KS1

KS1

அத்தியாயம் – 1
 வெயில் சுட்டெரிக்க அந்தச் சூட்டை பொறுத்துக் கொண்டு வயல்வெளியில், பாட்டு பாடிக் கொண்டே வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர் பெண்கள். பூஞ்சோலை என்ற பெயருக்கு ஏற்ப, அந்தக் கிராமமே சோலை வனமாகக் காட்சி அளித்தது.
 அந்தச் சோலை வனத்தில் தான், அழகிய நிலவாக ஜொலித்துக் கொண்டு இருந்தாள், அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவர் தர்மதுரையின் மகள் சங்கீதா. அழகு நிலவாக இருந்தாலும், சூரியன் போல் தக தகவெனப் பார்வையாலே எதிராளிகளை சுட்டெரிக்கும் வீர மகளாக இருந்தாள்.
 வயல்வெளியில் வேலை பார்க்கும் பெண்களோடு தான், அவளும் பாடிக் கொண்டே வேலை பார்த்துக் கொண்டு இருந்தாள். அந்த இடத்தில் அவள் சம்பளம் கொடுக்கும் முதலாளியாக இருந்தாலும், அவளுக்கு பிடித்த வேலை என்பதால், அங்கு உள்ளவர்களை தட்டி கொடுத்து வேலையும் வாங்கி, அவர்களை உற்சாகப்படுத்த பாட்டும் பாடி மகிழ்விப்பாள்.
“ஏ பிள்ளை சங்கீ உன்ற ஆத்தா உன்னை கையோடு கூட்டிட்டு வர சொல்லுச்சு, வா பிள்ளை” என்று அவளின் தோழி பாண்டியம்மா அவளை அழைத்தாள்.
“என்ன விவரம்ன்னு கேட்டியா ஆத்தா கிட்ட, முக்கியமான விஷயமா இருந்தா மட்டும் தான் வருவேன். சும்மா சும்மா எல்லாம் நான் வர மாட்டேன், எப்போ பார்த்தாலும் சும்மா கூப்பிடுகிட்டு” என்று சலித்தாள் சங்கீதா.
“அடியே, உன்ற அப்பாரும் சேர்ந்து தான் கூப்பிட்டு விட்ருக்காக, சும்மா எல்லாம் கூப்பிடல, உங்க தாய் மாமன் கூட இருக்கார் உங்க வூட்டுல, செத்த வேகமா வாடி ஆத்தா” என்று பாண்டியம்மாள் பதிலுக்கு சலித்துக் கொண்டாள்.
“அப்படி என்ன முக்கியமான விஷயமோ, மாரி அக்கா செத்த நேரம் இங்க பார்த்துக்கோங்க. நான் போய் என்ன விவரம்ன்னு கேட்டு ஓடியாறேன்” என்று பொறுப்பை அங்கு ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு, தோழியோடு அவள் வீட்டுக்கு எட்டி நடை போட்டாள்.
 வீட்டிற்குள் நுழைந்ததுமே அங்கு குழுமி இருந்த ஆட்களை பார்த்து, விஷயம் முக்கியம் என யூகித்தாள். இவள் வந்ததை பார்த்து, அவளின் தந்தை தர்மதுரை அவளிடம் விஷயத்தை கூறினார்.
“வா மா தாயி, உன்னை இன்னைக்கு பொண்ணு பார்க்க சாயந்திரம் பட்டணத்தில இருந்து வருவாப்ல. இந்த சம்மந்தம், நல்ல இடமா இருக்கு, அதுவும் இல்லாம நம்ம ராஜதுரையோட ஸ்நேகிதன் மவன் தான் மாப்பிள்ளை. எங்க எல்லோருக்கும் திருப்தியா இருக்கு, அதான் இன்னைக்கு நல்ல நாளா இருக்கவும் இன்னைக்கே வர சொல்லிபுட்டோம்”.
“நீ இனி வயகாட்டுக்கு போக வேண்டாம் தாயி, நான் ஆளை அனுப்பி மாரியம்மாவை பார்த்துக்க சொல்லிபுடுறேன். நீ செத்த வீட்டுல இரு, உன்ற அத்தை, சித்தி எல்லாம் இங்க வந்து இருக்காய்ங்க அவிங்க கூட பேசிக்கிட்டு இரு. ஏய் தங்கம் பிள்ளையை பார்த்துக்கோ, அவிங்க வரும் பொழுது என் பிள்ளை ஜொலிக்கணும், நான் செத்த நேரம் வெளியே போயிட்டு வரேன்” என்று சங்கீதாவிற்கு பேச வாய்ப்பு கொடுக்காமல், மனைவியிடம் பார்த்துக்க கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
“எம்மோய், என்ன நடக்குது இங்க. நாந்தேன் பட்டனத்துக்கு எல்லாம் போக மாட்டேன்னு சொல்லிபுட்டேன் ல, அப்புறம் ஏன் அப்பாரு இப்படி இதான்னு முடிவு சொல்லிட்டு போறாங்க. நாந்தேன், இங்கேயே மாப்பிள்ளை பாருங்க நான் இந்த ஊர்லயே இருக்கேன்னு சொல்லிகிட்டே இருந்தேன் ல” என்று தாயிடம் பொரிந்து கொண்டு இருந்தாள்.
“என்னமோ வீட்டுல நான் சொல்லுறதை எல்லோரும் கேட்குற மாதிரி, அது ஏன் என் கிட்டேயே பாயிரீங்களோ. எனக்கு எதுவும் தெரியாது டி மா, உன்ற அப்பாரு கிட்ட நீயே கேட்டுக்கோ”.
“ஏய் பிள்ளை மருதாயி, என் கூட ஒத்தாசை பண்ண வா. மேகலை, இவளை நீதேன் பார்த்துக்கணும். அப்புறம் அவ எங்கேயோ ஓடிட்டா அக்கான்னு சென்னியோ, நான் பொல்லாதவளா மாறிடுவேன்” என்று மகளை பார்த்துக் கொள்ள தங்கையிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, தம்பி மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டில் மற்ற வேலைகளை பார்க்க சென்றார்.
“சங்கீ கண்ணா, சித்தி பாவம் டா உன்ற ஆத்தா கிட்ட வசவு வாங்க தெம்பு இல்லை. கொஞ்சம் எங்கேயும் போகாம, உன்ற ஆத்தா சொன்ன மாதிரி வீட்டுலையே சமத்தா இரேன் பிள்ளை” என்று அவள் சித்தி மேகலை அவளிடம் கெஞ்சினாள்.
“ச, நான் எங்கேயும் போகல சித்தி, நீ போய் உன்ற பிள்ளையை கவனி. நான் என் அறையை விட்டு எங்கேயும் போயிட மாட்டேன், ஏய் பிள்ளை பாண்டி நீ கிளம்பு அங்க வயல் ல மாரி அக்கா எல்லாம் சரியா எல்லாம் பாக்குதான்னு ஒரு பார்வை பார்த்துக்க” என்று அவளை அனுப்பிவிட்டு சங்கீதா அவள் அறைக்கு வந்து யோசிக்க தொடங்கினாள்.
 அமைதியாக அவள் அறைக்கு சென்றதை பார்த்த பின்பு தான், அவள் சித்தி மேகலைக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது. அந்த வீட்டின் செல்லக்குட்டி, சண்டிராணி என்று மற்றவர்களால் பெயர் பெற்றவளுக்கு எல்லோரும் சிறிது பயந்து தான் இருப்பர்.
 தந்தை தர்மதுரை போல், நீதி நேர்மை என்று இருப்பவள் சங்கீதா. தப்பை தட்டி கேட்க அஞ்சாதவள், அவளின் துணிவு அந்த கிராமத்தில் எல்லோராலும் பேசப்பட்டது. அவளிடம் அவளுக்கு பிடிக்காததை பேசவே, அவள் வீட்டில் அவள் தந்தையை தவிர்த்து எல்லோரும் அஞ்சுவர்.
 அவளுக்கு கூட பிறந்தது ஒரே தம்பி, ராஜா இப்பொழுது கல்லூரியில் முதலாம் வருடம் படித்துக் கொண்டு இருக்கிறான் பக்கத்தில் இருக்கும் டவுனில். அறையில் சங்கீதா இந்த சம்மந்ததை எப்படி தட்டி கழிக்கலாம் என்ற தீவிர யோசனையில் இருந்தாள்.
“அப்படி எந்த மகராசன், என்னை பார்க்க வரான்னு பார்கோனும். சீமையில இல்லாத அழகிகளா, இங்கன வந்து ஏன் பார்கோனும். நல்லா நாலு திட்டு, திட்டி அனுப்பி வைக்கணும்” என்று மனதிற்குள் கருவிக் கொண்டு இருந்தாள்.
 மாலை நேரம் சங்கீதா வீட்டில், தடபுடலாக நிச்சயம் நடந்து கொண்டு இருந்தது. மணமக்களை தவிர்த்து மற்றவர்கள் சந்தோஷமாக விழாவில் கலந்து கொண்டனர்.
“இந்த அப்பாருக்கு அப்படி என்ன பிடிவாதமோ, இந்த பட்டணத்து மகராசனுக்கு அப்படி ஒரு உபசரிப்பு. அப்படி என்ன கண்டாரோ இந்த சிடுமூஞ்சி மாப்பிள்ளை கிட்ட, இவனை துரத்தி விடலாம்னு பார்த்தா, ச இங்க நிச்சயமே நடந்துகிட்டு இருக்கு” என்று மனதிற்குள் திட்டிக் கொண்டும், சலித்துக் கொண்டும் இருந்தாள்.
 நிச்சய விழா முடிந்தவுடன், மாப்பிள்ளை வீட்டில் அனைவரும் சென்றவுடன், சங்கீதா அவள் அறைக்குள் சென்று முடங்கி கொண்டாள். இன்று மாலை அவளுக்கும், அவனுக்குமான பேச்சு வார்த்தையை நினைத்து பார்க்க தொடங்கினாள்.
 மாலை மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்து இறங்கினர், சங்கீதாவின் வீட்டில். எந்த அலங்கார பேச்சும் இல்லாமல், உடனே பெண்ணை அழைத்து வர சொல்லவும் சங்கீதாவை அழைத்து வந்தனர். சபையில் எல்லோரையும் நமஸ்கரித்து அவளை ஒரு இடத்தில் அமற வைத்தனர்.
“பொண்ணு கிட்ட என் பையன் கொஞ்சம் தனியா பேசணும் நினைக்கிறான், கொஞ்சம் பேச அனுமதி கொடுப்பீங்களா?” என்று சபையில் மாப்பிள்ளையின் தந்தை தழைந்து தர்மத்துரையிடம் கேட்கவும், சங்கீதாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.
 இதுவரை மாப்பிள்ளை வீட்டினர் தழைந்து பேசி, அவள் எங்கும் பார்க்காததால், அவளுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. அது வரை தலை குனிந்து அமர்ந்து இருந்தவள், தலையை நிமிர்த்தி முதலில், மாப்பிள்ளையின் தந்தையை பார்த்தாள்.
“ரொம்ப பதவிசா தான் இருகாய்க, அப்போ மாப்பிள்ளையும் இப்படி தான் இருப்பானோ” என்று எண்ணிக் கொண்டே அங்கே மாப்பிள்ளையாக அமர்ந்து இருந்தவனை பார்த்து திகைத்தாள்.
“என்னது இது என்னை விட ஒரு பத்து வயசு மூப்பா இருப்பாங்க போல, அதுவும் பிடிக்காம தான் வந்து இருக்காய்ங்கன்னு நல்லா தெரியுது. அப்புறம் ஏன் இந்த அப்பாரு இவரை இன்னும் இங்க உட்கார வச்சு இருக்காங்க, எப்படியும் பேச வருவாய்ங்கள அப்போ, பேசியே அனுப்பிட வேண்டியதேன்” என்று மனதிற்குள் எண்ணினாள்.
“தாராளமா போயி பேசிட்டு வரட்டும், நாம மத்ததை பேசி முடிச்சு பிடுவோம். ஏலேய் ராஜா, பின் பக்க தோட்டத்துக்கு ரெண்டு பேரையும் அழைச்சிட்டு போ ல” என்று தர்மதுரை அவர்களை அங்கு அனுப்பி வைத்தார்.
 பின் பக்க தோட்டத்தில், ராஜா இவர்கள் பேச ஒரு இடத்தில் நாற்காலி இரண்டை போட்டுவிட்டு சற்று தள்ளி நின்று கொண்டான். அப்பொழுது தான் மாப்பிள்ளை இவளை ஏற இறங்க பார்த்தான், அதில் சங்கீதாவிற்கு கோவம் பொத்துக் கொண்டு வந்தது. தன் தம்பி சற்று தள்ளி நிற்கிறான், என்று சற்று அடக்கி வாசித்தாள்.
“இங்க பாரு பட்டிக்காடு, எனக்கும் உனக்கும் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லை. அதனால உங்க அப்பா கிட்ட சொல்லி, இந்த பேச்சை நிப்பாட்ட சொல்லு” என்று மாப்பிள்ளை வாய் திறந்து பேசவும், அவனின் பட்டிக்காடில் அவள் சிலிர்த்து விட்டாள்.
“என்னது பட்டிக்காடா, யோவ் எழுந்திரு என்னை பார்த்தா உமக்கு எப்படி தெரியுது. என்ற பெயரு சங்கீதா, என்ற வீட்டுக்கே வந்து என்னையே பட்டிக்காடுன்னு சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்” என்று அவனிடம் சண்டை பிடித்தாள்.
“என்னது யோவ் வா, அடிங்க உன்னை விட எனக்கு வயசு அதிகம் எனக்கே நீ இப்படி மரியாதை கொடுத்தா, பெரியவர்களுக்கு நீ ரொம்ப நல்லா மரியாதை கொடுப்ப போல” என்று அவனும் பதிலுக்கு பேசவும், அவள் பொங்கி விட்டாள்.
“மரியாதையை பத்தி நீ பேசாத, உமக்கு தான் மரியாதை யாருக்கு எப்படி கொடுக்கணும்ன்னு ஒன்னும் தெரியல. பார்த்த உடனே பாட்டிக்காடுன்னு, என்னை கூப்பிடவன் தான நீ, உனக்கு இந்த மரியாதையே பெருசு” என்று பதிலுக்கு வாய் பேசவும், அவன் விறுவிறுவென்று அங்கே எல்லோரும் கூடி இருக்கும் சபைக்கு சென்றான்.
 பின்னாடியே ராஜா ஓடவும், சங்கீதா நிதானமாக நடந்து சென்றாள். எப்படியும் இதை தடுக்க தான் அவன் செல்கிறான் என்று எண்ணிக் கொண்டே அங்கே சென்றவள், அங்கே தட்டு மாற்றி உறுதி செய்ததை பார்த்து அதிர்ந்து நின்றாள்.
 தன்னிடம் கோபமாக பேசிவிட்டு சென்றவனை, அங்கே கண்களால் அவனை தேடினாள். அங்கே அவன் இவளை மிதப்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, கையை கட்டிக் கொண்டு நடப்பதை கவனித்துக் கொண்டு இருந்தான்.
“கல்யாண பேச்சை நிறுத்துவான் பார்த்தா, சம்மதம் சொல்லி தட்டை மாத்த வச்சுட்டான் ல. அடேய் இனி உன்னை யாராலும் காப்பாத்த முடியாது, என் கிட்டையே இந்த மிதப்பா சவால் விடுரியா. கல்யாணம் முடியட்டும், அப்புறம் இருக்கு உனக்கு” என்று மனதிற்குள் கருவிக் கொண்டு இருந்தாள்.
 அதற்குள் அங்கே சிறிய அளவில், நிச்சய விழாவிற்கான ஏற்பாடு நடக்க தொடங்கியது. மாப்பிள்ளையின் தாய் அவளிடம் நிச்சய புடவையை கொடுத்து, மாற்றிக் கொண்டு வர கூறினார். எல்லாம் இயந்திர கதியில் அதன் பின் அவள் நடந்து கொண்டாள்.
 நிச்சய விழா முடிந்தவுடன், மாப்பிள்ளையானவன் அவளிடம் மீண்டும் சவாலான பார்வை பார்க்கவும், அவளும் சளைக்காமல் பதில் பார்வை பார்த்தாள் இப்பொழுது. அதை பார்த்து அவன் சிறிது முறுவலுடன், ஒரு காகிதத்தில் அவளுக்கு பதில் எழுதி கொடுத்தான்.
 பின்னர் அனைவரும் சென்ற பின்னர், வீட்டில் எல்லோரும் மகிழ்ச்சியாக மாப்பிள்ளை வீட்டினரை பற்றி புகழ்ந்து கொண்டு பேசவும், சங்கீதா அவள் அறைக்கு சென்று முடங்கிக் கொண்டாள். இதை எல்லாம் நினைத்து பார்த்தவள், அவள் கையில் அவன் கொடுத்த காகிதத்தை எடுத்து பிரித்து படித்தாள்.
“இனி நம்மக்குள் நடக்கும் சுவாரசியமான ஆட்டத்தை காண, ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன். இப்படிக்கு உன் அன்பான எதிரி, ப்ரத்யுஷ்” என்று இருந்ததை படித்து அவளுக்கு சிரிப்பு ஒரு பக்கமும், கோவம் ஒரு பக்கமும் வந்தது.
“அன்பான எதிரியா, இந்த சங்கீதா யாருன்னு உனக்கு நான் காட்டுறேன் ல. எவ்வளவு தெனாவட்டு உனக்கு, இரு ல ஏன் தான் இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டோம் ன்னு உன்னை வருத்தப்பட வைக்கல, என்ற பெயர் சந்நகீதா இல்லை” என்று மனதிற்குள் பொருமிக் கொண்டாள்.
“எங்க ஊரு உனக்கு பட்டிக்காடா, இரு உனக்கு எங்க ஊரு அருமை பெருமை எல்லாம் தெரிய படுத்துறேன். உங்க ஊரு அப்படி என்ன உசத்தின்னு நானும் பார்க்கிறேன் ல” என்று மனதிற்குள் சூளுரைத்துக் கொண்டாள்.
 அதற்குள் வீட்டில் இங்கே அனைவரும் கல்யாணத்திற்கு பட்டு, நகை என்று அவளுக்கு எடுக்க எந்த கடைக்கு செல்வது என்ற தீவிர ஈடுபாட்டில் இருந்தனர். அவளின் தந்தை தர்மதுரை கல்யாண மண்டபமாக, அவர்களின் பூர்வீக வீட்டை மாற்றி அமைக்க ஆலோசித்துக் கொண்டு இருந்தார் தன் உறவினர்களிடம்.
 அறையை விட்டு வெளியே வந்த சங்கீதாவிற்கு, அனைவரும் இப்படி சந்தோஷமாக அவளின் திருமணத்தை திட்டமிட்டுக் கொண்டு இருப்பதை பார்த்து, மனதிற்குள் சிறிது குற்ற உணர்ச்சியாக இருந்தது .
“ச நம்ம ஆத்தாவும், அப்பாரும் எவ்வளவு சந்தோஷமா இருக்காவுக என்ற கல்யாணத்தை நினைச்சு. நாமதேன் அந்த எட்டப்பனுக்கு நன்றி சொல்லனும், இப்படி ரொம்ப நாள் கழிச்சு என்ற வூட்டுல சந்தோசத்தை கொடுத்ததுக்கு”.
“ம்ம்ம்… இனி அந்த எட்டப்பனுக்கு நாம காதல்ன்னா என்னனு காட்டிட்டா போச்சு, அவனுக்கு நான் சண்டைக்காரியா இருந்தா பிடிக்குதே, இருந்துட்டா போச்சு ஆனா அவன் நினைச்ச மாதிரி இல்லை” என்று தன் குடும்பத்தின் சந்தோஷத்திற்காக, அவள் முழு குடும்பஸ்த்ரியாக மாற முடிவு எடுத்துக் கொண்டாள்.
 மொத்தத்தில் இங்கே சண்டையுடன் இருவரின் பயணமும், அந்த இறைவனின் அருளால் அதற்கு பிள்ளையார் சுழி போட பட்டது…
அத்தியாயம் – 2
 பூஞ்சோலையில் இருந்து சென்னைக்கு வந்து சேர்ந்த நாள் முதல், ப்ரத்யுஷிர்க்கு இந்த திருமணதிற்கு எதற்காக சம்மதித்தோம் என்று அவன் மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. அவன் யோசித்து யோசித்து கடைசியில் சங்கீதாவின் துடுக்கு பேச்சு தான், இதற்க்கு எல்லாம் காரணம் என்று தோன்றியது அவனுக்கு.
 வீட்டில் அன்று தனக்கு பெண் பார்த்து இருப்பதாக, தந்தை கூறியவுடன், பதிலுக்கு அவரிடம் சண்டை பிடித்த நாளுக்கு அவன் நினைவு சென்றது.
“ப்ரத்யுஷ் உனக்கு நான் பூஞ்சோலை ல பொண்ணு பார்த்து இருக்கேன், நாளைக்கு நாம பொண்ணு பார்த்து நிச்சயம் பண்ண போறோம்” என்ற தகவலை அவனின் தந்தை மூர்த்தி, அவனிடம் ஒரு தகவலாக சொல்லவும், அவனுக்கு கண் மண் தெரியாமல் கோவம் வந்தது.
“டாட், என்ன நினைச்சிகிட்டு இருக்கீங்க உங்க மனசுல, நான் கல்யாணமே பண்ண போறது இல்லைன்னு நிறைய தடவை சொல்லியாச்சு உங்க கிட்ட. நான் நீங்க பார்த்த பிசினஸ்சை, இப்போ இன்னும் பெரிய லெவல் ல நிர்வாகம் பண்ணிகிட்டு இருக்கேன்”.
“இன்னைக்கு டாப் பிசினஸ்மேன் ல நானும் ஒருத்தன், என் ஸ்டேடஸ் இப்போ உயர்ந்து இருக்கு. எனக்கு என்ன தேவையோ அதை நான் வெளியே பார்த்துப்பேன், கூப்பிட்டா இன்னைக்கு பொண்ணுங்க வரிசையா வந்து நிப்பாங்க”.
“இதுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணி, என் சந்தோஷத்தை கெடுத்துக்க நான் விரும்பல. நான் இப்படி இருக்கிறது தான் எனக்கு பிடிச்சு இருக்கு, அதனால கல்யாணம் பண்ணிக்க சொல்லி என் மூடை கெடுக்காதீங்க” என்று சொன்ன மகனை வெறித்து பார்த்தார்.
“சரி பா நீ உன் இஷ்டப்படியே இரு, ஆனா இந்த வீட்டுக்கு இனி வர கூடாது. அப்புறம் உன் பேர் ல அடையார்ல இருக்கிற பிளாட்டும், உன் பேர் ல இருக்கிற தி நகர் கடை மட்டும் தான் உனக்கு”
“இனி இந்த வீடோ, இந்த வீட்டுல இருக்கிற ஆட்களோ உனக்கு சொந்தம் கிடையாது. நீ தான் பெரிய பிசினஸ்மேன் ஆச்சே, இதை வச்சு இனி நீ முன்னேறு. உன் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, உன் கார், பைக் எல்லாம் இங்க வச்சுட்டு போ. இனி இது எல்லாம் உனக்கு கிடையாது, லலிதா உனக்கு ஒரு பொண்ணு மட்டும் தான் இனி” என்று மனைவியிடமும் அழுத்தி தன் முடிவை கூறவும், ப்ரத்யுஷ் அதிர்ந்து விட்டான்.
 தன் தந்தையின் அதிரடியான முடிவை கேட்டு, ப்ரத்யுஷிர்க்கு அதிர்ச்சியாக இருந்தது. தன் 33 வயது வரை திருமணம் பற்றி அவன் எண்ணிப் பார்த்து இல்லை. தொழிலை இன்னும் விரிவுபடுத்தவும், தன் நண்பர்களோடு சேர்ந்து பப் சென்று, தன் ஸ்டேடசை பெண்கள் மத்தியில் உயர்த்தி காட்டி, அவர்களை தன் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டு, இது நாள் வரை சுதந்திரமாக இருந்து வந்தான்.
 அவனின் பலமே அவனின் பேச்சு திறமையும், அவனின் தந்தை ஏற்படுத்திக் கொடுத்த ஸ்டேடஸ் மட்டுமே. இன்று அந்த ஸ்டேடசை கொடுத்து விட்டு செல் என்றால், அவனிற்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
“மாம் இது என்ன டாட்க்கு என்ன பைத்தியமா பிடிச்சு இருக்கு, இப்படி எல்லாம் என்னை கார்னர் பண்ணி கல்யாணம் பண்ணி வைக்கணும் நினைக்குறார். நான் தான் அன்னைக்கே தெளிவா சொல்லிட்டேன் ல, எனக்கு கல்யாணம் ல சுத்தமா விருப்பம் இல்லைன்னு”.
“அப்புறமும் ஏன் இப்படி சொல்லிட்டு போறார், நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்க” என்று தாயிடம் முறையிட்டான்.
“அட போடா நீ வேற, நானே உனக்கு எங்க லேடீஸ் கிளப் ல, என் தோழி வித்யா பொண்ணு, ஹரிதாவை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் நினைச்சேன். இப்போ என்னனா, உங்க அப்பா ஏதோ கிராமத்துல போய் உனக்கு பெண் பார்த்து இருக்கார்”.
“இனி கிளப் ல எல்லோரும் என்னை கேலி பேசுவாங்களேன்னு நானே கவலை ல இருக்கேன், நீ வேற” என்று அவன் தாய் லலிதா அவனுக்கு மேல் சலித்துக் கொண்டு சென்று விட்டார்.
 தாயின் பேச்சு மேலும் அவனுக்கு சலிப்பை கொடுக்கவும், அவன் நிதானமாக யோசிக்க தொடங்கினான். இரண்டு மணி நேர யோசிப்பிற்கு பின் அவன் ஒரு முடிவிற்கு வந்து இருந்தான், தந்தையிடம் திருமணதிற்கு சம்மதம் தெரிவிப்பது என்று.
“டாட் நாம நாளைக்கு பொண்ணு பார்க்க போகலாம்” என்று தன் சம்மதத்தை அவரின் அறைக்கே சென்று அவருக்கு தெரியப்படுத்தினான்.
 அவனின் பதிலை கேட்டு அவன் தந்தைக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும், மறு பக்கம் வருத்தமும் இருந்தது. ஏனெனில் மகனை பற்றி நன்கு அறிந்தவர், அங்கே எதுவும் பிரச்சனை செய்யாமல் இருக்க வேண்டுமே என்று அவர் மனம் சிறிது பதற தான் செய்தது.
“என்ன டா நிஜமாவே நீ சம்மதம் சொல்லிட்டியா, என்னால நம்பவே முடியல டா” என்று அவன் தாய் இன்னும் நம்ப முடியாமல், அவனின் அறைக்கு வந்து அவனிடம் தனியாக விசாரித்துக் கொண்டு இருந்தார்.
“மாம் அங்கே அந்த பொன்னை வச்சு எப்படியும் கல்யாணத்தை நிறுத்திடுவேன், அதுக்குன்னு உடனே உங்க கிளப் ல பார்த்த பொன்னை எனக்கு கட்டி வைக்கணும் நினைக்காதீங்க. இந்த விஷயத்தை உடனே உங்க வீட்டுகாரர் கிட்ட சொல்லிடாதீங்க, உங்களுக்கு புண்ணியமா போகும்” என்று ப்ரத்யுஷ் அவரிடம் கூறவும் அவர் சலித்தார்.
“நான் ஏன் டா சொல்ல போறேன், அதான் நீயே நிறுத்த தான போற, எனக்கு இப்போதைக்கு அது போதும். அதனால நான் எல்லாம் வாயே திறக்க மாட்டேன், நீ தாராளமா உன் வேலையை பார்க்கலாம்” என்று அவனின் தாய் லலிதா கூறிவிட்டு சென்றார்.
 மறுநாள் பெண் பார்க்க மூர்த்தி அவரின் மகள் ப்ரீத்தியையும், அவள் கணவர் சரவணன், பேத்தி கீதாஞ்சலியையும் தங்களோடு அழைத்து சென்றார். மேலும் நெருங்கிய சொந்தத்திற்கு அழைப்பு விடுத்து, நேரே அங்கே வர செய்தார்.
 பூஞ்சோலை கிராமத்திற்குள் நுழையும் பொழுதே, அந்த கிராமத்தின் அழகு கண்ணை கவர்ந்தது. இயற்கையை ரசிக்க தெரிந்தவனான ப்ரத்யுஷிர்க்கு, அந்த இடம் பிடித்து இருந்தது. அதற்குள் உள்ளே கிராமத்திற்குள், சங்கீதாவின் வீட்டின் முன் கார் நிற்கவும், அதுவரை இருந்த அவனின் மனநிலை முற்றிலுமாக மாறியது.
“வாங்க வாங்க மாப்பிள்ளை, சம்பந்தி வாங்க” என்று சங்கீதாவின் தந்தை அவர்களை வரவேற்றார்.
“என்னமோ முடிவான மாதிரியே மாப்பிள்ளைன்னு பேசுறாரே இவர், யார் இவரு” என்று மனதிற்குள் யோசித்துக் கொண்டு இருந்தான்.
“வந்துட்டோம் சம்பந்தி, இப்போ தான் இங்க வரவே நேரம் கிடைச்சு இருக்கு. என்னோட பூர்வீக ஊர் ல தான் என் பையனுக்கு, பொண்ணு அமையனும்ன்னு இருந்து இருக்கு. ரொம்ப நாள் கழிச்சு உங்களை எல்லாம் பார்த்ததுல, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று அவனின் தந்தை மூர்த்தி கூறவும், தாயும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“ஆக மொத்தத்தில் அவரோட ஊர் ல எனக்கு பொண்ணு எடுக்கணும்ன்னு நினைச்சுட்டார், இவருக்கு இங்கேயே அப்போ பார்த்து இருக்கலாம் ல. இவர் மட்டும் அம்மாவை சென்னையிலே பார்த்து, கல்யாணம் பண்ணிகிட்டார்”.
“என்னை மட்டும் இப்படி ஒரு பட்டிகாடுல, எனக்கு பொண்ணு பார்க்க வர வச்சுட்டார்” என்று மனதிற்குள் தந்தையை பொரிந்து கொண்டு இருந்தான்.
“ஏன் பா மூர்த்தி இதான் உன்ற மவனா, ராசா கணக்கா நல்லா தான் இருக்கான், எங்க சங்கீதாவிற்கு ஏத்த ஜோடி தான்” என்று அங்கு உள்ள ஒரு மூதாட்டி, சிரித்துக் கொண்டே கூறவும், ப்ரத்யுஷ் பல்லை கடித்தான்.
“பொண்ணு பெயரே பழைய பெயரா இருக்கு, அதுவும் இந்த பட்டிக்காடு ல ஒரு கருவாச்சியை முன்னாடி வந்து நிப்பாட்ட இத்தனை பந்தா இவங்களுக்கு எல்லாம்” என்று மனதிற்குள்ளே சலித்துக் கொண்டு இருக்கும் பொழுது, பெண்ணை அழைத்து வர கூறவும், அவன் கண்கள் வேண்டா வெறுப்பாக, யார் என்று பார்க்க பெண் வரும் திசையை பார்த்தது.
 அங்கே சங்கீதா அழகிய ஓவியமாக, பச்சை நிற புடவையில் தேவதையாக வந்து நின்று எல்லோரையும் நமஸ்கரித்ததை பார்த்து, அசந்து தான் போனான். சுண்டினால் ரத்தம் வரும் போல் அவ்வளவு நிறமாக இருந்தாலும், அவள் கண்கள் தான் அவனை கட்டி இழுத்தது.
“எங்க பொண்ணு குனிஞ்ச தலை நிமிராது, எல்லோருக்கும் மரியாதை கொடுக்க தெரிஞ்சவ. உங்க வீட்டுக்கு வந்தா, உங்க எல்லோரையும் நல்லா பார்த்துக்குவா” என்று ஒரு முதியவர் அவளை பற்றி புகழ்ந்து கூறவும், ப்ரத்யுஷிர்க்கு அதுவரை இருந்த மோனநிலை முற்றிலுமாக தகர்ந்தது.
 பக்கத்தில் அமர்ந்து இருக்கும் தந்தையிடம், பெண்ணிடம் தனியாக பேச அனுமதி வாங்க கூறவும் அவர் முறைத்தார். ஆனால் பிடிவாதமாக கேட்டே ஆக வேண்டும் என்று அவன் வற்புறுத்தவும், அவரும் தன்மையாக கேட்டார்.
 பெண்ணின் தந்தை அனுமதி வழங்கவும், அவனும் எப்படியாவது இதை அவளிடம் சொல்லி நிறுத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டே அங்கு சென்றான். அப்பொழுது அவளை அருகில் பார்த்தவனுக்கு, அவளுக்கும் இந்த திருமணத்தில் பிடித்தம் இல்லாமல் இருப்பது போல் தோன்றவும், அவன் சிலிர்த்தான்.
“அது எப்படி என்னை இவ வேண்டாம் சொல்லலாம், இவளா நானான்னு பார்த்துறலாம்” என்று எண்ணிக் கொண்டே அவளிடம் வேண்டுமென்றே பட்டிக்காடு என்று வம்பு வளர்த்தான்.
 அவன் எதிர்பார்த்தது போல், அவள் சண்டைகோழியாக சிலிர்த்து விட்டாள். அப்பொழுது அவள் கண்கள் பேசும் பாஷை எல்லாம், அவனை காந்தம் போல் இழுத்தது அவளிடம். இதை நிறுத்த அவள் இன்னும் தன்னை என்னவெல்லாம் சொல்லுவாளோ, என்று சிறிது அஞ்சி உடனே அங்கு இருந்து சென்றான்.
 சபையில் எல்லோரும் அவன் வரவும் அவனை திரும்பி பார்க்கவும், அவனின் பதிலுக்காக காத்து இருப்பதை உணர்ந்து, ஒரு பெருமூச்சை வெளியிட்டு தனக்கு சம்மதம் என்பதை தெரிவித்தான்.
 அதன் பின் அங்கே காரியங்கள் மடமடவென்று நடந்து கொண்டு இருந்தது, அவன் பார்வை சங்கீதாவை பார்த்து கொண்டு இருந்தது. இப்படி தட்டை மாற்றிக் கொண்டு திருமணம் உறுதியானதை பார்த்து திகைத்து போய் நின்று இருந்தவளை பார்த்து, வெற்றி புன்னகை புரிந்தான் அவளிடம்.
 அவளோ பதிலுக்கு முறைத்துவிட்டு, அவன் தாய் கொடுத்த நிச்சய புடவையை வாங்கிக் கொண்டு சேலை மாற்ற சென்றாள். மெரூன் கலர் புடவையில், மிதமான ஒப்பனையில் வந்தவளை பார்த்து, அவனால் அவளிடம் கண்ணனை விட்டு எடுக்க முடியவில்லை.
 அதற்குள் பெண்ணின் தந்தை வந்து, அவனை அங்கு உள்ள சிறிய மேடையில் ஏற அழைக்கவும், உடனே தன் முகபாவத்தை மாற்றிக் கொண்டான். அவளின் அருகில் நின்று, அவளை வெறுப்பேத்தும் வேலையை செய்ய தொடங்கினான்.
“என்ன பட்டிக்காடு, மோதலுக்கு தயாராகிட்ட போல” என்று சீண்டினான் அவளை.
“ஆமா உமக்குதேன், இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை ல, அப்புறம் ஏன் வீனா சம்மதம் சொன்ன” என்று பதிலுக்கு அவள் அடிக்குரலில் கோவமுடன் கேட்டாள்.
“ஹ்ம்ம்… எனக்கு வேண்டாம்னா நான் தான் சொல்லணும், ஆனா நீ தான் எனக்கு முன்னாடியே என்னை வேண்டாம்ன்னு சொல்ல முடிவு பண்ணிட்டியே. அது எப்படி நீ என்னை வேண்டாம்ன்னு சொல்லலாம், அதான் உனக்கு இனி என்னோட ஆட்டத்தை காட்ட போறேன்”.
“இவனை எப்படி வேண்டாம்ன்னு சொல்ல போச்சுன்னு, இனி நீயே வருத்தப்படுவ” என்று அவன் கூறியதை கேட்டு, அவள் சிரித்தாள்.
“நான் ஒன்னும் வருத்தப்பட மாட்டேன் ல, இவளை ஏன் கல்யாணம் செய்துகிட்டோம்ன்னு நீதேன் இனி வருத்தப்பட போற” என்று அவள் கூறியதை கேட்டு, அவளை சவால் பார்வை பார்த்தான்.
 அவளும் சளைக்காமல் பதில் பார்வை பார்த்து, அவனை அசர வைத்தாள். அந்த பதில் பார்வையில் ஒரு நிமிடம், ப்ரத்யுஷ் தடுமாறி தான் போனான், ஆனால் உடனே தன்னை சமாளித்துக் கொண்டான்.
 அவளிடம் காகிதத்தில், இருவரின் ஆட்டத்தை காண ஆவலுடன் எதிர்பார்கிறேன் என்று எழுதிவிட்டு, உன் அன்பன் என்று எழுத தோணினாலும், அதை விடுத்து அன்பான எதிரி என்று எழுதி கொடுத்துவிட்டு சென்றான்.
 இதை எல்லாம் நினைத்து பார்த்தவன், மனதிற்குள் அவள் அவனிடம் வந்து சேரும் நாளுக்காக, ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தான். ஆனால் வெளியே தனக்கு பிடிக்காத திருமணத்தில், தந்தை சிக்க வைத்து விட்டார் என்பது போல், இறுக்கமாக இருந்தான்.
 மொத்தத்தில் அவளிடம் வம்பு வளர்க்க, அவனுக்கு பிடித்து இருந்தது. மறுநாள் திருச்சிக்கு மணபெண்ணிற்கு புடவை எடுக்க, குடும்பத்துடன் செல்ல வேண்டும் என்ற விவரத்தை வீட்டில், அவனின் தந்தை மூர்த்தி கூறவும், மனதிற்குள் குதுகலித்தான்.
“டாட் இது எல்லாம் லேடீஸ் விஷயம், இதுக்கு நான் ஏன் வரணும் நினைக்குறீங்க. நீங்களே போயிட்டு வாங்க, எனக்கு ஆபிஸ் ல முக்கயமான வேலை இருக்கு” என்று சலித்துக் கொள்ளவும், அவன் தந்தை அவனை முறைத்தார்.
“இங்க பாரு ப்ரத்யுஷ், இது அவங்களோட சம்ரதாயம், கல்யாண பொண்ணுக்கு பிடிச்ச மாதிரி, மாப்பிள்ளை சேலை எடுத்துக் கொடுக்கணும்ன்னு இருக்கு. நாளைக்கு திருச்சிக்கு அந்த பொண்ணும் வருவா, அவளுக்கு என்ன பிடிக்கும் கேட்டு நீ தான் எடுத்துக் கொடுக்கணும்”.
“அவங்க கிராமத்துகாரங்க, சாஸ்திரம், சம்ரதாயம் எல்லாம் அவங்களுக்கு ரொம்ப முக்கியம். கல்யாணம் முடியிற வரைக்கும் கொஞ்சம் நான் சொல்லுறதை கேளு, இல்லைனா அடுத்து என்ன நடக்கும்ன்னு உனக்கே தெரியும்” என்று அவர் எச்சரிக்கவும், ப்ரத்யுஷ் வாயை மூடிக் கொண்டான்.
“அவ வராளா என்னனு தெரிய நாம ஒரு பிட்டை போட்டா, இப்படி பெரிய லெக்சர் எடுத்து, ப்ளாக்மெயில் பண்ணுறார். இப்படி ப்ளாக்மெயில் பண்ணி தான் அங்க அவ கிட்ட நல்லா, நம்மள சிக்க வச்சு இருக்கார்”.
“நாளைக்கு அவ கிட்ட எப்படி வம்பு இழுக்கலாம்ன்னு யோசிப்போம், அதுக்கு முன்னாடி முதல இந்த ஆபிஸ் வேலையை கொஞ்ச நாள், கெளதம் தடியன் கிட்ட ஒப்படைக்கணும்” என்று எண்ணிக் கொண்டே அவன் தன் jaguar காரை எடுத்துக் கொண்டு, அவனின் அலுவலகம் சென்றான்.
 அலுவலகத்திற்குள் நுழையும் பொழுதே சிரித்த முகமாக, விசில் அடித்துக் கொண்டே நுழைந்தவனை பார்த்து, எல்லோரும் வாயை பிளந்தனர். அலுவலகத்தில் அவன் இப்படி எல்லாம் இருந்தது கிடையாது, முதலாளி என்ற பயம் பணியில் இருப்பவர்களுக்கு வேண்டும் என்று நினைப்பவன், இறுக்கத்தோடு தான் இருப்பான்.
 இன்று அவனின் செய்கை அங்கு உள்ளவர்களுக்கு, வித்தியாசமாக தெரிந்தது. தன் அறைக்குள் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்தவன், இண்டர்காம் மூலம் அவனின் காரியதரசி, நண்பன், மேனேஜர் என்று இத்தனை பெருமைக்குரிய சொந்தக்காரனான கௌதமை, தன் அறைக்கு வருமாறு அழைத்தான்.
“சார் மே ஐ கம் இன்” என்று கதவை தட்டி அனுமதி வாங்கிக் கொண்டு உள்ளே வந்தான் கெளதம்.
“கெளதம் இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசத்துக்கு நான் கொஞ்சம் பிஸி, அதனால ஆபிஸ் விஷயம் எல்லாம், எனக்கு நீங்களே அப்டேட் பண்ணிக்கிட்டு இருங்க. நான் இல்லைனாலும், வேலை எல்லாம் பக்காவா நடக்கணும் எனக்கு”.
“அப்புறம் எல்லா பார்டீஸ் விலாசம் எல்லாம் வாங்கி வைங்க, எல்லோருக்கும் கல்யாண இன்விடேஷன் அனுப்பனும். பேமென்ட் எல்லாம் முதல எல்லோருக்கும் செட்டில் பண்ணியாச்சா, இன்னும் கொஞ்ச நாள் ல பொங்கல் எல்லாம் வருது, அதுக்கு எல்லாம் தயாரா இருக்கா” என்று அவனிடம் அடுத்து அடுத்து, தொழில் விஷயங்களை பேசிக் கொண்டு இருந்தான்.
“ஓகே சார் நீங்க வொரி பண்ணிகாதீங்க, இங்க எல்லாம் பக்காவா நான் பார்த்துக்கிறேன். சார் அப்புறம் இப்போ ஒரு நண்பனா பேசலாமா உங்க கிட்ட” என்று கெளதம் அவனிடம் அனுமதி கேட்கவும், அவனும் சிரித்துக் கொண்டே சரி என்றான்.
“வாழ்த்துக்கள் டா மாப்பிள்ளை, உனக்கு கல்யாணம்ன்னு சொன்ன உடனே எனக்கு சிரிப்பு தான் வந்துச்சு. அது எப்படி டா நீ சிக்கின, கொஞ்சம் அந்த கதையை சொல்லு மாப்பிள்ளை” என்று சிரித்துக் கொண்டே நண்பனை கேட்டான் கெளதம்.
“அதை ஏன் டா கேட்குற, எங்க அப்பா எனக்கு சரியான இடத்துல ஆப்பு வச்சுட்டார் டா இந்த தடவை. வேற வழி இல்லாம, நானும் ஓகே சொன்னேன் டா மாப்பிள்ளை” என்று ஒரு பெருமூச்சு விடவும், கெளதம் அவனை ஆராயும் பார்வை பார்த்தான்.
“மாப்ஸ், நீ வேற வழி இல்லாம ஒன்னும் சிக்கின மாதிரி தெரியலையே, ரொம்ப விருப்பப்பட்டு சிக்கின மாதிரி தெரியுதே” என்று அவனை அறிந்தவனாக கேட்டான்.
“டேய் மச்சி, நன்பேண்டா” என்று அவனை கட்டி பிடித்துக் கொண்டான் ப்ரத்யுஷ். அதன் பின் நடந்ததை எல்லாம் அவனுக்கு, ஒவ்வொன்றாக சொல்லி முடித்தான்.
“டேய் மாப்பிள்ளை, நீ இந்த உலகத்துல தான இருக்க. இங்கே நீயே பெரிய ஜவுளி கடை வச்சு இருக்கன்னு, உனக்கு நினைப்பு இருக்கா டா” என்று கேட்டான் கெளதம்.
“ஏன் டா மாப்ஸ் இப்படி கேட்குற, அது தெரியாமையா டா இருப்பேன்” என்று அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாமல் பார்த்தான் ப்ரத்யுஷ்.
“டேய் புடவை எடுக்க ஏன் டா திருச்சி போகணும், இங்கே நம்ம கடையிலே எடுத்து இருக்கலாம் ல. இது கூட தோணாம, நீ இன்னும் கனவு உலகத்துல இருக்க போல டா ராசா” என்று நண்பனை கிண்டல் செய்தான் கெளதம்.
“அதான இதை எப்படி டா மறந்தேன், இரு டா அப்பாவுக்கு போன் பண்ணி கேட்கலாம்” என்று கூறிக் கொண்டே தந்தைக்கு டயல் செய்து பேச தொடங்கினான்.
“டாட், நம்ம கடையிலே புடவை எடுக்கணும்ன்னு உங்களுக்கு தோணலையா. அவங்க சொன்னாங்கன்னு நீங்களும் திருச்சிக்கு வரேன்னு சொல்லிடீங்க, நாளைக்கு அவங்களை வேணா இங்க வர சொல்லுங்க” என்று ப்ரத்யுஷ் அவரிடம் சண்டை பிடிப்பது போல் கேட்கவும், எதிர்முனையில் மூர்த்தி சிரித்துக் கொண்டார் மனதிற்குள்.
“பையன் சிக்கிட்டான், இனி கவலை பட வேண்டாம்” என்று எண்ணிக் கொண்டே அவனிடம், தான் அவர்களிடம் பேசி இங்கே வரவழைப்பதாக கூறி போனை வைத்தார்.
“என்ன டா சொன்னாங்க அப்பா, இங்க வர சொலுறேன் சொல்லிடாங்களா” என்று கேட்டான் கெளதம்.
“ஆமா டா இங்கே வர சொல்லுறேன் அவங்களை, அவங்க கிட்ட பேசிட்டு திரும்ப கூப்பிடுறேன் சொல்லி இருக்காங்க. ஆமா பட்டு செக்ஷன் ல நல்ல லேட்டஸ்ட் கலக்ஷன் எல்லாம் வந்துருச்சா, இல்லைனா உடனே காஞ்சீபுரம் பார்ட்டிக்கு போன் பண்ணி உடனே ஆர்டர் எடுத்து, இங்க அனுப்ப சொல்லு” என்று ப்ரத்யுஷ், அவனின் அன்பான எதிரிக்காக புடவையை அவனே தேர்ந்தெடுக்க அந்த வேலையை கவனிக்க சென்றான்.
 மனதிற்குள் அவள் மேல் ஆசை இருந்தாலும், அவளிடம் வம்பு வளர்த்து சண்டை பிடிக்க விரும்பும் இவனை, அவள் நாளை இங்கு வரும் பொழுது எப்படி எதிர்கொள்வாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!