KS2

KS2

அத்தியாயம் மூன்று

“என்ன…”

வியந்து போய் அர்ஜுனை பார்த்து கொண்டே கெளதம் கேட்டான்! அதையும் அவள் சொல்லிவிட்டு பெருமையாக பார்த்ததை இருவரும் பார்த்தவர்கள் மாற்றி மாற்றி பார்த்து கொண்டு சிரிப்பைஅடக்க முடியாமல் அடக்கினார்கள்!

அவள் வர போவது தனது கம்பெனி என்றவுடன் அர்ஜுனுக்கு வியப்பு தாளவில்லை!

“அடப்பாவி கடைசில என் கிட்ட தான் வர போறியா… வாம்மா வா… உன் வால்தனத்த முழுசா கட் பண்ணி விடறேன்”என்று நினைத்து கொண்டான்… ஒன்றும் பேசாமல் சிரித்து கொண்டு அவளை பார்த்தான்!

இப்போது ட்ரைனிங் வர போகிறவர்களில் தான் இவளும் ஒன்று போல! பரவால்லையே… இந்த மாதிரி ஒரு ஆள் இருந்தால் போதும் பொழுதெல்லாம் சிரித்து கொண்டே இருக்கலாம்… !

“ஏன் இப்படி ரெண்டு பேரும் சிரிக்கறீங்க? அது என்ன அப்படி ஒரு டுபாக்கூர் கம்பெனியா?”

அர்ஜுனுக்கு இதை கேட்டவுடன் சிரிப்பு பீறிட்டு கொண்டு வந்தது!

“டுபாக்கூர் கம்பெனியா? அப்புறம்…”

“அட கடவுளே… இந்த மங்களத்துக்கிட்ட அப்போவும்சொன்னேன்… நான் போகலைன்னு… கேட்டுச்சா? இப்படி ஒரு மன்னார் அண்ட் கம்பெனில வந்து மாட்டிகிட்டேனே! மங்களம்ம்ம்ம்ம்… எனக்கு மங்களம் பாடிட்டியே மங்களம்… !”

இதை கேட்டு வாய் விட்டு சிரித்த அர்ஜுனும் கௌதமும்

“மன்னார் அண்ட் கம்பெனியா? அப்புறம்…”

“என்ன அப்புறம் விழுப்புரம்ன்னு… நான் என்ன கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன்? ஆமா நீங்க என்ன இப்படி கேட்டுகிட்டே இருக்கீங்க… அண்ணா… என்னத்தான் விஷயம் சொல்லேன் அண்ணா!”

“ஹேய் எலிக்குட்டி… சொல்லட்டா?” என்று அர்ஜுனை பார்த்து கொண்டு கேட்கவும்

கண்களை சிமிட்டி சொல்லாதே என்று சைகை காட்டினான் அர்ஜுன்!

அதை புரிந்து கொண்ட கெளதம்…

“ஒண்ணுமில்ல நீயே அர்ஜுன் கிட்ட கேட்டுக்கோ!” என்று அவனை சாட்டி விட

“அர்ஜுன்… ஒழுங்கா சொல்லுங்க… அந்த கம்பெனி திவாலாக போகுதா?”

“அட பாவி விட்டா நீயே திவால் பண்ணிடுவ போல இருக்கே… சரி சொன்னா என்ன தருவ?”

“ம்ம்ம்… பருத்தி கொட்டையும் புண்ணாக்கும் தரேன்… மவனே இப்போ ஒழுங்கா சொல்ல போறியா இல்ல ட்ரெயின்ல இருந்து தள்ளி விடட்டா…” என்று கொஞ்சம் நஞ்சமிருந்த பொறுமையும் பறந்து போய் கழுத்தில் கத்தி வைக்காத குறையாக கேட்டாள்!

“அடப்பாவி… விட்டா பண்ணிடுவா போல இருக்காளேடா இந்த அசுரி… சொல்லிடறேன்ம்மா தாயே… நான் அந்த கம்பெனில தான் வொர்க் பண்றேன்… அதான் சிரிச்சேன் போதுமா?”

இதை கேட்டவுடன் அஞ்சலியின் முகம் பிரகாசமானது!

“ஹய்… அந்த ஓட்ட கம்பெனில தான் நீங்களும் வேலை பாக்குறீங்களா? ஓகே ஓகே… எத்தனை நாளா வேலை பாக்குறீங்க?”

“ம்ம்ம்ம்… லொள்ளுதான்… நாளாவா? அந்த ஓட்ட கம்பெனில தான் ஒரு பன்னெண்டு வருஷமா இருக்கேன்…” தான் பதினாறு வயதில் இருந்தே கம்பெனி விவகாரங்களில் இருந்ததை வைத்து சொல்ல…

“ம்ம்ம் பன்னெண்டு வருஷமா… அப்போ நீங்க அங்கிளா?” என்று மிக முக்கியமான சந்தேகத்தை கேட்க

“அங்கிளாஆஆஆஆஆஆ… ஏய் கழுதை விட்டா என்னை தாத்தாவாக்கிடுவ போல… ஹலோ உன் அண்ணன் செட்மா நானும்… ஞாபகம் வெச்சுக்கோ… ! முதல்ல பார்ட் டைமா வேலை பார்த்தேன்… இப்போ புல் டைம் பாக்குறேன்… அதை சொன்னா…”

“ஓஓஓஓஓ… அப்படியா… ஓகே ஓகே… என்னவா வேலை பாக்குறீங்க?”

இந்த கேள்வியை தவிர்க்க நினைத்தவன்…

“அத விடு! யார் உன்னை இன்டர்வியூ பண்ணது?”

“ம்ம்ம்… மொதல்ல ஒரு சொட்டை தலை இண்டர்வ்யூ பண்ணுச்சு… பேரு… ம்ம்ம்… ராமானுஜமாம்… !”

அடப்பாவி சென்னை கிளை பர்சனல் மேனேஜர் இவளுக்கு சொட்டை தலையா? என்று நொந்து கொண்டான்…

“அப்புறம் ஒரு சறுக்கு மரம்…”

“சறுக்கு மரமா… அப்படீன்னா?” என்று குழம்பி போய் கேட்டான்!

“தொப்பை சைஸ் அர்ஜுன்… தொப்பைஐ ஐ ஐ… சைஸ்… அந்த ஆளோட தொப்பை சைஸ்க்கு பான்ட் போட்டு இருந்தத பாத்தீங்கன்னா… விழுந்து விழுந்து சிரிப்பீங்க… ஸ்லைட்ல சறுக்கர மாதிரி ஒரு எபக்ட் இருக்கும் அர்ஜுன்! அது தான் ஜெனரல் டேமேஜராம்ல…” என்று மிகவும் சீரியஸாகவே சொல்ல…

“அடப்பாவி… டேமேஜரா? !”

இருவருக்கும் சிரிப்பு பீறிட்டது!

“ஹய்யோ… ஏன் அர்ஜுன்? நானே ஒரு நல்ல பிகர் கூட இல்லையேன்னு நொந்து போய் சொல்றேன்… நீங்க என்னடான்னா சிரிக்கறீங்களா?”

“ஏன் என்னை பார்த்தா உனக்கு நல்ல பிகர் மாதிரி தெரியலையா?”

“நீங்க பிகரா… உங்க வீட்ல கண்ணாடியே கிடையாதா?”

“எல்லாம் நேர கொடுமை எலிக்குட்டி… நம்ம பெர்சனாலிட்டி முன்னாடி…”

“முன்னாடி… என்ன அர்ஜுன்? சிம்பன்ஸி தோத்துடுமா?”

“அதை ஒரு உராங்கொட்டான் சொல்லுது… ம்ம்ம்ம்…”

“ஆஹா ஒரு ஜூல என்டர் ஆன பீல் வருதுப்பா…” என்று கெளதம் சிரித்துக்கொண்டே கிண்டலடித்தான்…

“ஆமா அண்ணா… நீயும் உன் பிரெண்டும் இருந்தா அது ஜூ தான்… ஹேய்… இத விடுங்க… அர்ஜுன்… கடைசியா ஒரு சூப்பர் பிகர் ஒன்ன பார்த்தேன்… தெரியுமா? !”

கெளதமும் அர்ஜுனும் மிகவும் சுவாரசியமாக

“ஹை… பிகரா? சொல்லு சொல்லு… யாருப்பா அது? நீயே கவுந்த ஆளு?”

“அந்த சேர்மன் தான் அர்ஜுன்! வாட் அ பெர்சனாலிட்டி! என்ன கம்பீரம்! ஆனா வயசு தான் கொஞ்சம் ஜாஸ்தி… ம்ம்ம்… அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்!”

கெளதம் வெடி சிரிப்பு சிரிக்க… அர்ஜுனுக்கு புரை ஏறியது! ஏறியது! ஏறிக்கொண்டே இருந்தது! இதை கண்டுகொள்ளாமல்…

“ஏன் அர்ஜுன்… உங்களுக்கு அவர தெரியுமா?”

“ம்ம்ம்… கொஞ்சம் தெரியும்… ஏன் கேக்கற?” என்று சிரிப்பு தாங்காமல் வயிற்றை பிடித்து கொண்டு கேட்க

“இல்ல… அவரை பத்தி தெரிஞ்சுக்கலாமேன்னு தான் அர்ஜுன்! யூஸ் ஆகும்ல!” என்று சிரிக்காமல் சொல்ல…

“ஹய்யோ… போதும் கெளதம் என்னால முடில… எப்படிடா இவள வீட்ல வெச்சுட்டு இருக்கீங்க? சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது… இவ வாய தைக்க எதாச்சும் வழி இருந்தா சொல்லேன்…”

“அந்த வழி தெரிஞ்சா எங்க சித்தப்பா ஏன் இவள நாடு கடத்த போறார்? ஏய் வாலு… சும்மா இரு… பெரியவர போய்… என்ன பேச்சு இது?” என்று கெளதம் கடிக்கவும்

“ஹேய்… விடுடா… சின்ன பொண்ணு… ஜாலியா பேசிட்டு போறா?”

“அப்போ நீங்க என்ன கிழவனா அர்ஜுன்?”

“ம்ம்ம்… அப்படியா… அவசியம் தெரிஞ்சுக்கனுமா?” என்று ஒரு மார்கமாக அஞ்சலியை பார்த்தவன் பக்கத்தில் எல்லோரும் இருப்பதை உணர்ந்து வேறு பேச ஆரம்பித்தான்! ஆனாலும் ஒரு நிமிட பார்வை மாற்றத்தை உணர்ந்த அஞ்சலிக்கு தலை முதல் கால் வரை ஜிவ்வென்றது!

இதென்ன இப்படி ஒரு பார்வை? உயிரை ஊடுருவுகிறதே! ஏதோ மனதின் அடி வரை சென்று தீண்டி பின் செல்வது போல் ஒரு உணர்வு அவளை ஆக்ரமித்தது! இதுவரை இல்லாத, தான் உணராத உணர்விது! தன்னை அறியாமல் முகம் சிவந்தவள் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த மேகாவிடம் பேச்சு குடுத்தாள்!

அது வரை மூவரும் அடித்த அரட்டையை பார்த்து வயிறு குலுங்க சிரித்து கொண்டு இருந்தவளை பார்த்த அஞ்சலி

“என்ன மேகா… இப்படி சிரிக்கறீங்க?”

“ஆமா அஞ்சலி… நான் இப்படி எல்லாம் சிரிச்சதே இல்ல… எனக்கு இதெல்லாம் புதுசா தான் இருக்கு அஞ்சலி! இப்படி நீங்க பேசிக்கறது!”

“நோ கவலை! நீங்க இப்படி எல்லாம் சொல்லாதீங்க! நான் இருக்கேன்ல மேகா! நீங்க ஏன் இப்படி பீல் பண்றீங்க? ம்ம்ம்ம்… நீங்களும் நானும் பிரெண்ட்ஸ்! நீங்க மும்பை போனாலும் ரெண்டு பேரும் மீட் பண்ணலாம் ஓகே வா?” என்று மேகாவிடம் உருக்கக்கமாக கேட்க

“மேகா… தப்பி தவறி ஓகே சொல்லிடாதீங்க… அதோட பிளான் கண்டிப்பா மூக்கு பிடிக்க சாப்பிடறது ஒண்ணுதான்! ஓகே சொன்னீங்க… உங்க வீட்டு அரிசி பருப்பு எல்லாம் காலி!”

“டேய் அண்ணா… நீயெல்லாம் ஒரு அண்ணனா? எட்டப்பா… நீ உருப்படவே மாட்ட… !”

“பார்த்தீங்களா மேகா… தி கேட் இஸ் அவுட் ஆப் தி பேக்!”

“சார்… ஏன் அப்படி சொல்றீங்க? என் கல்யாணத்துக்கு என் பக்கம் யாருமே இல்லையேன்னு நினைச்சேன்! ஆனா நீங்க எல்லாரும் கிடைச்சு இருக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு… எனக்கு அஞ்சலி தான் மணப்பெண் தோழி கெளதம் சார்…”

“திருமணமா?”

இதை கேட்டவுடன் ஒரு நிமிடம் கலங்கி போனான்! ஏன்? தன் திருமணம் பற்றி மேகா பேசவும் ஏன் தன் மனதுக்குள் வெறுமை திடீரென்று பரவியது? ஏன் என்பது அவனுக்கு புரியவில்லை! யாரோ ஒரு மூன்றாம் மனுஷி! ரயிலில் சந்தித்தவள்! அதுவும் யாருக்கும் அசைந்து குடுக்காதவன் நான்! என் மனதில் ஏன் இந்த சலனம்? ச்சே… இப்படி எல்லாம் எண்ணுவதே எனது ஆண்மைக்கு இழுக்கு!

“பிறன் மனை நோக்காமை பேராண்மை”

ஏதோ அவள் கண்ணில் தென்படும் சோகம் தன் மனதை பிசைவதென்னவோ உண்மை! ஆனால் இன்னொருவனை நேசிக்கும் அவளை மனத்தால் தீண்டுவதும் பாவம்!

குழப்பங்களால் அழுத்தப்பட்டு ஒரு முடிவுக்கு வர முடியாமல் திணறினான்! பின் அவனே… அவளை பார்த்து கொண்டிருக்கும் வரை தான் இந்த குழப்பம் இருக்கும்… நாளை மதியம் மும்பை சென்று சேர்ந்து விட்டால் அவள் யாரோ தான் யாரோதான்! என்று ஒரு வழியாக தெளிவானான்!

“நீங்க கொஞ்சம் சொல்லுங்க அஞ்சலி… இவ ரொம்ப பயப்படறா… லவ் பண்ணும போது இருக்கற தைரியம் கல்யாணம் பண்ணும் போதும் இருக்கனும்ல… அந்த தைரியம் கொஞ்சம் கூட இல்ல இவ கிட்ட…” அமுக்குன்னி சித்தராக பேசாமலேயே இருந்த சசிதரன் பேசியது மேகாவுக்குமே ஆச்சரியமாக இருந்தது!

“இல்லண்ணா… யாருக்குமே இப்போ இந்த பயம் இருக்கும்! வீட்டை விட்டு வந்து இருக்காங்கல்ல… கொஞ்சம் டைம் குடுங்க அண்ணா… மேகாவுக்கு…”

“கண்டிப்பா அஞ்சலி! எவ்ளோ வேணும்னாலும் டைம் எடுத்துகட்டும்… ஆனா என்னால மேகாவை விட்டு தரவே முடியாது! ஷி இஸ் மைன்!”

சசிதரனை பெருமையாக காதலாக பார்த்தாள் மேகா!

“தட்ஸ் தி ஸ்பிரிட் அண்ணா…” என்று பாராட்டினாள் அஞ்சலி!

கௌதமும் அர்ஜுனும் தனியாக பேசி கொண்டு இருந்தனர்! மிக மெல்லிய குரலில் அர்ஜுன் கௌதமிடம்,

“என்னடா… உன் தங்கச்சி அவன் கிட்ட பாசபயிர் வளர்த்துட்டு இருக்கா? பார்த்து ஏதாவது மாடு மேய்ந்துட போகுது!”

“ஏன்டா… அவ அவனை அண்ணன்னு தானே சொல்றா? அப்போவும் உனக்கு ஏன் இந்த கொலைவெறி?”

“ப்ச்… அவன பார்த்தா எனக்கு பிடிக்கவே இல்ல… ஒரு சிலரை பார்க்கும் போது உடனே பிடிக்காம போய்டும்… அது இவன் கேஸ்ல உண்மை!”

“எனக்கும் அப்படி தான் அர்ஜுன்! நீ சொல்லிட்ட… நான் சொல்லல!”

“எத சொல்லல? அந்த பொண்ண சைட் அடிச்சுட்டே இருந்தியே அத தான! இல்ல அவங்க கல்யாணம்னு சொன்னவுடனே உன் முகம் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஆச்சே… அதையா?”

“டேய் கவனிசுட்டியா? ப்ச்… விடுடா…”

“ஹேய் கெளதம்… உண்மைய சொல்லு… டு யூ பீல் எனிதிங் சீரியஸ் அபௌட் ஹெர்?”

“தெரியலடா… லவ் அட் பர்ஸ்ட் சைட்ட, ஹம்பக்ன்னு தான் சொல்லிட்டு இருந்தேன்… ஆனா இந்த பீலிங்க்கு என்ன அர்த்தம்னு தெரியல அர்ஜுன்! ஆனா அந்த பொண்ணு இன்னொருத்தனுக்கு மனைவி ஆக போறவன்னு தெரிஞ்சே இப்படி ஒரு சில்லி பீலிங்ல இருக்க மாட்டேன்… பெட்டர் லீவ் திஸ் அர்ஜுன்!”

அவனது முதுகை ஆதூரமாக தட்டி குடுத்தான் அர்ஜுன்! தன் நண்பனை நினைத்து ஒரு புறம் பெருமையாக இருந்தாலும் அவனது ஏமாற்றத்தை நினைத்து மனம் வலித்தது! எதற்குமே ஆசைப்படாத ரிஷியை போன்றவன்! தனக்கு தெரிந்து முதல் முதலாக ஆசைப்பட்ட பெண்! ப்ச்! பள்ளி காலத்திலும் கல்லூரி காலத்திலும் தான் எவ்வளவு பெரிய பணக்காரன் என்று தெரிந்தே இருந்தாலும் கெளதம் தன்னை எந்த விதத்திலும் தாழ்த்தி கொண்டதும் இல்லை! அதே போல் அவனை கொண்டு காரியம் சாதிக்க நினைத்ததும் இல்லை!

அர்ஜுனுடைய செல்வாக்கை பற்றி சிறிது கூட நினைத்தும் பாராதவன்! தன்னை போல் மத்திய வகுப்பை சேர்ந்தவனுடன் இயல்பாக பழகும் எளிமையான குணம் இருப்பதினால் மட்டுமே அர்ஜுனுடன் சிறு வயது முதல் நட்பை பேணுபவன்! அதே போல் அர்ஜுனும் மிக இயல்பாக அவனது வீட்டிற்கு சென்று வருவான்! அவர்களது குடும்பத்தில் ஒருவனாகவே இருந்தான்! அகமதாபாத் IIM ல் MBA செய்ய வேண்டும் என்பது கெளதமின் வெறி! அவனுடன் சேர்ந்து அர்ஜுனும் அதற்கு தயார் செய்தான்! இருவருமாக வெற்றிகரமாக முடித்தனர்!

MBA முடித்தவுடன் தொழிற்பயிற்சிக்காக அர்ஜுன் தந்தை அவனை ஆறு மாதம் வெளிநாடு அனுப்ப கௌதமும் தனது தொழில் தீவிரமாக இறங்க… அப்போது கொஞ்சம் இடைவெளி விழுந்த நட்பு! நான்கு வருடம் கழித்து இப்போது இங்கே எதிர்பாராமல்!

பேசிக்கொண்டு இருந்த போதே ரேணிகுண்டா சந்திப்பில் ரயில் நின்றது!

“ஏ எலிக்குட்டி… இங்க கால்மணி நேரம் ட்ரெயின் நிற்கும்! உனக்கு ஏதாவது வேணுமா?”

என்று அர்ஜுன் கேட்க

“ம்ம்ம்… எங்களுக்கே இறங்கி போய் வாங்கிக்க தெரியும்ல…” என்று கழுத்தை ஒடித்து கொண்டு கூறி விட்டு மேகாவை அழைத்து கொண்டு இறங்கினாள்!

“திமிரு… உடம்பு முழுக்க திமிரு தான் கெளதம் உன் தங்கச்சிக்கு!” என்று கூறிவிட்டு செல்பேசியை குடைய ஆரம்பித்தான்!

*****

“டேய் மச்சான்… அந்த பிகருங்கள பார்த்தியா… செம கட்டைங்களா இருக்குடா!” அந்த நால்வர் குழுவில் இருந்த ஒருவன் கூறினான்!

“பார்த்தா தமிழோ தெலுங்கோ மாதிரி தெரியல மாப்பு… வடக்கத்திகாரிங்களாட்டம் இருக்காளுங்கடா…”

“ஆமா மச்சி… இந்த நெகுநெகுப்பும் கலரும் நம்ம பக்கம் வரவே வராது! ரெண்டு பேருமே திருநெல்வேலி அல்வா கணக்கா இருக்காளுங்கடா… பாக்கும் போதே சும்மா ஜிவ்வுன்னு ஏறுது!”

“சரிடா மச்சி… வா போய் உரசி பாத்துரலாம்…”

அந்த குழுவில் இருந்த இன்னொருவன்

“டேய் வேணாண்டா… ஊரு விட்டு ஊரு வந்து அடி வாங்க போறீங்களா? ஒழுங்கா ட்ரெயின்ல ஏறுங்க…”

“இவன் கிடக்கறான்டா மாப்பு… நீ வாடா…”

புத்தகம் வாங்கி கொண்டு இவர்கள் பேசி கொண்டு இருந்ததை கவனித்து கொண்டிருந்த அஞ்சலிக்கு கோபச்சூடு ஏறி கொண்டு இருந்தது!

அந்த இருவரும் இவர்களின் இரு பக்கத்திலும் வந்து நின்றவர்கள் தண்ணீர் வாங்கும் சாக்கில் உரச ஆரம்பித்தனர்! ஆரம்பத்தில் மேகா பயந்து போய் தள்ளி போக ஒருவன் கொஞ்சம் அதிகமாகவே இடித்தான்!

“அஞ்சலி வா போயிரலாம்… எனக்கு பயமா இருக்கு!” என்று நடுங்கி கொண்டு மேகா கூற

“வெயிட் பண்ணு மேகா… இவனுங்களுக்கு ட்ரீட்மென்ட் கொஞ்சம் குடுக்கலாம்!” என்று கூறி விட்டு

அவனிடம் திரும்பிய அஞ்சலி

“சார்… இப்ப என்ன சார் பண்ணிட்டு இருக்கீங்க…” என்று மிகவும் பவ்யமாக கேட்க

“ஓ… தமிழா! சாரி… தெரியாம பட்டுடுச்சு… !”

“ஏன்டா நாயே! வந்து உரசுவ… கேட்டா தெரியாம பட்டுடுச்சுன்னு சொல்லுவியா? உனக்கு எவ்வளவு ஏத்தமிருக்கும்…” கோபத்தில் எகிற ஆரம்பித்தாள்!

அவள் சண்டை போடுவதை பார்த்த மேகா மிகவும் பயந்து போய்

“அஞ்சலி… வா போயிரலாம்… சண்டை எல்லாம் வேணாம்…” என்று நடுங்கி கொண்டே சொல்ல அதை லட்சியம் பண்ணாமல் அவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தாள் அஞ்சலி! அவசரமாக ரயில் பெட்டிக்கு விரைந்தாள் மேகா… கெளதமை அழைப்பதற்கு!

“அதான் சாரி சொல்லிட்டேன்ல… அப்புறம் என்ன?” என்று அவனும் பதிலுக்கு எகிற அவனது நண்பர்களும் அங்கே வந்தனர்!

“எருமை… சாரி சொல்லிட்டியா! சரி இப்போ இடிடா… பாக்கலாம்! நீ சரியான ஆம்பிளையா இருந்தா இப்போ இடி…”

“ஏய்… என்னடி ரொம்ப சவுண்ட் குடுக்கற… ஒழுங்கா ஊர் போக வேண்டாமா?”

“ராஸ்கல்… நீ முதல்ல ஊர் போய் ஊர் சேருவியான்னு பார்த்துக்கோ! உனக்கு பேசறதெல்லாம் பத்தாதுடா…” என்று சொல்லி கொண்டே செருப்பை கழட்டியவள்…

அவன் யோசிக்கும் முன்னர் மாறி மாறி அடித்தாள்!

அத்தியாயம் நான்கு

அடி வாங்கியவன் அதீத கோபத்தோடு

“ஏய்… உனக்கு எவ்ளோ திமிர் இருந்தா செருப்பால அடிப்ப? உன்னை இப்போ என்ன செய்யறேன்னு பாருடி!” என்று கூறியவாறே கையை இழுத்தான்!

உடன் இருந்தவர்களும் சேர்ந்து கொள்ள போவோர் வருவோர் பார்த்து கொண்டு போனார்களே தவிர யாருக்கும் தடுக்கும் எண்ணமில்லை! இது நமது தேசத்தின் சொத்து அல்லவா! யாருக்காவது உதவி தேவை எனும் போது சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்களே தவிர அவர்களுக்கு உதவி செய்பவர்கள் மிகவும் குறைவு! துச்சாதனர்கள் அதிகமாகிவிட்ட இந்த காலத்தில் கிருஷ்ண பரமாத்மாக்களை எங்கே தேடுவது? அவர்கள் பாரதத்தோடு முடிந்து விட்டவர்களாயிற்றே!

அதில் இரண்டொருவர் போலீசை அழைக்க கூறினர்!

அந்த பகல் பொழுதில் அத்தனை கூட்டத்தினர் நடுவில் தன்னிடம் ஒருவன் தவறாக நடக்க முயல அதை தடுக்க மக்கள் முயலாமல் வெறுமனே போலீசை அழைக்க சொல்வதை பார்த்த அஞ்சலிக்கு ஒரு புறம் மக்களை நினைத்து கோபம் மிகுதியாக வந்தாலும் என்னவாகுமோ என்று பயந்து கொண்டே நால்வருமாக சேர்ந்து தன்னை இழுத்து கொண்டு போகும் அவனிடம் இருந்து கைகளை விடுவிக்க போராடினாள்!

அப்போது இடியென விழுந்தது அடி அவனுக்கு! திரும்பி பார்த்தாள்! அர்ஜுன்… அவனுடன் கெளதம்!

வாங்கிய அடியில் சுருண்டு விழுந்த அவனை தூக்கி நிறுத்திய அவனது நண்பர்கள்

“ஏய்… என்ன ஹீரோன்னு நினைப்பா உனக்கு…” என்று கை முஷ்டியை மடக்கி கொண்டு வர…

இருவரும் வந்தவர்களை இழுத்து அறைந்த வேகத்தில் சுருண்டு விழுந்தனர்!

பெட்டி பாம்பாக அடங்கிய அந்த நால்வர் குழுவில் இருந்த அஞ்சலியிடம் தகராறு செய்தவனை அழைத்த அர்ஜுன், அஞ்சலியின் கை பிடித்து

“டேய்… இப்போ இடிடா பார்க்கலாம்! தைர்யம் இருந்தா இப்போ இடி பாக்கலாம்!”

“சார்… வேணாம்… சார்…”

“டேய் இடிடா… சொல்றேன்ல…” கர்ஜித்தான்! இன்னமும் அவளை அவன் முன் இழுத்து

“சார்… பண்ணது தப்புத்தான்… வேண்டாம் விட்ருங்க…” என்றவனுக்கு விழுந்தது இன்னொரு அறை அர்ஜுனிடம் இருந்து!

“எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி ஒரு வேலைய பண்ணுவ… நீ வா… போலிஸ் ஸ்டேஷனுக்கு போலாம்… அர்ஜுன் அவனுங்களை பிடி… ட்ரெயின் போனாலும் பரவால்ல… என் தங்கச்சி மேல கைய வைக்க உனக்கு எவ்வளவு தைர்யம் இருக்கணும்…” என்று கெளதம் கொதித்தான்!

நால்வருமாக கெஞ்ச துவங்க

“சார்… விட்ருங்க… இனிமே இப்படி பண்ண மாட்டோம்! ப்ளீஸ்… எங்க எதிர்காலமே உங்க கைல தான் இருக்கு! தெரியாம பண்ணிட்டோம்! ப்ளீஸ் சார்… விட்ருங்க சார்…”

“எதிர்காலத்த பத்தி இப்போ தான் நினைக்கிறியாடா… நாயே! அது உனக்கு முதல்ல தெரியலையா?” என்று இன்னொரு அறை அர்ஜுன் குடுக்க

“சார் ப்ளீஸ் சார்…” என்று மற்ற அனைவரும் கெஞ்சினார்கள்!

“சரி திரும்பி பாக்காம ஓடி போய்டு… இங்க உங்க யாரையாச்சும் பார்த்தேன் தொலைச்சுடுவேன்… ஓடுங்கடா!” என்று கெளதம் கூறியவுடன் அவர்கள் அனைவரும் ஓடினார்கள்!

“எப்படி ஒரு ஆதரவு! இப்படி அண்ணன் கிடைக்க கொடுத்துத்தான் வைக்க வேண்டும்… எனக்கு தான் அந்த குடுப்பினை இல்லை…” என்று ஏக்கமாக நினைத்து கொண்டாள் மேகா! சசிதரன் செய்தது சிறிதும் பிடிக்கவில்லை! அவசரமாக இருவரையும் அழைக்க வந்தவளை, அவர்களை போக விட்டு

“நீ ஒன்னும் அங்கேயெல்லாம் போகாதே மேகா… அவங்க பார்த்துக்கட்டும்…” என்று இருக்க வைக்க முயல…

“ஏன் சசி… உங்க கூட இந்த ட்ரெயின்ல வந்த பொண்ணுதானே அஞ்சலி… பார்க்க போனா நீங்களும் இப்போ போய் இருக்கணும்… என்னையும் போக விடாம செய்றீங்க… சாரி சசி இது தப்பு!” என்று கூறி விட்டு விரைந்தாள்!

இந்த நிகழ்ச்சியை பார்த்து உச்சகட்ட ஷாக்கில் இருந்த அஞ்சலியின் கையை பிடித்து கொண்டு ஆதரவாக மேகா தடவி குடுக்க அவளது முதுகில் ஒரு அடி வைத்த அர்ஜுன்,

“ஏய் அஞ்சலி… வந்து தொலை… இன்னும் என்ன பார்த்துட்டு இருக்க? இன்னும் எவன் கிட்ட வம்பு இழுக்கலாம்னா?”

அவன் சற்று சத்தமாக கூறவும் அஞ்சலி தன் சுய உணர்வுக்கு வந்தாள்! அவனை உணர்ச்சியற்ற பார்வை பார்த்த அஞ்சலியை பார்த்து

“இன்னும் என்னம்மா தாயே பிளான் பண்ணிட்டு இருக்க… ட்ரெயின் கிளம்ப போகுது… அங்க போய் உன் ப்ளான வெச்சுக்கோ…” என்று அர்ஜுன் ட்ரெயின் உள்ளே ஏறியவாறே கடுப்படிக்க

“டேய்… ஏன்டா அவ கிட்ட பாயற… பாவம் குழந்தை பயந்து போய் இருக்கா…” என்று வக்காலத்துக்கு வந்தான் கெளதம்!

“ஆமாம்டா… குழந்தையாம்ல… நீயே வெச்சு கொஞ்சிட்டு இரு… இங்கேயே…” . என்று அவனை காய்ந்தவன் அவளிடம் திரும்பி

“செருப்பால அடிக்கறாளாம்… கொஞ்சமாவது அறிவு இருக்கா உன் மரமண்டைல… வெளியூர் வந்த இடத்துல இப்படியா வம்பு இழுத்துக்குவ… பெரிய ஜான்சி ராணின்னு நினைப்பா உனக்கு…”

சரமாரியாக அவனிடம் இருந்து தாக்குதலை பெற்றவள் ஒன்றும் சொல்லாமல் இருக்க

“இப்போ என்ன உன் வாயில கொலுகட்டையா வெச்சுட்டு இருக்க? முதல்ல வாய் கிழிய பேசுவ… உன்னையெல்லாம் உங்க அப்பா எப்பிடி தனியா ட்ரெயின் ஏத்தி விட்டார்? அவரை சொல்லணும் முதல்ல…”

“ஹலோ… எங்க அப்பாவ இழுக்கற வேலையெல்லாம் வேணாம்… உங்க வேலைய பார்த்துட்டு போங்க…”

“ம்ம்ம்… ஆமா என் வேலைய பார்த்துட்டு இருந்திருக்கணும்… செய்யறதையும் செஞ்சுட்டு உனக்கு இப்படி வேற பேச்சு வேண்டி கிடைக்குதா?”

“என்ன தப்பு பண்ணிட்டேன்னு இப்படி பேசுறீங்க… அவன் தப்பு பண்ணான் அதனால அடிச்சேன்… இதுல என்ன தப்பு…” சிலிர்த்து கொண்டு சண்டைக்கு வர

“தப்பே இல்ல… கரெக்ட் தான்… ஆனா டைமிங்னு ஒன்னு இருக்குல்ல… நீ இருக்கறது வெளியூர்… தனியா அந்த கடைக்கு போய் இருக்க… ட்ரெயின் கிளம்ப போற சமயத்துல இப்படி வம்பு வளர்த்துகிட்டா என்னவாகறது? உனக்கே அறிவு வேண்டாமா அஞ்சலி?”

“அப்படின்னா தப்பு செய்றவன அப்படியே விட்டுட்டு வர சொல்றீங்களா அர்ஜுன்… உங்க கிட்ட இத எதிர்பார்க்கல…”

“அஞ்சலி முதல்ல ஒன்ன புரிஞ்சுக்கோ… எல்லா நேரத்துலயும் நம்ம உணர்ச்சிகள் ஜெய்ச்சுட இடம் குடுக்க கூடாது… நம்ம மூளையும் யூஸ் பண்ணனும்… நீ அடிச்சது உன்னோட கோப உணர்ச்சி அதிகமானதுனால… அதுவும் வேணும் தான்… ஆனா இடம் பொருள் பாக்கணும்… இதே நாங்க வந்ததுனால ஆச்சு… உங்க அப்பா தனியா ஏத்தி விட்டதுக்கு தனியா நீ வந்து இருந்தா நிலைமைய நினைச்சு பாரு அஞ்சலி! புரிஞ்சுக்கோ!”

“அப்படீன்னா அவன் மிஸ்பீகேவ் பண்ணத சகிச்சுக்க சொல்லவரீங்க… அதானே அர்ஜுன்…”

“இது தான் லூசுதனம் அஞ்சலி… அந்த இடத்த விட்டு உடனே காலி பண்ணி இருக்கலாம்ல… அத தான் நான் சொல்றேன்… அது தான் விவேகம்! உன் கிட்ட இருந்தது வேகம் மட்டும் தான்… ஏன் உன் கூட மேகாவும் தான் இருந்தாங்க இல்ல… ஏன் அவங்க உன்னை கூப்டாங்க? இன்னும் குழந்தையாவே இருக்காத அஞ்சு!”

“உன் நல்லதுக்கு தானே சொல்லறாங்க அஞ்சு… தப்பு இல்லப்பா…” என்று மேகா தனது ஆதரவு கரத்தை நீட்டினாள்!

தன்னிடம் தவறாக நடக்க முயன்ற பொறுக்கிகளிடம் அவ்வளவு வேகத்தை காட்டியவன் தன்னிடம் இப்படி காய்வதை பார்த்த அஞ்சலிக்கு குழப்பமாக இருக்க அதை அவள் முகம் பிரதிபலித்தது! அதை புரிந்து கொண்ட அர்ஜுன்

“அப்போ அவனுங்க கிட்ட சண்டை போட்டா… உன்னை திட்ட கூடாதுன்னு என்ன சட்டமா என்ன? நீ பண்ணற தப்ப நான் சுட்டி காட்ட தான் செய்வேன்…”

அவன் தன்னை திட்டுவதை ஏற்று கொள்ள முடியாத அஞ்சலி கௌதமிடம் சரண்புகுந்தாள்!

“அண்ணா…” என்று அதுவரை தேக்கி வைத்த அழுகை வெளிப்பட கௌதமின் கழுத்தை கட்டி கொண்டு அழ ஆரம்பித்தாள்!

“டேய்… கண்ணா… அஞ்சும்மா… அழாதடா… தங்கம்ல…”

“நான் என்னண்ணா வேணும்னேவா சண்டைக்கு போனேன்… நானே ஷாக்ல இருக்கேன்… பாருண்ணா… அர்ஜுன… இப்படி திட்றான்…” என்று அழுது கொண்டே கூற

ஆஹா இதற்கு தான் இந்த ட்ராமாவா என்று நினைத்த கெளதம்,

“சரிடா கண்ணா… அவனை அடிச்சுடலாம் செல்லம்… நீ அழாத… டேய் அர்ஜுன்… என் தங்கச்சிய திட்ற வேலை எல்லாம் வேண்டாம்…” என்று சொல்லி அவனிடம் கண்ணடிக்க

“ஏய் எலி… சந்தடி சாக்குல அவன் இவன்னு சொல்ற நீ…” என்று கடித்து விட்டு கெளதம் முதுகில் ஒரு அடி வைத்து

“டேய் கெளதம்… போதும்டா அவளுக்கு நீ செல்லம் குடுத்தது… தாங்க முடில… ஒரு பாசமலர் சினிமாவே ஓட்டி காட்டுறீங்க ரெண்டு பேரும் சேர்ந்து… சரிடா கண்ணா அடிச்சுடலாமாம்… டேய்… புல்லரிக்குதுடா!”

“ஏன்… எங்க அண்ணன் என்னை கொஞ்சுறாங்க… உங்களுக்கு என்ன?” என்று முகத்தை தேய்த்து கொண்டு அவனிடம் அழகு காட்ட…

ஒரு நிமிடம் இமைக்க மறந்தான் அர்ஜுன்!

அதே காட்சியை தன்னிடம் இப்படி பாசத்தை காட்ட அண்ணன் இல்லையே என ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தாள் மேகா!

அவள் ஏக்கத்துடன் பார்ப்பதை பார்த்து கொதித்து கொண்டிருந்தான் அது வரை பேசாமலேயே இருந்த சசிதரன்!

யில் கடப்பாவை தாண்டி போய் கொண்டிருந்தது! தின்பண்டமாய் வாங்கி தர சொல்லி கெளதம்மை மொட்டை அடித்து கொண்டு இருந்தாள் அஞ்சலி!

“ஐயோ… இதுக்கு பேசாம நான் பிளைட்லேயே போயிருப்பேன்டி எருமை! இப்படி தீனி திங்கற? உனக்கு ஸ்நாக்ஸ் வாங்கி குடுத்தே நான் போன்டி ஆய்டுவேன் போல இருக்கே எலி…”

“டேய் அண்ணா… என்னை பார்த்து கண்ணு வைக்காத… அப்புறம் என்னால சாப்பிட முடியாது… இளைச்சுடுவேன்!”

“இளைக்கறதா… நீயா… நோ சான்ஸ்… அதுவும் சாப்பிடாம இருந்து இளைக்கறதா? எப்படி செல்லம் இப்படி நீ புருடா விட்டுட்டு திரியற…”

“இரு மவனே… நீ இப்படி சொன்னேன்னு மஞ்சும்மா கிட்ட சொல்றேன்…”

“ஓ… ஒரு மணி நேரம் உன் பெரியம்மா எனக்கு செமினார் நடத்தனுமா? அதுக்கு தானே நீ பிளான் பண்றது!”

“தெரியுதுல்ல… ஒழுங்கா போய் எனக்கு கப் நூடுல்ஸ் வாங்கிட்டு வா கௌஸ்!”

“ம்ம்ம்… எல்லாம் நேரம்டி… உன் செல்லம் ஓவரா போயிட்டு இருக்கு… தட்டி கேக்க ஆள் இல்லாம தான் இப்படி ஆடுற… இதுக்கெல்லாம் சேர்த்து வைச்சு ஒருத்தன் கிட்ட மாட்டிகிட்டு முழிக்க போற எலிகுட்டி… பாரு…” கௌதம் நொந்து போய் சொல்ல

“சாபமா… ஹஹஹா… போடா லூசு… உன் சாபம் என்னை ஒன்னும் பண்ணாது… உனக்கு வர அண்ணிக்கு நான் முதல்லயே ட்ரைனிங் குடுத்து உன்னை கொடுமை பண்ண வைக்கில… என் பேரு அஞ்சலி இல்ல…”

இருவரும் போட்டு கொண்ட சபதங்களை பார்த்து வயிறு வலிக்க சிரித்த அர்ஜுனும் மேகாவும்!

“அஞ்சலி உன் பேர மத்திக்க போறியா?” என்று அப்பாவியாக மேகா கேட்க

“நீயுமா மேகா… முடில… ஷப்பா… எத்தனை பேர் கிட்ட தான் அடி வாங்குறது… இப்போவே கண்ணை கட்டுதே!”

“ஹேய்… நான் உனக்கு தான் சப்போர்ட்… நீ கவலை படாத…”

“ஹப்பா… தாங்க் யூ… தாங்க் யூ… எப்பூடி…” என்று அஞ்சலி கேட்க

“ஹேய்… கூட்டணி சேர்த்துகிட்டா மட்டும் விட்ருவோமா? உன் பேரு இப்போ மட்டும் அஞ்சலின்னு யாரு சொன்னது… எலிக்குட்டி?” என்று அர்ஜுன் கலாய்க்க

“வேணாம் அர்ஜுன்… அப்புறம் உங்களுக்கும் நிக் நேம் வைச்சுடுவேன்… அப்புறம் நீங்க தான் அழுவீங்க!”

“யாரு… நானா? ஆசை தான் உனக்கு… நீ அழாம இருக்கியான்னு பாரு… அப்புறம் உன் அண்ணன் கிட்ட கம்பளைன்ட் பண்ணிட்டு அழுவ… அவனும் அர்ஜுன அடிச்சுடலாம் செல்லம்ன்னு ஓவரா ரீல் ஓட்டி காட்டுவான்… ஆனா சின்ன வயசு பழக்கம் இன்னும் மாறல எலிகுட்டி உனக்கு!”

“வேணாம்… மறுபடியும் இப்படி சொன்னீங்கன்னா நான் மனுஷியா இருக்க மாட்டேன்!” என்று வீராவேசமாக கூற

“இப்போ மட்டும் நீ மனுஷின்னு யாரு ஒத்துகிட்டது? நீ ஒரு ராட்சசின்னு தானே சொல்றேன்…”

“அர்ஜுன்ன்ன்ன்…”

“ஹேய்… நீ இப்படி மிரட்டினா மட்டும் நீ ஒரு பொண்ணுன்னு ஒத்துக்கவா முடியும்? அதான் பார்த்தேனே…”

அவனை பார்த்து அஞ்சலி முறைக்க

கௌதம் சிரித்து கொண்டே

“டேய் எலிக்குட்டி… உனக்கு வர மாப்பிள்ளை இப்படி உன்னை இவன மாதிரி தாளிச்சு எடுக்கனும்டா… பேசாம அர்ஜுன் கிட்ட ட்ரைனிங் அனுப்பிடலாம்… என்ன ஓகே வா?”

“பாவம் அஞ்சலி… ஏங்க ரெண்டு பேரும் இப்படி அவங்கள ஓட்றீங்க?” என்று மேகா சிரித்து கொண்டே கேட்க

“பாவமா… யாரு என் தங்கச்சியா… மேகா இப்படி நீங்க அப்பாவியா இருக்கீங்களே… அவளை பத்தி உங்களுக்கு ஒன்னும் தெரியாது…” என்று கெளதம் மேகாவிடம் சொல்வதை பார்த்த அஞ்சலிக்கு கோபத்தால் முகம் சிவந்தது!

“நீ மேகா கிட்டயும் என் பேர டேமேஜ் பண்றியா? இந்த அழகுல ட்ரைனிங் வேறயா… வேணாம்டா அண்ணா…”

“ட்ரைனிங்கா குடுத்துட்டா போச்சு! ஹேய் எலிக்குட்டி எனக்கு ஓகே! குப்பன், சுப்பன்னு யாராச்சும் இருந்தா கூட்டிட்டு வா எலி… நல்லா ட்ரைனிங் கொடுத்துடலாம்… ஓகே வா!”

கோபம் மிகுதியாக அஞ்சலி

“நான் எதுக்கு குப்பன் சுப்பன்னு கூட்டிட்டு வர போறேன்? எனக்கு வர ஹஸ்பண்ட் ரொம்ப ஹன்ட்சமா… செம ரிச்சா தான் இருப்பான்… நீங்க ரெண்டு பேரும் பாக்கத்தானே போறீங்க…”

“எப்பிடி என்னை மாதிரி தானே…” என்று அர்ஜுன் வம்பிழுக்க

“போயும் போயும் உங்களை மாதிரியா… சான்சே இல்ல… நான் தான் சொன்னேனே… ஹன்ட்சம், ரிச் ன்னு… இதெல்லாம் உங்களுக்கு ஒத்து வராத விஷயம் அர்ஜுன்! மிஞ்சி மிஞ்சி போனா ஒரு பார்ட்டி தௌசன்ட் இருக்குமா உங்க சாலரி?”

கெளதம் பதறி போய்

“ஹேய் அஞ்சு… நீ நினை…” என்று கூறும் போதே அவனை கையமர்த்தி விட்டு கண்களால் சொல்ல வேண்டாம் என சைகை செய்து விட்டு, அர்ஜுன் கண்கள் சுருங்க,

“ம்ம்ம் ஆமாம்… முப்பத்து அஞ்சு தான் வாங்குறேன்… ஓகே வா!”

“ம்ம்ம்… அதே தான்… நமக்கு இதெல்லாம் பத்தாது… எனக்கு நல்லா பெரிய பணக்காரன் தான் வேணும்… உங்களை மாதிரி மாச சம்பளம் வாங்குற குப்பன் சுப்பன் எல்லாம் வேணாம்!”

“பேச்சு வெள்ளியை போன்றது ஆனால் மெளனம் தங்கத்தை போன்றது”

என்று அஞ்சலிக்கு உணர்த்த போகின்ற கணம் இதுவாக ஆகி விட்டதை என்ன சொல்ல? அவனை மடக்கும் நோக்கத்தோடு மட்டுமே அஞ்சலி கூறிய வார்த்தைகள் இவை! குப்பனோ சுப்பனோ என்று அர்ஜுன் கூறியதற்கு! ஆனால் அன்று அவளுக்கு நாக்கில் சனி உட்கார்ந்து கொண்டு நடனமாடி இருக்க வேண்டும்! இல்லையென்றால் ஏன் இப்படி வாயை விடுகிறாள்! இதை கேட்ட மேகாவும் அவளிடம் கிசுகிசுப்பாக

“அஞ்சலி… என்ன இது… இப்படி சொல்ற… பாரு அர்ஜுன் அண்ணா முகத்தை… எப்படி அப்செட் ஆகிட்டாரு! நீ சொல்றது தப்பு அஞ்சலி…”

“ஹேய் மேகா… ச்சும்மாப்பா… விளையாட்டுக்கு தான் மேகா! இன்பாக்ட் அர்ஜுன எனக்கு ரொம்ப பிடிக்கும்ப்பா… இல்லைன்னா இந்த அளவு ப்ரீயா பேச மாட்டேன்!”

“உன் விளையாட்டு வினையாகிட கூடாது அஞ்சலி… !”

இருவரும் கிசுகிசுப்பாக பேசி கொண்டே இருக்க

அஞ்சலியை ஒரு உணர்ச்சியற்ற பார்வை பார்த்த அர்ஜுன் மனம் வலிக்க எழுந்து சென்றான்! அவன் பின்னர் கௌதமும் எழுந்து செல்ல இருவரும் ரயில் கதவு பக்கம் போய் நின்று கொண்டனர்!

“நான் சொன்னது உண்மையாயிடுச்சு பாரு அஞ்சலி… அர்ஜுன் நிஜமாவே அப்செட் ஆகிட்டார்ப்பா… போய் சமாதானம் சொல்லு அஞ்சலி!”

“ஹேய் அதெல்லாம் சும்மா மேகா… போனா ரெண்டு பேரும் சேர்ந்து மறுபடியும் என்னை ஓட்ட ஆரம்பிச்சுடுவாங்க… பரவால்ல அவங்களே வரட்டும்…”

என்று கூறி கொண்டிருந்தாள்!

****

இருவரும் மெளனமாக வெளியே வெறித்து பார்த்து கொண்டு வந்தனர்!

ரயில் குண்டக்கல் நோக்கி போய் கொண்டிருந்தது! மணி எட்டாகி இருந்தது! மெதுவாக ஆரம்பித்தான் கெளதம்,

“அர்ஜுன்… அப்செட்டா?”

“ம்ம்ம்… ஏன் கெளதம் அப்படி சொன்னா?”

“அவ விளையாட்டு குழந்தை அர்ஜுன்… அவ சொன்னத எல்லாம் பெருசா எடுத்துக்காத… சியர் அப் மேன்!”

“அந்த குழந்தையை எனக்கு பிடிச்சிருக்கே கெளதம்!” என்று மனம் வலிக்க கூறினான்!

“அர்ஜுன்… என்ன சொல்ற நீ… !” என்று அதிர்ந்தான் கெளதம்!

“எஸ் கெளதம்… எதுனால அவ என் மனசுக்குள்ள வந்தான்னு சொல்ல தெரியல… இது இந்த ரயில் பயணத்தோடு முடியற விஷயமா எனக்கு தெரியல… ! ஆனா நான் அவ கிட்ட கண்டிப்பா சொல்ல மாட்டேன்டா…” குரலில் இருந்த வலி தெரிந்தது!

“என்னாச்சுடா… கம் அவுட் அர்ஜுன்!”

“இனிமே நான் மாச சம்பளக்காரன் இல்லை… சம்பளம் குடுக்கறவன் தான்னு சொல்லி அவ கிட்ட பிச்சை கேக்க முடியுமா? இல்லை என்னோட ஸ்டேடஸ் தெரிஞ்சு அவ என்னை லவ் பண்ணா ஏத்துக்க முடியுமா… அவளை பார்க்கும் போதெல்லாம் எனக்கு இந்த வார்த்தை தான் தோணிகிட்டே இருக்கும்… வேணாம் கெளதம்…” என்றான் அடிபட்ட குரலில்!

“இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல அர்ஜுன்… நீ அவளை லவ் பண்ணுன்னு சொல்லவே மாட்டேன் ஏன்னா அது கண்டிப்பா சரி வராது ஆனா அவ விளையாட்டா தான் சொல்லி இருப்பா அர்ஜுன்… அத மட்டும் தான் நான் உனக்கு சொல்ல முடியும்டா!”

இதை சொல்லி கொண்டிருக்கும் போதே ஏதோ எரியும் வாடை வரவே

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்!

சுற்றிலும் பார்த்து விட்டு சட்டென்று கதவை திறந்து பார்த்த கெளதம் அதிர்ச்சியாகி உறைந்தான்!

அடுத்த முதல் வகுப்பு ஏசி கோச்சில் புகை வர லேசாக நெருப்பு வெளியே தெரிந்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!