபடுத்தவே இல்ல…”

தற்கொலைக்கு முயற்சி செய்பவர்களை தடுக்க அவர்களை ஒரு நிமிடம் குழப்பி விட்டால் போதும் என்ற கௌதமின் கணக்கு தப்பவில்லை…

“அப்புறம் ஏன் கெளதம் இப்படி எல்லாம் பேசறீங்க… உங்க மேல எவ்வளவு மரியாதை வெச்சு இருக்கேன் தெரியுமா? ம்ப்ச்… ஒரே நிமிஷத்துல கெடுத்துட்டீங்களே…”

தான் எண்ணியது வெற்றிகரமாக வேலை செய்வதை எண்ணி கௌதம் உள்ளுக்குள் தனக்கு தானே ஷொட்டு குடுத்து கொண்டான்! அவளை சசி பற்றிய சோகத்தில் இருந்து, வேறு கவலைக்கு ட்ராக் மாற்றி கொண்டிருப்பது மேகாவுக்கு புரியவில்லை! ஆஹா இது தானே எனக்கு வேணும் என்று கெளதம் உள்ளுக்குள் சிரித்து கொண்டான்!

“உன் மரியாதை எல்லாம் எனக்கு வேண்டாம் மேகா… உன்னை லவ் பண்றேன்… அதுக்காக என்னை நீ லவ் பண்ணியே ஆகணும்னு நான் சொல்லல… என்னோட எண்ணத்த தான் சொன்னேன்…” என்று கூறி விட்டு…” இங்க பார்… பேய் முழி முழிச்சுட்டு பார்த்துட்டு இருக்காளே என் தங்கச்சி… அவ மேல ப்ராமிஸ் பண்ணி சொல்றேன்… நான் உன்னை லவ் பண்றேன்…” என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டே வெளியே முகத்தை சீரியசாக வைத்து கொண்டு சொல்ல

அஞ்சலி அலறினாள்”டேய் பரதேசி… ஏன்டா பொய் சொல்ல என் பேர யூஸ் பண்ற…”

“ஏய் லூசு… நான் நிஜத்த தாண்டி சொல்றேன்… அதனால கவலை படாத… உனக்கு ஒன்னும் ஆகாது…”

“டேய் கௌஸ்… ஏன்டா இப்படி நடு ராத்திரில அலும்பு பண்ற… உனக்கு ப்ரோபோஸ் பண்ண நேரமே கிடைக்கலையா? நீயெல்லாம் ஒரு…”

“ம்ம்ம் கம் ஆன்… சொல்லி முடி…”

“அட ச்சே… வெக்கம் கெட்ட உன்னை என் அண்ணா ன்னு சொல்லிக்க மாட்டேன்… போடா கூஸ்…”

“என்னடி பண்றது… நான் மட்டும் என்ன நினைச்சேனா? எனக்கும் கேண்டில் லைட் டின்னர்ல சொல்லனும்னு ஆசை இல்லையா? ஆனா என்ன பண்றது, நமக்கு விதி நடு ராத்திரி, அதுவும் ஹாஸ்பிடல்… அதுவும் ஒரு பக்கிய பக்கத்துல வெச்சுகிட்டு ப்ரோபோஸ் பண்ண வேண்டி இருக்கு… ஆல் மை டைம்…” என்று சிரித்து கொண்டு நிலைமையை சீராக்க முயன்றான்!

“என்னது பக்கியா? அடப்பாவி… நீ லவ் பண்ணு என்ன வேணும்னாலும் பண்ணி தொலை… ஆனா என்னை பக்கின்னு சொன்ன… இப்பவே மஞ்சுக்கு போன் போட்டு சொல்லிடுவேன்…” என்று சிரித்து கொண்டே மிரட்ட

“ஹை… அப்படியா… என்னை வாழ வைத்த தெய்வமே… ஆத்தா மகமாயி… சாமுண்டி… எப்படா குட்டி பண்ண போற அந்த காரியத்த… எனக்கு ஒரு வேலைய குறைச்சுடு ஆத்தா…” என்று அவளை கையெடுத்து கும்பிட

“நீயெல்லாம் திருந்தாத கேஸ்… சரி ஒழுங்கா போய் படுத்து தொலை… என் தூக்கத்த கெடுத்த நான் பத்திரகாளியா ஆய்டுவேன்…”

“இப்போ மட்டும் எப்படி இருக்க… அப்படி தான்”என்று முணுமுணுத்து விட்டு மேகாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு சோபாவை நோக்கி போனான்!

“அங்க என்ன முனுமுனுப்பு…”

“ஒன்னும் இல்ல இளவரசி… நீங்க உங்க மஞ்சத்துக்கு போங்க… உங்க துயில கன்டினியு பண்ணுங்க…”

“அது…” என்று சொல்லிவிட்டு மேகா பக்கம் திரும்பி… இருவரும் பேசி கொண்டிருந்ததை பெக்கே பெக்கே என்று பார்த்து கொண்டிருந்தவளை

“நீ என்ன இன்னும் கொட்ட கொட்ட முழிச்சுட்டு இருக்க… காலைல பேசிக்கலாம்… போய் படு…” என்று விரட்டினாள்!

ஒன்றும் பேசாமல் படுத்த மேகாவின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் குழம்பியது! என்னை பற்றி நன்றாக தெரிந்தும் ஏன் கெளதம் அப்படி சொல்ல வேண்டும்? நான் சசியை எவ்வளவு காதலித்தேன் என்பதை நேரில் கண்டவர்கள் அல்லவா? ச்சே… என்ன வாழ்க்கை இது… வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல்… ஆனால் முன்னர் இருந்த மனநிலை அப்படியே மாறிவிட்டதே… அண்ணன் தங்கைக்கு இடையில் இருந்தால் அப்படித்தானோ! இதுதானே இருவருக்கும் தேவையாக இருந்தது… அவளுக்கு ஆறுதலாக கூறாமல் தற்கொலை தவறு என உணர்த்த முயலாமல் செய்கையால் அவர்களது விளையாட்டுத்தனமான பேச்சினால் மட்டுமே மேகாவின் மனநிலையை மாற்றினர்… இதுவும் கூட பயனளிக்கும் மருத்துவ முறையே!

குழப்பத்திலேயே உறங்கியும் போனாள்!

அதிகாலையில் செல்பேசி சேவல் கூவியது… சோம்பலாக எழுந்தான் அர்ஜுன்… இரவே மேகாவின் பெற்றோர்கள் சென்னை கிளம்பி இருந்தனர்… மனம் வேதும்பியே! மகள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறாள் என்ற உணர்வு மட்டும்… சென்னை சென்றதும் எதற்கும் வாய்ப்பு தராமல் போலீஸ் அவரை கைது செய்தது! முற்பகல் செயின் பிற்பகல் விளையும் அல்லவா!

அர்ஜுன் எழும்போதே செல்பேசி அழைக்க எடுத்து பார்த்தவன் விசிலடித்தான்!

“அட நம்ம எலி… எலி நமக்கு கால் பன்னுதா? வெளிய மழை எதாச்சும் வருதா? இல்ல நான் தான் கனவு கான்றேணா? என்று எண்ணியவாறே அவனை கிள்ளி பார்க்க

“ஆஹா வலிக்குது… அப்போ உண்மைதான்…” என்று நினைத்து கொண்டே கால் அட்டென்ட் செய்தான்! என்னதான் இப்படி அலைந்தாலும் பேசும்போது கெத்தாக இருக்க வேண்டுமே… கனைத்து கொண்டு…

“ஹலோ… அர்ஜுன் ஹியர்…”

ஒரு நிமிடம் தயங்கிய அஞ்சலி அவனிடம் பேச பேச்சு வராமல் வார்த்தைகளுக்கு திண்டாடினாள்! ஐயோ நம்ம எலியா? ? ? என்ன செய்வது… இப்போதெல்லாம் அர்ஜுனிடம் பேசும்போது… வெறும் காற்று தானே வருகிறது… அய்யகோ! ! ! !

தட்டுத்தடுமாறி…

“நான் தான் பேசறேன்…” திணறினாள்… அவளது திணறல் அர்ஜுனுக்கு என்னன்னவோ செய்ய…

“நான் தான்னா… யாருன்னு… சொல்லுங்க… நீங்க போன்ல தானே பேசறீங்க… வீடியோ கால் இல்லம்மா…”

இப்படி சொல்லவும் அஞ்சலிக்கு கோபம் ஜிவ்வென்று டேக் ஆப் ஆனது… உள்ளுக்குள் அர்ஜுனுக்கு சஹஸ்ரநாமம் அஷ்டோத்திரம் என்று அனைத்தும் நடத்தியவள் கடுப்பான குரலில்…

“நான் தான் அஞ்சலி…” உர்ரென்று கூறினாள்!

“அஞ்சலின்னா எந்த அஞ்சலி…” வேண்டுமென்றே அர்ஜுன் கேட்டு வம்பிழுக்கு(மவனே உனக்கு நேரம் சரி இல்ல… )

“ம்ம்ம்… உங்களுக்கு எத்தனை அஞ்சலிய தெரியும் சார்…” பவ்யமாக கேட்பது போன்ற பாவனையில் கடிக்க,

“எனக்கு நிறைய்ய்ய்ய்ய்ய்ய அஞ்சலி தெரியும்… அதுல நீங்க எந்த அஞ்சலி?” விடுவேனா என்று வம்பளத்து கொண்டிருந்தான்… அங்கே கடுகு போட்டால் பொரிந்து விடும் நிலையில் அம்மணி…

“ச்சே… உன்… உங்களை போய் மனுஷனா மதிச்சு சொல்ல வந்தேன் பாருங்க… எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்…” பொறுமை பறந்தது!

“ஹே… அபிதகுஜலாம்பா… இன்னும் என்ன வேணும் உனக்கு? ஐம் ஆல்வேஸ் அட் யுவர் சர்விஸ்…” சிரித்து கொண்டே சொல்ல…

“ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்… காலங்கார்த்தால கடுப்பை ஏத்திகிட்டு… ச்சே…”

“ஓகே ஓகே சீரியஸ்… சீரியஸ்… சீரியஸ்… சரி சொல்லு… என்ன விஷயம்”

பதிலே பேசாமல் மெளனமாக வீடு வந்தவர்கள் அனைவரும் யோசனையிலேயே இருந்தனர்! முதலாவதாக மௌனத்தை கலைத்த அர்ஜுன்

“கொஞ்சம் யோசிச்சு பேசு மேகா… நீ சொல்றது கண்டிப்பா சரியா வராதும்மா…” பொறுமையாக கூறினான்… என்ன இந்த பெண் இப்படி குண்டை தூக்கி போடுகிறாள் என்ற ஆற்றாமையோடு!

“யோசிக்க ஒன்னும் பெருசா இல்லண்ணா… இதுதான் என்னோட முடிவு… ராத்திரி எல்லாம் யோசிச்சேன்… என் சசி என்கிட்டே கடைசியா கேட்டது அவரோட அக்காவ பார்த்துக்க சொல்லித்தான்… அவங்களுக்காகவாவது நான் இருந்தே ஆகணும்னு புரிஞ்சுகிட்டேன்… அதான் இப்படி ஒரு முடிவு…”

“சரி நீ சொல்றது சரி… சசியோட அக்காவ பார்த்துகோ ஆனா ஏன் விதவை அது இதுல்லாம் பேசற மேகா…” அஞ்சலி வேதனையோடு கேட்டாள்!

“இதுல என்ன அஞ்சலி இருக்கு… அது தானே உண்மை… என்னோட சசி இறந்து போனாலும் அவரோட தான் வாழ்ந்துட்டு இருக்கேன்… இது தான் உண்மை…”

மனம் வலிக்க அவளை பார்த்து கொண்டிருந்த கெளதம்…

“சரி, அவன் நல்லவனாவே இருந்தாலும் உன்னை கடத்திட்டு போனவன் மேகா…” என்று கூற

“இல்ல… அவர் கூட நான் தான் வந்தேன்… இன்னும் எங்க கூப்பிட்டு இருந்தாலும் போய் இருப்பேன்… இப்போவும் போ வே போவேன்…” என்றவளது குரல் கலங்கி தேய்ந்தது…

கெளதம் ஒரு நிமிடம் யோசித்தவன்,

“இதுக்கு பேர் தான் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் மேகா… உன் அப்பா ஒரு வியாபாரி… அவருக்கு வியாபாரத்துல ஆயிரம் வழிமுறை இருக்கலாம்… அதுல எதாச்சும் ஒரு வழில சசி பாதிக்க பட்டு இருக்கலாம்… அவனை பத்தி தப்பு சொல்லல… ஆனா ஒரு விஷயத்த தெரிஞ்சுக்கோம்மா”ஆல் இஸ் ஃபேர் இன் பிசினெஸ்”!”

அதை ஆமோதித்த அர்ஜுன்

“ஆமா மேகா… கெளதம் சொல்றது நூத்துக்கு நூறு உண்மை… ஒரு வியாபாரியா இதை நானும் சொல்றேன்… எல்லா நேரத்திலும் நாம உண்மையோட நடக்க முடியாதும்மா… ஒரு விஷயத்துல வெற்றி வேணும்னா ஒரு சில விஷயத்த செஞ்சு தான் ஆகணும்… ஒரு சில விஷயத்த கண்டுக்க கூடாது… இப்படி நிறைய இருக்கும்மா… இத வெச்சு நீ அப்படி முடிவு எடுத்து இருக்கறது தப்பு…”

“ஒரு சில விஷயத்த செய்யனும்னு சொல்றீங்களே… என்னண்ணா? ஒரு அப்பாவி பொண்ண க்ரூப் ரேப் பண்றதா? இல்ல… சொத்த அபகரிக்க கொலை பண்றதா…”

தேங்காய் உடைத்தது போல மேகா கேட்கவும் இருவராலும் பேச முடியவில்லை… வாயடைத்து அதிர்ச்சியில் வேரோடி போயினர் மூவரும்…

“என்னண்ணா பதிலே காணோம்… அப்போ இந்த விஷயத்த கேட்டப்போ எனக்கு எப்படி இருந்து இருக்கும்ன்னு நினைச்சு பாருங்க…” என்று சொல்லி சசியின் கதையை முழுதாக கூறியவள் கடைசியில் கதறியபடி முடித்தாள்!

“என் அப்பாவ பத்தி இப்படி சொல்றதுக்கு எனக்கு முடில… ஆனா நான் தெளிவா இருக்கேன்… தப்பு செய்தது யாரா இருந்தாலும் தண்டனைல இருந்து தப்பிக்க கூடாது… அதே மாதிரி தப்பே செய்யாம தன்னை மறந்துட்டு இருக்கற சசியோட அக்காவுக்கு நான் ஏதாவது செய்யணும்…”

அப்போது அதை முடிவு செய்தான் கெளதம்… அவளது வழியில் போய் தான் தன்னுடைய வழிக்கு கொண்டு வர முடியும் என்று…

ஆண்களின் உறுதி கல்லை போன்றது… போகும் திசையை மாற்ற முடியாது ஆனால் உறுதியைதன்மையை உடைத்து விடலாம்… பெண்களின் உறுதி நீரை போன்றது… அவர்களின் உறுதி தன்மையை மாற்ற முடியாது ஆனால் போகும் திசையை திருப்பி விடலாம்…

அதை சரியாக உபயோகபடுத்தினான் கெளதம்… தொண்டையை கனைத்து கொண்டவன்

“ஆமா மேகா…” இடைவெளி விட்டவன்”நீ சொல்றது நூத்துக்கு நூறு சரி… கண்டிப்பா நீ அதை செய்து தான் ஆகணும்…”

“தேங்க்ஸ் கெளதம் அண்ணா…” நன்றியாக கூறினாள் மேகா

“ஆனா தயவு செஞ்சு என்னை அண்ணான்னு கூப்பிடாத… நீ என்னை லவ் பண்ணலன்னு இப்படி நீ ப்ரூவ் பண்ண வேண்டாம்…”

கெளதமை ஏறிட்டு பார்த்து தலையை அசைத்தாள்!

அஞ்சலியும் அர்ஜுனும் புரியாமல்”ங்கே”என்று கெளதமை பார்த்து விழித்தனர்… மேகா அறியாமல் அர்ஜுனுக்கு ஜாடை காட்டியவன்… தொடர்ந்தான்!

“மேகா… உன் அப்பா செய்தது மிக பெரிய தப்பு… கண்டிப்பா யாராலையும் தாங்கிக்க முடியாது… சசி பாவம் தான்…” மேகாவின் மனதை ஆசுவாசப்படுத்தினான்!

மேகா நன்றியாக கெளதமை பார்த்து

“உங்களுக்கு புரியுதில்லையா கெளதம்?” என்று குரல் கமற கேட்டாள்!

“கண்டிப்பா மேகா… உன் பின்னாடி நான் இருக்கேன்ம்மா… நீ எடுத்து இருக்கற முடிவு ரொம்ப சரி மேகா…”

“தேங்க்ஸ் கெளதம்… நீங்களாவது என்னை புரிஞ்சுகிட்டீங்களே…” என்று மனம் குளிர நன்றி உரைத்தாள்…

“நீ என்ன கஷ்டம்னாலும் என் கிட்ட சொல்லு… நான் இருக்கேன்… நான் உன்னோட பிரெண்ட்… ஓகே வா?” என்று கேட்க

“ம்ம்ம் ஓகே…” என்று பதில் கூறினாள் மேகா!

“ஓகே பிரெண்ட்ஸ்…” என்று கெளதம் கை குடுக்க ஒரு கணம் தாமதித்தவள் கை குடுத்து

“பிரெண்ட்ஸ்…” என்று கூறி சிரிக்க

“ஆனா மேகா… இப்போ உன் படிப்பு பாதில நிக்குதே… அதுக்கு என்னப்பா பண்ணலாம்?” ஆதரவாக பேசி கொண்டே கேட்டான்!

“ம்ம்ம்… இன்னும் ஒன் இயர் தான் கெளதம்… கண்டிப்பா அதை நான் முடிச்சாகனும்… என் சுய கால்ல நிற்க வேணாமா?”

“பின்ன… அப்போ தானே உங்க அப்பா பிசினசை நீ உன் கண்ட்ரோல்ல கொண்டு வர முடியும்…”

“நோ… அது மட்டும் முடியாது… அந்த ஆள் சம்பாரிச்ச எதுவுமே எனக்கு வேணாம்…” மீண்டும் முருங்கை மரத்தில் ஏற துவங்க

“உங்க அப்பா கெட்டவர்தான்… ஆனா அவர் வளர்த்து வச்ச அந்த நிறுவனம் என்ன பண்ணுச்சு மேகா… ஆயிரம் பேருக்கு சாப்பாடு போடற வியாபாரம் அது… அந்த தொழிலாளர்கள நடு தெருவுல நிறுத்த போறியாப்பா… இது உனக்கே நல்லதா படுதா? உன் பின்னாடி நாங்க எல்லாரும் நிற்போம் மேகா…”

மேகா குழப்பமாக

“நானா… எனக்கு அந்த வேலை வேணாம் கெளதம்… அது பாவப்பட்ட பணம்?”

“ஆமாம் மேகா… கண்டிப்பா அது பாவப்பட்ட பணம் தான்… அந்த பணத்துனால நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருக்காங்க தானே… அந்த பாதிக்க பட்டவங்களுக்கு எப்படிம்மா திருப்பி குடுப்ப?” … இடைவெளி விட்டு…” குடுப்ப தானே…”

“கண்டிப்பா கெளதம்…” அவள் கண்களில் அப்பாவித்தனமான உறுதி தெரிந்தது…

“அப்படீன்னா நீ உங்க பிசினஸ கைல எடுத்தா மட்டும் தான் முடியும் மேகா…”

“அப்படியா சொல்றீங்க கெளதம்?” அப்பாவித்தனமாக கேட்டாள் மேகா,

“நீ அங்க உள்ள நிர்வாகத்த கைல எடுத்தா தான் சசியோட அக்காவுக்கு ஏதாவது செய்ய முடியும் மேகா… ஏமாத்தி வாங்குன சொத்துன்னு சொல்றியே அதை கூட திருப்பி குடுக்கலாம்… என்ன சொல்ற நீ… தைர்யமா முடிவு பண்ணு மேகா… உனக்கு நா… நாங்க எல்லோரும் இருக்கோம்…”

வெற்றிகரமாக இரண்டாவது முறையாக அவளை குழப்பி விடுவதில் வெற்றியின் ஓரத்தில் இருந்தான் கெளதம்! அதுவும் சரியாக அடிக்க வேண்டிய இடத்தில் அடித்து பிடிக்க வேண்டிய இடத்தில் பிடித்தான்! உண்மையை ஆராய போனால் மேகா ஒரு சில விஷயங்களில் அப்பாவி… சொல்வதை அப்படியே நம்பும் சிறுபிள்ளைத்தனம் மிகுந்தவள்… அதை சசி பழிவாங்க உபயோகித்தான்! இப்போது கெளதம் அவளை காப்பாற்ற உபயோகப்படுத்தினான்! அவளது கவனத்தை திசை திருப்ப நிர்வாகத்தில் நுழைத்தால் தான் சரியாகும் என்று எண்ணியவன் அப்படி நிர்வாகம் செய்யும் போது சசியின் சொத்தை அவளது முயற்சியால் அவனது அக்காவிடம் ஒப்படைத்தால் அவளுக்கும் குற்ற உணர்ச்சி பேரும் பகுதி குறையும் என்பதோடு வெளி உலக அனுபவமும் இலவச இணைப்பாக கிடைக்கும்!

அவன் போகும் திசையை புரிந்து கொண்ட அர்ஜுனும் அஞ்சலியும் அவனை ஒட்டியே பேச பேச மூவருமாக சேர்ந்து அவளை வெற்றிகரமாக குழப்பி விட்டனர்! சில நேரங்களில் ஒரு விஷயத்தை குழப்பி விடுவதும் நன்மையில் முடிவதுண்டு! நாரதர் கலகம் நன்மைக்காக அல்லவா?

படிப்பை தொடர்ந்து கொண்டே நிர்வாகத்தை கையில் எடுக்க முடிவானது! அதை உடனே மேகாவின் தாய்க்கு தெரிவித்து விட்டு சென்னை வருவதை அவருக்கு உறுதி செய்தனர்! மற்ற விஷயங்களையும் அப்படியே பேசி பேசி வழிக்கு கொண்டு வந்தான் கெளதம்… என்னவென்றால் நேராக இதை செய்யாதே அதை செய்யாதே என்று சொல்லாமல் அவளுடனே ஒத்து பாடி விட்டு அவனது வழிக்கு கொண்டு வரும் கலையை மிகவும் நன்றாகவே கற்று தேறினான்!

(இன்றைய அநேக வீடுகளில் நிலைமை இப்படித்தான் என்று நம் தோழிகள் முனுமுனுப்பது காதில் விழுகிறது! என்ன செய்வது? நாம் சில நேரங்களில் ஏமாந்து தான் விடுகிறோம்… ஆஹா நமது கணவர் நமக்கு இவ்வளவு சப்போர்ட்டா என்று நமது கொள்கையை குறிக்கோளை மறந்து விடுகிறோம்… அது என்ன அப்படி புண்ணாக்கு கொள்கை என்று குட்டுவதும் தெரிகிறது… வேறென்ன நமது அருமை கணவர் கூறுவதை எல்லாம் மறுத்து கூறுவது தான் கொள்கை… அதன் மூலமாக நமது அரசாட்சியை நிலை நாட்டுவதுதான் குறிக்கோள்… ஆனால் இந்த ரகசியங்களை ரகசியமாக களவாண்டு விடுகிற நமது கணவன்மார்கள் நம்மிடம் பிட்டு பிட்டாக போட்டு நம்மை வெகுவாக ஏமாற்றி விடுகிறார்கள்…)

******

மேகாவின் கார் அந்த வளாகத்தினுள் நுழைந்தது! காவலாளி வந்து அவசரவசரமாக திறந்து விட இறங்கிய மேகாவுககு உள்ளுக்குள் உதறல்! தன்னால் நிர்வாகம் செய்ய முடியுமா என்கிற சந்தேகம் அவளை ஆட்டுவித்தது! வலது காலை வைத்து உள்ளே செல்ல யோசித்து கொண்டு நின்றவளின் செல்பேசி கணைக்க காதுக்கு குடுத்தாள்! கெளதம்!

“ஹாய்… என்னப்பா உள்ள போயிட்டியா? இல்ல யோசிச்சிட்டு வெளிய நின்னுட்டு இருக்கியா?”

ஆஹா கண்டுபிடித்து விட்டானே! என்று வியந்தவாறே

“ம்ம்ம்… ஆமாம் கெளதம்! கொஞ்சம் பயமா இருக்கு… கூட யாராச்சும் இருந்தா நல்லா இருக்கும்…” குரலில் நடுக்கம் வெளிப்படையாக தெரிய

“ம்ம்ம்… அப்படியா? கொஞ்சம் ரைட்ல திரும்பி பாரு!”

சட்டென திரும்பியவள் அங்கே கெளதமை பார்க்கவும் ஆயிரம் வாட்ஸ் பல்பு போட்டது போல முகம் பிரகாசமானது!

“அடபாவி… இங்க இருந்துட்டே தான் லைவ் ரிலே பண்ணுனீங்ளா?” என்று சிரிக்க

அதை கேட்டு சிரித்தவாறே அருகே வந்த கெளதம்

“என்னப்பா… இன்னும் நல்ல நேரம் வரலையா? இங்கயே நின்னுட்டு இருக்க?”

“இல்ல கெளதம்… ஒரு பயம் தான்!” என்று சொல்லிகொண்டிருக்கும் போதே பக்கத்தில் இருந்த கணபதியின் உதவியாளர் பெருமாள்,

“சின்னம்மா… சார் தான் நம்ம விளம்பரம் எல்லாம் எடுக்க போறாங்கம்மா… அப்பா தான் முடிவு பண்ணி வெச்சு இருந்தாங்க…” என்று கூறியவுடம் அவளையும் மீறி ஒரு குறுஞ்சிரிப்பு படர்ந்தது!

“ஏன் அங்கிள்… கொஞ்சம் நல்ல ஆட் டைரக்டர் கிடைக்கலையா?” என்று குறும்பாக கேட்கவும் அதை ரசித்து கொண்டே

“ஏதோ தெரிஞ்ச வரைக்கும் ஆபீசர்… செஞ்சுட்டு இருக்கேன் ஆபீசர்! தப்பு எதாச்சும் பண்ணா கோவுச்சுக்காதீங்க ஆபீசர்… ஓகே வா ஆபீசர்…” வளைந்து கொண்டு நக்கலாக கூறி கலாய்க்க மேகா மனம் விட்டு சிரித்தாள்! விளையாட்டாக பேசியபடியே உள்ளே சென்றவர்களை பார்க்க வந்து இருந்தனர்!

அறைக்கு சென்றவுடன் நாற்காலியில் அமரும் முன் யோசனையாக நின்றாள்.

“என்னப்பா?” என்று ஆதூரமாக கேட்ட கெளதமிடம்

“சசி… இல்லையே கெளதம்…”

குரலில் இருந்த வேதனை அவனது நெஞ்சை பிழிந்தது!

அருகில் வந்து முதுகை தடவியவன், கைகளை பற்றி… கண்களை நேராக பார்த்து

“சசி இல்லடாம்மா… அது தான் உண்மை… உண்மை கசக்கத்தான் செய்யும்… மொத்தமா மறந்துடுன்னு சொல்லலடா… அது கஷ்டம்ன்னு எனக்கும் தெரியும்… கொஞ்சம் கொஞ்சமா உண்மைய ஏத்துக்கோ மேகா…”

அந்த மென்மையில் சசி கொஞ்சம் கொஞ்சமாக தூரமாக போக ஆரம்பித்தான்!

******

“என்ன மேடம் சொல்றீங்க? பெயில்ல எடுக்க வேணாமா? ஏன் மேடம் நீங்களே இப்படி சொல்றீங்க?”

“லாயர் சார்… நான் இதுக்கு விளக்கம் குடுக்கனும்ன்னு அவசியம் இல்ல… என்னோட முடிவு இதுதான்! அதோட அவருக்காக நீங்க வாதாடவும் வேணாம்…” தெளிவாக திடமாக அவள் உரைத்த இந்த வார்த்தைகள் பிருந்தாவை கலங்கடித்தது! பெயிலில் கணபதியை எடுப்பது பற்றி பேச வீடு வந்த வக்கீலிடம் தான் மேகா பேசி கொண்டிருந்தாள்!

“மேகா… என்னடா சொல்ற? அப்பாடா… உன் அப்பா… என்னதான் கோபம் இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப டூ மச் மேகா…” அழுகை பாதியும் கோபம் பாதியுமாக உரைத்த தன் தாயை பார்த்து

“அப்பா… ஆட்டுக்குட்டி… பொண்ணு இதெல்லாம் இப்பதான் உங்களுக்கு நினைவுக்கு வருதா? இத்தன நாள் எங்க போய் இருந்தது இந்த நினைப்பு? அப்பா தப்பு வழியில போக ஆரம்பிச்சப்ப நீங்க தடுத்திருந்தா இதெல்லாம் நடந்து இருக்காதே அம்மா! ஒரு குடும்பமே சீரழிஞ்சு போயிருக்காதே! என் மேல கொஞ்சம் அக்கறை காட்டி இருந்தா நானும் ஏங்கி போயிருக்க மாட்டேனே! ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலேங்கற மாதிரி நீங்க நடந்துகிட்டீங்களே! இதை பத்தி பேச உங்களுக்கு உரிமை இல்ல… என்னோட முடிவு இதுதான்…” என்று முழுவதுமாக முடித்து விட்டாள்!

“பாப்பா யோசிச்சு சொல்லுங்க… மூணு பசங்க கேஸ் விட இப்போ பைல் ஆகி இருக்கற கேஸ் எல்லாம் ரொம்ப ஸ்ட்ராங் பாப்பா… வாதாடுலைன்னா கேஸ் நம்ம அப்பாவுக்கு எதிரா தான் தீர்ப்பாகும்… அதுவும் அந்த பொண்ணு ரம்யா, சசியோட அக்கா கேஸ்ல சாட்சி கூட நமக்கு சாதகமா இல்லம்மா… எப்படியாவது அப்பாவ காப்பாத்துலைன்னா கண்டிப்பா அப்பாவுக்கு அதிகபட்ச தண்டனை கிடைச்சுடும் பாப்பா… தயவு செஞ்சு வாதடனும் பாப்பா…” பெருமாள் தன்னால் இயன்றவரை மேகாவை சமாதானப்படுத்த முயல

“இல்ல அங்கிள்… இது யோசிச்சு எடுத்த முடிவு தான்… அந்த ஆள் இனிமே என் கண்ணுல பட கூடாது… அப்படி பட்டா அது அவரோட பிணமாத்தான் இருக்கணும்!”

*******

ஓசோன் தலைமையகம் பரபரப்பாக சுழன்று கொண்டு இருந்தது சேர்மன் வானமாமலையின் வருகை அனைவரையும் அமர விடாமல் பறக்க செய்து இருந்தது! வானமாமலையின் இயல்பு அனைவருக்கும் தெரிந்த ஒன்று! வேலை செய்வதே தெரியாமல் ஆனால் செய்ய வேண்டிய வேலையை சரியாக செய்ய வைப்பவர் என்ற பெயர் அவருக்குன்டு! கண்டிப்பான ஆனால் அன்பான முதலாளி அர்ஜுன் இந்த விசயத்தில் அப்படியே தன் தந்தையை கொண்டிருந்தான்! அவனுக்குமே பரபரப்பு தொற்றி கொண்டது! தன் முழு மேற்பார்வையின் இயங்கும் அலுவலகத்திற்கு வருகை தரும் தன் தந்தையை நினைத்து… அவர் அவனது தந்தை மட்டுமில்லாமல் குருவாகவும் நண்பனாகவும் இருந்து வழிநடத்தும் ஆசானை கண்டு மரியாதையை குடுப்பது தவறில்லையே! இப்போதோ வேறொரு பயமும் சேர்ந்து கொண்டதல்லவா! அஞ்சலியை பார்த்து தான் சம்மதம் தெரிவிப்பேன் என்று சொல்லி விட்டு மும்பை வந்திருந்தார்!

நேரம் தவறாமல் வளாகத்தினுள் நுழைந்தவர் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆராய்ந்தார்! ஒவ்வொரிடமும் சென்று பேச ஒரே நாளில் அர்ஜுன் அலுவலகம் வானமாமலையின் ரசிகர் சங்கம் ஆனது! இதில் உள்ளுர நடுங்கி கொண்டிருந்த ஜீவாத்மாவும் உண்டு! அது தான் மேன்மை தாங்கிய அஞ்சலி! அர்ஜுனிடம் அவரை கலாய்த்தவள் ஆயிற்றே! அர்ஜுனை நிமிர்ந்து கூட பார்க்காமல் நெருப்பு கோழி போல கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் முகம் புதைத்து கொண்ட அவளை பார்த்து குறுஞ்சிரிப்பு சிரித்து கொண்டு தன் தந்தையுடன் சென்றான் அர்ஜுன்!

அறைக்கு சென்றவுடன் அஞ்சலிக்கு அழைப்பு வந்தது! இந்த அர்ஜுன் எந்த வம்பும் இழுத்து வைக்காமல் இருந்தால் போதுமே என்று ஊரில் உள்ள கடவுளை எல்லாம் வேண்டி கொண்டு உள்ளே சென்றவள் சேர்மன் எதிரில் அமரும் முன்னமே வியர்த்து விறுவிறுத்து போனாள்!

“வாம்மா… நீ தான் அஞ்சலியா?” முகத்தில் புன்னகையோடு கேட்க

“ஆமாப்பா… ஆனா கூப்பிடறது அபிதகுஜலாம்பா ப்பா…” என்று முந்தி கொண்டு பதிலளித்தவனை பார்த்து முறைத்து விட்டு அஞ்சலியை பார்க்க

“எஸ் சார்…” நடுங்கி கொண்டே

“என்ன படிச்சிருக்க?”

“வேலை செய்ய தெரியாத அளவு படிச்சு இருக்காப்பா… ஹிஹி… பி. ஈ எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் ப்பா…” என்று மறுபடியும் முந்தி கொண்டு சொல்லி மறுபடியும் முறைப்பை வாங்கினான்!

“பி. ஈ… ட்ரிபில் ஈ சார்…” அர்ஜுனுடைய கிண்டலும் சேர்த்து நடுக்கத்தை அதிகரித்தது!

“சொந்த ஊர் சென்னையாம்மா?”

“ஆமாப்பா…” மறுபடியும் அர்ஜுனிடம் இருந்து பதில் வர

“டேய் தம்பி… நீ அஞ்சலியா இல்ல இவ அஞ்சலியா?” என்று கிண்டலாக கேட்க

“நீங்களே கேளுங்கப்பா…” அசடு வழிந்தான்!

“என்னம்மா ஆபீஸ் பிடிச்சு இருக்கா?”

“எஸ் சார்…” அவரை நிமிர்ந்து பார்க்காமலேயே!

“இந்த ஊரு? ”

“எஸ் சார்…”

“இந்த வேலை…”

“எஸ் சார்…”

“என் பையன்?”

“எ…” சொல்லி விட்டு நிமிர்ந்து பார்த்து திக்கி

“சார்…” விட்டால் அழுது விடுபவள் போல இருந்தவளை

“சொல்லுடாம்மா… கொஞ்சூண்டு குறும்பு தான்… ஆனா என்ன பண்றது பையன் நல்ல பையனா போயிட்டானே…”

பதில் சொல்லாமல் தவிப்பாக பார்த்து தலை குனிந்து கொண்ட அஞ்சலியின் நிலை புரிந்த அர்ஜுன்,

“என்னப்பா என் ஆள ரொம்ப கலாய்க்கிறீங்க… அப்புறம் ஓடி போய்ட போறா…” என்று சொல்லிவிட்டு சிரிக்க அஞ்சலி ஒன்றும் புரியாமல் விழித்தாள்!

“தம்பி… நான் இன்னும் ஓகே சொல்லல… அதுக்குள்ள உன் ஆளா?” என்று பதிலுக்கு கிண்டலடிக்க

“சரி சரி அதை மெதுவா சொல்லிகோங்க… உங்க பேரனோ பேத்தியோ பிறந்த பின்னாடி…” என்று சிரிக்க

“டேய்ய்ய்ய்ய்யி தம்பி… என்னடா… சொல்ற? ? ? ?” அதிர்ச்சியோ அதிர்ச்சியாக”ரெடிமேடா வெச்சுகிட்டு தான் கல்யாணம் பண்ண போறியா?”

“ஐயோ அப்பா நான் சும்மா சொன்னேன்! என்னை முறைக்கிறதே நின்ன பாடில்லை… இந்த அழகுல…” என்று குறைபாட…

“மை சன்… அப்பா மாதிரி உனக்கு திறமை இல்லை…” என்று கிண்டலாக கூற

“ஆமா ஆமா உங்கள மாதிரி திறமை யாருக்குப்பா வரும்… உங்க பெர்சனாலிட்டிக்கு இன்னும் எத்தனை பேர் ரசிகர்களா இருக்காங்க…” வாரினான் அஞ்சலியை பார்த்து குறும்பாக சிரித்துக்கொண்டே

“பின்ன அந்த காலத்துல அம்மாகிட்ட…” என்று ஆரம்பிக்க…

“அப்பா… ப்ளீஸ்… ஆரம்பிக்காதீங்கப்பா… மீ பாவம்…” என்று போலியாக அழ

அதை கேட்டு சிரித்து கொண்டே

“டேய் உனக்கு பொறாமை… நம்ம பெர்சனாலிட்டிய பார்த்து…” என்று வார

“ஆமா ஆமா ஆமா… என்ன பண்றது கேர்ள்ஸ் எல்லாம் உங்களை பார்த்து தானே சைட் அடிக்கிறாங்க… அதான் உங்களை பார்த்து பொறாமை…” என்று அஞ்சலியை பார்த்து சிரித்து கொண்டே கூற

“ஹஹஹஹா… தட்ஸ் குட் தம்பி…” என்று விவரம் புரியாமல் வானமாமலை சிரித்து வைத்தார்! அஞ்சலிக்கோ அனல் மேல் அமர்ந்து இருப்பது போல இருந்தது! அவள் பேசுவதற்கு வாயிப்பும் தராமல் தன்னை பற்றி முடிவுக்கு வந்து விட்டு பேசிக்கொண்டு இருந்த பெரியவரை பார்த்து அஞ்சலிக்கு தலை சுற்றி போனது… அதோடு அர்ஜுனின் கிண்டல் வேறு! ஆண்டவா என்னை காப்பாத்து இந்த மடையன் கிட்ட இருந்து என்று மனதிற்குள் அப்ளிகேஷன் போட்டு கொண்டு இருந்தாள்! வானமாமலை அஞ்சலியை பார்த்து

“என்னம்மா… ரெண்டு பேரையும் பார்த்து மிரண்டு போயிட்டியா? நாங்க எப்பவுமே இப்படிதாண்டா… பிரெண்ட்ஸ் மாதிரி தான்! அவனோட அம்மா தம்பியோட ஆறாவது வயசுல மூளை காய்ச்சல் வந்து இறந்து போய்ட்டா… அப்போ இருந்து எனக்கு தம்பி மட்டும் தான்ம்மா உலகம்… தம்பியும் எல்லா விதத்திலும் கரெக்டா இருப்பான்… பதினாறு வயசிலயே தொழில கத்து குடுங்கப்பான்னு வந்து நின்னான்… அப்போவே அவ்வளவு பொறுப்பு! அவன் எடுக்கற முடிவு என்னைக்கும் தப்பா போனதே கிடையாது அஞ்சலி… உன்னை பத்தி சொல்லி அஞ்சலிய எனக்கு பிடிச்சு இருக்குப்பான்னு சொன்னப்போவே நான் சரின்னு சொல்லிட்டேன்… ஏன்னா என் பையனோட தேர்வு என்னைக்குமே தவறா போகாது… இனிமே நீ என் பொண்ணு சரியா அஞ்சலி…” தடாலடியாக கூறியவரை பார்த்து ஒப்பு கொள்ளவும் முடியாமல் மறுதலிக்கவும் முடியாமல் வார்த்தைகளை தொலைத்து விட்டு பார்த்து கொண்டிருந்தாள்!

பேசி கொண்டிருக்கும் போதே அர்ஜுனின் செல்பேசி அழைத்தது! கெளதம் தான் அழைத்து இருந்தான்! செவிக்கு கொடுத்தவுடனே

“மச்சான்… ஒரு ஷாக்கிங் நியூஸ்…”

“என்னடா…” அர்ஜுன் குரலிலும் பதற்றம் தொற்றி கொண்டது!

“கணபதி இஸ் நோ மோர்… ஹார்ட் அட்டாக்…”

“ஆடி அடங்கும் வாழ்க்கையடா

ஆறடி நிலமே சொந்தமடா”

வாழ்க்கையில் எதுவுமே சாஸ்வதம் இல்லாத போது எதை நோக்கி மனிதன் பறக்கிறான்? ஒரு ஜென் கதை உண்டு… இந்த பெரிய உலகம் என்று நாம் நினைப்பதே இந்த பிரபஞ்சத்தின் ஒரு சிறு தூசி தான் என்பதும் அந்த பிரபஞ்சத்தோடு ஒப்பிடுகையில் கையகல நிலத்துக்காக அடித்து கொள்ளும் மனிதர்களை பார்க்கும் போதெல்லாம் பரமாத்மா சிரிக்கிறார் என்று போகும் அந்த கதை! அதை போலத்தான் வாழ்க்கையும் இந்த பிரபஞ்சத்தின் வயதை ஒப்பிடும் போது மின்னி மறையும் இந்த மனிதன் ஆடும் ஆட்டம் தான் எத்தனை! எத்தனை!

அனைத்தும் நடந்து முடிந்து இருந்தது! வாதாடுவதற்கு வழக்கறிஞர் வைக்க கூடாது என்பதற்கு விளக்கத்தை சிறையில் பெருமாள் மூலம் கேட்டவர் மனம் இறுகி போய் தன் மகளாலேயே தான் இப்படி ஒரு அவமானத்தை சந்திக்க நேரும் என்று அறியாமல் தான் செய்த குற்றங்களை எண்ணி வெதும்பி போய் அமர்ந்தவர் தான்! வழக்கறிஞரை அழைத்து சிறிது நேரம் பேசி கொண்டு இருந்தவர் செய்ய வேண்டிய சில செயல்களை அவரிடம் கூறினார். எழுதி கொடுக்க வேண்டியதை எல்லாம் எழுதி கொடுத்து விட்டு தனிமையில் சென்று அமர்ந்தவர்! சிறிது நேரம் கழித்து பெருமாள் அழைக்க போக உயிரற்ற உடலே கீழே சாய்ந்தது!

காரியங்களை கெளதம் முன்னின்று முடித்தான். உடன் அர்ஜுனும் அவனுக்கு உதவி செய்ய, அஞ்சலி மேகா பக்கத்திலேயே இருந்து அவளிடம் பேச்சு குடுத்து கொண்டே இருந்தாள்! வானமாமலை வந்திருந்தது அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது! கௌதமின் தாய் மஞ்சுவும் அஞ்சலியின் பெற்றோரும் உடன் இருக்க பிருந்தா தன் கணவரை எண்ணி அழுது தீர்த்தார்! என்னதான் மனிதர் வெளியே அடாத செயல்கள் செய்தாலும் அவரது மனைவிக்கு அவர் கணவர் தானே. தன்னுள் இறுகி போய் அமர்ந்திருக்கும் மகளை இடித்துரைக்கவும் முடியாமல் தனக்குள் வைத்து கொள்ளவும் முடியாமல் கதறி கொண்டிருந்தார். நடக்கின்ற காரியங்கள் அனைத்தையும் பேச்சே இல்லாமல் உணர்ச்சி இல்லாத முகத்தில் வெறித்த பார்வையோடு பார்த்து கொண்டிருந்தாள் மேகா! அவள் மனதில் எந்த சலனமும் இல்லை!

கரும காரியங்கள் எல்லாம் முடிந்தவுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்களோடு அர்ஜுன் அவனது தந்தை, கெளதம் அவனது தாய், மற்றும் அஞ்சலியின் பெற்றோர் மட்டும் இருக்க கணபதியின் உயில் வாசிக்கப்பட்டது! சொத்தை மூன்றாக பிரித்து பகுத்திருந்தார். சசி, விஷால் இன்னும் சிலரிடம் இருந்து வம்படியாக பிடுங்கிய சொத்துக்களை அவர்களிடமே திருப்பி தர கூறி இருந்தார். சொத்தின் ஒரு பாகத்தை அறக்கட்டளையாக மாற்றி அதற்கு டிரஸ்ட்டியாக கெளதமுடன் அர்ஜுனையும் மேகாவையும் இணைத்து இருந்தார். அந்த டிரஸ்ட் மூலம் ஆதரவில்லாதவர்களுக்கு சேவை செய்ய கூறி இருந்தார். மூன்றாவது தொகுதியில் பாதியை பிருந்தாவின் பெயருக்கு எழுதி வைத்தவர் மற்ற அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் தன் வியாபாரத்தையும் கெளதம் பெயருக்கு மாற்றி இருக்க கடைசி குறிப்பாக மேகாவை கௌதமோடு திருமண பந்தத்தில் இணைக்க விருப்பம் தெரிவித்து தனியாக ஒரு கடிதமும் எழுதி இருந்தார்.

அன்பு மகளுக்கு,

என் உயிரான எனது அன்பு மகளே! செய்த காரியங்கள் அனைத்தையும் உனக்காகத்தான் செய்தேன் என்று கூறி உன் முதுகில் என் பாவ கணக்கை ஏற்ற நான் விரும்பவில்லை. உனக்கே தெரியும் உனது தந்தை தங்க கரண்டியோடு பிறந்தவன் இல்லை என்பது. ஆனாலும் நானும் வாழ்க்கையில் முன்னேறியே காட்ட வேண்டும் என்று எனக்கு வெறி உருவாக காரணம் நான் என் வாழ்வின் ஆரம்பத்தில் சந்தித்த அவமானங்கள். எவ்வளவோ அடி மேல் அடி வாங்கித்தான் நானும் முன்னேறினேன் மகளே! அந்த வியாபார போட்டியில் அனைத்தும் சகஜமாகியது! நான் என்னை நியாயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் நான் ஓடிய ஓட்டத்தில் பின் தங்கினால் வாழ்க்கை போய் விடும். நான் சந்தித்த அவமானங்கள் எல்லாம் என் சந்ததி பட கூடாது என்பதிறக்காக அந்த ஓட்டத்தை நான் ஓடினேன். ஆனால் நான் செய்த தவறுகளுக்கு எல்லாம் நானே காரணம். சசி எந்த வகையிலும் தவறானவன் கிடையாது அவனுக்கு நான் செய்த அநீதிக்கு எதுவுமே ஈடாகாது. அவனது போராட்டத்திற்கு நானே முற்றுமான காரணம். இதன் மூலம் அவர்களது சொத்துக்கள் அனைத்தையும் அவர்களுக்கே திருப்பி தர நினைக்கிறேன். வக்கீலிடம் கூறி இருக்கிறேன். அவர் பார்த்து கொள்வார். எனது பாவமாக என் குழந்தை நினைக்கும் எதுவும் எனக்கு தேவை இல்லை. நான் வியாபாரத்தில் மூழ்கி இருந்ததால் உன்னை கவனிக்காமல் இருந்து இருக்கலாம் மேகா ஆனால் நீயே எனது உயிர்! நீ வெறுக்கும் என் உயிரை இப்போது நானும் வெறுக்கிறேன் என் மகளே!

இப்படிக்கு

கணபதி

பின் குறிப்பு :

அன்பு மருமகனுக்கு,

கெளதம், நான் உங்களுக்கு கூற வேண்டியது எதுவும் இல்லை! என்னை விட என் மகளை நீங்கள் கண்ணின் மணியாக பார்த்து கொள்வீர்கள் என்று எனக்கு தெரியும்! மனிதர்களை எடை போட தெரியாதவன் நான் இல்லை! ஒரு நாளிலேயே உங்கள் கண்களில் அந்த தவிப்பை பார்த்தேன். எனது மகள் அந்த வகையிலாவது குடுத்து வைக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்தனை செய்கின்றேன்!

படித்து முடித்தவுடன் குண்டூசி விழும் ஓசை கேட்குமாறு மெளனம் நிலவியது! யாரும் இதை எதிர்பார்க்காததால் கல்லென சமைந்து இருந்தனர்! முதலில் தன்னிலைக்கு திரும்பிய வானமாமலை நின்று கொண்டிருந்த கௌதமின் தாய் மஞ்சுளாவை பார்த்து

“அம்மா… துக்கம் நடந்த வீட்ல சீக்கிரமா ஒரு சுபகாரியம் வைக்கணும்னு சொல்லுவாங்க! கணபதியும் அவரோட விருப்பத்த தெரிவிச்சுட்டார். நீங்க என்னம்மா சொல்றீங்க?”

“தம்பியோட விருப்பம் தான் அண்ணா என் விருப்பமும். சின்ன வயசுல இருந்து பாக்கறீங்க. அவங்க அப்பா இருந்து இருந்தாலும் இதையே தான் சொல்வாங்க. நீங்களும் அஞ்சு அப்பாவும் எப்படி பார்த்து முடிவு பண்றீங்களோ அப்படியே செய்துடலாம்ண்ணா”

“அப்புறம் என்ன? என்னங்கமா, … நீங்க என்ன சொல்றீங்க?” என்று பிருந்தாவை கேட்க

“எனக்கும் சரியாதாங்க படுது… அவர் சொன்ன மாதிரியே செய்துடலாங்க…” என்று கூறவும்

“சரிங்கம்மா… முப்பது முடிஞ்சவுடனே பேசிக்கலாம்… இப்போ வேண்டாம்!” என்று கூறி விட்டு ஒவ்வொருவராக எழுந்து கௌதமின் முதுகை தடவி விட்டு கை குடுத்து விட்டு போக கடைசியில் மிஞ்சியவர்கள் கெளதம் அர்ஜுனோடு அஞ்சலி மேகாதான்!

கல்லாக சமைந்து இருந்தவளை பார்த்து அருகில் சென்ற கெளதம் அவளது தோளில் கை வைக்க, மேகா அது வரை அடக்கி வைத்து இருந்த கண்ணீர் மடை திறந்த வெள்ளமாக உடைந்தது! கௌதமின் மார்பில் சாய்ந்தவள் கதறி தீர்த்தாள்! எதற்கு அழுகிறோம், ஏன் அழுகிறோம் என்று கூட அறியாதவளாய் சுற்றுபுறம் அனைத்தையும் மறந்து நடந்து முடிந்த அனைத்துக்குமாக அழுது தீர்த்தவளை பார்க்கும் போது அந்த மூவருக்கும் வேறு எதுவுமே தோன்றவில்லை!

“நானே எங்கப்பாவ கொன்னுட்டேனா கெளதம்? ஒரு மகளா நான் அவருக்கு உரிய நியாயத்த குடுக்கலையா?” என்று கதறி கொண்டு கேட்டபோதே அவளுடைய எண்ண ஓட்டம் புரிந்தது! இருதலை கொள்ளி எறும்பாக அவள் துடிப்பது புரிந்தது!

“இல்லடா… நீ காரணம் இல்ல… சசிக்கும் உங்க அப்பாவுக்கும் இடைல வந்த சண்டைல உன்னை இழுத்துட்டாங்க! அவ்வளவு தான்… உனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் வேணாம் மேகா!”

“ஆனா என்னால அப்படி நினைக்க முடிலையே கெளதம்! என் மனசு ரணமா இருக்கே…”

“ச்சு… அந்த மாதிரி நினைக்காதம்மா… கொஞ்ச நாள் போனா சரியா போய்டும்… கல்யாணத்துக்கு அப்புறம் தானா இந்த எண்ணம் மாறிடும் மேகா…” என்று அர்ஜுன் கூற

“நோ…” என்று வீறிட்டாள்!

“ஏன்டா… ஏன்…” என்று அஞ்சலி கேட்க

“வேணாம் அஞ்சலி… கெளதம் எனக்கு இப்போ ஒரு நல்ல நண்பர் தான்… அதோட இருக்கட்டும்… என்னால கல்யாணத்த ஜீரணம் பண்ண முடியல…”

“எத்தனை நாளைக்கு மேகா இப்படியே சொல்லிட்டு இருப்ப… உன்னோட கோபத்துக்கு அடிப்படை காரணத்த உன் அப்பா சரி பண்ணிட்டார் மா… எப்படியும் நீ கல்யாணம் பண்ணிக்க தானே போற… அது எங்க கௌதமா இருக்க கூடாதா?” சிறிது கோபத்தோடு அர்ஜுன் கேட்க

“முடியாது முடியாது முடியாது…” என்று மேகா கத்த

“ஏன் முடியாதுன்னு சொல்ற மேகா? அதுக்கு பதில சொல்லு… சசிய மறக்க முடியலைன்னு சொல்லாத… அது முடிஞ்சு போன விஷயம்! யாருமே லவ் பண்றது இல்லையா? இல்லகாதல்ல தோத்து போய்ட்டா கல்யாணமே பண்ணிக்கிறது இல்லையா? நீ செய்றது முட்டாள்தனம் மேகா…” என்று அஞ்சலி அவளது வாதத்தில் இருக்க

“நான் மத்த யாரை பற்றியும் சொல்லல அஞ்சு! என்னால இன்னொரு முறை காதலிக்க முடியாது! இது இல்லைன்னா அதுன்னு என்னால ஏத்துக்க முடில! சசி முதல்ல என்னை காதலிக்கல… நடிச்சார்தான்… இல்லைன்னு சொல்லல… ஆனா என் காதல் உண்மைதானே… அது எப்படி பொய்யாகும்? இப்போ கௌதம என்னால நல்லா புரிஞ்சுக்க முடியுதுதான்… ஆனா என்னால அவர் வாழக்கை நாசமாக வேணாம்… கண்டிப்பா என்னால அவருக்கு நல்ல மனைவியா இருக்க முடியாது…”

அது வரை மெளனமாக அனைவரின் வாக்குவாதத்தை கேட்டு கொண்டிருந்த கெளதம்

“விட்ரு அர்ஜுன்… கெஞ்சி கேட்டு யாரையும் காதலிக்க வைக்க முடியாது… அந்த அசிங்கத்த நானும் செய்ய விரும்பல… மேகா என்னைக்கும் எனக்கு நல்ல பிரெண்ட் தான்… அதோட இருக்கட்டும்… எண்ண ஹெல்ப் வேணும்னாலும் நான் செய்றேன்… அதுக்காக அவளை யாரும் குற்றம் சாட்ட வேணாம்…”

என்று கூறி அவன் முடிக்க நிலைமையை சீராக்க அர்ஜுன்,

“நானும் அதையே தான் சொல்றேன்… உன் தங்கச்சி கிட்ட கெஞ்சி கெஞ்சி எனக்கும் போர் அடிக்குது…”

“என்னத்துக்கு…” என்று கெளதம் இயல்பாக கேட்க

“ஒரே ஒரு உம்மாதான்டா அன்னைக்கு கேட்டேன்… அதுக்கு காளிகாதேவி மாதிரி பார்க்குறா…” என்று சிரிக்காமல் சொல்ல

“அதுக்கு செருப்ப தூக்காம விட்டாளேன்னு சந்தோஷப்படு மச்சி…” சிரித்தான்!

“அண்ணனும் தங்கச்சியும் லார்ட் லபக்கு தாசுப்பா… ரொம்பத்தான்…” என்று குறை பட

“சரி அந்த லபக்கு தாச நீங்க எதுக்கு ஜேஎம்டி சார் லவ் பண்றீங்க?” என்று நக்கலாக அஞ்சலி கேட்க

“என்ன பண்றது… என் விதி அப்படி ஆய்டுச்சே…” என்று சிவாஜி ஸ்டைலில் முழங்க

“அடப்பாவி விதியா… எலிக்குட்டி என்னன்னு கேளு…” என்று அவளுக்கு எடுத்து கொடுக்க

“அண்ணா… இப்போ இப்படி சொல்லுவாங்க… அப்புறம் கண்டபடி பேசுவாங்க… எனக்கு இந்த லூசு சாவகாசமே வேணாம்…” என்று அவளும் அவள் பங்கிற்கு முடிக்க

“ஏய்… நான் என்ன கண்டபடி பேசுனேன்?” இவர்களது சிறுபிள்ளைத்தனமான வாக்குவாதத்தில் தன் கவலை மறந்து சிரித்து கொண்டிருந்தாள் மேகா!

“பின்ன… நான் தான் அவளோ பணக்காரன் இவ்ளோ பணக்காரன் ஆச்சே… நீ என்னை லவ் பண்ணா என்ன தப்புன்னு கேட்டு யாராவது ப்ரோபோஸ் பண்ணுவாங்களா… இல்ல அதுக்கு தான் சூடு சுரனை இருக்கற எந்த பொண்ணாவது ஒத்துக்குவாளா?” என்று முதல் முறையாக தன் மனக்குமுறலை வெளியிட

தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டான் அர்ஜுன்!

“நீ இதுக்காக தான் தள்ளி தள்ளி போனியா? இதை முன்னமே சொல்றதுக்கு என்ன”என்று அவன் கேட்க, அதை கேட்டு கௌதமும்

“டேய் மாப்பு… இப்படி எல்லாம் வேற செல்ப் ஆப்பு வெச்சுகிட்டியா? நான் தான் அன்னைக்கே சொன்னேனே… நீ இன்னமுமா அந்த கதைய விடல…”

“போடா இவனே… அன்னைக்கு இந்த எலி சொன்னத வெச்சு ஒரே ஒரு தடவ தான் சொல்லி காட்டினேன்… அதுக்கு போய்… அதுவும் இல்லாம எவ்ளோ லொள்ளு இருந்தா அப்படி சொல்லுவா…” என்று குறை பட

“இந்த எலின்னு சொல்றதெல்லாம் வேணாம்…” என்று அஞ்சலி மிரட்ட

“அப்படித்தான் சொல்லுவேன்… சுண்டெலி… பெருச்சாளி…” என்று பழிப்பு காட்ட

“வேணாம் அர்ஜுன்…”

“அதையே தான்டி நானும் சொல்றேன்… இந்த லொள்ளெல்லாம் வேணாம்…”

“என்னது டி யா?” என்று கோபமாக கேட்க

“ஆமாம்டி… அப்படித்தான் டி… இன்னும் டி… டி போடுவேன்டி… நீ டி என்ன டி பண்ணுவ டி…” என்று மாற்றி மாற்றி டி போட்டு காட்ட

“வேணாம் அர்ஜுன்… அப்புறம் நானும் டா போடுவேன்…”

“போட்டு தான் பாரு… இங்கேயே உன் வாய ஸ்டிச் பண்ண வேண்டியதுதான்… என்ன… உனக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே தான்…” என்று கூறி கண்ணடிக்க

“டேய் மாப்ள… அது என்னடா ஸ்டிச் பண்றது… எனக்கு கொஞ்சம் சொல்லேன்…” என்று கெளதம் கேட்க

“டேய்… நீ சின்ன குழந்தைடா… உனக்கு நான் தனியா சொல்றேன்…” என்று சிரித்து கொண்டே கூறி கண்ணடிக்க

“என்னது சின்ன குழந்தையா?” என்று கெளதம் வாயை பிளக்க

“அர்ஜுன்ன்ன்ன்ன்ன்ன்…” என்று அஞ்சலி கத்த

“எரிமலை எப்படி பொறுக்கும்…” என்று விவேக்கின் பிஜிஎம்மை அவளுக்கு வாசித்தான் அர்ஜுன்!

“வேணாம்…” என்று அழாத குறையாக கூற

“ஓகே ஓகே… டேய் மச்சி… இப்போ உனக்கு ஒரு பொதுஅறிவு கேள்வி கேட்கட்டா?” என்று கெளதமை பார்த்து கேட்க

“கேளு மாப்பு…” என்று அவனும் ஆர்வமாக கேட்க

“நீ என்ன படிச்ச?”

“பி ஈ… எம்பிஏ… ஏன் கேக்கற?”

“ஒரு பி ஈ யா இல்ல ரெண்டு பி ஈ யா?”

“ஏன்டா கேன… யாராச்சும் ரெண்டு தடவ பிஈ படிப்பாங்களா…”

“படிக்கறாங்களே… ஒரு அறிவு ஜீவி எனக்கு குடுத்த செர்டிபிகேட்ல பிஈ… ஈசிஈ ன்னு கொடுத்துச்சு… அப்புறம் அப்பா கேக்கும் போது ட்ரிபிள் ஈ ங்குது டா… ஆக்சுவலா என்னதான் படிச்சான்னு எனக்கும் தெரியல… உனக்கு தெரியுதா?”

“யார் அந்த அறிவு ஜீவி?” என்று சிரித்து கொண்டே கேட்க

“வேற யார்… உன் பாசமலரே தான்…” என்று சிரிக்க

கையில் கிடைத்த நோட்டு புத்தகத்தை எடுத்து கொண்டு அவன் மேல் தாக்குதல் நடத்த தயாராக

“நோ நோ… எதுவானாலும் பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்… இந்த மாதிரி வன்முறைல இறங்கறது ஒரு தமிழ் பொண்ணுக்கு அழகில்ல…” சிரித்து கொண்டே

“எது வன்முறை… புலிய முறத்தால அடிச்சு துரத்துறதுதான் தமிழ் பண்பாடாக்கும்… அது தெரியுமா?”

“அஞ்சு… அது புலி… அண்ணன் எலிப்பா…” என்று நடுவில் மேகா போட்டு தாக்க

“வாவ்… மேகா… சூப்பரா சொன்ன…” என்று ஹை பை குடுத்தாள்!

“சரி எலின்னே வெச்சுகோங்க… ஆனா அப்பா முன்னாடி உளறுனியா இல்லையா?” என்று விடாமல் அஞ்சலியை வார

“அன்னைக்கு ரெண்டு பேருமா என்னை கலாய்ச்சு ஒரு வழி பண்ணி… அதுல ஏதோ நான் தெரியாம சொல்லிட்டேன்… அதுக்கு இப்போ என்ன?” என்று கேட்க

“யாருடா… அப்பா கலாய்ச்சாங்களா… நல்லா செய்வாங்களே… இவன தூக்கி சாப்பிற்றுவாங்க இந்த சாரோட அப்பா… நல்லா மாட்டிகிட்ட எலிக்குட்டி…” என்று கெளதம் சிரித்து கொண்டே கூற

“அதான்… நான் மாட்டவே மாட்டேனே… நான் எஸ்கேப்…” என்ற அஞ்சலியின் காதை பிடித்து இழுத்து

“இங்க பாரு… உன் அண்ணன் வேணும்னா தியாகி மாதிரி மேகா நோ சொன்னா உடனே இவனும் தலைய ஆட்டலாம்… ஆனா நான் அப்படி இல்ல… இழுத்துட்டு வந்து தாலி கட்டுவேன்… தெரிஞ்சுக்கோ…”

“டேய் மாப்பு… ஏன்டா… இதுல எங்களை இழுக்கற?”

“இல்ல மச்சி… எடுத்துகாட்டு குடுக்கறேன் மச்சி…”

“அதை குடுக்கறேன் இதை குடுக்கறேன்னு எங்களை டேமேஜ் பண்ணாத மாப்பு…” என்று சிரித்து கொண்டே கூற

“மச்சி… இதுக்கு மேலயும் மேகா உனக்கு சப்போர்ட் பண்ணிட்டா உன்னை கைல பிடிக்க முடியுமா… இப்போவே அம்மணிக்கு எப்படி சப்போர்ட்… எனக்கும் தான் ஒன்னு இருக்கே… எப்போ என்னை கொலை பண்ணலாம்ன்னு வெறியோட அலையுது…” பாவமாக கூற அதற்கு சிரித்து கொண்டே மேகா பக்கம் திரும்பினான் கெளதம், … அப்போதே மேகாவும் திரும்ப… கண்கள் இரண்டும் சந்திக்க… சட்டென்று பார்வையை மீட்டு கொண்டாள் மேகா!

“ஆமா… நீங்க பண்ற லூட்டிக்கு வேற என்ன பண்றது? சிம்பிளா ஒரே ஒரு கொலை பண்ணிக்கிறேனே ப்ளீஸ்…” என்று அஞ்சலி சொல்லி விட்டு மேகாவிடம் ஹைபை குடுக்க

“அடப்பாவி… கொலையும் செய்வாள் பத்தினின்னு சொல்றது உண்மைதான் போல்… தனியா மாட்டவா மாட்ட… அப்போ சொல்லி தரேன்… என்ன பண்றதுன்னு…” என்று கூற

“யூ… யூ…” என்று தூக்கி போட்ட கனமான நோட்டை தேட

“மீ… மீ… வாட் டு யூ வான்ட் டார்லிங்… ஐம் அட் யூர் சர்விஸ்…” என்று கண்ணடிக்க

இதை பார்த்து சிரித்து கொண்டே மேகாவை அழைத்த கெளதம்

“மேகா… நீ வந்துடு… இனிமே எல்லாம் அடல்ட்ஸ் ஒன்லியா தான் போய்ட போகுது… நீ பச்ச புள்ளை மேகா…” என்று சிரிக்க

“மச்சி… அடங்கு… தனியா மேகாவ கூட்டிட்டு போறதுன்னா போ… அதுக்காக ஒரு ராட்சசிகிட்ட கிட்ட என்னை மாட்டிவிட்டு கண்டபடி பினாத்திட்டு போகாத…” என்று அலற

“யார் ராட்சசி… யார் ராட்சசி…” என்று மல்லுக்கு நிற்பது போல் அஞ்சலி கேட்க

அர்ஜுன் முகத்தை பாவமாக வைத்து கொண்டு

“இப்படி பயமுறுத்தி கேட்டா நான் என்ன பண்றது? மச்சான் என்னை தனியா விட்டுட்டு போகாதடா…”

“ஏய் லூசு… இப்போ எதுக்கு இப்படி கத்தி என் மானத்த வாங்குற…” அஞ்சலி கடுப்பானாள்!

“இல்ல ஆபீசர்… இப்படி நீங்க நிக்கறத பார்த்தா ஆபீசர்… மீ கிரீன் புள்ளை ஆபிசர்… பயந்துடுவேன் ஆபீசர்…” என்று பயந்தது போலவே முகத்தை வைத்து கொண்டு கலாய்க்க அதை பார்த்து மூவரும் சிரித்தனர்!

“ச்சே… உனக்கெல்லாம் வெட்கமே இல்லையா?” எரிச்சல் எட்டி பார்த்தது அஞ்சலியின் குரலில்… அண்ணன் முன்னரே இப்படி இவன் கலாய்ப்பதை பார்த்து!

“டார்லிங்… வாட் டு யூ மீன் பை வெட்கம்? கேன் யூ ப்ளீஸ் எக்ஸ்ப்லைன் தி டெர்ம் வெட்கம்? அண்ட் வேர் கேன் இட் பீ பாட்? கிலோ எவ்ளோ ப்ரைஸ்? சொல்லும்மா சொல்லு…” என்று கூறவும்

இருவரும் வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க அஞ்சலி கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்து அடிக்க ஆரம்பித்தாள்!

“ச்சே… பிசாசு… காட்டேரி… நீ ஒரு எருமை மாடு… உனக்கெல்லாம் வெட்கம் மானம் எதுவுமே கிடையாது…” என்று ஒவ்வொரு திட்டு வார்த்தைக்கும் ஒவ்வொரு பொருளை வீசி எறிய…

“ஹௌசாட், …” என்று ஒவ்வொன்றாக கேட்ச் பிடித்து அவளின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்து கொண்டிருந்தான்! சுற்றிலும் பார்த்து விட்டு கனமான இரவு விளக்கை தூக்க போக… அதை பார்த்த அர்ஜுன் அலறினான்!

“வேனாம்டி… நீ விதவையா ஆய்டுவ…”

“என்னது விதவையா? இதுக்கே உன்னை அடிக்கணும்…” என்று கூறி விட்டு அதை தூக்கி எறிய முயல…

“வாடி வாடி வாடி என் க்யூட் பொண்டாட்டி…

நான் தாங்கமாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி…” என்று பாட ஆரம்பிக்க கோபத்தின் உச்சத்திற்கு போனாள் அஞ்சலி…

“என்னதுதுதுது…” என்று பல்லை கடித்து கொண்டு கேட்க

“ஏய்… பொண்டாட்டின்னு தானடி சொன்னேண்டி… அதுக்கு டி எதுக்கு டி இப்படி ஒரு ரியாக்ஷன் டி… ஓகே டி இனிமே உன்னை வப்பாட்டின்னே சொல்றேன்டி… ஓகே வா டி…” என்று மூச்சுக்கு முன்னூறு தடவை டி போட பக்கத்தில் போன அஞ்சலி அவனது தலை முடியை ஒரே கொத்தாக பிடித்தாள்!

“சொல்லுவடா சொல்லுவ… உனக்கு எவ்ளோ கொழுப்பு இருந்தா இப்படி லொள்ளு பண்ணிட்டு இருப்ப…” என்று முடியை பிடித்து ஆட்ட

“ஆஆஆஆ… டேய் கெளதம்… வந்து தொலை டா… என்னை கொல்றாடா கொல்றா…”

என்று அவர்களின் செல்ல சண்டையை பார்த்து வயிறு வலிக்க சிரித்த மேகாவும் கௌதமும் சத்தமில்லாமல் வெளியேறி இருந்தனர்!

“டேய்ய்ய்யி கெளதம்… உன் பிரெண்ட் உயிருக்கு பாதுகாப்பு இல்லைடா… உள்ள வந்து தொலை…” என்று கத்த

“நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு முடிச்சுட்டு கூப்பிடுங்க ராசா… இப்போ ஆள விடு… நான் காபி குடிக்கணும்…” வெளியே இருந்து சப்தம் கேட்க

“ஏய் அபிதகுஜலாம்பா… விட்றி என்னை…” என்று அவளிடம் கத்த

“அபித குஜலாம்பாவா… உனக்கு இது பத்தாது…” என்று முடியை பிடித்து இன்னும் ஆட்ட

அர்ஜுன் சட்டென்று அவள் புறம் திரும்பி, குறுஞ்சிரிப்பாக பார்த்து கண்ணை சிமிட்ட அவளது பிடி நழுவியது! முகம் ரத்த சிவப்பாக, கையை எடுக்க போனவளின் கையை மெதுவாக பற்றியவனுக்கு மனதெல்லாம் மல்லிகை! சோபாவில் அமர்ந்து இருந்தவன் கண்களில் சிரிப்போடு அவளை மெதுவாக தன் புறம் இழுக்க… அஞ்சலிக்கோ கைகள் நடுங்க ஆரம்பித்தது! சட்டென்று விலகவும் முடியாமல் அர்ஜுன் இறுக்கமாக கையை பிடித்து இருக்க அஞ்சலிக்கு கால்கள் தள்ளாடின! விடுவித்து கொள்ள போராட… அர்ஜுனோ விடுவேனா என்று கைகளை பற்றி இழுத்து தன் மேல் அஞ்சலியை சரித்து இருந்தான்!

“அர்ஜுன்ன்ன்ன்… ப்ளீஸ்…”

“என்ன ப்ளீஸ்?” என்றவன் குரலோ அநியாயத்திற்கு குழைய… அவளை இன்னும் தன் பக்கம் இழுத்து அவளது இடையை பற்றினான்!

“வெளில எல்லாரும் இருக்காங்க…” முகம் சிவந்து திக்கி திணறி பாதியை விழுங்கியவாறு கூற

“அப்போ… தனியா வெளிய போலாமா…” கிசுகிசுப்பாக அவளது காதில் கூற, அந்த தொட்டும் தொடாத ஸ்பரிசம் அவளை ஏதேதோ செய்தது! அவனது மூச்சு காற்று சூடாக அவளது கழுத்தில் மேவ, சிலிர்த்தாள்! அவனது வன்மையான காதல் அவளை திணற செய்ய,

“ம்ம்ஹும்… நான் மாட்டேன்…” என்று அவளும் கிசுகிசுக்க, அந்த பேச்சு, அவளது நாணம், அண்மை எல்லாமாக சேர்த்து அர்ஜுனை அவன் வசம் இழக்க வைத்தது! பூமெத்தையாக தன் மேல் கிடந்தவளை இழுத்து அணைத்தவனுக்கோ இந்த உலகின் அனைத்துமே மறந்தது! கொஞ்சம் முரண்டியவள் சிறிது சிறிதாக தன் வசம் இழக்க கடைசியில் அவனுடன் ஒன்றினாள்! மென்மையாக முகத்தை பற்றியவன் பளிங்கு முகத்தில் தன் உதடுகளால் கோலம் போட அஞ்சலி கால்கள் தொய்ந்து அவனது கரங்களில் விழுந்தாள்!

“ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் அர்ஜுன்ன்ன்ன்ன்…” விலக வழி தெரியாமல் அவனிடமே கெஞ்ச

“ப்ளீஸ்ஸ்ஸ் ஜுஜுகுட்டி…” அவனும் கெஞ்ச

“என்னது ஜுஜு…” என்று புரியாமல் கேட்கும் போதே… திடீரென்று செல்பேசி அழைக்க சட்டென்று இருவரும் விலகினர்! அவனை ஏறிட்டு பார்க்கவும் முடியாமல்… தவித்து… எழுந்து… வெளியே செல்ல எத்தனிக்க… விடாமல் அவள் கையை அர்ஜுன் பற்றி… தன்னருகே வைத்து கொண்டே செல்பேசியை எடுத்து காதுக்கு கொடுத்தான்! அழைத்தது அவனது தந்தை…

“அர்ஜுன்… கொஞ்சம் வெளிய வர்றியாப்பா…”

“ஏன்ப்பா?”

“அஞ்சலி வீட்டுக்கு போய் பார்க்கலாம்னு கூப்பிட்டேன்… வேணாம்னா விடு அர்ஜுன்… வேற பொண்ணு பார்த்துக்கலாம்…”

“ஐயோ… அப்பா… என்னை வாழ வைத்த தெய்வமே… நீங்க கூப்பிட்டு நான் வராம இருப்பேனா? நீங்க ஒரு கல்ல காட்டி தாலி காட்டுடான்னு சொன்னா கூட நான் கட்டுவேன்ப்பா… ஏதோ இந்த அஞ்சலிய போனா போகுதுன்னு கட்டிக்க மாட்டேனா… இதோப்பா…” என்று மூச்சுக்கு முன்னூறு தடவை விழுந்து எழுந்து ஓடியவனை பார்த்து சிரித்தாள் அஞ்சலி… உள்ளே ஆயிரம் பூக்கள் ஒன்றாக மலர்ந்தது போன்ற மலர்ச்சி!

*********

அனைவரின் பூரண சம்மதத்தோடு திருமணம் நிச்சயிக்கபட்டது! அஞ்சலியின் பாட்டியில் இருந்து பெற்றோர் என அனைவருக்கும் மிகவும் திருப்தியாக அர்ஜுன் அமைந்ததில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது? சிறு வயதிலேயே அவனுடைய எளிமையை பார்த்தவர்கள் தானே… அந்த எளிமை அவனது தந்தையின் பதிப்பு என்பது அவர்கள் அறியாயதது இல்லையே! துக்கம் நடந்த வீட்டில் வைத்து பேச வேண்டாம் என்று அஞ்சலியின் வீட்டிற்கு அழைத்து போய் அவர் பெண் கேட்டது அவர்களுக்கு திருப்தியாக இருந்தது. தனது ஒரே மகளுக்கு நல்ல மாப்பிள்ளை மட்டும் அல்லாமல் மாமனாரும் இந்த அளவு புரிந்து கொள்பவராக அமைவதில் சிவதாணு மங்களத்திற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முறையாக பெண் பார்ப்பதையும் நிச்சயிப்பதையும் ஒரே நாளில் வைத்து கொள்ள முடிவானது!

 

நிச்சயத்தன்று காலையில் இருந்தே அஞ்சலிக்கு படபடப்பாக இருந்தது! அவளுடைய நண்பர்கள் படை வேறு ஆளாளுக்கு வந்து

“அக்கா இனிமே நீ விளையாட வரமாட்டியா?” என்று வேறு கேட்டு அவளது துக்கத்தை அதிகப்படித்தி விட்டு சென்றனர்! அவ்வப்போது, செல்பேசியில் பேசுகிறேன் என்று சொல்லி கிண்டலடிக்கும் அர்ஜுனும், திருமணம் முடிவானது முதல் பேசவே பேசாதது அவளது துக்கத்திற்கு முழு முதற் காரணமாக இருந்தது! அவனுக்கு வேலை அதிகம் என்பது தெரியும் தான்… ஆனால் செல்பேசியில் ஒரே ஒரு நிமிடம் பேசுவதற்கு கூடவா முடியாது? ஒரு மாதமாக? நிச்சயத்தை மாலையில் குடும்பத்தினருக்கு அளவாக வைத்து கொள்ளலாம் என்று வானமாமலை கூறி இருந்தார்…

அழகான அரக்கு நிற பட்டு புடவையில் ஒட்டியாணம் வைத்து கையில் வங்கியோடு நெற்றி சுட்டி சேர்த்து அடுக்கி, அவளது நீண்ட கூந்தலை தளர பின்னி மலர்ந்த குண்டு மல்லிகையை சீராக வைத்து பார்த்த மேகா மலைத்து தான் போனாள்! அந்த நிற புடவை அவளது நிறத்தோடு ஒத்து போய் அவளது வென்பளிங்கு மேனி நிறத்தை இன்னும் எடுத்து காட்ட கைகளில் அடுக்கிய வளையல்களோ பெண்மையின் நளினத்தை பறை சாற்றியது! வரவில்லை என்று கூறிய மேகாவை வலுகட்டாயமாக அழைத்து வந்திருந்தாள் அஞ்சலி!

“ஹேய் அஞ்சு… உன்னை பார்த்தா எனக்கே இப்போ ஆசையா இருக்கே… அர்ஜுன் அண்ணா பாவம் தான்…” என்று கலாய்க்க

“மேகா… அதை நீ சொல்றியா? நானாச்சும் இத்தனை நகை போட்டுட்டு இருக்கேன்… அம்மணி ஒண்ணுமே பண்ணாம வெறும் காட்டன் சேலைலையே கலக்குறீங்களே… கௌஸ் இன்னைக்கு பிளாட் தான் போ…”

“அஞ்சு… எத்தனை தடவை சொல்றது? இந்த மாதிரி பேசாதன்னு…” என்று கடுப்படிக்க

“ஓகே ஓகே… எத்தனை நாள் தான் நீயும் இப்படியே ஓட்டுவன்னு பாக்கறேன் மேகா… கண்டிப்பா ஒரு நாள் நீ பீல் பண்ணுவ…”

“கண்டிப்பா இல்ல…”

“மேகி… நீயும் பட்டு சேலை கட்டுப்பா… தனியா நான் மட்டும் கட்ட கஷ்டமா இருக்கு…”

“இப்போ நீ ஒழுங்கா ரெடி ஆகறியா இல்ல அடி வாங்க போறியா?” முகத்தை உம்மென்று வைத்து கொண்டு கேட்க

“சரி தாயே… அதுக்கு கொஞ்சம் சிரிக்கலாம்ல…”

“ஈஈஈ…” என்று கூறி பற்களை காட்டி”இது போதுமா…” என்று கேட்க

“ஐயோ… ஏன் இப்படி பயமுறுத்த பாக்குற… நான் பாவம்ப்பா…” என்று கூறியவளை ஒரு அடி வைத்து விட்டு மற்ற காரியங்களை கவனிக்க போனாள்!

அவ்வப்போது கடை விஷயங்களுக்கு கெளதமை அழைத்து அவனிடம் யோசனை கேட்டு நிர்வகிப்பது இப்போது மேகாவுக்கு இயல்பாக பொருந்தி இருந்தது! அவளை ஒரு நிமிடமும் வேறு எதையும் சிந்தனை செய்ய செய்ய விடாமல் கடையில் உள்ள நிர்வாக விஷயங்களே ஆக்கிரமித்தன! அது தானே அவனுக்கும் தேவையாக இருந்தது! கணபதி இருவருக்குமாக நிர்வாகத்தை பகிர்ந்து கொடுத்து இருந்தாலும்… அவள் தன்னை ஏற்று கொள்ளாதவரை அந்த உரிமை தனக்கு வேண்டாம் என்று முடிவு செய்திருந்தான்… அதற்காக அவளை நடு வழியில் விட்டு விடவில்லை… ஒவ்வொரு விஷயமும் அவளுக்கு போவதற்கு முன்னர் அவனுக்கு சென்றிருக்கும்… அவள் ஒரு சில விஷயங்களை மறந்தே ஆக வேண்டும் என்பதற்காக வெளியே அவ்வாறு இருந்தாலும்… உள்ளே அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற நிலையே இருந்தது! நிறைய யோசனைகள் அவள் மூலமாக செயல்படுத்த ஆரம்பித்து இருந்தான் கெளதம்! crisis management இப்போது வெகு சுலபமாக கை வந்தது மேகாவுககு!

தங்கை ரெடி ஆகி விட்டாளா என்று பார்ப்பதற்காக கெளதம் அவசரமாக வர அதே நேரத்தில் வெளியே வந்த மேகாவும் சட்டென்று மோதி கொள்ள… (மக்களே… தலைவருக்கு இங்க என்ன situation song போடலாம்? ஹிஹி எனி சஜஷன்? 😉 )

“ஹேய்… மேகா… நீயா இது… சாரி எல்லாம்… வாவ்… கலக்கற…” என்று வெளிப்படையாக பாராட்ட, அதை கேட்டவளுக்கு உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ஜிவ்வென்று மேலே பறப்பது போல் இருந்தது! கன்னங்கள் சிவக்க ஒன்றும் பேசாமல் நகர்ந்தவளை

“ஏன்டா… நீயும் பட்டு சேலை கட்டி இருக்கலாமே…” என்று கையை பிடித்து கேட்க மெலிதாக புன்னகைத்து கொண்டு

“எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லப்பா…” என்று கூறினாள்!

“பரவால்ல… இதிலேயே கலக்கற… கண்ண உன்னை விட்டு எடுக்க முடியல மேகா…” என்று ஒரு மாதிரியான குரலில் கூற

“ச்சு… இதென்ன கெளதம் இப்படி பேச்சு?” என்று கோபப்பட

“ரசிகன்ம்மா… அழகா இருக்கறத ரசிக்கறேன்… இதுல என்ன தப்பு? நான் ரசிச்சு செஞ்சா தான் என்னோட ப்ரோபஷன்ல ஜெய்க்க முடியும்… இத தொழில் ரீதியான ரசிப்புன்னு வெச்சுக்கோ… உனக்கு ஏன் வேற மாதிரி தோணுது?”

“எனக்கு ஏன் தோணனும்… அதெல்லாம் ஒன்னும் இல்லையே…” சமாளித்தாள்!

“உன் மனசுல ஒரு கல்மிஷமும் இல்ல… அப்படிதானே சொல்ற?” நூல் விட

“ஆமா…” கறாராக கூறினாள்!

“ஏன் மேகா… நான் இப்படி பேசறதுனால பார்க்கறதுனால நீ மயங்கியா போய்ட போற?”

“ஹாஹ்… வாட் அ ஜோக்… நெவர்…” சூளுரைத்தாள்!”

“அப்போ… என்னை பார்த்து பயப்படல…”

“இல்லை… நான் எதுக்காக உங்களை பார்த்து பயப்படனும்?”

“அப்படீன்னா ப்ரூவ் பண்ணு…”

“ம்ம்ம்… எப்படி…”

“எனக்கு ஒரு நல்ல காபியா குடு… அப்போ நம்பறேன்…” என்று சிரிக்க

“ஹேய்… உங்க லொள்ளுக்கு…” என்று சிரித்து விட்டு போனவளை கையை பிடித்து

“ஹேய் மேகி… பட்டு சேரி கட்டுப்பா… ப்ளீஸ்… நம்ம சொந்தகாரங்க எல்லாம் வருவாங்க… நீ மட்டும் இப்படி சிம்பிளா இருந்தா மனசுக்கு ஏதோ சங்கடமா இருக்கு…”

“இல்ல கெளதம்… எனக்கு அதுல உடன்பாடு இல்ல… ப்ளீஸ் வற்புறுத்தாதீங்க…”

“ம்ம்ம்ம்… சரி உன் இஷ்டம்…” சிறிது கோபமாக முகத்தை கல்லாக வைத்து கொண்டு சொல்லி விட்டு போய் விட்டான்…

அவனது முகமாற்றம் தன்னை மிகவும் பாதிப்பதை உணர்ந்தாள் மேகா… ஏன்? எதற்கு? மனம் ஆராய விரும்பாமல் தவிர்க்க மூளை எதையோ கூற விழைந்தது! கெளதம் பாராட்டியபோது துள்ளிய மனம் அவன் கோபப்படும் போது அனலில் விழுந்த புழுவாக துடிப்பது ஏன்? அவனை கோபப்படுத்த கூடாது என்று நினைக்கின்றேனா? ஏன் நான் அப்படி நினைக்க வேண்டும், … அதெல்லாம் ஒன்றும் இல்லை… எனது கற்பனை தான் என்று ஒரு மனம் கூற மனம் குழம்பினாள்!

சூடு கண்ட பூனை பால் அருகில் செல்லவே பயப்படுமாம்! அது போலத்தான் இருந்தது மேகாவின் செயலும்! சசியிடம் வாங்கிய சூடு ஆறாததால் கெளதமை தள்ளியே வைக்க நினைக்க… எவ்வளவு நாள் தான் முடியும் மேகா இந்த விளையாட்டு என்று விதி சிரித்தது!

********

வானமாமலையும் அர்ஜுனும் அவர்கள் பக்க உறவின் முறைகளோடு பெண் பார்த்து நிச்சயம் செய்யும் வைபவத்திற்கு வந்திருந்தனர்! அர்ஜுன் நீல நிற சட்டையும் மணல் வண்ண கால்சராயுமாக கம்பீரமாக வந்து அமர… சிவதாணு மங்களத்தின் உறவு முறை பெண்களுக்கு பெருமூச்சே வந்தது! எவ்வளவு அம்சமான மாப்பிள்ளை அதுவும் எவ்வளவு பணக்காரங்க… ஆனா கொஞ்சம் கூட அலட்டலே இல்லாம கல்யாணம் பேச வந்து இருக்காங்க… இந்த பொண்ணு இவ்வளவு குடுத்து வைச்சிருக்க கூடாது… நமக்கும் தான் வீட்ல ஒன்னு வாய்ச்சிருக்கே… என்று ஆளாளுக்கு அவர்களது வீட்டை ஒப்பிட்டு பொரும… அதை எதையும் கண்டுகொள்ளாமல் கால் மேல் கால் போட்டு கொண்டு பக்கத்தில் வந்து அமர்ந்த கௌதமிடம் சிரித்து பேசி கொண்டிருந்தான் அர்ஜுன்!

நண்டு சிண்டு புடை சூழ மேகா உடன் வர வானுலக தேவதையாக இறங்கி வந்தவளை பார்த்த அனைவருமே ஒரு கணம் இமைக்கத்தான் மறந்தனர்! அர்ஜுன் நிலையோ சொல்லவே வேண்டாம்… சட்டென்று பேச்சும் சிரிப்பும் நின்று போய் கள் குடித்த வண்டாக கிறங்கி போய் அமர்ந்து இருந்தான்! அவளோ நிமிர்ந்து பார்ப்பேனா என்று கண்களை கீழே தாழ்த்தி கொண்டே காபியை கொடுத்து விட்டு போக… வானமாமலை மற்ற விஷயங்களை பேச முனைந்தார்! அவரை சைகை காட்டி கையமர்த்தி விட்டு,

“பொண்ணுக்கு சமைக்க தெரியுமா?” என்று கேலியாக கேட்க

“மாப்ள… ஏன்டா உனக்கு இந்த கொலவெறி?”

“இல்ல மச்சி தெரிஞ்சுக்கனும்ல…” சிரிக்காமல் சொல்ல

“நடத்து நடத்து…” எதற்கும் நிமிர்ந்தே பார்க்காமல் பல்லை கடித்து கொண்டு அமர்ந்து இருந்தாள் அஞ்சலி!

“சரி… பொண்ணுக்கு ஆடவாச்சும் தெரியுமா?” கொல்லென்று சிரித்தனர் அனைவரும்!

“அண்ணா… நீங்க டான்ஸ் ப்ரோக்ராம் நடத்த போறீங்களா?” சிரித்தபடி மேகா கேட்க…

“எல்லாம் பொது அறிவ வளர்த்துக்க தான் மேகி… நாம ஏமாந்துட கூடாதும்மா…” என்று கூற அப்போதும் பல்லை கடித்து கொண்டு உட்கார்ந்து இருந்தாள்

“சரி நீங்கதான் பேசறீங்க… பொண்ணு பேசாதா?” என்று வம்புக்கே அலைய

“எங்க பொண்ணு அவ்ளோ அடக்கம்டா மகராசா…” சிரித்து கொண்டு கெளதம் கூற, அவனை பார்த்து

“அடக்கம்ம்ம்ம்ம்… யாரு… இந்த பொண்ணு…” என்று கேலியாக கேட்க

“நீ நம்பித்தான் ஆகணும் மச்சான்…” என்று சிரித்தான் கெளதம்!

“எல்லாம் நேரம் தான்… சரி… சரி… பாடவாச்சும் தெரியுமான்னு கேளுங்க…” சிரியாமல் கேட்க (எவ்வளோ நேரம் தான் அடக்கமா நடிப்பா பாவம்… அர்ஜுன்… இப்போ நீ தனியா சிக்குன சிக்கன் தான்டா நீ… )

“தம்பி… நீ என்ன நம்ம வீட்ல தினமும் லைவ் இன் கன்செர்டா நடத்த போற? அடங்குடா…” வானமாமலை சிரிக்க

“அப்பா… ஒண்ணுமே தெரிஞ்சுக்காம இந்த பொண்ண கட்டிக்க மாட்டேன்ப்பா…”

“அப்படியா… அப்படி ஒன்னு இருக்கோ… சரி வா போகலாம்…” என்று கூறிய தந்தையை பார்த்து

“ஐயோ… அப்பா… ஒரு பேச்சுக்கு சொன்னேன்… இப்படி குண்ட தூக்கி போட்டுட்டு போறீங்க…” அப்படியே பிளேட்டை திருப்ப அனைவரும் சிரிக்க

“அப்படீன்ன உன் குறும்பெல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு அடக்கமா இரு…”

“ஓகேப்பா… நீங்க என்ன சொன்னாலும் ஓகே ப்பா…” என்று வேண்டுமென்றே பூம் பூம் மாடு கணக்காக தலை ஆட்ட

சிவதாணு மங்களத்தின் திருகுமாரத்தி திருநிறை செல்வி அஞ்சலிக்கும் வானமாமலை அவர்களின் திருக்குமாரன் திருவாளர் அர்ஜுனுக்கும் இவ்வாறு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது! முப்பத்து முக்கோடி தேவர்களோடு நாமும் சேர்ந்து அவர்களது திருமணத்திற்கு

வாழ்த்தலாம் வாங்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!