MT 4

MT 4

மாடிவீடு – 4

மாலை நேரம் வயக்காட்டில் சுற்றுவது அன்புக்கு மிகவும் பிடித்த பொழுது. அந்த நேரம் ஏனோ அவள் ஒரு கவிதாயினியாக மாறி விடுவாள். வயலுக்கு வந்து விட்டாலே அவளிடம், அவள் விழிகளில் ஒரு விளையாட்டு எண்ணம் தோன்றி இருக்கும்.

அந்த நேரங்களில் ஏனோ அவள் அந்த இயற்கையோடு ஒன்றி விடுவாள். எப்பொழுதுமே சிறு பெண்ணின் மனநிலையில் இருக்கும் அன்பு அங்கு வந்தால் சிறு குழந்தையாகவே மாறி விடுவாள்.

அங்கிருக்கும் ஒவ்வொரு செடியும் அவளின் தோழிகளாகவே எண்ணுவாள். அப்படி தான் அதனுடன் பேசுவாள்.

“ஏய்… நீ அவளை தொடாதே அவள் இப்போ மாசமா இருக்கா?”

“ஏய்! தொடாதேன்னு சொல்லுறேன்ல, இப்படி உரசுற தள்ளிப் போ” முகம் கோப பாவனையை காட்டியது.

“சொல்ல சொல்ல கேட்காம உரசுற, தள்ளி போ”

முற்றி நின்ற கதிர்களை உரசி, சீண்டிக் கொண்டிருந்த நெல் தாள்களை கோபமாக முறைத்து விலக்கி விட்டன அவள் விரல்கள்.

“அங்கே அவளைப் பார் பச்சை பசேல்னு சின்னாளம் பட்டு கட்டி சிலுசிலுன்னு ஆடுறதைப் பாரு. அங்கே போய் உரசிக் கொள்” சிலாகித்தன கண்கள்!

எதிர் வயல் பரப்பில் இப்பொழுது தான் கதிர் வரும் நிலையில் அழகாக செழித்து வளர்ந்துக் கொண்டிருந்த கதிரை ஆசையுடன் அளவிட்டன அந்த குட்டி கண்கள்! கால்களோ அதை நோக்கி நகர்ந்தன!

அவள் ஓடவும் இல்லை, நடக்கவும் இல்லை ஒரு மான் குட்டியை போல் கண்களை அங்கும், இங்கும் உருட்டிக் கொண்டும், கைகளை அசைத்துக் கொண்டும் செல்லமாய் கதிரை மிரட்டிக் கொண்டும் நடனம் ஆடின அவள் விழிகள்.

மதயானையை அருகம் புல்லினால் கட்டிப் போட முயற்சிப்பதுப் போல, நர்த்தனம் ஆடும் அவள் கால்களை வரப்பில் பச்சை கம்பளம் போல் படர்ந்து விரிந்துக் கிடந்த அருகம்புல் அவள் கால்களை உரசியும், அவள் விரலிடுக்கில் சிக்குண்டும் கட்டிப் போட முயற்சித்தன!

காற்றிலே ஆடி அசைந்து, அலைந்து பற்றிக் கொள்ள கொழு கொம்பு தேடும் முல்லைக் கொடிப் போல, தென்றலில் காற்றிலும், அவளின் நர்த்தனமாடும் கால்களுக்கிடையில் சிக்குண்டு தவித்த அவளது பாவாடை, பலமாக பற்றிக் கொள்ள கொழுகொம்பை அந்த நெற்கதிர்களுள் உரசி உரசி தேடின!

அவளோ எதைப் பற்றியும் கவலைப் படாமல், கைகளை வேகமாக வீசிக்கொண்டும் பிரசவத்திற்கு காத்திருக்கும் நெற்மணிகளை கையினால் மெதுவாக தட்டிக் கொடுத்துக் கொண்டு வேகமாக துள்ளி வந்தாள்!

பயம் அறியா பருவசிட்டு, அது அவளின் துள்ளலில் தெரிந்தது. அந்த துள்ளல் அவர்களின் ஐயா அவர்களுக்கு அளித்திருக்கும் உரிமையிலும், பாதுகாப்பிலும் மிளிர்ந்தது.

மகாராணியின் வருகைக்காய் பச்சை கம்பளம் விரித்ததுப்போல் வரப்புகளில் புல் வளர்ந்திருந்தது. அந்த புல்லில் நடப்பது அன்புக்கு மிகவும் பிடிக்கும்.

இதுவரை இந்த கம்பள விரிப்பில் நடக்கும் பாக்கியம் அன்புக்கு தான் கிடைத்திருக்கிறது. தமிழ் கூட இந்த பக்கம் வந்ததில்லை. தன் அண்ணன் கூறும் ராணியை, இந்த பச்சை விரிப்பில் நடக்கும் பொழுது உணர்ந்தாள்.

வாய்காலில் தண்ணீர் வேகமாக ஓடியது. பாவாடையை கையில் தூக்கிக் கொண்டு வாய்காலில் இறங்கி “சல… சல…” என மெதுவாக சத்தம் எழுப்பிக் கொண்டே மெதுவாக காலை தரையில் உரசி ஓடினாள். அது அவளுக்கு பிடித்த விளையாட்டுகளில் ஒன்று!

அவள் பாத சலசலப்புக்கேற்ப நீர் கலங்கி, தெளிந்து மீண்டும் வாய்கால் பாதையை நோக்கி ஓடியது. அவள் கால் பட்டதும் அந்த நீர்களுக்கே உள்ள துள்ளல் போல் அலைகளாய் சுழன்று மீண்டும் ஓடியது.

“கா… கா… கா…”

அன்பு திரும்பிப் பார்த்தாள். சோளக்கொல்லை பொம்மை மீது அமர்ந்திருந்த காகம் ஒன்று கரைந்துக் கொண்டிருந்தது.

“ஓ… ஐயா வீட்டுக்கு சொக்கார் வர போறார்களா? அப்படின்னா நான் உடனே வீட்டுக்கு போகணுமே, அண்ணன் வந்திருமே” காக்கையிடம் உரைத்தவள் கால்வாயை விட்டு மேலே ஏறி வேகமாக திரும்பி நடந்தாள்.

அவளின் கண்களோ பாதையில் இல்லாமல், வயலை நோட்டம் விட்டுக் கொண்டு வந்தது. கண்களோ நிலை கொள்ளாமல் வேகமாக சுழன்றது.

நடந்த வேகத்தில் எதிரில் வந்தவர் மீது பலமாக மோதி, அப்படியே வாய்காலில் தொப்பென விழுந்தாள்.

இத்தனை நேரம் நர்த்தனம் ஆடிய கால்கள் கொஞ்சம் ஓய்வு பெற்றுக் கொண்டன போலும், நீரில் மூழ்கி இருந்தன. கதிர்களை பாசமாக வருடிய கைகள் அழுத்தமாக புல்லை பற்றிக் கொண்டன.

ரசனையில் திளைத்த அந்த கருவிழிகள் கோபத்தை பூசிக் கொண்டன. கண்களை மெல்ல உயர்த்தி எதிரில் மோதியதை பார்த்தன அந்த விழிகள்!

அவளைப் பார்த்து சிரித்தபடி ஓர் இளைஞன் நின்றுக் கொண்டிருந்தான்!

அந்த குட்டி விழிகளில் கோபத்தைக் கண்டவன் தன் கையில் இருந்த பெட்டியை அருகில் வைத்து விட்டு, அவளை நோக்கி தன் கையை நீட்டினான்.

இப்பொழுது அந்த குட்டி விழிகளில் மிதமிஞ்சிய கோபம் எட்டிப் பார்க்க, நீட்டிய கையை படாரென தட்டி விட்டாள்!

நர்த்தனம் ஆடிய கால்களை வேகமாக இழுத்தவள், புல்லை அணைத்திருந்த கைகளை அதன் மேல் பதித்து வேகமாக எழுந்தாள்.

அவள் பாவடை நனைந்து விட்டிருந்தது. பாவடை முழுதும் சேறு ஒட்டிக் கொண்டது. ‘நாளை அண்ணன் அல்லவா துவைக்க கஷ்டப்படவேண்டும்’ சிறு பெண் அல்லவா தன் அண்ணனின் அதிக வேலையை எண்ணி அழுகையும், கோபமும் சேர்ந்து எட்டிப் பார்த்தது.

கோபத்துடன் அந்த குட்டி கண்களை விரித்து அவனை முறைத்துப் பார்த்தாள்.

குனிந்து, வாய்காலில் ஓடிய நீருடன், அதில் இருந்த சேற்றை இரு கையில் அள்ளியவள் அவன் மீது வீசி, வேகமாய் அவனை தாண்டி சென்று மரத்தில் கட்டியிருந்த கன்னு குட்டியையும் அவிழ்த்துக் கொண்டு அழுதுக் கொண்டே வீட்டை நோக்கி ஓடினாள்.

பருவமெய்த போகும் மங்கையை, அந்த பட்டணத்து இளைஞனின் கடைக்கண் பார்வை ஆர்வமாக பார்த்துக் கொண்டது.

மனதில் அந்த குட்டி கண்ணில் தோன்றிய கோபமே, காந்தமாக அவனை இழுத்துக் கொண்டிருந்தது.

அவன் அணிந்திருந்த சட்டையில் அவள் அளித்த பரிசு வழிந்தோடியது.

@@@@@@@@@@@@@@@@

அந்த கருங்கல் தூணை அந்த சின்ன கைகள் பிடித்துக் கொண்டிருந்தன. அங்கும் இங்கும் அலைபாய வேண்டிய கரங்களோ ஒரு இடத்தில் நின்றுக் கொண்டன!

ஒரு இடத்தில் நிற்காமல் நர்த்தனமாட வேண்டிய அந்த கால்களோ, அந்த திண்ணையில் ஒன்றன் மேல் ஒன்று ஏறி அமர்ந்து தரையில் அழுந்த பதிந்திருந்தது.

கடலில் நீந்தும் மீன்களைப் போல் அங்கும் இங்கும் நீந்த வேண்டிய அந்த கயல் விழிகளோ, கண்ணீர் என்னும் உப்பு நீரில் மூழ்கி தெரு வாசலையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தது.

நர்த்தனமாடும் கால்களுக்கிடையில் அடங்காமல் இருக்க வேண்டிய அவளின் பட்டுபாவாடைகள் அடங்கி, ஒடுங்கி அந்த தூணுடன் ஒட்டிக் கொண்டன.

தூரத்தில் ஜல்… ஜல்… என்ற ஓசை அந்த குட்டி செவிகளில் விழ, கண்களில் நீர், பஞ்சு பொதி போன்றிருந்த கன்னங்களில் வழிந்து. அவள் பார்வையை மறைத்தது.

வண்டி மெதுவாக ஊர்ந்து, வாசலில் நிற்க, இறங்கி ஓடி வந்த அழகு, பின் கம்பியை திறந்து விட, மெதுவாக இறங்கினார் ஆலமரத்தான்.

வாசலில் நின்றிருந்த தமிழை கண்ட ஆலமரத்தான் வேகமாக மகளை நோக்கி ஓடினார்.

“ஏங்கண்ணு அழுவுற” பதறிப் போய் கேட்டார் மனிதர். மகள் கண்ணில் உள்ள கண்ணீர் அவரை பதற செய்தது.

“ஆத்தா கிட்ட, அம்மணி எதுனா வம்பு பண்ணிருப்பாக, அதேன் அழுவுறாக”

ஐயாவிடம் கூறியபடியே இடுப்பில் கட்டியிருந்த டவலை எடுத்து, அவள் நின்றிருந்த தூணில் கட்டி வைத்தான் அழகு. ஐயா வீட்டில் வேலை செய்யும் நேரம் அவன் டவலின் இருப்பிடம் அந்த தூண் தான்.

“சொல்லு கண்ணு அம்மா ஏசுனாளா?”“ஆமாப்பா… காய் வெட்டி குடுக்கலன்னு அம்மா திட்டிட்டே இருக்கு” கைகளோ அந்த டவலை வருடிக் கொண்டன. ஏனோ அந்த டவலை வருடும் பொழுது அதில் இருக்கும் குளிர்ச்சி அவளுக்கு சிறு வயதில் வயலில் குளித்த அந்த நீரை நினைவுபடுத்தும்.

‘தான் ஏன் அவன் வீட்டில் பிறக்கவில்லை’ அவள் மனதில் எப்பொழுதும் தோன்றும் எண்ணம்.

முதலில் அழகு சைக்கிள் ஒன்று வைத்திருந்தான். அதில் தான் அன்புவை பள்ளிக்கு அழைத்து வருவான். அதை தமிழ் பள்ளி ஜன்னலில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பாள். இருவரின் பாசமும் அந்த ஊரே அறிந்த ஒன்று.

அவன் சைக்கிளில் அவனுடன் ஊரை வலம் வர அவளுக்கு தீராத ஒரு ஆசை உண்டு. அந்த சைக்கிள் பயணம் அவளுக்கு ஒரு ஏக்கமாய் மாறி, அழகுவை தன் மனதில் ஏற்றிக் கொண்டது அந்த குட்டி இதயம்.

தனக்கு பாசம் காட்ட வீட்டில் ஒரு உடன் பிறப்பில்லையே என்று ஏங்கிய நாட்கள் அதிகம். அதே பாசத்தை அழகுவிடம் கண்டிருக்கிறாள் தமிழ்.

தனக்காக எதையும் அழகு செய்வான் என்பது சிறு வயதிலே அவள் அறிந்த உண்மை. அவனுடன் பள்ளிக்கு செல்வது தமிழுக்கு பிடித்த ஒன்று. ஏன் என்றே தெரியாமல் அவன் மேல் அதிக அன்பு வைத்தாள் தமிழ்.

தன் அன்பும், பாசமும் அவனை எங்கு கொண்டு நிறுத்தும் என்று அவள் அறியாமல் போனது தான் விதியின் விளையாட்டுப் போலும்.

மாட்டை அவிழ்த்து கட்டியவன், ஐயாவிடமும், அவன் அம்மணியிடமும் விடை பெற்று வீட்டை நோக்கி சென்றான்.

‘அன்பு வீட்டுல ஒத்தையில இருக்கும், சீக்கிரமா போகோணும்’ எண்ணியபடியே வீட்டை நோக்கி ஓடினான் என்று தான் சொல்ல வேண்டும். அவன் நடையும் அப்படி தான் இருந்தது.

ஆலமரத்தானும், தமிழும் வீட்டில் நுழையும் பொழுது தான், அமுதா குதிரைக்காரன் விளக்கை ஏற்றிக் கொண்டிருந்தார். பார்வையோ மகளை முறைத்துக் கொண்டிருந்தது.

“அரண்மனைகாரம்மா ரொம்ப காரமா இருக்காகளே? என்னவாம்?” சீண்டியபடியே உள்ளே நுழைந்தார் ஆலமரத்தான்.

“இங்காருங்க நாட்டாமைகாரரே! தமிழு கிட்ட நான் எதுனா பேசுனா நீங்க ஊடால வராதீங்க சொல்லிப்போட்டேன்”

“அதென்னம்மணி இப்படி சொல்லிபோட்டீக எம்மவளுக்காக நாந்தேன் முன்னாடி வருவேனாக்கும்”

“இங்காருங்க, இப்போவே மருவாதையா சொல்லிப் போட்டேன், உம்மவளுக்காக வராதீரும்?”

“நான் வராம வேற ஆருடி வருவா?” கைகளோ மகளை ஆதரவாக அணைத்துக் கொண்டது.

அமுதாவோ இன்னும் முறைத்தார்.

“இங்காருடி உனக்கு இப்போ என்னத்தேன் வேணும், அந்த காய் நறுக்கோணும் அம்புட்டுத்தேனே இங்கிட்டு கொண்டா நானே நறுக்கி தாரேன்” முறைத்தவர், மீசையை நீவி விட்டுக் கொண்டே காய்கறி தட்டையும், கத்தியையும் கையில் எடுத்துக் கொண்டு ஊஞ்சலில் அமர, அவர் மடியில் மகள் வந்து படுத்துக் கொண்டாள்.

“இங்காருங்க பொண்ணா பொறந்துட்டா எல்லா வேலையும் கத்துக்கோணும், நீங்க இப்படியே அவளுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வைங்க, ஒரு வேலையும் செய்ய தெரியாம மாமியார் வீட்டுல முழிக்க போறா?”

“எம்பொண்ணு ஏன்டி சமையல் கத்துக்கோணும். அவளுக்கு சமையல் பண்ணிக் கொடுக்க நான் போவேன்டி”

“ஹுக்கும்” முகத்தை ஏழு முழத்துக்கு நீட்டிக் கொண்டார்.

‘மவளுக்கு மட்டும் சமைச்சு குடுக்க அவ வீடு வரைக்கும் போவாக, இங்கன ஒன்னும் செய்யுறதுக் கிடையாது முணுமுணுத்துக் கொண்டார்.

“அப்பான்னா அப்பாதேன்” கன்னத்தை கிள்ளிக் கொண்டாள் தமிழ்.

“அந்த அழகு பயலை பாருங்க, என்ன பொறுப்பா இருக்கான். ஆம்பள அவனே இந்த வயசுல இப்படி பொறுப்பா இருக்கச்ச பொட்ட புள்ள உனக்கு என்னடி கேடு, ஏழு கழுத வயசாவுது. இன்னைக்கோ நாளைக்கோ பெரிய பொண்ணா குத்த வக்க போற, உடனே உன் அப்பாரு கட்டி குடுப்பாரு அதுக்கேத்த போல இருக்காண்டாமா?”

“யாரு கூட எம்பொண்ணை வச்சு பேசுற, அந்த வேலைக்கார பயலை வச்சா” கையில் இருந்த தட்டு பறந்தது.

“இங்காருபுள்ள, அழகு அழகுதேன். அவன் பேச்சு வீட்டு வாசலோட முடிஞ்சு போச்சு. இங்கன எம்பொண்ணு பேச்சு மட்டுந்தேன் இருக்கோணும். வேலையா, கணக்கா எதானாலும் வாசலோடு முடிச்சுபோடு ஊட்டுகுள்ளார ஆரு பேச்சும் வரப்புடாது சொல்லிபோட்டேன்”

“இப்படியே அவளை பொத்தி பொத்தி வைங்க, ஒரு வேலையும் செய்ய தெரியாம முழிக்கட்டும்” முணுமுணுத்தபடியே அங்கிருந்த தூணில் சாய்ந்தபடி அமர்ந்துக் கொண்டார் அமுதா.

“அப்பா, அம்மா கோச்சிகிச்சு” மெதுவாக காதை கடித்தாள் மகள்.

“அப்பா பாத்துகிடுத்தேன்” அவளிடம் செய்கையால் கூறியவர்,

காய் வெட்டிய தட்டை எடுத்துக் கொண்டு சமையல் அறை நோக்கி செல்ல, பார்த்தும் பார்க்காததுப் போல் அமர்ந்துக் கொண்டார் அமுதா.

அவர் முகத்தைப் பார்த்திருந்த தமிழ், மெதுவாக எழுந்து ஆலமரத்தானுடன் இணைந்துக் கொண்டாள்.

“எம்மவன், வெளிக்க ராசா கணக்கா போவான். ஆனா ஊட்டுகுள்ளார இப்படி பாத்திரத்தை உருட்டிட்டு கிடக்கான். அவ அப்படி ஆட்டி வச்சிருக்கா. எங்காலத்துல ஊட்டுக்காரர் முன்னாடி நின்னுப் பேசக் கூட முடியாது” வெத்தலையை இடித்தபடியே ஆரம்பித்தார் அவர்.

“ஆத்தா, உனக்கு தோசை ஊத்தவா?”

“வேண்டாம்யா, நான் படுத்துகிடுதேன் நீங்க சாப்டுங்க” என்றபடி தன் இடத்தில் வந்து படுத்துக் கொண்டார்.

தகப்பனும், மகளும் சேர்ந்து தோசை வார்த்து தட்டில் எடுத்து வர, அமுதா முகத்தை வேகமாக திருப்பிக் கொண்டார்.

“கண்ணு, எம்பொண்டாட்டி முகத்தை பாரு, அப்படியே செக்க செவன்னு எப்படி சோக்கா இருக்கு பாரு” மகளிடம் கண்ணடித்தபடி உரைத்தார் ஆலமரத்தான்.

மகள் கிளுக்கி சிரித்தாள்.

“ஆரும் இங்கன வராண்டாம்”

அவர் முன் அமர்ந்தவர் “இங்காருபுள்ள, நமக்கு இருக்கதே ஒத்தைக்கோரு புள்ள, அதை போய் எப்பவும் காச்சுகிட்டு கிடக்க. அது பாவம்ல. அதுவே பள்ளிக்கொடத்துக்கு போயிட்டு வந்தாக்க, வீட்டை விட்டு எங்கையும் போகாம ஊட்டுக்குள்ளாரக் கிடக்கு, அது கிட்டப் போய் சண்டைப் போடுத.
அழகு ஆரு, நம்மூட்டுல வேலை செய்யுற பய, எம்பொண்ணு அவனுக்கு சம்பளம் குடுக்குற முதலாளி. அத போய் அவன் கூடாக்க பேசுற.

நம்ம வாசப்படியை தாண்டி அந்த பயலும் வரமாட்டான், அவன் பேச்சும் வரப்புடாது. அதேன் சட்டுன்னு கோச்சுகிட்டேன், நீ வெசனபடாத. இந்தா சாப்டு” ஒரு வாய் ஊட்டிவிட்டார்.

தன் தாயையும், தந்தையையும் அப்படியே பார்த்திருந்தாள் தமிழ். மன கண்ணில், அழகு அவளை கொஞ்சியபடியே ஊட்டி விடும் காட்சிப் படர விக்கித்துப் போனாள்.

#########

பட்டணத்தில் இருந்து வந்த அமுதன் தங்களது வீட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். முகம் புன்னகையில் விரிந்திருந்தது.

அவன் தந்தையும், ஆலமரத்தானும் சிறு வயது முதலே நண்பர்கள். ஊரில் நடந்த சின்ன தகராறில் ஊரை விட்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் பட்டணத்தை நோக்கி சென்றனர்.

இத்தனை நாளும், அவர்கள் நிலத்தை ஆலமரத்தான் தான் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த வயலில் தான் அன்பு நின்று ஆடிக் கொண்டிருந்தாள்.

ஆசிரியர் படிப்பை முடித்த அமுதன், தங்கள் ஊரை நோக்கி வந்துவிட்டான். இனி இங்கு தான் அவனின் வாசம்.

‘அப்பா சொன்னது போல காலையில் அங்கிளை பார்க்க போகணும்’ எண்ணியபடியே தான் வாங்கி வந்திருந்த உணவை உண்டு படுத்து விட்டிருந்தான்.

மனமோ வயலில் பார்த்தவளை எண்ணியே தவம் கிடந்தது. அந்த காந்த விழிகள் இன்னும் இன்னும் அவனை  இழுத்துக்கொள்ள
அப்படியே கண்கள் மூடிக் கொண்டன… உதட்டில் உறையா புன்னகையுடன்….

அழகு வீட்டுக்கு வரும்பொழுது வாசலில் அமர்ந்திருந்தான் லிங்கம். அப்பொழுது தான் சாப்டிருப்பான் போல், கையை மூக்கில் வைத்து முகர்ந்துக் கொண்டிருந்தான்.

அன்பு வைத்த குழம்பின் வாசம் கையை விட்டு போகலியாம். இத்தனை நேரம் புகழ்ந்து தள்ளியிருந்தான்.

“என்னடே அழகு, உங்கய்யா சோக்கா பஞ்சாயத்து பண்ணினாராமே? அப்படியா” வழக்கம் போல் ஆரம்பித்தான்.

“நீ பேசாம இருக்கமாட்டியா?”

“உங்கய்யா வீட்டை பத்தி பேசினாலே உனக்கு கோவம்தேன் வரும். சரி அதை வுடு. ஊருக்குள்ளார ஒரு சோளக்கொல்லை சுத்துதாமே அது ஆராம்?”

“உனக்கு ஆரு சொன்னா?”

“எல்லாம் நம்மூரு கேமராமேன்தேன் சொல்லிச்சு. கையில ஒரு பெட்டி வச்சுக்கிட்டு ஆபிசர் கணக்கா சுத்திச்சாமே?”

ஆலமரத்தான் காலையில் அழகுவிடம் கூறி இருந்தார் தன் நண்பன் மகன் வருவதாக… ஆலமரத்தான் கூறுவதை எப்பொழுதும் அவனோடு வைத்துக் கொள்வான் அழகு.

பெரும்பாலும் பெரியவீட்டு விசயத்தை வெளியில் கூறமாட்டான் அழகு. அது தான் இன்னும் ஆலமரத்தானுக்கு அவனை பிடிக்க காரணம்.

“ஆரு வரதுன்னு நேக்கு தெரியாது. அந்த கேமராகிட்டக்கவே கேட்டுக்கோ போ”

“அதேன ஆரு வீட்டு விசயத்தை ஆரு கிட்ட கேட்கது. வெள்ளனே நியூசு வந்திடும் நான் போறேன். யம்மா அன்பு, குழம்பு வச்சதும் காலம்பரே சொல்லியனுப்பு அண்ணே வாறேன்” இடத்தை விட்டு நகர்ந்தான் லிங்கம்.

செல்லும் அவனையே பார்த்தவன் சிரித்தபடி வீட்டின் உள்ளே நுழைய, அன்பு அவனுக்கு சோத்தை பரிமாறினாள்.

error: Content is protected !!