KS1

KS1

அத்தியாயம் ஒன்று

“பயணிகளின் அன்பான கவனத்திற்கு சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை CST செல்லும் வண்டி எண் 11042 மும்பை எக்ஸ்ப்ரெஸ் இன்னும் சிறிது நேரத்தில் நான்காவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட தயாராக இருக்கிறது…”

ஒலிபெருக்கியில் அறிவிக்கபட்டு கொண்டு இருந்தது! ஈ போல் மொய்த்த மக்களை தன்னுள்ளே உள்வாங்கி கொண்டு இருந்தது அந்த ரயில்! எத்தனை முகங்கள்! அதில் எத்தனை நிறங்கள்! எத்தனை குணங்கள்! அத்தனை பேரும் ஒரே ரயிலில் பயணிக்க போகின்றனர்! இது ஒன்று தான் இவர்களின் இப்போதைய ஒற்றுமை! இதில் நல்லவர்களும் இருக்கலாம்! வல்லவர்களும் இருக்கலாம்! அனைத்து முகங்களையும் பார்த்து கொண்டு, அத்தனைக்கும் மௌன சாட்சியாக சலனமில்லாமல் இருக்கும் மகான் இந்த ரயில் நிலையம்!

******

“அப்பா… நான் கண்டிப்பா இந்த வேலைக்கு போயே தீரனுமா? ஏன்ப்பா என்னை இப்படி கொடுமைப்படுத்துற?” தன் அப்பாவிடம் சிணுங்கி கொண்டிருந்தாள் அஞ்சலி!

அஞ்சலி! இளங்கலை பொறியியல் முடித்த அழகு புயல்! அந்த இருபத்தொரு வயது புயல் மையம் கொண்டிருப்பது பெசன்ட் நகர்! அந்த புயலின் தாக்குதலுக்கு பயந்து அவளது அப்பார்ட்மென்ட் பக்கம் இருக்கும் இளைய தளபதிகளும் வீர தமிழர்களும் இடம் பெயர்ந்து விட்டதாக கேள்வி!

“ஆள் சூப்பரா இருக்கறாங்கறதுக்காக அவ பண்ற கொடுமைய எவன் தாங்குவான்! இது பொண்ணே இல்ல பிசாசு…” என்று கூறி பின்னங்கால் இடற ஓடியவர்கள் ஏராளம்! அந்த பிசாசை பெற்ற மகானுபாவர் தான் சிவதாணு மங்களம்! இதென்ன இப்படி பெயர் என்று குழம்புவர்கள் கவனிக்க! நம்மூர் கிராமங்களில் குழந்தை அதிகம் பிறந்து விட்டால் ஆண் என்றால் ‘மங்களம்’ என்றும் பெண் என்றால் ‘போதும் பொண்ணு’ என்று பெயரிடுவது வழக்கம்! இயற்கை குடும்ப கட்டுப்பாடாம்! சிவதாணு ஏழாவது புத்திர செல்வம் அவரது தாய்க்கு! ஆனால் அதன் பின்னும் மங்களம் பாடாமல் ஒரு பெண் பிறந்தது வேறு விஷயம்!

“கண்டிப்பா போயே தான் ஆகணும் கண்ணா! நீ இங்க இருந்துட்டு அக்கம்பக்கத்துல வம்பிழுக்கறது போதும்… மரியாதையா மும்பைல போய் இந்த வேலைய பாரு!”

“அப்பா ப்ளீஸ்… நான் உன் செல்ல புஜ்ஜிமா இல்ல… இன்னொரு தடவ தின்க் பண்ணுப்பா… நான் இனிமே அந்த ராகவ், வைஷு, ஷாஷு, மிக்கி கூட சேர மாட்டேன்ப்பா… ப்ளீஸ்ப்பா…”

சிவதாணு மங்களம் தலையில் அடித்து கொண்டார்!

“அந்த பொடுசுங்க கூட சேர மாட்டேன்னு ஒவ்வொரு தடவையும் தான் சொல்ற அஞ்சு… ஆனா அத நம்பி நான் உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போனேன்னு வை… அவ்ளோதான்! அதுங்க கூட சேர்ந்து நீ பண்ற அதகளத்துக்கு பயந்துட்டே தான் உன்னை இப்போ அனுப்பறேன்… போம்மா தாயே… ஒழுங்கா வேலை பாரு!”

“நான் வேணும்னா சென்னைலையே சின்சியரா வேலை பாக்குறேன்ப்பா… நான் தான் இங்க எத்தனை கம்பனில வொர்க் பண்ணி இருக்கேன்… ப்ளீஸ்ப்பா!”

“ஹாஆஆ… உன் வாயாலேயே ஒத்துகிட்டயா! ஒழுங்கா ரெண்டு மாசம் ஒரு கம்பனிக்கு போய் இருக்கியா? ஆறு மாசத்துல நாலு கம்பெனி மாறிட்ட… ஏதாவது ஒரு சாக்கு… வீட்லேயே வம்பு வளத்துட்டு இருக்கணும்! சாப்பிட்டுட்டு தூங்கிட்டு எதாச்சும் மாப்பிள்ளை வந்தா காளியாத்தா மாதிரி ஆடி வர்றவன துரத்தி விட்டுட்டு… எம்மா சாமி… கொஞ்ச நாள் தனியா ஹாஸ்டல இருந்தா தான் உனக்கு பொறுப்பு வரும்! மேல படின்னு சொன்னாலும் கேக்க மாட்ட… சோம்பேறி கழுதைன்னு உங்க அம்மா உன்னை திட்றதுல தப்பே இல்ல கண்ணா! மாப்பிள்ளை பார்த்துட்டு சொல்றேன் அப்போ நீ வந்தா போதும் தாயே…”

“அப்பா… நீ ஹாஸ்டல வேணும்னா இருக்க சொல்லு… ஆனா என்னை கேக்காம எவனையாச்சும் மாப்பிள்ளையா புக் பண்ண… அப்புறம் சென்னை வரவே மாட்டேன்… மும்பைல இருந்து எஸ்கேப் ஆகிடுவேன்…”

“அப்பாடி… நிம்மதி… எப்போ சாமி இந்த வேலைய பண்ண போற? அப்படியாச்சும் அப்பாக்கு ஒரு நிம்மதிய தேடி தாடா குட்டி!” என்று சிரிக்காமல் சிவதாணு சொல்ல

“அப்பாஆஆஆ… உன் கூட கா… என் கூட பேசாத!” மிகவும் எரிச்சலாக சொன்னவளை பார்த்து

“சரிடா குட்டி!” என்று சிரித்து கொண்டே சொன்னார்!

“அப்பாஆஆ… அங்க இட்லியே கிடைக்காதுப்பா… வர வரன்னு அந்த சப்பாத்திய எப்படிப்பா சாப்பிடுவேன்?”

“ஓ… சென்டிமென்டலா தாக்குறியா? இதுக்கெல்லாம் அசர மாட்டேன்டா குட்டி! இதெல்லாம் ஒரு பிரச்சனையா… எல்லாத்தையும் சமாளிச்சு பழகுடா! பொண்ணுங்களுக்கு எல்லா பிரச்சனையும் சமாளிக்க தெரியணும்… கொஞ்ச நாள் இந்த அனுபவம் உனக்கு வேணும் புஜ்ஜிம்மா… தைர்யம் வேணும்…”

“அப்பா… எனக்கு தைர்யம் எல்லாம் நிறைய இருக்குப்பா…”

“ஆமா… இல்லைன்னு யாரு அஞ்சு சொன்னது? அந்த வானர படையோட சேர்ந்து கிரிகெட் ஆடி அக்கம் பக்கத்து வீட்டு ஜன்னல எல்லாம் உடைக்கறதுல இருந்தே தெரியாதா? அன்னைக்கு பக்கத்து பிளாட் சேஷகோபாலனோட மண்டைய உடைச்ச வீராங்கனையாச்சே நீ…”

“அப்பா அந்த ஆள் ஒரு லூசுப்பா… இத்தனை வயசாகியும் சைட் அடிச்சுகிட்டு பராக்கு பாத்துகிட்டு வந்தா பால் படாம என்னப்பா ஆகும்?”

“சரி… அந்த கார்னர் பிளாட் பையன் கார்த்திக்க கண்ண கட்டி எல்லாருமா சேத்துல தள்ளி விட்டீங்களே அது என்ன தங்கம்… இப்படியெல்லாம் நீ ரவுடிதனம் பண்றதுக்கு முடியாதுன்னு தானே மும்பை போக மாட்டேங்கற?”

“அப்பா… அந்த பேக்கு என் கிட்ட ஐ லவ் யூ சொன்னான்பா… அதான் அந்த ட்ரீட்மென்ட்… அம்மா கிட்ட சொல்லிடாதப்பா… ப்ளீஸ்” என்றாள் ரகசிய குரலில்!

“அட கடவுளே… இதுக்கு தான் நான் உன்னை மும்பை அனுப்பறதே… இப்படி சின்ன பொண்ணாவே இருக்கியே அஞ்சலி! இப்போ ஒன்னும் பேசாத… ஒழுங்கா மும்பைய பார்த்து போ” என்று கறாராக சிவதாணு சொல்லவும்

“நீ என் அப்பாவே இல்லப்பா… நான் உன்னை டைவர்ஸ் பண்ணிட்டேன்… இனிமே என் கிட்ட பேசவே பேசாத…” என்று எரிச்சலாக சொல்லி விட்டு வெடுக்கென்று பையை பிடுங்கி கொண்டு போக

தினம் தன்னை பத்து முறை டைவர்ஸ் பண்ணுவதால் அவளின் சிறுபிள்ளை தனத்தை நினைத்து சிரித்து கொண்டார்! எப்படியாக இருந்தாலும் முயல்குட்டி போல் தன் பெற்றோரையே சுற்றி வரும் அஞ்சலியை பார்க்கும் போது பாசம் மேலிட்டாலும் இவள் இப்படியே இருந்தால் உலக அனுபவம் பெறுவதெப்படி? நல்ல வரனாக பார்த்து தான் திருமணம் செய்து வைப்போம் என்றாலும் அவளே சுயமாக நிற்க தெரிய வேண்டாமா? நாளை கணவன் வீட்டில் ஏதாவது கஷ்டம் என்றாலும் சமாளிக்கும் திறமை வேண்டுமே! மின்சார வாரியத்தில் பணியாற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த தன்னால் முடிந்த அளவு தானே செய்ய முடியும்! தன் பேத்தியை மும்பை அனுப்பவே மாட்டேன் என்று அடம் பிடித்த தாயையும் தன் மனைவியையும் சமாளித்து இதோ இங்கே வந்து விட்டார்!

“டேய் குட்டி… கோபத்துல கம்பார்ட்மென்ட் மாறி ஏறிடாத? ஏசி டூ டையர் டா… 2A16”

“ம்ம்ம்… இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல… என்னை நாடு கடத்துற இல்ல… போ… உன் கட்சி கா…”

தலையை சிலுப்பி கொண்டு அந்த பெட்டியில் ஏறினாள்!

இவை அனைத்தையும் மௌன சிரிப்போடு பார்த்து ரசித்து கொண்டிருந்தன இரண்டு கண்கள்!

****

ரயில் கிளம்பும் முன் தன் உதவியாளரிடம் பேசி கொண்டு இருந்தான் அர்ஜுன்! அர்ஜுன் வானமாமலை! உள்நாட்டு வாணிகம் வெளிநாட்டு வாணிகம் என்று அனைத்து துறைகளிலும் கால் பதித்து இருக்கும் விக்டரி க்ரூப்ஸ் எம்டி! இவர்கள் தொட்டு பார்க்காத துறையோ உயரமோ இல்லை எனலாம்! மளிகையில் இருந்து கம்ப்யுட்டர் வரை, ஹோட்டல்கள், மருத்துவமனைகள் இப்போது லேட்டஸ்ட் செல்பேசி சேவை வரை! மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் யூனிட்களை வாங்கி அதை மிகவும் லாபகரமாக மாற்றி அதை நூறு பங்கு லாபத்துக்கு விற்பது இவர்களின் கை வந்த கலை! தன் தந்தை ஆரம்பித்து வைத்த இந்த விளையாட்டை மிகவும் ரசித்து செய்பவன்!

ஓய்வே இல்லாமல் உழைப்பதில் தன் தந்தையை கொண்டிருக்கும் இவனுக்கு மிகவும் பிடித்தது ரயில் பயணங்கள்! வேலை பளு அழுத்தும் போது மற்றவர்கள் வேறு எதையெல்லாமோ தேர்ந்தெடுக்க இவன் தேர்ந்தெடுப்பது நீண்ட ரயில் பயணத்தைதான்! தன் தந்தை சேர்மன் வானமாமலையிடம் பொறுப்புக்களை ஒப்புவித்து விட்டு எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லாமல் செல்லும் இந்த பயணங்களை மிகவும் ரசிப்பான்! எளிமை விரும்பி! இப்போது செல்வது தனது செல்பேசி சேவை நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு, மும்பையில்! ஜீன்ஸ் டி சர்ட்டில் கலக்கலாக இருந்தவனை பார்க்காத பெண்கள் குறைவு! வயது இருபத்து எட்டு! ஆறடி உயரம் அதற்கேற்ற பருமன்! உடலின் வலுவை வைத்து இவன் சோம்பி உட்காருபவன் அல்ல என்பது தெளிவாகியது! மாநிறம்! கண்களின் கூர்மை எதையும் விட்டு வைக்கவில்லை!

“சார்… ஈக்யு போட்டு இருந்தோம் சார்… ஆனா பர்ஸ்ட் ஏசி கிடைக்கல… டூ டயர்ல தான் கன்பார்ம் ஆகி இருக்கு… 2A 14…”

“பரவால்ல கௌஷிக்… இட்ஸ் ஓகே… நான் பார்த்துக்கறேன்!”

“சார்… ஒய் டோன்ட் யூ டேக் பிளைட்?”

“இட்ஸ் போரிங் கௌஷிக்… பார் அ சேஞ்ச், ட்ரெயின்ல போலாமே… இட் வில் பீ பெட்டர்”

“ஓகே சார்! டேக் கேர்…”

“ஓகே கௌஷிக்… மும்பை போயிட்டு உனக்கு கால் பண்றேன்… அங்க ராஜேஷ் பாலோ பண்ணிக்குவார்… பை… சீ யூ…”

“ஓகே சார்… பை!”

அஞ்சலி அவளது அப்பாவிடம் நடத்தி கொண்டிருந்த விவாதத்தை பார்த்தவாறே கௌஷிக்கிடம் பேசி விட்டு அவனது பெட்டியில் ஏறினான் அர்ஜுன்!

*****

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு சசி… கொஞ்ச நாள் வெயிட் பண்ணி இருக்கலாமோன்னு தோணுது…”

சசிதரனிடம் புலம்பி கொண்டு இருந்தவள் மேகா! சென்னையில் முக்கியமான தொழிலதிபர் கணபதியின் ஒரே செல்ல மகள்! அவரது அனைத்து சொத்திற்கும் வாரிசான பத்தொன்பது வயது பனி சிற்பம்! கடல் போல் சொத்து இருந்தாலும் சென்னையின் நவீனங்களில் உள்செல்லாத தன்மையினால் அவளை தனிதன்மையோடு காட்டியது! அதிகம் பேசாத தன்மை நட்பை அளவோடு நிறுத்தியது!

பொறியியல் இரண்டாமாண்டில் படிக்கும் போது சசிதரனிடம் மனதை பறிகொடுத்தாள்! தனது வீட்டில் இதை சொல்வதற்கு பயந்து கொண்டு இருந்தபோது சசிதரனின் நண்பர்கள் குடுத்த யோசனை தான் இது!

சசிதரன் மும்பையை சேர்ந்தவன்! இருவரும் அங்கே போய் விட்டால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஐடியா குடுக்க மிகவும் தயங்கினாள்! சசியின் பெற்றோரே பேசி மும்பை வர சொல்ல, இதோ கிளம்பி விட்டாள்! ஆனாலும் அவளுக்கு மனது உறுத்தாமல் இல்லை!

பெற்றோரை விட்டு விட்டு தனியே இப்படி திருமணம் செய்ய வந்து இருப்பது எவ்வளவு தூரம் சரி என்று சொல்ல முடியவில்லை! ஆனாலும் என்ன செய்வது? வீட்டில் தாயோ தந்தையோ இருந்து இருந்தால் ஏதாவது பேசி இருக்கலாமோ? தொழில் என்று ஓடும் தந்தை! கிளப், சமூக சேவை என்று ஓடும் தாய்! இருவரும் சேர்ந்து இருந்தால் தானே! தான் உறங்கிய பின் தான் அவர்களுக்கு விடியும்! பார்ட்டி களைகட்டும்! ஆனால் பாட்டியிடம் வளர்ந்த மேகாவுக்கு அவைகளில் நாட்டம் இல்லை! அப்போது அறிமுகமானவன் தான் சசிதரன்! அவனது தந்தைக்கும் இவளது தந்தைக்கும் வியாபாரத்தில் ஏதோ தொடர்பு! பார்ட்டியில் பிரியமே இல்லாமல் அமர்ந்து இருந்தவளிடம் பேச்சு கொடுத்தவன்… பின்னர் பழக பழக நட்பு காதலானது வெறும் இரண்டே மாதத்தில்! அன்புக்காகவும் ஆதரவிற்காகவும் ஏங்கி கொண்டிருந்த தன் பாலைவனத்தில் கற்பக விருட்சமாக சசிதரன் தெரிந்தான்! கடவுள் தன்னை எப்போதும் கைவிட மாட்டார் என்பதில் மிகுந்த நம்பிக்கை வைத்து இருந்தாள்!

“ஹேய்… ஏன் மேகி இப்படி நினைக்கிற? நமக்கு கல்யாணம் ஆகிட்டா உங்க அப்பாவால ஒன்னும் பண்ண முடியாது… அதுக்கு தானே இப்போ மும்பை போறோம்… நம்ம அம்மா அப்பா எல்லாத்தையும் பார்த்துக்குவாங்கடா… டோன்ட் வொர்ரி! ஓகே பேபி!”

“இல்ல சசி… அப்பா கிட்ட ஒரு தடவையாவது டிஸ்கஸ் பண்ணி இருக்கலாமோன்னு தோணுது! இப்போவும் ஒன்னும் கெட்டு போய்டல… வாங்க சசி நாம திரும்பி போய்டலாம்…”

“நீ இப்போ திரும்பி போறதுக்கு என்னோட காதலையும் சேர்ந்து மறந்துட்டு போய்டு…”

“ஏன் சசி இப்படி சொல்றீங்க…” குரல் கம்மியது.

“பின்ன என்ன மேகி… இவ்ளோ கஷ்டப்பட்டு வந்தாச்சு… முடிவுன்னு ஒன்னு எடுத்தாச்சு… அதுல ஸ்ட்ராங்கா நிக்காம… இப்படி பயந்துட்டு இருந்தா எப்படி செல்லம்?”

“சரி… நீங்க சொல்ற மாதிரியே செய்வோம்…”

“குட் கேர்ள்… எங்க சிரி…”

அவள் புன்னகைக்கவும்…

“இப்போ தான் நீ என் மேகி… ஓகே கெட் இன் டு த ட்ரெயின்… நம்ம சீட் 2A 15 அன்ட் 2A 17!”

*******

அவசர அவசரமாக ஓடி வந்து ஏறினான் அந்த நெடியவன்! நல்ல உயரம்… அதற்கேற்ற உடலமைப்பு… அவனது நிறமும் பிரெஞ்சு தாடியும் அவனது கவர்ச்சியை தூக்கி காட்டியது! பெர்முடாசும் டீ சர்ட்டும் அணிந்திருந்த விதம் அவனை மற்ற பெண்கள் திரும்பி பார்க்க வைத்தது! உடன் வந்த நண்பனிடம் கை குடுத்து

“பை டா மச்சி… மும்பை போனவுடனே போன் பண்றேன்…”

“ஓகே பை மாமு… டேக் கேர் டா…”

அவசராமாக ஓடி வந்து ஏறிய நம் நாயகன் கெளதம்! மாடலிங் கோஆர்டினேட்டர்! மாடல் அழகிகளை மேடையில் பூனை நடை நடக்க வைப்பவன்! எதை பற்றியும் கவலை படாமல் தன் வாழ்க்கையையும் தனது தொழிலையும் மிகவும் நேசிப்பவன்! யதார்த்தவாதி! வயது இருபத்து எட்டு… வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்பவன்! காதலில் நம்பிக்கை இல்லாததால் திருமணத்தை பற்றி சிறிதும் நினைத்து பார்க்காதவன்! அழகை ஆராதிக்கும் மாடர்ன் ஞானி!

தன்னுடைய 2A 18 தேடி கண்டு பிடித்து அமரும் போது இரண்டு குரல்கள்!

“ஹேய்… கெளதம்!”

“டேய்… கெளதம் அண்ணா…”

அத்தியாயம் இரண்டு

ஒரே சமயத்தில் இருவரும் அழைக்கவே கெளதம் ஒரு நிமிடம் வியந்து நிமிர்ந்து பார்த்தான்!

அர்ஜுன் அமர்ந்து இருக்க அவன் முன்னர் வேறு யார் அஞ்சலி தான்!

“ஹேய் அர்ஜுன்! ஹேய் எலிக்குட்டி! நீங்க ரெண்டு பேரும் எப்படிடா ஒன்னா?”

அவ்வப்போது அஞ்சலியை பார்த்து கொண்டு அவள் தன் அப்பாவிடம் செய்து கொண்டு இருந்த விவாதத்தை நினைத்து சிரித்து கொண்டிருந்த அர்ஜுனுக்கு அவள் கௌதமுக்கு தெரிந்தவள் எனும்போது வியப்பு மேலிட்டது!

“ஹேய் ஹேய் ஸ்டாப் மேன்! அவங்க தனியா வந்தாங்க… நான் தனியா வந்தேன்… நீயே கோர்த்து விடாத!”

சொன்னவனை பார்த்து முறைத்தாள் அஞ்சலி!

“அதான பார்த்தேன்… நம்ம தோஸ்த் நல்ல பையனாச்சே… போயும் போயும் இந்த காளியாத்தா கூட எப்படி வர முடியும்னு பார்த்தேன்! ஓகே… டேய் எலிக்குட்டி இது என் பிரெண்ட் அர்ஜுன்… ஸ்கூல், காலேஜ்ல ஒண்ணா படிச்சோம்… டேய் அர்ஜுன் இது என் உடன் பிறவா சகோதரி, மேன்மை தாங்கிய என்னோட சித்தப்பாவோட ஒரே பொண்ணு! பேர் அஞ்சலி!”

“அண்ணா… உன் பிரெண்ட் 4. 5 % பால் தான் குடிப்பாரா… மீதிய என்ன சார் பண்ணுவீங்க?” என்று சிரிக்காமல் கேட்க… அதை கேட்டு புன்னகைத்து கொண்டே அர்ஜுன்

“ஏண்டா இந்த ஒரு எலி, ரெண்டு எலி, மூணு எலி, நாலு எலி, அஞ்சு எலின்னு சின்ன வயசுல கிண்டல் பண்ணுவியே இது அந்த அஞ்சலியா கெளதம்?”

“ஆமா அதே எலி தான்…” என்று சிரிக்க

அஞ்சலி கொதிநிலைக்கு போய் கொண்டிருந்தாள்!

“டேய்… அண்ணா… என்னை எலின்னு கூப்டாதன்னு எவ்ளோ தடவ சொல்றது? மறுபடியும் சொன்ன…” என்று மிரட்ட

“என்ன எலிக்குட்டி பண்ணுவ? ட்ரெயின்ல இருந்து குதிச்சுடுவியா?”

“நான் எதுக்குடா குதிக்கறேன்? உன்னை பிடிச்சு தள்ளி விட்ருவேன்!”

“ஐயோ… அர்ஜுன்… என்னை முழுசா பார்த்துக்கோ… இந்த காளியாத்தா செஞ்சாலும் செய்வா…”

“ஆமா ஆமா… யாரோ கார்த்திக்க கூட சேத்துல தள்ளி விட்டுட்டாங்களாம் இல்ல…”

“இது எப்படி உங்களுக்கு தெரியும்?” அஞ்சலி குழப்பமாக

“இல்ல உங்க அப்பா சொல்லிக்கிட்டு இருந்தார்ல… அப்போ தானா காதுல வந்து விழுந்தது!”

“ஒட்டு கேக்கறதுக்கு இப்படி ஒரு பேரா… மங்களம்ம்ம்ம்ம்… என் இமேஜ இப்படி டேமேஜ் பண்ணிட்டு போயிட்டியே” என்று புலம்ப ஆரம்பிக்க

“அதுக்கு ஏன் எலிக்குட்டி சித்தப்பாவ சொல்ற?”

“ம்ம்ம்… ரெண்டு பேரும் சேர்ந்து என் இமேஜ ஸ்பாயில் பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ இப்படி ஒரு கேள்வியா… டேய் அண்ணா… வீட்டுக்கு வருவியில்ல… அப்போ இருக்கு உனக்கு…”

“நீ டேய் அண்ணான்னு கூப்பிடுற வரைக்கும் நான் உன்னை எலிகுட்டின்ன்னு தான் கூப்டுவேன்… ஏன் லூசு என் மானத்த வாங்குற?”

“ஆமா நீ பெரிய லார்ட் லபக்கு தாசு… உன்னை வாங்க அண்ணா போங்க அண்ணான்னு கூப்பிடனுமாக்கும்… போடா…”

“வேணாம் எலிக்குட்டி… பப்ளிக்ல அடி வாங்காத…” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அஞ்சலியின் செல்பேசி அழைக்க

“ஹலோ… அம்மா…”

“ஏண்டா கண்ணா… ட்ரெயின் கிளம்பிடுச்சா?”

“ம்ம்ம்… கிளம்பிடுச்சும்மா…” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே செல்பேசியை பறித்த கெளதம்

“சித்தி… நான் கெளதம் பேசறேன்!”

“டேய் கண்ணா… நீ எங்கம்மா அங்க…”

“நானும் மும்பை தான் சித்தி போறேன்… உள்ள வந்து பார்த்தா ஒரே கம்பார்ட்மென்ட்ல இந்த எலியும் இருக்கு…” என்று சொல்லும் போதே அஞ்சலியிடம் கிள்ளு வாங்கி கொண்டான் கெளதம்!

“ஆஆஆஆ…”

“ஏன்டா கண்ணா… அவ எதாச்சும் வம்பு பண்றாளா?”

“இல்ல சித்தி எலி இப்போ நல்ல பிள்ளையா இருக்கு…” என்றான் சிரித்து கொண்டே!

“ரொம்ப சந்தோசம் கண்ணா… பயந்துட்டே இருந்தேன்… இந்த மனுஷன் தனியா ரயில் ஏத்தி கண் காணாம குழந்தைய அனுப்பறாரேன்னு… இப்போ தான் நிம்மதியா இருக்கு ராஜா…”

“சித்தி… குழந்தையா… ஐயோ… இந்த காளியாத்தாவா? அந்த மும்பைய முழுங்கி ஏப்பம் விட்டுடுவா சித்தி பயப்படாதீங்க… நான் பார்த்துக்கறேன்…”

“சரிடா கண்ணா… ஹாஸ்டல்ல சேர்த்து விட்டாச்சு… அங்க கொண்டு போய் பத்தரமா விட்ரு ராஜா… பத்திரமா போகனும்ன்னு தான் செகண்ட் ஏசி எடுத்தாரு சித்தப்பா… நீ கவனிச்சுக்கோ கண்ணா… ஏதாவது வம்பு இழுத்துக்க போறா… அங்க யாராச்சும் தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வெச்சுடும்மா…”

“இத நீங்க சொல்லனுமா சித்தி… என் தங்கச்சிய நான் பார்த்துக்க மாட்டேனா? சித்தி… நம்ம அர்ஜுன் இருக்கான்ல… ஸ்கூல் படிக்கும் போது வீட்டுக்கு வந்து இருக்கான்ல சித்தி… ஞாபகம் இருக்கா?”

இதை சொல்லி கொண்டிருக்கும் போதே ஏக்கமாக இரு கண்கள் பார்த்து கொண்டிருந்தன!

“ம்ம்ம் ஆமாம்… அஞ்சலிய கூட தூக்கி வெச்சுக்குவான்ல… அந்த பையனா?”

“ஆமாம் சித்தி… இப்போ தான் இங்க பார்த்தேன்! அவனும் எங்க கூட தான் வரான்”

“பரவால்லயே கண்ணா… நல்ல பையன்… சரி நல்லபடியா மும்பை போயிட்டு போன் பண்ணு கெளதம்…”

பேசி கொண்டே திரும்பியவன் கண்களில் பட்டது மேகாவின் ஏக்கம் நிறைந்த கண்கள் தான்!

“ஓகே சித்தி… டவர் கிடைக்கல… அப்புறம் அஞ்சுவ பண்ண சொல்றேன்… பை சித்தி…”

“வாவ்… என்ன ஒரு அழகு! சேலை விளம்பரத்துக்கு சூப்பரா சூட் ஆவாங்க போல இருக்கே… ஆனா ஏன் இவ்வளவு சோகம்? கல்யாணமாகல போல இருக்கு… ஆனா இது யாரு?” என்று நினைத்து கொண்டே சிநேகமாக மேகாவை பார்த்து புன்னகைத்தான் கெளதம்!

புன்னகைத்தவனை பார்த்து முறைத்து கொண்டே வெளியே செல்பேசியை எடுத்து கொண்டு போனான் சசிதரன்!

இருவரும் தெரிந்தவர்கள் போல என்று நினைத்து கொண்டே அர்ஜுனிடம் திரும்பி

“அப்புறம் எப்படி போகுது… பார்த்து நாலு வருஷம் இருக்குமில்ல அர்ஜுன்!”

“ம்ம்ம் ஆமா எம்பிஏ கான்வோகேஷன்ல பார்த்தது அகமதாபாத்ல… இப்போ நீ என்ன பண்ற கெளதம்?”

“நான் மீடியா கோஆர்டினேஷன், ஆட் ஏஜென்சி, மாடல் கோஆர்டினேஷன்னு பிசி தான் அர்ஜுன்… இப்போ ஒரு ஆட் விஷயமா தான் மும்பை போறேன்… நீ எப்படி இருக்க… அப்பா எப்படி இருக்காங்க?” நடுவே குறுக்கிட்ட அஞ்சலி

“ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க நான் வந்துடறேன்”என்று கூறி விட்டு பாத்ரூம் சென்றாள்! அவள் போய் சிறிது நேரம் கழித்து மேகாவும் சென்றாள்!

“நான் நல்லா இருக்கேன்டா… அப்பா கம்பெனிஸ பார்த்துக்கறேன்… வாழ்க்கை நிற்காம ஓடுது… இப்போ கூட செல்போன் சர்விஸ் ப்ரவைட் பண்ண ஸ்டார்ட் பண்ணி இருக்கோம்… ஓசோன்… ம்ம்ம்… அப்படியே போகுது…”

“கேள்விபட்டேன் அர்ஜுன்! என் கிட்ட கூட ஓசோன் தான்… ஆனா வந்து நேர்ல பார்க்க தான் சங்கடமா இருந்துச்சு… டு பீ பிரான்க்… முதல்ல மாதிரியே இப்போ நீ பழகுவியான்னு தான்!”

“ஹேய்… கெளதம்… என்ன நீ இப்படி கணக்கு போட்டுட்ட… என்னை பத்தி தெரியாதா உனக்கு… ராஸ்கல்… ஆட் ஏஜென்சி ஆரம்பிக்கும் போதாச்சும் கூப்ட்டு இருக்கலாம்ல… அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பாரே கெளதம்?”

“நினைச்சேன் அர்ஜுன்… உன்னை மாதிரி நாலு பெரிய ஆளுங்க வந்தா நல்லா இருந்து இருக்கும் தான்… ஆனா நம்ம பிரெண்ட்ஷிப்ப யூஸ் பண்ணிக்கறதா நினைக்க கூடாதில்ல… அதான் அர்ஜுன்… சாரிடா மச்சான்!”

“ஹா… இப்போ தான் மாம்ஸ் பார்ம்க்கு வரார்! அப்புறம் எப்படி போகுது உன் பிசினெஸ்?

“நல்லா போகுதுப்பா… கிங்பிஷர் காலண்டர் கூட நாங்க தான் இத வருஷம் பண்ணோம்…” என்று சிரித்து கொண்டே சொல்ல…

“வாவ்… அப்போ செம சீன் தான்னு சொல்லு மச்சி… உன் ப்ரோபைல் குடுடா… அப்பா கிட்ட பேசி நமக்கும் உன்னையே புக் பண்ணிடறேன்… சார் அப்பாய்ன்மென்ட் குடுப்பீங்களா?”

“ஹேய்… என்னடா நீ இப்படி ஓட்டற… தேங்க்ஸ்டா மச்சி… ஆமா நீ என்ன ட்ரெயின்ல அதுவும் டூ டயர்ல…”

“இதுல என்னடா இருக்கு… ஜஸ்ட் லைக் தட்… ஒரு நாள் ப்ரீயா இருக்கணும்ன்னு நினச்சேன்… இது எனக்கு பழக்கம் தான்டா மச்சான்…”

“யூ ஆர் இம்பாசிபல் அர்ஜுன்… ஐ ரியல்லி மீன் இட்…”

“ஹேய் கம் ஆன்டா… இது ஒரு பெரிய விஷயமே இல்ல…”

என்று அடித்து பேசி சிரித்து கொண்டிருக்க… பின்னர் குரலை தழைத்த அர்ஜுன்

“சரி… இந்த வாலு இப்போ ஆள் எப்படி?”

“டேய்… என்னடா மச்சான்… அவ என் தங்கச்சிடா…” என்று கண்டன குரலில் கூற

“ஹேய்… கூல் மேன்… இல்லைன்னு யார் சொன்னா… சப்போஸ் அவ மேல எனக்கு பின்னாடி இன்ட்ரெஸ்ட் வந்துச்சுன்னு வை…” என்று கேலியாக கூற…

“அஞ்சலி மேல… ஐயோ… தயவு செஞ்சு அந்த நினைப்ப விட்டுடு… கொஞ்ச நாள் நீ நல்லா இருக்கணும்ன்னு நினைக்கிறேன்…” என்று கேலியாக சொல்லிவிட்டு

“அவ… சான்சே இல்ல… கஷ்டம்… இத சொன்னன்னு வை… உன் மண்டைய உடைச்சுடுவா… எத்தன பேர காலி பண்ணி இருக்கா என் தங்கச்சி…” என்று சிரித்து கொண்டே கூறினான்!

“அப்படியா… அவ்ளோ பெரிய ரவுடியா உன் தங்கச்சி… இன்னும் மாறவே இல்லை… விளையாடும் போது பஸ் மேல கல்ல விட்டு எறிஞ்சு பஸ் கண்ணாடிய உடைச்ச ஆள் தானே அது… என் கிட்ட இப்போவும் வால்தனத்த காட்டுவாளா? அதையும் தான் பார்க்கலாமே… !” என்று கேலியாகவே கூற!

“ஹேய்… ஞாபகம் இருக்கா உனக்கு… அப்புறம் என்னை மாட்டி விட்டுருச்சு அந்த குட்டி பிசாசு!” பின்னர் குரலை தழைத்து…

“சீரியஸா சொல்றேன் அர்ஜுன்… அவ என் தங்கச்சி… கல்யாணமாக வேண்டிய பொண்ணு அவ… நீ இப்படி பேசுறது சரி வராது அர்ஜுன்…”

“ஹய்யோ… டேய் மச்சான்… என்னடா இவ்ளோ சீரியஸா எடுத்துகிட்ட… கம் ஆன் கெளதம்! இப்போ சீரியஸா ஒண்ணுமே இல்ல… என்னை பத்தி உனக்கு தெரியாதா?”

“நல்லா தெரியும்… நீ டைம் பாஸ்க்காக இந்த மாதிரி பண்ற ஆள் இல்லைன்னு தெரியுமே… என்ன… எதாச்சும் பொண்ண சைட் அடிக்கறதுன்னா கூட நாம ரெண்டு பேரும் சேர்ந்து தானே செய்வோம்… அப்போவே அதுக்கு மேல போகாத ஆள் நீ… ஆனாலும் அஞ்சலிக்கு அண்ணன்னா நான் வேற எப்படி பேசுவேன்னு நினைக்கிற?”

“ஓகே… கரெக்ட் தான்… அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை அதில் தீபமன்றோ…” என்று கேலியாக பாடினான் அர்ஜுன்!

பேசி கொண்டிருக்கும் போதே மேகாவும் அஞ்சலியும் சிரித்து பேசி கொண்டு வர… செல்பேசியில் பேசி விட்டு சசிதரனும் உள்ளே வந்தான்!

“ஹேய் அஞ்சலி வரா… எதையும் காட்டிகாத மச்சி…” என்று கெளதம் எச்சரிக்கை செய்து வேறு விஷயம் பேச…

சட்டென்று திரும்பி பார்த்த அர்ஜுனுக்கு அஞ்சலி சிரித்து பேசி கொண்டு வந்த காட்சி கல்வெட்டாக பதிந்தது!

“குழந்தை மாதிரி முகம்… பார்பி டால்… இன்னும் அந்த பழைய குறும்பு அப்படியே இருக்கு! என்னை ஞாபகமே இல்லை போல் இருக்கே… !” என்று மனதுக்குள் நினைத்து கொண்டு அவளையே பார்த்தான்!

அர்ஜுன் அஞ்சலியை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை பார்த்தவாறே திரும்பிய கெளதம் கண்ணில் சிக்கியவள் மேகா! மின்சாரம் தாக்கியவன் போல் அவளை பார்த்தான்!

என்ன ஒரு சாத்வீகமான அழகு! சிரிக்கும் போது மனசு அள்ளுதே… ! யாருன்னே தெரியலையே… ஒரு வேளை இந்த முசுடுக்கு எதாச்சும் சொந்தமா இருப்பாளா? என்னவா இருந்தாலும் கொஞ்சம் விசாரிச்சு தான் பார்க்கலாமே… எப்படியா இருந்தாலும் அடுத்த விளம்பரத்துல இந்த பொண்ண நடிக்க வெச்சுடனும்… சம்மதிப்பாளா? எப்படியாச்சும் சம்மதிக்க வைக்கணும்… நினைத்து கொண்டிருந்தவனை கலைத்தது அஞ்சலியின் குரல்!

“என்ன ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பாட்டெல்லாம் முடிஞ்சுதா…” அஞ்சலி கேட்டு கொண்டே கெளதம் பக்கத்தில் உட்கார… மேகா சசிதரனின் பக்கத்தில் உட்கார்ந்தாள்!

“ம்ம்ம்… பாதி பாட்டு தான் ஓடி இருக்கு… மீதி பாதிய உன்னை வச்சு பாடலாம்ன்னு இருக்கோம் எலி… ஓகே வா?” என்று வம்பிழுத்தவன் வேறு யார்? அர்ஜுன் தான்!

“ம்ம்ம்ம்… வேணாம்… டேய் அண்ணா… உன் பிரெண்ட் கிட்ட என்னை பத்தி சொல்லி வை… என் கிட்ட இந்த வேலையெல்லாம் வெச்சுக்க வேணாம்… நம்மள பத்தி சொல்லி வைண்ணா!

“சரி எலின்னா பிடிக்கலையா? ஓகே பெருச்சாளி… ஓகே வா?”

“அண்ணாஆஆஆஆ!”

“ஏன் கெளதம்… இது இன்னும் அப்படியே இருக்குல்ல… அதே வால் தனம்! வாயாடிதனம்! என்ன கொஞ்சம் வளந்துட்டா… அவ்ளோதான்! ஏன் எலி இன்னும் மரம் ஏறிகிட்டு தான் இருக்கியா?”

“ஏன் கூட நீங்களும் வந்து ஏறவா?”

“பின்ன… சின்ன வயசுல என் கிட்ட அவ்வளவு க்ளோஸ் நீ… நான் தான் உன்னை மரம் ஏத்தி விடுவேன்… தெரியுமா?”

“இத நான் நம்ப மாட்டேன்… உடான்ஸ்…”

“ஹேய்… எலிக்குட்டி நிஜமாடா… அர்ஜுன் வந்து தூக்குனா தான் சாப்பிடுவேன்னு நீ அடம் பண்ணுவ…” என்று கெளதம் சொல்லவும்…

“அப்படியா… எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லண்ணா…”

“டேய் கெளதம்… எலிக்கு ஞாபகம் வரதுக்கு வேணும்னா நான் எலிய தூக்கி காட்டுட்டா?” என்று கண்ணடித்து கொண்டு சொல்ல…

“வேணாம்ம்ம்ம்ம்ம்ம்ம் அர்ஜுன்… அப்படியே ட்ரெயின்ல இருந்து உன்னை தள்ளி விட்டுடுவேன்!” என்று ஒருமையில் மிரட்டவும் இருவருக்கும் சிரிப்பு பீறிட்டு கொண்டு வந்தது! இருவரும் வாய் விட்டு சிரிக்க…

இதை பார்த்த மேகாவும் சிரிக்க… சசிதரன் முகத்தை உம்மென்று வைத்து கொண்டு மேகாவை முறைத்தான்! பெட்டியில் ஏறியதில் இருந்து அவனிடம் அவள் பேசவே இல்லையே! ஏதாவது இவனாக பேச்சு குடுத்தாலும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லி விட்டு அந்த மூன்று பேரும் அடிக்கும் கூத்தை பார்க்க உட்கார்ந்து விடுகிறாள்! சசிதரனுக்கோ நெருப்பின் மேல் உட்கார்ந்தது போல் இருந்தது! என்ன நாளை வரை தானே! அப்புறம் இவர்கள் யாரென்று கூட தெரிய போவதில்லை!

ரயில் திருத்தணி ரயில் நிலையத்தில் நிற்க… இன்னும் கொஞ்சம் ஆட்கள் ஏறினார்கள்! ரயில் பயணங்களின் சிறப்பே இதுதான்! முன்பின் தெரியாதவர்களை கூட வலைக்குள் கட்டி வைத்து விடும்! ஒரு சில நேரங்களில் பழைய நட்பை புதுப்பித்தும் குடுக்கும்!

அர்ஜுனும் கௌதமும் பாண்ட்ரி செல்ல முனைய… அஞ்சலி அவள் அம்மா கட்டி குடுத்த தயிர் சாதத்தை எடுத்தாள்!

“ஹேய் அஞ்சு… நீயே முழுங்கிடாத… வெயிட் பண்ணு பாண்ட்ரில இருந்து வாங்கிட்டு வரோம்… சேர்த்து வைத்து சாப்பிடலாம்! சார்… நீங்களும் வரீங்களா?” என்று சசியை பார்த்து நாகரீகம் கருதி கெளதம் கேட்க

“நீங்களும் போயிட்டு வாங்க சசி! நான் அஞ்சலிகிட்ட பேசிட்டு இருக்கேன்!”

“ஓகே மேகி… நீ பேசிட்டு இரு… உனக்கு என்ன வேணும்?”

“தயிர் சாதம் ஓகே… அப்புறம் ஏதாவது தொட்டுக்க…”

மூவரும் செல்ல மேகாவும் அஞ்சலியும் உரையாட ஆரம்பித்தனர்! அவர்களை பற்றி… குடும்பம்… படிப்பு… பெற்றோர்… மும்பை போகும் காரணம் என்று அனைத்து பக்கமும் போனது! சசியும் மேகாவும் திருமணத்திற்காக தான் மும்பை போகிறார்கள் என்பதை அறிந்த போது மிகவும் ஆச்சரியபட்டாள்!

“ஏன் மேகி… கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாம்ல…”

“எனக்கு அவசரமே இல்ல அஞ்சலி… இவர் ரொம்ப அவசர படுத்தறார்! எங்க அப்பாவுக்கு தெரிஞ்சுட்டா சம்மதிக்க மாட்டார்னு!”

“நம்ம அம்மா அப்பா நமக்கு என்ன செய்தாலும் அது நம்ம நன்மைய கருதி தான் மேகி… அவங்க நமக்கு கெடுதலே நினைக்க மாட்டாங்க… நீங்க இப்படி வந்து இருக்கறது எவ்வளவு தூரம் சரின்னு சொல்ல முடியாது மேகி… யோசிச்சு முடிவு பண்ணுங்க… ரொம்ப உரிமை எடுத்துக்கறதா நினைக்காதீங்க… மனசுல பட்டத்த சொல்றேன்…”

அவள் தன் பெற்றோரை நினைத்து பார்த்தாள்! அவர்கள் கொஞ்சம் இவளிடம் உட்கார்ந்து பேசி இருந்தால் தான் பரவாயில்லையே… அவர்களுக்கு தான் நேரமே இல்லையே… பின்னர் எதுக்காக இவர்கள் தன்னை பெற்றார்கள் என்று கூட தோன்றும்! பிள்ளை இல்லை என்று மற்றவர்கள் பேசுவதை தவிர்க்க தன்னை பெற்று விட்டு தன்னை அன்புக்கு ஏங்க விட்டவர்களை என்ன செய்வது?

“எனக்கும் பயமா தான் இருக்கு அஞ்சலி! சசி தைர்யம் சொல்லும் போது வர துணிச்சல் அப்புறம் காணாம போய்டுத்து! வந்தாச்சு… என்ன பண்றது?”

“ரொம்ப அப்பாவியா இருக்கீங்க மேகி… எனி வே… ஹவ் அ ஹாப்பி மெரிட் லைப்!”

“தேங்க்ஸ் அஞ்சலி!”

மூவரும் உணவு பொட்டலத்தோடு வர பேச்சு தடைபட்டது!

“ஏய்… எலி… நீயே முழுசா முடிச்சுட்டியா… ஒழுங்கா பாக்ஸ என் கிட்ட குடு…” என்று அர்ஜுன் பிடுங்க…

“நான் பெருச்சாளிக்கெல்லாம் சாப்பாடு குடுக்கறது இல்ல அர்ஜுன்!”

“அதையும் பார்க்கலாம்…” என்று கூறிவன் வலுக்கட்டாயமாக பிடுங்கியவன் பாக்சை திறந்து தயிர் சாதத்தை சாப்பிட ஆரம்பித்தான்!

“வாவ்… சூப்பர் டேஸ்ட் கெளதம்… இந்தா நீ கொஞ்சம் சாப்பிடு… ஹேய் எலி அந்த ஐட்டம் எல்லாம் நீயே சாப்பிட்டுக்கோ…” என்று சிரித்து கொண்டே கூறி சாப்பிட கௌதமும் அதில் பங்கெடுத்து கொள்ள… இதை பார்த்த அஞ்சலிக்கு பற்றி கொண்டு வந்தது…

“பிசாசுங்களா… எங்க அம்மா கட்டி குடுத்தது…” என்று சிணுங்க…

“சோ வாட்…”

“எங்கள பாக்க வெச்சுட்டு இத முடிக்கறீங்க இல்ல… உங்க ரெண்டு பேருக்கும் வயித்தால தான் போகும்… வாந்தி வாந்தியா எடுப்பீங்க…”

“டேய் கெளதம்… எலி சாபம் விடுதுடா… சரி போனா போகுது… இந்தா… கொஞ்சம் எடுத்துக்கோ!”

“ஐயோ ச்சீ எச்சி… நீங்க ரெண்டு பேருமே முழுங்குங்க…” என்று முகம் சுளிக்க

இருவரும் வாய் விட்டு சிரித்து கொண்டே அனைவரும் சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள்!

“கெளதம் அண்ணா… உங்க செல்போன குடுங்க…”

“ச்சே என் தங்கச்சி என்னை எப்படி மரியாதையா கூப்பிடறா… புல்லரிக்குது… ஏன் உன்னோடது என்னாச்சு?”

“ம்ம்ம்… அது ரோமிங்ண்ணா…”

“கஞ்ச பிசினாரி… இந்தா… பிடி…” என்று சிரித்து கொண்டே குடுக்க…

செல்பேசியை வாங்கியவள் வீட்டிற்கு போன் செய்ய முயல… டவர் கிடைக்காமல் அடம் பண்ண…

“ஐயோ… இதென்ன டப்பா நெட்வொர்க்… கிடைக்கவே மாட்டேங்குது… ஏன்ணா உங்களுக்கு வேற நெட்வொர்க்கே கிடைக்கலையா… போயும் போயும் இந்த ஓசோன் தான் கிடைச்சுதா? ஓட்டை செல்போன் கம்பெனி…”

சாப்பிட்டு கொண்டிருந்த அர்ஜுனுக்கும் கௌதமுக்கும் புரை ஏறியது! இருவரும் தலையை தட்டி கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்!

“ஏன் அந்த கம்பெனிகாரன தான சொன்னேன்… நீங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி முழிக்கறீங்க… அண்ணா… எனக்கு வேலை கிடைச்சு இருக்கறது எங்க தெரியுமா?” பெருமையாக கேட்க

“எங்கடா அஞ்சு?” கெளதம் கேட்க

“இந்த ஓட்டை ஓசோன்ல தான்… சேலரி எவ்ளோ தெரியுமா? ஸ்டார்டிங் பேவே ட்வென்டி தௌசன்ட்…”

அர்ஜுனுக்கு நிற்காமல் புரை ஏறியது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!